Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி – 11

அன்பு – 11

“சார்!!! இதை நான் தொட்டு பார்க்கவா??” என ஆவலுடன் அந்த கருப்பு வெள்ளை பியானோ கீ போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்த ஆதினி கேட்க,



Advertisement

“தொடலாம்!!! பட் ஒன் கண்டிஷன்!!!” என இரு கைகளையும் தேய்த்துக் கொண்டு குறும்பாய் பிரபா சொல்ல,

“என்ன சார்?? “

Advertisement

Advertisement

“ஹம்ம்ம்!!! இந்த சாரை விட்டுடலாமே!!! நீங்க என்னை சார்ன்னு கூப்பிடுறது எனக்கு பிடிக்கலையே” என குழந்தைக்கு இணையாய் மண்டியிட்டு அமர்ந்து பிரபா கூற,

“ஆனா, அம்மா உங்களை சார்னு கூப்பிடணும்னு தான் சொல்லிருக்காங்களே!!!” என பாவமாய் விழித்தாள் குழந்தை!!!

Advertisement

“ஹம்ம்!! அது அப்போ!! பேபிக்கு என்னைத் தெரியாது.. அதுனால அம்மா சார் சொல்ல சொன்னாங்க!! ஆனா இப்போ தான் நம்ம ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே!! இனி சார் வேண்டாம்!!”

“இருந்தாலும் அம்மா திட்டுவாங்களே!!” என குழந்தை இன்னும் தயங்க,

“அம்மா சொன்ன மட்டும் தான் கேட்பீங்களா?? நான் சொல்றதை கேட்க மாட்டீங்களா அப்போ?? நான் உங்க பிரெண்ட் இல்லையா??” என பிரபாவும் சோகமாய் முகத்தை வைத்துக்கொள்ள,

“இல்லை இல்லை!! நீங்க என் பிரெண்ட் தான்.. சேட் ஆகாதீங்க!!” என அவனின் கைகளைத் தொட்டு சமாதானம் செய்த குழந்தையின் செயலில், பிரபஞ்சனின் இதயம் மெழுகாய் உருகியது!!!

“பேபி கூட இருந்தா, என் சோகமெல்லாம் சொல்லிக்காம கூட கிளம்பிப் போயே போயிடும்!!! நீங்க பக்கத்துல இருக்கப்போ நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் மா!!!” என குழந்தையின் தலையை லேசாய் பிடித்து அழுத்திக் கொடுத்தவனின் கண்களில், பல வருடமாய் தொலைந்து போயிருந்த நிம்மதி மீண்டும் வந்து சேர்ந்திருந்தது!!

அதில் அழகாய் புன்னகைத்த குழந்தை,

“சார்ன்னு கூப்பிடக்கூடாதுன்னா வேற எப்படிக் கூப்பிட??” என சந்தேகம் வரப்பெற்றவளாக அடுத்த கேள்வியைக் கேட்க,

குழந்தையின் சிரிப்பில் பிரபாவின் இதழ்களும் மலர,

“ஹம்ம்!! பிரபுன்னு கூப்பிடுறீங்களா???” என ஆசையாய்க் கேட்டான்.

“பிரபுவா?? உங்க நேம் பிரபஞ்சன் தான???”

“ம்ம்.. பிரபஞ்சன் தான்!! பிரபான்னு ப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூப்பிடுவாங்க.. ஆனா எங்க அம்மா மட்டும் தான் என்னை பிரபுன்னு கூப்பிடுவாங்க.. நீங்களும் என்னை அப்படியே கூப்பிடுறீங்களா??”

தாயின் இடத்தில் குழந்தையை வைத்துப்பார்க்க முயலும் அவனின் கண்களில் தான் எத்தனை எதிர்பார்ப்பு,

“அப்படியா???” என யோசித்த குழந்தை, அவன் பார்வையில் இருந்து என்ன புரிந்து கொண்டதோ,

“ஓகே பிரபு!!!” என சட்டென அவன் விரும்பியபடி அழைத்து, அவனை ஆனந்தக் கூத்தாடச் செய்தது!!

