Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️26

யாதுமாகி #26

 நீ உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க? உன் பேச்சை யாராவது கேட்டால் காரி துப்புவாங்க!

கொஞ்ச நாள் தங்கிட்டு வராளாம்,கொஞ்ச நாள்… லூசாடி நீ?பல்லை கடித்து அவளை பார்வையால் எரிக்க முயன்று கொண்டு இருந்தான்.

 கசப்பான மருந்தை கண்டு முகம் கடுக்கும் சிறு குழந்தை போல் அவள் முகம் வாடி கிடந்தது.



Advertisement

 இப்போ எதுக்கு முகத்தை மூனு முழத்துக்கு முறுக்கிட்டு உட்கார்ந்திருக்க? கொஞ்ச நாள் இல்ல பர்மனன்ட்டா உங்க அப்பன் வீட்டிலே இருந்திடு. கடுப்புடன் எழுந்தவன் ஹாலுக்கு போய் விட்டான்.

முட்டிய கண்ணீருடன் தலையணையில் முகம் புதைத்தவள் சிறிது நேரம் எதுவும் சிந்திக்க விரும்பாது கண் மூடி அமைதிகொண்டாள்.

இனி அழுது அரற்றி ஆவது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தவள் சற்று நேரம் கண்ணயர்ந்து தெளிந்து எழுந்தமர்ந்தாள்.

Advertisement

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அது போல்,அவள் விரும்பவில்லை என்றாலும் அங்கு போய் வாழ்ந்து தானே ஆக வேண்டும்?

Advertisement

 பெற்றவர்களிடம் விடை பெற்று பிடிக்காத புகுந்த வீட்டிற்கு புறப்பட்டாள்.

“———————-”

 கடுகடுவென இருந்தவளைக் காண சிரிப்பும் கோபமாய் வந்தது அவனுக்கு.

Advertisement

 நேத்ரா, இந்த வீட்டில் எங்க அம்மா மட்டும் இல்லை… உன்னை தங்கமா தாங்குற எங்க பாட்டி இருக்காங்க, உன்னையும் எங்க வீட்டில் பிறந்த பெண் போல் நடத்துற எங்கப்பா இருக்கார். உன்னை சின்னம்மா என்று கொண்டாடும் வேலைக்காரங்க இருக்காங்க, எல்லாத்துக்கும் மேல் உன்னை உயிரா நினைத்து உள்ளங்கையில் தாங்க உன் புருஷன் நான் இருக்கேன்! நீ இப்படி சின்ன பிள்ளைத்தனமா நடந்துக்கிறதை பார்த்து அழறதா?சிரிக்கிறதா?ஆதங்கத்துடன் கேட்டான்.

இவன் ஈஸியா சொல்லிட்டான் அனுபவிப்பவளுக்கு அல்லவா அந்த கஷ்டம் தெரியும்? உள்ளுக்குள் பொரிந்து தள்ளினாள்.

 அவள் பொறுமல் புரிந்ததோ என்னவோ… எங்கம்மா வரம்பு மீறி பேசினால் என்கிட்ட சொல்லு,அழறதோ மனசுக்குள்ள வன்மத்தை வளர்த்துகிறதோ நல்லதுக்கு இல்லை!

 நீ இந்த வீட்டோட ஒரே மருமகள்.உனக்கு சுதந்திரமும் இருக்கு,கூடவே பொறுப்பும் இருக்கு அமைதியாக கூறினான்.

அவள் எதுவும் பேசாது அவனை முறைக்க அப்படி பார்த்தா நாங்க பயந்து விடுவோமாக்கும் குழைவாய் நகைத்து அள்ளி அணைத்துக் கொண்டான்.

 நேத்து குட்டி இப்போ மட்டும் இல்லை செல்லம் எப்பவுமே உன்னை விடற ஐடியா இல்லை.

 என்னை யாரும் அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் இருந்தவன் நான் என்னை வேரோடு சாய்ந்தவள் நீ தான்!

