Skip to content
Post Views: 2,718
“அண்ணா.. இதோ வந்திட்டோம்.. எந்த ப்ளோர்?” என்று போனில் பேசி அறிந்து கொண்டு, அந்த சர்வீஸ் அப்பார்ட்மென்ட் காலின் பெல்லை அழுத்தினான் ராஜு.
“வாடா.. வா.. வா.. வாம்மா” என்று உற்சாகமாய் வரவேற்றார் கோபால் அண்ணா.
அவரின் குரல் கேட்டு கூடவே வந்த மாயாவும் அவர்களை வரவேற்றாள்.
“மகி.. இது தான் கோபால் அண்ணா, இவங்க மாயா சேச்சி.” என்று மகிக்கு அவர்களை அறிமுகப்படுத்தினான் ராஜு.
Advertisement
புன்னகையுடன் நெஞ்சில் கை வைத்து வணக்கம் சொன்னாள் மகி.
“உள்ளே வாம்மா” என்று அழைத்து சென்றார்கள்.
“எங்கே முப்பெரும் தேவியரை காணோம்?” என்றான் ராஜு.
Advertisement
“அவங்களுக்கு இங்க ரொம்ப போர் அடிச்சது. அதான் பக்கத்தில் இருக்கும் ஒரு கேம் சென்டருக்கு விளையாட போய் இருக்காங்க” என்றார் கோபால்.
Advertisement
“கேம் சென்டருக்கா? எப்படி சேச்சி விட்டீங்க? அவ்வளவு சீக்கிரம் இதுக்கு பர்மிசன் கொடுக்க மாட்டீங்களே?”
“வேற வழி? இங்க வந்துட்டா போதும்! அவங்க அப்பா மாதிரியே அவங்களும் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க! நான் என்ன பண்ண?” என்றார் மாயா சிரித்துக் கொண்டே!
“அப்புறம் சொல்லுடா. உன் அம்மா எப்படி இருக்காங்க. உன் பிரன்ட் சந்துரு எப்படி இருக்கான்? உன் உடன்பிறப்புகள் எப்படி இருக்காங்க? ரொம்ப கோபமா இருப்பாங்களே?” சிரித்தபடியே கேட்டார் கோபால்.
Advertisement
“அம்மா இப்ப தான் ரொம்ப நிம்மதியா ஹேப்பியா இருக்காங்க. சந்துருவுக்கும் இப்ப தான் நிம்மதி!
அவங்க ரெண்டு பேரும் தான் எங்க நான் இப்படியே லூஸு மாக்கானாவே கடைசிவர இருந்திடப் போறேன்னு ஒரே பயம்?
இப்ப தான் அவங்களுக்கு நிம்மதியே!”
“சரி விடுடா.. எதுக்கும் ஒரு டயம் வரணும்னு சொல்றது இதுக்கு தான் போல!
ஏன்.. நானே அப்படி தானே இருந்தேன். என்னோட முப்பது வயசு வரை!
உனக்கு தெரியுமா மகி, எனக்கு இவனைப் பார்க்கும் போதெல்லாம் என்னோட ஜெராக்ஸ் மாதிரி தெரிவான் எப்பவும்!
ஏன்னா, நானும் இவனைப் போல தான் குடும்பம் கூடப் பிறந்தவங்கன்னு உழைச்சி போட்டுட்டு இருந்தேன்!
ஒரு கட்டத்தில் எனக்கு தெரிஞ்சது, அவங்க யாருக்கும் என் அம்மா உட்பட யாருக்குமே என் மேல பாசம் அக்கறை இல்லாம போய்டுச்சுன்னு.
எல்லோரும் என்னை சம்பாரிச்சு போடுற ஒரு மெசினா தான் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு!
யாருமே.. நான் அங்க என்ன பண்ணிட்டு இருக்கேன். ஒழுங்கா சாப்பிடறேன்னா, தூங்குறேன்னா, உடம்புக்கு எதாச்சும் வந்துருச்சா?
