திசை மாறா காதல் – 4
திசை மாறா காதல்
❤️பகுதி – 4❤️
உறைந்த நண்பர்கள்
வாகனத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து நண்பர்களின் கோபத்தால் , சற்று சுனங்கிய சுடர் , விழிகளை மூடிக் கொண்டாள்.. சில நிமிடங்களிலேயே , இரவில் உறக்கமின்மையால்.. அவள் அறியாது கண்ணும் அயர்ந்துவிட்டாள் .
இரண்டு நிமிடங்கள் கடப்பதற்குள்ளாக உறங்கும் தோழியை கவனித்த நவீன் ,
“ இந்த லூஸு.. இராத்திரி முழுசும் தூங்கவே இல்லை போல.. “, என்று கௌசிகாவிடம் மிகச் சரியாக கணித்து கூறியவனுக்கு வருத்தமே மிகுதியாக இருந்தது .
“ ஷ்.. மெதுவா பேசு நவீன்.. அவ தூங்கலைன்னு தெரியுதுல்ல.. அப்புறம் ஏன் கத்துற. முழிச்சுக்க போற.. அவ நிம்மதியா தூங்கட்டும் விடு. “, என்று கௌசிகா தோழிக்காக இவனிடம் அடிக்குரலில் கடிந்துக் கொள்ள ,
“ இப்படியே.. இவளுக்கு வக்காலத்து வாங்காத கௌசி.. காண்டாயிடுவேன்..“, என்று அவளிடம் சண்டைக்குச் செல்ல,
“ நவீன் ஏன் டா.. “, என்று வசீகரன் சலிப்புடன் அடக்க ,
“ ம்ச்சு.. அப்புறம் என்ன ப்ரோ. கௌசிக்கு அவன் கேரக்டர் பற்றி நல்லாவே தெரியும்.. அப்படி இருந்தும் எப்போ பாரு.. இவ லவ்வுக்கு ஏத்திவிட்டுகிட்டே இருந்தா என்ன அர்த்தம்.. “, என்று இப்பொழுது இவனிடம் நியாயம் கேட்டு இழுக்க ,
“ நவீன் முழிச்சுக்க போறா நவீன்.. ரொம்ப கஷ்டப்பட்டுவாடா.. ஏற்கனவே, லவ் மேட்டர்னால ஒதுங்கி போறேன்னு.. எவ்வளவு வருத்தமாக இருக்கா தெரியுமா.. கொஞ்சம் அமைதியா வா.. ப்ளீஸ் டா..“, என்று கெஞ்ச,
“ யாரு இதுவா முழிக்க போகுது.. பாரு.. வாய்க்குள்ள கொசு போறது தெரியாம புளந்துட்டு தூங்குது . இதுக்கு டிஸ்டர்ப் ஆகுமா.. ம்ஹும்.. “, என்று நையாண்டி செய்ய , அவன் கூறிய விதத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது .
“ உனக்கு எப்பவும் விஷ்ணுவ பிடிக்காதுங்கிறதுக்காக அவளை திட்டாத டா.. “, என்று இப்பொழுது கௌசி சிரிப்புடன் சொல்ல ,
“ அது எப்படி உங்களை மாதிரி பொண்ணுங்க தறுதலைகளா பார்த்து விழறீங்க.. எனக்கு புரியவே மாட்டேங்குது.. டாக்டருக்கு படிக்கிறது.. தண்ணி கேன் போடறவனை லவ் பண்ணுது.. அட.. அவன் எந்த வேலை பார்த்தா என்ன.. அது பரவாயில்லை. ஆனா, நல்லவனா இருக்கானா.. அது கிடையாது .. சுத்த பொறம்போக்கா இருக்கும் .. அது மாதிரி இருக்கு இவ கதை.. என்ன .. இது டீசன்டான பொறுக்கியா பார்த்து லவ் பண்ணுது.. அம்புட்டுதே வித்தியாசம்..“, என்று தன் குமுறலை கொட்டித் தீர்க்க..
