Skip to content
Post Views: 2,386
“அண்ணி, எனக்கு கொஞ்சம் தாகமா இருக்கு.
ஜூஸ் வாங்க போன உங்க தம்பிய இன்னும் காணோம்.
கூட துணைக்கு வர்றீங்களா?
எதுத்த கடையில போய் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடலாம்” என்று ப்ரியாவை வெளியே அழைத்தாள் மகி.
Advertisement
அவள் தன்னை துணைக்கு எல்லாம் அழைப்பதைக் கொஞ்சம் கேள்வியாக பார்த்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் மகியோடு வெளியே வந்தாள் ப்ரியா.
அவளோடு சேர்ந்து வெளியே வந்தவள், பார்க்கிங் ஏரியாவில் சந்துருவின் டாக்ஸி நிற்க கண்டு, அதன் அருகில் சென்றாள்.
சந்துரு டிரைவர் சீட்டில் இருக்க, பின் இருக்கையில் ராஜுவின் மார்பில் அட்டை போல ஒட்டிக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்தபடி விசும்பிக் கொண்டிருந்தாள் சினேகா!
Advertisement
மகியும் ப்ரியாவும் அதிர்ச்சியுடன் “என்னாச்சு?” என்று கூவியே விட்டார்கள்!
Advertisement
ப்ரியாவுக்கு அதிர்ச்சியுடன் கூடவே சங்கடமும்!
என்ன தான் டார்லிங் டார்லிங் என்று அழைத்தாலும் சினேகாவை மகள் மாதிரி தான் ராஜு நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்!
ஆனால் மகி?
Advertisement
என்ன இருந்தாலும் வயதிற்கு வந்து விட்ட பெண்பிள்ளை, இப்படி தன் புருசனை இப்படி கட்டிக் கொண்டு இருப்பதை மகி தப்பாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற இறைஞ்சல் வேறு அவளிடம்!
ஆனால், மகியோ அதைப் பற்றி சிறிதும் சிந்திக்காதவளாய்,
“என்னங்க ஆச்சு பாப்பாவுக்கு?” என்று அருகில் சென்றாள்.
“சொல்றேன்..” என்ற ராஜு,
“பாப்பா.. இங்க பாரு.. நாம அம்மா கிட்ட வந்துட்டோம். இனி பயம் இல்ல..” என்று அவளை உலுக்கினான்.
“ஏய்.. சினேகா.. என்னாச்சுடி. உனக்கு?
முதல்ல மாமாவை விட்டு நகர்ந்து உட்காரு” என்று அவளைத் தானும் உலுக்கினாள் ப்ரியா.
சினேகாவோ இன்னும் பயத்துடன் ராஜுவைக் கட்டிக்கொண்டாள்.
“அய்யோ விடுங்க அண்ணி..
பாவம் குழந்தை ஏதோ ஷாக்கில் இருக்கா!
என்ன தாங்க ஆச்சு? இவ ஏன் இப்படி பயந்து கிடக்கா?
அண்ணி.. நீங்க என்ன சொன்னீங்க? அவங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டேன்.
அவர் வந்துடுவார் சினேகா துணைக்கு.
அவர் வரும்வரை டுயுஷன் அக்கா வீட்டில் இருப்பான்னு தானே சொன்னீங்க.
நீங்க அப்படி சொன்னதால நானும் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்.
இல்லனா யாழினி மாதிரி இவளையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வர சொல்லி இருப்பேனே!
ஏன்மா.. நைட் பூராவும் தனியா இருந்தியா என்ன? உங்க அப்பா வீட்டுக்கு வரவே இல்லையா?
அப்படி தனியா இருந்திருந்தா மாமாவுக்கு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே!” என்று சினேகாவிடம் மென்மையாக கேட்டாள் மகி!
“ஏய்.. சொல்லுடி உங்க அப்பன் வீட்டுக்கு வந்தானா இல்லியா?” என்று கோபமாக கேட்டாள் ப்ரியா.
“அக்கா.. விடு.. அவளைத் தொந்திரவு செய்யாதே!
பாரு புள்ளய , எப்படி பயந்து போய் கிடக்குன்னு!
என்ன நடந்ததுன்னு நானே சொல்றேன்.
