Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 42.2

காலை ஆறரை மணிக்கு எல்லாம் திருமண சடங்குகள் ஆரம்பமானது.

எலுமிச்சை மஞ்சள் நிறத்தில், கைய் அகல கரும்பச்சை பார்டர். அதில்  கெட்டி ரெட்டை பேட்  ஜரிகை.. அத்தனை அழகாக இருந்தது அந்த பட்டு புடவை. தனது திருமண பட்டுப்புடவையை அணிந்து மங்களகரமாக இருந்தார் சௌந்திரவள்ளி பாட்டி. 



Advertisement

அவர் பக்கத்தில் பட்டு வேஷ்டி  சட்டை அங்கவஸ்திரம் அணிந்து நின்று கொண்டிருந்தார் வீரராகு தாத்தா.

அவரை போலவே பட்டு வேஷ்டி சட்டை அங்கவஸ்திரம் என்று வேதா தாத்தாவும் முருகானந்தம் தாத்தாவும் உடன் நின்று கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

“ஏன் தாத்தா, இவ்வளவு அழகான பாட்டியை எப்படி நீங்க கை பிடிச்சீங்க?” என்று ஹர்ஷித்தா கேட்க,

“ஏன், எங்க  தாத்தாவுக்கு என்ன? இப்ப கூட ஹீரோ மாதிரி இல்ல இருக்காரு. இப்ப தாத்தா உம்ன்னு சொல்லட்டும் பொண்ணுங்க கியூல்ல நிப்பாங்க” என்றாள் வர்ஷித்தா.

Advertisement

“உக்கும், நின்னுட்டாலும்” என்று பாட்டி நொடித்துக்கொள்ள,

“இந்த ஜென்மம் மட்டுமில்ல, இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு என் சௌந்திரவள்ளி போதும்” என்று கூறி தாத்தா காதலாக அவரை பார்க்கவும், 

மஞ்சள் பூசிய முகத்தில் சிறு வெட்கம் பரவ, கல்யாண புடவையின் மஞ்சள் நிறத்தில் தங்கமாக ஜொலித்தார் பாட்டி.

இப்படி ஆத்மார்த்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அங்கு இருந்த அனைவரும் ஆசைப்பட , அந்த காட்சி வார்த்தையால் கூறமுடியாதுபடி அழகாக இருந்தது… அதனை கட்சிதமாக புகைப்படம் ஆக்கினான் ராகவ்.

யாரையும் நிறுத்தி போட்ட எடுக்கவில்லை.. நடக்கும் நிகழ்வுகளை இயல்பாக கேமெராவில் பிடித்து கொண்டான்.

சக்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து முதலில் தீபாராதனை காட்டினார் புரோகிதர். பின் மணமக்களை அழைத்து வருமாறு கூறினார்.

அத்தை மாமா தான், கை பிடித்து மணப்பெண் மாப்பிள்ளையை கோவிலுக்கு அழைத்து வர வேண்டும்.

தமயந்தி “நான் தான் ரெண்டு பேருக்கும் அத்தை..” என்று ஒரே ஆர்ப்பாட்டம்.

ஒரே சமயத்தில் எப்படி பெண் மாப்பிள்ளை இருவருடனும் வர முடியும்?

கருணா தான், “அத்தை, அவினாஷ் பக்கம் வேற யாரும் இல்லை.. நீங்க அவங்கக்கூட வாங்க.. சின்ன வயசுல இருந்து உங்க கை பிடிச்சு தானே நான் வளர்ந்தேன். இன்னிக்கு நீங்க அவினாஷ் கூட வந்தா அது அவினாஷ் தாத்தா அருந்ததி மூனு பேருக்கும் ரொம்ப பலமா இருக்கும். அது உங்க கடமையும் கூட” என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

சுமதி, சங்கரன், வில்வா, வர்ஷித்தா மணப்பெண்ணுடனும்.. தமயந்தி, தர்மராஜ், பாரி, ஹர்ஷித்தா, அருந்ததி மணமகனுடனும் கோவிலுக்குள் நுழைந்தார்கள்.

