Skip to content
Post Views: 1,736
வேளை 20
லாலாவுக்கு மனத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசிவிடும் குணம்தான். ஆனால் அவன் எப்போதும் அப்படியில்லை. சரோஜினி வீட்டில் திட்டு வாங்கினாலும் அவளுக்குப் பிடித்ததை அவளுக்கு வேண்டியதை, திட்டு வாங்கியாவது நடத்திக்கொள்வாள்.
நடக்காவிட்டாலும் நினைத்ததைக் கேட்ட திருப்தி சரோஜினிக்கு உண்டு. லாலா அப்படியில்லை, தாத்தாவின் செல்லப்பெயரன் அவன். சக்தியுடனான நட்பைக் கூட அவனாக சொன்னதே இல்லை, சரோஜினியின் கணவனிடம் அவன் நன்றாக நடப்பதாகவே வீட்டினர் நினைத்தனர்.
சொன்னால் தாத்தா என்ன நினைப்பார் என்ற பயம். உதயாவுடனான காதலை அவர்கள் ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம்.
Advertisement
எல்லா புகழும் அவர்கள் வீட்டின் காதல் மன்னன் அவன் சித்தப்பா சித்ரஞ்சனையே சேரும். அவர் செய்த தவறினால் கொஞ்சமாக மனம் மாறியிருந்தார் தாத்தா.
தாத்தாவிடம் கெட்டப்பெயர் எடுத்துவிடக் கூடாது என்று சிறு வயதிலிருந்தே அவர்கள் சொல்படி கேட்டு வளர்ந்தவனுக்கு இன்று தனியே வாழ அத்தனை சிரமமாக இருந்தது.
அவனுடைய கனவு அவனுடையதே அல்ல! இப்போது யோசித்துப் பார்த்தால் அவனது பிடித்தமென்ன என்றே தெரியவில்லை. தாத்தாவின் ஆசை என்று ஓடி ஓடி இப்போது நட்ட நடுரோட்டில் எந்த பக்கம் செல்வதென தெரியாத நிலை.
Advertisement
அதுவரை தாத்தா, அப்பா என்ற இருவரும் அவன் வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படி சுழற்றி இன்று அவனுக்கான விருப்பம் தொலைத்து நின்றான் லாலா.
Advertisement
கனவின்றி, நனவின் நிறைவின்றி அவன் அவனாக இன்றி ஒரு நிலை.
இதில் கூடவே உதயா. தலை சுற்றியது லாலாவுக்கு. திருமண வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் இன்னும் சிக்கலாக்கிக் கொண்டிருந்தான். உதயாவிடம் மட்டும் மனத்தில் இருப்பதை அப்படியே கொட்டி, அவளிடம் மிகவும் நல்ல பெயர் எடுத்துக்கொண்டிருந்தான் லாலா.
சக்தியிடம் பேசியதும் லாலாவுக்கு சக்திமான் ஆகிவிட்ட ஒரு தெளிவு. அதே தெளிவோடு உதயாவை இன்று சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
Advertisement
அவனுக்கு வகுப்புகள் முடிந்து வீடு சென்றபோது உதயா வீட்டில் இருந்தாள். இன்று அலுவலகம் செல்லவில்லை என்பதை அவளின் உடைவைத்தே கண்டுகொண்டவன்,
“உதயா, நீ வேலையிருந்தா பாரு. நான் நைட்டுக்கு சமைக்கிறேன்” என்றான்.
“ஹேய்! அப்படி பார்க்காத, யூடூப் பார்த்ததுதான் சமைக்க போறேன். உன் நாவின் சுவை அரும்புகள் எப்படி மலர போகுதுனு மட்டும் வெயிட் பண்ணி சூடு கண்ணா” என்று ஜம்பமாக சொன்னவன், உடை மாற்றி வந்தான்.
உதயா ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். செய்யட்டுமே என்ற எண்ணம். கூடவே மறுத்தாலும் எதாவது பேசுவான். உண்மையில் உதயா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்துகொண்டிருந்தாள்.
லாலா அவன் வீட்டில் இருப்பது போலன்றி இயல்பாக, தன் கோவம், இயலாமை என்று தன்னியல்பை மொத்தமாக உண்மையாக மனைவியிடம் காட்டிக்கொண்டிருக்க, உதயாவோ அதற்கு நேர்மாறாக லாலா இப்படி பேசிவிடுவானோ, அப்படி நினைப்பானோ என்று அவனையும் அவன் நினைப்பையும் நினைத்தே தன்னை தொலைத்தாள்.