நீ காருக்குள்ளே வந்து இவளைக் கொஞ்சம் பிடிச்சுக்கோ. நான் போய் குடிக்க எதாச்சும் வாங்கிட்டு வரேன்” என்றான்.
“டேய்.. நீ இருடா.. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பினான் சந்துரு.
சினேகா ப்ரியாவின் மடியில் படுத்துக் கொண்டு விசும்பினாள்.
அவளுக்கு இன்னமுமே பயம் இருந்தது! உடல் நடுங்கிக் கொண்டிருந்தது!
“அக்கா.. நீ அண்ணனுக்கு ஆக்சிடன்ட் ஆன விஷயத்தை சொல்லி நைட் வர மாட்டேன்னு போன் பண்ணி மாமாவுக்கு சொன்ன இல்ல!
அப்போ மாமா என்ன பதில் சொன்னாரு?”
“அந்த ஆள் எங்க ஒழுங்கா பதில் சொன்னான். என்னமோ.. சரி.. சரின்னு உளறினான் போதையில்!”
“போதையில இருக்கிற ஆள்கிட்ட சொன்னத நம்பிட்டு நீ புள்ளைய தனியா விட்டுட்டு வந்திருக்க!
வந்தவ நைட் பாப்பாவுக்கு போன் பண்ணி கேட்டுகிட்டியா அந்த ஆள் வந்துட்டானா இல்லையான்னு!” கோபமாக கேட்டான் ராஜு.
ப்ரியா தயங்கினாள்.
அவளும் போன் பண்ணிக் கேட்க தான் நினைத்தாள். அவள் போனின் ரீசார்ஜ் காலாவதி ஆகியிருந்தது!
வீட்டில் யார் போனையும், கமலா அம்மா உட்பட யார் போனையும் கேட்டு போன் பண்ண அவளுக்கு அசிங்கமாக இருந்தது!
போன் ரீசார்ஜ் கூட பண்ண வழியில்லாம இருக்கும் தனது நிலையை நினைத்து!
ஆம். அவளுக்கு இப்போது பணத்திற்கு பெரும் திண்டாட்டம் தான்!
அதனால் தானே நாள் முழுக்க நின்று கொண்டே விற்பனை செய்யும் சேல்ஸ் விமன் வேலைக்கு ஒரு ஜவுளிக் கடைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
கையில் இருந்த பணம் முழுவதும் வேல்முருகன் அவன் உறவு வைத்திருக்கும் பெண்ணிற்கு கண்டபடி செலவழித்து விட்டான்.
அவன் பைக் முதல் கொண்டு விற்றும் விட்டான்!
சிநேகாவிற்கு என்று இருக்கும் நகைகள் மட்டுமே இன்னமும் பாக்கி!
ப்ரியா அவற்றைக் கொண்டு போய் தன் நாத்தனார் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு போய் விட்ட மாமியாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாள் பத்திரமாக!
கூடவே வீட்டுப் பத்திரத்தையும்!
அதைக் கேட்டு வந்து தான் வேல் முருகன் அவளைப் போட்டு அடிப்பதே!
இவ்வளவு இருந்தும் சினேகா அவனின் செல்ல மகள்!
அதனால் எத்தனை துர் சேர்க்கைகள் இருந்தாலும் மகள் விசயத்தில் அவன் கவனமாக இருப்பான் என்று எண்ணி விட்டாள் ப்ரியா.
ஆனால் நடந்ததோ வேறு!
ப்ரியா போன் பண்ணி சினேகாவிடம் வேல்முருகன் வரும்வரை இருக்க சொன்னது, டுயுஷன் அக்கா ஜோதியின் வீட்டில்!
அவள் ராஜுவின் க்ளாஸ்மேட்டும் கூட!
ஆனால் அன்று பார்த்து அவள் கணவனுடன் ஒரு வேலையாக டவுனிற்கு சென்றவள் திரும்பி வர லேட்டாகும் என்று சொல்லி, அதே தெருவில் இருக்கும் அவள் அம்மா வீட்டில் போய் இருக்கும்படி சொல்லியிருந்தாள்.
