Skip to content
Post Views: 5,141
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 3
இரவு ஒன்பது மணி.. தாய்க்கும், மகளுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்து முடிந்தது. மீனா வெளி வாசலில் அமர்ந்து கொண்டாள். பரமு, பேரன் பேத்திகளோடு படுத்து கொண்டார். தாய் கண்டிப்பாக சொல்லிவிட்டார் “நீ கணவனோடு தான் சேர்ந்து வாழ வேண்டும்_ என்று..
சாப்பிடாமல் வெளியே அழுத விழிகளோடு விட்டத்தை வெறித்து பார்த்திருக்கும் மகளை நினைத்து நெஞ்சு கலங்கியது. கஷ்டப்படும்போதெல்லாம் கணவன் தான் வேண்டும் என்று அவனோடு சேர்ந்து இருந்து விட்டு, இன்று வசதியாக இருக்கிறான் இந்தப் பெண் பிடிவாதம் பிடிக்கிறதே என்று ஆற்றாமையாக இருந்தது.
Advertisement
“மீனா, தங்கப்பிள்ளை ஒரு வாய் சாப்பிட வாடி” மனம் கேட்காமல் அழைத்தார் தாய்.
“பேசாம போம்மா, என் வேதனையை கிளராத”
“அன்னைக்கு தான் என் பேச்சைக் கேட்காம அவன் தான் வேணும்னு நின்ன.. இன்னைக்காவது பெத்தவ பேச்சைக் கேளு மீனா. உன் பிள்ளைகளை பாரு, அவங்களுக்காகவாது நீ யோசிக்கணும்” என்றதும்,
Advertisement
மீனா உதடு துடித்தது, இப்படி எத்தனையோ நினைத்து கணவனை அனுசரித்தாள். நெஞ்சில் நெருப்பு வைத்து விட்டான். தற்போது நன்றாக இருக்கிறான் என்று தெரியும். அதனால்தான் தாய் பறக்கிறார். எப்படியாவது மகளை வசதியாக வாழ வைத்து விட வேண்டும் என்று…
Advertisement
“ஏம்மா, அவன் தான் வேணும்னு சாகுற அளவுக்கு போய் அவன் கையில தாலி வாங்கினேன். அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாத போதும் என் புருசன்னு நின்னேன். அப்படி இருந்தவ இன்னைக்கு வேணாம்ன்னு சொல்றேன்னா, எம் மனசு எம்புட்டு அடி பட்டு இருக்கும். தள்ளி நின்னு நீங்க பார்த்தது பத்து தான். நாலு செவுத்துக்குள்ள நான் அனுபவிச்சது ஆயிரம். எம் மனசு மாறாது விட்டுடுங்க” முடிவாக சொல்ல,
என்ன பேசுவது என்று தெரியாமல் உள்ளே சென்று விட்டார் பரமு…
மகள் பக்கம் நியாயம் இருக்கிறது தான். ஆனால் குடும்பம் என்று வரும்போது பெண்ணின் நியாயம் எடுபடாதே… விட்டுக்கொடுத்து அனுசரித்து தான் போக வேண்டும் இல்லையென்றால் பாதிக்கப்பட்டவள் பெண்ணாகி போவாள். அதை மகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே என்று கவலையாகி போனது பரமேஸ்வரிக்கு…
Advertisement
மீனா வெளி லைட்டை ஆஃப் பண்ணி இருந்தாள். அவளுக்கு அழுகணும் போல இருந்தது. மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்க இருட்டில் அமர்ந்திருந்தாள்.
இதுவரை கணவன் என்ற ஒருவனின் நினைவுகளுக்கு திறையிட்டு மறைத்து இருந்தாள். யோசிக்கவே கூடாது என்று தள்ளியே வைத்த நினைவுகள். தாய் கிளறி விட்டார்.
மீனாட்சி மூன்று அண்ணன்களுக்கு அடுத்து தாமதமாக பிறந்தவள். வீட்டில் எல்லாம் ஆண் மக்களாக இருக்க ஒற்றைப் பெண் பிள்ளையை கொண்டாடினார்கள். மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆசையாக மதுரை மீனாட்சியின் பெயர் வைத்தார்கள்.