அப்படி வந்தா எப்படி சமாளிக்கிறேன்.. ம்ஹும்.. ஒரு வார்த்தை கூட விசாரிக்க மாட்டாங்க!
பணம் அனுப்ப லேட்டாகிட்டா மட்டும் தான் அவங்களா போன் பண்ணுவாங்க!
அதுவும் கூட மிஸ்டு கால் தான்!
அப்போ எல்லாம் இப்ப மாதிரி வாட்ஸ்அப் எல்லாம் இல்ல இல்லியா? ஐ.எஸ்.டி. போட்டு தான் பேசணும்!
அவங்களுக்கு எதுக்கு செலவுன்னு நான் தான் எப்ப என் கிட்ட பேசணும்னாலும் மிஸ்டு கால் கொடுக்க சொல்லியிருந்தேன்!
ஆனால் அந்த மிஸ்டு கால் கூட வராதான்னு நான் ஏங்கின சமயங்கள் உண்டு!” கோபால் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
மாயா ஆர்டர் செய்திருந்த டீ வந்து விட்டது!
“மகி பேடிக்க போவுது.. நீங்க இப்படி வந்தவுடனே பிளாஸ்பேக் சுத்த ஆரம்பிச்சிட்டா” என்று கிண்டல் பண்ணியவாறே அவர்களுக்கு டீயை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார் மாயா.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க அக்கா என்ற மகி, இது என்ன ப்ளாஸ்க்கா? அட்டைப் பெட்டி மாதிரி இருக்கு?” ஆச்சர்யமாக கேட்டாள்.
“இது டிஸ்போசபில் ப்ளாஸ்க்! ஆன்லைனில் டீ ஆர்டர் போட்டு இருந்தேன்! டீ நல்லா இருக்கா?” என்றாள் மாயா.
“ம்ம். சூப்பரா இருக்கு!” என்றாள் மகி.
“ம்ம். யூ கன்டின்யு” என்றார் மாயா கிண்டலாக!
“ஏய்.. சும்மா இருடி.. மகிக்கு எல்லாமே தெரியணும். அப்போ தான் ராஜுவோட இந்த மாற்றம் பத்தி தெரிஞ்சிக்கும் மகி!
ஏன் மகி நான் உன்னை வந்ததும் போரடிக்கிறேனா?”
“அய்யோ இல்லைங்க சார்..” என்றாள் மகி அவசரமாக.
இருவரையும் சிரித்துக் கொண்டே மவுனமாக பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜு.
“என் வீட்டில் எனக்கு கூட பிறந்தவங்க ஒரு அக்கா இரண்டு தம்பிங்க. அப்பாவுக்கு விவசாயம் தான் தொழில்.
அவர், அத்தைங்களுக்கு சீர் செஞ்ச வகையிலும், தாத்தா பாட்டிக்கு வைத்தியம் பார்த்ததிலுமே ரொம்ப கடனாளி ஆகிட்டார்.
ஒரு கட்டத்தில் சோறு போட்டுக் கொண்டிருந்த வயலும் அடமானம் போய் விட்டது!
அப்பாவும் அம்மாவும், வயல் காட்டு கூலி வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலையே வந்து விட்டது!
அப்போ நான் பி காம் தான் படிச்சுட்டு இருந்தேன்.
எனக்கு என்னோட வாத்தியாருங்க தான் ரொம்பவும் சப்போர்ட். எனக்கு படிப்பில் உதவி செஞ்சாங்க. அத்தோட துபாய்க்கு வேலைக்கும் சேர்த்து விட்டாங்க.
வெறும் பிகாம் டிகிரியோட தான் நான் துபாய் வந்தேன். வந்து பில்லிங் கிளார்க்காக தான் வேலைக்கு சேர்ந்தேன்.
அப்படியே படிப்படியே முன்னேறி, எங்க ஓனருக்கு ரொம்பவும் லாயலா இருந்து இப்போ ஜிஎம் வரைக்கும் வந்தாச்சு.
