வைஷாலியின் வீட்டில் அனைவரும் மதிய உணவுக்காக மேஜையில் அமர்ந்திருந்தனர். அவள் அருகில் அமர்ந்திருந்தார் அவள் பெரியம்மா. பெரியம்மாவின் கண்களில் இருந்து எதுவுமே தப்ப முடியாது.
அவர் பதில் சொல்லி இருந்தால் கூட பிரச்சனை அதோடு முடிந்திருக்கும். சுற்றி அமர்ந்திருந்த எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு தட்டில் கவனத்தை வைத்துக் கொண்டார்.
“அரவிந்த் வீட்டிலேயும் சரி நம்ம வீட்டிலேயும் சரி விட்டுப் பிடிப்போம் விட்டுப் பிடிப்போம்ன்னு பார்த்தோம் இத்தனை நாள். ஆனா இனிமே விட்டுட வேண்டியதுதான் போலிருக்கு.” இது பெரியப்பா
பக்கென நிமிர்ந்தாள் இவள்.
Advertisement
“அவன் சென்னை வந்திருக்கானாம் தெரியுமா?” இது வைகுந்த். அவளது பெரியப்பாவின் இரண்டாவது மகன் “வந்து இதுவரைக்கும் நம்ம வீட்டுக்கு வரலை. அவனுக்கு கொஞ்சமாவது பொண்டாட்டியை பார்க்கணும் அப்படிங்கிற எண்ணம் இருக்கா?”
பதில் சொல்லவில்லை வைஷாலி
“அவ முதலிலே இவன் வேண்டாம்னுதானே அடம் பிடிச்சா. இவ சொன்னவனையே மாப்பிள்ளையாக்கி இருந்தா சரியா இருந்திருக்குமோ?” மெதுவாக இழுத்தார் சித்தப்பா.
எப்படி என்றே புரியாமல் ஏனென்றே தெரியாமல் அவர் சொன்ன வார்த்தைகள் கசந்து வழிந்தன வைஷாலிக்கு.
“சி..த்..த..ப்பா. இப்படி பேசாதீங்க. எனக்கு பிடிக்கலை.” மெதுவாக சொன்னாள் அவள்.
இவர்கள் பேசுவதை எல்லாம் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இவளது அன்னையும் தந்தையும்.
“அவர் சொல்றதிலே எந்த தப்பும் இல்லை. அரவிந்த் காரெக்டர் கொஞ்சம் சரியில்லனு நான் கேள்விப் பட்டேன். எனக்கு சில நியூஸ் வந்தது” இது வைபவ்.
வேண்டுமென்றே அவளை தூண்டி விட சொன்னானா அல்லது நிஜமாகவே சொன்னானா என்று அவள் யோசிக்கவே இல்லை. அவன் முடிப்பதற்குள் தட்டை தள்ளிவிட்டு எழுந்திருந்தாள் அவள். “
“அரவிந்த் பத்தி தப்பா பேசாதே” அவள் குரல் அங்கே எதிரொலிக்க
“வைஷூ இது என்ன புது பழக்கம்? பாதி சாப்பாட்டிலே எழுந்துக்குற பழக்கம்? உட்காரு முதிலிலே” பெரியம்மா அதட்ட பேசாமல் அமர்ந்தாள் அவள்
“வைஷூ நிஜமாவே அரவிந்துக்கு வேறே யாரையும் பிடிச்சிருக்கோ என்னவோ?” அப்பா மெதுவாக கேட்டார்.
“அப்பா அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைப்பா. எனக்குத் தெரியும்” படபடபடவென பேசினாள் வைஷூ. அவரது வார்த்தைகளை அவளால் ஏனோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
“அப்புறம் உங்க ரெண்டு பேருக்கு நடுவில் என்னம்மா பிரச்சனை? இத்தனை நாள் நாங்களும் போகட்டும் போகட்டும்ன்னு விட்டுட்டோம் அவங்க வீட்டிலேயும் விட்டுட்டாங்க இனிமே முடியாதும்மா”
“அப்பா ப்ளீஸ்பா…”
“என்ன ப்ளீஸ்? அப்போ ஒண்ணு செய் உனக்கு நாளைக்கு நைட் வரைக்கும் டைம். அரவிந்த்கிட்ட என்ன பேசுவியோ என்ன பண்ணுவியோ அரவிந்தை நாளைக்கு நைட்குள்ளே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா பார்க்கலாம். அதுக்கு அப்புறம் பேசி நாம ஒரு முடிவுக்கு வருவோம்”
மறுப்பு சொல்லாமல் அரை குறையாய் தலை அசைத்தாள் மகள்
அறைக்குள் சென்று அமர்ந்துக் கொண்டாள். மோதிரம் இல்லா விரலை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டாள்.
