49-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,163
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 49.2
.
அடுத்த ஏழு மணி நேரம் கௌதமன் கரத்தில் கார் அலுங்காது குலுங்காது சென்னையை நோக்கிப் பயணித்தது. பின் இருக்கையில், குழந்தை அவளின் பேபி சீட்டில் அமர்ந்திருக்க, ஜீவனுக்குக் குட்டி மகளைத் தனித்துவிட மனமில்லாது பின்னிருக்கையில் யாழியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
Advertisement
தூக்கமும் விழிப்புமாக வந்த குழந்தை விழித்திருந்த நேரம் எல்லாம் அவள் பேச்சில், தாத்தா, பே ஸ்கூல், மலல் ஆந்தி எனப் பலர் எட்டிப் பார்த்தாலும், நிமிடத்திற்கு ஒருமுறை எட்டிப் பார்த்த அச்சோ அம்மாவைப் பற்றி வண்டி வண்டியாகக் கதை அளந்தாள். கேட்டுக் கொண்டிருந்த ராஜீவனுக்கு என்ன புரிந்ததோ, அவனுக்குத் தான் வெளிச்சம்.
Advertisement
“பிக்கி மாமா பிலாணி ஊத்துவாங்க. லீவன் மாமாக்கும் பிலியாணி தலுவாங்க. சளியா? ஐஷ் கீம் நேணுமா? நலைய கலல்ல வாங்கி தாலுவாங்க” என ஏதேதோ கதை அளந்தாள்.
Advertisement
ஆக… அந்த விக்ரம், குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து அவளுள் ஆழப் புதைந்திருக்கிறான் என்பது புரிந்தது.
வீர் இருந்திருந்தால்… இந்நேரம் அவனுக்கும் குழந்தை பிறந்திருக்கும். அவன் மகளும் இப்படித் தன்னை ‘லீவன் மாமா’ எனக் கொண்டாடித் தீர்த்திருப்பாள் என மனம் தவித்து நின்றது.
Advertisement
யாழிக்கு வாய் ஓயவில்லை. ஜீவனும் சலிக்காது ‘ம்ம்’ கொட்டி, “உன்ன மாதிரியே எங்க வீட்டுலயும் ஆத்விக்ன்னு ஒரு குட்டி பையன் இருக்கான்.” என அவன் வீட்டுக் கதையையும் குட்டி மகளுக்குக் கூறி வந்தான்.
பயணத்தின் முடிவில், “தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோஸ் லௌண்ட் அண்ட் லௌண்ட்” என ராஜீவன் படிப்பித்த ரைம்சை அழகாக படினாள்.
ராஜீவனோடு அவன் வீட்டில் வந்திறங்கினான் கௌதமன். முன்பே கௌதமன் பணத்தில் புரளுபவன் எனத் தெரியும். அவனும் பணக்கார வர்க்கம் என்றாலும், இப்படி ஓர் ஆடம்பரத்தை எதிர்பார்க்கவில்லை ஜீவன்.
மகன் மற்றும் பேத்திக்காக வாசுதேவனும் வழி மீது விழி வைத்துக் காத்திருந்தார்.
“தாத்தா” என ஓடி வந்த குழந்தையை ஆசையாகத் தூக்கி எடுத்து உச்சி முகர்ந்தார் வாசுதேவன். சென்னையிலிருந்து கிளம்பியபின் இது இரண்டாவது முறை வீட்டிற்கு வருவது. குழந்தையின் பிறந்த நாளுக்கு வந்தே ஆகவேண்டும் என வைஷாலி பிடிவாதமாகக் கூறிவிட்டிருந்தார். தாத்தா பாட்டி என்ற உறவு யாழிக்கு வேண்டும் என நினைத்தவனும் ஏதும் கூறாது கிளம்பி வந்திருந்தான்.
“லீவன் மாமா, பேபிக்கு நியூ லைம்ஸ் சொல்லி தந்தாங்க. பாலவா?” எனக் கேட்டு, “தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோஸ் லௌண்ட் அண்ட் லௌண்ட்” எனக் கரத்தை ஆட்டி ஆட்டிப் பாடிக் கொண்டே அவர்களது அறைக்கு ஓடினாள் யாழி.
