Skip to content
Post Views: 3,362
யாதுமாகி #2
குழந்தையுடன் கணவன் நிற்பதை நம்ப முடியாமல் விழி விரித்து உறுதி படுத்திக்கொண்டாள்.
நெடு நேரமாய் ஆறடி பிம்பம் அசையாது நிற்கவே நிஜம் தான் என்று மூளை உறுதி செய்தது. நொடி நேர சுதாரிப்புக்கு பின் ஓடிப்போய் குழந்தையை பிடுங்கிக் கொண்டாள்.
ஸ்பரிசத்திலேயே தாயை உணர்ந்து கொண்டது குழந்தை. ங்கே…ங்கே…என்று ரோஜா இதழ் விரித்து விம்மி அழுதது.
Advertisement
இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது அவள் குழந்தையை பிரிந்து.
குழந்தையின் அழுகுரல் அவளை தேம்பி அழ வைத்தது.
குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தாள்.
Advertisement
விழி நீரும் விழி நீரும் கலந்து ஒன்றாய் கரைந்தது. குழந்தை அழுகை நிறுத்தி தாய் முகம் பார்த்தது.
Advertisement
குழந்தையை கோழி குஞ்சு போல் தன் மார்பில் பொத்தித்துக் கொண்டவள் எதிரில் இருப்பவன் நினைவு வந்து நிமிர்ந்து பார்த்தாள்.
தாயும் சேயும் நெகிழ்ந்து கலங்கி கரைந்த அந்த நிலையை அமைதியாக பார்த்து நின்றவன்… மனையாளை இப்போது கூரிய விழி கொண்டு பார்க்க அவளுக்கு குளிர் ஜுரமே வந்துவிடும் போல் இருந்தது.
அருகில் வந்தவன் வழிந்தோடும் அவள் விழிநீருக்கு அணை கட்டும் விதமாக தன் பெருவிரல் கொண்டு கன்னத்தை அழுத்தினான்.
Advertisement
அவள் மிரட்சியுடன் பார்க்க…இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு ஞாயிற்று கிழமை நம்ம வீட்டுக்கு வந்து சேரு! சேரணும்…வழக்கம் போல் அதே ஆணை தொணிக்கும் குரல் அதே மிரட்டல்…அவள் கன்னம் தட்டிவிட்டு சென்றான்.
வாங்க மாப்பிள்ளை…முகமலர்ந்து வரவேற்றார் வேதம்.
பதில் ஏதும் கூறாமல் திரும்பி பாராமல் நடக்கத் தொடங்கினான்.
நேத்ரா அப்படியே குழந்தைக்கு பால் கொடுத்துடாதம்மா! குழந்தைக்கு வயித்துக்கு சேராது. பாலை பீய்ச்சி எடுத்துட்டு கொஞ்ச நேரம் பொறுத்து கொடும்மா! வேதம் மகளுக்கு சொல்வதை கேட்டுக் கொண்டே வெளியே நடந்தான்.
“—————”
நள்ளிரவில் மங்கிய சோடியம் விளக்கின் ஒளியிலும் கம்பீரமாக காரில் ஏறும் தன் கண்ணாளனை கண்டு அவள் காதல் கொண்ட உள்ளம் வெதும்பியது.
குழந்தைக்கு பால்புகட்டி உறங்க வைத்தவள் குழந்தை முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பனை கொண்டு பிறந்து இருக்கும் பிள்ளை அவள் காதலுக்கான சாட்சி அல்லவா? அளவு கடந்த அவர்களின் பிரியத்தில் விளைந்த நல்முத்து உறங்கும் அழகை ஆசையாய், கர்வமாய்,பெருமையாய் பார்த்து களித்தாள்.
இரண்டு நாளில் மீண்டும் அந்த வீட்டின் வாசலை மிதிக்க வேண்டுமா? எத்தனை கொடுன்னு சொல்லை கேட்டும் மீண்டும் அதே வீடா?கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
போகாமல் இருந்து விட முடியாதே….விட்டு விடுவானா அந்த பிடிவாதக்காரன்?
காதலுக்காக காதலால் எவ்வளவுதான் சகிப்பது?
மனப்போராட்டத்தின் வலியில் உறக்கம் வருவேனா பார் என்று சவால் விட்டது.