கிட்டத்தட்ட பத்துவருடங்கள் கடந்துவிட்டது, இந்த அழைப்பைக் கேட்டு!! அவனை விட்டு அவனின் அன்னையின் உயிர் பிரிந்திருந்தாலும், ஒவ்வொரு நொடியும் அவரின் அண்மையை உணர்ந்து, அதிலே வாழ்க்கையை கடத்திக் கொண்டிருந்த பிரபாவின் மனதோரம், அவனின் அன்னை விட்டுச்சென்ற வெறுமை அப்படியே கிடக்க, இன்று இந்த மழலையின் அழைப்பு அந்த சிறு வெறுமையையும் முற்றிலும் போக்கியிருந்தது!!

“தேங்க் யூ பேபி!!!” என்றவன் குழந்தையை மென்மையாய் அணைத்திருக்க, முதல் நாள் போல் கூச்சம் கொள்ளாமல், ஆதினியும் தன் குட்டி கரங்கள் கொண்டு அவன் இடையைக் கட்டிக் கொண்டாள்.

அதில் பிரபஞ்சனின் மனம் நிறைவடைய, இதழில் ஆத்மார்த்தமான புன்னகை ஒன்று குடியேறியது!!!

***

“அஞ்சலி!! இன்னும் எவ்ளோ நேரம் அவன் வீட்டையே பார்த்திட்டு இருக்கப்போற?? வா இங்க வந்து உட்காரு!! செஸ் விளையாடுவ தான நீ?? வா கம்பெனி கொடு!! போர் அடிக்குது!!” என்ற மது, சதுரங்க அட்டையை கொண்டு வந்து டீப்பாய் மீது வைக்க,

பிரபஞ்சனின் வீட்டையே தவிப்புடன் பார்த்திருந்த அஞ்சலி,

“அக்கா!! பாப்பா காலையில அங்க போனா.. மணி இப்போ பண்ணிரெண்டு ஆச்சு!! இன்னும் வரலை.. நீங்க கால் பண்ணி கேட்குறீங்களா??” என தயக்கத்துடன் கேட்க,

அவளை நன்றாய் முறைத்த மது,

“யாரோ வீட்டுக்கா பேபி போயிருக்கா!! நம்ம பிரபா தான!! நம்மளை விட அவன் நல்லாவே பார்த்துப்பான்.. அதான் இந்த ரெண்டு நாள்ல பேபியே அவன்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டாளே!! அப்பறம் என்ன பயம் உனக்கு?? கண்டதையும் யோசிக்காம வா!!” என அதட்டினாள் மது!!

‘ என் பயமே அதானே!!!’ என மனதிற்குள் நினைத்துக்கொண்ட அஞ்சலியின் நினைவு எல்லாம் இரண்டு நாட்களாக நடந்ததை சுற்றியே வலம் வந்தது!!

முதல் நாள் தயக்கம் கொண்டு பிரபாவிடம் இருந்து ஒதுங்கியே இருந்த குழந்தையை அப்படியே விடாமல் பிரபா பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருக்க, ஆதினியும் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கூட்டை விட்டு வெளியே வந்து அவனுடன் இயல்பாக பழக முற்பட்டாள்.

வெறுத்து விலகிப் போக அவன் ஒன்றும் யாரோ இல்லையே, அவளுக்குப் பிடித்த பாடகர் பிரபஞ்சன்!!! அந்த ஒரு காரணமே குழந்தை அவனுடன் விரைவில் ஒட்டிக்கொள்ள போதுமானதாக இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் குழந்தையுடன் சேர்ந்து ஓவியம் வரைவது, கார்ட்டூன் பார்ப்பது, பாடல் பாடுவது, குழந்தைக்குப் பிடித்த உணவை சமைப்பது என அவனின் நேரம் மொத்தத்தையும் குழந்தையுடனே பிரபா கழிக்க, இருவருக்குள்ளும் அழகாய் ஒரு பந்தம் உருவாகியிருந்தது!!!

எது நடக்கக்கூடாது என கவிதாஞ்சலி பயந்தாளோ, அதுவே அவள் கண்முன் நடந்து கொண்டிருக்க, அதைத் தடுக்க முடியாத தன் நிலையை அறவே வெறுத்தாள்.

