Skip to content
Post Views: 8,309
“ஆட்டோ வேணுமா சார்..?”
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி ட்ராலி பேக்கை ஓரமாக நகர்த்தி வைத்து தோளில் மாட்டியிருந்த பையை சரிசெய்தபடி நின்றிருந்தவனிடம் நெருங்கி வந்த ஆட்டோ டிரைவர் கேட்டிருந்தார்.
Advertisement
அது அதிகாலை நான்கு மணிப் பொழுது.
ஆனாலும் பேருந்து நிலையமும் அதனை சுற்றி இருந்த பகுதிகளும் சுறுசுறுப்பாகத்தான் இருந்தன. எதிர்ப்புறம் இருந்த டீக்கடைகளில் கூட்டம். சிறிய அளவு ஹோட்டல்களின் வாசலில் அப்பொழுதே புரோட்டாவிற்கு படுத்து எழுந்து மாவை பிசைந்து கொண்டிருந்தனர் புரோட்டா மாஸ்டர்கள்.
Advertisement
Advertisement
‘இப்பவேவா..?’
பார்த்தவுடன் இந்த எண்ணம் தோன்றத்தான் செய்யும். ஆனால் தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரைக்கு எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தானே. மதுரை தூங்கா நகரம் என்பதை பார்த்த நொடியில் கிரகித்து தெரிந்து கொண்டான் அவன்.
Advertisement
அவன் குமரகுரு…
ஆறடி உயரம்… மாநிறம்…செப்பமான உடல்வாகு… 32 வயதில் இருந்தான்… இறுக்கமான முகத்தில் செதுக்கி சீரமைக்கப்பட்ட குறுந்தாடி… தூரப்பார்வைக்கு கண்களில் கண்ணாடி… நீண்ட தூர பேருந்து பயணத்தால் அலை அலையென கலைந்திருந்த அடங்காத கேசம்.
தலையை கோதியபடியே பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தவனிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டிருந்தான் ஆட்டோ டிரைவர்.
“சார்… ஆட்டோ..?”
அவனுக்கு தோள்பட்டைவரை மட்டுமே உயரம் இருந்த அந்த காக்கி உடை அணிந்திருந்த டிரைவரை திரும்பிப் பார்த்தவன் “கோரிப்பாளையம் போகணும்…” என்றிருந்தான் அர்ஜுன்தாஸ் குரலில்.
தனது தோற்றத்தில் தனி கம்பீரம் என்றால் அந்த குரலில் ஒரு சிறு மிரட்சியையும் ஏற்படுத்தத்தான் செய்தான் குமரகுரு.
“போகலாம் சார்…”
பவ்யமாக பதில் அளித்தவன் அவனை கேட்காமலேயே ட்ராலி சூட்கேஸை எடுத்துச் சென்று அருகில் இருந்த தனது ஆட்டோவில் ஏற்றி இருந்தான். தோளில் மாட்டியிருந்த பையை எடுத்து மடியில் வைத்தபடி ஆட்டோவில் அவன் அமர்ந்து கொள்ள ஆட்டோ கிளம்பியது.
பரபரப்பான மதுரையை கண்களுக்குள் வாங்கியபடி பயணத்தை தொடர்ந்தான் குமரகுரு.
“கோரிப்பாளையத்தில எங்க சார்..?”
“வாசுகி நகர் மூனாவது தெரு…”
‘தென்ன மட்டைய கடிச்சு முழுங்கிட்டாரா..? இம்புட்டு கரகரப்பா இருக்கு… ஆனாலும் ஆளப்போலவே குரலுக்கும் ஒரு தனி கம்பீரந்தேன்…’
ஆட்டோ டிரைவரின் மைண்ட் வாய்ஸ்.
சிறிது நேரப் பயணத்தில் குறிப்பிட்ட தெரு வந்திருக்க வீட்டின் இலக்கத்தையும் கூற குறிப்பிட்ட வீட்டின் முன் வந்து நின்றது ஆட்டோ.
தனது உடைமைகளுடன் இறங்கி பணத்தை செலுத்தி ஆட்டோ கிளம்பிச் சென்ற பின்பு அமைதியாக இருந்த அந்த வீதியினை இடுப்பில் கை வைத்தபடி ஒருமுறை கண்கள் சுழற்றி பார்த்தான்.
தெருமுனையில் இரண்டு வீடுகளில் மட்டும் பெண்கள் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தனர். தெருவிளக்கின் வெளிச்சத்தில் அந்த வீதியின் நேர்த்தி தெரிந்தது. சிறிதும் பெரிதுமான வீடுகள் என்றாலும் அனைத்தும் கான்கிரீட் வீடுகள்தான். வீதியின் அமைப்பே நாகரீகமாகத்தான் இருந்தது.
அவனுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. ஒண்ட ஓலைக் குடிசை கிடைத்தாலும் அதிலும் வாழக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். இன்று முதல் அவனது வசிப்பிடம் இங்குதான் என்பது ஊர்ஜிதமாகிப் போனதால் ஒரு ஆழ்ந்த விழி சுழற்சி.
கைக்கடிகாரத்தை திருப்பி நேரம் பார்த்தான். ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த குறிப்பிட்ட வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அந்த வீட்டின் உரிமைக்காரர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் போலும். அத்தனை நிசப்தம்.
‘இன்னும் கொஞ்சம் லேட்டா கிளம்பி வந்திருக்கலாமோ..?’
அவர்களை எழுப்ப யோசித்து தயங்கியபடி நின்றான். ராமேஸ்வரத்தில் இருந்து நான்கு மணி நேரப் பயணம். முதல் நாளிலிருந்து நிறைய வேலை… ஓய்வே இல்லை.. உடலும் அசதியாகத்தான் இருந்தது.
சில நொடிகள் யோசித்தவன் அழைப்புமணியை அழுத்தினான்.
அடுத்த நிமிடமே கதவு திறக்கப்பட்டது. ஒரு 50 வயது மதிக்கத்தக்க மனிதர் நின்றிருந்தார். கை வைத்த வெள்ளை பனியனும் லுங்கியும் அணிந்திருந்தவர் மெலிதான முன் வழுக்கையை இரு விரல்களால் கீறியபடியே கண்கள் குவித்து அவனை நிமிர்ந்து பார்த்திருந்தார்.
“வணக்கம் சார்… நான் குமரகுரு… கணேசன் சார்…” என்று அவன் அடுத்து சொல்லும் முன்பே
“ஹான்… ஆமாமா… நேத்து நைட்டே கணேசன் எனக்கு போன் பண்ணி சொல்லிட்டார். இப்போதான் வந்தீங்களா..?” என்றபடியே வெளியே எட்டிப் பார்த்தார். அவனது டிராவல் பேக் வாசலில் இருந்தது.
“ஜஸ்ட் இப்போதான் வந்தேன் சார்…”
“இருங்க வந்துடுறேன்..” என்று கூறி வேகமாக உள்ளே சென்றவர் சிறிது நேரத்தில் வெளியேறி “வாங்க…” என்று அவனை அழைத்துக் கொண்டு தனது வீட்டு கேட்டை தாண்டி வெளியேறி இரண்டு வீடுகள் தள்ளி அழைத்துச் சென்றார்.
தன் கையில் இருந்த சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவர் “இந்த வீடுதான் தம்பி…” என்றபடி நகர்ந்து வழிவிட தனது உடமைகளுடன் உள்ளே நுழைந்திருந்தான் குமரகுரு.
அளவான சிறிய நேர்த்தியான வீடு.
கூடம் பெரியது… டைனிங்கோடு கூடிய சமையலறை… சிறிய பூஜை அறை.. ஒரே ஒரு படுக்கையறை.. அதுவும் கொஞ்சம் விஸ்தாரமானதுதான். முன்பக்கம் பெரிய திண்ணை. அதைத் தொட்டு நீண்ட வாசல் அகண்ட கூடத்தில் பின்வாசல் கதவும் இருந்தது. பார்த்த நொடியில் வீடு அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவன் ஒருவனுக்கு இது அதிகம்தான்.
“வீடு பிடிச்சிருக்கா தம்பி..?”
“ரொம்ப நல்லா இருக்கு சார்… என் ஒருத்தனுக்கு இதே அதிகம்தானே…”
“நீங்க மட்டும்தானா..? குடும்பம்..?”
அவரது கேள்விக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக்கியவன் தனது ட்ராலி பேக்கை சுவற்றின் ஓரமாக நகர்த்திச் சென்று வைத்திருந்தான்.
அந்த புன்னகையே அவருக்கு தேவையான பதிலை கொடுத்துவிட்டது போலும். அதற்குமேல் அவரும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
“வாடகை மத்த டீடைல்ஸ் எல்லாமே கணேசன் சார் சொல்லிட்டார்… அட்வான்ஸ் இப்பவே கொடுத்துடட்டுமா..?”
