Skip to content
Post Views: 1,794
எப்போதும் கண்டதும், “அண்ணி..” என வந்து பேசும் தீனா, இன்று தான் வந்ததை கூட உணராமல் வாசலை எட்டிப்பார்க்க கண்டு குழம்பிய அருந்ததி அவனிடமே கேட்டு விடும் முடிவோடு அவனருகே வந்து,
“தீனா, என்ன.. என்னைய எல்லா கண்ணுக்கே தெரியலையோ..?” என்றார் சிரிப்போடு.
Advertisement
அவரின் குரலில் அடையாளம் கண்டு திரும்பியவன் அவரை கவனிக்காமல் விட்டதில் சற்று குற்ற உணர்வு கொண்டு,
“அண்ணி.. சாரி ண்ணி. நா.. நா உங்கள கவனிக்கல..” என தயங்கி தடுமாற,
Advertisement
Advertisement
“ஏய்.. என்னப்பா சாரியெல்லாம் சொல்லிட்டு. உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா உன்னைய விட்டுட்டு, அவனுக்கே ஆயிரம் வேல.. இதுல உனக்கு வெத்தல பாக்கு வைக்கலன்னு அவன பேசினீயான்னு.. என்னைய தான் சத்தம் போடுவார்.” என்றார் அவசரமாக.
அவர் சொல்லவதும் உண்மை தான் என்பதால் சிறு புன்னகையை உதிர்த்த தீனா, “அண்ணே.. பூஜை நடக்கற இடத்துல இருக்காங்க அண்ணி..” என அவரை கிளப்ப பார்த்தான்.
Advertisement
“பூஜைக்கு நேரமாச்சே.. எதாவது வரவேண்டி இருக்கா தீனா..?” என்றிட,
“இல்லைங்களே அண்ணி.. ஏன் கேட்கறீங்க..?” என்றான் புரியாமல்.
“இல்ல, பூஜை நேரத்துல என்ன உள்ள அனுப்பிட்டு இங்கே நீ என்ன பண்ண போறே..?” என்றார் புருவம் சுருக்கி.
‘அச்சோ..’ என விழித்தவன்,
“இல்ல ண்ணி.. உங்கள பாக்க தான் வந்தேன்.. அதுல.. அது..” என உலறி,
பின் வேறு வழியின்றி, “வாங்க போலாம்..” என அவருக்கு முன்னால் விரைந்துவிட்டான் பூஜை நடக்குமிடம் நோக்கி.
அங்கு சென்றதும் அருந்ததி குத்து விளக்கை ஏற்றி வைத்ததும்
தங்கமணி தேங்காய் உடைத்து பூஜையை ஆரம்பித்து வைக்க தீனா மற்ற எல்லாவற்றையும் முறையாய் செய்ய முன்வந்தான்.
இந்த சில வருடங்களாக தங்கமணி ஆரம்பித்து வைத்த பின் அனைத்தையும் செய்வது தீனா தான்.
அதே போல செய்ய சென்று நின்றவனை தன் விழிகளால் படம் பிடித்துக்கொண்டிருந்தாள் அவனின் உயிரானவள்.
அவளின் பார்வையை உணர்ந்து கொண்டவனுக்கு அவளை காணும் ஆவல் தோன்ற அதையும் இதையும் எடுப்பது போல திரும்பியவனின் கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்டினாள் அந்த கள்ளி.
“இவள..” என நொந்து கொண்டவனுக்கு பூஜையில் கவனம் செலுத்த முடியும் என்றே தோன்றவில்லை.
அதிலும் அவன் திரும்பியதும் அவளின் பார்வை அவனை மீண்டும் துளைக்க, சாதாரண பார்வையே அவனை ஒரு வழியாக்கும்.
இப்போது அவளின் இந்த உரிமை பார்வை அவனுள் ஏதேதோ செய்து வைக்க லேசான தடுமாற்றம் தன்னாலேயே உண்டானது.
