Skip to content
Post Views: 1,673
அவனோ தொடர்ந்து, “உங்களுக்கு தெரியுமா.. என்னோட தீனாண்ணாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.
குட்டி பையனா இருக்கும் போது அண்ணா தான் என்னை எப்பவும் தூக்கி வச்சிருப்பாங்க. எனக்கு லேசா அது நியாபகத்துல இருக்கு.
Advertisement
வீட்டு செலவுல இருந்து.. வீட்டுக்குன்னு எது வாங்கினாலும் அது அண்ணா அனுப்பற பணத்துல செய்யறதுன்னு.. நா பார்த்துட்டு தானே இருக்கேன்.
நா பெரிய பிரைவேட் ஸ்கூல்ல படுச்சுட்டு இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணம் அண்ணா தான்.
Advertisement
Advertisement
இதெல்லாம் வச்சு, “ஏம்மா அண்ணா பணத்த மட்டும் கொடுக்குது. நம்ம கூட இருக்கலாமில்ல..?”
“அண்ணாக்கு நம்மள பிடிக்காதா..? அதான் நம்ம கூட இருக்க மாட்டிங்குதா..?”
Advertisement
“அண்ணா கூட இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா..? எனக்கு கிரிக்கெட் விளையாட..
சைக்கிள் ஓட்டன்னு எல்லாமே பழக்கி விடுவாங்கலாம்.
நாங்க ப்ரண்ட் மாதிரி ஜாலியா இருப்போமாம்.. என் ப்ரண்ட் அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா..? அவங்க தான் அப்படி சொன்னாங்க..”
“அண்ணா இருந்தும் இங்கே நா மட்டும் தனியா இருக்கேன்..” னு.. அம்மாகிட்ட நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. இப்படி பல தடவ கேட்டிருக்கேன்.
அப்படி ஒரு நாள் நா பேசிட்டு இருந்தத கேட்டு.. அப்பா என்னை திட்டி அடுச்சிட்டாங்க. அதனால எனக்கு காய்ச்சல் கூட வந்துச்சு தெரியுமா அண்ணி..?
அப்புறமும் சில முறை நா அம்மாகிட்ட அண்ணா பத்தி பேசியிருக்கேன்.
அப்பவும் அவங்க கேட்டுட்டு திட்டி, அடிக்க வந்தாங்க. அம்மா தான் தடுத்துட்டாங்க.
சோடி சேத்துறானோ.. சொல்லி வைய்யி.. எதாவது அவனோட சேந்துக்கிட்டு கூத்தடுச்சேன்னு தெரிஞ்சா அடி வெளுத்திடுவேன்.. ன்னு அப்பா சொல்லிட்டாங்க.
அதுல இருந்து அண்ணா பத்தி பேசவே கூடாதுன்னு அம்மாவும் சொல்லிட்டாங்க.
அண்ணா என்கிட்ட வந்து பேசியிருந்தா இதெல்லாம் அப்பவே நா சொல்லியிருப்பேன்.
ஆனா அவங்க இங்கே வரவே இல்ல.. அப்படி ஒரு சில டைம் வந்தப்பவும் பணத்த கொடுத்துட்டு வாணிக்கா வீட்டுக்கு போயிட்டாங்க.
பாலா கூட அவங்க விளையாடும் போது, என்கிட்ட மட்டும் ஏன் இவங்க இப்படி விளையாட மாட்டிங்கறாங்கன்னு எப்படி ஃபீல் பண்ணி இருக்கேன் தெரியுமா அண்ணி..?
ஆனா அண்ணா என்னை பாக்கவே மாட்டாங்க.. தெரியுமா..?
அதனால தான் அவங்க வந்தாலும் நா பேசாம அம்மாகிட்ட போய் இருந்துப்பேன்.
அண்ணா பேசாதப்ப நானா பேசி.. அப்பா அடிப்பாங்கன்னு பயந்து தான் அப்படி இருந்தேன்.
இப்போ கூட பாருங்க நீங்க தானே என்கிட்ட வந்து பேசுனீங்க. அண்ணா பேசவே இல்ல தானே..?
நா தான் குட்டி பையன். அப்பா அடிப்பாருன்னு பயந்துட்டு பேசல..
அண்ணா பெரியவங்க. அவங்களா வந்து என்கிட்ட பேசியிருக்கலாம். ஆனா இப்ப வரை செய்யல.
நேத்தும் நீங்க வர்றதுக்கு முன்னாடியே அம்மா உங்க கூட பேசக்கூடாது.. அப்படி பேசினா அப்பாக்கு பிடிக்காது.
