Skip to content
Post Views: 2,516
யாதுமாகி #12
வினிதா இருந்த ஒரு வாரமும் மிக மகிழ்ச்சியாக சென்றது.
வினிதாவோடு பேச்சு,குழந்தைகளோடு கொஞ்சல்,மங்களத்தோடு கிச்சனில் ரணகளம் என்று மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டது நேத்ராவின் முகத்தில்.
தியா குட்டிக்கு விதவிதமாய் அலங்காரம் செய்து தன் மொபைலில் புகைப்படம் எடுத்து சேமித்து வைத்தாள். குழந்தையும் மாமி மாமி என்று அவள் காலை கட்டிக் கொண்டது.
Advertisement
நேத்துமா பெண் குழந்தைனா உனக்கு அவ்வளவு இஷ்டமா? அவள் காதில் கிசுகிசுத்தான் அவள் ஆசை மணாளன்.
அவள் முகத்தில் வெட்கம் படரவில்லை,மாறாக கோபமும் இயலாமையுமே சிறு ரேகையாய் ஓடியது.
அவன் எதற்கு அடி போடுகிறான் என்று புரிந்து கொண்டவள் இல்லை “எனக்கு பெண் குழந்தை பிடிக்காது” என்றாள் தாட்சண்யமின்றி.
Advertisement
பொய்… நீ தியாவை எவ்வளவு கொஞ்சுற,எவ்வளவு ரசிக்கிற… சிணுங்கியபடியே அவள் விரல் நீவினான்.
Advertisement
ஆமா கொஞ்சுறேன், ரசிக்கிறேன் அதுக்காக பெண் குழந்தை எனக்கு வேணும்னு நினைக்கல.
நான் பெண்ணா பிறந்து படறது போதும்! என் பொண்ணுக்கு இந்த மாதிரி கொடுமை எல்லாம் வேண்டாம். முகத்தை சுழித்து முதுகை காட்டி படுத்துக்கொண்டாள்.
விஷ்ணுவிற்கு மனது கடுமையாய் வலித்தது. அவளுக்கு என்ன சமாதானம் சொன்னாலும் அது நொண்டி சாக்கு தான் என்ற உண்மை சுட்டது.
Advertisement
வினிதா வந்ததிலிருந்து அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி,தெளிவு. இதுவரை இறுகிக் கிடந்த அவள் முகத்தில் அவ்வளவு கனிவு. இப்படியே அவள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஏக்கமாய் மூச்சை ழுத்து கண் மூடினான்.
“——————”
வினிதாவை அழைத்துச் செல்ல சந்தோஷ் வந்து விட்டான்.
ஒரு வாரமாய் குழந்தைகளோடு குழந்தைகளாய் குதூகலித்திருந்த நேத்ரா முகம் கூம்பி போனது.
வினிமா, நேத்ரா பாவம் இங்கே மொட்டு மொட்டுன்னு குழந்தையை வச்சிக்கிட்டு தனியா இருக்கா…நீ பெங்களுருக்கு கூட்டிட்டு போய் ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பு! என்றார் அன்னம்.
கண்கள் பளீறிட அன்னத்தை நன்றி பெருக்குடன் பார்த்தாள் நேத்ரா.
ஹை ஜாலி… தம்பி நம்ம கூட ஊருக்கு வர போறான்! துள்ளி குதித்தாள் தியா.
பாட்டி அதெல்லாம் வேண்டாம். குழந்தைக்கு தண்ணீர் சேராது. இப்போ அங்கே குளிர் ரொம்ப அதிகமாக இருக்கும். விஷ்ணு அவள் மகிழ்வின் ஆயுளை சில நொடிகளிலேயே முடிவிற்கு கொண்டு வந்தான்.
ஏகே 47 விழிகளால் அவனை முறைத்தாள்.
பாட்டி சுரேந்தர் தங்கச்சி அனுபமாவுக்கு வர திங்கள்கிழமை நிச்சயதார்த்தம் இருக்கு! நேத்ரா வரலைனா அனு ரொம்ப வருத்தப்படுவா. தன்மையாய் சொல்லிக்கொண்டே அவள் முகத்தை சமாதானமாய் பார்த்தான்.
