Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –8

”அய்யோ இவளுக்கு கோபம் வந்துடுச்சோ” என குணா நினைத்து சட்டென பாட்டை நிறுத்திவிட அதைக்கண்ட கவினும் கமலியும் மகிழ்ந்தார்கள்

”கண்மணிக்கு கோபம் வந்துடுச்சி அங்க பாரு குணா பயப்படறதை” என கவின் சொல்ல கமலியோ உற்சாகமானாள்.

மாணவர்களோ பாடல் நிற்கவும் கூச்சல் போட்டார்கள், பாட சொல்லி கத்தினார்கள் அவர்களின் கொந்தளிப்பைக்கண்ட வாத்தியாரோ

”குணா என்ன அமைதியாயிட்ட பாடு, கண்மணி என்ன செய்ற, பாடும்மா இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிடும் பாடுங்க” என சத்தம் போட கண்மணி நாணத்துடன் குணாவைப் பார்க்க அவனோ பயத்துடன் நடுங்க அவளுக்கு அவனின் பயம் புதியதாக தெரிந்தது



Advertisement

நாணத்தை விடுத்து குழப்பத்துடன் பார்க்க, அவனோ கலவரமானான், மாணவர்களின் கூச்சல் அதிகமானது கைதட்டி ஆரவாரம் செய்தார்கள், சிலர் அடுத்த வரியை பாடி வேறு காட்டி பாட சொல்லி கட்டாயப்படுத்தினார்கள், சிலர் அவர்களை கேலி செய்தார்கள், அதில் அவளே அக்கம் பக்கம் சூழ்நிலையை புரிந்துக் கொண்டு ஒரு நொடி தன் கண்கணை மூடித்திறந்து அவனைப் பார்த்து சரியென்பது போல் தலையாட்டிய பின்புதான் அவனுக்கு உயிரே வந்தது, பெருமூச்சுவிட்டு மென்மையாக சிரித்தான், அந்த ஒற்றை சிரிப்பில் அவளின் மனம் இறக்கைகட்டி பறப்பது போல உணர்ந்தாள்.

மாணவர்களின் கூட்டத்தில் கோபம் எழுந்தது, ஒருவன் பேப்பர் பந்தை உருட்டி மேடை மீது வீச அது சரியாக குணாவின் மீது விழுந்தது, அதைக்கண்டு கண்மணி அதிர்ந்து மாணவர்களைப் பார்த்து திடுக்கிட்டு குணாவை கவலையுடன் பார்க்க குணாவோ தனக்கு விழுந்தது போல கண்மணிக்கு அவமானம் நடக்கக்கூடாது என நினைத்தான், மாணவர்களால் ஏதேனும் விளைவு விபரீதமாவதற்குள் தொடர்ந்து பாடலானான்.

Advertisement

குணா : ம்ம்… எனக்கு உண்டான காயம்…
அது தன்னால ஆறிடும்…
அது என்னவோ தெரியல…
என்ன மாயமோ தெரியல…
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல…
இதையும் எழுதிக்க…
நடுல நடுல மானே தேனே…
பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்…

Advertisement

குணா : இதோ பாரு…
எனக்கு என்ன காயம்னாலும்…
என் உடம்பு தாங்கிடும்…
உன் உடம்பு தாங்குமா தாங்காது…
அபிராமி அபிராமி அபிராமி…

கண்மணி : அதையும் எழுதணுமா…

என சொல்ல அவனுக்கு சிரிப்பே வந்தது, அவனின் சிரிப்பில் அவள் மயங்கினாள்

Advertisement

”ப்ச் இப்படி அழகா சிரிச்சி வைக்கறானே, நான் என்ன செய்வேன் வெட்கத்தில என்னால மேடையில நிக்க கூட முடியலையே, சீக்கிரமா மேடையை விட்டு இறங்கனும்” என மனதுள் நினைத்துக் கொண்டு அவனை பாவமாக பார்க்க அவன் புரிந்துக் கொண்டு தொடர்ந்து பாடலானான்

குணா: ஹான்… இது காதல்…
என் காதல் என்னனு சொல்லாம…
ஏங்க ஏங்க அழுகையா வருது…
ஆனா நா அழுது…
என் சோகம் உன்ன தாக்கிடுமோ…
அப்டினு நினைக்கும் போது…
வர்ற அழுகை கூட நின்னுடுது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனித காதல் அல்ல…
அதையும் தாண்டி புனிதமானது…

 

என உணர்வு பூர்வமாக அவளை பார்த்தபடி பாடி முடிக்க அவளுக்கு பேச்சே இல்லை, மாணவர்கள் மத்தியில் கைதட்டல், விசில் சத்தம் பறந்தது, என்னவோ அவளுக்காகவே குணா பாடியது போல நினைத்தாள், அப்படி உருக்கமாக பாடி வைக்கவும் அது தனக்குதான் என பிரமையில் வீழ்ந்தாள், அவள் நினைத்தது போல அவனும் அவளுக்காகவே பாடினான், பாடி முடித்தபின் தன்னை நினைத்து அவனே வியந்தான்.