ஆனால் ப்ரியா, ஜோதியின் அம்மாவுடனும் ஏற்கனவே வம்பு பேசி சண்டை போட்டு இருந்தாள்!
அவரிடம் மட்டுமா, கிட்டதட்ட அக்கம் பக்கம் இருக்கும் எல்லோரிடமும் தான்!
வேல்முருகனின் அம்மா மட்டுமே எல்லோரிடமும் நன்றாக பழகி வந்தார்!
இப்போது அவரும் வீட்டில் இல்லாத நிலையில், தெருவில் யாருமே ப்ரியா வீட்டுக்கு செல்வதும் இல்லை!
அதனால் அந்த ஜோதியின் அம்மா சிநேகாவிடமும் கடுப்படிப்பார்!
எனவே அவர்கள் வீட்டுக்கும் செல்ல விரும்பாத சினேகா வீட்டின் கதவை நன்கு பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தாள், அவள் அப்பாவின் வரவை எதிர்பார்த்து!
ஆனால் வந்ததோ, வேல்முருகனின் கள்ளக் காதலியும் அவள் தம்பியும்!
வேல்முருகனின் போனில் ப்ரியா சொன்னதை அவன் அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தார்கள் அப்போது!
“பாப்பா, கதவைத் திற” என்று சொல்லி கதவைத் திறக்க சொல்லி அவனோடு உள்ளே வந்த அந்த பெண், கொஞ்ச நேரத்தில்
“அங்க உங்க அப்பா ஃபுல்லா போதையில உருண்டு கிடக்காரு.
அவர் எங்க இங்க வரப் போறாரு.
மாமா உனக்கு துணையா இங்கயே தங்கிக்குவான்” என்று சொல்லி அவள் பொறுக்கி தம்பியை விட்டு விட்டு செல்ல சினேகா பயத்தில் வெல வெலத்துப் போனாள்!
ஏற்கனவே அவன், அவளை பேட் டச் பண்ண பல முறை முயன்று இருக்கிறான்!
அவனை எண்ணி பயந்தவள் டக்கென்று ஒரு அறைக்குள் போய் உள்ளே பூட்டிக் கொண்டு விட்டாள்.
அவன் போன பின்னே வெளியே வரலாம் என்று நினைத்துக்கொண்டு!
ஆனால் அவனோ போவதாகவே இல்லை!
எப்படி போவான்?
வேல்முருகனிடம் ஒட்ட ஒட்ட எல்லாம் பிடுங்கிக் கொண்ட பின்னும் அவனை இன்னும் கழற்றி விடாமல் இருக்க காரணமே இந்த சினேகா குட்டி தான்!
இன்னிக்கு அவனுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்து இருக்கையில் நழுவ விட அவன் தயாராக இல்லை!
ப்ரியா இப்படி இனி என்றைக்கு பெண்ணைத் தனியே விட்டுட்டு வெளியே போவாள்!
எனவே அவன் நன்றாக ஹாலில் இருக்கும் ஸோஃபாவில் வசதியாக படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தான்!
உள்ளே இருந்த சினேகா அம்மாவுக்கு போன் பண்ணலாம் என்று நினைத்து போன் பண்ணினால்,
இன்கமிங் கால்ஸ் கட் என்று சொல்லி விட்டது ப்ரியாவின் நம்பருக்கு.
பின் ராஜு மாமாவிற்கு பண்ணலாம் என்று ட்ரை செய்த போது சினேகாவின் போன் அணைந்து விட்டது!
அம்மா வரும் வரை தூங்கி விடாமல் இருக்கவென்று வெகு நேரம் போனில் யூடுயுப் பார்த்து போனின் பேட்டரியை ட்ரை செய்து இருந்தாள் அவள்!
சார்ஜ் போடலாம் என்றால், சார்ஜர் வெளியே இருக்கிறது! கதவைத் திறந்து கொண்டு வெளியே போவது சேஃப்டி இல்லை!
வெகு நேரம் பயத்தோடு கண் விழித்துக் கொண்டிருந்தவள், வெளியே அவன் தூங்கி விட்டது தெரிந்து,
மெதுவே கையை ஜன்னலுக்கு வெளியில் விட்டு, ஜன்னலை ஒட்டி இருந்த ஸ்விட்ச் போர்டில் இருந்த சார்ஜரை மெதுவே கழற்றி எடுத்து அவள் இருக்கும் அறையில் சார்ஜ் போட்டாள்.