அதில் யாதொரு உணர்வுகளையும் பிரதிபலிக்காது சிலையெனவே நின்றாள்.
“—————–”
அப்புறம் விஷ்ணு, லைஃ ப் எப்படி போகுது? உரிமையாய் கேட்டான் சந்தோஷ்.
எனக்கென்ன சந்தோஷ் செம ஹேப்பியா போகுது ! அன்பான மனைவி, அழகான குழந்தை. Really I am blessed.அடி மனதில் இருந்தே வந்தது வார்த்தைகள்.
என் தங்கச்சி எப்படி இருக்கான்னு கேட்டியா? சந்தோஷ் உரிமையாய் அவன் தோளில் கை போட்டான்.
கேட்கிற நிலையில் அவ இல்லை.அவ ரொம்ப நிறைவான வாழ்க்கை வாழறா! நீங்க இருக்கும்போது அவளுக்கு என்ன குறை இருந்திட போகுது?
தேங்க்யு விஷ்ணு,என்னை பற்றி இவ்வளவு உயர்வா நினைக்கிறதுக்கு.
உன் தங்கச்சி என்னோட ஹேப்பியா வாழற மாதிரி,என் தங்கச்சியையும் ஐ மீன் நேத்ராவையும் நீ ஹாப்பியா வச்சுக்கணும் விஷ்ணு.
சுர்ரென்று ஏறிய கோபத்தை அடக்கிக்கொண்டு இயல்பாய் மாலை நேர தென்றல் காற்றை சுவாசித்து மொட்டை மாடி கைப்பிடி சுவற்றில் கையை குத்தினான்.
வேறு யாராவது இப்படி பேசினால் விஷ்ணுவின் அணுகுமுறை வேறாக இருந்திருக்கும்.
நண்பனின் அண்ணன் என்பதையும் தாண்டி, தங்கையின் கணவன்,வீட்டு மாப்பிள்ளை ஆயிற்றே…!
விஷ்ணு இப்போ உன்னோட எண்ண ஓட்டம் எனக்கு புரியுது! உனக்கு யாரும் அட்வைஸ் பண்றது பிடிக்காதுனு புரியுது. ஆனா கூட பிறக்கலைனாலும் ஷர்மி மாதிரி தான் எனக்கு நேத்ராவும்.
நேத்ரா ஒத்தையில் வளர்ந்த பொண்ணு,கூட பிறந்தவங்க யாரும் இல்லாம தனியா வளர்ந்தவளுக்கு இங்கேயும் அதே தனிமை! பாவம் இங்கே அவளுக்கு இறுக்கமான சூழ்நிலையை கொடுக்கறோம்.
அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணு! ஹையர் ஸ்டடிஸ் பண்ண வை! எதுவும் சரி வராதுனா வேலைக்காவது அனுப்பு ப்ளீஸ்.
இது என்னோட சஜஷன் தான் ஆர்டர் இல்லை. உன் பர்சனல் விஷயத்தில் நான் இவ்வளவு தூரம் மூக்கை நுழைத்தது அதிகப்படி தான்.எனக்கு உன் வாழ்க்கையில் அக்கறை இருக்கு.
விஷ்ணுவுக்கு புரிந்தது, நேத்ராவின் நிலையை வினிதா தான் சந்தோஷிற்கு கூறி இருக்க வேண்டும் அதுதான் மெனக்கட்டு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறான்.
என் பர்சனல் அப்படியெல்லாம் தனியா இல்லை சந்தோஷ்.என் நிலைமை உங்களுக்கு புரியலையா?சற்று விரக்தியாக கேட்டான் விஷ்ணு.
ஏன் புரியாம விஷ்ணு?உங்க மாதிரி குடும்பத்தில் ஒற்றை ஆண் வாரிசா பிறக்கவே கூடாது….நெடு மூச்சுடன் அவன் தோள் தட்டினான் சந்தோஷ்.
