Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 7

அன்பு – 7

“நீங்க என்ன சொன்னாலும், என்னால இதை ஏத்துக்க முடியலைங்க!!! அதெப்படி யாருனே தெரியாதவங்க வீட்டுக்கு ஒரு வயசுப்பிள்ளையை வேலைக்கு அனுப்ப முடியும்??? வயசானா புத்தி மழுங்கிப் போயிடும்னு சொல்றது உங்க விஷயத்துல சரியாத்தான் இருக்கு!!!” என கோபத்துடன் மொழிந்த சரளாவை, முடிந்தமட்டும் முறைத்த கைலாசம்,



Advertisement

“ஆமா இவளுக்கு மட்டும் அறிவு அப்படியே மண்டையை பிளந்துட்டு கீழ ஊத்துது…” என முணுமுணுத்தவர்,

“யாரு என்னன்னு விசாரிக்காமையா அப்படி விட்டிடுவேன் அவளை!!! உன்னை விட அவ மேல எனக்கு அக்கறை நிறையவே இருக்கு!! உனக்குத்தேவை மாசாமாசம் வட்டிப்பணம் தான?? அது சரியா வந்திடும்!!” என கடுப்புடன் கூறியவர் மீண்டும் செய்தித்தாளில் கவனத்தைத் திருப்ப,

Advertisement

Advertisement

சரளாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது!!

“என்னைய என்ன பணப்பேய்ன்னு சொல்லாம சொல்றீங்களா??”

Advertisement

“நேராவே தான் சொல்றேன்.. நீ ஒரு பணப்பேய் தான்..” என்றவருக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் எழுந்து செல்லப் பார்க்க, அவரை விடவில்லை சரளா.

“என்ன அப்படி பணத்துக்கு அலைஞ்சேன்.. ஊரார் விட்டு பணத்துல ஒத்த பைசாக்கு ஆசைப்பட்டிருக்கேனா நான்.. நமக்கு முறையா வந்து சேர வேண்டிய பணத்தை கூட விட்டுக்கொடுத்துட்டு உட்கார நான் ஒன்னும் உங்களை மாதிரி ஏமாளி இல்லை!!” என படபடவென பொரிந்தவருக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை.

‘ என்னை எப்படி இவர் பணப்பேய் என்று சொல்லலாம்??’ என் எண்ணி எண்ணி குமைந்து போனார்.

கைலாசமோ மனைவியின் கோபத்தில் கொஞ்சமும் அசராமல் மனைவியை உறுத்து விழித்தவர்,

“மனசாட்சியோட இருந்தா ஏமாளின்னு பேரா??”

“எனக்கு தபால் நிலையத்துல வேலை வாங்கிக் கொடுத்தது அஞ்சலியோட அப்பான்னு உனக்கு நல்லாவே தெரியும்.. நம்ம அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்டபோ, யோசிக்காம பணத்தைக் கொடுத்து அவன் உதவி பண்ணப்போ மட்டும் உனக்கு இனிச்சிச்சா??? கொஞ்சமாச்சும் மனசாட்சியோட இரு!!!”

“உனக்கு பயந்து தான் அந்த பொண்ணுக்கு கடனா அந்த பணத்தைக் கொடுத்தேன்.. இல்லைனா என் நண்பன் செஞ்ச உதவிக்கு, அப்படியே கொடுத்திருப்பேன்” என ஆதங்கத்தில் மனிதர் பொரிய,

சேலையை அள்ளி இடுப்பில் சொருகிக் கொண்டு, “நல்லா இருக்கே சங்கதி!! யாரு வீட்டுக் காசை யாருக்கு தூக்கிக் கொடுக்கிறது?? நமக்கும் ஒரு பையன் இருக்கான்.. அவனுக்கும் ஒரு குடும்பம் இருக்கு.. அதெல்லாம் நினைப்பிருக்கா உங்களுக்கு?? யார் பெத்த பிள்ளைக்கோ நம்ம வீட்டு காசை தூக்கிக் கொடுப்பீங்களோ?? அப்படி மட்டும் பண்ணிப் பாருங்க.. அப்பறம் சேதி என்னன்னு தெரியும்!!!” என சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்த சரளாவை,

