Skip to content
Post Views: 4,600
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.”
“விடு காந்தா..”
“எப்படி விட முடியும். சும்மா சும்மா இதே பேச்சு. இதுக்கு இன்னைக்கு நானே முடிவு கட்டுறேன் மாமா.”
Advertisement
“சொல்லுங்க சின்னத்தான் என் புருசன் வந்து என்னைப் பிடிக்கலைனு உங்ககிட்ட சொல்லி புலம்பினாரா?
இல்ல வேற கல்யாணம் பண்ணி வைனு உங்க அம்மாட்ட போய் சண்டை போட்டாரா?”
“!!”
Advertisement
“ஏன் உங்க அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டதே இல்லையா? அதுக்காக உங்க அம்மாவை உங்களுக்கு பிடிக்காம போயிருமா?”
Advertisement
“..”
“முதல்ல எல்லாரும் எதுக்கு எங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசுறீங்கனு எனக்குப் புரியவே இல்ல.
மாமியாரா உங்க அம்மாவுக்கு மட்டும்தேன் என்னைப் பத்தியும் என் வாழ்க்கையைப் பத்தியும் பேசுற உரிமை இருக்கு ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசுறதை நிறுத்திக்கோங்க.”
Advertisement
“அக்கா சின்ன அத்தான் ஏதோ எதார்த்தமா பேசிருப்பாக. அதுக்கு ஏன் இப்போ இப்படி சீனை போட்டுட்டு கிடக்கீக?”, என்ற ராணியை எவ்வித உணர்வுமினறி பார்த்தவள் பொறுமையாய்,
“எதார்த்தமா எட்டு வருசமா பேசுவீகளா ராணி?”
“..”
“அப்போ சரி நாளையிலிருந்து நானும் எதார்த்தமா நீங்க பண்றதெல்லாம் பொதுவெளியில் சொல்லி வைக்குறேன். நீங்களும் தப்பா நினைச்சுற கூடாது.”
“மதினி இரண்டும் என்னவோ புத்தியில்லாம பேசுதுக. நீங்க விடுங்க.”
“உங்க மேல உள்ள அக்கறையில் நான் எதார்த்தமா சொல்லுறேன் அத்தான் ராணியை இந்த வீட்டோட ஒட்ட வைக்க என்ன வழியோ அதை பாருங்க. கல்யாணமாகி பிள்ளையே பெத்தாச்சு இன்னும் அம்மா வீட்டுக்கு போறதுக்குதேன் பறந்துட்டு இருக்காளே தவிர இங்கே வேலை செய்ய உடம்பு வணங்க மாட்டேங்குது.
நான் இருக்குற வரைக்கும் அவளுக்கு கவலையில்லையாம் ஒரு வேளை நாளைக்கே புதுக்கடை திறக்க நீங்க தனியா போற நிலைமை வந்தா உங்களுக்கும் உங்க மகனுக்கும்தேன் கஸ்டம் பார்த்துகிடுங்க.”
“!!”
“அப்பறம் சின்னத்தான் நீங்க இப்படியே குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்குறதோட நாளைக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிற போறீக.
அப்பறம் நரம்பில்லாத நாக்கெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் உங்க பொண்டாட்டியைப் பாத்து பேசும்.”
“..”
“போதுமா வேற எதுவும் சொல்லி உங்களுக்கெல்லாம் புரிய வைக்கணுமா?”
“!!”
“எங்க விசயத்தில் நாங்க தெளிவாதேன் இருக்கோம். பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் நான்தேன் அவுக பொண்டாட்டி அவுகதேன் என் புருசன்.
எங்க பிள்ளையும் வளர்ந்துட்டு இருக்கா அவ முன்னாடி இனி இப்படி தேவையில்லாத பேச்செல்லாம் யாரும் பேசுற வேலை வைச்சுக்காதீக.”
“…”
“இன்னொரு தடவை என்னை பேச வைச்சு பாக்காதீங்க. அமைதியா இருக்குறது என் குணம் அதுக்காக அதை உங்க சௌகரியத்துக்கு எடுத்துக்காதீக.
நான் வாழுறது வேற வழியில்லாம இல்ல எனக்கப் பிடிச்சு நானே விரும்பி ஏத்துகிட்டது.”, என்றவள் யாரையும் பார்க்காமல் உள்ளே செல்ல பொன்னி அவள் பின்னே ஓடினாள்.
இங்கு அனைத்தையும் வெளித் திண்ணையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த காமாட்சி எழுந்து உள்ளே வந்திருந்தார்.
“என்ன புரிய வேண்டியவுகளுக்கு எல்லாம் புரிஞ்சுதா?”
“ம்மா எப்படி பேசிட்டு போறாக. என்னனு கேட்காம நக்கல் பண்ணுற நீ?”