வேலைக்கு அனுப்ப வாய்ப்பு இல்லை சந்தோஷ். பொன்னுசாமி கவுண்டர் குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டு வந்து நேத்ரா வேலைக்கு போவதான்னு அம்மா எகிறிடுவாங்க,பாட்டியும் விரும்ப மாட்டாங்க. வெளியில் சொல்லலைன்னாலும் அப்பாவும் அதை விரும்ப மாட்டார்.
அவளுக்கு விருப்பமிருந்தால் M. Phil ஜாயின் பண்ணட்டும் என்றான்.
“—————–”
காலையில் புகுந்த வீட்டிற்கு கிளம்பும் மகளுக்கு கொடுத்து அனுப்ப இரவே பேக்கிங் வேலையை ஜருராக நடத்திக் கொண்டிருந்தார் ஜோதி.
வினி கடாரங்காய் ஊறுகாய் இரண்டு பாட்டில் வச்சிருக்கேன், கீரைக்கு தாளிக்க கருவடகம் வைக்கிறேன்.முந்திரி ரெண்டு பாக்கெட் வைக்கட்டுமா?.
அம்மா,அண்ணி ஏற்கனவே மூணு கிலோ பாக்கெட் வச்சிருக்காங்க. வேதா அத்தை ஸ்பெஷல் ஜவ்வரிசி வடாம், பூண்டு பொடி,இடியாப்ப மாவு,
நெல்லிக்காய் ஊறுகாய் எல்லாம் பேக் பண்ணி வச்சுட்டாங்க பாருமா! பெரிய பேக்கிங்கை பெருமையாய் காட்டினாள்.
ம்ம்ம்ம்கூம்… முகத்தை அஷ்ட கோணலாய் முறுக்கி கொண்டார் ஜோதி.
இவ என்ன என் பொண்ணுக்கு கொடுக்கிறது? இவ கொடுத்து என் பொண்ணு வாங்கிட்டு போகணுமா? பெத்தவ எனக்கு தெரியாதா? சற்று உரக்கவே முணுமுணுத்தார்.
நீ எல்லாம் ஒரு ஆளா? என்பது போல் அவரை பார்த்தனர் அனைவரும்.
வேணு மருமகளை மனதிற்குள் அவ்வளவு மெச்சிக் கொண்டார். இவள் நம் காலத்திற்குப் பிறகு தாய்க்குத் தாயாய் நம் பெண்கள் இருவரையும் அரவணைத்துக் கொள்வாள்! என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு.
அன்னத்திற்கு குணத்தில் கோபுரமாய் இருக்கும் நேத்ரா இந்த வீட்டு மருமகளாய் வாய்த்ததில் திருப்தியாய் இருந்தது.
“—————–”
நேத்துமா நேத்துமா…குழந்தைக்கு தொந்தரவு இல்லாதவாறு ரகசிய குரலில் அழைத்தான். அவள் திரும்பினால் தானே?
அவள் இடையில் கிள்ளினான், வெடுகென திரும்பினாள்.
செல்ல குட்டிக்கு கோபமா? விழிகளும் சேர்த்து கெஞ்சியது.
எங்கு தான் கற்றானோ இந்த வித்தையை! நொந்தே போனாள் அவன் விழிகளுக்குள் கட்டுண்டு போகும் தன் சொரணையற்ற மனதை எண்ணி…
பதில் ஏதும் கூறாமல் முறைத்து பார்த்தாள்.ஒரு நிமிடம் கூட முறைக்க முடியாமல் இமைக்கதவுகள் அதுவாய் மூடிக்கொண்டது.
மூடிய இமை கதவில் மென்மையாய் முத்தமிட்டு விழிவாசல் திறந்து இதயத்திற்குள் நுழைய ஆயத்தமானான்.
அவன் முத்தத்தை சுகித்து ஆயினும் கோபம் போல் முகம் சுழித்து கண் மூடிக்கொண்டாள்.
