Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 11.1

அத்தியாயம் 11.1

அன்று மாலை கல்லூரி முடிந்ததும் நேரே காதம்பரி வீட்டிற்கு வந்தாள் முத்து.



Advertisement

இவளை பார்த்ததும் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்றார் கேசவன். இந்த வாரம் காதம்பரிக்கு மதியம் ஷிஃப்ட். அவர் வேலை பார்ப்பது ஒரு தனியார் மருத்துவமனையில் தான். பல வருடங்களாக அங்கே பணிபுரிகிறார். அவரது சிறந்த சேவைக்காக அவரை அறுபது வயதிற்கு மேலே ஆகியும் பணியில் வைத்துள்ளார்கள். பொதுவாக அவருக்கு காலை ஷிஃப்ட் தான் இப்பொழுது எல்லாம். அவசர தேவை என்றால் மட்டுமே வேறு ஷிஃப்ட்டில் போடுவார்கள். அப்படி இந்த வாரம் அவருக்கு மதிய ஷிஃப்ட். அதை பயன்படுத்தி இன்று கேசவனும் முத்துவும் ஒரு இடத்திற்கு செல்ல இருக்கிறார்கள். அதற்காக தான் முத்து இங்கே வந்திருந்தாள்.

Advertisement

ஒரு நாள் முத்துவும் கேசவனும் பேசிக்கொண்டிருக்கையில்…

Advertisement

“உங்க கல்யாண நாளைக்கு நான் கிப்ட் ஒன்னும் கொடுக்கலை கேசவப்பா… உங்களுக்கு என்ன பிடிக்கும் இல்லை என்ன ஆசைன்னு சொல்லுங்களேன். உங்களுக்கு பிடிச்ச மாதிரி கிப்ட் கொடுக்கணும் எனக்கு”

Advertisement

“எனக்கு பேச முடியவில்லையேன்னு எப்பவுமே வருத்தம் இருந்தது இல்லை, ஆனால் ஒரு முறையாவது என் மனைவி பேரை சொல்லி கூப்பிடணும்னு ஆசை” என்று முத்துவிடம் தனது நோட் பேடில் எழுதி காண்பித்தார்.

சற்று நேரம் யோசித்துவிட்டு,

“இப்ப எல்லாம் நாம கம்ப்யூட்டர்ல டைப் செஞ்சு அதுக்கு வாய்ஸ் கொடுக்க முடியும், அப்படி ட்ரை பண்றீங்களா?அதாவது நீங்க டைப் பண்ண பண்ண, அது குரல் சேர்ந்து பேச்சாய் கேட்கிற மாதிரி செட் செய்ய முடியும் கேசவப்பா..”

“அதுல என்னோட குரல் இருக்காது இல்லையா? அதுக்கு நான் இந்த மாதிரி எழுதியே அவகிட்ட காட்ட முடியுமே?”

மீண்டும் சிறிது நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து யோசித்தாள்.

“ஐடியா… பேசாம நீங்க ஒரு ம்யூஸிக் இன்ஸ்ட்ருமெண்ட் கத்துக்கோங்களேன். அதுல உங்களால வாசிச்சு காட்ட முடியுமே?”

இப்பொழுது அவர் யோசிக்க தொடங்கினார். பின் அவரும் ‘இது சாத்தியமா?’ என்று கண்களாலே அவளிடம் கேட்டார்.

“அது எல்லாம் கண்டிப்பா சாத்தியம்தான். உங்களுக்கு என்ன இன்ஸ்ட்ருமெண்ட் பிடிக்கும்னு சொல்லுங்க”

‘வையலின்’ என்று செய்கை காட்டினார்.

“டன்”

‘இது காதம்பரிக்கு சர்ப்ரைஸ் ஆ இருக்கணும்’ என்று எழுதி காண்பித்தார்.

இருவரும் ரகசியமாக அனைத்தையும் திட்டமிட்டனர். அதற்காக தான் இன்று நேரே இங்கே வந்திருந்தாள்.

இவர்கள் ஏரியாவிலே ஒருதத்தர் கற்றுக்கொடுப்பதை தெரிந்து கொண்டு அங்கே சென்று விசாரித்தும் வைத்திருந்தாள்.

இவளுக்காக பிளாஸ்கில் டீயும் கூட சாப்பிடுவதற்கு பிஸ்கெட்டும் தயாராக வைத்திருந்தார் கேசவன்.

நேரமாயிடும் என்று மறுத்தவளை, இரண்டு நிமிஷம் தான் ஆகும் என்று செய்கையால் காட்டி அவளுக்கு தேநீரை ஊற்றி கொடுத்தார்.

பின் இருவரும் கிளம்பி வையலின் வகுப்பிற்கு சென்றனர்.

அங்கே சொல்லி கொடுப்பவரிடம் முன்னமே முத்து கேசவனை பற்றி கூறி இருந்ததால் அவரும் பெரிதாக கேள்வி கேட்காமல் வகுப்பில் சேர்த்து கொள்வதாக கூறினார்.

கேசவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, அவரது உள்ளம் மகிழ்ச்சியில் ததும்பியது. அது அப்படியே அவரது விழிகளில் தெரிந்தது. மகிழ்ச்சியுடன் முத்துவை பார்த்தார்.

“ச்ச்ச்.. சான்ஸ்ஸே இல்ல கேசவப்பா..

யூவர் ஐஸ் ஸ்பீக்ஸ் எ லாட்…

பேசும் விழிகள் உங்களுக்கு..” என்று அவரிடம் கூறிவிட்டு, மாஸ்டரிடமும் விடைபெற்று, ஒரு மணி நேரம் கழித்து வருவதாக கூறினாள்.