‘ அவ்வளவு தான் நீ!!’ என்பது போல் அற்பமாய் பார்த்த கைலாசம்,

“உனக்குத் தேவை வட்டிப்பணம் தான?? அது மாசமாசம் வரும்!! வாங்கி நல்லா பணத்தை அவிச்சு அவிச்சுத் தின்னு!!! இப்போ என்னை ஆளை விடு!! இனி அஞ்சலி விஷயத்துல தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை.. அவளை நான் பார்த்துக்கிறேன்!!” என முடிவாகக் கூறியவர், மனைவியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட,

“நல்லதுக்கே காலமில்லை!! இவங்களுக்கெல்லாம் பட்டாதான் புத்தி வரும்!!!” என முந்தானையை கடுப்புடன் உதறி சொருகிவிட்டு உள்ளே சென்று விட்டார் சரளா.

அஞ்சலி வரவேற்பாளராக(receptionist) வேலை பார்த்து வந்த அந்த பல்நோக்கு மருத்துவமனையில், பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டு விட, தற்காலிகமாக அம்மருத்துவமனையை செயல்பட தடை விதித்திருந்தது அரசு.

எனவே அஞ்சலி வேறு ஒரு சிறிய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்க, அங்கு கொடுக்கப்படும் சம்பளம் அவள் கையைக் கடித்தது.

எவ்வளவு சிக்கனமாக செலவு செய்தும், பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட, சரளாவிற்கு கொடுக்க வேண்டிய வட்டிப்பணம் சற்று தாமதமானது.

அவளின் நிலைமையை புரிந்து அனுசரித்து செல்லாமல், கடுஞ்சொற்களால் அவளை காயப்படுத்தியிருந்தார் சரளா.

அதை அறிந்து கொண்ட கைலாசத்திற்கு மனைவி மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தாலும், பிறவி குணத்தை மாற்றுவது கடினம் என அவரை விட்டுவிட்டு, அஞ்சலிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தவர்,

தன்னுடைய தம்பியின் மருமகன், சென்னையில் வேலைவாய்ப்புக்காக உருவாக்கியிருக்கும் நிறுவனம் மூலம் அஞ்சலிக்கு ஏதாவது நல்ல சம்பளத்தில் பாதுகாப்பான இடத்தில் வேலை தேடித் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர் என்பதால், சற்று துரிதகதியிலே வேலை நடக்க, ஒரு வாரத்தில் கைலாசத்தை அழைத்த அவரின் தம்பி மருமகன், ஒரு வேலையைப் பற்றிய விவரங்களைக் கூறினான்.

சென்னையில் உள்ள சின்னத்திரை பிரபலம் ஒருவரை உடனிருந்து பார்த்துக்கொள்ள வேண்டும், வீட்டுவேலை செய்வதற்கு எல்லாம் ஆள் இருக்க, சமையல் செய்து அவளை பார்த்துக்கொள்வது மட்டுமே அஞ்சலியின் வேலை என அவன் விளக்க, கைலாசத்திற்கு தடுமாற்றம்.

‘ எப்படி வளர்ந்த பெண்!!! இன்று யாரோ ஒருவருக்கு சேவகம் செய்வதா??’ என அவர் மிகவும் தயங்க,

“மாமா!! அந்தப்பொண்ணு டிகிரி கூட ஒழுங்கா படிச்சு முடிக்கலை!!! வெளியே வேலை தேடினாலும் இதை விட நல்ல சம்பளம் கிடைக்காது.. அந்தப்பொண்ணுக்கு ஏதோ நல்ல நேரம் போல.. அதான் சரியா இதே நேரம் இந்த வேலை தேடி வந்திருக்கு.. தங்குறத்துக்கு பாதுகாப்பான இடம், சாப்பாடு எல்லாம் கொடுத்து மாசம் நாப்பதாயிரம் கொடுக்கிறதெல்லாம் இந்தக்காலத்துல எத்தனை பேருக்கு அமையும்..  ரொம்ப யோசிக்காம அவங்களை அனுப்பி வைங்க!! நான் பார்த்துக்கிறேன்!!!” என அந்த மருமகன் பேசிப் பேசியே கைலாசத்தைக் கரைக்க,

“ஆனாலும், சினிமா ஆளுங்க.. அப்படி இப்படி இருப்பாங்க.. வயசுப்பொண்ணுப்பா.. கூட ஒரு குழந்தை வேற.. ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா என் மனசாட்சியே என்னை சும்மா விடாது!!” என அஞ்சலியின் பாதுகாப்பை எண்ணி அவர் இன்னும் தயங்கினார்.

