Skip to content
Post Views: 2,463
நதி 3
“அடியேய்.. எங்கடீ அந்த புதுக்கோட்டைக்காரி..?” என்ற சாரதாவிற்கு,
Advertisement
“அவ.. வெளியே பைப்ல தண்ணி புடுச்சு, துணி துவைக்க லைன் வச்சிட்டு இருக்கா.. ஏன்..?” என்றபடி உள்ளே வந்தாள் அவர்களோடு அறையை பங்கிட்டுக்கொள்ளும் வசந்தி.
“அவ போனு அப்பத்துல இருந்து அடுச்சுக்கிட்டே கிடக்கு. அவகிட்ட போய் சொல்லு. நா குழம்பை பார்க்கறேன்..” என்று விட்டு சாரதா சமையலை தொடர்ந்தாள்.
Advertisement
Advertisement
திருப்பூரில் ஹாஸ்டல் பார்த்து தங்குவதை விட இப்படி மூன்று பேரோ.. நான்கு பேரோ.. தனியாக வீடெடுத்து தங்கி ஆளுக்கு ஒரு வேலை என பிரித்து செய்து ஆகும் செலவை பங்கிட்டு கொள்வது வழமையான ஒன்று.
அப்படி மூன்று பேர் இணைந்து எடுத்திருந்த வீட்டிற்கு வெளியே இருக்கும் தண்ணீர் பிடிக்குமிடத்தில்,
Advertisement
“இந்தா யாருகிட்ட.. நானும் அப்ப புடுச்சு பாத்துட்டு இருக்கேன்.. கொடம் நெறையறதுக்குள்ள பத்து தடவை அந்த பக்கெட்டுல பாதி பாதியா ஊத்தி எடுத்தா.. எப்போ நீங்க அஞ்சு கொடத்தை பிடிச்சு முடிக்க..” என்று,
தனது சுடிதாரின் ஷாலை இடுப்போடு கட்டிக்கொண்டு.. தன் உயரத்திற்கு எம்பி எம்பி சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் யமுனா.
“எங்கிருந்தோ வந்துட்டு.. உள்ளூர் காரிகிட்ட என்ன வம்பு. ஒழுங்கா வந்தோமா.. பொழப்பை பாத்தோமா..ன்னு போகனும்..” என்று அந்த பெண்மணி அநியாயமாய் பேச,
“எது.. பொழக்க வந்தா.. நீங்க பண்ணறத பொறுத்துட்டு போகனுமாக்கும்..! நல்லா இருக்கே உங்க ஊரு நியாயம். என்னமோ.. உங்க வீட்டு பைப்பு மாதிரி சவுடாலா பேசிட்டு இருக்கீங்க..
இது பொது பைப்பு.. இங்கே இருக்க எல்லாருக்கும் ஒரே ரூல் தான்..
ஒரு வாரமா சொல்லிட்டே இருந்தாலும், அதையே செஞ்சிட்டு இருக்கீங்க..?
இப்போ மரியாதையா கொடத்த எடுக்கல.. அப்புறம் கொடம் நடுரோட்டுக்கு போயிடும் ஜாக்கிரதை..” என்று இவளும் எகிற,
“எங்கே எங்கொடத்து மேல கை வை பாக்கலாம்..” என அவரும் சண்டைக்கு தயாராக நின்றார்.
“கொடத்துல கைய வைச்சா என்ன பண்ணிடுவீங்க..?” என்றவள்
ஒரு கணம் யோசித்துவிட்டு,
“நீங்க சொல்றது சரி தான்.. உங்க கொடத்துல கை வைக்க நா யாரு..?
அதுல நா கையே வைக்கல..” என்றதும், ஒரு நொடி அந்த பெண்மணியின் முகம் பிரகாசமாக மாறியது அடுத்து யமுனா செய்யப்போவது அறியாமல்..
யமுனாவோ, இதுவரை தண்ணீர் வந்து கொண்டிருந்த பையை அடைத்து விட்டு கைகளை கட்டிக்கொண்டு நின்றுவிட.. அந்த பெண்ணின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
“ஏய்.. இப்ப எதுக்குடீ தண்ணீய நிறுத்திவச்சே..?” என மற்றவர்களும் அந்த பெண்ணோடு சேர்ந்து சத்தமிட்டனர் ஒருமித்து.
“வாங்க. இவ்வளவு நேரமா எங்க போனீங்க எல்லாரும்..? அவங்க பண்ணறத பாத்துட்டு தானே நின்னீங்க. இப்பவும் நில்லுங்க..” என்றுவிட்டு அலட்சியமாய் நின்றாள் யமுனா.