“நான் ஏன் டா கேட்கணும். மதினினு மதிச்சு நடக்கத் தெரியாதவனுக்கு இதை விட பொறுமையா யாரு பேசுவா. அவளா இருக்கப் போய் இம்புட்டு நிதானமா பேசிட்டு போறா.
நானா இருந்தா தொலைச்சுருவேன் தொலச்சு.”
“..”
“வாடியம்மா விடிஞ்சு இப்போதேன் கீழே வரவே தோணிச்சாக்கும். இங்கே பாரு லிங்கா செங்கா சொன்னதைதேன் நானும் சொல்லுவேன். இவளை ஒழுங்கா இருக்கச் சொல்லு.”
“..”
“இம்புட்டு நாளும் நிலைமை வேற இனியும் அப்படியே இருக்காது சொல்லிட்டேன்.”, என்றவர் மூத்த மகனை அர்த்தப் பார்வை பார்த்துச் செல்ல அதன் பொருள் இனியும் சுய குழப்பத்தில் இல்லாமல் மனைவியை கவனி என்பதாய் இருந்தது.
உள்ளே சென்ற பொன்னியோ செங்காந்தளின் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதும் கன்னம் கிள்ளி முத்தம் வைத்துக் கொள்வதும் என குதித்துக் கொண்டிருந்தாள்.
“அடியே பொன்னி என்ன டி இது..”
“போக்கா நான் எம்புட்டு சந்தோசமா இருக்கேன். பெரிய ஐயா பேசுவாகனு நினைச்சா நீயே பின்னிட்ட போ. இனி எப்பவும் இதே மாதிரி இரு க்கா. யாருக்கும் பயப்படாத.”
“இத்தனை நாளும் அவர் என்னை இன்னும் வெறுத்துருவாரோனு ஒரு தயக்கம் அதேன் பேசல டி.”
“இப்போ என்ன மாறிடுச்சாம்?”, என்றதில் செங்காந்தளின் புன்னகையே பொன்னிக்குத் தேவையான பதிலைக் கொடுத்திருந்தது.
“யக்கா!!! நிசமாவா?? எல்லாம் சரியாப் போச்சா உங்க ரெண்டு பேருக்கும்? மனசு விட்டு பேசிகிட்டீகளா? எனக்கு எம்புட்டு சந்தோசமா இருக்குத் தெரியுமா!!”, என்றவளின் கண்களில் கண்ணீர் கோர்த்திருக்க செங்காந்தள் அவளை பக்கவாட்டில் தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
“அழாத பொன்னி…”
“சுலபமா நீ சொல்லிட்ட கா. எனக்கு உன்னை நினைச்சு எம்புட்டு கஸ்டமா இருக்கும் தெரியுமா?
உன் வாழ்க்கை இப்படியே போயிருமோனு நினைச்சு பயந்துட்டே இருப்பேன்.
வெளியில இருந்து பார்க்குறவுகளுக்கு உங்களைப் பார்த்தா ஏமாளியா தெரியலாம்.
ஆனா எனக்கு எப்பவும் நீ ரொம்ப பிடிவாதக்காரியும் தைரியசாலியும்தேன்.
உன் பிடிவாதமும் நம்பிக்கையும்தேன் பெரிய ஐயாவை உன் பக்கம் கொண்டு வந்துருக்கு க்கா.
நீ வேணா பாரு நூறு வருசம் நீங்க இரண்டு பேரும் நல்லா சந்தோசமா வாழப் போறீக.”, என்றவளை வாஞ்சையாய் செங்காந்தள் பார்த்திருக்க உள்ளே வந்த ருத்ரேஸ்வரன் பொன்னியின் உச்சந்தலையில் பாசமாய் கை வைத்து லேசாய் அசைத்து நகர்ந்தான்.
“ஐயா!”
“ம்ம்?”
“எங்க அக்காவை நல்லா பாத்துகிடுங்க என்ன.? அவுகளை மாதிரி உங்களை காதலிக்க ஒருத்தி பொறந்துதேன் வரணும்.”
“ஏய் என்னத்த பேசுற போடி பேசாம..”
“கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன் பொன்னி. அவளுக்காக மட்டும்தேன் இனி இந்த உசுரும் வாழ்க்கையும்.”, என்றவன் மனைவியை ஆழ்பார்வைப் பார்த்து நகர்ந்திருந்தான்.
பொன்னியை சமாதானப்படுத்தி வேலை செய்ய அனுப்பியவள் கணவனைத் தேடி தங்கள் அறைக்குள் ஓடினாள்.
“மாமா..”
“சொல்லு காந்தா.”, என்றவன் கொண்டு போக வேண்டிய பையை எடுத்த படி சாதாரணமாய் கேட்க மெதுவாய் அவனது மார்பில் சாய்ந்திருந்தாள் செங்காந்தள்.
“என்னாச்சு டி?”
“உங்க முகம் மாறினதில் எனக்கு கஸ்டமா போச்சு மாமா. அதேன் அப்படி பேசிட்டேன். உங்களுக்கு..”