“மோதிரத்தை குடுங்க அர்ஜுன்” இரண்டு நாட்கள் முன்னால் அவன் கர்ஜித்த விதம் இன்னமும் நினைவில் நின்றது அவளுக்கு.
“என்ன வேணும் உங்களுக்கு?”
“உன் விரலோட அளவு வேணும்” இதே இடத்தில் தானே அமர்ந்துக் கொண்டு கேட்டான். யோசித்துக்கொண்டே அவள் தனிச்சையாய் நாள் காட்டியை பார்க்க இன்றோடு அவன் வந்து கேட்டு இரண்டு வருடங்கள் முடிந்திருந்தன.
“வைஷூ நிஜமாவே அரவிந்துக்கு வேறே யாரையும் பிடிச்சிருக்கோ என்னவோ?” அப்பா கேட்ட கேள்வி அவளை ஏனோ உருட்டியது.
“இருக்காது அப்படி எல்லாம் கண்டிப்பாக இருக்காது” தன்னைத் தானே சமாதான படுத்திக் கொண்டாள் அவள்.
அப்படி ஒன்றை நினைத்துப் பார்க்க கூட இயலவில்லை அவளுக்கு.
“அப்படி இருந்தாலும் தவறொன்றும் இல்லை என்று எடுத்துரைத்தது இன்னொரு பக்க மனது. அது முழுக்க முழுக்க அவனது தார்மீக உரிமை”
“இங்கே பாரு உன் சந்தோஷத்துக்காக எதை வேணும்னாலும் நான் விட்டுக் கொடுக்கத்தயார் போதுமா.” அன்று அவள் கை பிடித்து இழுத்து அதன் மேல் தனது கைவைத்தானே “இட்ஸ் அ ப்ராமிஸ்” அன்று அவன் சொன்னானே அதேதான் எனக்கும்.
“போ. என்னை டைவர்ஸ் பண்ணிட்டு வேறே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு” கட்டிலில் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“என்னுடைய மகிழ்சிக்காக அவன் முடிவெடுத்தால் அவனுடைய மகிழ்சிக்காக நான் முடிவெடுக்கக் கூடாதா என்ன?”
உள்ளுக்குள் ஆயிரம் பிரளயங்கள்.
இந்த இரண்டு வருடங்களில் அவளது மனதிற்குள் புகுந்து அவன் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் உண்மை. அதே நேரத்தில் விவாகரத்து செய்து விட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறான் என்பதும் உண்மை.
யோசித்து யோசித்து முடித்து மாலை ஆறு மணிக்கு அப்பாவின் முன்னால் வந்து நின்றாள் மகள்
“அப்பா நான் ஸ்வாதி வீட்டில் ரெண்டு நாள் ஸ்டே செய்துட்டு வரவா”
“‘இருக்காது. அப்படி எல்லாம் இருக்கவே இருக்காது.” தலையசைத்துக் கொண்டாள் தன்னாலே. ஓடி சென்று அவனை அப்படியே தன்னோடு இறுக்கிக்கொள்ள தோன்றியது.
அவன் என்னவன். அவன் என்னவன்.
பேசிக்கொண்டே திரும்பியவனின் முகத்தில் இவளைப் பார்த்ததும் நிறைய குழப்பம்.
“நான் அப்புறம் பேசறேன்” அழைப்பை உடனடியாக துண்டித்திருந்தான் அவன்.
“வா வா வா..” பாட்டி அவளை மகிழ்ச்சியுடன் வரவேற்க, ஸ்ரீதேவி அவளை அப்படியே அணைத்துக் கொள்ள ஸ்வாதி ஓடி வந்து அவள் கரம் பற்றிக் கொண்டாள்.