அதில் கடுப்பானவர்கள் சத்தமிட.. மத்தியஸ்தம் செய்ய வந்த சிலரும் ஆளுக்கு ஒன்று பேச.. என அங்கு கொஞ்ச நேரம் சச்சரவு கூடியது.
விசயம் அந்த ஏரியா வார்டு கவுன்சிலர் வரை போக அடித்து பிடித்து வந்து சேர்ந்தார் அந்த இடத்துக்கு.
வந்ததும் நடந்ததை கேட்டறிந்தவர் பொதுவாக, “ஏம்மா இப்படி..? வேலைக்கு போறவங்க எட்டுக்குள்ள வேலைய முடுச்சிட்டு போகனுமில்ல.
வீட்டுலையே இருக்கறவங்க கொஞ்சம் அனுசரிச்சு போங்க..” என்றார் நியாயமாக.
ஆனால் அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் எதிரில் நிற்பவருக்கு புரிய வேண்டுமே..?!
“எங்கிருந்தோ வந்தவங்களுக்கு பரிஞ்சு பேசினா எப்படிங்க..?” என நாசுக்காய்,
‘உங்களுக்கு எங்களோட தயவு அடுத்த எலெக்ஷனுக்கு தேவை.. அதனால் எனக்கு ஆதரவாய் பேசு..’ என்பது போல அந்த பெண்மணி மறைமுக மிரட்டலுக்குள் செல்ல,
“இங்கே பாருங்க.. நா அடுத்த தடவ ஜெயிக்கறேன் இல்ல தோக்கறேன்.. ஆனா நியாயமா தான் நடப்பேன். இந்த ஏரியால குடியிருக்கற எல்லாருக்கும் ஒரே ரூல் தான்.. வரிசையா அஞ்சு கொடம் தான் பிடிக்கனும்..” என அவர் முடித்துவிட,
அந்த பெண்மணி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு செல்ல.. மற்றவர்கள் சச்சரவு இன்றி அவர்களுக்கான தண்ணீரை பிடிக்க தொடங்கினர்.
யமுனாவும் அவளின் முதல் வரிசை தண்ணீரை பிடித்துவிட்டு உள்ளே வர மேலும் அரை மணி நேரம் சென்றிருந்தது.
யமுனா பஞ்சாயத்தை முடித்து உள்ளே வருவதற்குள் இன்னும் பல முறை அழைப்பு வந்துவிட்டது அவளுக்கு.
அவளை அழைக்க வந்த வசந்தியும் நின்று பார்த்துவிட்டு, ‘இது இப்போதைக்கு முடியாது..’ என நினைத்து திரும்பி வந்து சாரதாவிற்கு உதவி கொண்டிருந்தாள்.
இதில் போன் வந்ததையே மறந்து போயிருந்தனர் இருவரும்.
“அடியேய்.. சோறாக்க நின்ன நா என்னோட வேலைய முடிச்சாச்சு..
தண்ணிய புடுச்சு தொவைக்கறேன்னு போயி இம்புட்டு நேரமாகி இன்னும் ஒரு ஜோலியும் ஆகக்காணோமே..” என்று சாரதா திட்ட,
“அத ஏங்க்கா கேக்கறே..? அந்த எதிர் வீட்டு அக்கா.. டெய்லியும் இதையே தான் செய்யுது. அதான் இன்னைக்கு அந்த பிரச்சினைக்கு முடிவு பண்ணி விட்டாச்சு..” என்று பெருமையாய் சொல்ல,
“அதிருக்கட்டும்.. மணிய பாத்தியா..? இனி நீ எப்போ தொவச்சு.. எப்போ கிளம்புவே..?” என்ற வசந்தியிடம்,
“அதெல்லாம் சொடக்கு போடற நேரத்துல முடுச்சிடுவா இந்த யமுனா.. வெயிட் பண்ணி பாருங்க..” என்றவள்,
மாற்றுடையை எடுத்துக்கொண்டு சென்று.. அந்த காம்பவுண்டுக்கென இருக்கும் பொது குளியலறையின் கதவில் உடையை போட்டுவிட்டு அருகிருக்கும் துணி துவைக்கும் கல்லுக்கு சென்றாள்.
அடுத்து மின்னல் விரைவு.. என்பது போல துணிக்கு சோப் போட்டு துவைத்து பிடித்து வைத்திருந்த தண்ணீரில் அலசி ஒரு வாலியில் போட்டவள்,
அடுத்து வந்திருந்த வரிசைக்கான தண்ணீரை பிடித்து பாத்ரூம் சென்றால் பயன்படுத்த வைத்திருக்கும் ப்ளாஸ்டிக் ட்ரம்மில் ஊற்றிவிட்டு, குளியலையும் முடித்து வந்திருந்தாள் சாரதாவும், வசந்தியும் வீட்டுக்குள் செய்யும் வேலையை முடிக்கும் நேரத்திற்குள்.