“—————-”
விஷ்ணுவும் அங்கே தலையணையை மடியில் வைத்துக் கொண்டு இரவு விளக்கின் மென்னொளியில் புகைப்படத்தில் சங்கீதமாய் சிரிக்கும் தன் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தான்.
நேத்துமா நீ ஏன் டி என்னை புரிந்துக்க மாட்டேங்கிற? உள்ளுக்குள் உருகினான், அவள் அருகாமை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான்.
சென்ற வாரம் தன்னருகில் தன் கையணைப்பில் இருந்தவள் இன்று இல்லையே….குழந்தை உறங்கும் அழகிய தொட்டில் வெறிச்சோடி கிடந்தது. நினைவுகள் சூழ்ந்த அந்த அறையே அவனை மூச்சு முட்ட வைத்தது.
செல்லக்குட்டி,அப்பா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் தங்கம்….வலியோடு தொட்டிலை ஆட்டிவிட்டான்.
இருவருமே பிடிவாதம் கொண்டவர்கள் என்பது இருவருக்குமே தெரியும் தெரிந்து என்ன செய்ய?
“—————–”
என்னம்மா ஜோதி உங்க அண்ணன் வீட்டில் எல்லோரும் சௌக்கியம் தானே…? ஊரில் இருந்து வந்த மருமகளை விசாரித்தார் அன்னம்.
எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை. எங்கே என் பேரனை காணோம்? ஜோதி கரிசலமாய் பேரனை தேடினார்.
உன் கரிசனம் எனக்கு தெரியாதா? மனதுக்குள் நொடித்துக் கொண்டே உரலில் வெற்றிலை பாக்கை இடித்தவர் பஞ்சாய் இடித்த வெற்றிலையை வாயில் போட்டு குதப்பினார்.
அத்தை என் புள்ள போய் என் பேரனை தூக்கிட்டு வந்துட்டானாமே…உங்க மகன் சொன்னார்! அப்படி ஒரு ஆனந்தம் ஜோதிக்கு.
உன் பேரனை கொண்டு போய் என் பேரன் அவ ஆத்தா கிட்ட விட்டுட்டு வந்துட்டான் கிழவி வக்கணையாய் பேசியது.
என்ன சொல்றீங்க? சப்பென்று ஆனது ஜோதிக்கு.
த்தூ…. மணல் கொட்டிய பித்தளை குவளையில் பொழிச்சென்று துப்பியது கிழவி. எச்சிலை தான் துப்பியதாக நம்பிக் கொள்ள வேண்டும்.
அடி இவளே… முப்பது ஆகுது உன் மகனுக்கு இன்னும் உன் முந்தானையிலே உன் நிழலில் கைக்கு அடக்கமா இருக்கணும்னு ஆசைப்படறே…. நேத்ரா பாவம் ஆறு மாச குழந்தையை விட்டுட்டு எப்படி இருப்பா?முள்ளால் குத்தியது போல் நறுக்கென்று கேட்டார் அன்னம்.
பொசுக்கென்று கோபம் எட்டிப் பார்க்க… ஏன் நான் தான் அவளை வீட்டை விட்டு துரத்திட்டேனா? அவ அகங்காரம் திமிரு பிடித்து ஆத்தா வீட்டுக்கு ஓடிப் போயிட்டா அதுக்கு நான் ஆளா? வரிந்து கட்டி வம்பளம்தார் ஜோதி.
என்ன ஜோதி சத்தம் தெரு முனைக்கு கேட்குது? துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே உள்ளே வந்தார் வேணு.
எனக்கு பொழுது போகல அதுதான் உங்க அம்மாவோட வம்பு பேசிகிட்டு இருக்கேன்….கழுத்தை ஒரு வெட்டு வெட்டினார் அவரின் தர்ம பத்தினி.
விஷ்ணு மாடியில் தான் இருக்கான் நமக்கு சிரிப்புடன் கூறினார் வேணு.
இருக்கட்டுமே எனக்கென்ன வெடவெடன்னு நடுங்குதா? கெத்து காட்டிக்கொண்டவர் இருங்க உங்களுக்கு மோர் கொண்டு வரேன் என்று நைசாக உள்ளேன் நழுவினார்.