அன்று ஆதினியைக் கண்டு பிரபா அடைந்த உணர்ச்சிப் போராட்டத்தைக் கண்டு, தாள முடியாமல் அறைக்குள் அடைந்து கொண்ட கவிக்கு, உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும் என மனம் பரபரத்தது!!

ஆனால் அப்படி உடனே ஓடி ஒளிவதற்கு அவளுக்கு போக்கிடமும் இல்லை, பெரிதாய் பொருளாதாரமும் இல்லை!!! எனவே கூடிய விரைவில் இங்கிருந்து கிளம்ப அனைத்தையும் பிரபாவின் கருத்தைக் கவராமல் தயார் செய்ய வேண்டும் என உறுதியெடுத்துக்கொண்டவள், அதற்கான முயற்சியில் தான் இறங்கியிருக்கிறாள்.

இங்கு இருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில், ஆதினியுடன் பிரபஞ்சன் மிகவும் நெருக்கமடைந்துவிட்டால், இந்தப்பிரிவு அவனை எந்த அளவு உடைத்துவிடும் என கவி உணர்ந்திருந்ததாலே, குழந்தையை அவனுடன் பழகவிட பயம் கொள்கிறாள்!!

ஆனாலும், ஆதினியைக் காண்கையில் அவன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, ஆதினி, பிரபா சந்திப்பிற்கு தடைபோட விடாமல் அவளை கட்டிப்போட்டிருந்தது!!

என்னதான் இங்கிருந்து சென்றுவிடலாம் என கவி முடிவெடுத்துவிட்டாலும், பிரபா என்ன நினைக்கிறான்?? என்ன முடிவில் இருக்கிறான் என கவியால் சிறிதும் கணிக்க முடியவில்லை!!

இங்கு வந்த அன்று கவியிடம் பேசியது தான். அதன் பின் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச முற்படவில்லை பிரபஞ்சன்!!

அவளிடம் கேட்கப்பட ஆயிரம் கேள்விகள் பிரபாவிடம் இருந்தாலும், அவன் மௌனத்தையே கையில் எடுத்திருக்க, கவியால் அவன் மனநிலையை கணிக்கமுடியவில்லை!!

கவி என் கண் முன் நடமாடுவதே போதும் எனக்கு என்பதைப் போல், அவளைக் காணும் நேரமெல்லாம் அவன் கண்களில் வந்து போகும் நிம்மதி உணர்வுடன் அவளைக் கடந்து விடுவான்.

ஏதாவது பேசி விட்டால் கூட பரவாயில்லை, ஆனால் இந்த அமைதி!!! அது தான் கவியை மிகவும் சிந்திக்க வைத்தது!!

என்ன யோசித்தும் அவனை கணிக்க முடியாத கவி, குழப்பத்துடனே நாட்களைக் கடத்த, அப்போது அவளின் தோளில் பட்டென ஒரு அடி விழ, பதறியடித்து எழுந்த கவி, அங்கே தன்னையே முறைத்துக்கொண்டிருந்த மதுவைக் கண்டு அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

“விளையாட வான்னு கூப்பிட்டா, கண்ணை முழிச்சிட்டே கனவு கண்டுட்டு இருக்க நீ!!! உன்னை வச்சிட்டு!!” என தலையில் அடித்துக் கொண்டாள் மது!!

“சாரி சாரிக்கா!! ஏதோ யோசனை!!” என மன்னிப்பு வேண்டிய அஞ்சலி, முயன்று விளையாட்டில் கவனத்தை திருப்பினாலும், அவளின் எண்ணமெல்லாம் எதிர்வீட்டில் இருந்த பிரபாவும் ஆதினியும் தான் நிறைந்திருந்தனர்!!

எனவே வெற்றிகரமாக விளையாட்டில்(?) தோல்வியடைந்த அஞ்சலி,

“சாப்பிடற நேரம் ஆச்சுக்கா!! அவளைக் கூட்டிட்டு வாங்களேன்.. பிளீஸ்!!” என கண்ணைச் சுருக்கி கெஞ்ச,

“எனக்குன்னே வருது பாரு வாயில்லா பூச்சியா!!” என நொந்து கொண்ட மதுவும் பிரபாவின் வீட்டைத் தேடிப்போனாள்.