வியப்புடன் அவளைப் பார்க்க அவளோ இன்னும் பிரமைக்குள் இருந்தாள், அதில் மாணவர்களோ அவன் பாடியதை பாடி அலப்பறை செய்ய வாத்தியார்களால் மாணவர்களை அடக்க இயலாமல் தடுமாறி கண்மணியை மேற்கொண்டு பாடுமாறு சொல்ல அவளோ இம்முறை பயத்தை, தயக்கத்தை, முக்கியமாக வெட்கத்தை மறந்து பாடினாள்.

கண்மணி: உண்டான காயமெங்கும்…
தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன…
பொன்மானே பொன்மானே…

என்ன காயம் ஆன போதும்…
என் மேனி தாங்கிக் கொள்ளும்…
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…

எந்தன் காதல் என்னவென்று…
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…

மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…
அதையும் தாண்டிப் புனிதமானது…

குணா : அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே…
அதுவும் உனக்கு புரியுமா…

 சுப லாலி லாலியே லாலி லாலியே…
அபிராமி லாலியே லாலி லாலியே…
அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
உனக்கு புரியுமா…

குணா & கண்மணி : ஓஓ… லா லா லா லா…
லா லா லா லா லா லா…
லா லா லா லா…
லா லா லா லா லா லா…

என இவர்கள் பாட கூட சேர்ந்து மாணவ மாணவிகள் பாட அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்தது, பாடி முடித்தபின் கண்மணி அனைவரையும் பார்த்து கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு சட்டென இறங்கிவிட குணாவோ அவளின் செயலால் குழம்பி வெறும் தாங்ஸ் என அவசரகதியில் சொல்லிவிட்டு இறங்கி வந்தான், வாத்தியார்கள் அவர்களை வெகுவாக பாராட்ட அவர்களிடம் மென்மையாக புன்னகைத்துவிட்டு தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்தார்கள்.

அப்போது வரை கூட மாணவ மாணவிகளின் கைதட்டல் ஓயவில்லை, அடுத்து டான்ஸ் என வர கமலியும் கவினும் மேடை ஏறினார்கள், ஆனால் குணாவோ நேரத்தைப் பார்த்து அதிர்ந்தான், வேலைக்கு செல்லவேண்டுமே என நினைத்து அங்கிருந்து எழுந்துச் செல்ல அதைக்கண்ட கண்மணியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள், அவர்கள் சென்றதைக்கண்ட கவினோ கமலியிடம்

”என்னாச்சி கமலி இவங்க என்ன எழுந்துப் போயிட்டாங்க“

”கோச்சிக்கிட்டு போயிட்டாங்க போல அவங்களுக்கு இது அவமானமா கூட இருக்கலாம்“

”ஆனா அப்படித் தெரியலையே, நல்லாதான் பாடினாங்க அதுவும் கண்மணி பாடினது எவ்ளோ இனிமையா இருந்தது தெரியுமா“

”அவளால அங்க பாட முடியாம தடுமாறினதை கவனிச்சியா“

”ஆமாம்“

”அவளுக்கு குணாவோட பாட பிடிக்கலை, அதை வெளிக்காட்ட முடியாம தவிச்சிப் போயிட்டா எல்லாரும் கத்தி கூப்பாடு போட்டதால அவளால எதையும் செய்ய முடியாம அவசரகதியில பாடிட்டு கிளம்பிப் போயிட்டா”

”அய்யோ பாவம்“

”எது“

”இல்லை அது”

“போதும் அவங்க போனா போகட்டும் வா நாம டான்ஸ் ஆடலாம்“

”அந்த கிப்ட்டை வைச்சிட்டியா“

”ஓ அவங்க மேடைக்கு போன உடனே அவங்கவங்க பையில வைச்சிட்டேன்”

”அதையாவது அவங்க பார்க்கனும்”

