Skip to content
Post Views: 2,889
மாலை ஆகிவிடவே முகம் கழுவி கீழே வந்தவள் மங்களம்மா கொடுத்த பில்டர் காபியை சொட்டு மிச்சம் வைக்காமல் குடித்துவிட்டு வழக்கம் போல் அவர் காபியை பாராட்டிவிட்டு மீண்டும் மாடிக்கு போனாள்.
மொபைலில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தபோது பிரணவ் குட்டி அழ ஆரம்பித்து விட்டான்.
செல்லம் எழுந்தாச்சா? அப்பா இல்லைன்னு அழறீங்களா? அப்பா இன்னைக்கு லேட்டா தான் வருவாங்களாம்.நம்ம விளையாடலாமா?குழந்தையை கொஞ்சிக் கொண்டே குழந்தை உச்சா போன துணியை கழட்டி துடைத்து பவுடர் பூசி குழந்தைக்கு பசியாற்றி கீழே தூக்கி வந்தாள்.
வயலுக்குப் போய் அப்போதுதான் வந்த வேணு பேரனை வாங்கிக் கொண்டார்.
Advertisement
மாமா காபி கொண்டு வரவா?
மங்களம் தருவாங்கம்மா… நீ போய் வேற வேலை இருந்தா கவனிம்மா! குழந்தையை நான் பார்த்துக்கிறேன்.
மங்களம்மா காய்கறி வாங்க போய் இருக்காங்க மாமா.
Advertisement
தானே கிச்சனுக்கு சென்று மாமனாருக்கு காபியும், அன்னம் பாட்டிக்கு சுக்கு மல்லி மிளகு சீரகம் பனைவெல்லம் கலந்து வரகாப்பியும் கலந்து வந்தாள்.
Advertisement
முன்பை விட இப்போது நேத்ரா கலந்த காபி எவ்வளவோ பரவாயில்லை…மனதுக்குள் சொல்லிக் கொண்டார் வேணு. மருமகள் காபி போடுவதில் சற்று தேறி விட்டாள் என்ற உவகை.
ஈஸி சேரில் கண்மூடி படுத்திருந்த அன்னம் நேத்ராவின் குரலில் கண் திறந்தார்.
பாட்டி சுக்கு மல்லி காபி…. புன்னகை முகமாய் அவரிடம் பெரிய டம்ளரை நீட்டினாள்.
Advertisement
அன்னம் பாட்டி கால் லிட்டருக்கு குறையாமல் காபி குடிப்பார். அப்போதுதான் அவருக்கு குடித்தது போன்ற ஒரு திருப்தி ஏற்படும். எழுபத்தைந்தை கடந்த அன்னத்திற்கு உயர் ரத்த அழுத்தம்,இதில் பித்தமும் சேர்ந்து கொள்வதால் அடிக்கடி தலைசுற்றல் மயக்கம் என்று படுத்தி எடுத்துவிடும் எனவே நேத்ரா திருமணமாகி வந்த புதிதிலேயே அவரது மொடா காபிக்கு தடா போட்டுவிட்டாள்.
வாரம் ஒரு முறை மட்டுமே அவருக்கு பில்டர் காபி அதுவும் டிகாஷன் குறைவாக…
வாம்மா நேத்ரா… காபியை வாங்கிக் கொண்டார். இப்படி உட்காரும்மா!தன் எதிரில் இருந்த ஒற்றை சோஃபாவை காட்டினார்.
குழந்தை தூங்கறானா?
இல்ல பாட்டி மாமா கூட விளையாடுறான்.
இருவரும் எதிரும் புதிருமாய் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நேத்ரா உனக்கு சொல்ல எதுவும் இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, புத்திசாலி பொண்ணும் கூட…
போன வாரம் என்ன நடந்துச்சுன்னு நான் கேட்க மாட்டேன்.ஆனா வலுவா ஏதோ நடந்திருக்கு!
நீ ரொம்ப காயப்பட்டு தான் என்கிட்ட கூட சொல்லாம போயிருக்க… நடந்தது எதுவாக கூட இருக்கட்டும் ராசாத்தி ஆனா வீட்டை விட்டு போய் இருக்கக் கூடாதுடா கண்ணு.
விஷ்ணு ரொம்ப உடைஞ்சு போயிட்டான். அவனோட இயலாமையை மறைக்க அவ்வளவு கோபப்பட்டான்.
உனக்கு இந்த வீட்டில் சகல உரிமையும் இருக்கு. எங்க காலத்துக்கு பிறகு எல்லாத்தையும் கட்டி ஆள வேண்டியது நீதானே…?
