Skip to content
Post Views: 4,783
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
மு.வ உரை: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்ய வேண்டும்.”
இரு தினங்களுக்குப் பின் சர்வேஸ்வரன் அன்று தான் அண்ணனின் கண்களில் விழுந்தான்.
கைப்பேசியை நோண்டிய படி அமர்ந்திருந்தவனின் அருகில் வந்த ருத்ரேஸ்வரன்,
Advertisement
“என்ன டா தோப்புக்கு போறதே இல்லையாமா?”
“நேத்து மட்டும்தேன் போல.”
“ஏன்?”
Advertisement
“உடம்பு சரியில்ல..”
Advertisement
“உடம்புக்கு என்ன?”
“…”
“இங்கேரு சர்வா நாங்க சொல்றதெல்லாமே உன் நல்லதுக்குதேன். குடிப் பழக்கத்தை விட்டுட்டு ஒழுங்கா தொழிலை கவனி.
Advertisement
நாளைக்கே கல்யாணப் பேச்சு எடுத்தா ஊருக்குள்ளே உன்னைய பத்தி என்ன சொல்லுவாகனு யோசிச்சு பார்த்தியா நீ?”
“…”
“என்ட்ட ஊமையா இருந்து தப்பிச்சுகிடலாம் ஆனால் நான் சொல்றதோட வீரியம் உனக்கு நல்லாவே புரியும். பார்த்துகோ..”, என்றவன் நகர்ந்த பின் கையில் காபியோடு வந்து நின்றாள் செங்காந்தள்.
“அத்தான் காபி.”
“உங்ககிட்ட நான் இப்போ கேட்டேனா? பேசாம போங்க உங்க வேலையைப் பார்த்துட்டு.”, என்றவன் எப்போதும் போல் வெடுக்கென பதில் கூறியிருக்க ஒன்றும் கூறாமல் அமைதியாய் கடந்து விட்டிருந்தாள்.
ஏனோ செங்காந்தள் வந்த நாள் முதல் அவளை கண்டால் சர்வேஸ்வரனுக்கு ஆகாது. அண்ணனுக்கு பொருத்தமில்லாதவள் என்பதும் ஒரு காரணம்.
மற்றவர்கள் முன் சாதாரணமாய் இருக்க முயல்பவன், தனிமையில் செங்காந்தளிடம் வெடுக்கென பேசி விடுவான்.
அவளும் அதற்காகவே அவனை விட்டு தள்ளியே இருப்பாள்.
இன்று போலவே வேறு வழியில்லாத நேரங்களில் எதிர் கொண்டால் மனதை வதைக்கும் படியான வார்த்தைகளைக் கேட்டும் கேளாதவள் போல் நகர்ந்து விடுவாள்.
“ராணி மாவுக்கு ஊற வைச்சுருக்கேன். நீ அரைச்சுரு. நான் அந்த டெய்லர் அக்கா கடை வரைக்கும் போயிட்டு வந்துரேன்.”
“க்கா நீங்களே வந்து அரைங்க. அப்பறம் அத்தை அது சரியில்ல இது சரியில்லனு சொல்லுவாங்க.”
“அப்பறம் நீ எப்போதேன் கத்துக்குவ ராணி?”
“நீங்க இருக்கும் போது நான் ஏன்க்கா கத்துக்கணும். நீங்களே செஞ்சு கொடுத்துர மாட்டீங்க..”, என்றவள் அங்கிருந்து நகர பாத்திர கூடையோடு உள்ளே வந்த பொன்னி கடுப்பாக செங்காந்தளிடம்,
“எம்புட்டு கொழுப்பு! நீங்க இருக்கும் போது அவுக ஏன் பண்ணணுமாம். ஏன் வேலை செய்யதேன் உங்களைப் பெத்து போட்டாகளா?”
“ஏதோ விளையாட்டா சொல்லுதா பொன்னி விடு.”
“ம்ம் இப்படி வெளுத்ததெல்லாம் பாலுனு நீ உட்காந்துரு கா. இந்த காலத்துல எப்படி இப்படி இருக்கியோ எனக்குப் புரியலை.
இருபது வருசம் முன்ன பிறந்திருக்க வேண்டியவ கா நீ..”
“என்னை ஏதாவது சொல்லிகிட்டே இரு நீ..”
“சொல்லாம? கொஞ்சமாவது வாயை திறந்து பேசிப் பழகு கா. சின்னவரு என்னவோ வெடுக்கு வெடுக்குங்கிறாரு.
