Skip to content
Post Views: 4,813
“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
மு.வ உரை:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.”
காலையிலேயே விழிப்பு வந்த செங்காந்தள் எழுந்து வெளியே வர வீடே அமைதியாய் இருந்தது.
Advertisement
யாருமில்லை என்றதில் அவளே வாசல் தெளித்து கோலமிட்டு தனக்கான காபியோடு வந்து பின்கட்டுப் படியில் அமர்ந்தாள்.
மனம் மொத்தமும் கணவனின் எண்ணம் தான். அழைத்து பேசுவதற்கு தயக்கம்.
அமைதியாய் இருந்த அந்த இடத்தை நிறைத்தது அவளின் கைப்பேசியின் அழைப்பு. அவசரமாய் எடுத்துப் பார்த்தவளுக்கு கணவனின் எண்ணைக் கண்டதும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. வேகமாய் அழைப்பை ஏற்றவள்,
Advertisement
“மாமா.”, அந்த ஒற்றை வார்த்தை ஏதேதோ செய்தது ருத்ரேஸ்வரனுக்கு.
Advertisement
குரலின் ஏக்கமோ தவிப்போ அன்போ ஏதோ ஒன்று அவனின் வார்த்தைகளைத் தடுத்திருந்தது.
“ஹலோ மாமா..”
“ஆங்.. சும்மா.. சும்மா தான் பண்ணேன். பாப்பா நல்லாயிருக்காளா? நேரத்துக்கு தூங்கினாளா?”
Advertisement
“ம்ம் ஒரே விளையாட்டு அதனால அசதியில் சீக்கிரமே தூங்கிட்டா.”
“..”
“நீங்க.. நீங்க நேத்து ஒழுங்கா சாப்பிட்டீகளா? நான் வேணா வந்துரட்டுமா?”
“அதெல்லாம் சாப்பிட்டேன். நீ ஏன் இம்புட்டு சீக்கிரமே எந்திரிச்சுட்ட?”, இத்தனை காலையில் தான் அழைத்ததை மறந்தவனாய் மனைவியிடம் இப்படி ஒரு கேள்வி.
“நம்ம வீட்ல எந்திரிச்சு பழக்கமாகி போச்சு அதேன்.”
“சரி நான் வைச்சுடுதேன். அப்பறமா பாப்பாவை பேசச் சொல்லு.”, என்றதற்கு பதிலளித்த செங்காந்தள் அழைப்பைத் துண்டித்திருக்க போர்வையை கூட மடித்து வைக்காமல் தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்தவன் கைப்பேசியைப் பார்த்திருந்தான்.
மனைவி வந்துவிடவா என்றதில் மனதின் ஓரம் சிறு மகிழ்ச்சி எட்டிப் பார்ப்பதை அவனும் உணர்ந்தான்.
ஒரு பொருளின் அருமை இரண்டு சூழ்நிலைகளில் தான் நமக்குத் தெரிய வரும் என்றொரு கருத்துண்டு.
ஒன்று அது நமக்கு கிடைக்காத போது மற்றொன்று நம் கையை விட்டு விலகிச் சென்ற போது. இதில் இரண்டாவது நிலையில் தான் செங்காந்தள் என்பவளின் தாக்கம் தன் வாழ்க்கையில் எத்துணை அதிகம் என்பது ருத்ரேஸ்வரனுக்குப் புரிந்தது.
கணவனிடம் பேசியதில் மிக மெலிதான புன்னகையோடு அங்கிருந்து செங்காந்தள் எழுந்த நேரம் அண்ணன் மனைவி காந்திமதி வந்திருந்தாள்.
“என்ன செங்கா சீக்கிரமே எந்திரிச்சுட்ட போல?”
“ஆமா மதினி தூக்கம் வரலை.”
“ம்ம் அங்கே ஒரு வீட்டு வேலையையும் ஒண்ணா பார்க்குறவளாச்சே அந்த பழக்கம்தேன். ஆமா உன் புருசன்கிட்ட மாத்தம் ஏதும் உண்டா? இல்ல அதே கதை தானா?”
“என்ன மாத்தம் இருக்கணும்?”