புரியுது பாட்டி… சொல்லாம போனது தப்புதான்.என்னால தாங்கிக்க முடியல பாட்டி. அதுதான் எதையும் யோசிக்காமல் சட்டுனு கிளம்பி போயிட்டேன்.என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! கண்ணீர் முட்ட நிலம் நோக்கினாள்.
அம்மாடி நேத்ரா வருத்தப்படாத கண்ணு, இந்த பரம்பரையை ஆளப்போற என் பேரனையே அடக்கி மிரட்டி ஆண்டு அதிகாரம் பண்ற உரிமை உனக்கு இருக்கு. இது உன் வீடு எப்பவும் அது உன் மனசுல ஆழமா இருக்கட்டும்.
ஜோதியை நீ கணக்கில வைக்காதம்மா அவ மண்டை கணம் கொண்டவ.
உன் மாமனார் உன்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கான், உன் புருஷன் உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குறான், இந்த கிழவி உங்க சந்தோஷத்துல தான் நடமாடறேன்.
நல்லது கெட்டது எல்லாம் கலந்தது தாண்டா கண்ணு வாழ்க்கை!
விஷ்ணு கோபக்கார பய தான் ஆனா குணத்துல கோமேதகம். அன்னம் மூத்தவராய் அனுபவ பாடம் போதித்தார் பேரனின் மனைவிக்கு.
ஆமோதிப்பாய் கேட்டுக் கொண்டவள் மெல்ல எழுந்து பாட்டியின் காலடியில் அமர்ந்து அவர் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.
பேத்தி மனம் வலிக்க இவ் வீட்டில் உயிர்ப்பின்றி நடமாடுகிறாள் என்று புரிந்து தான் அவர் அறிவுரை மொழிந்ததே…
ஜோதி நாவால் சுட்டிருக்கிறார் அந்த ரணம் தாங்காமல் அவள் துவண்டு போயிருக்கிறாள்.
நிச்சயம் ஏதோ பெரிய அளவில் நடந்திருக்கிறது என்று அன்னத்தின் அனுபவத்திற்கு புரியாமல் இல்லை.
சொல்லக்கூடாத நிகழ்வு என்பதால் தான் நேத்ரா யாரிடமும் எதுவும் சொல்லவில்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் அன்னம்.
இன்னும் என்னால் இங்கு பொருந்தி போக முடியல பாட்டி நானும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்!அவர் மடியில் தலைக்கவிழுந்த அவளின் ஓரவிழி நீர் அவர் வெங்கடகிரி காட்டன் புடவையை ஈரமாக்கியது.
எனக்கு புரியாம இல்லடா ராசாத்தி “முன்னைக்கு இப்போ எவ்வளவோ மாறி இருக்க” அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியா போயிடும்.
இதையெல்லாம் மனசுல வச்சி குழப்பிக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதடா.தன் சுருங்கிய கரங்களின் நடுங்கும் விரல்களால் வாஞ்சையுடன் அவள் தலை கோதினார்.
“—————–”
சந்தியா காலம் நெருங்கவே பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றினாள். விளக்கு ஏற்ற விரல் நீண்டு தீப்பெட்டியை உரசும்போது அந்த இஷ்க் என்ற ஓசையினூடே பளிச்சென்ற ஒளியில் மஞ்சள் குங்குமம் இட்டு மங்களகரமாய் வீற்றிருந்தது அவள் சீதனமாய் கொண்டு வந்த வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு.
திருமணத்தன்று முக்கால் கிலோ எடை கொண்ட அந்த வெள்ளி விளக்கை கையில் தூக்கிப் பார்த்து இது என்ன ஈ,கொசு மாதிரி கனமே இல்லாம இருக்கு! எங்கிருந்து வாங்கினீங்க இந்த சீப் ரேட் விளக்கை? வெடுக்கென கேட்டார் ஜோதி.
சம்மந்தியின் நக்கல் பேச்சில் வேதவள்ளியின் கண்ணில் நீர் கோர்த்து விட்டது.கோபமாய் நேத்ரா மாமியாரை பார்க்க…விஷ்ணு வேண்டாம் என்பதாய் அவள் கரம் பற்றி அழுத்தினான்.
நினைவுகளை ஒதுக்கி விட்டு கண் மூடி சாமியை வணங்கி குங்குமம் தீற்றிக் கொண்டு தனது அறைக்கு சென்றாள்.
