Skip to content
Post Views: 1,889
நதி 12
தாயும், தங்கையும் அந்த அறையை விட்டு சென்றதும் புடவையை கையில் வைத்திருந்த யமுனா, மெல்ல அந்த அறையை சுற்றி தன் பார்வையை சுழற்றிவிட்டு இறுதியாய் ஒரு பெருமூச்சோடு மேலே பார்த்தாள்.
Advertisement
ஒரு முடிவுக்கு வந்தது போல அங்கிருந்த சேரை எடுத்து அந்த அறையின் மத்தியில் போட்டவள் அதில் ஏறி நின்று மீண்டும் மேலேயே பார்த்திருக்க,
“என்ன பாப்பா.. மேல போட முடியலையோ..? நா வேணுமுன்னா போட்டு தரவா..?” என்ற நக்கல் குரலில்,
Advertisement
Advertisement
கண்கள் விரிய ஆச்சர்யத்தோடு திரும்பியவள் கண்டது அந்த அறையின் கதவை திறந்து அதில் லேசாக சாய்ந்து தனது கையை கட்டிக்கொண்டு நின்றிருந்த தீனாதயாளனையே..!!
“கண்ணழகா..!!!” என வாய் சொன்னாலும் அதன் உச்சரிப்பு தவிர வார்த்தை வடிவம் பெறாமல் முற்றுப்பெற்றது அவளின் கண்ணாளனின் கண்ணில் தெரிந்த கனலில்.
Advertisement
அவனின் கனிவை மட்டுமே சமீபமாய் பார்த்திருந்தவளுக்கு இப்படி இறுகி, முகம் சிவக்க நின்றிருக்கும் தோரணை லேசாக கிலியை கொடுக்க,
‘எதுக்கு இப்படி முறைக்கறாங்க..?’ என்ற யோசனையோடு அவள் விழிக்க,
“என்னடீ பண்ண இருந்தே..?” என்றான் ஆத்திரம் தீராது பல்லைக்கடித்து.
அவனின் கோபத்தில் யோசனையானவள், பின் அதன் காரணம் புரிந்து அவனை திரும்பி முறைக்க ஆரம்பித்தாள்.
“என்னடீ.. பண்ணறத பண்ணிட்டு என்னை முறைக்கறே..?” என தீனா எகிற,
“யோவ் கண்ணழகா.. என்னைய என்னன்னு நெனச்சீங்க..?
இந்த ஜென்மம் முழுக்க உங்கள எப்படி வச்சு செய்யலமுன்னு ஆயிரம் கனா கண்டு வச்சுட்டு அவசரப்பட்டு வேற முடிவு எடுப்பேனா..?” என்ற அவளின் வார்த்தை கேட்டு விழி விரிப்பது தீனாவின் முறையாகியது.
“அப்போ..?” என அவன் கேள்வியாய் மேலே பார்க்க,
அவசரமாய் அந்த ச்சேரிலிருந்து கீழே குதித்தவள், “எந்த பக்கம் எஸ்கேப் ஆகலாமுன்னு பார்த்தேன். இங்கிருந்து வெளியே போக இந்த டோர் தவிர வேற வழியே இல்ல.
அதனால ஓட்ட பிரிச்சு அது வழியா வெளிய வந்து எஸ் ஆகிடலாமுன்னு ப்ளான் பண்ணி மேல ஏற சேர் போட்டேன்.
அப்பவும் எட்டலையா அதான் இருக்கற புடவைய வச்சு ஏதாவது பண்ண முடியுமா.. இல்ல வேற எப்படி ஏறன்னு ச்சேர்ல நின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்..” என்றவளின் வார்த்தையில் அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது தீனாவிற்கு.