தந்தை ராமசாமி என் ஆத்தா என்றுதான் கொஞ்சுவார் மகளை.. கஷ்டம், கவலை, குடும்ப பாரம் என்றால் என்னவென்றே தெரியாது. மீனாவுக்கு படிப்பும் பெரிதாக வரவில்லை. அதைப்பற்றி எல்லாம் அவளுக்கு துளி கூட கவலை கிடையாது. ஏனெனில் அவர்கள் வீட்டிலே பெரிய அளவில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மகள் கஷ்டப்படக் கூடாதாம். எல்லோரும் பள்ளி செல்கிறார்கள் என்று தான் மீனாவை பள்ளிக்கு அனுப்பியது.
ஐந்தாம் வகுப்பில் கணக்கு பாடம் தெரியவில்லை என்று ஆசிரியர் ஒரு அடியை போட.. குடும்பமே சண்டைக்கு கிளம்பியது. பேருக்குத்தான் படித்தாள் மீனா. கஷ்டப்பட்டு அக்கறையெடுத்தோ கூட படிக்கவில்லை. ஏதோ பார்டர் பாஸில் அடுத்த வகுப்பு சென்று விடுவாள்.
மீனாட்சி பள்ளி முடிக்கும்போதே மூன்று அண்ணன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவர்கள் வீடு அந்த காலத்து பெரிய மச்சு வீடு. நன்றாக அகலமாக இருக்கும்.. மகன்களை பக்கத்திலே தனி குடித்தனம் வைத்து விட்டார் ராமசாமி. பெரிய அண்ணன் தர்மன். அடுத்த அண்ணன் இந்திரன். அதற்கு அடுத்த அண்ணன் அர்ச்சுனன்.
அவர்கள் வீட்டில் எல்லோரும் கருப்பாக இருக்க ஓர் அளவு மாநிறமாக இருக்கும் மீனாட்சி அந்த நிறத்தை காப்பாற்ற பெரும்பாடு படுவாள். எப்போதும் தன் முகத்தை, உடலை, அழகை முடியை ஆராய்ந்து பராமரிப்பது மட்டும்தான் அவளின் முக்கியமான வேலை. முகத்தில் என்னத்தையாவது தடவிக் கொண்டு ஒரு நாள் முழுக்க டீவியே கதி என்று கிடப்பாள்.
சரியாக ஏழு மணிக்கு போன் வந்துவிடும், “பரமு, வீட்டுக்கு வர போறேன். பாப்பாவுக்கு என்ன வேணும் கேளு” என்பார் ராமசாமி.
“சிக்கன் பிரியாணி சூடா இருக்கு வாங்கி வரவான்னு பாப்பா கிட்ட கேளும்மா” என்பான் தர்மன்.
“நாளைக்கு பாப்பா விசேஷத்துக்கு போகணும்ன்னு சொல்லுச்சு. என்ன பூ வாங்கி வரட்டும்” என்பான் அர்ச்சுனன்.
“மதினி, எங்க காலேஜ்ல பங்க்ஷன் எனக்கு சேலை கட்டி விடுங்க”
“இரு பாப்பா சோறு வடிச்சுட்டு வரேன்”
“சமையல் வேலையை பார்க்க வேணாம் முதல்ல என் தங்கச்சியை பாரு” என்பான் இந்திரன்.
நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் ஒற்றை தங்கையை மிகச் செல்லமாக வளர்த்தார்கள். அவள் விருப்பத்திற்கு தடையே கிடையாது. அதனால் தானோ என்னவோ மிக எளிதாக, தைரியமாக காதலில் விழுந்து விட்டாள்.
அவன் சொந்தமெல்லாம் கிடையாது. பக்கத்து வீடு ஒரே ஊர், ஒரே ஆட்களாக இருக்க.. மாமன் முறை, சிவந்த நிறம், பளிச்சென்ற தோற்றம், ஊரில் பந்தாவாக எல்லா நிகழ்ச்சியிலும் முன் நிற்பான். தாய், தந்தை கிடையாது. அம்மத்தா வீட்டில் தான் வளர்ந்தான்.
சகஜமான முறை பசங்கள் கேலி கிண்டல் எல்லாம் இருக்கும். ஆனால், காதல் என்ற உணர்வு முதலில் மீனாட்சிக்கு தான் வந்தது. பல்சர் வண்டியில் அவன் வரும் அழகே தனி.. அப்படி ரசிப்பாள் மீனாட்சி. காதல் சொல்ல பயமெல்லாம் கிடையாது. நல்ல வாய் மீனாட்சி.
“கல்லை கண்டால் கூட நின்னு பேசுவா.. பொம்பள பிள்ளைக்கு அப்படி என்ன வாய்” அதட்டுவார் பரமேஸ்வரி.