“அய்யோ மாமா!! நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை.. அந்த செலிபிரிட்டி மாசமா இருக்காங்க.. அவங்க வீட்டுக்காரரும் சூட்டிங்ன்னு வெளியூர்ல இருக்காங்க.. தனியா இருக்க பொண்ணை பார்த்துக்கணும்னு தான் அவங்க நம்பிக்கையான ஆளா தேடிட்டு இருக்காங்க.. நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் ஆகாது.. நம்ம எல்லாமே லீகலா பேசி சைன் வாங்கிட்டு தான் அந்தப்பொண்ணை அங்க அனுப்புவோம்.. அப்படி ஏதாவது நம்பிக்கை இல்லாத இடத்தை உங்க கிட்ட கொண்டு வருவேனா?? என்னை நம்புங்க!!” என அவன் வாக்குறுதி கொடுக்க,

ஏதோ சமாதானம் ஆனாலும், நேரில் சென்று விசாரித்து, அனைத்தும் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அஞ்சலியை அங்கு அனுப்புவது என முடிவெடுத்துக் கொண்ட கைலாசமும், இந்த வார இறுதியில் அங்கு வருவதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

சரளாவிடமோ, அஞ்சலியிடமோ இதைப்பற்றி ஏதும் சொல்லிக்கொள்ளாமல் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன் என்று கூறியவர், சொன்னபடி அங்கு சென்று மதுவை நேரில் சந்தித்தே பேசி அனைத்தையும் சரி பார்த்து திருப்தி கொண்டவர், இங்கு வந்ததும் மெதுவாக அஞ்சலியிடம் விஷயத்தை தெரிவிக்க,  அவளிடம் மெலிதாய் அதிர்ச்சி தோன்றியது!!

ஆனாலும் அதை சாமர்த்தியமாக மறைத்தவள், தனக்காக இவ்வளவு பார்த்துப் பார்த்து செய்யும் கைலாசத்தின் அன்பின் மேல் மரியாதை கொண்டு, எவ்வித மறுப்பும் இன்றி உடனே சம்மதம் சொல்லிவிட,

“தப்பா எடுத்துக்காத மா!! என்னடா இந்த மாதிரி ஒரு வேலை வாங்கி கொடுத்துட்டேன்னு!! நீ டிகிரி முடிக்காததுனால இந்த அளவு சம்பளத்துல வேற வேலை எங்கேயும் கிடைக்கலை!! நீ இங்க போய் கொஞ்ச நாள் வேலை பாரு!! கூடிய சீக்கிரமே இங்கேயே நல்லதா ஏதாவது ஒரு வேலை நான் ரெடி பண்ணி வைக்கிறேன் அதுக்குள்ள!! உன்னை இந்த மாதிரி வேலைக்கு சேர்த்து விடுறேன்னு தப்பா நினைச்சுக்காதம்மா எதுவும்!!” என்ற கைலாசத்தை, நன்றிப் பெருக்குடன் ஏறிட்ட அஞ்சலி,

“அய்யோ அங்கிள்!! திருடுறது, பிச்சை எடுக்கிறதைத் தவிர மத்த எல்லாமே மதிப்பான வேலை தான் என்னைப் பொறுத்தவரை.. எனக்காக நீங்க இவ்வளவு பண்ணாதே பெருசு அங்கிள்!! நான் அங்க என்னைக்கு கிளம்பனும்னு மட்டும் சொல்லுங்க!! நான் இங்க அம்மு ஸ்கூல்ல டிசி வாங்க ரெடி பண்றேன்..” என உடனே ஒத்துக்கொண்டாள்.