“நான் ரெண்டு நாள் இங்கே இருக்கலாம் இல்ல?” அவன் முகம் பார்த்துக் கொண்டே கேட்டாள் வைஷாலி.
‘அட இது உன் வீடும்மா. நீ எத்தனை நாள் வேணும்னாலும் இங்கே இருக்கலாம்” சொன்னார் ரங்கநாதன்.
“ஸ்வாதி நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வந்திடறேன்” அடுத்த நிமிடம் அங்கிருந்து விலகியிருந்தான் அரவிந்தன்.
ஸ்ரீதேவியின் மனதிற்குள் கொஞ்சம் கோபப் பிரவாகம். கொஞ்சமாக வாடியது வைஷாலியின் முகம்.
ஸ்வாதிக்கு அவனது மனம் புரியாமல் இல்லை.
“உன்னை பிடிக்காது மத்தவங்களை பிடிக்கும்ன்னு பேசினா நம்மை நேசிக்கறவங்களுக்கு ரொம்ப வலிக்கும். நான் அதை அனுபவிச்சிருக்கேன்” அவனது நேற்றைய வார்த்தைகள் அவளது நினைவில் ஆடின. நேற்று வரை இந்த விஷயத்தில் அரவிந்தன் மேல் அவளுக்கு இருந்த கோபம் இன்று குறைந்திருந்தது.
நேரம் இரவு பத்தை தொட்டிருக்க அப்போதுதான் வீட்டுக்குள் வந்தான் அரவிந்தன்.
“சாப்பிட்டியா அரவிந்தா?” கேட்டார் ஹாலில் அமர்ந்திருந்த ஸ்ரீதேவி. அவருடன் பேசிக் கொண்டிருந்தாள் வைஷாலி.
ஸ்வாதியின் மனம் இன்னமும் நேற்றைய அர்ஜுன் மீதான கோபச் சுழலில் இருந்து வெளி வந்திருக்கவில்லை
கூடத்தின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு கைப்பேசியை துழாவிக் கொண்டிருந்தாள் அவள்.
“இன்னும் இல்லை” என்றபடியே அவள் பக்கம் கூட பார்க்காமல் உள்ளே சென்றவன் கை கால் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தான்.
“நான் பரிமாறவா?” அவசரமாக அவனருகே வந்து நின்றாள் வைஷாலி.
“ஸ்வாதி நீ வந்து பரிமாறு வா” ஸ்வாதிக்கு இதெல்லாம் பழக்கமில்லை என்று தெரிந்தும் அவன் வேண்டுமென்றே அவளை அழைக்க
“அரவிந்த்” கோபத்துடன் அழைத்தார் ஸ்ரீதேவி “ஏன் அவ போட்டா உனக்கு சாப்பாடு உள்ளே இறங்காதா? ஏன்டா இப்படி இருக்க?”
என்ன தோன்றியதோ அவன் சட்டென எழ அவன் கைப்பட்டு அங்கே மேஜையின் மீதிருந்த கண்ணாடி டம்பளர் கீழே விழுந்து தெறித்தது. அவன் அருகில் நின்றிருந்த வைஷாலி தடுமாறி நகர கீழே சிதறியிருந்த கண்ணாடி துகள்கள் அவள் கால் பாதத்தை பதம் பார்த்திருந்தன.
“ஸ்ஸ்ஸ்.. ஆ..ஆ..” அவள் குரல் எழுப்ப அடுத்த நொடி பதறிப் போனான் அரவிந்த்.
“ஷாலு.. என்ன ஷாலு நீ” பல நாட்களுக்கு முளைத்திருந்தது ஷாலு.
“ஸ்வாதி அந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடு” அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து அவன் தரையில் அமர்ந்துக் கொண்டு அவள் பாதத்தை அவனது மடியில் தாங்கியவன் பரபரவென இயங்கலானான்.
ஸ்வாதி ஸ்ரீதேவி ஏன் வைஷாலிக்குமே கூட வியப்பு. தாளவில்லை. அவளது மனம் இளகிப் போக அவர்களையே பார்த்திருந்தாள் ஸ்வாதி.
ஏதோ ஒரு கட்டத்தில் அவனை வைஷாலி காயப்படுத்தி இருக்கிறாள் என்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது. அதை எல்லாம் மறந்து தனது தன்மானம் என்பதை விட்டு அவளது பாதத்தை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு ஏனோ கண்கள் நிரம்பிப் போனது.