உன் மனசில் இந்த கல்யாணம் தவறா? சரியா? என்று தடுமாற்றம் வரலாம்.எனக்கு எப்பவுமே இருந்ததில்லை. விஷ்ணு முடிவு எடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிப்பான் முடிவு எடுத்தபின் பின் வாங்கி நிற்க வாய்ப்பே இல்லை.

 இன்னும் 30 வருஷம் கழிச்சு நமக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கும் அப்போவும் உன்னை விட்டு விலகும் ஐடியா இல்லை. உறுதியாய் இறுதியாய் மொழிந்தவன் அவள் நெற்றியில் ஆழ முத்தமிட்டு தன் காதலின் உறுதியை காந்தக் கண்களால் உணர்த்தி அவள் தேகத்தை சூடேற்றினான்.

தன்பால் இவ்வளவு காதலுடன் இருக்கும் கணவனுக்காக கொஞ்சம் பொறுத்துப் போவதில் தவறில்லை என்று தன்னை தேற்றிக்கொண்டாள்.

விஷ்ணுவும் கூடுமானவரை தாயும் மனைவியும் மோதிக் கொள்ளும் சூழல் வராதபடி பார்த்துக் கொண்டான்.

 நேத்ராவை அடிக்கடி வெளியில் அழைத்து செல்வான்.தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வந்தால் அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றும் பொருட்களை பரிசாக வாங்கி வருவான்.

 அவ்வப்போது வார்த்தை ஈட்டியால் குத்தி கிழிக்கும் ஜோதியை கடந்து போக கற்றுக் கொண்டாள் நேத்ரா.

 நேத்ரா உணர்த்திய காதலை விட இப்போது விஷ்ணு உணர்த்தும் காதல் பெரிதாக இருந்தது.

உலகத்தில இல்லாத பொண்டாட்டி கட்டி இருக்கான் ஜோதி முறுக்கி கொண்டார்.

வந்த வாழ்வை பாரு? சத்தமாய் அவளுக்கு கேட்க வேண்டும் என்றே அவர் உறுமிக்கொண்டு பார்க்கும் போது…

 நான் காணாத வாழ்க்கையை கண்டு விடவில்லை, என் பிறந்த வீட்டிலும் இதே வசதியோடு தான் வாழ்ந்தேன்.நான் ஒன்றும் புறவாசல் வழியாக உங்க பிள்ளையை இழுத்துட்டு வரல அவர் இஷ்டப்பட்டு தான் கட்டிக்கிட்டு வந்திருக்கேன்… நேத்ராவும் சரியாக பதிலடி கொடுத்தாள்.

ஏய் என்னையே எதிர்த்து பேசுறியா?அவர் வில்லத்தனமாய் முறைக்க..அவள் அசராது அதற்கும் ஒரு படி மேல் முறைத்து வைத்தாள்.

இது என் வீடு அவர் கர்வமாய் மொழிந்தார்.

உங்க வீடா?இது என் புருஷனோட தாத்தா வீடு! லாயர் மனைவி என்று பதிலடி கொடுத்து நிரூபித்தாள் நேத்ரா.

 ஏற்கனவே மருமகளை பிடிக்காது இருந்த ஜோதி நேத்ரா சரிக்கு சரி மல்லுக்கு நிற்க அவளை அடியோடு வெறுத்தார்.

 தன் ராஜ்ஜியமாய் வாழ்ந்த ஜோதிக்கு நேத்ராவை கண்டாலே பிடிக்கவில்லை.

ஜோதி ஒன்றை மறந்து விட்டார் சந்திரவதனி மருமகளாய் வந்திருந்தால் இந்நேரம் தன்னை ஓரங்கட்டி ஒரு மூலையில் அமர்த்தி இருப்பாள், அல்லது விஷ்ணுவை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போயிருப்பாள்.

தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் மாமியாரோடு மல்லுக்கட்டி நொந்து போனாள் நேத்ரா.