இவுக என்னவோ உன்னைய வேலை செய்ய குத்தகைக்கு வைச்சாப்புல பேசுறாக. “
“..”
“எல்லாம் ஒரு நாள் இல்ல ஒரு நாள் பெரிய ஐயாட்ட சொல்லதேன் போறேன். அன்னைக்கு இருக்கு இவங்களுக்கெல்லாம்.”
“என்ன பண்ணுவாராம் உங்க பெரிய ஐயா?!”, என்றவள் விளையாட்டு போல் சிரித்த படி பொன்னியிடம் கேட்டாள்.
“உனக்காக மலை போல நான் இருக்கேன்னு ஊரறிய சொல்லுவாரா இல்லையானு மட்டும் பாருங்க. அப்போ இருக்கு இவங்களுக்கு எல்லாம்.”, என்றதில் பொன்னியின் தோள் தட்டி நகர்ந்திருந்தாள் செங்காந்தள்.
டெயிலர் கடைக்குச் சென்று வருவதாய் கூற காமாட்சியும் செங்காந்தளோடு கிளம்பி நின்றார்.
“அத்தை நானே போயிட்டு வந்துருவேன்.”
“அது என்னவோ டி பச்சை புள்ளை மாதிரி முழிச்சுகிட்டு கல்யாணம் முடிச்சு வந்தியே அப்போயிருந்தே உன்னையே பார்த்தா உன் மகளை பார்க்குற மாதிரிதேன் இருக்கு எனக்கு. தனியா எல்லாம் போக வேணாம் நானும் வரேன் வா.”
“இதைக் கேட்டா உங்க பேத்தி என்னை இன்னும் ஏய்ச்சுட்டு போயிருவா.”, என்றவள் லேசாய் புன்னகைத்தாள்.
“பாரு பேச்சு சிரிப்பு எதாவது வெளியே தெரியுதா? மனசு விட்டு பேசு வாய் விட்டுச் சிரினு சொன்னா எங்கே கேட்குற நீ.”
“எப்பவுமே இவ்வளவு தேன் அத்தை என் பேச்சே..”
“ஏன் டி புள்ளைக்கு அஞ்சு வயசாச்சே அடுத்த புள்ளை பெத்துக்கிறது?”
“..”
“என்ன டி பேச்சை காணும்?”
“ஒரு பிள்ளையே போதும் அத்தை..”
“அப்படினு உன் புருசன் சொன்னானா?”
“…”
“இன்னும் வயசிருக்கு. நாளைக்கு அதுக்கும் உடன்பிறப்புனு இருக்க வேணாமா?”
“…”
“அதேன் கொஞ்ச நாளா என்னமோ உன் புருசன் உன்னைய சுத்தி வாரானே. அப்பறம் என்ன?”
“அத்தை..”
“என்ன டி அத்தை.. அவனே ஏதோ நல்ல புத்தி வந்து நடக்குறான். கப்புனு பிடிச்சு கைக்குள்ளே வைச்சுக்கோ சொல்லிட்டேன்.”
“..”
“இன்னும் என்னவோ பச்ச புள்ளை மாதிரி முழிச்சு கிடக்காத. புரியுதா?”
“என்ன அத்தை உங்க பையனை கைக்குள்ளே வைச்சுக்க நீங்களே ஐடியா தாரீக?”, என்றவள் சிரிக்க காமாட்சி அவளின் தோளில் இடித்தார்.
“எல்லாம் என் கிரகம். வேற என்னத்த பண்ண? உனக்கு சிரிப்பா இருக்கா? ஆயிரம் இருந்தாலும் அவன் நல்லவன் டி செங்கா.”
“அது தெரிஞ்சதுனால தான அத்தை இத்தனை வருசமா இங்கே இருக்கேன்.”
“உன்னையும் அவனையும் சந்தோசமா பார்த்துட்டா போதும் டி இந்த கட்டை வெந்து போகும்.”
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீக. இன்னும் நீங்க பார்க்க வேண்டியது எம்புட்டோ இருக்கு.”
“அட போடி என் வீட்டை பார்த்துக்க நீ இருக்க. அது போதும். உனக்காகதேன் இந்த உசுரைப் பிடிச்சு வைச்சுருக்குறதே.”, என்றதில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது செங்காந்தளிற்கு.
“இப்போ என்னத்துக்கு கண்ணைக் கசக்கிட்டு இருக்க நீ?”
“உங்க மகனுக்கே என்னைப் பிடிக்காதப்போ உங்களுக்கு என்னை பிடிக்காம போலையே ஏன்?”