“அம்முக்கு அங்க பக்கத்துலயே ஸ்கூல் கூட பார்த்திட்டு வந்துட்டேன் மா.. நீ ஒன்னும் கவலைப்படாத.. நான் உன்னை கொண்டு போய் விட்டுட்டு, அம்முவையும் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு தான் கிளம்புவேன்.. அங்க எல்லாம் பேசி வச்சுட்டேன்.. அந்தப்பொண்ணும் தனியா இருக்கும் போல.. அதுனால குழந்தை கூட இருந்தா எனக்கும் ரிலாக்ஸா இருக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்றவர், அங்கு மதுவைச் சந்தித்து பேசிய அனைத்தையும் விளக்கினார்.

அஞ்சலிக்கு, மது யாரென்று தெரிந்திருந்தாலும், அவளும் பிரபஞ்சனும் நண்பர்களாக இருக்கக்கூடும் என நினைத்திருக்கவில்லை!!

அவளின் ஒரே வேண்டுதல் எல்லாம், சென்னையில் தங்கப்போகும் அந்த காலத்தில், பிரபஞ்சனை மட்டும் சந்தித்துவிடக் கூடாது என்பது தான்.

இப்படியாக இவள் அங்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும்போது தான் சரளா, வயசுப்பெண்ணை தனியாக அனுப்புவதா?? என கணவருடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

சரளாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல், அஞ்சலி சென்னை கிளம்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன்வந்து செய்து கொடுத்த கைலாசம், இதோ இன்று அவர்களை கூட்டிக்கொண்டு கிளம்பியும் விட்டார்.

என்னதான் பண விஷயத்தில் கறாராக இருந்தாலும், இத்தனை நாளாய் அவர்களின் தனிமையை போக்கி பொழுதை இனிமையாக்கிக் கொடுத்த அம்முவின் பிரிவு, சரளாவை மிகவும் வாட்ட,

“இதோ பாரு!! பொம்பளைப் பிள்ளையை கூட்டிட்டு போற!! சூதானம்!! காலம் ரொம்ப கெட்டு போய் கிடக்கு!! யாரை நம்பியும் அம்முவை தனியா விட்டுட்டு எங்கேயும் போகாத என்ன??” என அதட்டல் போல் அஞ்சலிக்கு சொன்னவர்,

“இந்தாடி சின்னக்குட்டி!! அங்க போனதும் இந்தக்கிழவியை மறந்துடாத!! வாரம் ஒருக்கா போனை போடு!!!” என குழந்தையின் கன்னம் கிள்ளி முத்திக் கொண்டார்!!

“சரிங்க சரளா மா!! நாங்க போயிட்டு வரோம்.. இதுவரைக்கும் எங்களுக்கு செஞ்ச உதவிக்கு ரொம்பவே நன்றி!!! உடம்பைப் பார்த்துக்கோங்க!!” என அஞ்சலியும் நன்முறையில் விடைபெற்றுக் கிளம்ப,

அன்னையைக் கொண்டு மகளும், சரளாவிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.

என்னதான் மனைவி மீது கோபமும் மனத்தாங்கலும் மலையளவு இருந்தாலும்,

“பார்த்து இரு சூதானமா!! போயிட்டு வந்துடுறேன்!!” என சொல்லிவிட்டே கிளம்பினார் கைலாசம்!!

இரவு ரயிலில் கிளம்பி மூவருமாக சென்னை வந்து சேர அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டது.

இவ்வளவு அதிகாலையில் மதுவின் இருப்பிடத்திற்கு செல்வது உசிதமல்ல என்றிருந்த கைலாசம், அங்கேயே அருகில் ஓரளவு தரமான லாட்ஜ் ஒன்றில் தங்கி, ஓய்வெடுத்து விட்டு பத்து மணிக்கு மேல் அங்கு செல்லலாம் எனக் கூறிவிட, அதன்படி மூவரும் அருகில் இருந்த விடுதி ஒன்றில் இரண்டு அறையெடுத்து தங்கியிருந்தனர்.

இரவெல்லாம் சரியாக உறங்காததால், அறைக்கு வந்ததுமே அம்மு மீண்டும் நன்றாக படுத்து உறங்கிவிட, அஞ்சலிக்குத்தான் உறக்கம் அருகில் கூட வரவில்லை!!!