ஆனால் பாவம், அப்போது பார்த்து கரண்டும் போய் விட, பயத்தின் உச்சத்துக்கே சென்று விட்டாள் அவள்.
விடியற்காலை தான் கரண்ட் வந்தது!
போனில் சார்ஜ் ஏறிய பின், ராஜுவிற்கு அழைத்தாள்.
அவனோ ஹாஸ்பிட்டலில் சிக்னல் கிடைக்காத இடத்தில் வெகு நேரம் உட்கார்ந்து இருந்தான்!
சினேகா உடனே டுயுஷன் அக்காவிற்கு அழைத்து விவரம் சொல்லி விட்டாள்.
அவள் உடனேயே அவள் கணவனுடன் ப்ரியா வீட்டுக்கு சென்றாள்.
உள்ளே நுழைய போனவளை உள்ளே விட மறுத்தான் அந்த கயவன்!
“நான் அவளோட மாமா.
நான் இருக்கிறப்போ நீங்க ஒண்ணும் தேவை இல்ல கிளம்புங்க” என்று சொல்லி துரத்தி விட்டான்!
ராஜுவிற்கும் அழைத்து சொல்லி, அவனை சீக்கிரமே வர சொல்ல, ஜூஸ் வாங்கிக் கொண்டிருந்த அவன், உடனே விரைந்து ப்ரியா வீடு சென்று விட்டான்.
போகும்போதே சந்துருவிற்கும் அழைத்து சொல்ல அவனும் நேரே அங்கு வந்து விட்டான்!
ராஜு உள்ளே நுழைய , தடுத்தவனை ஓங்கி அறைந்து தள்ளினான் ராஜு!
“யாருக்கு யார்டா மாமா? அக்காவை கூட்டிக் கொடுத்து பொழைக்கிற நாய் நீ!
எங்க பாப்பாவுக்கு மாமாவா? அப்ப நான் யார்டா?” என்று மாறி மாறி அவன் கன்னத்தில் அறைந்து கொண்டிருக்கும் போது, உள்ளே இருந்து “மாமா” என்ற சினேகாவின் குரல் கேட்டது!
அதற்குள் சந்துரு வந்து விட அந்த பொறுக்கியை கும்மி எடுக்கும் வேலையை அவன் வாங்கிக் கொண்டான்!
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து ராஜூவைக் கட்டிக் கொண்டாள் சினேகா!
அவளை மெல்ல அணைத்தபடி,
“ஒண்ணும் இல்லடா..அதான் மாமா வந்துட்டேன்ல.
இதோ பாரு அந்த நாயை அடிச்சு துவைச்சு அனுப்பிட்டான் சந்துரு மாமா.
நீ அழாம என் கூட வா!” என்று அவளை தன்னுடன் அழைத்து வந்திருந்தான் ராஜு.
கேட்ட பிரியாவுக்கும் மகிக்கும் நெஞ்சை அடைத்தது!
அய்யோ பாவம் பாப்பா, ராத்திரி முழுக்க பயத்தோட அந்த இருட்டில் எப்படி தான் இருந்துச்சோ?’ என்று மகி சொல்ல,
ப்ரியா ஓ வென்று கதறி அழுது விட்டாள்!
“அண்ணி அழாதீங்க” என்று அவளையும் ஆறுதல் படுத்தியவள்,
“ஏங்க இவ அப்பா எங்க தான் இருக்காருன்னு போய் பார்த்துட்டு வாங்க” என்றாள்.
“ஆமாண்டா.. அந்த சனியன் எங்க விழுந்து கிடைக்கும்னு எனக்கு தெரியும்” என்றாள் ப்ரியா.
“அப்ப ராஜு.. நீ மகியையும் பாப்பாவையும் வீட்டுக்கு காரில் அழைச்சுட்டு போ.
நான் அக்கா கூட போய் மாமா எங்கன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லி கடந்து சென்ற ஒரு ஆட்டோவில் ஏறி சென்றான் சந்துரு.