நான் சாம்பாரிச்சு தான் எங்க அக்கா கல்யாணம் , நிலத்தை மீட்டது தம்பிங்களை படிக்க வச்சது, அப்பாவுக்கு வைத்தியம் பார்த்தது எல்லாமே.
ஆனால் என் தம்பிங்க ரெண்டு பேருக்கும் எங்க அம்மா செல்லம் கொடுத்து குட்டி சுவரா ஆக்கி வச்சிருந்தாங்க.
அத்தோட எங்க அக்கா புருசன் ஒரு உலக மகா சோம்பேறி.
என் தம்பிங்களும் ஒரு வேலைக்கும் போகாம ஒருத்தன் அரசியல் கட்சி பின்னாடியும் ஒருத்தன் சினிமா நடிகன் பின்னாடியும் சுத்திக்கிட்டு இருந்தாங்க.
இதில இரண்டு பேருக்கும் லவ் வேற!
பெரிய தம்பி, லவ் பண்றேன்னு ஒரு வில்லங்க பிடிச்ச வீட்டுப் பெண்ணை தூக்கிட்டு வந்துட்டு போலிஸ் கேஸ் ஆகி அதுக்கும் என்னோட காசு தான் தண்ணியா செலவாச்சு.
அப்புறம் எங்க சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து அவசரமா கல்யாணமும் செஞ்சாச்சு!
அடுத்து சின்னவன், ஒரு பெண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்!
ஆனா அவங்க வீட்டுல பிரச்சினை எதுவும் பண்ணல!
அதனால எங்கம்மாவும், தம்பி இஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்துட்டான்.
அதுவும் இல்லாம அந்த பொண்ணு மாசமா வேற இருக்கு!
நமக்கு ஏண்டா பெண் பாவம்னு சொல்லி அவனுக்கும் என் செலவிலேயே கல்யாணம்!
ஆனா இவ்வளவு நடக்கும் போதும் என் அம்மா ஒரு வார்த்தை கூட என்னோட கல்யாணத்தப் பத்தி யோசிக்கவே இல்லை!
யோசிச்ச ஒரே ஆள் என்னோட அப்பா!
ஆனா அவரால, என்னோட தலையெழுத்து என் மவனுக்கு போட்டுருக்கு போலேயே புலம்ப தான் முடிஞ்சது!
அவரே உடம்புக்கு முடியாமல் எங்க அம்மா தயவால வாழ்ந்துட்டு இருந்ததால்!
அவரும் ஒரு நாள் இறந்து போனார்!
அவரின் இறப்புக்கு ஊருக்குப் போய் கிட்ட இருந்து வாட்ச் பண்ணினப்ப தான் என் குடும்பத்தோட லட்சணம் தெரிஞ்சது எனக்கு!
நான் எப்படி ஒரு பெரிய சோம்பேறி கும்பலை சோறு போட்டு வளர்த்துட்டு இருக்கேன்னு!
என் அக்காவை உள்ளூரில் தான் கொடுத்திருக்கு! அதனால அவளுக்கு மூனு நேரமும் இங்க இருந்து தான் சாப்பாடு!
தான் சாப்பிட்டு விட்டு புருசனுக்கு கேரியரில் எடுத்துட்டு போய்டுவா!
தம்பி மனைவிங்க எல்லாம் வீட்டு வேலைக்கு போட்டி போட்டுட்டு இருந்ததால, எங்கம்மா எல்லாத்துக்கும் வேலைக்கு ஆள் போட்டு இருந்தாங்க.
வீட்டுல மூனு பொம்பளைங்க இருந்து வாசல் கூட தெளிக்க மாட்டாங்க காலையில எழுந்து!
தம்பிங்க வேலைக்கு எதுவும் போறதில்லை!
ஆனா எந்நேரமும் பிஸி தான்! டூ வீலரில் ஊரை சுற்றிக்கொண்டு நான் அனுப்புற பணத்தில் பெட்ரோல் போட்டுக்கிட்டு!