“ தறுதலைய லவ் பண்ற அளவுக்கு அவ முட்டாள் இல்லை நவீன்.. முதல்ல நீ அதை புரிஞ்சுக்க..”, என்று தோழிக்காக வாதாடினாள் .
“ ஆங்.. ஆங்.. உங்க உத்தமன் இந்தியா வந்து ஒரு மாசம் ஆச்சு.. அது இந்த முட்டாள் இல்லாத புத்திசாலிக்கு இல்லை வக்காலத்து வாங்கும் மா..ஸ்..டர் ப்ரைனுக்காவது தெரியுமா ? “, என்று பற்களை கடிக்கவும்.. திகைத்துவிட்டாள் கௌசி .
“ என்ன டா சொல்ற. எப்போ.. எப்படி.. உனக்கு தெரியும்..? “, என்று அதிர்ந்தவளாய் விசரிக்கவும் ,
“ கௌசி.. நீ புத்திசாலின்னு ஒத்துக்கிறேன் ம்மா.. ஒத்துக்கிறேன்..ம்மா.. “, என்று நெஞ்சை பிடித்தவனாக வசனம் பேசியதும்.. அவன் பின்னந்தலையில் தட்டியவள்.. முகத்தையும் திருப்பிக் கொண்டாள்.
சீட்டில் நன்கு சாய்தவாறு , ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்த சுடர் ஒளியை.. ஏதோ ஒரு நிழல் உருவம் , அதன் மடியில் அவளை வைத்து கொள்ள.. அந்த மாறுதலில் , சட்டென்று அவளது உணர்வுகள் விழித்த போதிலும், அவளால் தூக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை . சாம்பல் உருவத்தின் கரங்கள் இரண்டும்.. அவளின்றி கரங்களோடு இடையையும் சேர்த்தே வளைத்து பிடித்த நிலையில் இருந்ததில்.. சுடரின் மேனி தொட்டாற்சிணுங்கி போல் உணர்வுகளை வெளிப்படுத்தத் துவங்கிவிட்டது .
நண்பர்கள் சூழ்ந்து இருக்கும் நான்கு சக்கர வாகனத்திற்கு உள்ளேயே , அவளை துரத்தும் உருவத்திடம் இருந்து தப்பிக்க இயலாதவளாக , ‘ நவீன்..’, என்று அழைக்கவும் இதழ்களை பிரிக்கவும் முடியாமல் போக.. விடாமுயற்சியை கை விடாதவளாக குரல் கொடுக்க முயற்சித்தவளுக்கு , தோல்வியே பரிசாக கிடைத்தது , வெடவெடத்து போனாள் .
Advertisement
மிக அருகே அமர்ந்து இருக்கும் நண்பர்களை வாய் திறந்தும் அழைக்க முடியவில்லை.. நிழல் உருவத்தின் பிடியால் , அணுவளவிற்கும் கைகளையும் அசைக்க முடியாமல் போனது .
தன் நிலையின் கழிவிரக்கத்தில் , தன் போல் சுடரின் விழிகள் மௌனமாய் கண்ணீர் சிந்த.. பரிதாபத்திலும் பரிதாபமாய் தன்னோடு இருக்கும் நண்பர்களின் பேச்சொலியும் அவளை எட்டி இருக்கவில்லை .
அவளுடைய போராட்டம் எதுவும் அறியாமல் , நவீன் , கௌசி மற்றும் வசீகரன் என்று மூவரும் பேசிக் கொண்டு இருக்க… நான்கு சக்கர வாகனமோ.. தார் சாலையில் பறந்துக் கொண்டு இருந்தது.