“இல்ல உங்க இரண்டு பேருக்குள்ளே எதுவும் சரியாகியிருக்கானு கேட்கேன்?”
“எங்களுக்குள்ளே என்ன இருக்குனு எங்களுக்குத் தெரியும் மதினி. இப்படியெல்லாம் இனி பேசாதீக.”
“அடியாத்தி ஏதோ நல்லெண்ணத்தில் கேட்டா இப்படி வெடுக்குனு பேசுதியே செங்கா. ஊரறிஞ்ச கதை தானே உங்களோடது. நல்லாயிருந்தா சரி.”, என்றவளுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து வெளியேறியிருந்தாள் செங்காந்தள்.
சொந்தங்களில் இது போன்ற சில பேச்சுகள் இத்தனை வருடங்களில் செங்காந்தள் பழக்கப்பட்டது தான் எனினும் அந்த நேரத்து மன உளைச்சலை அவளால் தவிர்க்க முடிவதில்லை.
அதன் பின் வெகு நேரத்துக்கு அறையை விட்டு வெளியில் வராதவள் குழந்தை எழுந்த பின்பே அவளோடு வெளியே வந்திருந்தாள்.
காலை உணவிற்கு பின் தாயோடு அமர்ந்து பேசிய படி மதியத்திற்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
“செங்கா..”
“ம்ம்?”
“எப்படி டி இருக்க?”
“எனக்கென்ன நல்லாதேன் இருக்கேன்.”
“மாப்பிள்ளைக்கு கொஞ்சமாவது மனசு மாறிருக்கா? உன்னோட சந்தோசமா வாழுறாரா?”
“ம்மா மககிட்ட பேசுற பேச்சா இது?”
“என்னை என்ன டி பண்ண சொல்ற? உன் வாழ்க்கையை நினைச்சு சாமிட்ட கதறாத நாளு இல்ல.
அருமை பெருமையா வளர்த்து அவ வாழ்க்கை சந்தோசமா இல்லனு தெரியும் போது பெத்த வயிறு பத்தி எரியுது.
அந்த மனுசனுக்கு எப்போ தான் மனசு மாறுமோ. உன் வாழ்க்கைக்கு எப்போ விடிவு பிறக்குமோ?!”
“ம்மா பண்ண தப்பெல்லாம் பெரியவுக நீங்க பண்ணிட்டு எப்போ பார்த்தாலும் அவங்களை குத்தம் சொல்லித் திரியுறீக.”
“..”
“பிடிக்கைலைனு சொன்ன பிறவு இந்த கல்யாணத்தை ஏன் நடத்தினீக? எந்த தலைமுறையோ என்னத்தையோ வாக்கு கொடுத்தேன் வாழை மட்டை கொடுத்தேன்னு இன்னைக்கு அவுகளை வாழ விடாம பண்ணிட்டீங்க.”
“என்ன டி இப்படி சொல்லுத?!”
“அதானம்மா உண்மை. நீயே சொல்லு பிடிக்காத கல்யாணம்னு வேற எவனாவதா இருந்தா என்னென்ன பண்ணியிருப்பான்?”
“ஒண்ணுமில்ல இந்நேரத்துக்கு எனக்கு சக்களத்தி இருந்துருக்கும். எதிர்த்து யாரு கேட்க முடியும்?”
“செங்கா!!”
“என்னை பேச வைக்காதீக சொல்லிட்டேன். ஏதோ குடிகாரனையும் கடனாளியையும் கல்யாணம் பண்ண மாதிரி துக்கம் விசாரிச்சிட்டே இருக்கீக.
ஊருக்கு எப்படியோ எனக்கு எம்புருசன் மகராசன் தேன்.
ராணியாட்டம் வாழுறேன்.
தங்கமா ஒரு பிள்ளையையும் பெத்துருக்கேன். சும்மா சும்மா நல்லாயிருக்கியா திருந்துனாரானு வாயை தூக்கிட்டு வராதீக சொல்லிட்டேன்.”, என்றவள் உள்ளே நின்ற அண்ணன் மனைவிக்கும் சேர்த்துக் கூறுவதாய் கூறி விட்டு எழுந்துச் சென்றிருக்க இங்கு தீப்தியோடு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ருத்ரேஸ்வரனும் அனைத்தையும் கேட்டிருந்தான்.