ஒருவகையில் அவளுக்கு இந்த அமைதி பழகியதும் கூடத்தானே? சண்டை, சச்சரவின்றி அருகாமையே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். எது பேசினாலும் நீதான் திருமணத்திற்கு அவசரப்பட்டாய் என்பான்.
முட்டிவரை உள்ள ட்ரவுசரும் டீஷர்ட்டும் அணிந்தவன் தரையில் உட்கார்ந்து தீவிரமாக ஏதோ குறிப்பெடுத்தான். பின் நோட்பேட் மட்டும் எடுத்துக்கொண்டு சமையலறை சென்றான்.
உதயா அறைக்குள் உட்கார்ந்து துணி மடித்தாள். லாலா தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்கவிட்டவன்,
‘கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்’ என்று எஸ்.பி.பியோடு இணைந்து மிகவும் மோசமாக கத்தியபடி கத்தியைக் கொண்டு வெங்காயத்தை வெட்டினான்.
இவன் பாடுகிறேன் என்ற பெயரில் பாடலை படுகொலை செய்வது உதயாவுக்குக் கேட்க, வெகுநாட்கள் கழித்து மிகவும் சின்னதாக ஒரு புன்னகை.
என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.
ஒரு மணி நேரம் கழித்து உதயா வந்தபோது, லாலா மிகவும் உன்னிப்பாக கன்னத்தில் கைவைத்து காதலியின் சம்மத்ததிற்குக் காத்திருப்பது போல நின்றான்.
என்னவென்று உதயா அவன் பக்கம் வந்து பார்க்க, வெள்ளையாய் பெரிய உருண்டை. மைதாமாவு என்று புரிந்தது. உதயா வரவும் லாலா உடனே,
“உதயா, உனக்குப் பிடிக்கும்னு பட்டர் நான் செய்ய நினைச்சேன். மாவை பிசைஞ்சு வச்சா ஒன்றரை மணி நேரத்துல உப்பணும்னு போட்டிருந்துச்சு. ஆனா இது உப்பவே இல்லை”
“ஒன்றரை மணி நேரமா?” உதயா கேட்க,
“ஆமா, ஈஸ்ட் போட்டா அவ்வளவு நேரம்தான் போட்டுச்சு”
“ஓஹ், ஈஸ்ட் வாங்கிட்டு வந்தீங்களா?”
“என்ன? அதான் நம்ம வீட்ல.. அப்போ நம்ம வீட்ல இல்லையா?” லாலா விழித்தான்.
“நம்ம வீட்ல ஈஸ்ட் இல்லை. நீங்க வாங்கலயா? அப்போ என்ன போட்டீங்க?”
“ஈஸ்ட்னு நினைச்சு ஒன்னை போட்டேன், ஆனா என்னனு தெரியலயே” என்றவன் அவன் ஈஸ்ட் எடுத்த டப்பாவைக் காட்டினான்.
அதுவரை இறுக்கமாக பார்த்த உதயாவின் முகத்தில் சிரிப்பு.
“அய்யோ அய்யோ! கசகசவ போட்டுட்டு உப்பணும்னா நீங்க காலம் முழுக்க பார்த்தாலும் பட்டர் நான் வராது” என்று சொல்லி சிரித்தாள்.
உதயாவின் அந்த புன்னகை முகம் லாலாவுக்கு அத்தனை மகிழ்ச்சிக் கொடுத்தது.
“இப்போ என்ன பண்றது?” கடினப்பட்டு செய்யத் தொடங்கி இப்படியாகிற்றே என்ற வருத்தம், உதயா பேசுவாளோ என்ற பயம் எல்லாம் கலந்த கலவையாகி நின்றான் லாலா.
சோகமான ராகத்தோடு லாலாலா என்று அவன் காதில் பின்னணி இசை கேட்டது.
“இதை ஒன்னும் பண்ண முடியாது. மாவு பிசைஞ்சு சப்பாத்தி சுட்டுக்கலாம்” என்று உதயா கோதுமை மாவை எடுக்க, லாலாவுக்கு உறுத்தலாக இருந்தது.
