Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 18.1

நதி 18
அன்று தன் கண்முன் நடந்தது இன்றும் தான் கண்டது போல லேசான உடல் நடுக்கத்தோடு கீழ் உதட்டை பற்களால் அழுந்த கடித்து அழுகையை அடக்கியபடி அமர்ந்திருந்தான் தீனதயாளன்.


Advertisement

அவனின் உணர்வுகளால் நானும் கண்ணீர் சிந்துகிறேன் என இயற்கை அன்னையும் மழையெனும் விழி நீரை மெல்ல பொழிய தொடங்கியிருந்தாள் வெளியே.
கேட்டுக்கொண்டிருந்த யமுனாவிற்கோ, ‘ஒரு பெண்ணாய் கஸ்தூரியின் மீது பரிதாபம் கொள்வதா..? இல்லை, தன் தயாவிற்காக வருந்துவதா..? இது அத்தனைக்கும் காரணமான ஜெயசீலன் மேல் கொலைவெறி கொள்வதா..?’ என்பதே புரியவில்லை.

Advertisement

Advertisement

‘காதலுச்சு சந்தர்ப்பவசத்தால இன்னொருத்தனுக்கு மனைவியாகியதால நா இழந்தது போதும். அப்படியொரு நிலைமை யமுனாக்கு வேண்டாமுன்னு பிடிவாதமா ஏன் இவரு நின்னாருன்னு இப்ப தானே புரியுது..’ என நினைத்தவள்,
அப்போது தான் அவனின் உடல் நடுக்கத்தையும் கண்ணீர் ததும்ப அவன் இருக்கும் நிலையும் உரைக்க, “தயா….” என்றவள் அவனை தன் நெஞ்சோடு சேர்த்தணைக்க,