***

“கவினு!!!!” என கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழித்து வீடு வந்து சேர்ந்த கணவனை உற்சாகக் கூச்சலுடன் வரவேற்ற மது, ஓடி வந்து அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தாள்.

அவளின் உற்சாகம் கவினையும் தொற்றிக்கொள்ள, இரண்டுவார பிரிவைப் போக்குவதைப் போல் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டவன்,

“உன் லொட லொட பேச்சை ரொம்பவே மிஸ் பண்ணேன் டி மது!!!!!” அவளின் காது மடல்களில் உதடுகள் உரசக் கூறியவன், அவளின் கழுத்தோரம் முத்தம் பதிக்க,

அப்போது தான் அஞ்சலியின் நினைவு வரப் பெற்றவளாக, “டேய் லூசு!!! வீட்டுல அந்தபொண்ணும் அவளோட குட்டிப்பொண்ணும் இருக்காங்க.. இப்படியா பண்ணுவ!!” என அவனின் தலையில் தட்டியவள், அஞ்சலியைத் தேட,

அவளோ, மதுவின் சந்தோஷக் கூச்சலிலே, அவர்களுக்கு தனிமை வழங்கி, மகளுடன் அறைக்குள் அடைந்து கொண்டிருந்தாள்.

“ஷ்!!! உன்னைப் பார்த்த சந்தோஷத்துல மறந்தே போயிட்டேன் பாரு!!! எங்க அந்தப்பொண்ணு???” என மதுவைத் தன் கைவளைவில் வைத்துக்கொண்டே உள்ளே செல்ல,

“நான் கத்திட்டு வந்த வேகத்தைப் பார்த்து, மிரண்டு உள்ளே ஓடிருப்பா!! சில்லி கேர்ள்!!!”

“அஞ்சலி!!! ஹேய் அஞ்சலி!! பேபி கூப்பிட்டு வெளிய வா!!” என அவள் அறையின் வாசலில் நின்று மது குரல் கொடுக்க,

“உன் அடாவடியை அந்த பொண்ணுகிட்டையும் காட்ட ஸ்டார்ட் பண்ணிட்டியா??” என போலியாய் அலுத்துக் கொண்ட கவின், அஞ்சலியின் வருகைக்காக காத்திருக்க,

மெதுவாய் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த அஞ்சலி, அங்கே தன்னையே ஆராய்ச்சியாக பார்த்திருக்கும் கவினைக் கண்டு லேசாய் புன்னகைத்தாள்!!!

அவள் தான்!! அவளே தான்!!! பிரபாவின் பர்சில் உள்ள கிழிந்த புகைப்படத்தின் சொந்தக்காரியே தான் என அவளைக் கண்டதும் கண்டுகொண்ட கவின், கடந்த இரண்டு வாரங்களாக படப்பிடிப்பில் வேலை அதிகமென்பதால், அவசியத்திற்குத் தவிர மதுவிடமே அதிகம் பேசியிருக்கவில்லை.

இன்று எப்படியாவது பிரபாவிடம் அஞ்சலியைப் பற்றி பேசிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டவனுக்கு, அஞ்சலி மீது இத்தனை நாளாய் இருந்த மெலிதான கோபம் கூட, நேரில் அவளின் தோற்றத்தைக் கண்டு காணாமல் போனது!!

‘ இந்தப்பொண்ணைப் பார்த்தாலும் சந்தோஷமா இருக்க மாதிரி தெரியலை!!! அப்பறம் எதுக்கு அவனையும் விலக்கி வச்சு அவனையும் வதைச்சிட்டு இருக்கு!!!’ என அவர்களைப் பற்றிய சிந்தனையில் இருந்தவனின் தோளை உலுக்கி, நிகழ்வுக்கு இழுத்து வந்த மது,

“நான் உன்னை அவளுக்கு இண்ட்ரோ கொடுத்திட்டு இருக்கேன்.. அவளே அதிசயமா வாயைத் திறந்து ஹாய் எல்லாம் சொல்றா!! பதிலுக்கு அவகிட்ட பேசாம என்ன யோசனை உனக்கு?? எப்போ பாரு ஷூட்டிங் ஷூட்டிங் தானா??? கொல்லப்போறேன் உன்னை!!! இங்க இருக்க வரைக்கும், என்னையும் நம்ம பேபியையும் தவிர வேற நினைப்பே உனக்கு வரக்கூடாது!!!” என விரல் நீட்டி மிரட்டல் விடுக்க,

நீட்டிய விரலைப் பற்றி முத்தமிட்ட கவின்,

“உத்தரவு மகாராணி!!!” என்றான்.