“கண்டிப்பா பார்ப்பாங்க, மியூசிக் போட்டாச்சி ஆடு ஆடு“ என அதட்ட அவனும் அவளுடன் இணைந்து அண்ணன் தங்கை சென்டிமெண்ட் பாடலுக்கு அற்புதமாக ஆட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்

மறுபக்கம் பைக்கில் வேலைக்குச் செல்ல கிளம்பி காலேஜ் தாண்டி வெளியே வந்த குணாவின் கண்ணில் கண்மணி பட்டாள், அவளும் வேலைக்குச் செல்ல பரபரப்பாக நடந்துச் சென்றுக் கொண்டிருக்க என்ன நினைத்தானோ நேராக அவளிடம் சென்று வண்டியை நிப்பாட்ட அவள் திடுக்கிட்டாள், அவனோ தன் கைகடிகாரத்தில் மணியை பார்த்து பதட்டமாக அவளைப் பார்க்க அவளும் தனது கைகடிகாரத்தை பார்த்து நொந்துப் போக அவனோ அவளின் பையை உரிமையுடன் வாங்கிக் கொள்ள அவள் தடுத்தாள், மறுத்தாள் ஆனால் அவனோ

”நேரமாச்சி வேலைக்கு போகனும் வா” என அதட்ட அதில் அவள் கட்டுண்டு போனதுதான் ஆச்சர்யமே

அவனுக்கும் எப்படி இந்தளவுக்கு அவள் மீது உரிமை பாராட்ட முடிந்தது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்க அவளோ அவசரமாக அவனது பைக்கில் ஏறிக் கொள்ள அதை அவனால் சத்தியமாக நம்ப முடியவில்லை

அவனும் பைக்கை ஓட்டிக் கொண்டு பறந்தான், அவனது வேகத்தைக்கண்டு அவள் பயந்தாள் அவனோ நேரமாகிவிட்டதே என்ற கலவரத்தில் சிக்னலில் சிக்கக் கூடாதென வளைத்து நெளித்து வண்டியை வேகமாக ஓட்ட அவளுக்கு பயம் அதிகமாகி திக்திக்கென்றது

ஒரு கட்டத்தில் பயத்தில் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்ட பின்புதான் அவனின் வேகம் குறைந்தது.

முதல் முறை ஒரு பெண்ணின் அணைப்பு, அவனை கிறுக்கு பிடிக்க வைத்தது, அவளோ பயத்தில் அவனை அணைத்துக் கொண்ட பின்புதான் அவனின் மேனி வாசத்தில் கிறங்கிப் போனாள், கண்ணை மூடிக் கொண்டாள், அவனோ அலுங்காமல் குலுங்காமல் அவளை சூப்பர் மார்க்கெட் வாசலில் வண்டியை நிப்பாட்டி பார்த்தான், அவளிடம் எந்த அசைவும் இல்லை, உடனே தனது உடலை குலுக்க அதில் அவள் விலகிப் பார்த்தாள்

வேலை செய்யும் இடம் வந்து விடவே தன்னால் அச்சம் வந்து அவசரமாக அவனிடம் இருந்து தனது பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள், அவனும் எதிர்கட்டிடத்தில் தனது வண்டியை நிப்பாட்டிவிட்டு சூப்பர்மார்க்கெட்டை ஒரு முறை பார்த்துவிட்டு அவளின் அணைப்பை ஒரு நொடி நினைத்து பார்த்தான்

தன்னால் உள்ளம் மகிழ குதூகலமாக பாடம் எடுக்கச் சென்றான், என்னவோ அன்றும் அவன் அற்புதமாக மகிழ்ச்சியுடன் சிரித்து சிரித்து பாடம் எடுத்தது மாணவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அவர்கள் கிளம்பும் போது அதை நடத்தும் நிர்வாகியிடம் குணாவை பற்றி ஆஹா ஓஹோ என பாராட்டு மழை பொழிந்துவிட்டு செல்ல நிர்வாகிக்கு அப்படியொரு ஆனந்தம், அவர் குணாவை அழைத்து பாராட்டினார்

அந்த பாராட்டலுடன் கண்மணியை சந்திக்க அவசர அவசரமாக வந்தான் குணா, அவளும் அவனது செயலால் சற்று மனம் குதூகலமாகியிருந்தாள், எவ்வளவு கடினமான வேலை தந்தும் அதை மகிழ்வாக செய்த அவளின் குணத்தைக்கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம் அதிகமானது.