அவர் நானே வந்து கொள்வேன் என்று செய்கை காட்டவும்,

“இன்னிக்கு ப்ர்ஸ்ட் நாள் ஸ்பெஷல்.. நான் வருவேன். நாளையில இருந்து நீங்களே பார்த்துக்கோங்க.. பாய்” என்று சென்றுவிட்டாள்.

இப்படியாக கேசவன் வையலின் கிளாசில் சேர்ந்து இசையுடன் இணைந்து ஆசையாக கற்றுக்கொள்கிறார்.

கற்றுக்கொடுப்பவருக்கும் ஆச்சர்யமே.. கற்பூரமாய் சொல்லி கொடுப்பதை பிடித்துக்கொள்கிறார்.

அதன் பிறகு, கேசவன் தனியே சென்று வந்துவிடுவார். முத்துவும் வகுப்புகள் எப்படி போகிறது என்று மட்டும் கேட்டுக்கொள்வாள்.

—————

அன்று காலையில் அரக்க பறக்க கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். சரியாக அப்பொழுது அவளது கைபேசி அழைத்தது.

“ஹலோ, முத்து காலேஜ் கிளம்பிட்டியா?”

“கிளம்பிட்டே இருக்கேன் ம்மா. சொல்லுங்க”

“எங்க அம்மாவுக்கு ரொம்ப முடியலைன்னு ஊர்ல இருந்து போன் வந்துச்சு முத்து. நாங்க எல்லாம் கிளம்பிட்டு இருக்கோம். சீரியஸ்ன்னு சொல்றாங்க.. எதுக்கும் நீயும் ஊருக்கு வரதுக்கு தயாரா இரு. நாங்க அங்க போய் பார்த்திட்டு போன் செய்றோம்” என்று பாதி அழுகையும் பாதி அவசரமுமாக பேசினார் மாலதி.

“டென்ஷன் ஆகாத ம்மா… அப்பா இருந்தா போனை கொடேன்..”

“அப்பா காரை நேத்திக்குன்னு பார்த்து சர்விஸ்க்கு விட்டிருக்காரு, அதான் போய் பார்த்து வண்டிய எடுத்துட்டு வரேன்னு போயிருக்காரு முத்து.. எனக்கு இங்க வேலை இருக்கு, உனக்கு தகவல் சொல்லி வைக்கலாம்னு தான் போன் போட்டேன் வை போனை”, என்று போனை வைத்துவிட்டார்.

“இந்த அம்மாச்சி எல்லாம் செஞ்சூரி அடிக்கிற ஆளாச்சே. திடீர்ன்னு எப்படி உடம்புக்கு சீரியஸாகும், யாரை கேக்கறது” என்று யோசனையுடன் அமர்ந்துவிட்டாள் முத்தாயி. தம்பி தங்கையும் அம்மாவுடன் தான் இருப்பார்கள். அவர்களுக்கு அழைத்து பேசினாலும் அம்மா திட்டுவார்கள்.

மாலதியின் பெற்றோர்கள் மதுரையில் இருக்கிறார்கள். முத்தாயி, பிரேம், ரம்யா அனைவரும் முதல் மூன்று வருடங்கள் அவர்கள் அம்மாச்சி வீட்டில் தான். பள்ளி செல்லும் வயதில் தான் மாலதி அழைத்து கொண்டார்.

சிறு வயதில் இருந்தே அதிகம் குறும்பு செய்யு முத்தாயிடம் கண்டிப்புடன் தான் இருப்பார் அவர். அதனால் எப்பொழுதும் இருவருக்கும் முட்டிக்கொள்ளும்.

“சரி இவங்க மதுரைக்கு போயிட்டு சொல்லட்டும். நாம காலேஜூக்கு கிளம்புவோம்” என்று கிளம்பி கல்லூரிக்கு சென்றுவிட்டாள்.

விஷயத்தை கேள்விப்பட்டு கந்தசாமியும் நித்யகல்யாணியும் சௌந்தர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். சரியாக சௌந்தரும் வண்டியுடன் வந்து சேர்ந்தார்.

“பார்த்து போயிட்டு வாங்க.. வேணும்னா கால் பண்ணுங்க நாங்க உடனே புறப்பட்டு வந்திடறோம்” என்றார் நித்யகல்யாணி.

“பிள்ளைகளையும் கூட்டிட்டு போகணுமா?” என்றார் கந்தசாமி.

அவர்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் தயாராகி கொண்டிருக்கையில் தான் ஊரில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

“அண்ணன் அம்மாக்கு முடியல, உடனே வான்னு சொல்லிச்சு” என்றார் மாலதி.

“சௌந்தர், நீயும் மாலதியும் முன்னே போங்க.. அங்க நிலவரத்தை பார்த்திட்டு பிள்ளைகளை கூட்டிக்கலாம். எல்லாரும் போய் நின்னாலும் ஒன்னும் புரியாது..” என்றார் கந்தசாமி.

“அதுவும் சரிதான்.. பேசாம நீங்களும் அவங்க கூட போய்ட்டு வாங்க, நான் இங்க பிள்ளைகளோடு நின்னுகிறேன்” என்று கூறினார் நித்யகல்யாணி.

“போச்சு போச்சு.. பூபாலம் கணக்குக்கிட்ட என்னை கோர்த்துவிட்ருச்சு..” என்று பக்கத்தில் இருந்த சின்ன பேரனிடம் புலம்பினார் மனிதர்.

“சரி அத்தை, வாங்க மாமா நாம போவோம்” என்று மாலதி சென்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார்.

கந்தசாமி மனைவியை முறைத்து கொண்டே சென்று வண்டியில் ஏறினார். மூவரும் மதுரையை நோக்கி சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!