நேத்ரா நீயும் குழந்தையும் இல்லாம என்னால இருக்க முடியாது. வெட்கம் விட்டு சொல்றேன் உன்னை ஒருநாளே விட்டுட்டு இருக்க முடியாதுடி! இதுல பாட்டி ஒரு வாரம் பெங்களூரில் தங்கிட்டு வர சொல்றாங்க… அவளை ஆவேசமாய் இழுத்து மார்பு கூட்டிற்குள் பொத்திக் கொண்டான்.
அதுதானே எங்கேயும் போய் நான் நிம்மதியா இருந்துட கூடாதே…வெறுப்பாய் முறைத்தாள்.
நிஜமா நான் இல்லாம நீ நிம்மதியா இருந்துடுவியா? அவள் முகம் எங்கும் முகர்ந்து உச்சியில் இதழ் பதித்தான்.
முடியும் என்று பொய் உரைக்க அவள் விரும்பவில்லை. அவனின்றி அவளாலும் இருந்துவிட முடியாது! அதே சமயம் மூச்சு முட்டும் இந்த நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் வாழ்க்கை அவளை மெல்ல சித்தம் கலங்க வைத்து விடுமோ என்ற பயம் அவளை ஆட்டி படைத்தது.
நாளைக்கு கங்கைகொண்ட சோழபுரம் போயிட்டு, அப்படியே பிச்சாவரம் போயிட்டு வரலாம் ஓகேவா?அவன் குழல் ஒதுக்கி சமாதானம் செய்ய முற்பட்டான்.
“——————”
அம்மா,அப்படி என்ன உனக்கு நேத்ரா கூட வாய்க்கால் தகராறு? பல்லை கடித்தாள் வினிதா.
எனக்கு என்ன தகராறு? அவ எனக்கு ஈடா, எதிரா சொல்லு? என்று கேட்டார் ஜோதி.
அப்புறம் ஏம்மா நேத்ராவை உனக்கு பிடிக்கவே மாட்டேங்குது?
பிடிக்கலைன்னா பிடிக்கலைதான் அதுக்கு ஆயிரத்தெட்டு விளக்கம் சொல்லனுமா?
என் அண்ணன் பொண்ணு சந்திரவதனி வாழ வேண்டிய வாழ்க்கையை இந்த ராங்கி வாழ்ந்துகிட்டு இருக்கா….சிடுசிடுத்தார்.
ம்ம்மா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன். அவளாய் இருக்கவே அமைதியா போறா இதே இடத்தில் உன் அண்ணன் பொண்ணு இருந்திருந்தால் இந்நேரம் உன்னை பேய் ஓட்டி அனுப்பியிருப்பா.
வாயை மூடுடி! அவ ரொம்ப பதவிசு பச்சை மிளகாய் தான்.
எம்புள்ள அவளை தட்டி குட்டி அடக்கமா வச்சிருக்கான் இல்லைன்னா அவ ஏறி மிதிச்சுடுவா… அதை தெரிஞ்சுக்க முதல்ல.
மா நீ இப்படியே எதுகைக்கு மோனையா பேசிட்டு இருந்தா அண்ணன் எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு தனிக்குடித்தனம் போக போறாரு பாரு! எதார்த்தம் பேசினாள் வினிதா.
தனி குடித்தனம் போயிடுவானா? என்னை மீறி போயிடத்தான் முடியுமா?கொக்கரித்தார் ஜோதி.
போமா…என்ன கேரக்டரோ நீ! எங்க பாட்டி டெரர் பீசா இருந்திருந்தால் நீ இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க மாட்ட…தலையில் அடித்துக் கொண்டாள்.
நான் ஆவுடைய கவுண்டர் செல்லமகள் ஜோதியாக்கும்…. என்னை யாரும் ஆட்டி வைக்க முடியாது! அவ்வளவு பெருமை பேசினார்.
ம்மா நேத்ராவும் நிறைய படித்தவ தான், என்ஜீனியரோட பொண்ணு தான், 100 பவுனுக்கு மேல நகை போட்டுட்டு வந்தவதான். அவள் ஒன்னும் நம்ம தகுதிக்கு எந்த வகையிலும் குறைந்தவ இல்லை.