“உண்மையான அன்பு என்பது இப்படித்தான் இருக்குமா?”
“இது போன்ற அன்பிற்கு முன்னால் காசென்ன பணமென்ன வெற்றி என்ன தோல்வி என்ன?”
“நான் எனது அன்னையிடம் கூட இப்படி ஒரு பாசத்தை காட்டியதில்லையோ?” சிலையாகி நின்றிருந்தாள் ஸ்வாதி. அவருடன் எனது கோபத்தை மறந்து விட்டு பேச ஒரு வருடம் எடுத்துக் கொண்டேனே.
“எவ்வளவு ரத்தம் ஷாலு” அவன் சொல்லிக் கொண்டிருக்க ஸ்ரீதேவியுமே கூட இளகிப் போனார்.
“நான் அவன் இதயத்தை துண்டு துண்டாக கீறிப் போட்டிருக்கிறேன். இன்னுமா என் மீது இத்தனை அன்பு வைத்திருக்கிறான்?”
வைஷாலியின் கண்ணீர்த் துளி அவன் கையின் மீது விழ சடக்கென நிமிர்ந்தான் அரவிந்த் “ரொம்ப வலிக்குதா ஷாலும்மா”
“ம்ஹூம்” அவள் மெல்ல தலையசைக்க அப்போதுதான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. கட்டைப் போட்டு விட்டு நிமிர்ந்தான் அவன்.
“அவன் ரூம்லே போய் படுத்துக்கோ வைஷூ அவன் சாப்பிட்டு வருவான்” என்றபடி அவர்கள் அருகே வந்தார் ஸ்ரீதேவி. “ஸ்வாதி அவளை உள்ளே கூட்டிட்டு போ” அரவிந்தன் மேலிருந்த கோபம் கொஞ்சம் விலகியிருந்தது ஸ்ரீதேவிக்கு.
சில நிமிடங்கள் கழித்து சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குள் வந்தான் அரவிந்தன். அங்கே வைஷாலி மட்டும் அமர்ந்துக் கொண்டு டிவியை திருப்பிக் கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்து நட்பாக புன்னகைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள் அவள். அவன் சற்று இடை வெளி விட்டுப் படுத்துக் கொள்ள
“உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க அதுவே பார்ப்போம் டி.வி.யிலே” என்றாள் அவன் முகம் பார்த்துக் கொண்டே
“எனக்குத் தூக்கம்தான் ரொம்ப பிடிக்கும். குட் நைட்” ஒற்றை கையை மடக்கி கண்களின் மீது வைத்துக் கொண்டு கண்களை மூடிப் படுத்துக் கொண்டான்.
“எனக்கு உங்க கூட கொஞ்ச நேரம் பேசணும்.”
“நோ..” கண்களை திறக்காமல் பட்டென்று சொன்னான்.
“அரவிந்த் ப்ளீஸ்…”
“நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு லாயர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் இருக்கு. போகணும் இப்போ பேசாம தூங்கு” அவன் சொல்லியும் விட அவளது மொத்த சந்தோஷமும் வடிந்து போனது.
இரண்டு நிமிடங்கள் அசாத்திய மௌனம் அங்கே.
“அரவிந்த” அவளே மௌனத்தை கலைத்தாள்
“படுத்தாதே வைஷாலி” இன்னமும் கண்களை திறக்கவில்லை அவன்.
“இன்னைக்கு ஒரு நாள் என்கூட சந்தோஷமா பேசிட்டு இருங்க. நாளைக்கு நான் நீங்க எங்கே சொன்னாலும் சைன் பண்ணி தந்திடுவேன்” அவள் சொல்லி முடிக்க விலுக்கென எழுந்து அமர்ந்து அவள் கண்களை பார்த்தான் அரவிந்தன்.
அவள் அப்படி பட்டென சொல்வாள் என அவன் நினைக்கவில்லையோ.
“நிஜமா சைன் பண்ணிடுவியா ஷாலு?”