அவளது இயல்பு இதுவல்ல, துரு துருவென்று பேசுவாளே அன்றி பிறர் மனம் நோக அவளுக்கு பேசத் தெரியாது.

 நாளடைவில் ஜோதியை கண்டாலே ஒதுங்கி போக ஆரம்பித்தாள்.ஜோதி அதற்கும் குதர்க்கம் பேசினார்.எவ்வளவு திமிரு, மாமியார் என்ற மரியாதை இருக்கா? சகட்டுமேனிக்கு வசை பாடினார்.

எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்.இவளை ஏதாவது கண்டித்து வைக்கிறீங்களா கணவரிடம் காய்ந்தார்.

அம்மாடி ஜோதி, நான் உனக்கு பரிந்து நேத்ராவை கேள்வி கேட்டால் விஷ்ணு அவன் பொண்டாட்டிக்கு பரிந்து வருவான் இதெல்லாம் தேவையா?

 பொம்பளைங்களுக்குள்ள எப்படியோ போங்க.அது மாமியார் மருமகள் விவகாரம் இது.அடிச்சுப்பீங்களோ சேர்ந்துப்பிங்களோ உங்க இஷ்டம்! என்று பதமாய் நழுவிக் கொண்டார் வேணு.

நேத்ரா தாய்க்கு பதிலடி கொடுப்பதெல்லாம் விஷ்ணுவின் காதிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.என்றாலும் அவன் தாயையும் கண்டிக்கவில்லை மனைவியையும் கேள்வி கேட்கவில்லை. ஏனென்றால் அவனுக்கு தாயைப் பற்றியும் தெரியும் தாரத்தை பற்றியும் தெரியும்.

“——————”

 இரவு தாமதமாய் வீட்டிற்கு வந்தான்.

அவனுக்காக காத்திருந்தார் அன்னம்.

என்ன பாட்டி மணி பத்து ஆகுது இன்னும் தூங்காம ஹாலில் உட்கார்ந்து இருக்கீங்க? பதட்டமாய் கேட்டான்.

அய்யா விஷ்ணு நேத்ரா அடிக்கடி போய் படுத்துக்குறா…எப்போவும் சோகையா இருக்கா, என்னனு பாரு! அக்கறையாய் கூறினார். அவர் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. நேத்ராவிடம் வாய்விட்டு கேட்டு அவள் இல்லை என்று சொல்லிவிட்டால் எல்லோருக்கும் சங்கடமாகி விடுமே அந்த பயம் தான்.

 சிறு குழந்தை போல் மடங்கி உடலை குறுக்கி ஆழ்ந்து உறங்கும் மனைவியை கண்டு ரசித்து குறுநகை பூத்தவன் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று படுத்து விட்டான்.

 காலையில் சோர்வாய் எழுந்த நேத்ராவை இழுத்து மார் மீது போட்டுக் கொண்டவன் நேத்ரா என்னமா டல்லா இருக்க… தலை வலிக்குதா? அவள் கன்னத்தை பற்றி ஆதுரமாய் கேட்டான்.

 உங்க வீட்ல இருந்தா குதூகலமாவா இருக்க முடியும்? முகத்தை சுருக்கிக்கொண்டே கணவனை விலக்கி எழப்போனவள் தலை கிறுக்க சற்று நேரம் கண்ணை மூடி தன்னை சமன்படுத்தி எழுந்து கொண்டாள்.

 கணவனுக்கும் தனக்கும் காபியோடு வந்தவள் ஒரு மிடறு உறிந்து விழுங்க அப்படியே குமட்டிக் கொண்டு வந்தது.காபி கப்பை வைத்துவிட்டு வாஷ் ரூமிற்குள் ஓடினாள்.

நேத்ரா என்னடி ஆச்சு? பதட்டமாய் ஓடி அவள் தலையைத் தாங்கி பிடித்தான்.