வாய மூடுடி,யார்கிட்ட பேசுறன்னு நிதானித்து பேசு!எரிமலையாய் புகைபரப்பி அனல் கக்கினார்.
என்னமோ பண்ணு,ஆனால் நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை அவ்வளவு தான் சொல்வேன்.பின்னாடி இதுக்கான பலன் உண்டு!
என்ன, பெத்தவளுக்கு சாபம் கொடுக்கிறியா? நெற்றிக்கண் திறந்தார் ஜோதி.
தாயும் மகளும் உரையாடிய சம்பாஷனைகளை கேட்டு ஒரு புறம் மகிழ்ந்து, மறுபுறம் புழுங்கினான் விஷ்ணு.
தன் சக உதிரி தன் போல் நேர்மையோடு பேசுவது கண்டு மகிழ்ந்தான்.தாங்கள் ஊருக்கே நியாயம் பேசும் வேணுகோபாலனின் வாரிசுகள்,அன்னலட்சுமியின் பேரப்பிள்ளைகள் என்று பூரித்துப் போனான்.
மகனுடைய மனைவியை எதிரியாய் வரித்து கொண்டு ஒரண்டு இழுக்கும் தாயை எண்ணி உள்ளம் வெதும்பி நொந்து கொண்டான்.
“——————-”
நேத்ரா நைட் சொன்னேனே… பத்து மணி வாக்குல கிளம்பி ரெடியா இரு!
நான் எங்கேயும் வரல…ரௌத்திரமாய் ஒலித்தது அவள் குரல்.
நீ வரியா இல்லையான்னு உன்கிட்ட அனுமதி கேட்கல.கிளம்பி ரெடியா இரு! “இருக்கணும்” உஷ்ண பார்வையுடன் வெளியேறினான்.
அவன் தான் சொல்றானே போய் கிளம்பும்மா! வீட்டுக்குள்ளே அடஞ்சி கிடந்தா மனசுல என்னென்னவோ தோணும்.எங்காவது வெளியில் போயிட்டு வாம்மா! அன்னம் பேத்தியை சமாதானம் செய்தார்.
குழந்தையை கிளப்பி அன்னத்திடம் கொடுத்துவிட்டு தான் கிளம்பி வந்தாள்.
எங்கோ கிளம்பி நிற்கிற மாதிரி தெரியுது? நக்கலாய் ஒரு பார்வையுடன் கேட்டார் ஜோதி.
யாரும் ஜோதியை மதித்து பதில் கூறுவதாய் இல்லை.
இங்கே ஒருத்தி குத்துக்கல்லு மாதிரி இருக்கேன்.காரம் மிகுந்து விட்டது ஜோதியின் கர்ஜனையில்.
அதுதான் நீயே சொல்லிட்டியே குத்துக்கல்லுன்னு. கல்லு கூட என்ன பேச்சுன்னு தான் கம்முனு இருக்கோம் இடக்காக பேசி சிரித்தார் அன்னம்.
மாமியாரை கொலை பார்வை பார்த்தார் ஜோதி.அடி போடி உன்னையும் தெரியும் உங்க அப்பனையும் தெரியும்! என்பதாய் இருந்தது கிழவியின் அசட்டுப் பார்வை.
வாயிலில் கார் ஹாரன் ஒலிக்கவே குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பினாள் நேத்ரா.
எங்கிருந்து வருவா உங்க பேரன் பொண்டாட்டி நான் வில்லியாக்கும் என்பதாய் இருந்தது ஜோதியின் எகத்தாளம்.
ஓ நீ அப்படி வரியா என்று நக்கல் சிரிப்பை உதிர்த்த அன்னம், எங்கே போறாளோ அங்கிருந்து வருவா….என்று முந்தானையை உதறி விசிறி தோள்பட்டையில் போட்டுக் கொண்டு நடந்தார்.நான் வில்லாதி வில்லியாக்கும் என்று சொல்லாமல் சொன்னது அவரின் ஆணவநடை..
error: Content is protected !!