வேலை முடிந்தபின் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வர அவளுடன் ஹாஸ்டலில் இருக்கும் பெண்மணி அவளை பார்த்துவிட்டு அவளுடன் பேசியபடியே வெளியே வர குணாவோ கண்மணியைக் கண்டதும் புன்னகை பூத்தான், கண்மணியோ அவனை என்னவென்று கூட பார்க்கவில்லை, அவள் அந்த பெண்மணியின் பேச்சில் கவனமாக இருந்தாள், அப்படியே அவருடனே நடந்து சென்றுவிட குணாவிற்கு ஏமாற்றமாகிப் போனது, ஆனாலும் அவளுடன் வந்த பயணத்தை நினைத்து உடல் கிளர்ச்சியடைய அந்த இனிமையான சுகத்துடன் தான் தங்கியிருக்கும் லாட்ஜிற்குச் சென்றான்.

அறைக்கு வந்து வேறு உடை அணிந்தான், சாப்பிட கூட தோன்றவில்லை, அவன் கழட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து முகர்ந்துப் பார்த்தான், அதில் கண்மணியின் வாசம் வீச அவனுக்கு அதை துவைக்க கூட மனம் வரவில்லை, அதை கட்டிப்பிடித்தபடியே தனது இடத்தில் அமர்ந்து பையில் இருந்து புத்தகங்களை எடுத்தான், அதில் அவன் கையில் கிப்ட் தட்டுபட வியப்புடன் அதை எடுத்துப் பார்த்து வியந்தான்

”நம்ம கூடவே இருந்தா இதை எப்படி நம்ம பையில வைச்சா, என்னவா இருக்கும்” என நினைத்துக் கொண்டே அதை பிரித்துப் பார்த்தான்

காதலை சொல்லும் ஒரு பெண்ணின் பொம்மை இருக்கவே அவனுக்கு தன்னையறியாமல் வெட்கம் வந்தது, ஒரு நொடி அந்த பெண்ணின் பொம்மை முகத்தில் அவனுக்கு கண்மணியின் முகம் தெரிந்தது, அவளின் அழகான சிரிப்பு, இனிமையான குரலில் அவள் பாடிய பாடல் அனைத்தும் கண்முன் வந்து சென்றது, அதில் அவனுக்கு இன்ப பெருமூச்சு வர அதில் இருந்த கடிதத்தை எடுத்து ஆர்வமாக படிக்கலானான்.

”கண்ணாளனே என் மாயக்கள்ளனே …..

நீ சிரித்தாலே போதுமே ஒரு கோடி மின்னல் என் இதயத்தில் எழுகிறது, அன்பே கண் அசைத்தால் போதும் துள்ளிக் கொண்டு உன்னிடம் வர காத்திருக்கிறேன், காதல் தவம் என்று முடியும், என்று உனது வரம் கிடைக்கும், இன்னும் எத்தனை நாள் நான் காத்திருக்க வேண்டும், காத்திருப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான்

ஆனால் காத்திருப்பிற்கு பலன் உன் காதல் கிடைக்கும் என்றால் நாட்கள் என்ன வாரங்கள் என்ன மாதங்கள் என வருஷக்கணக்கில் கூட நான் காதல் தவம் செய்வேன், பாடப்புத்தகத்தில் உன் முகம் தெரிவதாலேயே நாள் முழுவதும் அதையே பார்க்க என்னை பார்ப்பவர்கள் அனைவரும் என்னை புத்தக புழு என கேலி செய்கிறார்கள்

உறங்கும் போது கனவில் வந்து என்னுடன் நீ நடத்தும் சீண்டல்கள், உனது இன்ப விளையாட்டுகள், எப்போது நிஜமாகும் என என் மனம் ஏங்குகிறது, கனவில் நீ தந்த முத்தம் அது இன்னும் என் இதழில் காயாமல் ஈரமாய் இருக்கிறதே அதை நீ கவனித்தாயா” என இருக்கவே அதோடு அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது

மேற்கொண்டு படிக்காமல் காய்ச்சல் வந்தவனைப் போல பதட்டமானான்.