“ம்” என்றாள் தலை குனிந்து கொண்டு. “நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்”
“சரி வா. இப்போ என்ன செய்யலாம் சொல்லு”
அவனது குரலில் அவள் சொன்ன வார்த்தைகளுக்கு எதிர்வினையான வருத்தமோ ஆதங்கமோ எதுவுமே இல்லை. அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான் என தெளிவாக தெரிந்தது அவளுக்கு.
அடுத்த சில நிமிடங்களில் அவள் கூடை ஊஞ்சலில் அமர்ந்திருக்க அவளுக்கே எதிரில் இருந்த சோபாவில் அவன் அமர்ந்திருந்தான்.
“இப்போ என்ன செய்யலாம் சொல்லு” பொம்மை போல் கேட்டான் அவன்.
“அரவிந்த்” இதமாய் அழைத்தாள்.
“ம்?”
“ஜாமூன் சாப்பிடலாமா?”
“ம்?” புருவங்கள் உயர அவளைப் பார்த்தான் அரவிந்தன்.
“இல்ல நான் ஜாமுன் வாங்கிட்டு வந்தேன். அன்னைக்கு நீங்க எனக்கு ஊட்டி விடறேன்ன்னு சொன்னீங்க. நான் வேண்டாம்னு சண்டை போட்டேன். இன்னைக்கு ஆசையா இருக்கு. ப்ளீஸ்”
“அதெல்லாம் வேண்டாம் வைஷாலி. நான் பழசை எல்லாம் மறக்க விரும்பறேன்”
“இன்னைக்கு ஒரு நாள். நாளைக்கு கண்டிப்பா நான் சைன் பண்ணி கொடுத்திடுவேன். அப்புறம் உங்களை தொந்தரவு பண்ணவே மாட்டேன்” அங்கே அருகிலேயே இருந்த அவளது கைப்பையில் இருந்து இரண்டு சின்ன டப்பாக்களை எடுத்தாள்.
“ஜாமுன்” நீட்டினாள் அவனிடத்தில்.
மார்கழி மாதத்தின் குளிர் இரவு அவர்களை கிள்ளி விளையாடியது. நட்சத்திரங்கள் காற்றோடு துணைக்கு நின்றன.
“ஒரு சின்ன பீஸ் மட்டும். உனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்கும்தானே.?”
பழைய நினைவுகளின் சுகமான ஊர்வலம் இருவருக்குள்ளும். ஜாமுனை சிறு துண்டாக்கி ஊட்டி விட்டான் அவளுக்கு.
“உங்களுக்கு ஒரு பீஸ்?” அவள் அவனுக்கு ஊட்டி விட இருவருக்குள்ளும் சந்தோஷ தித்திப்பு பரவிக் கொண்டிருந்தது.
அவனும் அறியாமல் அவள் கன்னத்தை வருடிய முடிக் கற்றையை மெல்ல விலக்கி விட்டான் அரவிந்தன்.
“என்னாச்சு?” அவள் கேட்க
“ம்? பொறாமையா இருக்கு” சொல்லிக் கொள்ளவில்லை அவன்.
இப்படியே தொடர்ந்த இனிமையான நொடிகளை கலைத்தது அந்த கைப்பேசி அழைப்பு அழைப்பை ஏற்றான் அவன்.
“ஹலோ” அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அவள்
‘இல்ல இல்ல செல்லம். கொஞ்சம் டைம் வேணும் எனக்கு. நான் நாளைக்கு கண்டிப்பா நல்ல முடிவா சொல்றேன்.”
அவன் அழைப்பை துண்டிக்க உயிர் நிஜாமகவே துண்டாகிப் போனது அவளுக்கு.
ஜாமுன்களை முடித்துவிட்டு அவள் முகம் பார்த்து கேட்டான்.
“வாட் நெக்ஸ்ட்?”
“இல்ல போதும்” சொன்னாள் அவள் தரையை பார்த்துக் கொண்டே
“சரி போய் தூங்குவோமா அப்போ” எழுந்தவனின் கரம் பற்றிக் கொண்டாள்
“யார் அது?”
“எது?”
“அதான் அந்த செல்லம்”
“ம்?’ புருவங்கள் உயர அவன் விழிகள் சற்றே பெரிதாக விரிந்தன. அவள் முகம் படித்து எதைதையோ புரிந்துக் கொள்ள முயன்றான்.