“————–”
லாண்டரிக்கு கொடுத்திருந்த விஷ்ணுவின் உடைகள் அழகாக இஸ்திரி செய்யப்பட்டு ஆங்கில செய்தித்தாளில் வைத்து சுற்றப்பட்டு நூல் கொண்டு நேர்த்தியாக கட்டி பண்டிலாக அவர்கள் அறையில் இருந்தது.
செய்தித்தாள் மடிப்பிற்குள் இருந்து உடைகளை எடுத்து கபோடிற்குள் லாவகமாய் அடுக்கினாள்.
அனிச்சையாய் கைகள் அந்த சந்தன வண்ண சட்டையை வருடியது.
அடர் சந்தன வண்ணம், கொஞ்சம் மஞ்சள் வண்ணம் போலவும் தெரியும்.கருப்பு கட்டம் மெலிதாய் போட்ட முழு கை சட்டை.
முதன்முதலாய் அவளிடம் வந்து பேசும்போது அந்த சட்டை தான் அணிந்திருந்தான்.
என்ன லவ்வா? எந்த காலேஜ்? பஸ் ஸ்டாப்பில் நின்றவளை கோர்ட்டில் நிறுத்தி கேள்வி கேட்பது போல் கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தான்.
அவன் இப்படி வந்து கேள்வி கேட்பான் என்று அவள் கண்டாளா? பயத்தில் விரைத்து போனாள்.
அவனை தூரத்தில் இருந்து சைட் அடிக்கும் போது இருந்த தைரியம் இப்போது ஓடி ஒளிந்து போனதோ?
எந்த ஊரு? சட்டையின் ஸ்லீவை ஏற்றிக் கொண்டு அவளை ஏற இறங்க பார்த்தான்.
அவளிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.
ஹலோ காது கேட்குமா? வாய் பேச வரும் தானே? கிண்டலாய் கேட்டவனை தீ பார்வை பார்த்தாள்.
அட….காது கேட்குது…உதடு கடித்து குறும்பாய் சிரித்தான்.
ஹலோ வாய் பேசவும் வரும்! வெடுக்கென வந்து விழுந்தது வார்த்தைகள்.
ஒரு கணம் அவளையே திருதிருத்து பார்த்தான்.
என்ன லுக்கு? என்ன சார் உங்க பிரச்சனை? தைரியம் போல் பேசிக்கொண்டே அவனின் விழி இரண்டின் வழியே ஊடுருவி இதயத்திற்குள் புகுந்து விட முனைந்தாள்.
சந்தன வண்ண சட்டை அவன் மாநிறத்திற்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது.
சிலர் மீசையை கண்டாலே காமெடியாக இருக்கும். ஜெமினி கணேசன் மீசை போல் மேல் உதட்டோரம் மெலிதாய் எறும்பு வரிசை கட்டி ஊர்வது போல் இருக்கும். சிலர் கிடா மீசையோ ராஜ்கிரண் மீசை போல் காட்டுத்தனமாய் முறுக்கேறி அச்சுறுத்தும். சிலர் மீசை பென்சிலால் வரைந்தது போல் காமெடியாக இருக்கும்.
விஷ்ணுவின் மீசை அத்தனை கவர்ச்சியாய் அளவெடுத்து வளர்த்தது போல் கருகருவென்று அம்சமாய் இருந்தது.அவனை ஆண்மை கம்பீரமாய் தூக்கலாய் காட்டியது.
அவனை பார்த்துக் கொண்டே நிற்க சொன்னது காதல் வயப்பட்ட மனது.
என்ன இவ கலர்ஃபுல்லான பஞ்சு மிட்டாயை அதிசயமா பார்க்கிற குழந்தை மாதிரி நம்மளையே இப்படி லஜ்ஜை இல்லாம பார்க்கிறா? உள்ளுக்குள் கொஞ்சம் ஜொர்கானது விஷ்ணுவிற்கு.
ஆளு அல்ட்ரா மாடனா இருக்கா ஆனா இப்படி பச்சையா சைட் அடிக்கிறா!!! குழம்பி தான் போனான்.
8ம் நம்பர் டவுன் பஸ் வரவே ஹாய் ஹாண்ட்சம் பார்க்கிற மாதிரி அழகா இருக்கீங்க அதுதான் அடிக்கடி பார்க்கிறேன்.ஒற்றை கண்ணை சிமிட்டு விட்டு ஓடி ப் போய் பேருந்தில் ஏறிக்கொண்டாள்.
அடிங்க… கொழுப்பை பாரு ரவுடி பேபி…சட்டையின் கையை மடித்துக்கொண்டு கையை முறுக்கினான்.
error: Content is protected !!