“என்னை பாத்ததும் கங்கா ஓடி வந்து சொன்னத கேட்டு எதாவது ஏடாகூடமா முடிவெடுத்து பண்ணிப்பீயோ..? ன்னு பதறி வந்து பாத்தா விட்டத்த வெறிச்சுட்டு நிற்கறே. என்னன்னுடீ கற்பனைய பண்ண..?” என்றவனின் வார்த்தை சிரிப்பை அடக்கிக்கொண்டு வர,
“ஓஹோ.. ஐய்யாவுக்கு அப்படி எல்லாம் கற்பனை போகுமோ..?” என இடுப்பில் கை வைத்து அவள் முறைக்கவும் அவளை நெருங்கி நின்றவன்,
“அதுக்கு தான் கொஞ்சமாச்சும் வளரனும் பாப்பா.. குட்டையா இருந்தா.. எத்தன தொல்லை பாரு..!!” என அவன் அவள் தலையில் தட்டி அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் சொன்ன பாவனை..
அவன், ‘இதற்கு மட்டும் சொல்லவில்லை..!’ என்பதை அவளுக்கு தெளிவாக்க முறைத்துக்கொண்டிருந்த பாவனை அப்படியே வெக்கத்திற்கு மாறிப்போனது.
“அக்கா..! அப்போ நீ எஸ்கேப் ஆக தான் அ..ப்..ப..டி பார்த்தீயா..?” என்ற கங்காவின் ஆச்சரியம் கலந்த இழுவையில் தீனாவினால் கட்டுப்படுத்தவே முடியாது போனது சிரிப்பை.
“எல்லாரையும் டைவர்ட் பண்ணிவிட வேணாமா..? அதான் அப்படி பண்ணேன்.. அப்படி எண்ணமிருந்தா எவளாவது கதவ லாக் போடாம இந்த வேலைய பார்க்க போவாளா..?
ஆனா இந்த அம்மா அதுக்கும் அசறலையே..!” என உதட்டை பிதுக்கி யமுனா கெத்தாய் சொல்ல,
கேட்டிருந்த மரகதத்திற்கு, ‘அடிப்பாவி மகளே..!!!’ என வாயில் கை வைக்கும் நிலை தான்.
தீனதயாளன் யமுனாவின் பேச்சில் சிரித்து விட்ட போதும், அவள் தன்னிடம் நெருங்கி நிற்கும் போது தெரிந்த முகச்சிவப்பும் வீக்கமும் மனதை வலிக்க வைக்க அவன் முகமோ மீண்டும் இறுக்கத்தை தத்தெடுத்துக்கொண்டது.
மெல்ல அவளின் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவனுக்கு, “ஸ்ஸ்..” என்ற அவளின் லேசாக முனங்கலும் முகச்சுழிப்பும் அவளின் வலியை காட்டிக்கொடுக்க தீரா ஆத்திரம் அந்த காயத்தை தந்தவர் மீது எழுந்தது.
அதே கோபத்தோடு அவளின் கையை பற்றியபடி அந்த அறையிலிருந்து அழைத்து கொண்டு கோவிலின் முன் பகுதிக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே இருந்த காக்கி உடையும் அவர்களோடு நின்றிருந்த தங்கமணியையும் கண்டதும் ஓரளவு விசயத்தை யூகிக்க முடிந்தாலும், ‘எப்படி சாத்தியம்..?’ என்ற கேள்வியே சகோதரிகள் இருவருக்கும்.
தீனா கூட்டத்திற்குள் வந்ததும் முத்தரசனை பார்த்த பார்வையில் அத்தனை கனல்.
அதனை கண்டு கொண்ட யமுனா, ‘போச்சு.. இந்த தயா பாக்கறதே சரியில்ல.. அவர அடுச்சு கிடுச்சு வச்சிட்டா.. இன்னும் சிக்கலாகிடுமே..?’ என்ற பயம் எழுந்தது.
அதனால் அவனின் கரத்தை இறுக்கமாய் பற்றிக்கொண்டாள் தன்னை விட்டு நகராத படி.
அதை கண்ட இன்ஸ்பெக்டர், “இதான் நீங்க சொன்ன யமுனாவா..?” என கேட்க,
“ஆமாங்க சார்..” என தங்கமணி சொன்னதும், அவளை பார்த்தவருக்கு தீனாதயாளன் தரப்பில் சொல்லப்பட்டது அத்தனையும் உண்மை என்று உறுதியாகி போனது.