அஞ்சலிக்கு அவர்கள் இருவரின் இடையில் இருக்கும் அந்தக் காதல் அழகாய்த் தோன்ற, தன்னை மறந்து அவர்களை ரசித்திருந்தாள்.

“சரி பிரபா எங்க?? நான் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் ஆளைக் காணோம்?? ஒரு போன் கூட பண்ணலை இந்தப்பையன்!!” என கவின் கேட்க,

“ஹம்ம்!! அவனோட நேரம் எல்லாம் இந்த குட்டி மேடம் கூடவே போகுது!! இதுல எங்க அவனுக்கு நம்ம கண்ணுக்குத் தெரிவோம்” என ஆதினியின் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி மது சொல்ல,

அப்போது தான் குழந்தையை கவனித்த கவினின் முகத்தில் தானாகவே மென்மை வந்து  குடியேற,

“வாவ்!! யாரு இந்த கியூட் பேபி??” என்றான் குழந்தையிடம்.

“அவ கொஞ்சம் ஷை டைப்!! உன் கூட செட் ஆக டைம் எடுக்கும்” என அதற்கும் மதுவே பதில் சொல்ல,

“உன்னால வாய் பேசாம இருக்கவே முடியாதா??”

“அதான் என் தொழிலே!! பேசாதன்னா எப்படி??”

“சரி சரி விடு!! பிரபா எங்க??”

“அவனுக்கு இன்னைக்கு தேவா சார் கூட ஒரு ரெக்கார்டிங் இருக்கு!!! ஏர்லி மார்னிங்கே போயிட்டான்!! சரி சரி நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடு!! டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் இருக்கு.. போகணும்.. உனக்காக தான் போன வாரம் போகலை!!” என மது அவசரப்படுத்த,

“எல்லாத்துலயும் விளையாட்டு!! டாக்டர் சொன்ன அன்னைக்கு செக்கப் போகணும்னு கூடவா அறிவில்லை மது உனக்கு!!” என திட்டிக்கொண்டே அவர்களின் அறைக்குச் சென்றவன், மருத்துவமனை சென்றுவிட்டு வந்து பிரபஞ்சன் மற்றும் அஞ்சலியின் வாழ்க்கை பற்றி அவர்களுடன் பேசிக்கொள்ளலாம் என நினைத்து கிளம்பினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் இருவரும் கிளம்பி மருத்துவமனை சென்றுவிட்டனர் கவின் – மது தம்பதியர்!!

அதுவரை பேருக்கு புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்து நடமாடிக்கொண்டிருந்த கவியின் முகம் இப்போது தீவிரமாக மாற,

பரபரவென தங்களுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தவள், யாருக்கோ அலைபேசியில் அழைத்துப் பேசிவிட்டு, மகளின் கேள்விகளை சமாளித்து அவளையும் கிளப்பிக்கொண்டு தங்கள் உடமைகளுடன் வெளியே வர,

எதிர் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த பெயர் பதாகை அவளின் நடையைத் தேங்கச் செய்தது!!

“Mr.பிரபஞ்சன்ஸ் கவிதாலயம்!!!” என பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பதாகை பெண்ணவளின் நெஞ்சில் ஈட்டியை இறக்கியதைப் போல் வலியைக் கொடுக்க,

“மன்னிச்சிடு  டா பிரபா!!! நான் போறேன்!!” என்றவளின் மனம் ஊமையாகக் கதற, பாவம் அதை அறிவதற்குத் தான் அங்கு யாருமில்லை.

மென்மையாய் அந்த பெயர் பதாகையை தடவிக் கொடுத்தவள், இதயத்தில் ஏறிய பாரதத்துடன் அவளின் பிரபாவை விட்டு மீண்டும் பிரிந்தே சென்று விட்டாள்!!!!

***

“பிரபு!!!!”

“ஃபாஸ்டா போங்க!!!”

“அதோ அந்த ரெட் காரை முந்துங்க!!!”