“இதே மாதிரி நான் உனக்காக நின்னுருக்கணும் காந்தா. அதனால என்ன எனக்காக நீ பேசினாலும் சந்தோசம்தேன்.”, என்றவன் இரு கன்னத்தையும் அழுத்திக் கொடுத்தான்.
“சாயிந்திரம் நிசமாவே கோவிலுக்கு போறோமா?”
“கண்டிப்பா போறோம். உங்க ஊரு முருகர் கோவிலுக்கு.”
“!!”
“என்ன? உனக்கு அவருதேன் இஸ்டதெய்வம் அப்பப்போ கூடிகிட்டு போக சொல்லுவியே?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அவன் கிளம்பும் நேரம் வாசலுக்கு சென்று வழியனுப்பி விட்டு வந்தாள்.
அந்நேரம் காமாட்சி அவர் அறையில் இருந்து செங்காந்தளை அழைக்க சற்றே தயக்கத்தோடு உள்ளே சென்றாள்.
“சொல்லுங்க அத்தை..”
“இங்கே வா உட்காரு.”, என்றதில் அவரருகில் கட்டிலில் அமர்ந்தாள்.
“நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். நீ சந்தோசமா இருக்கியா டி?”, என்றதில் அவரது மடியில் தலை சாய்த்து சற்று சத்தமாய் அழுதிருந்தாள் செங்காந்தள்.
இத்தனை வருடங்களில் பிறந்த வீட்டில் கணவனை விட்டுக் கொடுக்க மனமில்லால் தாயிடம் பெரிதாய் மனம் விட்டு பேசியதெல்லாம் இல்லை.
மாமியாரிடமும் அவளாக எதையும் கூறியதில்லை தான் ஆனாலும் தினம் தினம் அவளைக் கவனிப்பவராயிற்றே.
அவளை விட அவள் வாழ்வு நன்றாக வேண்டும் என அதிகமாய் பிரார்திக்கும் ஒருவர் காமாட்சி.
மகனுக்காக அது என்றாலும் இத்தனை வருடங்களில் அவளது மனம் நோக ஒரு வார்த்தை பேசியதில்லை.
அவளுள் எத்தனை போராட்டங்களை சிறு பெண் அவள் தாங்கியிருப்பாள் என்பதை உணர்ந்த மாமியாராய் இருந்தவர்.
அதற்காக ஒரேயடியாக அன்பை பிழியும் ஆளும் இல்லை. பலாப்பழம் போன்றவர் தான்.
அந்த எண்மெல்லாம் சேர்த்து தான் இப்போது அவளின் இந்த அழுகைக்கு காரணம்.
தாயாய் தன் பிள்ளைக்கு ஆறுதலாய் முதுகை வருடிக் கொடுத்தார் காமாட்சி.
தான் எத்தனை பெரிய தைரியசாலியாய் இருந்தாலும் கணவனை குற்றிவுணர்ச்சிக்குள் தள்ளக் கூடாது என்பதற்காக தன் வருத்தங்களை அளவாய் வெளிக் காட்டியிருந்தாலும் இப்போது இந்த கதறல் அவளுக்கு மகிழ்ச்சியின் பிரதிபலிப்பாய் தேவைப்பட்டது.
“என் ராசாத்தி அழுவாத டி. இங்கே பாரு. என்னைய பாரு..”
“..”
“உன் நல்ல மனசுக்கும் பொறுமைக்கும் உனக்கு நல்லதே நடக்கும் செங்கா. அவன் உன்னோட மனசு விட்டு பேசினானா?”
“..”
“இனி உன்னை நல்லா பாத்தகிடுவான்னு உனக்கு நம்பிக்கை வந்துருக்கா?”
“…”
“சந்தோசமா இருக்கணும் என்ன.. சிரிச்ச முகமா நீ இந்த வீட்டில் நடமாடுறதுதேன் எனக்கான நிம்மதி டி.”, என்ற அனைத்திற்குமே சிறு குழந்தையென ஏங்கிய வண்ணம் மௌனத் தலைசைப்பு தான் செங்காந்தளிடத்தில் பதிலாய் வந்தது.
“இந்தா இதை போட்டுக்கோ இதுக்குதேன் உன்னைக் கூப்பிட்டேன்..”, என்றவர் இரட்டை வடச் சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்தார்.
“அத்தை இதெதுக்கு?”
“இத்தனை நாளும் இதைக் கொடுத்தா என் பையன் பண்ற தப்புக்கு நான் ஈடு கட்டுற எண்ணம் வந்திருக்கும் டி.
ஆனால் இப்போ என் மருமவளுக்கு உரிமையா போடுற சந்தோசம் இருக்கு. வைச்சுக்கோ.”, என்றவர் தன் புடவைத் தலைப்பில் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.
error: Content is protected !!