“சாரி உதயா, சமைக்கலாம்னு வந்து சொதப்பிட்டேன். மாவு நானே பிசையுறேன்” என்று லாலா சொன்னவிதத்திலே தெரிந்தது அவனுக்கு நிச்சயம் தெரியாது என்று.
மீண்டும் அவன் செய்ய ஆரம்பித்தால் தாமதமாகிவிடும் என்றுணர்ந்த உதயா,
“இல்லை பரவாயில்ல, நான் வேகமா செஞ்சிடுவேன் லாலா” என்றாள்.
“இல்லை, நான் ஆசையா..” என்று லாலா ஆரம்பிக்க, அவன் முகத்தில் ஒட்டியிருந்த மாவும் வியர்வையும் பாவனையும் உதயாவைப் புன்னகைக்க வைத்தது.
“சிரிக்காத உதயா” சின்னக்குரலில் லாலா சொல்ல, உதயாவுக்கு அவன் பேச்சில் இன்னும் சிரிப்பு விரிந்தது.
வாழ்க்கை அந்தந்து நேரத்து நியாயம் என்பார் ஜெயகாந்தன். உண்மையில் வாழ்க்கை அந்தந்த நேரத்தின் ஞாபகங்கள் தானே? உதயாவுக்கு லாலாவின் வார்த்தைகள் எதுவும் அப்போதைக்கு நினைவில் இல்லை. அந்த நொடியில் நின்று வாழ்க்கையை ரசித்தாள்.
அதனால் சிரித்தாள். எல்லாம் சூழ்நிலை கொடுக்கின்ற சுவைதானே?
“இங்க பாரு சிரிச்சா அழகா இருக்கிறதால சிரிச்சிட்டே இருன்னு சொல்ல ஆசைத்தான். ஆனா என்னை கலாய்க்காதடி” என்ற லாலாவுக்கே சிரிப்பு.
“சரி, பட்டர் நான்’ன்னுக்கு என்ன சைட் டிஷ் பண்ணுனீங்க?”
“பன்னீர் பட்டர் மசாலா” என்றான் பெருமையாக.
“நீ வேணும்னா டெஸ்ட் பண்ணி.. ச்சீ டேஸ்ட் பண்ணி பாரு” என்றான்.
“சரி டெஸ்ட் பண்ணி டேஸ்ட் பண்றேன்” உதயா சொல்லியவள் அவன் காட்டிய பாத்திரத்தைப் பார்க்க, வெண்ணெய் மிதக்க மணமாக ஒரு பன்னீர் மசாலா.
ஒரு தேக்கரண்டியை எடுத்து சுவைத்துப் பார்க்க உண்மையில் லாலா நன்றாக செய்திருந்தான். உதயாவின் கண்கள் அவனைப் பாராட்டாக பார்க்க, அவளின் இதழும் பேசியது.
“ஹோட்டல்ல செய்ற மாதிரியே இருக்கு லாலா. இப்போதான் ஃப்ர்ஸ்ட் டைம் செய்றீங்களா?” என்று கேட்க,
“பின்ன? உதயாவுக்காக ஸ்பெஷலா செஞ்சது.. இதுக்கு முன்னாடி நான் கிச்சனுக்குப் போனதே இல்லையே” என்றான் பெருமையாக.
“ஏன் வழி தெரியாதா?” என்று அவனை வம்பிழுத்த உதயா,
“சரி நகருங்க, இதெல்லாம் சுத்தம் பண்ணுங்க. நான் சப்பாத்தி பண்ணிடுறேன், அதுக்கும் நல்லாத்தான் இருக்கும்”
“அதில்ல.. உனக்கு பட்டர் நான் பிடிக்குமே” லாலாவின் குரலில் வருத்தமிருந்தது.
“சமையக்கட்டுல காலே படாத லாலா எனக்காக பன்னீர் செஞ்சதே எனக்கு சந்தோஷம். இன்னொரு நாள் செஞ்சுக் கொடுங்க. எனக்குப் பிடிக்கும்னு உங்களுக்கு ஞாபகமிருக்கே, அதுவே போதும் எனக்கு” என்ற உதயா சப்பாத்தி சுடும் வேலையில் இறங்க, அன்றிரவு உணவுண்ணும் வேளை இயல்பான பேச்சோடு இனிதே நடந்தது.