முகமன் முடிந்தது. விருந்து முடிந்ததும், “நைட் இங்கயே இருந்துட்டு, நாளைக்கு போயேன்” என்றான் கௌதமன்.
ஏதோ ஒரு நிறைவு அவனுள். மீண்டுமாக ஒரு நட்பினுள் நுழைவான் என நினைத்தும் பார்க்கவில்லை ஜீவன். அதுவும் விக்ரமின் தோழனான கௌதமனோடு நட்பு என்பதெல்லாம் அவன் கனவிலும் நினைக்காத ஒன்று. ஆனால் இன்று? தொலைத்த உயிர்த் தோழனின் அதே நட்பை இவனிடமே உணர்வது என்பதெல்லாம்… எந்தக் கணக்கில் சேர்ப்பது?
“மிட் நைட் ஆனாலும் ‘உனக்காக காத்திருப்பேன்’னு அக்காவும், அக்கா மகனும் காத்திருப்பாங்க. கிளம்பறேன் டா” என மகிழ்ச்சியோடே கிளம்பினான் ஜீவன்.
அன்றைய இரவு மகள் தன் அச்சோ அம்மாவிடம் “லைம்ஸ் பாலவா?” எனக் கேட்டு ராஜீவன் கற்றுக் கொடுத்த சிறுவர் பாடலைப் பாடி காட்டினாள். “லீவன் மாமாக்கு நலைய லைம்ஸ்… நலைய கத தெலியும்” என ராஜீவனின் பெருமைகளைப் பாடினாள்.
“லீவன் மாமா பிக் டைனாசர் பாத்து வந்தாங்க. அது எலிபன்ட் விட பிக் தெலியுமா அம்மா? பிக் மம்மி டைனாசர் பேபி டைனாசர் கூலவே இந்துச்சாம்” என அவன் அளந்துவிட்டதை இவளாகவே பார்த்தது போல் கூறினாள்.
“அப்படியா?” என அன்னையும் விழி விரித்து மகளின் உலகினுள் சஞ்சரித்தாள்.
“அம்மா எப்போ பேபிட்ட இலுப்பீங்க?” கேட்ட குட்டி மகளின் முகத்தில் ஏக்கம் வழிந்தோடியது.
மகளின் வாடிய முகம் காண சகியாதவளாய், “நாளைக்கு” என்றாள்.
“அம்மா இந்த பெட் லொம்ப பெலுசு… தெலியுதா? திரி பேர் தூணலாம்” எனத் தன் பொம்மைகளை எல்லாம் எடுத்து ஓரம் வைத்து அன்னையை அழைத்தாள் அவளோடு உறங்க.
யசோ பேச்சற்று பார்த்தாள். ‘அப்பாவும் மகளுமாக என்னை என்ன செய்யப் பார்க்கிறீர்கள்?’ என மனம் கலங்கி, எரிமலையாக வெடித்துச் சிதறத் தயாரானது.
“அப்பாக்கு யாழி பேபி இல்லாம தூங்க முடியாது. அதே மாதிரி தானே அரவிந்தன் தாத்தாக்கும்? அவங்களுக்கும் அவங்க பொண்ணு இல்லாட்டா பயமா இருக்கும் பேபி” என ஏதேதோ கூறி, “அம்மா சீக்கிரம் நம்ம கூடவே வந்து இருப்பாங்க” என மகளை உறங்க வைக்க முயன்றான்.
“கண்ணு வலிது அம்மா” எனக் கண்களைக் கசக்கிய குழந்தை, தூக்கக் கலக்கத்தில், “லீவன் மாமா மாடிரி அம்மா நேனுக்கு கத சொல்லுங்க. பேபிக்கு அம்மா நேணும். அம்மா, அப்பா, பேபி ஒலே பெட்ல தூணலாம்” எனத் தூக்கக் கலக்கத்தோடே மிழற்றிய குழந்தை ஒருகட்டத்தில் அவள் அப்பாவின் மார்பில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.