“அந்த பிளாக் கார் இப்போ!!”

“சூப்பர்!! சூப்பர்!!!”

என ஆதினியின் குரல் மட்டுமே அந்த மகிழுந்தில் ஒலித்துக்கொண்டிருக்க, சற்று நேரத்தில் உடல் அசதியில் குழந்தையும் தூங்கி விட, இப்போது அந்த மகிழுந்தை ஆக்கிரமித்திருந்தது அமைதி மட்டுமே!!

காரை ஓட்டிக் கொண்டிருந்த பிரபாவின் முகம் சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவன் எவ்வளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறான் என்று கவியால் உணர்ந்து கொள்ள முடிந்தது!!!

இப்போது வரையில் அவளால் நம்ப முடியவில்லை!!! எப்படி சரியாக ரயில் ஏறும் நேரம் பிரபா அங்கு வந்து நின்றான் என்று!!!

பிடித்த ஒன்றை பாதுகாத்துக்கொள்ளத் தெரியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் பதின்ம வயது பிரபஞ்சன் அல்லவே இவன்!!!

என்று இவளைக் கண்டானோ, அன்றே அவளின் மனமறிந்து, நிச்சயம் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவெடுப்பாள் என முன்கூட்டியே அவதானித்து வைத்திருந்த பிரபஞ்சன், அனைத்து வகையிலும் எச்சரிக்கையாகத் தான் இருந்தான்.

இந்த முறை அவளை எப்பாடு பட்டாவது தன் கைக்குள்ளே பொத்தி வைத்துக்கொள்ள நினைத்த பிரபஞ்சன், இதோ இப்போதும் அவனை விட்டு விலகிச் செல்லும் அவளின் முயற்சியை முறியடித்து மீண்டும் அவளைத் தன்னுடனே அழைத்துக் கொண்டு செல்கின்றான்.

வழியெங்கும் பிரபாவின் மௌனமே தொடர, கவியின் குற்ற உணர்ச்சி கூடிக் கொண்டே போனது!!

உலர்ந்த தொண்டையை எச்சிலை விழுங்கி ஈரப்படுத்திக் கொண்ட கவி, முயன்று வரவழைத்த தைரியத்துடன்,

“பிரபா!!!” என அழைக்க,

ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த அவனின் கரங்கள் இறுகி, அவன் கோபத்தை அவளுக்கு வெளிக்காட்டியது!!

“பிரபா!! நான் சொல்ல வரதை கொஞ்சம் கேளு!!! உன் நல்லதுக்காகத் தான்!!!” என தன்னைப் புரிய வைத்துவிடும் நோக்குடன் கவி தொடங்க,

“நான் கேட்டேனா உன்கிட்ட!!! எனக்கு நல்லது பண்ணுன்னு கேட்டேனா???” என கோபத்தில் பிரபா உறும,

கவிக்கு அந்த நிலையிலும் பிரபாவின் கோபம் ஆச்சரியமளித்தது!!!

“உடல் தோற்றத்துல மட்டும் இல்லை.. எல்லாத்துலயும் ரொம்பவே மாறிட்ட டா பிரபா நீ!!” என உண்மையான ஆனந்தத்துடன் வெளிவந்த கவியின் குரலில், கசந்த முறுவல் ஒன்று தோன்றியது அவனிடம்!!

“உன் விஷயத்துல!! இன்னைக்கு மட்டும் இல்லை என்னைக்கும் நான் அதே பிரபா தான் கவி!! அதை முதல்ல மனசுல பதிய வச்சுக்கோ!!!” என்றான் அழுத்தம் திருத்தமாக!!

அதில் கவிக்கு இயலாமை தோன்ற, இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என அவள் குழம்பித் தவித்தாள்.

“உனக்கு எப்படி பிரபா சொல்றது… ம்ம்.. நான் உனக்கு சரியில்லை டா!! நான்..” என வார்த்தைகள் கிடைக்காமல் பெண்ணவள் தடுமாற,

“காதல்ல சரி, தப்புன்னு எதுவும் இல்லைன்னு நீ தான் சொன்னதா எனக்கு ஞாபகம்!!”