உணவுண்ட பின் உதயா எல்லாம் எடுத்து வைத்து உறங்க சென்றுவிட, லாலா பூனை போல நடு வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
அவன் நடையின் வேகம் கூட, அறையிலிருந்து எட்டிப்பார்த்த உதயா,
“என்னாச்சு லாலா? நடந்துட்டே இருக்கீங்க?” என்று கேட்க,
“ஒன்னுமில்ல, கொஞ்சம் நிறைய சாப்பிட்டேன். அதான் வாக்கிங்” என்று சொல்ல, அதை நம்பிய உதயாவும் படுத்துவிட்டாள்.
லாலாவுக்குப் புஸ்ஸென்றது. அவன் வேகமாக நடந்ததே உதயாவின் கவனம் பெறத்தான். அவளோ, ‘நடக்கிறியா, நட’ என்பது போல படுத்துவிட வாய்க்குள் அவளை வறுத்தெடுத்தான்.
அவனாக சென்று படுத்தால் அடிப்பாளா, திட்டுவாளா என்று அரைமணி நேரம் யோசனைக்குப் பிறகு, வெட்கம், மானம், இத்யாதி எல்லாம் விட்டு அவளருகே சென்று படுத்தான்.
“லைட் ஆஃப் பண்ணியாச்சா?” என்று உதயாவின் கேள்வியில் லாலா தடுமாறினான்.
திட்டுவாள், விலகிப்படுப்பாள், இல்லை ஏன் என்றாவது கேட்பாள் என்று அவனே அவனுக்குள் இத்தனை நேரம் நேர்காணல் நடத்தி வந்திருக்க, உதயாவோ அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் கடந்திருக்க, லாலாவுக்குள் என்னவோ செய்தது.
கண்கள் வேர்த்திடுமோ என்ற பயம். அதில் பேசாமல் இருக்க,
“லாலா.. ஹால்ல லைட் ஆஃப் பண்ணியாச்சா?” என்று உதயா மீண்டும் கேட்க, லாலா அதற்குப் பதில் சொல்லவில்லை.
மாறாக மனைவியை இறுக்கமாக அணைத்திருந்தான்.
“சாரி உதயா, ரொம்ப ரொம்ப சாரி” என்றபோது அவன் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று இறங்கி, உதயாவின் கன்னத்தை ஈரமாக முத்தமிட்டது.
லாலா அவனின் ஈகோவை, பாதுகாப்பின்மையை, தனியே சுமந்திருந்த அச்சங்கள் அத்தனையும் கண்ணீராக அவளிடம் கரைத்தான்.
இதற்குத்தான் அழுகிறான் என்று காரணமே இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு அழுகை. அதுவும் உதயாவைப் பிரியாமல், இறுக்கமாக அணைத்து.
பத்து நிமிடம் சத்தமின்றி கரைந்தவனை, உதயாவின் கரங்கள் பிரியமாக கேள்விகள் இன்றி அணைத்து அரவணைத்தன.
பின் ஒன்றுமே நடவாதது போல,
“லைட் ஆஃப் பண்ணியாச்சு உதயா, குட் நைட்” என்றான்.
உதயாவின் இதழ்களில் சிறிய புன்னகை. அது லாலா அழுததால் இல்லை. தன்னிடம் அவன் கண்ணீர் காட்டுமளவு நெருக்கமாக இருக்கிறான் என்ற உணர்வின் மிகுதியால். அந்த உணர்வு கொடுத்த உற்றிடத்தால்(intimacy).
“ஏன் லாலா என்னாச்சு?” என்று உதயா மெல்லிய குரலில் கேட்க,
“ஒன்னுமில்ல” என்றான்.
அவனாக சொல்லட்டும் என்று உதயாவும், “சரி ஒன்னுமில்லை. எதுனாலும் நான் எப்பவும் இருப்பேன். இப்போ தூங்குங்க” என்றாள். எதாவது தேர்வில் தோல்வியோ, அதை சொல்லத் தயங்குகிறானோ என்று நினைத்து உதயா கேள்விகள் கேட்கவில்லை.
ஆனால் லாலா பதில் சொன்னான். அந்த பதில்களால் உதயாவிற்கு இன்னும் லாலாவைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த புரிதல், இன்னும் இன்னும் காதல் கொடுக்க, அக்காதலே லாலாவைக் காயப்படுத்தியது.
error: Content is protected !!