“பெத்தவளுக்கு மூத்த பிள்ளை எப்பவுமே உசத்திதேன். அதே மாதிரிதேன் மூத்த மருமவளும். அதிலேயும் உன்னை மாதிரி ஒருத்தியை எப்படி டி பிடிக்காம போவும்.”
“..”
“சரி பேச்சை மாத்தாத. நான் சொன்னது நினைவிருக்கட்டும்.
இன்னொரு புள்ளை வந்தா எல்லாம் கண்டிப்பா சரியா போவும்னு தோணுது. அதுக்கு என்ன வழினு பாரு.”, என்றதற்கு அமைதியாய் அவருடன் நடந்தாள்.
அன்றைய இரவும் ருத்ரேஸ்வரன் மாடிக்குச் செல்ல நேற்றை விட சற்று தெளிந்த மனதோடு மாடிக்குச் சென்றாள் செங்காந்தள்.
“உன்னைப் பத்தி சொல்லேன் காந்தா..”
“என்னைப் பத்தியா? என்னைப் பத்தி சொல்ல ஒண்ணுமில்லையே!”
“நிறைய இருக்கும் ஆனால் என்கிட்ட சொல்ல விருப்பமா இல்லையானு நீதேன் யோசிக்கணும்.”
“..”
“உனக்கு படிக்க விருப்பமிருக்கா? படிக்குறியா?”
“விருப்பம்னு இல்ல ஆனால் ஒரு டிகிரியாவது வாங்கனும்னு நினைச்சுருக்கேன்.”
“ஓ ஏன் அப்படி?”
“இல்ல அப்போவாவது உங்களுக்கு என்னை பிடிக்குமானு நினைச்சுதேன்..”
“எனக்காகனு எதையுமே பண்ணாத உனக்கு படிக்க தோணினால் சொல்லு. நான் தேவையானதை எல்லாம் பண்ணித் தரேன்.”
“ம்ம்.. நாளைக்கு உங்க ப்ரெண்டெல்லாம் வாராகளே. தோப்பு வீட்டில் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.”
“ம்ம் நேரா இங்கேதேன் வர சொல்லிருக்கேன். காபி சாப்பிட்டுட்டு அப்பறம் அங்கே கூட்டிட்டு போறேன்.”
“சரி மாமா.”
“என்னாச்சு இன்னைக்கு ரொம்ப சோர்வா தெரியுற?”
“அது..”, என்றவளின் நெற்றியில் எப்போதும் இருக்கும் விபூதி இல்லாததைக் கவனித்தவனாய்,
“நீ போய் படுத்துக்கோ.”
“சரி மாமா.”, என்றவள் நேற்று போலவே பாயை மடித்து கையில் எடுக்க அவள் எதுவும் கூறும் முன் தானாகவே அவளை தன் மார்பில் சாய்த்திருந்தான்.
நேற்று போல் அழுகையெல்லாம் வரவில்லை மாறாக உள்ளுக்குள் பெரு மகிழ்ச்சி பிரவாகமாய் எழுந்தது.
நேற்று சாதாரணமாய் நின்றிருந்தவளின் கரம் இன்று அவனின் முதுகில் பட்டும் படாமலும் பற்றியிருந்தது.
நொடிப் பொழுதில் நகர்ந்தவளின் விழிகளையே ருத்ரேஸ்வரன் பார்த்திருக்க நொடிப் பார்வை பார்த்தவள் வேகமாய் கீழேயிறங்கியிருந்தாள்.
ருத்ரேஸ்வரன் நிலவை வெறித்த படி சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தான்.
மனதில் இத்தனை நாட்கள் ஏறியிருந்த பாரம் எதுவோ எடையிழந்ததைப் போன்று தோன்றியது.
முதுகில் பட்ட அவளின் லேசான ஸ்பரிசம் இப்போதும் தித்திப்பதாய். மனைவியவளின் அந்த நொடி நேரப் பார்வையில் தான் எத்தனை உரிமை.
மனம் மயிலிறகாய் மாறிவிடும் நேரம் உதடுகள் தானாகவே விரிந்து தானே ஆக வேண்டும்.
அதே புன்னகையோடு அறைக்குள் வந்த நேரம் செங்காந்தள் உறங்கியிருக்க அவளருகில் வந்து நின்றவனின் பார்வை அவளது கொலுசோடு தெரிந்த கெண்டை காலில் பதிந்தது.
வர்ணிப்பதற்கான எவ்வித வாய்ப்புகளும் இல்லாத நடுத்தர இல்லத்தரசியின் பாதம் தான்.