நாய்க்கு வேலையும் இல்லை, நிற்க நேரமும் இல்லை என்பதற்கு சரியான உதாரணமாக!
ஒரு நாள் எங்க அப்பாவோட டெத் சர்டிபிகேட் வாங்க தாலுகா ஆபிஸ் வரை போய் இருந்தேன்.
வர்றப்போ ஒரு டீ கடையில டீ குடிச்சுட்டு இருந்தேன்!
அந்த டீக்கடைக் காரன் ஒரு வெள்ளை சாக்கு நிறைய இட்லி மாவு பாக்கெட்களைக் கட்டிக் கொடுத்து, அண்ணே வீட்டுக்கு தானே போறீங்க. இத அப்படியே உங்க வீட்டில் கொடுத்துடறீங்களான்னு கேட்டான்.
எதுக்கு இவ்வளவு மாவு பாக்கெட்? ஒரு வாரத்துக்கு மொத்தமா வாங்கி வைக்கிறாங்க போலன்னு நினைச்சுகிட்டு கேட்டா,
அது ஒரு நாளைக்கு, ஒரு வேளைக்கு வாங்கி இருக்காங்களாம்! வீட்டில் இத்தனை லேடிஸ் இருக்கீங்க,
கிரைண்டர் இருக்கு. மாவு ஆட்ட கூடாதான்னு கேட்டு வைத்து ஒரே சண்டை ஆகிடுச்சு.
அய்யோ நாம இந்த வீட்டு விசயத்துல மூக்கை நுழைக்க கூடாதுன்னு எப்படா ஊருக்கு வருவோம்னு வந்து சேர்ந்துட்டேன்!
ஆனா நான் ரொம்ப வெறுத்துப் போனது எனக்கு சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக்காம புட் பாய்சன் ஆகி ஒரு வாரம் பெட்ல அட்மிட் ஆகி இருந்தேன்!
வீட்டுக்கு போனும் பண்ணல. பண்ண முடியல. அவங்களும் யாரும் பண்ணல!
ஒரு மாதிரி அனாதை மாதிரி கிடந்தேன். அப்போ தான் மாயா எனக்கு அறிமுகம் ஆனாள்!
அவ்வளவு கேரிங்கா என்னைப் பார்த்துகிட்டா!
அதுக்கு அப்புறம் அதுவே எங்களுக்கு பிடித்தம் ஆகி விட்டது!
ஒரு வாரம் கழிச்சு எங்கம்மா கிட்ட இருந்து மிஸ்டு கால்!
ரொம்ப எமொசன்லா கால் ரிட்டர்ன் பண்ணினேன்.
ஏண்டா.. போன் பண்ணவே இல்லன்னு கேட்டாங்க. நான் அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள, நீ பாட்டுக்கு பணம் போட்டு விடாம இருந்திட்டே, இங்க செலவுக்கு இல்லாம திண்டாடிக்கிட்டு இருக்கேன்னு சொன்னவங்க,
என்கிட்ட எதுவும் மேற்கொண்டு கேக்காமலேயே, அந்த பக்கம் வாணி ராணி விளம்பரம் முடிஞ்ச சீரியல் ஆரம்பிச்ச சத்தம் கேட்டவுடனே சரி.. லேட் பண்ணாம போட்டு விடு. நான் காலையில பேசுறேன்னு கட் பண்ணிட்டாங்க!
அதில ரொம்ப வெறுத்துப் போயிட்டேன் நான்!
அப்புறம் தான் நான் மாயாவிடம் ப்ரபோஸ் பண்ணினதும் அவளைக் கல்யாணம் செய்து கிட்டதும்!
அங்கே அவள் வீட்டிலும் இதே நிலைமை தான்!
இவள் வேலைக்கு இங்க வந்து சம்பாரிச்சு பணம் அனுப்பி தான் அவளோட தம்பி தங்கச்சியை படிக்க வச்சதும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதும்!