Advertisement

அவனுள் இத்தனை நாட்களாய் அடங்கியிருந்த அழுத்தங்கள் யாவும் கண்ணீராய் உருமாறி மொத்தமாய் வெளியேறியது அவனின் கதறலோடு.
அதில் யமுனாவின் விழிகளும் கலங்கிட, விழியிலிருந்து வழிந்த நீர் தீனாவின் உச்சியில் விழுந்து தெரித்தது.
சற்று நேரம் அவனின் மனதை இதுவரை அழுத்திய பாரமெல்லாம் கரையும் வண்ணம் அமைதியாய் அவனை அழ விட்டு தன்னிடமிருந்து அவனின் முகத்தை பிரித்து ஆதூரமாய் அவனின் கன்னம் தாங்கியவள்,
“தயா.. போதும் கண்ணா.. ” என அவனின் விழி நீரை துடைத்து சொல்ல மெல்ல அழுகையை அடக்கினாலும் அவனின் உடலின் நடுக்கம் இன்னும் மிச்சமாய். 
‘மூன்று வயது குழந்தை காணும் காட்சியா அது..?’ என நினைத்தவள் அவனை மீண்டும் அணைக்க, அவளை தன்னோடு இறுக்கமாய் கட்டிக்கொண்டான். 
நேரம் கடக்க சற்று அவனின் உடல் நடுக்கம் மெல்ல குறைய தொடங்கியது.
அப்போது தான் அன்று அவன் தன்னை நடுரோட்டில் அணைத்திருந்த போதும் அவனின் உடல் நடுங்கியது உரைத்தது பெண்ணிற்கு.
கடந்தகாலத்தில் நடந்த விசயத்தின் தாக்கம் இன்று வரை சற்றும் குறையாமல் தொடர்வதை வேதனையோடு உள்வாங்கியவளுக்கு அத்துணை ஆதங்கம்.
அதன் விளைவால் தீனா அன்று இறுதியாய் அவன் தாயிடம் எதிர்பார்த்ததை இன்று தானே முன்வந்து அளித்திருந்தாள்.
ஆதூரமாய் அணைத்து ஆசையாய் அவன் குழல் விலக்கி நெற்றியிலும், பின் அவனின் இரு கன்னத்திலும் முத்தி நிமிர்ந்தவள் கண்டது அவன் விழி தாண்டி வழிந்த ஒற்றைத்துளி கண்ணீர்.
அது தன் செயலுக்கான எதிர்வினையா..? இல்லை அவனின் தாயின் நினைவால் மீண்டும் வந்ததா..? என்ற ஆராய்ச்சியை விடுத்தவள் மெல்ல அவனை திசை மாற்றவென பேச்சை தொடர்ந்தாள்.
“உங்க அம்மா இறந்த விசயம் போலீஸ் கேஸ் ஆகியிருக்குமே.. அப்ப எப்படி இவரு..‌?” என்றவள், ‘எதைக்கேட்கிறாள்..’ என்பதை உணர்ந்தவன்,
“ஜெயில்ல களி திங்காம.. இப்படி சுதந்திரமா உலா வர்றாருன்னு கேட்க வர்றே..?” என்று முடிக்க,
‘ஆமாம்..‌’ என்பதாய் தலையசைத்தாள் யமுனா.
சிறு விரக்தி புன்னகையோடு, “பணம்.. அது இருந்தா எதுவும் சாத்தியம். என்னோட அம்மா இறந்ததுக்கு காரணம் தற்செயலா குளிக்க அடுப்புக்கு தீ போட போகும் போது தவறி விழுந்த மண்ணெண்ணெய் கேனால தீ பிடிச்சதாலையாம். 
அதோட அந்த குளியலறை மேல் கூரை ஓலைப்பின்னல். அதனால தீ அதிகமா பரவி அவங்களால வெளியே வரமுடியாம ஆகிடுச்சு. இது ஒரு எதிர்பாரா விபத்துன்னு கேஸ் முடுச்சிட்டாங்க..” என்றான் விரக்தியாய்.
“அக்கம் பக்கத்து வீட்டுல இருந்தவங்க கூட சாட்சி சொல்லலையா..?” என்றாள் அதிர்ந்து.
“என்ன நினைச்சே இவரப்பத்தி..? இவர் செய்யறது எல்லாம் வெளியே தெரியற மாதிரி செய்வாருன்னா..? 
அம்மாவ அந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலும் ஒரு அடி கூட அவங்கள இவர் அடுச்சது இல்ல. 
ஏன்.. வெளியே கேட்கற அளவு சத்தமா கூட பேச மாட்டார். கூடவே இருந்த எங்களுக்கே.. அப்பா, அம்மா கூட சண்டை போட்டறாரு ன்னு சொன்னா நம்ப மாட்டோம். 
அப்புறம் அக்கம்பக்கம் யாருக்கு சந்தேகம் வரும் சொல்லு..?” என்றான் அதே விரக்தியான பாவனையில்.
“நீங்க பார்த்தீங்களே.. ஐ மீன் வாணி அண்ணி..” என்க,
“அம்மாக்கு என்ன ஆச்சு..? ஏன் அப்படின்னு எங்களுக்கு அப்ப தெரியாதே..!” என்றவனின் மனதில், 
‘ஒருவேளை அப்போது தெரிந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்..?’ என்ற வருத்தமும் எழாமல் இல்லை.