 தெரியல…ரெண்டு மூணு நாளா காலையில் இப்படித்தான் இருக்கு! வாய் கொப்பளித்து சோர்வுடன் நின்றவளை தோள் சாய்த்து மெல்ல நடத்தி கட்டிலுக்கு அழைத்து வந்தான்.

 நிறைய காபி குடிக்கிறேன் இல்லையா… பித்தமா இருக்கும் என்றாள் சோர்ந்து கண் மூடியபடியே.

கீழே இறங்கி சென்றவன் நேராய் அன்னத்திடம் போய் நின்றான்.

பாட்டி நேத்ரா வாமிட் பண்றா, டயர்டா இருக்குன்னு சொல்றா பதை பதைத்தான்.

முகம் விகசிக்க பேரனை பார்த்தார் அந்த அன்பே உருவான மூத்த பெண்மணி.

 என்ன பாட்டி சிரிக்கிறீங்க? பதட்டமாய் கேட்டான்.

 நல்ல செய்தியாக இருக்கும் ராசா… அவர் புன்னகை இன்னும் விரிந்தது.

சட்டென்று அவன் மூளையில் மின்னல் வெட்ட” பாட்டி அப்படின்னா…. நீங்க கொள்ளு பாட்டியா? “ விழி விரித்தான்.

அவசரப்பட வேண்டாம் விஷ்ணு.நாம நல்ல செய்தியான்னு கேட்டு அப்படி இல்லன்னா நேத்ரா மனசு சங்கடப்படும்.

நாள் தள்ளி போயிருக்கான்னு கேளு! நான் கேட்டால் சரியா வராது. நீயே கேளுப்பா!

அப்படி இருந்தா ஒரு வாரம் பொறுத்து ஹாஸ்பிடல் போகலாம் என்றார்.

உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து ஓடினான் விஷ்ணு.

நேத்து மென்சஸ் டேட் தள்ளி போயிருக்கா? படபடப்பும் எதிர்பார்ப்புமாய் கேட்டான்.

 சட்டென்று கண் விழித்தவள் வர்ற டைம் தான்! எனக்கு நாலு நாள் முன்ன பின்ன கூட ஆகும் என்றவளுக்கு இனம் புரியா பதட்டம், லப்டப் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது.

 விஷ்ணு மனதிற்குள் ஏதோ ஒரு மகிழ்வின் ஊற்று.

காலை உணவை தங்கள் அறைக்கே கொண்டு வந்தான். இட்லியை பூண்டு சட்னியில் தோய்த்து ஒரு வாய் வைத்தவள் தொண்டை குழிக்குள் சென்ற வில்லள் அப்படியே புரட்டிக் கொண்டு வெளியே வர… சுதாரிக்க இயலாமல் அமர்ந்த இடத்திலேயே வாந்தி எடுத்து விட்டாள்.

இறுக்கி அவள் தோள் பற்றி ஆதரவாய் தலையைப் பிடித்துக் கொண்டான்.

 தன் தாயே தலைகோதுவதாய் எண்ணிய நேத்ராவிற்கு ஏன் என்று புரியாமலே அழுகை அழுகையாய் வந்தது.

நேத்து என்னடி…. அவள் கலங்கும் விழிகண்டு அவனுக்கும் கலங்கியது.

 தெரியல அழுகையா வருது என்றாள்

சிரித்தபடி அவளை வாஷ்பேசினுக்கு அழைத்து சென்று வாய் கொப்பளிக்க வைத்து அப்படியே அள்ளி கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

 ஏதேதோ குழப்பத்தில் அவள் கண்மூடி இருக்க… விஷ்ணு தரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

அய்யோ…நீங்க போய் அவள் பதறி எழ….

மூச்…என் பொண்டாட்டி உடம்புக்கு முடியாமல் இப்படி பண்ணிட்டா அதை நான் தானே சுத்தப்படுத்தணும்? முகம் சுளிக்காது சுத்தம் செய்து மாப் போட்டு துடைத்து எடுத்தான்.

அவனது அன்பில் அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.