ஆண் என்பவனுக்கு எப்போதுமே எதுக்குமே பதில் கூற வேண்டிய அவசியங்கள் வருவதில்லை.
அதிலும் பிரச்சனை அவனிடத்திலேயே இருந்தாலும் யாரும் கேள்வி கேட்பதற்கே துணிவதில்லை.
பாவப்பட்ட பிறவி பெண் சாதி தான். அவள் சரியில்லை என்றாலும் அவளைத் தான் பழிக்கும் அவளது கணவன் சரியில்லை என்றாலும் அவளைத் தான் பழிக்கும்.
அங்கு காந்திமதியோ மதிய உணவிற்கு வந்த கணவனிடம்,
“அடேய்யப்பா என்ன பேச்சுங்கிறீக. கண்டும் காணாம இருக்குற புருசனுக்கே உங்க தங்கச்சி இந்தப் பேச்சு பேசுதா. இதில் நல்லா எல்லாம் வாழ வைச்சுட்டா. அம்புட்டுதேன்.”
“ஏய் ஏன்டி அவளை வாயில் போட்டு மென்னு துப்புத.”
“ஏன் சொல்ல மாட்டீக. நானே பக்கு பக்குனு பயந்து கிடக்கேன். என்னைக்கு பொட்டியும் கையுமா வந்து நிக்க போறாளோனு. இந்த தடவையே ஒரு வாரம் இருக்க போறானு சொன்னதும் அரண்டு போய் இருக்கேன்.
பொட்ட புள்ளையை வேற வைச்சுருக்கா காலத்துக்கும் யாரு உட்காந்து பாடு பாக்க?”
“உன் கற்பனையை நிறுத்திட்டு குழம்பை ஊத்து..”
“அதானே இங்கேருங்க உங்க நல்லதுக்குதேன் சொல்றேன் பார்த்து சூதானமா இருந்துகிடுங்க.
உங்க அம்மை ஒரு ஆள் போதும். மொத்தத்தையும் தூக்கி உங்க தலையில வைக்க“
வந்த ஒரு நாளிலேயே ஏன் வந்தோம் என்று யோசிக்கும் படி ஆகிவிட்டது செங்காந்தளுக்கு.
அதை விட கணவனின் அருகாமையையும் ஆறுதலையும் தேடும் மனம் வெகுவாய் சோர்ந்து போய் அழத் தயாராய் இருந்தது.
அன்றைய தினத்தை நெட்டித் தள்ளியவள் மறுநாள் ஏதாவது கூறிவிட்டு கிளம்பி விடலாமா என்று யோசித்த படி இருக்க கணவனே வந்து கூட்டிச் செல்வதாய் கூறியிருந்தானே அப்படியிருக்க நாமாய் சென்றால் நன்றாக இருக்காது என்று தன்னைத் தானே குழப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மதிய உணவு நேரத்தில் மனதின் ஆற்றாமையைக் காட்ட முடியாமல் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தவளுக்கு சற்று தூரத்தில் கேட்ட வண்டி சத்தத்தில் மனமெல்லாம் ஒருவித பரவசத்தோடு திரும்பிப் பார்க்க அவளது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவளின் கணவன் தான் வந்து கொண்டிருந்தான்.
வேகமாய் எழுந்தவள் கீழ் படியைத் தாண்டி வந்து நிற்க அவளது முகத்தில் இருந்து விழியகற்றாதவனாய் வண்டியை ஓட்டி வந்தவன் அவள் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நின்றான்.
“மாமா.. வாங்க..”, என்றவளின் அத்தனை நேர ஒளியிழந்த கண்களுக்கு உயிர் வந்திருந்ததைப் போல் இருந்தது. வேகமாய் உள்ளே சென்று அவனுக்காக நாற்காலி எடுத்துப் போட்டு மாடியில் டீவி பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கு குரல் கொடுத்தாள்.