ஏனெனில் மூன்று வயது பாலகனாய் தாயை எப்படி காத்திருப்பான் தந்தையின் பேச்சிலிருந்து..? 
அதிலும் அவர் பேசிய வார்த்தையின் உள் பொருள் உணரும் வயதா அது..?
“அப்போ எப்ப தான் உங்களுக்கு இதெல்லாம் தெரியும். தெரிஞ்ச உடனே எதுவும் சொல்லலையா நீங்க அவர..?” என்றாள் கோபமாய்.
“ம்ம்.. உன்ன மாதிரி தான் கோபம் வந்துச்சு. பேசினேன்.. வீட்டை விட்டும் வெளியே போனேன்..” என்றவனின் வார்த்தையில்,
“அப்போ நீங்க ஸ்கூல் முடிக்கற வரை விசயம் தெரியாதா..?” என்றாள் விழி விரித்து.
“ஊகூம். அதுவரை மத்தவங்க மாதிரி தீ பிடிச்சதுல அம்மா இறந்தாங்கன்னு தான் நினச்சிட்டு இருந்தேன். 
ஒருவேல நாங்க அங்கேயே இருந்திருந்தா இன்னும் முன்னமே தெரிஞ்சிருக்கலாம். அதும் எந்த அளவு சாத்தியம் தெரியல.
அம்மா இறந்து கேஸ்ல இருந்து வெளிய வந்ததும் அந்த வீட்டை வந்த விலைக்கு வித்துட்டு, அப்புச்சியோட சொத்தை எல்லாம் வித்த காசுல போலீஸூக்கு தந்தது போக மிச்சமிருந்ததை வச்சு இந்த ஊருக்கு வீட்டை வாங்கிட்டு வந்துட்டோம்.
அதுக்கு அப்புறம் அந்த ஊர் பக்கமே நாங்க போகல. போற சந்தர்ப்பமும் வாய்க்கல..” என்றவனை பார்த்தவள்,
“எப்படி உங்களுக்கு அப்போ.. அது விபத்து இல்ல. உங்க அப்பாவோட பேச்சால நடந்தது ன்னு தெரிஞ்சுது..?” என்றாள் அறிந்து கொள்ளும் தீவிரத்தோடு.
“வாணியால தான் தெரிய வந்துச்சு..” என்றதும்,
“அண்ணிக்கு அப்போ.. தெரியுமா..?” என்றாள் அதிர்ந்து.
“இல்ல. வாணியால தெரிஞ்சதுன்னா வாணி செஞ்ச வேலையால தெரிஞ்சது. ஆனா அவளுக்கு இப்ப வரை தெரியாது.. தெரிஞ்சா அவ தாங்கமாட்டா..” என்றவனின் வார்த்தை புரியாமல் பார்த்தவளை கண்டு,
“அங்கே வீடு காலி பண்ணும் போது ஸ்கூல் புக்ஸ் எல்லாம் பேக் பண்ணறதுல அம்மாவோட கோலம் போட்டு வச்சிருந்த நோட்டையும் பேக் பண்ணி இங்கே எடுத்துட்டு வந்திருக்கா வாணி. 
இங்கே வந்து அதை முழுசா பார்க்காம, ‘இதெதுக்கு தேவையில்லாதது..’ ன்னு பழைய புக்குங்க கூட சேர்த்து கட்டி தூக்கி பரண்ல போட்டுட்டாங்க.
இயர்லி ஒன்ஸ் பொங்கலுக்கு ஒயிட் வாஷ் பண்ண எல்லாமே இறக்கி ஏத்தினாலும், அந்த வருஷம் வரை அந்த நோட்டை யாரும் பெருசா எடுத்துக்கல. 
எல்லா வருஷமும் மாதிரி நா ப்ளஸ் டூ படிக்கும் போது பொங்கலுக்காக வீட்டை க்ளீன் பண்ண ஆரம்பிச்சோம் அக்காவும் நானும்..” எனும் போதே, 
“உங்க சித்தி கூட  இல்லையா.. அப்போ..?” என யமுனா குறுக்கிட,
“அவங்க கல்யாணம் ஆன நாள்ல இருந்து இந்த மாதிரி வேலைக்கு ஓப்பி அடுச்சிட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க அவங்க வீட்டுக்கு. 
இதுல ஜெகதீஷ் ரெண்டு வயசு குழந்தை. வாணியும் வீட்டுல தானே இருந்தா. அப்புறமும் இருந்து வேலை செய்வாங்களா.. அவங்க..?” என நக்கலாய் சிரித்து சொன்னவன்,
“அன்னைக்கு, நானும் அக்காவும் தான் க்ளின் பண்ணிட்டு இருந்தோம். 
ரொம்ப பழைய பேப்பர்ஸ் எல்லாம் வெளியே அடுப்புல போட கொண்டு போய் வைக்க சொல்லி வாணி சொல்ல, நான் மொத்தமா எடுக்காம டைம் ஓட்ட விளையாட்டா எல்லாத்தையும் கலச்சு போட்டு உட்கார்ந்தேன். 
“என்னடா நீயும் சித்தி பாத்து கத்துக்கிட்டையா.. ஓப்பி அடிக்க..?” ன்னு வாணி கூட கிண்டல் பண்ணா..‌ 
ஆனா அப்படி நா பார்க்காம போயிருந்தா கடைசிவரை விசயம் எனக்கு தெரிஞ்சிருக்காது..” என்றான் பெருமூச்சோடு.
“அதுல எல்லாமே இருந்ததா..?” என்றாள், ‘கடைசி நாளில் நடந்தது இருக்க வாய்ப்பில்லையே..?’ என்ற சந்தேகத்தோடு.