கைலாசம் சொன்னதைக் கேட்டு இங்கு வந்திருக்கக்கூடாதோ என காலம் கடந்து வருந்தினாள் அந்தப் பேதை!!

பிரபஞ்சனைப் பற்றி அனைத்தும் அறியாவிட்டாலும், இணையத்தின் உதவியில் அவனும் இதே சென்னை மாகாணத்தில் தான் இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்தே இருக்க,

அவன் இருக்கும் அதே நகரில் அவன் சுவாசம் தீண்டிச் செல்லும் காற்றை சுவாசித்துக் கொண்டே இனி வாழ வேண்டும் எனும் நினைவே பெண்ணவளை மூச்சடைக்கச் செய்ய, பட்டென கட்டிலில் இருந்து எழுந்து கொண்டவள், பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே வர,

கோடைக்காலத் தென்றல், பெண்ணவளின் முகத்தில் மோதி, அவளை ஆசுவாசப்படுத்தியது!!!

ஏதேதோ எண்ணங்களில் உழன்று தவித்தவள், இறுதியில்,

“இவ்வளவு பெரிய ஊர்ல, அவனும் நானும் சந்திச்சுக்க வாய்ப்பே இல்லை!!! கண்டதையும் யோசிச்சுக் குழம்பாத!!” என தனக்குத் தானே கூறிக்கொண்டவள், ஒரு தெளிவு பிறந்த பின்னே நேரமாவதைத் தொடர்ந்து போய் குளித்துத் தயாராகி, அம்முவையும் எழுப்பி தயார் செய்திருந்தாள்.

கைலாசமும் கிளம்பி வர, மூவருமாக உணவருந்திவிட்டு, நுங்கம்பாக்கத்தில் அமைந்திருந்த அந்த உயர்தர அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

அரை மணி நேர பயணத்தில் அந்த வளாகத்தை அடைந்தவர்கள், மின்தூக்கியின் உதவியுடன் மதுவின் இல்லத்தை அடைந்தார்கள்.

முன்பே ஏஜென்சியிடம் இருந்து தகவல் வந்திருந்தபடியால், மதுவும் தயாராகவே இருக்க, இன்முகத்துடன் அவர்களை வரவேற்றாள்.

ஏழு வயது குழந்தையின் அன்னை என ஏஜன்சியில் சொல்லியதும், ஒரு மத்திம வயது பெண்ணை எதிர்பார்த்திருந்த மது, தன்னை விட சிறிய பெண்ணாக இருந்த அஞ்சலியை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் விரிந்த கண்களிலே தெரிந்தது!!

“வாங்க!! வாங்க!!” என வரவேற்றவள், அங்கே அன்னையின் காலைக் கட்டிக்கொண்டு, தன் கோலி குண்டு கண்களால் புது இடத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த அம்முவைக் கண்டு,

“ஹேய் கியூட்டி!! அம்மா காலை விட்டுட்டு இங்க வாங்க.. சோட்டா பீம் பில்லோ இருக்கு பாருங்க!!” என குழந்தைக்கு ஆசை காட்ட,

சோட்டா பீம் உருவத்தைக் கொண்டு உருவாகியிருந்த அந்த தலையணையை ஆசையாய்ப் பார்த்த அம்முவின் கண்கள், அம்மாவைத் துணைக்கழைத்தது.

அவள் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட மது,

“நோ!! நோ!! அம்மா வந்தாலாம் தர மாட்டேன்.. கியூட்டி கிட்ட வந்தா மட்டும் தான்!!” என கண்களை உருட்டி பேரம் பேசினாள் மது!!

இன்னும் குழந்தை தயக்கத்தில் இருந்து வெளிவராமல் அங்கேயே நிற்க, அஞ்சலி தான்,

“ஆன்டி கூப்பிடுறாங்க பாரு!! போ அம்மு!!” என மகளை ஊக்கப்படுத்தினாள்.

“ஹலோ!! ஆன்டி எல்லாம் இல்லை.. அக்கான்னு கூப்பிடு!! இல்லை மதுன்னே கூப்பிடு கியூட்டி நீ!! அம்மா சொல்றதை எல்லாம் கேட்காத!!” என மது பட்டென மறுத்துச் சொல்ல, அஞ்சலி உதட்டோரம் இளநகை தோன்றி மறைந்தது!!