பிரியா அந்த பெண்ணின் வீட்டுக்கு கூட்டி சென்றாள். அங்கே அவள் இல்லை.
அடிப்பட்ட தம்பியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தாள்.
உள்ளே முழு போதையில், அவிழ்ந்த லுங்கியோடு அங்கேயே மலமும் கழித்து வாந்தி எடுத்து மிகவும் அலங்கோலமாக முகம் சுழிக்கும் வகையில் விழுந்து கிடந்தான் வேல்முருகன்.
மூக்கைப் பொத்தியபடி ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து அவன் ஊற்றப் போன சந்துருவைத் தடுத்தாள் ப்ரியா.
“ஊத்தறதுக்கு முன்னாடி இந்த ஆள் கிடக்கிற நிலையை ஒரு போட்டோ எடுத்துக்கடா உன் போனில்” என்றாள்.
“எதுக்கு?’ என்று கேட்டாலும் , மறுக்காமல் நாலைந்து போட்டோக்கள் எடுத்தான் அவன்.
பின் வேல் முருகன் மேல் தண்ணீரை ஊற்றி அவனின் போதையை கொஞ்சம் தெளிய வைத்து, சுத்தம் செய்து கொள்ள வைத்து வீட்டிற்கு அழைத்து போய் ரூமில் தள்ளி விட்டு பூட்டி விட்டாள் ப்ரியா.
பின் தான் மகளைப் பார்க்க ராஜு வீடு சென்றாள்.
அதற்குள் சினேகாவை ஒரு வழியாக ஆசுவாசம் செய்து இருந்தார்கள் இருவரும்.
வீட்டில் இருந்த வேல் முருகன் போதை தெளிந்து எழுந்து தன்னிலை அறிந்து குளித்து விட்டு கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, தான் இங்கே எப்படி வந்தோம் என்று யோசித்தான்.
ப்ரியா போன் பண்ணி பாப்பா தனியே இருக்கு வீட்டுக்குப் போ என்று சொன்னது கொஞ்சம் நினைவு வந்தது!
கூடவே ராமுவின் ஆக்சிடென்ட் விசயமும்!
ஆனால் இப்போது வீட்டில் யாரும் இல்லையே! இப்போ எங்கே இருக்கிறா பிரியா என்று போன் செய்தான்.
போனை எடுத்தவள் பத்ரகாளி போல ஆவேசம் வந்து அவனைத் திட்டி தீர்த்து விட்டாள் அவள்!
“நீ.. நல்ல மகனா இல்லை. நல்ல புருசனா இல்லை!
ஆனா நல்ல அப்பனா இருப்பன்னு உன்னை நம்பினதுக்கு என் பெண்ணை விடிய விடிய பயத்தில் நடுங்க வச்சுட்ட இல்ல!
இனி எங்க மூஞ்சியிலே முழிக்காத” என்று கத்தி போனை வைத்தாள்!
உடனே ராஜுவிற்கு அழைத்து விட்டான் வேல் முருகன்.
“மச்சான்.. நான் பண்ணினது தப்பு தான்! புரியுது!
என்னோட வேண்டாத சேர்க்கை என் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு வந்து விட்டுடுச்சுன்னு.
ப்ளீஸ் வந்து கதவைத் திறந்து என்னை அழைச்சுட்டு போ. உன் அக்கா காலில் வேணுமின்னா விழறேன்” என்று அழுதான்.
ராஜு உடனே சந்துருவை அனுப்பி வேல் முருகனை அழைத்து வர சொன்னான்.
அழைத்து போக வந்த சந்துரு காட்டிய தன் போட்டோக்களைப் பார்த்து வெட்கினான் அவன்!
——
மூன்று மாதங்கள் கழித்து.
ராமு தற்போது வாக்கர் உதவியுடன் நடக்கவே ஆரம்பித்து விட்டான்.
மகியும் ராஜுவும் தனக்கு தெரிந்த பாங்க் ஆபிசர்களிடம் சொல்லி வைத்து,
மணப்பாறையில் திருமணம் ஆகி செல்லவிருக்கும் இன்னொரு பெண்ணிடம் பேசி,
வனிதாவிற்கு பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ப்ரான்சிற்கு மியுச்சுவல் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.