 சற்று நேரத்தில் அன்னம் நொய் கஞ்சி, மாங்காய் ஊறுகாயோடு மூச்சு வாங்க மாடியேறி வந்தார்.

ச்சோ பாட்டி…நீங்க ஏன் மாடியேறி…சங்கடமாய் எழுந்து நின்றாள்.

 நேத்ராவிடம் எதுவும் கேட்காது அவள் மறுக்க மறுக்க கஞ்சியை புகட்டி விட்டுப் போனார்.

 நேத்து ஹாஸ்பிடல் போகலாமா? தவிப்புடன் கேட்டான்.

 அவள் சோர்வு கண்டு அவனுக்கு பொறுக்கவில்லை.

வேண்டாம் என்று பலவீனமாய் தலையசைத்தாள்.

 பாட்டியின் பொறுப்பில் நேத்ராவை விட்டு சென்றவன் மாலை நேரமே வீடு வந்து சேர்ந்தான்.

 நேத்ரா சாப்டியாடா? அவள் கன்னம் வருடினாள்.

ம்ம்ம்ம் ரசம் சாதம் சாப்பிட்டேன். தூக்கமா வருதுங்க! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கிறேன் ப்ளீஸ்! கெஞ்சியபடியே கொட்டாவி விட்டாள்.

 வீட்டு மருமக இப்படி இருட்டினது கூட தெரியாம கும்பகர்ணனுக்கு தங்கச்சி மாதிரி தூங்கினா குடும்பம் விளங்கிடும். ராக தாளத்தை தொடுத்தார் ஜோதி. மற்றவர்கள் அதை பொருட்படுத்தினால் தானே?

 விஷ்ணு, நேத்ரா இன்னுமா தூங்குறா? அவளை எழுப்பி இந்த மாதுளை ஜூசை கொடு! தழும்பி வழியும் குவளையை நீட்டினார் அன்னம்.

நேத்ராவை எழுப்பி கொஞ்சம் கொஞ்சமாய் ஜூசை புகட்டியவன்…அவளுக்கு வாந்தி விடக்கூடாது என்று மார்பை நீவிவிட்டான்.

சற்று அவள் இளைப்பாரி தெளிந்த பின்… நேத்துமா உன் ஹெல்த் பத்தி வாசுகிட்ட பேசினேன் அவன் பிரக்னன்ஸி சிம்டம்ஸ் மாதிரி இருக்குனு சொல்றான்.

 அசூயையாய் கணவனை பார்த்தாள்.

இந்த கிட் யூஸ் பண்ணி பார்ப்போமாடா? ஆர்வமாய் கேட்டான்.

மறுக்க விரும்பாதவள் அந்த கிட்டை வாங்கி கொண்டு வாஷ் ரூமிற்குள் நுழைந்தாள்.

 பிரசவத்திற்கு மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ஒரு கணவனுக்கு எவ்வளவு தவிப்பு இருக்குமோ அவ்வளவு தவிப்புடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.

மகிழ்ச்சியா? வெறுப்பா? இனங்காண முடியாத உணர்வுடன் வெளியில் வந்தவள் விழிவாசல் வழியே கேள்வி கேட்கும் தன் கண்ணாளன் முன்னே டெஸ்ட் செய்த கிட்டை நீட்டினாள்.

 தாறுமாறாய் துடிக்கும் இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இரட்டை சிவப்புக்கோடு கண்டு கண்கள் ஜொலிக்க ஆயிரம் கோடி சூரிய சந்திர பிரகாசம் அவன் கண்களில்…. ஹே ஹூரே… காற்றில் கையை மடக்கி குத்தியவன் ஹா ஹா ஹா என்று ஆனந்த கூத்தாடியபடி தன் வாழ்வை முழுமை அடைய வைத்த தன் தேவதையை அள்ளி கண்ணாமூச்சி சுற்றினான்.

 டேய் டேய் என்னடா பண்ற? விடுடா அவளை…கையில் கொண்டு வந்த மாங்காய் வற்றலை டீ பா மீது வைத்துவிட்டு பேரனை விரட்டினார்.