ஆனா ஒரு பார்மாலிட்டிக்கு கூட நீ இருக்கும் போது மொதல்ல எங்களுக்கு எதுக்கு கல்யாணமுன்னு கேக்கவே இல்லயாம் ரெண்டு பேருமே.
எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பக்கமும் எதிர்ப்பு!
எல்லாத்தியும் மீறி தான் பழனில வச்சு எங்க கல்யாணம்!
ஒரு கேரளாக்காரியோட கல்யாணமான்னு எங்க வீட்டுலயும், ஒரு பாண்டியோட கல்யாணமான்னு மாயா வீட்டுலயும் ஒத்துக்கவே இல்லை!
ஆனா உண்மையான காரணம் அது இல்லை!
நாங்க ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்காம அவங்களுக்கு சம்பாரிச்சு மட்டும் போட்டுக் கொண்டிருக்கணும்றது அவங்க எதிர்பார்ப்பு!
அதான்!
என்னை மாதிரியே தான் ராஜு வீடும் அவனை நடத்துறாங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
ஆனா அவன் ஒரு விசயத்துல லக்கி! அது அவனோட அம்மா அவன் பக்கம் இருக்காங்க!
அதான் சீக்கிரம் போய் கல்யாணம் பண்ற வேலையை பாருடான்னு அவனை ஊருக்கு போக சொன்னேன்!
ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறம் அவன் திரும்ப துபாய் வர்றதா இருந்தாலும், மாயா அவ நெட் ஒர்க்கில் அவனுக்கு வேலை ஏற்பாடு பண்ணி கொடுப்பா” என்று பேசி முடித்தார் கோபால்!
“அப்பாடி ஒரு வழியா பிளாஸ்பேக் முடிஞ்சது! வர வர நீங்க பூமர் அங்கிள் ஆகிட்டீங்க சேட்டா” என்று அவரை கலாய்த்தாள் மாயா.
“மகி. நினக்கு எந்தா இஷ்டம்? ராஜு திருச்சி துபாய் போகணுமா? அல்லிங்கில்.. இவ்விடயே ஜோலி நோக்கிக் கொள்ளுமா?” என்று மாயா கேட்க,
“அவர் இங்கயே இருக்கட்டும் அக்கா” என்றாள் மகி!
“அவங்க அம்மாவுக்கும் அது தான் விருப்பம்” என்றாள் கூடுதலாக!
“அப்ப செரி..” என்றாள் மாயா.
“இன்னமும் உங்கள வீட்டில் அக்செப்ட் பண்ணலயா சார்?” கேட்டாள் மகி.
“மாயா வீட்டில் இன்னமும் இல்ல! ஆனா என் வீட்டில் இப்ப கொஞ்சம் கொஞ்சமா பேச டிரை பண்றாங்க.
முக்கியமா என்னோட அக்கா.. அவளுக்கு என்னோட பொண்ணை அவ பையனுக்கு கட்ட ஆசை!
இப்பவே அதுக்கு ப்ளான் பண்றா!
அவ பையன் இப்ப தான் ப்ளஸ்டூ படிக்கிறான்.
அப்புறம் சொத்து பிரிக்கணும் இல்ல! அந்த வேலை வேற இருக்கே!
இப்ப நேத்து கூட குலதெய்வம் கோவிலுக்கு போனோம்!
அவங்க எப்படியோ நாங்க வர்றத தெரிஞ்சுகிட்டு அங்க வந்துட்டாங்க.
ஆனா எனக்கு அப்படி ஒரு இஷ்டம் இல்லை! என் பொண்ணுக்கு அந்த பேமிலி செட்டே ஆகாது!” என்றார் கோபால்.
“அது என்ன மம்மி அந்த ஆண்டி உங்க கிட்ட பேசும் போது அவங்க வாய் மட்டும் உங்க கிட்ட பேசிட்டு இருக்கு,
ஆனா கண்ணு அப்படியே உங்க கழுத்தில் இருக்கும் ஜுவெல்சையே அப்படியே முழுங்குற மாதிரி பார்க்குதுன்னு என் பெரிய பொண்ணு கிண்டல் கூட பண்ணினா” என்றாள் மாயா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கோபாலின் போன் அடித்தது.