ராமு ஓட்டி வந்த அந்த புல்லட்டை விற்று விட்டு ஸ்கூட்டி வாங்கி அதில் தான் வனிதா வேலைக்கு சென்று வந்தாள்.
யாருமே அவ்வளவு சீக்கிரம் எதிர்பாராதது வேல் முருகனின் மனமாற்றம்!
அவன் ஒழுங்காக வேலைக்கு செல்ல ஆரம்பிக்க, அவன் அப்பா அம்மா இப்போது அவன் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார்கள்!
ப்ரியாவிடமும் நல்ல மனமாற்றம்! அடுத்து அடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளால்!
அவளுக்கு வனிதாவிற்கும் தான் மகி இடத்தில் இருந்திருந்தால் இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து இருப்போமா என்ற கேள்வியை அவர்கள் மனசாட்சி துளைத்து எடுத்தது!
இவளைப் போய் வேண்டாம் என்று அவள் கல்யாணத்தைத் தட்டி விட்டோமே என்று மனப்பூர்வமாகவே நினைத்தார்கள்!
அதனால் கல்யாணத்தில் காட்டாத ஈடுபாட்டை, மகிழ்ச்சியை மகியின் வளைகாப்பு விழாவில் காட்டி ஜமாய்த்தார்கள்!
மிகவும் கிராண்டாக நடந்தது மகியின் வளைக்காப்பு!
கல்யாணத்திற்கு அழைக்காத சொந்தங்களை எல்லாம் வளைகாப்பு விழாவிற்கு அழைத்து விட்டார் கமலா அம்மா!
தன் மக்கள் மூவரையும் ஒன்றாக ஒற்றுமையுடன் கண்ட அந்த தாய் மனம் சந்தோசத்தில் நிரம்பியது!
இப்போது எல்லோரும் உறையூர் வீட்டில் தான் இருக்கிறார்கள் ராஜு மகி உட்பட.
ராமுவை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த பின் அவனுக்கு உதவ ஆண் துணையாக ராஜு அங்கே வர வேண்டியது ஆகிவிட்டது!
வனிதாவும் வேலைக்கு அதிக நாள் லீவ் போட முடியாத காரணத்தால் கமலா அம்மாவும் வந்து விட்டார்.
மகிக்கு அந்த வீட்டில் வைத்து தான் வளைகாப்பு போட்டார்கள்!
அன்னமும் அவரது கணவரும் உணவுக் கடையைப் பார்த்துக் கொள்ள, கூட இரண்டு வேலையாட்களை சேர்த்து இருந்தாள் மகி!
இருவரும் கல்லூரி மாணவர்கள். பார்ட் டைமாக வேலை செய்தார்கள்!
அதே போல சந்துருவின் உதவியோடு கார் ஸ்பாவை நல்லபடியே நடத்திக் கொண்டு இருந்தான் ராஜு!
மகியின் பிரசவ நேரம் நெருங்கி அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டு கங்கா போன் செய்ய அனைவரும் கும்பகோணம் சென்று விட்டார்கள்!
நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் மகிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன!
ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை!
“ஒரே ஷாட்ல வேலைய முடிச்சுட்டான் ராஜு” என்று கிண்டல் பண்ணினான் சந்துரு!
அனைவர்க்கும் மிகவும் சந்தோசம்!
ஒரு மாதம் மட்டுமே கும்பகோணத்தில் இருந்தாள் மகி!
பின் அவளைத் திருச்சிக்கு அழைத்து வந்து விட்டான் ராஜு!
குழந்தைகளுக்கு இங்கு வந்து தான் பெயர் வைக்க வேண்டும் என்று உறையூர் வீட்டில் அதற்கும் ஒரு விழா வைத்தார்கள்!
விழா எல்லாம் நல்லபடியே முடிந்து, இரவு உணவு உண்டு விட்டு, நீண்ட அரட்டை பேச்சுக்குப் பின் அறைக்குத் திரும்பிய ராஜுவிடம் கேட்டாள் மகி!
“எப்பங்க நம்ம வீட்டுக்குப் போகப்போறோம்?”
அதைக் கேட்டு அதிர்ந்து நின்றான் ராஜு!
error: Content is protected !!