 பாட்டி நீங்க கன்ஃபார்ம் கொள்ளு பாட்டி ஆகிட்டீங்க! அன்னம் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

 அன்னத்திற்கு கண்கள் பனித்தது. எனக்கு தெரியும் சாமி…அதுதான் என் பேத்திக்கு வாய்க்கு புளிப்பா மாங்காய் வத்தல் கொண்டு வந்தேன். அவர் முகத்தில் அவ்வளவு சிரிப்பு.

எப்படி பாட்டி? பிரம்மிப்பாய் பார்த்தான்.

டேய்… நான் நாலு குழந்தை பெத்தவடா… அவன் காதை திருகினார்.

எதையும் மனதில் ஏற்காமல் வெறுமனே இலக்கின்றி பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா.

 நேத்ரா என்னடாமா…என்ன பண்ணுது தங்கம்? கன்னம் வருடி வாஞ்சையுடன் கேட்டார் அன்னம்.

ஒன்னும் இல்லை என்பதை போல் இடவலமாய் தலை அசைத்தாள் நேத்ரா.

 என் ராசாத்தி கன்னம் கிலள்ளி முத்தம் வைத்தவர்…விஷ்ணு இப்போ யாருக்கும் எதுவும் சொல்லிக்க வேண்டாம் ஒரு வரம் போகட்டும் ஹாஸ்பிட்டலுக்கு போய் வந்து சொல்லிக்கலாம் என்றார்.

 சரிங்க பாட்டி என்று பவ்யமாய் கேட்டுக்கொண்டான்.

அம்மாடி சும்மா படுத்தே கிடக்காதே தங்கம்.. கொஞ்சம் நடமாட்டமா இரு சாமி! வாந்தி வர்ற மாதிரி இருந்தா இந்த மாங்கா வத்தலை வாயில் போட்டு சப்பு,உப்பும் புளிப்புமா வாய்க்கு ஒனக்கையா இருக்கும்.அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி வெளியேறினார்.

“—————–”

 நேத்ரா தேங்க்யூ சோ மச் செல்லம். அவள் இதழில் இதழ் பதித்து தன் அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முயன்றான்.

 அவள் அமைதியாய் அவனை பார்க்க… என்னம்மா டயர்டா இருக்கா? காடனுக்கு போய் ஒரு சின்ன வாக் பண்ணலாமா? காதலில் கசிந்து நிறைவாய் ஒலித்தது அவனது நேசம் கொண்ட அன்பின் குரல்.

 வேண்டாம் என்றவள் சுரத்தின்றி படுக்கையில் சரிந்தாள்.

ய்யோ.. என்னடி இப்படி அசால்டா படுக்குற? பதறித்தான் போனான்.

 அவள் கண்கள் கசிந்தது.

என்னம்மா பயமா இருக்கா? அவள் அருகில் படுத்து ஆதரவாய் அணைத்து கொண்டான்.

அவளுக்கு சொல்ல தெரியவில்லை அப்படி ஒரு உணர்வு அவளை அழுத்தியது.

நேத்ரா நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன்னு வார்த்தையால் சொல்ல முடியாது அவன் முகத்தில் அத்தனை பூரிப்பு.

 அவள் பதில் பேசாது அவன் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.

 என்னடா உனக்கு ஹாப்பியா இல்லையா?

 இல்ல… அது… கொஞ்ச நாள் தள்ளி போட்டு இருக்கலாம்! அதுக்குள்ள ஏன்…அவள் திக்கி திணறினாள்.

என்னடி உளறுற… தலைக்கேறிய கோபத்தை கட்டுப்படுத்தினான்.

இல்ல போன மாசம் தானே மேரேஜ் ஆச்சு! உடல் நடுங்கியது அவளுக்கு.

அதுக்கு?அக்கினி பிழம்பான விழியுடன் அவளை முறைத்து பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!