Skip to content
Post Views: 1,829
அவரின் செய்கையை தடுக்க முடியாத கையாலாகாத தனத்துடன் யமுனாவின் முகம் காண முடியாது கூனிக்குறுகி நின்றிருந்தான் தீனா.
“இந்த பெட்சிட் இல்லாத.. அவனுறங்க மாட்டான்னு தெரியாம.. இத இங்கே போட்டா என்ன செய்ய..?
Advertisement
இதெல்லா வர்றவ மொறையா கொண்டு வந்து விரிக்கோனும்..
இங்கே அதெல்லாம் எங்கே யோசிக்க..? அவசரத்துக்கு அலையுதுங்க..” என முனங்குவது போன்ற பாவனையில் இருவரின் செவியிலும் விழுவது போல சொன்னவர்,
Advertisement
Advertisement
அந்த போர்வையோடு அறையிலிருந்து வெளியேற மொத்தமாய் சிதைந்து போனான் தீனா.
எப்படிப்பட்டவராய் இருந்தாலும் இந்த நிலையில் இப்படி ஒரு செய்கையை செய்ய துணிய மாட்டார்கள். அதிலும் இத்தனை கேவலமான பார்வையும் பேச்சும்..
Advertisement
சுத்தமாய் அதை ஜீரணிக்க முடியாது போக துவண்டு போனவன் சுவரோடு சரிந்து அமர்ந்து விட, அவனின் நிலையை கண்டு கண் கலங்கி போனது யமுனாவிற்கு.
‘காதல் திருமணம்..’ என வந்தால் வந்த இடத்தில் சில விசயங்களை, குத்தல் பேச்சுக்களை.. அவமானங்களை.. அனுசரித்து தான் போக வேண்டும்.. என,
அவள் அவனை விருப்ப ஆரம்பித்த நாளிலேயே ஆலோசித்து, அதற்கு ஏற்ப மனதை தயார் படுத்தி வைத்திருந்தவளுக்கே சகுந்தலாவின் இந்த செயலை ஜீரணிக்க முடியாத போது..
சொந்த வீட்டில் தன் மனைவியோடு ‘அந்த நிலையில்..’ இருக்கும் ஒருவனுக்கு நடக்கும் விசயமா இது..?
அதை எப்படி ஆணவனால் தாங்கிக்கொள்ள முடியும்..? என யோசித்த யமுனாவிற்குள்,
‘இப்போ.. எங்க வாழ்க்கை ஆரம்பிக்கறத விட என்னோட தயா.. இப்படி இருக்கறத மாத்தனும்..’ என்ற எண்ணம் மேலோங்க,
அவனுக்கு அருகே வந்து அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் அவனின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவளின் மார்பு சேலை தாண்டி நெஞ்சைத்தொட்டது ஈரம்.
சிறிது நேரத்திற்கு முன் மோகமாய் உதடு உரசிய இடம் இப்போது அவனின் கண்ணீரால் நிறைந்தது.
அப்போது அவன் உணர்த்தியது காமத்தின் அச்சரம்.. இப்போதோ அவன் தேடுவது தாயின் ஸ்பரிசம்.
அந்த ஸ்பரிசத்தை அவனுக்கு முழுவதும் வழங்க சித்தமானவள், அவனின் தோளையும் தலை முடியையும் வருடிவிட்டபடி அவன் காதில், “விடுங்க தயா.. இப்ப என்ன நடந்திடுச்சுன்னு.. இப்படி..?” என சொல்ல,
மேலும் அவளுள் புதைந்தவனுக்கு அத்தனை ஆற்றாமை.
ஒரு ஆண்மகனாய் மொத்தமாய் தோற்றுப்போன உணர்வது.
‘எந்த நிலையில்.. தன் மனைவியை தான் நிறுத்தியிருக்கிறேன்..?’ என்ற ஆதங்கம்.
“சாரி.. பாப்பா. சாரி..” என அவன் இதழ்கள் ஓயாமல் புலம்ப..
யமுனாவிற்கு அத்தனை ஆவேசம் சகுந்தலாவின் மீது.
‘உனக்கு இருக்கு..’ என மனதோடு கறுவிக்கொண்டவள்,
“தயா.. இங்கே பாருங்க..” என அவனின் கன்னம் தாங்கி முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்த,
அவளின் விழியை நேர் கொண்டு பார்க்கக்கூட முடியாத அவமானத்தில் இருந்தவன் அவளை காண மறுத்தான்.