”என்ன இது முத்தம் வரைக்கும் முன்னேறிட்டாளே இன்னும் காதலிக்கவேயில்லை, அதுக்குள்ள முத்தமா எப்படி” என அவனுக்கு அவனே குழம்பி பேயறந்ததைப் போல தடுமாறியவன்

”இன்னும் என்ன எழுதியிருக்காளோ தெரியலையே மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா” என யோசித்து யோசித்து அரைமணி நேரம் வீணாக்கியபின் மெதுவாக படிக்கலானான்

”என்  மனதை கொள்ளைக்கண்ட மாயக்கள்வனே, ஒன்று என் மனதை திருப்பி கொடு இல்லை, உன் மனதையாவது என்னிடம் கொடு, மனம் இன்றி வாழ இயலாமல் தவிக்கிறேன், உன் காதல் இல்லையேல் வாழ்வதே வீண், நான் தந்த பரிசே என் வேதனையை சொல்லாமல் சொல்லும், இனியும் என்னால் காத்திருக்க இயலாது, திருடிய என் மனதை திருப்பிக் கொடு, அல்லது உன் காதலை எனக்கு கொடு, எதுவாயிருந்தாலும் விரைவாக செய்

பிரியமுடன் கண்மணி”

என எழுதியிருக்கவே அவனுக்கு நீண்ட பெருமூச்சு வந்தது, கண்கள் மூடினான், கண்மணியே தெரிந்தாள், கண்கள் திறந்தான், பலவிதமாக யோசித்தான், பழைய நினைவுகள் அவனை கொடுமைப்படுத்திய தருணங்கள் அனைத்தும் அவனை பாடாய்படுத்தியது, அவனே நொந்துப் போய்

”சாரி கண்மணி என்னால உன்னை காதலிக்க முடியாது என்னை மன்னிச்சிடு” என கண்கள் கலங்க கண்ணீருடன் சொல்லிக் கொண்டு அந்த கிப்டையும் மற்ற கடிதங்களையும் தனது பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்க முயன்று தோற்றான்

அவனது மனம் கனத்துவிட்டது, எடை கூடியது போல அவனால் உணர முடிந்தது, மூச்சுவிட சிரமப்பட்டான், உறங்க இயலாமல் எழுந்து அமர்ந்து அன்றைய இரவை கவலையுடன் கழித்தான்.

மறுபக்கம் கண்மணியோ ஒரு கையில் கிப்ட்டும் இன்னொரு கையில் கடிதமும் வைத்துக் கொண்டு பலமாக யோசிக்கலானாள்.

”படிக்கலாமா? வேணாமா? பொம்மை அழகா இருக்கு, அவனை போலவே தேடிப்பிடிச்சி கொண்டு வந்திருக்கான், இந்த பொம்மை எப்படி காதல் சொல்லுதோ அது போல அவனும் சொல்வான் போல, இந்த கடிதத்தில என்ன எழுதி வைச்சிருக்கான்னு தெரியலையே? படிக்கலாமா வேணாமா வேணாம்” என நினைத்தாளே தவிர அவளின் கை தானாக அந்த கடிதத்தை பிரித்தது.

கண்கள் தானாக கடிதத்தில் இருந்த வார்த்தைகளை படிக்க மூளை அவளின் பேச்சை கூட கேளாமல் கடிதத்தில் என்ன இருக்கறது என ஆர்வமாக பார்த்தது

”கண்மணியே என் காதலியே ….

நீ எனக்குள் வரக்காத்திருக்கிறேன், ஒவ்வொரு நொடியும் எப்போது உன் இதயசிறையில் என்னை ஆயுள் கைதியாய் ஆக்குவாய் என ஏங்கும் என் மனம், நாட்கள் வீணாக கரைகிறது என்பது இல்லை எனது கவலை, என் காதலும் சேர்ந்து கரைகிறதே என்ற அச்சம்தான் எனக்கு

ஒவ்வொரு நாளும் உன்னை காணவே வருகிறேன், ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளுடன் உறங்குகிறேன், பொன்னழகே பூவழகே என்று என்னருகே வருவாய் என ஏங்கும் என் மனதை சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கிறேன், உன்னிடம் ஆசை தீர பேச வேண்டும் என்ற என் தவிப்பு, காலம் முழுக்க நீடித்தாலும் பரவாயில்லை நான் காத்திருக்கிறேன், அதற்காக வெகு நாள் என்னை காத்திருக்க வைப்பதில் அப்படி என்ன உனக்கு சந்தோஷம்

உன்னால் எனக்குள் உண்டான எத்தனை எத்தனை இன்பங்களை சொல்ல இந்த ஆயுள் போதாது, பசி தெரியவில்லை, உறக்கம் வரவில்லை, பேச்சை மறந்தேன், நினைவை இழந்தேன், படிப்பை துறந்தேன், ஆனால் காதலை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன், தவித்து தவித்து நான் ஒருவழியாவதற்குள் என்னை மீட்டெடு