ஆனால் மனைவியாய் சற்று உரிமையாய் நோக்கும் போது அந்த சிறு பாதங்கள் அத்தனை அழகாய் தோன்றியது.
ஐந்து வயது குழந்தைக்கு தமக்கை போன்று தான் இருப்பாள் உயரத்திலும் எடையிலும். இப்போது புடவையிலிருந்து நைட்டிக்கு மாறியிருக்க இன்னுமும் சிறு பிள்ளை போல் தோன்றினாள்.
லேசாய் அவளது கொலுசை வருடியவனின் விரல்கள் பட்டும் படாமல் அவளது காலையும் வருட உள்ளுக்குள் பேரதிர்வு எழுந்தவனாய் அவளை விட்டு நகர்ந்திருந்தான்.
கிட்டதட்ட மறந்தே போயிருந்த கூடலின் சிலிர்ப்பு இப்போது அவனிடத்தில்.
அன்றைய தினம் அவளின் பார்வை அது அவ்வப்போது அவனை ஏதோ செய்து கொண்டு தான் இருக்கிறது.
அவனிடம் பேசவும் கண்களைப் பார்க்கவும் தயக்கம் காட்டுபவள் அன்று நொடி கூட விழிகளை மூடவில்லை.
அவளது கரம் இறுதி வரை தனது பின்னந்தலையை வருடியதை இப்போதும் உணர முடிந்தது அவனால்.
தாம்பத்தியத்தின் சுவையறியாத அவளுக்கு பயமும் பதட்டமும் இருந்தாலும் அந்தப் பார்வைக்கான அர்த்தம் என்ன என்பதை எப்போதாவது கேட்டே தீர வேண்டும் என்று தோன்றியது ருத்ரேஸ்வரனுக்கு.
என்றுமில்லாமல் மனம் இன்று தன்னிலையில் இல்லாததை உணர்ந்தவனாய் மனைவியின் புறம் முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான்.
உறக்கம் வர மறுத்த போதும் அமைதியாய் அவன் படுத்திருக்க சிறிது நேரம் கழித்து செங்காந்தள் எழுந்து கொள்வது போல் தோன்றியது.
என்னவென பார்க்கலாமா என்று திரும்ப நினைப்பதற்குள் அவனருகில் வந்திருந்தாள்.
தூங்குவது போலவே விழிகளை மூடியே வைத்திருக்க அவன் முகத்திற்கு அருகில் தரையில் மண்டியிட்ட வண்ணம் அவனையேப் பார்த்திருந்தாள்.
ருத்ரேஸ்வரன் எப்போதுமே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டால் அத்தனை சீக்கிரத்தில் தூக்கம் கலைய மாட்டான்.
அந்த தைரியத்தில் எப்போதும் போல் கணவனின் முகத்தை ஆசை தீரப் பார்த்திருந்தாள் செங்காந்தள்.
அவனது தலைமுடியை லேசாய் வருடி விட்டு அவனுக்குத் திருஷ்டி கழித்து போர்வையை இன்னுமாய் மார்போடு அவனுக்கு போர்த்தி விட்டு என நிமிடங்களைக் கரைத்தவள் எழுந்து கொண்ட நேரம் அவளது கரத்தை இறுகப் பற்றியிருந்தான் ருத்ரேஸ்வரன்.
பயத்தில் ஒரு நொடி மூச்சே நின்று விட்டிருந்தது செங்காந்தளிற்கு.
அவள் ஏதோ கூற வருவதற்குள் பெண்ணவளின் அதரங்களைத் தனதாக்கியிருந்தான்.
நடப்பதை உணர்ந்தவளின் கண்கள் இன்னுமாய் விரிந்து கொள்ள அவனுமே அந்தக் கண்களையே பார்த்த வண்ணம் தனது முத்தத்தைத் தொடர்ந்திருந்தான்.
மூச்சிற்குத் தவித்தவளாய் அவனிடமிருந்து பிரிந்து எழுந்தவள் வேகமாய் தனதிடத்தில் சென்று படுத்து திரும்பிக் கொண்டாள்.
இதயத்தில் ரயில் ஓடும் நிலை. முத்தம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும் என்று அறிந்திறாதவளுக்கு வயிற்றில் ஏதேதோ செய்தது.
தவறியும் கணவன் பக்கம் திரும்பாமல் வராத தூக்கத்தை வர வைக்க பாடுபட்டுக் கொண்டிருந்த செங்காந்தளுக்கு உதட்டின் ஈரம் இன்னுமாய் தூக்கத்தை தூர விரட்டியிருந்தது.
error: Content is protected !!