“இங்கே பாருங்கறேனில்ல..” என லேசான அதட்டல் தொனியில் யமுனா சொல்ல,
கலங்கிய விழியோடு அவளை ஏறிட்டவனின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்த யமுனா,
“என் செல்ல கண்ணழகனுக்கு.. இந்த கண்ணீர் செட்டே ஆகல.. அதனால இனி இப்படி இருக்கக்கூடாது.. சரியா..?” என சிறு குழந்தைக்கு தாய் துடைத்து விடுவது போல அவன் விழி நீரை துடைத்தபடி யமுனா சொல்ல மனவலியை பிரதிபலிக்கும் விதமான வலிநிறைந்த புன்னகை அவனிதழில்.
அதில் ஒளிந்திருந்த விசயத்தை அனுமானிக்க முடியாமல், ‘இதுக்கு என்ன அர்த்தமாம்..?’ என அவள் விழிக்க,
“இப்படி ஒரு விசயம் எல்லாம் எந்த ஒரு வீட்டுலையும் நடக்கவே நடக்காது இல்ல..?
இந்த வீடு இதோட ரெண்டாவது முறையா என்னை மொத்தமா சிதச்சு போட்டிருக்கு.
பொதுவா கல்யாணம் ஆகி வர்ற பொண்ணு தான் சில விசயங்களை எண்ணி தவிப்போடு கலங்கி அழுது கணவன்கிட்ட அடைக்கலம் சேர்வாங்க.
ஆனா இங்கே உன் கஷ்டத்தை தாண்டி எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நிலைமை உனக்கு..” என விரக்தியான குரலில் தீனா சொல்ல,
அவன் சொன்ன இரண்டாம் முறை பற்றிய கேள்வி அவளுள் எழுந்த போதும் இப்போது அவனின் விரக்தி மனதை சீர்படுத்துவது முக்கியமாகப்பட,
“ஏன் எல்லா இடத்துலையும் பொண்ணுங்க கலங்கி ஆம்பளைங்களே தான் சமாதானம் செய்யனுமா என்ன..?
ஆணுக்குள்ள எப்போதும் ஒரு மென்மையோடான பெண்மை இருக்கற மாதிரி.. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளையும் ஆண்மையும் ஆளுமையும் இருக்கும்..
அதனால தான் ஆணுக்கு பெண் சமமுன்னு சொல்வாங்க..
எப்போ யாரு இங்கே பலகீனப்படறாங்களோ அப்போ அவங்க மத்தவங்களை ஆதரிக்கறதுல தப்பே இல்லை..” என உணர்ச்சிவசப்பட்டு பேசியவள்,
அவனின் இறுக்கத்தை தளர்த்தவே, “சொல்லப்போனா இது கூட.. கெத்தா.. நல்லா தாம்ப்பா இருக்கு..” என யமுனா நடிகை சாய்பல்லவி ஸ்டைலில் கையை உயர்த்தி கண்சிமிட்டி புன்னகைத்து சொல்ல,
அமர்ந்திருந்த வாக்கிலேயே அவளை வாகாய் அணைத்து திரும்பி தனது நீண்டிருந்த காலில் அமர வைத்து அணைத்துக்கொண்டவன்,
“நீ ரொம்ப ப்ரீஷியஸ் தெரியுமா..? நிச்சயமா இந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா.. வந்தவங்க என்னை கேவலப்படுத்தினதை விட பல மடங்கு கேவலப்படுத்தியிருப்பாங்க ஒத்த பார்வையாலேயே..
ஆனா நீ… நீ எனக்காக செய்யறத பார்க்கும் போது.. நானும் கொஞ்சம் கொடுத்து வச்சவன் தான் போல..” என்றான் அவளின் தோளில் தன் தாடையை பதியவைத்து.
“ஆஹான்..! அப்படியா..? அப்படி பார்த்தா நானும் கொஞ்சம்.. இல்ல இல்ல ரொம்பவே கொடுத்து வச்சவ தான்..” என்றாள் சிரிப்போடு அவன் மீது வாகாய் சாய்ந்து கொண்டு.
“எது.. இப்படி ஒரு வாழ்க்கை..! இதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கீயா..?” என சிதறி கிடந்த பூக்களை காட்டி மீண்டும் இறுக்கமான குரலில் தீனா சொல்ல,
“இது மட்டுமா வாழ்க்கை..? இதை தாண்டி ஒண்ணு இருக்கு தயா.