கனவில் வந்து என்னை பாடாய்படுத்துகிறாய், நினைவில் என்னை கண்டுகொள்ளாமல் தவிக்க வைக்கிறாய், இது நியாயமா உனக்கு, கனவில் வந்து என்னை ஆட்கொண்டது போல நிஜத்தில் என்று என்னை ஆட்கொள்வாய், கனவில் நீ தந்த அணைப்பு, அழுத்தமான முத்தம், காதலுடன் பார்த்த பார்வை இவை அனைத்தும் என்று நிஜத்தில் கிடைக்கும், நான் கண்ட கனவு பலிக்க வருவாயா என்றும் உன் நேமுடன் குணா” என எழுதியிருக்க அவளுக்கு குப்பென வேர்த்துக் கொட்டியது

”என்ன இது இதுல முத்தம் அது இதுன்னு எழுதியிருக்கான், அச்சோ என்ன இவ்ளோ அவசரமா இருக்கான், கொஞ்ச நாள் கூட ஆகலை, அதுக்குள்ள இப்படியா, முடியலையே இப்ப நான் என்ன செய்றது, நாளைக்கு இரண்டு நாள் லீவு, திங்கள் கிழமை காலேஜ்க்கு போனதும் அவன்கிட்ட இதையெல்லாம் தந்து என்னை மறந்துடு, நீ நினைக்கற ஆள் நான் இல்லை. எனக்கு காதல்  எல்லாம் வராது, தேவையில்லாம உன் நேரத்தை வீணாக்காதன்னு தெளிவா சொல்லிடனும் அதுதான் சரி” என நினைத்துக் கொண்டாளே  தவிர அதில் உயிர்ப்பு இல்லை ஏனோ அவள் உடல் அசதியானது, சோர்ந்து படுத்துவிட்டாள்

”அய்யோ என்னை இப்படி இம்சிக்கறானே, எத்தனையோ பேரை நான் விரட்டியிருக்கேன், ஆனா இவனை ஏன் என்னால விரட்டமுடியலை, இப்படியே போனா என்னால ஒழுங்கா படிக்க முடியாது இல்லை, இதை இப்படியே விட முடியாது, படிப்புதான் முக்கியம் என்ன ஆனாலும் சரி, அவனை விரட்டனும்” என நினைத்தவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கிவிட்டது, கண்ணீருடன் அந்த இரவை உறங்காமல் கழித்தாள்

விடியலில் எழுந்த கண்மணியோ விடுமுறை என்பதால் பொறுமையாக ரெடியாகி வர கூட தங்கியிருந்த பெண்கள் கோயிலுக்குச் செல்லப் போவதை பற்றி கூறவும் அவளுக்கும் ஆசை வந்தது, அவர்களுடன் இணைந்து அவளும் கோட்டை கோயிலுக்குப் புறப்பட்டாள், அதற்காகவே தலைகுளித்து பாவாடை தாவணி அணிந்து கோயிலுக்கு என அர்ச்சனை செய்ய தேவையான பூஜைப்பொருட்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

மறுபக்கம் குணாவோ விடியலில் நன்றாக உறக்கம் வர உறங்கி எழுந்தான், காலேஜ் இல்லாததால் என்ன செய்வதென அவனுக்குத் தெரியவில்லை சரி தனக்கு தேவையான உடை, படிக்க தேவையான நோட் புத்தகம் வாங்கலாம் என அவனும் கிளம்பினான்.

தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு பார்க்க கோட்டை கோயில் அவனை ஈர்த்தது, அதன் வசீகரம் அழகு சரி என்னதான் உள்ளது என தெரிந்துக் கொள்ள சென்றான். தனது பைக்கை ஓரம் கட்டிவிட்டு பெரிதாக பக்தியில்லாமல் ஏதோ சுற்றுலாவுக்கு வந்தவன் போல அங்கிருந்த அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடியே கோயிலுக்குள் நுழைந்தான்

இன்று கோயிலில் விசேஷம் போல மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது, அந்த கூட்டத்திற்குள் நுழைந்து இவனும் நடந்துச் சென்றான், ஒரு இடத்தில் தன்னால் அவனது கால்கள் மேற்கொண்டு நடக்க இயலாமல் நின்றுவிட்டது, அவனது இதயம் வேகமாக துடிக்க கண்ணில் ஒரு மின்னல், இதழில் ஒரு புன்னகையுடன் எதிரே தேவதை போல பாவாடை தாவணியில் நடந்து வந்த கண்மணியைக் கண்டதும் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தலானான்

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!