மகள் உறங்கியிருக்க, பெரியவர்கள் இருவருக்கும் அடுத்த என்ன பேசுவதெனத் தெரியவில்லை. இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.
“கச்சேரி நல்லா போச்சா?” எனக் கேட்டு வைத்தான்.
“ம்ம்” என்றாள்.
“ஒரு நாள் நீ வாசிக்கிறத கேட்கணும்” என்றான்.
“யூ டியூப்ல இருக்கு. லிங்க் தரேன்” என்றாள்.
“ஏன் எனக்காக வாசிக்க மாட்டியா?” சட்டென கேட்டுவிட்டான். கேட்டதற்காக மனதார தன் தலையை அடித்துக் கொண்டான்.
அவளிடம் அதற்குப் பதில் இல்லை. கௌதமனின் மாற்றம் புரிகிறது யசோவிற்கு. அவளின் மாற்றமும் புரிகிறது. அவன் விருப்பம் யசோவாக இருக்க, அவள் விருப்பம் யாழி என்றால் அவனுக்குப் புரியுமா எனத் தெரியவில்லை.
தூங்கிக் கொண்டிருக்கும் மகளை யசோவின் கண்கள் வாஞ்சையோடு தழுவுவதை அமைதியாகப் பார்த்திருந்தான் கௌதமன். யசோவின் கண்கள் உயர்ந்து கோதமன் விழிகளைச் சந்தித்தன.
“தூங்கிட்டாளா?” எனக் கேட்டாள் யசோ.
“ம்ம்ம்” என்றவன், “என் ஃப்ரெண்ட் எங்க கூட வந்தான். வழி எல்லாம் அவன் கூட பேசி பேசியே என் பொண்ணு டையர்ட் ஆகிட்டா” என மகளின் தலை கோதி புன்னகைத்தான்.
“வழி பூரா, அம்மா அம்மான்னு உன்னப் பத்தி நிறைய பேசினா, யசோ” என்றான் மகளிடமிருந்து விழியை உயர்த்தாது. “ம்ம்” என்ற யசோவின் தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
“வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்துல ‘அம்மா வேணும்’ன்னு கேட்டா” என்றான்.
‘நான் அவள் அம்மா தானே. நீயாக எங்களைப் பிரிக்காதது வரை அவளுக்கு நான் மட்டுமே அம்மா’ என யசோ மௌன மொழி பேசினாள். யசோவின் மௌனம் கௌதமனுக்கு புரியவில்லை.
ஒரு குழந்தையின் தகப்பன் மீது யசோவிற்கும் பிடித்தம் இல்லை போலும் என நினைத்தவன், “நாலு நாளுக்கு ஷூட்டிங் இல்ல… சோ, நாங்க வர நாலு நாள் ஆகும். அப்பா சொன்னாங்களா?” எனப் பேச்சின் கோணத்தை மாற்றினான்.
இம்முறை ‘ம்ம்ம்’ வரவே இல்லை. ‘நான்கு நாள்கள் மகளைப் பார்க்காது எப்படி?’ கோபமும் இயலாமையும் யசோவை சோகத்தில் தள்ளியது. அப்பாவின் மீது சாய்ந்து உறங்கியிருந்த மகள் அசைந்தாள்.
‘பேபிய ஒழுங்கா படுக்க வைங்க’ எனக் கூற யசோவின் நா பரபரத்தது. ஆனால் அவன் படுக்க வைத்த மறுநொடி அழைப்பு துண்டிக்கப் படுமே. அதனால், எழுந்த சொற்றொடரை விழுங்கினாள் யசோதரா. கௌதமனின் விழி மகளின் மீது இருக்க, இவளின் அவஸ்தை அவனுக்குப் புரியவில்லை.
மகளை மடியில் கிடத்தியவன் விரல்கள் கலைந்திருந்த குழந்தையின் கேசத்தைச் சீர் செய்தன. விழி உயர்த்திய கௌதமன், “எங்களால உனக்கு ரொம்ப கஷ்டமில்ல? இன்னும் ஒரு மாசத்துல ஷூட் முடிஞ்சுடும். அப்பறம் இங்க, சென்னைல இருக்க எங்க ஸ்டுடியோவுல தான் வேலை இருக்கும். உனக்கு எங்க கிட்ட இருந்து விடுதலை கிடைச்சுடும்.” என முயன்று புன்னகைக்க, யசோவிற்குப் புன்னகை போன இடம் தெரியவில்லை.