அது உங்களால மட்டும் தான் என் ஆயுசுக்கும் எனக்கு கொடுக்க முடியுமுன்னு என் மனசு சொன்னதால தான்.. இந்த கண்ணழகனை விடாம சைட் அடுச்சு கட்டிக்கிட்டேன்..” என லேசாக திரும்பி அவனின் தாடை பற்றி ஆட்டி கொஞ்சலாக சொன்னாள்.
அவள் சொன்ன விதத்தில் அவளின் முயற்சியை ஏற்றுக்கொண்டதான பாவனையில் லேசான புன்னகை அரும்ப , “ஆமா பாப்பா.. அது என்ன கண்ணழகான்னு சொல்றே..?
நானும் நீ சொல்லும் போதெல்லாம் கேட்க நினைப்பேன். அதுக்கு வாய்ப்பே கிடைக்கல இதுவரை.
என் கண்ணு என்ன அப்படி அழகா..?” என சந்தேகத்தோடு தீனா கேட்டது போல பேச்சின் திசையை மடைமாற்றினான்.
“அட.. நானும் மறந்துட்டேன் பாருங்களேன்..! உங்கள பார்த்த நாள்ல இருந்து இருக்கற சந்தேகம்..” என்றவள்,
அவசரமாய் அவன் புறம் திரும்பி அவன் மடியில் வாகாய் அமர்ந்து அவனின் கீழிமை இரண்டையும் விரித்து பார்த்தவள்.. அப்போதும் சந்தேகம் தீராது தன் விரல் கொண்டு தடவி பார்த்து உதட்டை பிதுக்க,
அவளின் செய்கை அத்தனையையும் சுவாரசியமாக பார்த்திருந்தவனுக்கு அவளின் கடைசி பாவனையில் விரிந்த புன்னகை அவனிதழில்.
அதே புன்னகையோடு அவளின் பிதுங்கிய உதட்டில் தன் உதட்டை உரசி விலகியவன்,
“என்னடீ.. என் கண்ணுல ஆராய்ச்சி..? என்னத்த கண்டுபிடிக்க..?” எனக் கேட்க,
“நீங்க கண்ணுக்கு மை போடுவீங்ளோ..ன்னு ரொம்ப நாளா டவுட்..” என்றதும்,
உடல் குலுங்க சத்தமின்றி சிரித்தவன், “எது..! மையா..? நானா..? அடியேய்.. என்னை என்னன்னு நினைச்சே..?” என்றிட,
“அய்யே.. நா ஆரம்பத்துல அப்படி உங்கள நினைச்சது உண்மை தான். அத வச்சு தான் உங்கள இன்னும் தீவிரமா நோட்டே பண்ணேன்.
ஆனா நீங்க அப்படி இல்லன்னு பாத்த சில நாள்ல தெரிஞ்சிடுச்சு..” என அலட்சியமாக சொல்ல,
“அடிப்பாவி.. அப்போ நீ.. அதுக்காக தான் என்னை உத்து.. உத்து.. பார்த்துட்டு சுத்துனீயா..?” என்றான் வாயில் கை வைத்து.
“அதான் ஆரம்பத்துலன்னு சொல்றேனே..” என்றவள்,
கோவிலில் அவனை பார்த்ததை சொல்லி, “அடுத்த சில நாள்ல தான் நம்ம ஒரே பக்கம் வேலை பார்க்கறோமுன்னு தெரிஞ்சது.
அப்ப தான் நான் அந்த கம்பெனிக்கு வந்த புதுசும் கூட.. உங்க பேரும் தெரியாது. உங்கள பத்தியும் தெரியாது. யார்கிட்ட போய் நீங்க சோகமா இருந்ததுக்கு காரணம் என்னன்னு எப்படி கேட்க..?
அதுக்காக தான் உங்கள நல்லா பார்க்க ஆரம்பிச்சேன்.
தூரமிருந்து பார்த்தப்ப தெரியாத உங்க கண்.. பக்கத்துல பார்க்க பளிச்சுன்னு தெரிஞ்சது. அப்ப வச்ச பேர் தான், கண்ணழகன்..
இந்த கண்ணை பார்த்து, ‘அவனா நீ..!’ ன்னு ஆராய போய்.. ‘என்னோட, அவனே நீ..’ ன்னு ஆகி போச்சு..” என்றிட,
ஆசையோடு அணைத்துக்கொண்டவன், “இப்போ உன்னோட ஆராய்ச்சி முடிவு என்ன..?” என்றிட,
“ரமணிச்சந்திரன் மேம் கதையில.. ‘மைவிழி மயக்கம்..’ ன்னு ஒரு கதை நா படுச்சிருக்கேன்.