“ஊகூம். அம்மா அந்த பத்திரப்பதிவு நாளுக்கு அப்புறம் அவரோட பேச்சுல ரொம்பவும் குத்தலும் சந்தேகமும் வலுத்து போன பின்னாடி, தன் மனசுல இருந்ததை வேற யார்கிட்டையும் கொட்ட முடியாம அந்த நோட்டுல இருந்தே பேப்பர் எடுத்து.. லெட்டர் மாதிரி தன் வாழ்க்கையில நடந்ததை எல்லாம் எழுதியிருக்காங்க. 
அப்பா தினமும் பேசின சில விசயங்களை மறுநாள்ல அதுல எழுதியிருந்தாங்க. கடைசி நாள் நடந்த விசயம் எதுவும் அதுல இல்ல.
இதுல ஹய்லைட் என்னன்னா என்கையில அது கிடச்சும் அதையும் நா அன்னைக்கு படிக்கல. 
அது அம்மா கையொழுத்துன்னு கோல நோட்ல புள்ளி கணக்கு.. அவங்க எழுதியிருந்ததை வச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
அம்மா தான் கூட இல்ல அம்மா கையொழுத்தாவது கூட இருக்கட்டுமுன்னு அந்த லெட்டரை என்னோட ஸ்கூல் பேக்ல வச்சிட்டு வேலைய பார்க்க போயிட்டேன்.
வேலைய முடுச்சிட்டு வந்தும் அதை நான் எடுத்து படிக்க நினைக்கல. ஒரு கட்டத்துல அதை உள்ளே வச்சதே எனக்கு மறந்திடுச்சு.
பப்ளிக் எக்ஜாம் வேற நெருங்கினதால அதுல கான்சன்ட்ரேட் பண்ணிட்டு இருந்தேன்.
நா +2 எக்ஜாம் எழுதியிருந்த சமயத்துல சித்தியோட சொந்தத்துல ஒரு பங்ஷன்னு சித்தி போக ஜெகதீஷை பார்த்துக்கறதுக்காக வாணியையும் கூட கூட்டிட்டு போயிருந்தாங்க வெளியூருக்கு. 
எனக்கு லீவ்ல பொழுதுபோகாம புக்கெல்லாம் டைம் பாஸூக்காக எடுத்து புரட்டும் போது தான் அது மறுபடியும் என் கண்ணுல பட்டுச்சு. 
ஆரம்பத்தை படுச்சதும் அட கதை எழுதியிருக்காங்க அம்மா ன்னு டைம் பாஸூக்கு ஆச்சுன்னு நினைச்சு தான் அப்ப அதைப்படுச்சேன். முழுசா படுச்சதும் தான் தெரிஞ்சது அது என் அம்மாவோட சோக சரித்திரம் ன்னு.
அன்னைக்கு எனக்கு அவ்வளவு கோபம். என்னால சுத்தமா தாங்கவே முடியல. 
என் அம்மாவ சந்தேகப்பட்டு பேசி சித்ரவதை பண்ணியிருக்கார் ன்னு நினைக்கும் போதே அவ்வளவு ஆத்திரம்.
கோபத்தோடு நா இருந்த நேரத்துல   தண்ணியப்போட்டுட்டு வீட்டுக்கு வந்தாரு. 
நேரா போய் அவர் சட்டைய புடுச்சு சண்டை போட்டேன். 
அப்போ போதையில வாய் தவறி கடைசி நாள் என்னை அவங்க கூட சேர்த்து பேசினதை சொல்லி,
“இப்பவும் நீங்க ரெண்டு பேரும் என்ற ரத்தமான்னு சந்தேகமா தேன் இருக்கு. 
அவ உசுரோட இருந்திருந்தா உன்னோட அவெ எப்படி இருந்திருப்பான்னு நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு. உன்ற மூச்சிய பாக்க பாக்க அதென் கற்பனையா வருது.. 
அதுலையும் உன்ற கண்ணு அத பாக்க பாக்க.. அவள பாக்கற மாறி இருக்கே.. 
நீ அவள நியாபகபடுத்தறப்போ அவ எனக்கு துரோகம் செஞ்சிருப்பாளோ ன்னு உள்ளே உறுத்துது.
நீ என்ற முன்னாடி இருக்கற வர என்றனால அத மறக்கவே முடியாது.. போடா வெளியே..” ன்னு சொல்ல மொத்தமா நொறுங்கி போயிட்டேன்.
அதுலையும் என்னையும்.. அம்மாவையும் சேர்த்து பேசி.. ச்சை.. இவரெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல.. ன்னு அவ்வளவு கோபம். 
அதோட வெளியே போன்னா.. திடீர்ன்னு எங்கே போகன்னு தெரியாம அது வேற ஒரு வித எரிச்சல்.
அதுல அவர அடிக்க கையை ஓங்கிட்டேன். அப்புறம் அதுக்காக கூட அந்தாளை தொட மனசில்லாம வீட்டை விட்டு வெறும் கையோட வெளிய வந்துட்டேன்.
போக்கிடம் இல்லாம அவரோட பேச்சு தந்த எரிச்சல்ல அங்கிருந்து நடந்தே தான் திருப்பூர் வந்து சேர்ந்தேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!