ஆனாலும் அதை இன்னும் தெளிவாக்கி கொள்ள,
“ஏம்மா.. உனக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி நடக்கறதாவும், நீயும் இந்த பையன் தீனதயாளனும் விரும்பறதாவும் சொல்றாங்க.. உண்மையா..?” என விசாரணையை ஆரம்பிக்க,
யமுனா தந்தையை தான் நிமிர்ந்து பார்த்தாள்.
அவரோ இப்படி ஒரு விசயம் நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை.. என்பது போல அதிர்ந்து போயிருந்தவர் இன்னும் அதிலிருந்து தெளியாமலேயே நின்றிருந்தார்.
அவரிடமிருந்து பார்வையை தீனா புறம் திருப்ப தன் இமை மூடி அவன் தந்த தைரியத்தில், “ஆமா சார்..” என்றிருந்தாள் யமுனா.
“இங்கே பாருங்க சார்.. உங்க பொண்ணு மேஜர். அவங்க விருப்பம் இல்லாம அவங்கள ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண முடியாது..” என இன்ஸ்பெக்டர் கண்டிப்பாய் சொல்ல,
“சார், அது சின்ன பொண்ணு சார். வெவரம் புரியாம பேசுது. நாளைக்கு அது கண்ண கசக்கிட்டு வந்து நின்னா நீங்களா சார் பார்ப்பீங்க..?” என சொந்தத்தில் ஒருவர் பேச,
அவரை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர்,
“ஓ..! அப்போ அந்த தண்ணிவண்டிக்கு கட்டி வச்சு.. சந்தோஷமா வாழ வைக்க போறீங்க..?” என தள்ளாட்டத்தோடு நின்றிருந்த மாப்பிள்ளையை சுட்டிக்காட்டி இன்ஸ்பெக்டர் நக்கலாக கேட்தும் முன்னால் பேச வந்தவர் வாயடைத்து அமைதியாக விலகிக்கொண்டார்.
முத்தரசனோ, “சார்.. அவசரப்பட்டு இப்படி மாப்பிள்ளை பார்த்தது தப்பு தான். தயவு செஞ்சு என் மகள விட்டுட்டு போக சொல்லுங்க..
நானே வேற நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறேன்..” என்றிட,
இன்ஸ்பெக்டர் பேசும் முன் முந்திக்கொண்ட தீனா, “எப்போ யமுனா பேரோட என் பேர் சேர்த்து பேச்சு வந்திடுச்சோ.. இனி இந்த ஜென்மத்துல யமுனா கழுத்துல தாலின்னு ஒண்ணு ஏறுனா அது என் கையால தான்.
உலகத்துல எப்படிப்பட்ட உத்தமனை உங்க மகளுக்கு நீங்க வரனா கொண்டு வந்தாலும் அவனோட கல்யாணம் நடக்க விடமாட்டேன்..” என்றவனின் குரலில் இருந்த தீவிரமும், அதை சொல்லும் போது யமுனாவின் கரத்தில் அவன் கொடுத்த அழுத்தமும் அவளை யோசனைக்கு உள்ளாக்கியது.
அதோடு அதுவரை திடமாக பேசியவனின் குரல் தளுதளுக்க,
“அப்படி ஒருத்தன மனசால நினைச்சு இன்னொருத்தனை கால சூழலால கைபுடுச்ச ஒரே காரணத்தால நான் இழந்த இழப்பு..
நிச்சயமா மறுபடியும் அப்படி ஒரு விசயம் நடக்க நா விடமாட்டேன், சார்..” என அவனின் தந்தையை பார்த்தபடி முடிக்கும் போது.. அவனின் விழி சிந்திய ஒரு துளி நீரை மற்றவர் அறியாமல் போனாலும்,
அவனின் செய்கையில் அவனையே கூர்ந்து பார்த்திருந்த யமுனாவிற்கு நன்றாக தெரிந்துவிட அவளின் யோசனை இன்னும் பலமானது.