Advertisement
‘ யார் நீ.. உனக்கு என்ன வேணும்.. ‘, என்று தன் தைரியத்தை திரட்டி.. ஒருவாறு மனதிற்குள் அரற்றியவளின் குரல்.. அந்த உருவத்திற்கு கேட்கிறதா இல்லையா என்று கூட அவளுக்கு தெரியவில்லை .
Advertisement
எதுவும் செய்யாமல் சுடரை மடியில் இறுத்திக் கொண்டு இருந்தவரை தாக்குப் பிடிக்க முடிந்தவளால் , சாம்பல் உருவத்தின் முகம்.. அவளது கழுத்தில் புதைவது போல் வரவும் அதிகமாக மிரண்டவள் . அவளால் இயன்ற வரை அலற முயன்று திமிறத் துவங்கிவிட்டாள்.
எதற்கும் அசராத நிழல் உருவமோ , தன் தேவையை அவளிடத்தில் நிறைவேற்றிக் கொண்டு இருந்தது . அவள் பின்னங்கழுத்திற்குள் புதைந்து , பின் தாடையை நாசியால் உரசியவாறே சுடரின் காதை தீண்டி.. மிக அழுத்தம் திருத்தமாக “சுடர்.. “, என்று அழைக்க.. தூக்கிவாறு போட்டவளாக விழிக்க போராடிக் கொண்டு இருந்தாள் .
” சுடர்.. சுடர்.. “, என்று விடாமல் அவளது பெயரை கேட்டவளுக்கு , மண்டைக்குள் ஆயிரமாயிரம் நண்டுகள் ஊர்வது போல் குடைய , அந்த அழைப்பை ஏற்க முடியாமலும் , பிடியில் சிக்குண்டு கிடக்க விரும்பாதவள்.. தான் சோர்ந்து போவதை நிறுத்தி.. கடுமையான போராட்டத்திற்கு பிறகு விழித்து ,
ஹா.. என்று திமிறி திடுக்கென்று அமர்ந்தவளால்.. அவளுக்கு ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை .
Advertisement
சுடரின் நிலை இவ்வாறு என்றால்.. அவளோடு இருந்தவர்களின் நிலையோ அந்தோ பரிதாபமாய் !
காரில் ஏறிவுடன் உறங்கிவிட்டவள்.. அதேபோல் , சில நிமிடங்களிலேயே.. இடையை தூக்கி , உடலை வளைத்து நெளிந்தது மட்டுமல்லாமல் , கை கால்களும் யாரோ பிடிக்குள் இருந்து அசைக்க முடியாதது போல் முறுக்கிக் கொண்டு.. வேறுபாடாக நடந்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தாள் . அவள் கண்களையும் திறக்காமல் செயல்படத் தொடங்கி இருந்தவள்.. தலையையும் இடமும் வலமுமாய் நிலைக் கொள்ளாமல் அசைத்து தவிக்க..
முதலில், ‘ என்ன பண்றா இவ..’, என்ற நினைப்பில் விளையாட எண்ணியவர்களாக கவனித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு.. நிமிடங்கள் கடக்க.. பயப்பந்து உருளத் துடங்கிவிட்டது .
சொப்பலாக நினைந்து இருந்தவளின் உடலில் திமிறலும் துள்ளலும் அதிகரித்ததே தவிர குறையவில்லை .
” சுடர்.. “, என்று பற்கள் தெரிய துவங்கிய அழைப்பு நேரங்கள் கரையவும் பதற்றத்துடன் , அச்சத்துடனும் எதிரொலிக்க ஆரம்பித்து இருந்தது . ஓடிக் கொண்டு இருந்த வண்டி சாலையில் ஓரமாக நின்றுவிட்டது .
தன் தோளில் , அவளை சாய்த்துக் கொண்ட நவீன்.. அதீத பதற்றத்துடன் இருந்தாலும் , ” ஏய்..சுடர்.. இங்க பாரு .பயங்காட்டாத டீ.. இங்க பாரு சுடர்.. சுடர்..”, என்று கதற.. அதில் கௌசி மற்றும் வசீகரனும் இணைந்து இருந்தார்கள் .