“டாட்.. நாங்க விளையாடி முடிச்சுட்டேன். வாங்க.. வந்து எங்கள பிக்கப் பண்ணிக்கோங்க” என்று அவரின் மகள்கள் அழைத்து விட,
“நான் போய் அவங்கள கூட்டிட்டு வந்திடறேன். ராஜுவ பாத்தா அவங்க குஷி ஆகிடுவாங்க” என்று சொல்லி வெளியே கிளம்பினார் கோபால்.
“என்ன மகி, அப்படியே திகைச்சு போய் உட்கார்ந்துட்டே” என்றான் ராஜு சிரிப்புடன்!
“பரவாயில்லங்க.. உங்களுக்கு இப்படி ஒரு வெல்விசர் இருக்காங்க. ரொம்ப லக்கி தான் நீங்க” என்றாள் மகி.
“ஆமா, மகி எனக்கு வீடு தான் சரியில்ல. ஆனா வெளியில எல்லோரும் எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு தான் இருக்காங்க.
இங்க சந்துரு. அங்க கோபால் அண்ணா.
கோபால் அண்ணா, நான் அங்க வந்த புதுசுலே என்னை பிரிட்டிஷ் கவுன்சில் க்ளாஸ்க்கு அனுப்பி ஸ்போக்கன் இங்கிலிஷ் கத்துக்க வச்சார்.
ஹெவி லைசன்ஸ் வாங்க வச்சார்.
பார்ட் டைமா எங்க கம்பெனி ஸ்டாஃப் பஸ் ஓட்டுற வேலையும் போட்டுக் கொடுத்து, அந்த சம்பளத்தை தனியே சேர்த்து வைக்க சொன்னார்.
அதில தான் அம்மா என் பேர்ல பிளாட் வாங்கி போட்டு இருக்காங்க.
ஒரு டாக்ஸி வாங்கி விட்டிருக்காங்க. எனக்கு தெரியாமலேயே, சந்துருவை விட்டு என் கிட்ட கடனா வாங்க சொல்லி.
நானும் இப்படி ஒரு பார்ட் டைம் வேலை பார்த்து சம்பாரிக்கிறத வீட்டில் சொல்லவே இல்லை!
சொன்னா நான் ரொம்ப கஷ்டப்படுறேன்னு வருத்தபடுவான் என் அண்ணன்னு லூஸு மாதிரி நினைச்சுக்கிட்டு!
ஆனா அதுவும் ஒரு வகையில நல்லதா போச்சு!
அப்புறம் நான் வேலைய விட்டு வந்த பின் கம்பனியில் கொடுக்கும் செட்டில்மென்ட் பணத்தையும் நிறுத்தி வச்சுருக்கார் கோபால் அண்ணன்.
நீ முதல்ல உன் சீட்டுப் பணத்தை மட்டும் எடுத்துட்டுப் போ. இல்லன்னா, நீ கல்யாணத்தில் பட்டாசு வெடிச்சு விட்டுடுவன்னு சொல்லி தான் அனுப்பினார்.
அவர் சொன்னா மாதிரியே என் கிட்ட இருந்த எல்லா காசையும் என்னோட அக்கா, அதையும் இதையும் சொல்லி பிடுங்கிக்கிடுச்சு!
எல்லா நேரமும் அண்ணன் தான் என்னை சேஃப் கார்ட் பண்ணிட்டு இருந்திருக்கார்!
இனிமே நீ தான் என்னைப் பார்த்துக்கணும்” என்றான் ராஜு.
“ஆமா.. என் ஹஸ்பன்ட் அவரோட கண்ணையே உன் கிட்ட ஒப்படைச்சு இருக்கார்! அதில இனிமே ஆனந்த கண்ணீர் தான் வரணும்!” என்றாள் மாயா கிண்டலாக!