அருகே இருந்த குமரன் வேறு கண்டு கொண்ட பாவனையில் நக்கலாய் ஒரு புன்னகையை சிந்த, அவளிடம் காட்ட முடியாத கடுப்பை குமரனிடம் விழியால் காட்டி மிரட்டினான் தீனா.
தீனாவிற்கு எதையோ எடுத்து கொடுப்பது போல அருகே குனிந்த குமரன், “அண்ணே.. பார்வைக்கே இப்படியா..? அப்போ.. தாலி கட்டும் போது..” என கிண்டலாக சொல்ல,
“அவள.. அந்த பக்கம் போக சொல்லுடா..” என அவனும் இவனிடம் பல்லிடுக்கில் முணுமுணுக்க,
“அப்போ.. தாலிய யாருக்கு கட்டுவே..?” என்றான் விடாமல் அவனும்..
“அடேய், படுத்தாதீங்கடா..” என மெல்ல உரைத்தவன்,
நிச்சயமாக அதற்கு மேல் தன்னால் முடியாது.. என நினைத்து நிமிர்ந்து தங்கமணியை பார்த்து, “அண்ணே.. மிச்சத்தையும் நீங்களே செய்ங்க..” என்று தயக்கத்தோடு சொன்னான்.
அவன் சொன்னதும் யோசனையோடு அவனை பார்த்தாலும் அவனின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவரை இளக்க புன்னகையோடு அவனின் தோளை தட்டியவர்,
“வாடா..” என அவனை உடன் அழைத்து நிறுத்தியவர் புதிதாக செய்பவருக்கு சொல்வது போல ஒவ்வொன்றாக சொல்ல,
அவரின் அருகாமையில் அவனின் தடுமாறிய மனது நிலைப்பட தொடங்க அவனும் பூஜையை நிறைவாகவே செய்து முடித்தான்.
இளைஞர் குழு ஒன்று இங்கு பூஜை தொடங்கியதும் பட்டாசுகளை வெளியே கொழுத்த ஆர்ப்பாட்டமாய் நடந்தது முடிந்தது பூஜை.
தீனாவின் செய்கையை கண்டுகொண்ட அருந்ததி, “என்னங்க சங்கதி..?” என தங்கமணியிடம் விசாரிக்க அவரும் விசயத்தை சொல்லிவிட்டார் தன் மனைவியிடம்.
“ஓ..! அதா அப்படி பாத்துட்டு நின்னானா..?
கேட்டதுக்கு உங்கள பாக்காத்தான்னு அடுச்சு விடறான். இருங்க அவன வச்சுக்கறேன்..” என மிரட்டலாக பேசுவது போல இருந்தாலும் அவருக்கும் இந்த விசயத்தில் அத்தனை நிம்மதி.
ஒரு சாதாரண யூனிட்டாய் இருந்த ஒன்று.. ஓரளவு பெயர் சொன்னால் தெரியும் கம்பெனியாய் இன்று மாறியிருக்க தங்கமணி மட்டுமே காரணமில்லை.. என்பது அவரின் சரிபாதிக்கு தெரியாதா..?!
அதனாலேயே அவருக்கு தீனா மேல் அன்பு மட்டுமல்ல நல்ல மரியாதையும் உண்டு.
அவன் மட்டும் அவர்களின் மகள்களை தங்கையாய் பார்ப்பதாய் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த நேரம் அவன் இவர்களின் மூத்த மருமகனாக ஆகியிருப்பானே..!
தங்களின் மகளையே கொடுக்க நினைக்கும் அளவுக்கு அவனின் மீது மதிப்பு கொண்டவனின் வாழ்க்கையில், ஒரு நல்லது நடக்க போகிறது என்றால்.. அவருக்கும் அது மகிழ்ச்சியான விசயம் தானே.
“பொண்ணு யாருங்க..?” என்றார் அருந்ததி ஆர்வத்தோடு.
“நானும் இந்த பயல கேட்டு பாத்துட்டேன். பூஜைய முடிங்க காட்டறேன்னு எஸ்கேப் ஆகறான்..” என்றார் அவரும் எதிர்பார்ப்போடு.