மீறி பேசி அவங்க போனதும் அடி வாங்காதேன்னு சொல்லிட்டாங்க..” என,
‘எங்கே ஜெயசீலன் வந்துவிடுவாரோ..? தான் பேசுவதை கேட்டு விடுவாரோ..?’ என பயத்தோடு திரும்பி பார்த்து, அவர் வராததை உறுதி செய்து கொண்டு பேசியவனின் வார்த்தை அனைத்தும்,
தன் அண்ணனோடு பேசி ஒன்றாக சேர்ந்திருக்க முடியாத ஏக்கமும், தவிப்பும் நிறைந்திருப்பதை கண்ணில் கட்டி நின்ற விழி நீர் அப்பட்டமாய் காட்டிக்கொடுத்தது.
ஏற்கனவே ஜெயசீலனின் மீது வெறுப்பை வளர்த்திருப்பவளுக்கு, இந்த செய்தி இன்னும் பெரும் கோபத்தை விளைவித்தது.
‘ச்ச.. இவன என்ன ன்னு சொல்ல.. பெத்த பசங்க ஒண்ணா இருக்க விடமாட்டிங்கறான்..
இவனுக்கு சோத்துல விசத்த வெச்சாலும் தப்பில்ல.
இந்த தயாவ சொல்லனும். எத்தன ஏங்கி போயிருக்கு புள்ள.
வளந்தா மட்டும் போதுமா..? சுத்தியிருக்கறவங்க யாருக்கு என்ன வேணுமுன்னு பாக்காம கடிவாளம் கட்டுன கணக்கா, அந்த ஆளு சொன்னதை புடுச்சுக்கிட்டு தொங்கிட்டு..
இந்த ஆளை சும்மா எப்படி விட. எல்லாரும் ஒண்ணா இருந்தா இந்த ஆளு பப்பு வேகாதுன்னு எப்புடி நேக்கா பிரிச்சு வச்சிருக்கான்..” என யமுனாவின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க,
“நீங்களும் இங்கிருந்து போயிடுவீங்களா..?” என்ற ஜெகதீஷின் ஏக்கமான கேள்விக்கு யமுனாவிற்கு பதிலாக,
“இனி எப்பவும் உன்ன தனியா விட்டுட்டு போக மாட்டேன் ஜெகா..” என்ற தீனாவின் குரல் கேட்க,
அந்த குரல் வந்த திசையை பார்த்தவனுக்கு அதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் சட்டென வெளிவந்திருந்தது.
ஜெகதீஷின் மனதில் இருப்பதை வெளியே கொண்டு வர வேண்டி தீனாவை மரத்திற்கு பின் இருக்க சொல்லிவிட்டே யமுனா அவனிடம் பேச ஆரம்பித்திருக்க,
‘எப்படிப்பட்ட முட்டாளாய் இதுவரை இருந்திருக்கிறேன் நான்..’ என்ற கோபம் தன் மேலேயே எழுந்தது தீனாவிற்கு.
‘வளர்ந்த ஆண் மகனான தனக்கே யாரும் இல்லாமல் இருந்தது அவ்வளவு வேதனையை தந்தது எனில்.. இரண்டு வயதில் ஒரே நேரத்தில் அக்கா, அண்ணா என இருந்த இருவரும் ஒன்றாக அவனை விட்டு சென்றுவிட்டதை அவனால் எப்படி தாங்கியிருக்க முடியும்..?’ என இப்போது தான் உறைத்தது அவனுக்கு.
அதில் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி வருவதற்குள் தான் ஜெகதீஷ் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தான்.
“ண்ணா..!!” என்றவனின் குரலில் இருந்த அந்த ஏக்கம்.. அவசரமாக அவனை தூக்கி தன் மடியில் வைத்து கட்டிக்கொள்ள அப்படி ஒரு அழுகை அந்த பாலகனுக்கு.
அதை கண்ட அண்ணனுக்கோ வார்த்தை எதுவும் வராமல் தொண்டை அடைத்து போனது.
இருவரின் நிலையை கண்ட யமுனாவிற்கும் ஒரு மாதிரி ஆகிப்போக அந்த இடமே சற்று நேரம் கனமான அமைதியை தத்தெடுத்திருந்தது.
முதலில் தெளிந்தது யமுனாவே தான்.
“தயா.. என்ன இது..? அவனை சரி பண்ணறத விட்டுட்டு நீங்களும்..” என இருவரின் முதுகையும் லேசாக வருடி சொல்ல,
தனது கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியிருந்ததால் சிவந்திருந்த விழியோடு அவளை ஏறிட்டு பார்த்தவன் கண்ணில் அவளுக்கான நன்றியை கண்டவளுக்கு கோபமே..
‘என்ன இது..?’ என்பதான பார்வை பார்த்தவள் ஜெகதீஷை ஜாடையாய் காட்ட,
“ஜெகா இங்கே பாரு.. இனி அண்ணா இங்கே உன்கூட தான் இருப்பேன்.