அன்னையின் சிரிப்பில் குழந்தையும் தன் தயக்கத்தை கொஞ்சம் விட்டு மதுவின் அருகில் செல்ல, அவளை அள்ளி தன் மடியில் ஆசையாய் அமர்த்திக்கொண்ட மது, மென்மையாய் குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைக்க, சின்னச்சிட்டுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது!!

உடலை நெளித்து புன்னகையை அடக்கி, அன்னையை அம்மு நோக்க,

“இனி அம்மா கிட்ட எல்லாம் இல்லை.. என் கூட தான்!! எனக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லைன்னு தான் எனக்கு ஃப்ரெண்டா இருக்க, அம்மா உன்னை என்கிட்ட கூட்டிட்டு வந்திருக்காங்க.. என் கூட பிரெண்டா இருப்பியா நீ??” என பாவமாக மது கேட்க,

தலையை சம்மதமாய் ஆட்டி வைத்த குழந்தை மீண்டும் அன்னையிடம் போக வேண்டும் என்பதைப் போல் அஞ்சலியை பார்த்து வைக்க,

மதுவும் பெரிய மனது வைத்து குழந்தையை இறக்கி விட்டுவிட்டாள்.

இத்தனை நாளாய், இருந்த இறுக்கம், இன்று மழலையின் அருகில் மறைந்து போவதை உணர்ந்த மதுவிற்கு, மனது இதமாக, இன்முகமாகவே அவர்களை உபசரித்து பேசினாள்.

பெரிய திரைப்பிரபலம், நேரில் எப்படி இருக்கக்கூடுமோ என பயந்து கொண்டே வந்த அஞ்சலிக்கு, மதுவின் நட்பான பேச்சில் மனக்கலக்கம் குறைய, அவளும் நன்முறையிலே அவளின் உடல்நிலையைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டாள்.

“ஸீ அஞ்சலி!! உனக்கு இங்க..ப்ச்!!! வா போன்னு பேசலாம் தானே?? நீ என்னை விட சின்னப் பொண்ணா தான் தெரியுற.. அதான் டக்குனு அப்படியே வந்திருச்சு!!” என மது அனுமதி கேட்க,

“ஹய்யோ!! இதெல்லாம் கேட்கணுமா?? உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படியே கூப்பிடுங்க மேடம்!!” என்றாள் அஞ்சலி!!

“அப்போ தேல்பத்ரிசிங்னு கூப்பிடவா??” என குறும்பு கொப்பளிக்க கேட்ட மது,

அஞ்சலி திருதிருவென முழிப்பதைக் கண்டு பெரிதாய் புன்னகைத்தாள்.

“இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் அஞ்சலி!! ஃப்ரீயா இரு!! எனக்கு கேர் டேக்கரா எல்லாம் இருக்க வேண்டாம்.. ஒரு பிரெண்டா இரு!! அதான் எனக்கு வேண்டும்.. என்னையே பார்த்துக்க முடியாத அளவுக்கு அவ்ளோ மோசமா என் ஹெல்த் இல்லை!! பட் எல்லாரும் ரெஸ்ட் எடு எடுன்னு என்னை சும்மா இருக்க வச்சே இல்லாத வியாதி எல்லாம் எனக்கு உண்டுபண்றாங்க!! பிரக்னென்சி இஸ் நாட் அ டிசீஸ்ன்னு இவங்களுக்கெல்லாம் எப்படி புரிய வைக்கன்னு எனக்குத் தெரியலை!!” என அலுத்துக் கொண்ட மது,

“வீடு க்ளீன் பண்றதுக்கு ஒரு அக்கா மார்னிங் வந்துட்டு போயிடுவாங்க.. அதுக்கப்பறம் நம்ம மட்டும் தான்.. சோ கொஞ்சம் கொஞ்சமா நம்ம பேசி ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம்.. இப்போ உனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னா லெஃப்ட் சைட்ல செகண்டா இருக்கே.. அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ.. அதான் உன்னோட ரூம்.. பாப்பாவை ஸ்கூல் சேர்க்கணும்னு அங்கிள் சொன்னாரு.. இங்க பக்கத்துல ஸ்கூல்ல சொல்லி வச்சிருக்கேன்… இது சம்மர் ஹாலிடே!! நம்ம போய் ஒருமுறை பார்த்திட்டு வந்து உனக்கு ஓகேன்னா அட்மிஷன் போட்டிடலாம்..” என்று இயல்பாக உரையாடிய மதுவை அஞ்சலிக்கு மிகவும் பிடித்துப்போனது.