நாதஸ்வரம் மேளம் மட்டும் ஏற்பாடு செய்ய ஒத்து கொண்டிருந்தாள் கருணா..

மெல்லிய இசை ரம்மியமாக ஒலித்தது.

ஒவ்வொரு சடங்குகளையும் புரோகிதர் விளக்கி கூறி நிதானமாக அனைத்தையும் செய்தார்கள். அதுவே அத்தனை மனநிறைவை கொடுத்தது.

எளிமையான கல்யாணத்தில் முழுதாக கலந்து கொள்ள முடிந்தது அனைவராலும்.

முதல் சடங்கு சங்கல்பம்,

மணமகன், மணமகள் கோவிலுக்கு வருகை தந்த பிறகு, புரோகிதர் மணமக்கள் பெயர்,கோத்திரம், ஊர், திருமண நாள், நேரம் ஆகியவற்றை இறைவன் முன்னிலையில் அறிவித்து சங்கல்பம் செய்வது.

அதாவது திருமணம் இறைவன் சாட்சியுடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

அடுத்து விநாயகர் பூஜை.

ஹோமம் வைத்தும் செய்யலாம், இல்லையென்றால் மூலவர் சந்நிதியில் இறைவனை முன்நிறுத்தியும்  திருமணத்தை நடத்தலாம், அது உங்கள் விருப்பம் என்று புரோகிதர் முன்பே கூறி இருந்தார்.

இறைவன் முன் நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் பெரியவர்கள்.

விநாயகர் பூஜை முடிந்ததும் மாலை மாற்றும் சடங்கு.

மாலையின் பொறுப்பை பாரியும் வில்வாவும் ஏற்றுக்கொண்டார்கள். கருணாவிற்கு சிறு வயதில் இருந்தே குண்டு மல்லி என்றாள் மிகவும் பிரியம். ஆனாலும் பிடித்திருக்கிறது என்பதற்காக நிறைய எல்லாம் வைத்து கொள்ள  மாட்டாள், அரை முழம் தான் … இருவரும் மதுரையில் இருந்தே நெருக்க தொடுத்த மல்லிகை பூ மாலைக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர். வேறு எந்த பூவும் சேர்க்காமல் வெறும் மல்லி பூவிலே ஆன ஜாதி மாலை.. அத்தனை வாசமாகவும் அழகாகவும் இருந்தது.

இருவரும் மூன்று முறை மாலை மாற்றி கொண்டார்கள். மாலை  மாற்றுவது என்பது ஒருவரையொருவர் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளிப்பது.

 

அதன் பின் கன்யாதானம்

சங்கரனும் சுமதியும் கருணாம்பிகையின் கையை அவினாஷின் கையில் வைத்து கன்யாதானம் செய்து கொடுத்தனர்.

மணமக்களின் கைகளை சேர்த்து பிடித்து கொள்கையில் புரோகிதர் மந்திரங்கள் கூறி, அதன் மேல் ஸ்வாமி தீர்த்தம் தெளித்து இந்த சடங்கை நிறைவு செய்து வைத்தார்.


அடுத்ததாக  மாங்கல்ய தாரணம் 

தமயந்தியின் கை வண்ணத்தில் கனகாம்பர நிற பட்டு புடவையில் மணப்பெண்ணாக ஜொலித்தாள் கருணா.

தேஜஸ், என்று கூட சொல்லமுடியாது.. ஒரு வித தீட்சன்யத்தோடு இருந்தாள் பெண்ணவள். 

கருணையே வடிவான சக்தி விநாயகர் சந்நிதியில், உற்றார் உறவினர்கள் சூழ்ந்து நிற்க, சுப முஹூர்த்த நேரத்தில் உள்ளம் எல்லாம் நிறைந்து இருக்க, கெட்டி மேளம் முழங்க, மெய் சிலிர்க்க… மனமெல்லாம் சிலிர்க்க… தன் கைகளால் பொன் தாலியை கருணாம்பிகையின் கழுத்தில் ஆசையாக ஆத்மார்த்தமாக ஆனந்தமாக அணிவித்தான் அவினாஷ்.