வீட்டில் எல்லோரும் செல்லம் கொடுக்க இவர் மட்டும் கொஞ்சம் கெடுபுடி. அதற்காக மகளைத் தாங்காமல் எல்லாம் இருக்க மாட்டார். வீட்டிற்கு வந்த மூன்று மருமகள்களும் மீனாவை தான் கவனிக்க வேண்டும். அது அந்த வீட்டின் சட்டம். ஒற்றைப் பெண் பிள்ளை செய்யட்டுமே என்று பரமுவும் ஆதரிப்பார்.
“அடி கருப்பு நிறத்தழகி, உதட்டு சிவப்பழகி, சில்லறையா செதருரேன்டி” என்று அவன் பாட,
வழக்கமான கேலியாக கடக்காமல்,
“என்ன மாமா கிண்டலா? நான் கருப்பு நீங்க அப்படியே எலந்த பழ கலரோ? என்னை விட கொஞ்சம் தான் கலர் நீ.. ஓவரா கேலி பேசாத.. விவகாரம் வேற மாதிரி ஆகும்”
“என்னடி ஆகும் கருத்தம்மா” என்றதும் முறைத்தவள்,
“இந்தக் கருத்தம்மா கிட்ட காலத்துக்கும் கஞ்சி குடிக்கிற மாதிரி ஆயிரும்” என்றாள் வெடப்பாக…
“நான் என்ன மாட்டேன்னா சொல்லுவேன். என் மாமா மகளாக்கும்”
அவனை நேர்கொண்டு பார்த்தவள், “வெட்டி வாய் செவுடல் விடாம, வீடேறி எங்க அண்ணன்ங்க கிட்ட பேசுற தைரியம் இருக்கா என் மாமனுக்கு” என்றதும், புரியாமல் பார்த்தவன்,
“என்ன சொல்ற மீனா?”
“என்ன சொல்லுவாங்க? வந்து பொண்ணு கேளுய்யா” நெத்தியடியாக மீனா பேச வாய் அடைத்துப் போனான்.
“என்ன மீனா சொல்ற.. நான் என்னவோ மாமான் மகன்னு கேலி பேசினேன்”
“நான் நிஜத்த தான் பேசினேன். அடுத்த வீட்டில அயித்த மகன் இருக்க, ஊர் முழுக்க மாப்பிள்ளை தேடுவாங்களாக்கும்”
“நானா? ஏய் ஊர்ல கலவரத்தை உண்டு பண்ணாத.. ஒழுங்கா வீட்டுக்கு போ…”
“அத்தை மகன் நீங்களே என்னை வேணான்னு சொன்னா.. வேற யார் என்னை கட்டிக்குவா? நான் உங்களை தான் மனசுல நினைச்சு இருக்கேன்” என்றாள் தெளிவாக..
அவனுக்கு பேச்சே வரவில்லை. திகைத்து போய் பார்க்க, விடவில்லை மீனாட்சி. வாய் தாட்டியம் உள்ள பெண். அதட்டி, மிரட்டி, கொஞ்சி, சிரித்து என்று பல்வேறு விதமாக தனக்குள் இழுத்து கொண்டாள்.
ஒரு மணி நேரம் வெளி வாசலில் கோலம் போடுவதும், தெருவிலே நடப்பதும், அடிக்கடி போன் பார்ப்பதும், விதவிதமாக அலங்கரிப்பதும் என்று இருந்த மகளை விரைவிலேயே கண்டு கொண்டார் பரமு…
இவன் தான் என்று தெரிந்ததும் வீடே போர்க்களம் தான். மீனாட்சி பிடிவாதமாக நின்று விட்டாள். தெரிந்த பையன் ஒரே ஆட்களாக இருந்த போதும் பெரிதாக வசதி வாய்ப்பு இல்லை. படித்துவிட்டு ஊரை சுற்றிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் இல்லாமல் பாட்டி வீட்டில் வளர்பவன் எத்தனை தலை கட்டு வரும். தங்கள் வீட்டின் செல்ல மகளுக்கு ஏதேதோ கனவு கண்டிருக்க.. இப்படி போய் விழுந்து விட்டாளே என்று இருந்தது.
பெண் பிள்ளை விவகாரம் என்பதால் வீதிக்கு வராமல் தன் மகளோடே முடித்து விட பார்த்தார்கள்.