அவனின் வார்த்தைக்கான அர்த்தம் புரிந்த ஜெயசீலன் அமைதியாய் அவனையே பார்த்து நின்றார் வேறு வழியின்றி.
அவரின் அந்த பார்வை நல்லவிதமானது இல்லை என்பது மட்டும் யமுனாவிற்கு புரிந்தது.
தீனாவின் குரலில் வழிந்த ஏதோ ஒன்று அங்கிருந்த எல்லாரையுமே அமைதியாக இருக்க வைக்க,
“இங்க பாருங்க முத்தரசன்.. அந்த பையன் உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க விடமாட்டேன்னு உறுதியா சொல்லிட்டாரு. அதே மாதிரி உங்க பொண்ணும் கட்டுனா அவர தான் கட்டும் போல..
வீணா பிரிச்சனை பண்ணாம ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடுச்சு விடுங்க..” என இன்ஸ்பெக்டர் பொறுமையாய் யமுனாவின் தந்தையிடம் சொல்ல,
அவரும், “சார்.. அவளுக்கு விவரம் பத்தாது சார்..” என சொன்னதும்,
“தனியா நாலு வருஷத்துக்கு கிட்ட திருப்பூர்ல தங்கி வேலை பார்த்திருக்கு உங்க பொண்ணு.
அதுக்கு வெவரம் பத்தாதுன்னு சொல்றது எப்படி இருக்கு தெரியுங்களா..?” என்றிருந்தார் தங்கமணி.
இப்போது முத்தரசனால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் போக, தலைகுனிந்து நின்றவரை யமுனாவின் கையை விடாமல் பற்றியபடி நெருங்கிய தீனா,
“உங்க பொண்ணை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு சொல்ல மாட்டேன். ஆனா சக மனுஷிக்கான அத்தனை மரியாதையும் தந்து பார்த்துப்பேன்.
இதோ பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம அவ உடம்புல காயத்த நீங்க கொடுத்த மாதிரி ஒரு நாளும் நா அவளுக்கு தந்திட மாட்டேன்.
என்னை நம்பி உங்க பொண்ணை கொடுங்க.. ப்ளீஸ்..” என்றவனின் முகத்தை நிமிர்ந்து சில நொடி பார்த்திருந்த முத்தரசனுக்கு என்ன தோன்றியதோ,
‘என்னமோ பண்ணுங்க..’ என்பதாய் ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு நின்று விட்டார்.
சுற்றி இருந்த உறவுகள் சிலர் முத்தரசனை நெருங்கி பேசி அவரை கலைக்க முயன்ற போதும், “அவ விதி இது தான்னா அதுவே நடக்கட்டும்.. விடுங்க..” என்று சொல்லிவிட,
அடுத்த சில நிமிடத்தில் யமுனாவின் கழுத்தில் பொன் மஞ்சள் தாலியை கட்டி தன் சரிபாதியாக்கியிருந்தான் தீனதயாளன்.
‘நடக்கவே நடக்காதோ..? இல்லை தந்தை தாயை எதிர்த்து அவர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டி வருமோ..?’ என்றெல்லாம் பல்வேறு யோசனையோடு இருந்தவளுக்கு,
இத்தனை எளிதாய் நடந்துவிட்ட இந்த திருமணம் அத்தனை நிறைவை கொடுக்க கண்கள் ஆனந்தத்தில் கலங்கி கசிந்தது.
மங்கல்யத்தில் பொட்டிட வேண்டி தனது உள்ளங்கையில் தீனா தாலியை பற்றியிருக்க அதில் பட்டுத்தெரித்த யமுனாவின் விழி நீரில் அவளின் முகம் பார்த்தவனின் கண்ணிலும் ஆனந்தத்தால் நிறைந்திருந்தது கண்ணீர்.
error: Content is protected !!