நான்கு நாள்களை மகள் இல்லாது எப்படிக் கடத்துவது என அவள் சிந்திக்க, அவனோ நிரந்தரப் பிரிவைப் பற்றிக் கூறுகிறான். யசோவினுள் துக்கப் பந்து ஒன்று உருவாகி, வயிறு, நெஞ்சாங்கூடு, தொண்டை எனப் பயணித்து அனைத்து இடங்களிலும் வலியை ஏற்படுத்தியது.
“உன்னைக் கல்யாணம்… ம்கும்… உனக்கு நல்ல வரன் அமையற மாதிரி இருக்காமே… ஐயா சொன்னாங்க. உன் கல்யாணம் முடிஞ்சதும் ஆப்பரேஷன் பண்ணிக்கிறேன்னு சொல்றாங்க.” என்றவனைப் பார்த்தவள் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கௌதமன் பார்த்திருக்கலாம்.
‘எனக்கு உன்னைப் பிடிக்கும்’ எனக் கூறுவாளா என யசோவின் முகம் பார்க்க, அவள் அவன் நினைத்ததை வார்த்தையிலாவது பார்வையிலாவது உணர்த்துவாள் என்ற அவன் நூழிலை ஆசையும் நிராசையானது.
“நீ… நீ இல்லாம என் பேபி ரொம்ப ஏங்கி போயிடுவா யசோ. உன்ன பிரிஞ்சு… ம்கும்… நாங்க…” ஆரம்பித்த வரியை முடிக்கத் தெரியாது கௌதமன் தவித்தான். அவன் தவிப்பைக் கடத்த ஏனோ வார்த்தைகள் தேவைப்படவில்லை. யசோவின் உதடுகள் துடித்தது யாருக்காக?
மடியில் இருந்த குழந்தையை உயர்த்தி நெற்றியில் இதழ் பதித்தவனுள் ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு. இதயம் வலிக்கிறது. இது என்ன உணர்வு என அவனுக்குப் புரிகிறது. ஆனால் ஏன் அவளுக்குப் புரியவில்லை? வார்த்தைகள் கூறாத சங்கதிகளை அவன் உணர்த்தினானே… ஏன் புரியாதது போலவே அமர்ந்திருக்கிறாள்?
நேரில் பார்த்து, மணிக் கணக்காகப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து, இரண்டு வருடமாகக் காதலித்த தாக்ஷாவின் பிரிவு கூட இப்படி ஒரு வலியைக் கொடுக்கவில்லை கௌதமனுக்கு.
‘மூன்று வருடங்களாக முகம் தெரியாது, கனவில் மட்டுமே காதல் புரிந்த இவள் ஏன் அணு வரைக்கும் வலிக்கச் செய்கிறாள்?’ எனக் கௌதமனுக்கு சத்தியமாகப் புரியவில்லை.
காதல், குடும்பம் எல்லாம் வேண்டாத ஆணிகளாக நினைத்த கௌதமன், தன் குடும்பத்தோடு யசோவையும் இணைத்துக் கொள்ள ஏன் ஏங்கித் தவிக்கிறான்?
“குட் நைட் யசோ” என்றவன் திரையிலிருந்து மறைந்த பின்னும் யசோ கைப்பேசியைப் பார்த்தே அமர்ந்திருந்தாள்.
ஒரு முறை செத்து, மான்வி கொடுத்த ‘ஆத்விக்’ எனும் மூச்சுக் காற்றால் உயிர் பிழைத்த யசோவின், ‘கல்து வலிதா அம்மா?’ என முத்தம் பெற்று மோட்சம் பெற்ற தொண்டை அழுத்திப் பிடித்து வலித்தால், அவளும் எப்படிக் கௌதமனிடம் ‘குட் நைட்’ உரைப்பாள்?