“சொன்னா கேளு மீனா. சும்மா வண்டியில நாலு தடவை சுத்தி வந்து பகுமானமா இருந்தா போதுமா? அந்த வீட்டுல வேற ஒன்னும் இல்லை. ஒத்தை பயலா நிக்குறான். சொத்து வரும்ன்னு சொல்றாங்க. ஆனா, ஒன்னும் கிடையாது. உன்னை சீரும் சிறப்புமாக கட்டி கொடுக்க நினைக்கிறேன்” என்று மகளுக்கு நிலவரத்தை புரிய வைத்துக் கொண்டிருந்தார் பரமு..
“அம்மா, சும்மா தேவையில்லாம எதுவும் பேசாத.. நான் அவனைத் தவிர வேறு யாரையும் கட்டிக்க மாட்டேன்.. போ, போய் சொல்லு உன் மகன்ங்ககிட்ட நல்ல முறையில் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி, இல்லை எம் மாமனோட ஓடி போயிடுவேன்” மகள் பிடிவாதமாக சொல்ல திகைத்து போனார் பரமு..
மகளை எப்படி சரி கட்ட என்று தெரியாமல் நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள். அடித்து மிரட்டவும் மனம் வரவில்லை. நாள் சென்றால் அவளாக மாறி விடுவாள் என்று இருக்க, மீனா நொடியும் மாற வில்லை.
இது ஆகாது என்று பெரிய அண்ணன் வெளியிடத்தில் மாப்பிள்ளை தேட, மீனா எலி மருந்தை குடித்து விட்டாள். சாவதற்கெல்லாம் கிடையாது சும்மா தன் வீட்டு ஆட்களை மிரட்டி பார்க்க..
ஆனாலும் அவள் நினைத்துப் பார்க்காத வகையில் மிக சிரமப்பட்டாள் மீனா. வாயில் டியூப் விட்டு வயிற்றை சுத்தம் செய்து ஆகாரம் எல்லாம் மிகுந்த சிரமப்பட்டு தேறி வந்தாள். அதற்குப் பின் ராமசாமி தாமதிக்கவில்லை. மீனா ஆசைப்பட்டவனோடு திருமணத்தை பேசி முடித்தார்.
அதில் அண்ணங்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் முகத்தை தூக்கி வைத்திருந்தார்கள்.
“விடு மக்கா, நம்ம பிள்ளை நம்ம கண்ணேதிர்க்க தான் இருக்க போகுது. அவங்க வீட்ல எதுவும் இல்லாட்டி போகுது. நம்ம எல்லாம் நிறைவா செய்வோம். அந்தப் பையன் வீட்டில் ஆள் இல்லை. நம்ம பக்கம் வந்துடுவான். நம்ம கூட வச்சு பார்த்துப்போம்” என்று தந்தை சமாதானம் செய்ய, ஓரளவு சரி வந்தார்கள் அண்ணன்கள்.
இருவருக்குமே கொஞ்ச வயதுதான். மீனாட்சி கல்லூரி படிப்பை கூட முடிக்காமல் இருவதில் அடி எடுத்து வைக்க, அவனுக்கு இருவத்தி மூணு… நன்றாகத்தான் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். மீனாவுக்கு எந்த குறையும் இல்லை. பக்கத்திலே அம்மா வீடு, அண்ணன்கள், பிடித்த கண்வன் என்று கல்யாண வாழ்க்கை அவளுக்கு மிக திருப்தி.
“அம்மா வீட்டுல என்ன குழம்பு?” தாய் வீட்டிலிருந்து என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்வாள்.
“இந்திரா உங்க வீட்ல இன்னைக்கு என்ன?” என்ற தாய்க்கு “மீன் குழம்பு” என்று பதில் வரும்.
பெரியவன் வீட்டுல “ஆட்டு இறைச்சி” என்றால் பரமு வேறு ஏதாவது செய்து வரிசையாக பாத்திரம் நிறைய மகள் வீட்டுக்கு சென்று விடும்.
ஏழு மணிக்கு சாப்பாடு போட்டு டீவி முன் அமர்ந்தாள், சாப்பிட்ட கையும் தட்டும் காய்ந்து போகும் வரை எழுந்திருக்க மாட்டாள். அவளை யார் கேள்வி கேட்பது. எந்த பிக்கல் புடுங்கலும் இல்லாமல் நன்றாக தான் போனது. திருமணம் முடிந்து ஒரு மாதம் கல்லூரிக்கும் சென்று வந்தாள். அடுத்த மாதத்தில் நாள் தள்ளி போக, அத்தோடு படிப்பு நின்று போனது. வீட்டிலேயே செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்து விட்டாள். மகளையே அப்படி தாங்குபவர்கள் அவள் தாயாகப் போகிறாள் என்றதும் கொண்டாடி விட்டார்கள். தமிழ் அமுதா பிறந்து தந்தை ராமசாமி இறக்கும் வரை வாழ்க்கை மீனாட்சிக்கு சொர்க்கம் தான். அதன் பின் தான் தலைகீழ் மாறி போனது.