யமுனாவின் சுறுசுறுப்பு அவர்கள் அறிந்தது தான் என்றாலும், அவர்களுக்கு அவளின் வேகம் எப்போது போல வியப்பையே தந்தது.
“உனக்கு யமுனான்னு பேர் வச்சதுக்கு பதிலா.. மின்னல் ன்னு வச்சிருக்கலாம்..” என்ற வசந்தியை பார்த்து,
“அப்போ.. தொட்டா தூக்கிடுவேன்.. பரவாயில்லையா..?” என்று ஒற்றை கண்சிமிட்டியவளின் செயலில்,
“தூக்கவும் வேணாம்.. கவுக்கவும் வேணாம்.. உன்னோட போனை போய் என்னன்னு பாரு.. ஓயாம அடிக்குது.. உன்னோட வாயப்போல..” என்று விட்டு துணியை கொடியில் போட சென்றாள்.
இவள் குளிக்க போன நேரத்தில் அது மீண்டும் அடித்ததால்.. இந்த முறை மறக்காமல் அதை சொல்லிவிட்டு அவரவர் வேலையில் மூழ்கினர்.
தண்ணீர் பிடிப்பது, மூவரின் உடையை துவைப்பது.. யமுனாவின் வேலை எனில், சமையல் சாரதா வசம்.. வசந்தி இருவருக்கும் எடுபிடி வேலை..
இது வாரத்திற்கு ஒரு முறை மாறும்.
இந்த வாரம் செய்ததை மாற்றி, அடுத்த ஆள் அதை செய்ய வேண்டும். இது அவர்களின் எழுதப்படாத விதி.
மூன்று பேரும் வெவ்வேறு ஊரைச்சேர்ந்தவர்கள் என்றாலும், வேலை பார்க்குமிடம் ஒன்று என்பதால்.. வேறு நபரோடு தங்கி, அது ஒத்து வராமல் கடந்த ஒரு வருடமாக இவங்களுக்குள் கூட்டணி அமைத்து நல்லவிதமாகவே சென்று கொண்டிருக்கிறது.
பெற்றவர்களை பிரிந்து உழைக்க வந்திருப்பவர்களுக்குள் தன்னாலேயே ஒரு பிணைப்பு உண்டாகி இருந்தது.
இதில் சாரதா, வசந்தி.. இருவருக்கும் வயது இருபத்தைந்தை தொட்டிருந்தது. திருமணத்திற்கு என வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பெற்றோர்.
யமுனா இப்போது தான் இருபத்து ஒன்றை முடிக்க இருக்கிறாள்.
அவள் பன்னிரண்டாவது பரிச்சை முடிந்த நேரத்தில் அவர்கள் ஊரில் கடும் வறட்சி ஏற்பட.. வேறு வழியின்றி அறிந்தவர் ஒருவரின் மூலம் இங்கு வந்து சேர்ந்தவள் யமுனா.
தவறு எனக்கண்டால் அதை அப்படியே பொறுத்துக்கொண்டு ஒதுங்கி இருக்க நினைக்காமல் நியாயத்தை துணிந்தே கேட்பவள்.
அந்த துணிச்சலே அவளை தனியாக இங்கே இத்தனை வருடம் சிக்கலில்லாமல் வாழ வைத்திருக்கிறது.
இங்கு வந்த ஆரம்பத்தில் எதுவும் பிடிபடாமல் டெய்லருக்கு கைமடியாக நின்று, மெல்ல மிஷினில் நூல் கோர்க்க பழகி, அடுத்து அவள் டெய்லர் என மிஷினில் அமர ஒரு வருடம் ஆகியிருந்தது.
அவளும் கண் பார்த்தால் கை அதை செய்யும்.. என்ற திறன் கொண்டவளாக இருக்க,
ஓவர்லாக், பேட்லாக்கை விட, சிங்கர் வேலை சிக்கலான ஒன்று என்றாலும் நல்ல வருமானம் பார்க்க முடியும்.. என்பதை கண்டு கொண்டவள்,
கிடைக்கும் நேரத்தில் அதை செய்பவரிடம் சென்று அதை கற்றுக்கொண்டு, இன்று சிங்கர் டெய்லராக வாரம் ஏழு அல்லது எட்டாயிரம் வரை கூட சம்பளம் வாங்குகிறாள்.
சீசன் நேரத்தில் அது இன்னும் உயரும்.
error: Content is protected !!