“ப்ச்!! பிரபா!! புரிஞ்சுக்கோ டா.. எனக்கு இதெல்லாம் வேண்டாம்.. பிடிக்கலை.. எனக்கு என் பொண்ணு மட்டும் போதும்!! அவளைத் தாண்டி வேற எதையும் யோசிக்கிற நிலைமையில நான் இல்லை” என்றாள் கரகரத்த குரலில்!!

ரத்தமென சிவப்பேறிவிட்ட விழிகளுடன் பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்த பிரபஞ்சன்,

“என்னைப்பத்தி யோசிக்கவே மாட்டல்ல கவி என்னைக்கும்!!!” என கலங்கிய குரலை மறைத்துக் கொண்டு கேட்க,

சரியாக அதே நேரம் அவர்களின் வாகனத்தை பின்னால் வந்த வாகனம் முந்தும் போது, லேசாய் உரசிச் சென்றிருக்க, தடுமாறிய வாகனத்தை சடன் பிரேக் போட்டு நிறுத்தியிருந்தான் பிரபஞ்சன்.

நொடி நேரத்தில் நிகழ்ந்துவிட்ட சம்பவத்தில் தன் மடியில் தூங்கியிருந்த குழந்தையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு, மருண்ட பார்வையுடன் அமர்ந்திருந்த கவியைக் கண்டு பதறிய பிரபா,

“ஒன்னும் இல்லை!!! ஒன்னும் இல்லை ரிலாக்ஸ்!!! பேபிக்கு ஒன்னும் இல்லை தானே??” என குழந்தையை ஆராய, அவன் கண்களில் சிக்கியது ‘அது ‘.

சடன் பிரேக் போட்டதில், கவி தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த அந்தத்தாலி வெளியே விழுந்து கிடக்க, பிரபாவின் பார்வை அதைக்கண்டு இடுங்கியது!!!

அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும்!!!

நடுங்கும் கரங்களால், கவியின் கழுத்தில் அந்தத் தாலியைக் கட்டி, மூன்று முடிச்சிட அவன் பட்ட பாடு அவன் மட்டுமே அறிந்தது!!

அவன் கட்டிய தாலி!!! நைந்து அறுந்து விடாமல் இருக்க அதன் மேல் கெட்டியான மஞ்சள் கயிறொன்று சுற்றப்பட்டிருந்தது!! இருந்தாலும் அவனால் அடித்துச் சொல்ல முடியும்!! இது முதன்முதலில் கவியின் கழுத்தில் அவன் கையால் ஏறிய தாலி தான் என்று!!

“அப்போ இன்னும் இதை கவி கழுத்துல போட்டிருக்கானா?? அப்போ அம்முவோட அப்பா!!!????” என யோசிக்க யோசிக்க பிரபாவிற்கு தலையே வெடித்து விடும் போலிருக்க,

அவன் பார்வையைத் தொடர்ந்து சென்ற கவிக்கும் அப்போது தான் கழுத்தில் கிடந்த தாலி, கண்ணில் பட, உச்சக்கட்ட அதிர்ச்சியில் பிரபாவைப் பார்த்தவள், ‘ என்னை எதுவும் கேட்டு விடாதே!!’ என இறைஞ்சுதலாய் பார்க்க,

அதற்கெல்லாம் மசியும் நிலையில் பிரபா தற்போது இல்லவே இல்லை!!

என்ன தான் நடந்தது?? என அவனுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருக்க,

“எதையும் மறைக்காம என்கிட்ட இப்போ நீ எல்லாத்தையும் சொல்ற!!!! இது என் மேல சத்தியம்!!” என எஃகென இறுகிப் போய் வந்து விழுந்த பிரபாவின் குரலில் இருந்த பிடிவாதம், நிச்சயம் உண்மை தெரியாமல் விட மாட்டான் என்று கவிக்கு உணர்த்த,

ஒரு கசந்த முறுவலுடன் தன் கடந்த காலத்தை மீட்டுப் பார்த்தாள்!!!

“விலகிச் செல்ல விரும்பும் இதயம் ஒன்று!!

 இறுக்கிக் கொள்ள துடிக்கும் இதயம் ஒன்று!!

 யார் வெல்வார்?? யார் தோற்பார்??

காலமும், காதலும் பதில் கூறட்டும்!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!