நினைவுகள் நெஞ்சை அழுத்த மௌனமாக கண்ணீர் வடித்தாள் மீனாட்சி. அவள் காதல்.. அதை மட்டும் மீனா யோசிக்கவே மாட்டாள். மற்ற நேரத்தில் எல்லாம் வைராக்கியமாக இருக்கும் மனது, தனது காதல் காலங்களை நினைத்தால் மட்டும் இளக தொடங்கி விடும்.
கண்மூடி மீனாட்சி அமர்ந்திருக்க, அவள் முகத்திலேயே பளிச்சென்று வண்டியின் வெளிச்சம் பட்டது. கண் திறந்து பார்த்தாள் ஜெகன். தூரத்தில் வரும் போதே வரிவடிவமாக மீனா அமர்ந்திருப்பதை பார்த்து விட்டான். என்னவாக இருக்கும் என்று தான் அவள் முகத்திற்கு நேர லைட் வெளிச்சம் அடித்தது. அருகில் வந்து எல்லாம் அவளை காண முடியாது அவன் வண்டிச்சத்தம் கேட்டாலே உள்ளே சென்று விடுவாள். வண்டியின் வெளிச்சத்தில் முகத்தின் கண்ணீர் கோடுகள் நன்றாக தெரிந்தது.
என்னவோ என்று பார்க்க, அவன் முகத்தை பார்த்து முறைத்தவள், உள்ளே சென்று விட்டாள். பரமேஸ்வரி தான் வெளியில் வந்தது.
“மீனா கூட சண்டை போட்டீங்களா?” என்றான்.
“வாழ்க்கையில கஷ்டப்பட்டா பக்குவம் வரும். இவ இன்னும் மாறலையே.. அப்படி என்ன பிடிவாதமும், வீம்பும்.. பெத்த பிள்ளைகளை கூட நினைக்கலையே.. எம்புட்டு நாளைக்கு இப்படி காலம் தள்ள முடியும். அடுத்த வருஷம் அந்த சின்னதையும் ஸ்கூல்ல சேக்கணும். இவ நாப்பது ரூபாய்க்கு இட்லி வித்து மூணு பிள்ளைக்கும் பணம் கட்டி படிக்க வைக்க முடியுமா? பெத்தவன் கிட்ட இருந்து பிள்ளையையும் ஒதுக்கி வைக்க கூடாது இல்ல” என்றார்.
“மீனா கோபமும் நியாயம் தானே” என்றான் ஜெகன்.
“சொந்த குடும்பத்துல நியாயம் பேசுறது சரியா? தண்டனை யாருக்கு? தனிமரமா நீ தான நிக்கிற.. நல்ல சாப்பாடு இல்லை. நல்ல துணிமணி கிடையாது. கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து யார் கிட்ட நிருபிக்க போற? பொம்பளை பிள்ளைக்கு ஒன்னு பெத்தவங்க இருக்கணும், இல்ல கட்டின புருஷன் இருக்கணும். ரெண்டும் இல்லாம இந்த காலத்துல வாழவே முடியாது” பரமுக்கு மனமே தாங்கவில்லை.
கணவர் இருந்தால் மகளுக்கு இவ்வளவு கஷ்டம் இருக்காது. எப்படி எல்லாம் வளர்த்தார்கள்.
“மீனா செல்லமா வளர்ந்த அளவுக்கு கூட, அவ பிள்ளை வளரல. சொந்தம் என்று போய் நிற்க கூட உறவு இல்லாம போயிருச்சு. என் பேரன் பேத்தி கஷ்டப்படுவதை பார்த்து மனசு பொறுக்கல” தொடர்ந்து பரமு அழுக,
“மீனாவ சமாதானம் செய்ங்க. நீங்க வெளிய நிக்கிறதை பார்த்தா, உங்க கூட தான் சண்டை போடுவா.. அவளை சாப்பிட வைங்க” என்று மேலேறிய ஜெகனின் மனம் கனத்தது போனது.
error: Content is protected !!