” ஸார்.. “, என்று அழைத்த ஓட்டுநர் வசீகரனின் காதில் கூறிய செய்தியை கேட்டதும்.. ” பேசாம இரு ண்ணா.. நேரங்காலம் தெரியாம நீ வேற.. “, என்று மற்ற இருவருக்கும் தெரியாமல் கண்டித்தவன்..
” நவீன்.. முகத்தில தண்ணீ தெளித்து.. கன்னத்தை தட்டி எழுப்பு.. “, என்று சொல்ல.. அந்த அவசரத்தில் அவனுக்கு கார் கதவில் இருக்கும் தண்ணீர் பாட்டிலும் நினைவிற்கு வரவில்லை .
கௌசி அவள் பக்கம் இருந்த குப்பியை எடுப்பதற்குள்.. சுடர் ஒளியாகவே விழித்துவிட்டாள் .
திடுக்கென்று விழித்தவளுக்கு நிதானம் கொள்ளவே சில கணங்கள் பிடித்து இருக்க.. சுற்றம் உணர்ந்து அருகே இருந்த நண்பர்களை ஏறிட , அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருந்தார்கள் .
” சுடர்.. என்னாச்சு.. ஏன் இப்படி இருக்க. பேசுறது கேட்குதா.. “, என்று தவிப்பாக.. சுடரின் முகத்தை கைக்குட்டையை ஈரம் செய்து துடைத்தவளாக கௌசி கேட்க ,
” ஆங்.. “, என்றவள்.. அதனை வாங்கி அவளாகவே துடைத்துக் கொள்ள , அப்பொழுதே நவீனின் பிடிக்குள் இருப்பது புரிந்து , மெல்ல எழுந்துக் கொண்டவளை.. அவன் தடுக்கவில்லை.
” எவ்வளவு நேரமா உன்னை தட்டி கூப்பிட்டு இருக்கோம் தெரியுமா.. இப்போ பரவாயில்லையா.. என்ன டி பண்ணுது . ஹாஸ்பிடல் போகலாமா ? ” என்று கௌசி பதற்றம் கொண்டு விசாரிக்க ,
‘வேண்டாம்..’, என்று தலை ஆட்டலில் பதில் அளித்தவளுக்கு .. கௌசி மற்றும் நவீனின் தொடுகையோ அல்லது குரல்களோ அவளை எட்டவே இல்லை என்பதே உண்மை .
சுடர் ஒளிக்கு அயர்வும் , சோர்வும் ஒருபக்கம் இருந்த போதிலும் , இருப்பவர்களை மறந்து ‘ தாமாகவே படம் காட்டிவிட்டோமே..’ என்று நினைத்து வெட்கம் மறுபக்கம் ஆட்கொள்ள , இப்போது வரை அதிர்ச்சியோடு மற்றவர்களின் பார்வைகள் தன் மீது இருப்பதை கவனித்தவளுக்கு , “ எப்படி சமாளிக்க.. “, என்று தடுமாற ஆரம்பித்துவிட்டாள் .
பிறரை சமாளிப்பதை பற்றி எண்ணிக் கொண்டிருந்தவளை.. “ சுடர்.. “, என்று அழைத்த வசீகரனின் குரலுக்கே , பதறி ஏறிட்டதை நினைத்து .. ‘ த்தூ..’, என்று மானசீகமாக தன்னைத்தானே துப்பிக் கொள்ளவும் செய்து இருந்தாள் .
தன் தோழியின் நிலையை காணவும் .. கடுங்கோபத்தில் வம்பு செய்தவனாக வந்த நவீனுக்கும்.. இப்போதும் , படபடத்து இருக்கும் போதிலும். அதனை சமாளிக்க முயற்சிப்பதும் என்று காணப்படுபவளின் மீது இரக்கம் பிறக்க..