“அதான் பூஜை முடுஞ்சதே அவன கூப்பிடுங்க கேட்போம்..” என்றார் ஆர்வத்தை அடக்க முடியாமல்.
அவர்களின் பேச்சுவார்த்தையை கேட்டுக்கொண்டே அங்கு வந்த குமரன்,
“என்னங்க அண்ணே.. தீனா ஜோடிய தேடறீங்களோ..?” என்றான் சிரித்தபடி.
“அடேய் உனக்கு தெரியுமாடா..?” என்றார் தங்கமணி அவசரமாய்.
“ம்ம்.. அதெல்லாம்..” என காலரை தூக்கி விடாத குறையாய் அவன் சொல்ல, நொடியில் அவரின் முகம் வருத்தத்தை தந்தெடுத்தது.
அதை கண்ட குமரனுக்கு காரணம் புரிந்துவிட, “அய்யோ அண்ணே.. நீங்க நினைக்கற மாதிரி அவரா எதையும் எங்கிட்ட சொல்லல..” என்றவன்,
அன்று உடல்நலம் சரியில்லாமல் போனது முதல்.. இருவருக்கும் நடந்த கண்ணாமூச்சி ஆட்டத்தையும், இறுதியாய் தீனா காதலை ஏற்றுக்கொண்டதையும் சொன்னவன்,
“அவர் சொல்லாதத அந்த பொண்ணு சொன்னதால தான் எனக்கு தெரிஞ்சுதுங்க அண்ணே..
விசயம் எனக்கு தெரிஞ்சதும் உங்ககிட்ட நா சொல்லறேன்னு சொன்னதுக்கு..” என்றவன் தீனாவின் பதிலையும் சொல்லி,
“அவரா உங்ககிட்ட இன்னைக்கு சொல்ல தான் இருக்கார்.. நீங்க தெரியாத மாதிரி அவர நோட் பண்ணுங்க.. அவரே அந்த பொண்ணுகிட்ட போய் நிற்பார்..” என்றான் விளக்கமாக.
தீனாவின் எண்ணத்தையும், தன் மீதான மரியாதையையும் எண்ணி மகிழ்ச்சி கொண்டவர் தீனாவின் நடவடிக்கையை நோட்டமிட ஆரம்பித்தார்.
பூஜை ஒரு தளத்தில் நடக்க, மற்றொரு தளத்தில் வைத்து டிபன் வேலையும், முறையாக பிரசாதமும், கை செலவுக்கு என கொடுக்கும் பணமும் கொடுக்க ஏற்பாடு ஆகியிருந்தது.
சாமி கும்பிட்டு முடித்தவர்கள் மெல்ல கலைந்து அந்த இடத்தை விட்டு அகல ஆரம்பித்தனர்.
ஏறக்குறைய அத்தனை பேரும் கலைந்து சென்றிருக்க ஒரு சிலர் மட்டும் பூஜை நடந்த இடத்தில் நிற்க,
தீனாவை விடாது பார்த்து தவிக்க வைத்தவளை இப்போது காண முயன்றவனின் முயற்சி புரிந்தது போல மீண்டும் அவனின் பார்வைக்கு படாமல் மறைந்து கொண்டாள் அவனின் பாவை.
‘எங்கடீ.. இருக்க..?’ என அவன் விழியால் தேடல் படலத்தை தொடர்ந்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
பில்லர் தூண்கள் பலவும் கம்பெனிக்குள் இருக்க அதில் ஒன்றை கடக்கும் வேளையில்,
“வேட்டி சட்டையில கலக்கறீங்க.. கண்ணழகா..!!” என மெல்லிய குரலில் அவசரமாய் திரும்பியவன் சொக்கி தான் போனான் யமுனாவின் கோலத்தில்.
முதல் முறை அவன் வாங்கி கொடுத்த சேலையில் அல்லவா வந்திருந்தாள் அவனின் ஆனந்தச்சோலை.
error: Content is protected !!