ஐயா வேணு நீயாவது போய் உன் மருமகளையும் பேரணையும் கூப்பிட்டு வர்றதுக்கு என்ன? மகனிடம் குறைபட்டுக் கொண்டார் அன்னம்.
அம்மா புருஷன் பொண்டாட்டி விஷயத்தில் நாம தலையிடக்கூடாது, அதுவும் வக்கீல் விஷயத்தில் சத்தியமா தலையிடக்கூடாது.உங்க பேரனை பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா?
இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் பேசுற பேச்சா? மகனை கடுமையாய் முறைத்தார்.
அம்மா நான் ஊருக்கு தான் நாட்டாமைக்காரன் வீட்டில் என்னை யாரு மதிக்கிறா? விரக்தி புன்னகை ஒன்றை வீசினார்.
என்ன சாமி இப்படி சொல்லிட்ட? நீ தானேய்யா என் குல விளக்கு கிழவியின் குரல் கரகரத்தது.
தாயின் விம்மிய குரலில் நெகிழ்ந்து போனவர் பேச்சை மாற்றும் பொருட்டு அம்மா விஷ்ணு பத்தி உங்களுக்கு தெரியாதா? அவன் பொண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு இருப்பானா? நாளைக்கோ மறுநாளோ போய் இழுத்துட்டு வந்துட போறான்! தாயை சமாதானம் செய்தார் வேணு.
அந்த குட்டி பய முகம் கண்ணுக்குள்ளே இருக்கு தம்பி… அப்படி ஒரு பெருமையான பேச்சு.
கொள்ளு பேரனை தேடுதா அம்மா?
இருக்காதா பின்ன….?குழந்தை இல்லாத வீடு வெறிச்சின்னு இருக்கு. உன் பொண்டாட்டி தான் அவளை எந்நேரமும் கொடுக்கால் கொட்டிக்கிட்டே இருக்காளே…அவ ஏதோ கடுமையா சொல்லி இருக்கா அதுக்கு தான் அந்த பிள்ளை சொல்லாம கொள்ளாம குழந்தையை தூக்கிட்டு போயிட்டா… உண்மையான வருத்தத்துடன் கூறினார் அன்னம்.
வேணுவிற்கு தன் மனைவி பற்றி தெரியாதா? பெருமூச்சுடன் உள்ளே போனார். அந்த வீட்டில் அவரால் வேறு என்ன செய்து விட முடியும்?
“—————”
. சொல்லுடா வாசு… கேஸ் கட்டை பிரித்து பார்த்துக் கொண்டே மொபைலில் உரையாடினான் விஷ்ணு.
தங்கச்சி போன் பண்ணுச்சு டா மாப்ள!
என்னவாம்…என்ன பத்தி குற்றப்பத்திரிகை வாசித்தாளா? உன் அருமை தொங்கச்சி.
டேய் உன் முன் கோபம் கொஞ்சம் கூட குறையவே குறையாதா? குழந்தைக்கு உடம்புக்கு முடியலன்னு டாக்டர் கிட்ட டோக்கன் போட சொல்லுச்சடா.
என்னடா சொல்ற?
ஆமாம் மாப்ள குழந்தைக்கு பேதியாகுதாம், பால் கக்கிடே இருக்காம் அழுக நிக்கவே இல்லையாம்.
உங்க டாக்டர் தேவேந்திரன் தானே?
ஆமான்டா ஏழாவது டோக்கன் போட்டிருக்கேன்.
“———————”
சீறிப்பாய்ந்த கார் நேத்ரா வீட்டு வாயிலில் கிறச்சிட்டு நின்றது.
புயல் என உள்ளே நுழைந்தவன் குடுகுடுவென மாடி ஏறி ஓடினான்.
அழும் குழந்தையை தோளில் வைத்து தட்டிக் கொண்டிருந்தார் வேதம்,சோர்ந்து கண்மூடி இரண்டு தலையணையை போட்டு தலை சாய்த்து இருந்தாள் நேத்ரா.
மாமியாரிடம் இருந்து குழந்தையை பறித்தவன் வரச் சொல்லுங்க அவளை ஹாஸ்பிடலுக்கு என்றபடி வெளியேறினான்.
நைட்டியை கழட்டி வீசி சால்வாருக்கு மாறி குழந்தையின் கூடையை கையில் எடுத்துக்கொண்டு பின்னே ஓடினாள் நேத்ரா.