“அதுக்கு என்ன தம்பி..? அப்புறமா வாங்கிட்டா போகுது… சாமானெல்லாம் வந்துடுமா..? இல்ல இனிமேதான் எல்லாம் வாங்கணுமா தம்பி..?” அக்கறையோடுதான் கேட்டார் அவரும்.
“எல்லாத்தையும் லாரில புக் பண்ணி ஏத்தி அனுப்பிட்டுதான் வந்தேன்… எட்டு மணிக்கு வந்து சேர்ந்திடும்…”
திருப்தியாக சிரித்துக் கொண்டார் அந்த மனிதர்.
“என் பேரு ராமலிங்கம்… உங்களுக்கு என்ன உதவினாலும் தாராளமா கேட்கலாம்.. இந்த ஊருக்கு இப்போதான் முதல் தடவை வர்றீங்களா இல்ல முன்னாடியே வந்திருக்கீங்களா..?*
“ஒரே ஒருமுறை வேலை விஷயமா வந்துட்டுப் போனேன்…”
“நீங்க வேலை பாக்குற பள்ளிக்கூடத்துலதான் என் தங்கச்சி பையன் பன்னென்டாப்பு படிக்கிறான்…”
“ஹோ…”
“நீங்க எத்தனாப்புக்கு சொல்லித் தரப் போறீங்க தம்பி..?”
“பதினொன்னு, பன்னென்டு…”
“என்ன பாடம்..?”
“கணிதம்…”
“அருமை… அவனுக்கு கணக்கே வர மாட்டேங்குதுன்னு அவங்காத்தா புலம்பிட்டே கெடப்பா… டியூசன் சொல்லித் தருவீங்களா தம்பி…”
ஆர்வமாக கேட்டவரை பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தான் குமரகுரு.
“இன்னும் பிளான் பண்ணல சார்… இப்போதானே வந்திருக்கேன்… பார்த்துட்டு சொல்றேன்…”
“ஆகட்டும்… சரி ரொம்ப கலைச்சு போய் தெறியறீங்க… செத்த நேரம் ஓய்வெடுங்க. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. மத்த வேலை செய்யவே உங்களுக்கு சரியா இருக்கும். நாளைக்கே வேலையில சேர்ந்திடுவீங்களா..?”
“ஆமா சார்…”
அவனிடம் விடைபெற்று அவர் கிளம்பிச் சென்றிருந்தார்.
வீட்டைச் சுற்றி வந்து ஒரு முறை பார்த்து தனது உடைமைகளை அறைக்குள் எடுத்துச் சென்று வைத்தான். அறையில் ஒரு அலமாரி இருந்தது. தோளில் மாட்டியிருந்த பையை அலமாரிக்குள் வைத்து மூடியவன் உடலை வளைத்து சோம்பல் முறித்தான். மசமசவென பொழுதும் விடியத் தொடங்கியிருந்தது.
சோர்வு தாக்கினாலும் உறக்கம் வரவில்லை. மெல்ல வெளியேறி கூடத்தில் இருந்த பின்வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
சில்லென்று முகத்தை தழுவிக் கொண்டு இனிமையை கொடுத்தது இளங்காலைக் காற்று. அங்கும் ஓரளவு பரந்த தளம் இருந்தது. ஆங்காங்கே மண் பறிக்கப்பட்டு குறுஞ்செடிகள் நடப்பட்டிருந்தன. பெரிதாக கவனிக்கப்படாததால் நீரின்றி செடிகள் வாடிக்கிடந்தன.
வீட்டைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர். சுவற்றுக்கு அந்தப் பக்கமாக அடுத்த வீட்டின் தென்னை மரக்கிளைகள் தலை சாய்த்து இந்த வீட்டிற்குள்ளே நுழைந்திருந்தன. அந்த குளுமைதான் சலசலவென்ற மெல்லிய சத்தத்தோடு சாமரம் வீசிச் சென்றது.
கதவின் மேல்படியில் நின்றபடி காற்றை உள்வாங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான்.
அந்த நிசப்தத்தை கலைத்தபடி ஏதோ ஒரு விசும்பல் சத்தம் கேட்டது.
காதினை தீட்டி கூர்மையாக ஆராய்ந்தான்.
ஆம்… ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம்தான். கண்களை குவித்து தலையை சுழற்றிப் பார்த்தான். வலது பக்கமாக காம்பவுண்ட் சுவருக்கு அடுத்து உள்ள வீட்டின் பின்பக்கம் தெளிவாகத் தெரிந்தது.
அங்கும் இதேபோல் ஒரு குட்டித் தோட்டம் நல்ல பராமரிப்புடன் இருந்தது. ஓரமாக உயர்த்தி போடப்பட்டிருந்த துவைக்கும் கல்லின் மீது குத்துக்கால் இட்டு முதுகை காட்டியபடி ஒரு பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது.