“அய்யோ சேச்சி.. நீங்க எப்போ இந்த ப்ளாக் அண்ட் ஒயிட் படம் எல்லாம் பார்த்தீங்க?”
“எல்லாம் உன் அண்ணனோட ஃபேவரிட் கலெக்சனில் இருந்து தான்” என்றாள் மாயா.
கூட சேர்ந்து சிரித்த மகி, கொஞ்சம் தயங்கி,
“அக்கா ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டாள்.
மாயா காட்டியதை நோக்கி உள்ளே சென்றவள், கொஞ்சம் நேரத்தில் வெளியே எட்டிப் பார்த்தாள்.
“என்ன?’ என்றான் ராஜு.
“இல்ல.. வண்டியில வந்தது முகமெல்லாம் ஒரே டஸ்டா இருக்கு. ஃபேஸ் வாஷ் பண்ணலாம்னா, இதோ இந்த பைப்பை எப்படி திறக்கிறதுன்னு தெரியல!” என்றாள் தயக்கமாக.
ராஜு திரும்பி மாயாவைப் பார்த்தான்.
அவருக்கும் ஏதோ போன்கால் வந்திருக்க, அவர் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தார்.
பாத்ரூம் உள்ளே சென்றான் ராஜு.
அவளுக்கு அந்த பைப்பை எப்படி திறக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான்.
“இப்படி திருப்பினா, சுடு தண்ணீ, இப்படி திருப்பினா ஷவர், இப்படி திருப்பினா பச்ச தண்ணீ” என்று அவன் சொல்லிக் கொடுத்தபடியே பைப்பை திறந்து முகம் கழுவி,
தன் ஷால் கொண்டே துடைத்துக் கொண்டு திரும்பியவள் கொஞ்சமும் சுதாரிக்கும் முன்னே அவளின் இதழ்கள் சிறைப்பிடிக்கப்பட்டன!
ராஜு தான்! அந்த கள்வன்!
“ஏய்.. என்ன இது?” அவள் முதலில் திமுறி, பின் அவனுக்குள் அடங்கினாள்!
கொஞ்ச நேரம் கழித்தே அவளை விட்டவன், மீண்டும் மீண்டும் அவள் கன்னங்களில் நெற்றியில், கண்களில் வேகமாக முத்தமிட்டவன் மீண்டும் முதலில் இருந்து ஒன்ஸ்மோர்!
ஒரு வழியாக அவளை விட்டவன், அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு,
“இது ஒரு வருஷ ஏக்கம் மகி! இன்னும் ஒரு வாரம் பத்து நாளில் கல்யாணம் என்ற நினைப்பில் தானே நான் உங்க வீட்டுக்கு வந்தேன்!
எத்தனை கனவுகள் ஆசைகளோட அங்க வந்தேன்! என் வீட்டு பிசாசுங்க பண்ணி வச்ச வேலையால், உன்னை பிரிய வந்தாலும், என் மனசு பூரா நீ தான்!
உனக்கு வேற இடத்தில் கல்யாணம் ஆகி விட்டிருக்க கூடாதுன்னு நான் வேண்டாத சாமி இல்ல தெரியுமா?
ஆனாலும் மனசுக்குள்ள ஒரு மூலையில என்னோட மகி எனக்காக காத்திருப்பான்னும் ஒரு நம்பிக்கையும் இருந்துச்சு!
ஐ லவ் யூ வெரி மச்டி பொண்டாட்டி” என்று மீண்டும் அவள் முகம் நோக்கி குனிந்தவன்,
வெளியே மாயாவின் பேச்சு சத்தம் கேட்டு, விலகி, “இதோ இப்படி தான்” என்று பைப்பை திறக்க சொல்லிக் கொடுப்பவன் போல சொல்லி விட்டு வெளியே வந்தான்!
மீண்டும் முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்த மகி, மாயாவின் நமுட்டு சிரிப்பில் முகம் சிவந்தாள்.
error: Content is protected !!