“ ஜஸ்ட் ரிலாக்ஸ் சுடர்.. இந்தா தண்ணீர் குடி..“, என்று ஆதரவாக தாங்கிக் கொண்டான் .
அதற்கு மேல் கௌசிகாவை வாய் திறக்காமல் இரு ஆண்மகன்களும் பார்த்துக் கொண்டார்கள் .
“ ஆர் யூ ஓகே.. லைட்டு.“, என்று நவீன் தன் பேச்சால் அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்க ,
“ ம்.. “, என்று தலையை அசைத்ததுடன் அமைதியாகிவிட்டாள்.
” கிளம்புவோமா சுடர்.. இல்லை ஹாஸ்பிடல் போலாமா.. “, என்று மென்மையாக கேட்ட வசீகரனிடம் ,
“ஹாஸ்பிட்டல் வேணாம் ப்ரோ.. சைட்க்கு போலாம்.. எதோ டிஸ்டர்ப்பன்ஸ்.. வேற ஒன்னும் இல்ல.. ஸாரி.. என்னால டைம் வேஸ்ட்.. “, என்று சுடரும் வருத்தப்பட ,
” ம்ச்சு.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எல்லாம் பார்த்துக்கலாம்.. உனக்கு முடியலேனா சொல்லு.. இங்கேயே இறங்கி ஊருக்கு கிளம்புவோம்.. “, என்று நவீன் மிகவும் அலட்சியமாக வேலையை பற்றி பேசினாலும் , அவளுடைய நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டவனாக பேச..
” ஓபி அடிக்க.. என்னை இழுக்காத நவீன்.. ஐயம் ஃபைன்.. “, என்று சுடர் அவன் தோளை தட்டியவளாக கேலி செய்ய..
” சுண்டெலி ஸ்கூட்டர் ஓட்ட ஆரம்பிச்சிடுச்சு.. எல்லாம் என் நேரம்..”, என்று அவன் பங்கிற்கு முனங்கியவன்..
” தூங்கீடாத தாயே.. பத்து நிமிஷத்துல ஸ்பாட் வந்திடும்.. “, என்று அவனுடைய லொள்ளையும் கைவிட வில்லை .
அவன் பேச்சை கண்டுக் கொள்ளாத சுடர்,
“ ப்ளீஸ் இப்படி வாடா..”, என்று சன்னலின் அருகே அமர்ந்து வருவதற்காக.. என்றுமில்லா புதுமையாக அவனிடம் கெஞ்சியதும்.. நவீன் பெரும் வியப்பிற்கு உள்ளான போதிலும் ,
“ போய் தொலை.. ஆனா தூங்கின.. நீ செத்த டீ மகளே..”, என்று நக்கலாக சிரிக்க ,
“அய்யோ.. இனி சாகுற வரைக்கும் இதை விட மாட்டானே.. “, என்றவள்.. “எங்கெல்லாம்.. எப்படி எப்படி மானத்தை வாங்க போறானோ.. “, என்ற முனங்களுடனே நகர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
தொண தொணவென பேசி வரும் நிலையில் எவரும் இல்லாததால்.. அனைவரும் அமைதியாக இருந்தார்கள்..
சுடரின் சிந்தனை முழுவதும் கனவை சுற்றியதாய் . ” அது கனவு சுடர்.. வெறும் கனவு சுடர்.. வேற எதுவும் இல்லை.. “, என்று தனக்குள்ளாக கூறிக் கொண்டாலும் , எதுவோ , ஒன்று புதிதாய் அவளை விடாமல் துரத்துவது போலவே , அவள் மனம் ஆணித்தரமாக நம்பியது .
“ சம்திங் கோயிங் டு பீ ஹேப்பன்.. நடக்கிறது எதுவேனா நடக்கட்டும்.. ஆனா என் அண்ணன் குடும்பத்துக்கு எதுவும் ஆகக் கூடாது ..”, என்று மனதிற்குள் பலவற்றை யோசித்தவளாக வரவே..