“வாங்க மாப்பிள்ள..”, என்ற பள்ளிகொண்டான் தங்கை கணவனை வரவேற்று அவனோடு அமர்ந்தான்.
மாமனாரும் வந்து விட மனைவியையே பார்த்திருந்தவனாய்,
“காந்தாவையும் தீப்தியையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.”, என்றதில் அந்த விழிகள் காட்டும் உணர்வுகளை முதன்முறையாய் படிக்க முயன்றான்.
“வந்து இரண்டு நாள்தேன் ஆச்சு..”
“இல்ல அங்கே ராணி ஏதோ வேலையா போகணுமாம். அம்மைக்கு தனியா சமாளிக்க கஸ்டம்.”, என்ற நேரம் தீப்தி ஓடி வந்து தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொள்ள செங்காந்தள் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“ப்பா உன்னை ரொம்பத் தேடிச்சு தெரியுமா?”
“அப்படியா ஆனால் அம்மா நீ என்னைத் தேடவேயில்லைனு சொன்னாளே?”
“நிஜமா இந்த கண்ணு இந்த கண்ணு இரண்டுமே தேடிச்சு..”
“அதனாலதேன் உன்னைய கூட்டிட்டு போக ஓடி வந்துட்டேன். உனக்கு இன்னும் லீவு இருக்கே நீ வேணும்னால் இங்கே இருந்துட்டு வரியா? நான் ஞாயித்துகிழமை வந்து கூப்பிட்டுக்குறேன்?”
“தீபு ஆச்சியோட இரு டி. நாம கோவிலுக்கு சந்தைக்கு எல்லாம் போலாம்.”
“ம்ஹும் வேண்டாம் நான் அப்பாவோடேயே போறேன்.”
“ஏன் கண்ணு தாத்தாவோட மாமாவோட எல்லாம் இருக்க வேணாமா உனக்கு?”
“இருக்கணும் ஆனா அம்மா அப்பா அங்கே தான இருப்பாங்க?”, இப்படியாய் கதை வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தனது பையோடு வந்து நின்றிருந்தாள் செங்காந்தள்.
“நாங்க கிளம்புதோம் மா. இன்னொரு நாள் வரேன்.”, என்றவள் கணவனின் அருகில் வர ருத்ரேஸ்வரனும் நாற்காலியிலிருந்து எழுந்திருந்தான்.
வண்டியில் அமர்ந்த பின்னும் மனைவியின் முகத்தையே கவனித்திருந்தவனுக்கு அவள் மொத்த பாரத்தையும் தொண்டைக் குழியில் அடைத்து வைத்திருப்பதைப் போன்று தோன்றியது.
காமாட்சி வண்டி சத்தம் கேட்டு வெளியில் வர மனைவி மகளோடு வந்த மகனைப் பார்த்தவருக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத நிம்மதி.
“செங்கா வா டி. நீயில்லாம ஒண்ணுமே ஓட மாட்டேங்குது எனக்கு.”, என்றவர் பேத்தியை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார்.
செங்காந்தள் பையை உள்ளே வைப்பதற்காக அறைக்குள் செல்ல அவள் பின் சென்றவனாய் அறைக் கதவை லேசாய் சாத்தி விட்டு மனைவியின் தோள் தொட அதற்காகவே காத்திருந்தவள் போல் அவன் மீது சாய்ந்து அழுதிருந்தாள்.
“காந்தா..”
“என்னை எங்கேயும் போ சொல்லாதீக மாமா. இங்கே தான் நான் நிம்மதியா இருக்கேன்.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாம இருக்கேன். எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம். பேச வேண்டாம் மாமா.”, என்றவளை இரு கரம் கொண்டு இன்னுமாய் தன்னோடு சேர்த்தணைத்திருந்தான் ருத்ரேஸ்வரன்.
“இனி நீ எங்கேயும் போக வேண்டாம், காந்தா..”, என்ற அவனின் வார்த்தைகளும் அணைப்பும் அந்த நொடிக்கான மிகப் பெறும் ஆறுதலாகிப் போனது செங்காந்தளிற்கு.
error: Content is protected !!