அப்பா இல்ல.. இனி யாரா இருந்தாலும் என் ஜெகா மேல கை வைக்க விடமாட்டேன்.. சரியா..?” என அவனின் கண்ணீரை துடைத்துவிட்டு சொல்ல,
“நிஜமாவா.. இனி இங்கிருந்து போக மாட்டிங்களா…?” என்றான் அப்போதும் தேம்பிக்கொண்டு.
“என்னோட ஜெகா மேல ப்ராமிஸ்.. நீயா சொல்ற வரை அண்ணா உன் கூட இங்கே தான் இருப்பேன்.
நீ ஆசப்பட்ட மாதிரி இனி பாலா கூட அண்ணா எப்படி இருப்பேனோ அதே மாதிரி உன்கூடவும் இருப்பேன்..” என்றதும் அப்படி ஒரு சந்தோஷம் அவனிடம்.
அதில் கண்ணீர் நின்று விட, “அப்பா எதாவது சொன்னா..?” என்றான் சிறு தயக்கத்துடன்.
“என்னைய மீறி எதாவது கேட்டிருவாரா அவரூ..?” என தீனாவிற்கு பதில்.. யமுனா சொன்ன தோரணையில் அண்ணன் தம்பி இருவருக்கும் முகம் கொள்ளா புன்னகை.
அந்த புன்னகை அங்கிருந்த இறுக்கமான சூழலை இலகுவாக்க,
“ண்ணா.. நா ஸ்கூல்ல நிறைய காம்படீஷன்ல வின் பண்ணி சர்ட்டிபிகேட்ஸ் வச்சிருக்கேன். இங்கே யாருமே நா காட்டினா அத பார்க்க கூட மாட்டாங்க..
நா எடுத்துட்டு வரவா.. நீங்க பார்க்கறீங்களா..?” என ஆசையாய் ஜெகா கேட்க,
“இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்க கூடாது ஜெகா. கொண்டு வந்து பாருங்க ண்ணான்னு கொடுக்கனும்..” என அவனுக்கான உரிமையை தெளிவாக்கினாள் யமுனா.
அடுத்த நொடி ஆர்வமாய் தலையசைத்து வீட்டை நோக்கி ஓடியிருந்தான் ஜெகதீஷ்.
அதை பார்த்திருந்த யமுனாவிற்குள் தீனாவின் மீது எழுந்தது அதீத ஆதங்கமே..
எப்படி இப்படி இருக்க முடிந்தது என்று..?
‘போனது போகட்டும்.. இனி நடப்பது சரியாக இருக்க தன்னாலானதை செய்ய வேண்டும்..’ என்ற எண்ணத்தோடு இருந்தவளை கலைத்தது தீனாவின் அருகாமை.
அதுவரை நாகரீகமான இடைவெளியோடு அமர்ந்திருந்தவன் அவளை நெருங்கி யமுனாவின் கன்னத்தை தனதிரு கைகளால் பற்றி அவளின் விழி பார்த்து,
“தேங்க்ஸ் ன்னு ஒத்த வார்த்தையில சொல்ல முடியாத அளவு நீ.. என் வாழ்க்கைய மாத்தியிருக்க பாப்பா.
இதுவரைக்கும் தனிமைங்கற இருட்டு மட்டும் தான் வாழ்க்கை முழுமைக்கும் ன்னு தனிச்சு கிடந்தவனுக்கு.. சின்ன ஒரு அகல் விளக்கா நீ வந்து இருக்கேன்னு தான் நா நினைச்சேன்..
ஆனா நீ என் மறுபாதி ஆனா செக்கண்ட்ல இருந்து மொத்த இருளையும் விலக்கி எனக்கான புது உலகத்தை காட்டிட்டு இருக்கே..
இப்போ இந்த உலகத்துல இருக்கறவங்கள்ல அதிக சந்தோஷத்தோடு இருக்கறவன் யார் ன்னு கேட்டா தயங்காம சொல்வேன் அது நான்னு..
இந்த சந்தோஷம் என்னோட ஆயுள் வரை நீளும் ன்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு..
எல்லாமே.. இது எல்லாமே உன்னால மட்டும் தான் பாப்பா..” என அதிக உணர்ச்சிவசப்பட்டு சொன்னவன் அவளின் உச்சியில் முத்தமிட்டு விலகினான்.
அவனின் உணர்வை புரிந்து கொண்டவளும் அவனின் மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதை கெடுக்க விரும்பாது.. அதே இதத்தோடு அவனின் தோள் சாய்ந்து அவனின் கரத்தோடு கரம் கோர்த்தாள்.
எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே
error: Content is protected !!