அவளிடம் அசையவில்லை என்றது நவீன் , ” தூங்காத சுடர்.. “, என்று கண்ணாடியில் தலை சாய்த்து இருந்தவளை உலுப்ப.. ஏகத்திற்கு கடுப்பானவள்.. ” அறிவு கெட்டவனே.. “, என்று அடுத்த பொன் வசவுகளை அவள் வாய் திறப்பதற்குள் , அவர்கள் வந்த வேலைக்கான இடமும் வந்துவிடவே ..
” தப்புச்சான் டா சிவனாண்டி.. “, என்று வசீகரனின் கேலியை தொடர்ந்து இறங்கினார்கள் .
கௌசிக்காவின் மௌன சிரிப்பு , நவீனின் கெக்கலிப்பு என்று இருந்த போதிலும் , சொந்த பேச்சுகளுக்கு அவர்களிடத்தில் வேலையில்லாமல் போனது .
அந்த கட்டிடத்தில் யார்.. யாருக்கு என்ன வேலையோ.. அதற்கு உண்டான, தகவல்களை முன்பே சேகரித்து மேலிடத்திற்கு சமர்ப்பித்து இருந்தாலும்.. மறு ஆய்விற்கு என்று வரும்போது சில புதிய யோசனைகளும் தோன்ற தான் செய்கிறது .
சுடரின் முக்கிய பங்கீடு , இன்டீரியர் டிசைனிங் என்பதால் , மறுபடியும் , வீடு நுழைந்தது முதல் அவளது கவனம் முழுவதும் இப்பொழுது இருக்கும் அமைப்பை கூர்ந்து நோக்குவதிலும்.. எவ்வாறு தன் புதுமையை புகுத்துவது என்பதிலும் இருக்க.. தன் கைக் குறிப்பேட்டில் குறிக்க தொடங்கிவிட்டாள்.
வீட்டுப் பெண்கள் இருவர் சுடரிடம் மாறி மாறி.. அவர்களின் யோசனைகளையும் திணிக்க.. இன்முகமாகவே குறித்துக் கொண்டாள் . வீட்டு ஆண்கள் அழைப்பதாக அவர்களை அழைக்க வந்தவர்களாக , வேலையாள் முன் நிற்கவும் ,
” வரேனுங்க.. தயங்காம உங்க வேலைய பாருங்க. உதவி எதுவும்னா.. மறுக்காம கூப்பிடுங்க மேடம்..”, என்று மனமேயில்லாமல் விடைப்பெற்று உள்ளே சென்று இருந்தார்கள் .
ஒவ்வொரு மூலையையும் வரிசையாக ஆராய்ந்து வந்தவளை யாரோ “ சுடர்..”, என்று அழைக்க.. ‘ யார் தன்னை அழைப்பது.. ‘, என்று சுற்றும் முற்றும் விழிகளை சுழற்றியவளுக்கு எவரும் தென்படாததால் ,
” இந்த ஸ்டுபிட் கனவு…உ.. ” என்று தலையை அசைத்து.. வேலைக்குள் மூழ்கி இருக்க..
‘வேறை யாரையோ எங்கேயோ கூப்பிடறாங்க போல.. ‘, என்று அந்த அழைப்பு கொடுத்தல் ஜெர்க்கையும் கெத்தாக மறைத்தவள்.. மீண்டும் ஆர்வமாய், அங்கிருந்த கலைநயங்களை ஆராயத் தொடங்கிவிட்டாள் .
சுடரின் கவனம் முழுவதும் பழமைக்கு உயிர்ப்பூட்டும் எண்ணத்தில் மட்டுமே அதிகம் இருக்க.. அங்கிருக்கும் பொருட்களின் மீது உன்னிப்பாக இருந்தவளின் , முன் நின்ற மூதாட்டி கண்டு.. ‘ ஹா..’, என்று கணத்தில் தடுமாறி மீண்டவள் .