நைட்டி அணிந்திருந்தாள்… நீண்ட அடர்த்தியான கூந்தல் பின்னலோடு துவைக்கும் கல்லினை உரசிக் கொண்டிருந்தது. அவள் முதுகு குலுங்குவதும் கண்களை துடைப்பதுமாக இருக்க அழுவது அவள்தான் என்பது தெரிந்தது.
விடிந்தும் விடியாத நேரத்தில் தனிமையில் அமர்ந்து ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள். குழப்பமாக அவள் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தான் குமரகுரு.
கண்களைத் துடைத்து எழுந்து கொண்டவள் குனிந்தபடியே காம்பவுண்டை ஒட்டி அமைந்திருந்த தண்ணீர் குழாயை நோக்கி வந்தாள்.
காம்பவுண்டுக்கு இந்தப் பக்கமாக அந்த வீட்டின் படிகளில் நின்றிருக்கும் குமரகுருவை அவள் கவனத்திருக்கவில்லை. நீண்ட நாட்களாக காலியாக கிடக்கும் வீடு. அந்த நேரத்தில் அங்கு ஒருவன் நிற்பான் என்று அவளும் அறிந்திருக்கவில்லை.
ஏதோ சத்தமாக முனகியபடியே முகத்தை அடித்து கழுவி கை கால்களை கழுவிக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு இந்த உயிர் இன்னும் இருக்கு..? வாழவே பிடிக்கல… ஆனா வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்… தெய்வமே.. நீ இருக்கியா இல்லையா..? என்னை ஏன் அனுதினமும் வதைக்கிற..? எதுக்கு இந்த நிம்மதி இல்லாத வாழ்க்கை..?”
அருகில் யாருமே இல்லை என்ற எண்ணத்துடன் தனது ஆதங்கத்தை உரத்த குரலில் கூறியபடியே குனிந்தபடி குதிங்காலை உரசி கழுவிக் கொண்டிருந்தாள்.
அவளது வார்த்தைகள் அவனது காதுகளில் தெளிவாக விழுந்திருந்தன.
இன்னும் கூட அழுகை வந்தது போலும். உதட்டை மடித்தபடி அழுதவள் மீண்டும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக் கழுவினாள்.
அவளையேதான் பார்த்தபடி நின்றிருந்தான் குமரகுரு.
“ம்மா…ம்மா…”
பிஞ்சு மழலைக் குரல் அவளது பின்வீட்டு வாசலில் கேட்க வேகமாக முகத்தில் ஒட்டியிருந்த நீரை வழித்து துடைத்து திரும்பினாள்.
தொடைவரை குட்டி கௌனும் கலைந்த அடர்ந்த சிகையுமாக கண்களை கசக்கியபடி பின் வாசல்படியில் நின்றிருந்தாள் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு குட்டிப் பெண்.
“எழுந்துட்டியா தங்கம்..?”
வேகமாக குழந்தையை நோக்கிச் சென்றாள் அந்தப் பெண்.
“ஆய் வருது…”
“ஓ… சரி சரி…”
சொன்னவள் குழந்தையை தூக்கி உள்ளாடையை கழட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்திருக்க அங்கேயே பார்வையை வைத்தபடி நின்றிருந்தான் குமரகுரு.
விழிகளை திருப்பிக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கூட்டி சுத்தம் செய்யப்பட்டிருந்த அறையில் ஒரு அகலமான துண்டினை விரித்து படுத்துக் கொண்டான். பழைய பாணி காரைக்குடி வீடுகளில் இருக்கும் ஆத்தங்குடி டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு.
பார்ப்பதற்கு மட்டுமல்ல படுத்து உருளுவதற்கும் பாந்தமாக இனிமையாகத்தான் இருந்தது.
சோர்வோடு கண்களை மூடினான்.
சற்றுமுன் அழுதபடியே புலம்பிக் கொண்டிருந்த அந்த உருண்டை முகத்துப் பெண்ணின் உருவம்தான் மூடிய விழிகளுக்குள் நிறைந்து நின்றது.
வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.
காயங்கள் காணாத மனிதர்களும் இல்லை.
அவன் கடந்து வராத வலிகளா..? எதிர்கொள்ளாத காயங்களா..?
ஏனோ விரக்தியான புன்னகைதான் இதழ்களில் வழிந்தது.
சிறிது நேரத்தில் தன்னையும் மறந்து உறங்கிப் போயிருந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!