கடுகடுவென்று இருக்கும் கணவன் முகம் காணாது குழந்தையை தோளணைத்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
வாயை திறக்கிறாளா பாரு! அவ்வளவு திமிரு…முறைத்த வண்ணமே காரை இயக்கினான்.
குழந்தைக்கு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கிறாரா பாரு? “கருங்கல்லு” உள்ளுக்குள் வெதும்பினாள்.
“—————–”
எப்போதிலிருந்து குழந்தைக்கு டிசென்ட்ரி ஆகுது?
இன்னைக்கு மார்னிங்ல இருந்து தான் டாக்டர்.
குழந்தைக்கு ஏதாவது சப்ளிமென்ட்ஸ் கொடுத்தீங்களா?
ம்க்கூம் என்று மறுப்பாய் தலையசைத்தாள்.
நீங்க என்ன சாப்பிட்டீங்க?
நார்மல் ஃபுட் ஐட்டம் தான் டாக்டர்.
வேற என்ன ரீசன் இருக்கும்? கைராசியான குழந்தை நல மருத்துவர் தேவேந்திரன் யோசிக்க….
டாக்டர் அவளுக்கு பால் கட்டிட்டு.. விஷ்ணு மெதுவாய் விஷயத்தை கூறினான்.
எஸ்…. யூ ஆர் கரெக்ட்! அந்த பாலை குடித்த குழந்தைக்கு வயிறு கட்டி இருக்கும்.அதுதான் குழந்தைக்கு வயிறு உப்புசமா இருக்கு. சம் டைம் லூஸ் மோஷன் ஆகும் ஃபீவர் கூட வரும்.
இந்த காலத்து லேடிஸ்க்கு குழந்தை வளர்ப்பு தெரியறது இல்லை. பெரியவங்க சொன்னாலும் கேட்டுக்கிறது இல்லை.டாக்டர் சலித்துக் கொண்டார்.
கேரளசா இருக்காதீங்க தாய்ப்பால் எவ்வளவு சத்து நிறைந்தது என்று உங்களுக்கு தெரியும்! தெரிந்தும் வீணாக்காமல் குழந்தைக்கு கொடுங்க. அழகு போயிடும்னு நினைக்கிறீங்களா?
மருத்துவரின் அடுக்கடுக்கான கேள்வி கணகளில் பல்லை கடித்த படி கணவனை முறைத்தாள்.
ஏகப்பட்ட அறிவுரைகளை வாரி வழங்கி அனுப்பி வைத்தார் அந்த எழுபதை நெருங்கும் நூறு ரூபாய் மருத்துவர்.
“——————”
கார் வடலூர் சாலையில் இருந்து விலகி கரைமேடு நோக்கி செல்ல…
என்னை எங்க வீட்டில விட்டுடுங்க கோபத்தை மென்று விழுங்கினாள்.
உன் வீடா? ஆமா உன் வீட்டுக்கு தான் போறோம்.பதிலுக்கு சூடான முறைப்பை கொடுத்தான்.
நீங்க இப்போ இந்திராநகர் போகல… நான் கார் கதவை திறந்து குழந்தையோட குதிச்சிடுவேன் ஆவேசமாய் கத்தினாள்.
காரை ஒடித்து திருப்பி ஒரு வட்டம் அடித்து நிறுத்தினான்.
ஏய்… பச்சை உடம்புகாரின்னு பார்க்கிறேன் இல்ல கொன்னுடுவேன்!
ஸ்டியரிங்கில் கோபமாய் குத்தினான்.
இவன் கத்தலில் குழந்தை அரண்டு அழுதது.
குழந்தையை அணைத்துக் கொண்டவள் பீடிங் டாப்போடு பசியாற்ற சிரமப்பட்டாள்.
அவள் சங்கடம் உணர்ந்தவன் காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.
குழந்தை வயிறு நிறைந்து கண்ணயர்ந்தது
என்னடி ஓவரா பேசுற? நான் இருக்கும் வீடு தான் உன் வீடு! என்னால குழந்தையை விட்டுட்டு இருக்க முடியாது. நாளைக்கு ஈவினிங் நீ நம்ம வீட்டுல இருக்க…. உறுமலுடன் காரை கிளப்பினான்.
———–தொடரும்———-
error: Content is protected !!