அனைவரின் மனமும் மகிழிச்சியில் திளைத்திருந்தது. திருமணம் அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றது.

அடுத்ததாக அட்சதை ஆசீர்வாதம்

மூத்தவர்கள் மணமக்கள் மீது மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை) தூவி ஆசீர்வதிப்பது. போட்டோ எடுப்பதிலே நேரம் சென்று விடுகிறது இப்பொழுது நடக்கும் திருமணங்களில் எல்லாம். ஆனால் இந்த சடங்கை சிரத்தையுடன் செய்தனர். முதலில் வீரராகு சௌந்திரவள்ளி பாட்டியிடம் தொடங்கி, பின் வேதா தாத்தா, முருகானந்தம் தாத்தா, சுமதி சங்கரன், தமயந்தி தர்மராஜ், ராஜி விக்ராந்த், சீதாலட்சமி ஸ்ரீனிவாசன், ரஞ்சி ஆன்ட்டி, அனந்தன் தாத்தா, இன்னும் வந்திருந்த பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர் மணமக்கள்.


இப்படி ஆசிர்வாதம் வாங்குவது  குடும்பமும் சமூகமும் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் ஆகும்.

அடுத்ததாக சப்தபதி.

சப்தபதி என்பது ஏழு படிகள் என்று பொருள்.

சப்தபதி முடிந்த பிறகே திருமணம் முழுமை பெறுகிறது.
அவினாஷின்  இடப்புறத்தில் கருணாம்பிகை நிற்க, அவளது புடவை முனையை அவினாஷின் அங்கவஸ்திரத்துடன் முடிச்சுப் போட்டாள் அருந்ததி.

ஏழு படிகளை குறிக்க ஏழு வெற்றிலை வைத்து அதன் மீது கொஞ்சம் அரிசியை வைக்குமாறு புரோகிதர்  கூறினார். பாரியும் வில்வாவும் அதனை செய்தார்கள்.

பின் அவினாஷும் கருணாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு ஒவ்வொரு படிகளாக தாண்டினார்கள்.அதற்கான விளக்கத்தை புரோகிதர் அழகாக விளக்கினார்.

முதல் படி – உணவு

இல்லத்தில் உணவு, அன்னம் எப்போதும் குறையாமல் இருவரும் சேர்ந்து பொறுப்பேற்கும் உறுதி.

இரண்டாம் படி – ஆரோக்கியம்

உடல், மன ஆரோக்கியத்துடன் வலிமையாக வாழ்க்கை நடத்தும் உறுதி.

மூன்றாம் படி – செல்வம்

நேர்மையான வழியில் செல்வம், தொழில், முன்னேற்றம் பெறும் உறுதி.

நான்காம் படி – மகிழ்ச்சி

இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றாகப் பகிர்ந்து வாழும் உறுதி.

ஐந்தாம் படி – சந்ததி

நல்ல பண்புகள் கொண்ட பிள்ளைகளை வளர்க்கும் உறுதி.

ஆறாம் படி – ஒற்றுமை

புரிதல், பொறுமை, நம்பிக்கை, விசுவாசத்துடன் வாழும் உறுதி

ஏழாம் படி – நட்பு

வாழ்நாள் முழுவதும் நண்பர்களாகவும் துணையாகவும் ஒன்றாக பயணம் செய்யும் உறுதி.

இருவரும் உணர்ந்து ஏழுபடிகளை தாண்டினார்கள்.

சப்தபதி முடிந்ததும் இறுதியாக பிரதட்சிணம். 

புரோகிதர்  மணமக்களை மூன்று முறை கோவில் பிரகாரத்தை சுற்றி வருமாறு கூறினார். மணமக்களை பின் தொடர்ந்து குடும்பத்தார் அனைவருமே மூன்று முறை பிரதட்சணம் செய்தார்கள்.

காலை உணவு கருணா வீட்டிலும் மதிய உணவு அவினாஷ் வீட்டிலும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருமணம் நிறைவாக பூர்ணமடைந்தது.

—————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!