கைலாசத்திற்கும் மதுவின் பேச்சில் இருந்த கொஞ்ச நஞ்ச கலக்கமும் தீர்ந்து போய் மனம் நிம்மதியுற, மதுவிடமும் அஞ்சலியிடமும் சொல்லிக்கொண்டு அவர் புறப்பட்டார்.

“எதுனாலும் தயங்காம போன் பண்ணு அஞ்சலி!! நான் இருக்கேன் உனக்கு!!” என தைரியமளித்தவர், மனைவி தனியாக இருக்கிறாளே என அன்றே ஹைதராபாத் கிளம்புவதாக சொல்லிச் சென்றார்.

அவர் சென்ற சற்று நேரத்திலே, மதுவின் குறும்புத்தனத்தில் அம்முவும் தன் தயக்கத்தை விட்டுவிட்டு மதுவுடன் ஒட்டிக்கொண்டாள்.

இயல்பில் கலகலப்பான சுபாவம் கொண்ட மதுவிற்கு பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்ததும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க, அஞ்சலிக்கு பொழுது எப்படிப் போனதென்றே தெரியவில்லை.

பேச்சு சுவாரசியத்தில் நேரம் கடந்திருக்க, மதிய உணவு நேரம் வந்திருந்தது!!

“நேரம் ஆச்சே அக்கா!! என்ன சமைக்கட்டும்?? உங்களுக்கு என்ன பிடிக்கும்??” என அஞ்சலி எழுந்துகொள்ள,

“அடடா!! ரொம்ப பொறுப்பா இருக்கியே மா.. ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்டா நீ ஸ்கூல்ல??” என மது சலித்துக்கொள்ள,

லேசாய் புன்னகைத்தாள் அஞ்சலி!!

“எனக்குன்னு வரது எல்லாம் இப்படி ஊமையா தான் வரும் போல!!” என நினைத்து பெருமூச்சு விட்ட மது,

“சமையல் எல்லாம் காலையிலேயே என்னோட அடிமை செஞ்சு வச்சிட்டு தான் போயிருக்கான்.. அதுனால நீ கவலைப்படாம பாப்பாக்கு போய் சாப்பாடு ஊட்டிட்டு நீ சாப்பிடு!! நான் சாப்பிட லேட் ஆகும்.. இப்போதான் ஜுஸ் குடிச்சிருக்கேன்” என அறிவுறுத்தினாள்.

‘ பரவாயில்லை!! இவங்க மேல ரொம்ப பாசம் போல இவங்க வீட்டுக்காரருக்கு!! சமைச்சு வச்சிட்டு போயிருக்காரே!!’ என நினைத்துக்கொண்ட அஞ்சலி, குழந்தைக்கு மட்டும் உணவு கொடுத்தவள், மது சாப்பிடுவதற்காக காத்திருக்க,

சரியாக அதே நேரம் அழைப்பு மணி ஒலித்தது!!

‘ வந்துட்டான் வாயில்லாபூச்சி!!’ என முணுமுணுத்துக் கொண்ட மது,

“அந்தக்கதவை மட்டும் திறந்து விடு அஞ்சலி!!” என அஞ்சலியை பணித்தவள்,

“எப்போ வர சொன்னா எப்போ வரான் பாரு!! வரட்டும் இன்னைக்கு!!” எனத் திட்டுவது அஞ்சலிக்கும் கேட்க,

மதுவின் கணவர் வந்துவிட்டார் போல என நினைத்துக் கொண்டே கதவைத் திறந்த அஞ்சலி, அங்கே நின்றிருந்த பிரபஞ்சனைக் கண்டு உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சியடைந்தாள்!!!!

“தேடல் தீர்ந்து தொலைந்த பின், 

 தொலைந்த காதல் கைவந்து சேர்ந்தால்?? “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!