“ சொல்லுங்க பாட்டி.. உங்களுக்கு என்ன செய்யணும்..? ”, என்று சுடரின் ஒளிரும் புன்னகையுடன் மென்மையாக விசாரிக்க..
மேனியில் இருந்த சதைகள் கரைந்து , எலும்புகளை சுருக்கம் நிறைந்த தோள் போர்வையாக போர்த்தி இருக்க.. வயோதிகத்தின் மொத்த உருவமாக நின்று இருந்தவரிடம் , சிறு தள்ளாட்டம் இல்லை .
” சுடர்.. நான் கூப்பிட்டது கேட்கலையா..”, என்று அவர் உரிமையுடன் பேச திகைத்து விட்டாள் .
நன்கு பழகியவர் போன்று உரிமையாக அவளுடைய பெயர் அழைத்து அருகில் வந்தவரை அடையாளம் தெரியாத போதிலும்.. பெரிதும் திகைத்தவளாய் ,
“ என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் பாட்டி.. “, என்று இதுவரை மண்டையை குடைந்து எடுத்த கேள்வியை நேரடியாகவே கேட்டுவிட்டாள் .
“ சுடருக்கு என்னை மறந்து போச்சா.. இல்லை எல்லாம் மறந்து போச்சா.. பரவாயில்லை விடு . நல்லா இருக்கியா..“, என்று அவள் கைப்பிடித்து உரிமையாக நலன் விசாரிக்க..
அவளுக்கோ , ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து ஆயிரமல்ல லட்ச குழப்பங்களாக அதிகரித்து இருந்தது .. இருப்பினும் வயதில் முதியவர் என்ற நினைப்பினால் , “ ம்.. ரொம்ப நல்லா இருக்கேன்.. “, என்றால் அவள் .
இளம் பச்சைக்கு தாவியிருக்கும் அவரின் கருவிழிகளில் தோன்றிய பளிச்சிடலும் , பிடித்திருக்கும் அவள் கரத்தை அழுத்தமாக பற்றியவராய்.. “ராசாவை பார்த்தியா.. “, என்று கேட்க ,
“ ராசாவா.. எந்த ராசா.. “, என்று எதுவும் பிடிபடாமல் அவரிடமே அவள் கேள்வியை எழுப்ப ,
“ நினைச்சேன்.. நான் யாருன்னு கேட்டியே.. அதை மறந்தேன் பாரு.. “, என்று வருத்த முறுவலை வெளியிட்டாலும் ,
“ எனக்கு இம்புட்டு வசதி வாய்ப்ப கொடுத்த ராசா ஞாபகம்.. உன்னைய இங்க பார்த்ததும் வந்திட்டு.. நல்லா இரு தாயி.. அடிக்கடி என்னை பார்க்க வரியா..?” என்று வாஞ்சையாக வினவியவர்.. தளர்வு அதிகரித்தவராகவே நடந்து சென்றார் .
அந்த மூதாட்டி உள்நோக்கி செல்வதையே பார்த்தவளாக நின்று இருந்தவளின் அருகே.. அவசரமாக ஓடி வந்த நவீன் ,
” சுடர்.. யாரோட பேசீட்டு இருக்க ? ” என்று அவன் குழப்பமாக கேட்க ,
” அதோ அந்த பாட்..டி.. “, என்று அறைக்குள் நுழைந்த திசையை காட்டியவள்.. மொத்தமாக , திகைத்து விழி விரிய நின்றுவிட்டாள் .
அந்த அறைக்குள் ஒருவருமில்லை . அந்த மூதாட்டியின் சுவடு சிறதளவும் இல்லாமல் வெறுமையாக.. நிறைந்த தூசுகளுடன் காணப்பட்டு இருந்தது .
– கனவுகள் தொடரும்..