அதுல ஹீரோயின் கண்ணு இப்படி இருக்குமுன்னு படுச்ச நாள்ல இருந்து, ‘நிஜமாவே அப்படி கண்ணு இருக்குமா..?’ ன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.
உங்கள பார்த்த நாள்ல இருந்து.. இது நிஜமா..? இல்ல நீங்க போட்டதா..? ன்னு தொட்டு பார்த்திடனுமுன்னு அத்தனை ஆசை.. இப்ப தான் அதுக்கு வாய்ப்பு கிடச்சது..
ரிசல்ட்.. நீங்க மை போடல..” என குதூகலமாய் அவள் சொல்ல,
சிறு புன்னகையுடன், “அது என் அம்மா கண்ணு.. அது அப்படியே எனக்கு வந்திருக்கு..” என்றான்.
“ஓ..! நா உங்க அம்மாவ பார்த்தது இல்ல தானே..! அதான் தெரியல. உங்க அம்மாவும்.. உங்கள மாதிரி ரொம்ப அழகோ..?” என்றாள் ஆர்வமாய்.
“ம்ம்.. என்னை விட அழகு. ஆனா, அந்த அழகு மொத்தமா போய்.. அவங்கள நான் பார்த்த அந்த கடைசி நிமிஷம்.. என் வாழ்க்கையில எப்பவும் மறக்க முடியாது..” என்றவனின் முகம் அத்தனை வலியை காட்டியது.
அதோடு அவனின் உடலில் ஓடி மறைந்த சிறு நடுக்கம் அவனோடு ஒன்றி இருந்தவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
சிறு பிள்ளையாய் அந்த அகோரத்தை தாங்க முடியாமல் அலறி.. காய்ச்சலில் விழுந்து எழுந்த கணங்கள்.. அவன் நெஞ்சில் அழிக்கவே முடியாத ரணங்கலாய்.. இப்போதும் இருக்கிறதே..
அதன் தாக்கத்தால் தீனா அமைதியாகிட யமுனாவும் காலையில் தீனா.. தன் தந்தையிடம் பேசிய விசயத்தை பற்றி யோசித்து, அமைதியாக இருந்தாள்.
‘அப்போ.. அப்பாகிட்ட இவங்க வேற யாரும் தாலி கட்ட விடமாட்டேன். அதனால போன உயிர் போதும்ன்னு பேசினதுக்கும்,
இப்போ.. இவங்க சொல்றதுக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு..! அது என்னவா இருக்கும்..?’ என்ற தீவிர யோசனையில் இருந்தவள்,
தீனாவின், “என்ன பாப்பா.. அமைதியா இருக்கே..! தூக்கம் வருதா..?” என்ற வார்த்தையில் நினைவுக்கு வந்தவள்,
“இல்லங்க.. ஒரு விசயம் யோசிச்சுட்டு இருந்தேன்..” என்றதும்,
“என்ன யோசனை..? இன்னும் எதாவது ஆராய்ச்சி என்கிட்ட பாக்கியிருக்கா..?” என்றான் கடந்தகால நினைவுகளிலிருந்து மீண்டிருந்த தீனா சிறிதாய் குறும்பு மிளிர.
“அந்த ஆராய்ச்சியெல்லாம் பண்ணற ஐடியா எனக்கு இப்போதைக்கு இல்லப்பா..
நீங்க காலைல அப்பாகிட்ட பேசினதை பத்தி தான் யோசிச்சேன்..” என அவசரமாய் சொன்னவள்,
சொன்ன பிறகே.. ‘அய்யோ.. இப்ப தான் சரியானாங்க.. உனக்கு இது இப்ப அவசியமா..?’ என தனக்கு தானே மானசீகமாக குட்டிக்கொள்ள தோன்றியது.
அவளின் பதிலில் தீனாவிற்கும் காலை முத்தரசனிடம் பேசியது நினைவில் எழ,
“அழகே வடிவான என்னோட அம்மா தன்னை மொத்தமா அகோரமாக்கிட்டு அழிஞ்சு போக காரணம்.. அவங்க வாழ்க்கையில கல்யாணத்துக்கு முன்னாடி வந்து போன கானலான காதலால தான்…” என்றவன் அவனின் தாயை பற்றி சொல்ல தொடங்கினான்.
error: Content is protected !!