Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –15

சிறிது நேரம் இருவரும் பலமாக யோசித்தார்கள், வாட்ச்மேனோ அவளை தேடிவந்து அழைக்க அவளோ குணாவிடம்

”குணா எங்கயோ தப்பிருக்கு, யாரோ நமக்கு நடுவில விளையாடறாங்க, அது யார்ன்னு கண்டுபிடிக்கனும்“

”அதை கண்டுபிடிக்கலாம் அதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லு”

”என்ன”



Advertisement

”நீ என்னை காதலிக்கறியா இல்லையா” என கேட்க அவளோ சட்டென பதில் சொல்லாமல் அமைதியாக அவனோ

”இந்த கடிதங்கள் வைச்சிதான் என்னை நீ காதலிச்சியா உண்மையில என்னை நீ காதலிக்கலையா”

”அப்போ நீயும் அப்படித்தானே என்னை காதலிச்ச, நீ கேட்ட மாதிரியே இப்ப நான் கேட்கறேன் பதில் சொல்லு நீ என்னை காதலிச்சதெல்லாம் இதை வைச்சிதானா” என கேட்க அவனிடம் மௌனம்

Advertisement

அவர்கள் இருவரிடமும் பதில் இல்லை, மௌனம் மட்டுமே இருந்தது, அவளோ அமைதியாக ஹாஸ்டலுக்குள் சென்றுவிட அவனும் தனது லாட்ஜ்க்குச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கடிங்களையும் கிப்ட்டுக்களையும் எடுத்துப் பார்த்தான்

Advertisement

அவ்வனைத்தும் பொய் என தெரிந்ததும் வெறுப்புற்றான், இதை யார் செய்தார்கள் என தெரிந்துக் கொள்ள வேண்டும் என கோபத்தில் பொங்கினான், அதேசமயம் கண்மணி மீது தனக்கு வந்த காதலை விட்டுவிட மனம் வரவில்லை, தான் காதலித்தது உண்மைதானே

ஆனால் இப்போது கண்மணியின் காதல் தனக்கு கிடைக்குமா என்று நினைத்து தவித்துப் போனவன் சிறுபிள்ளை போல அழத்தொடங்கினான், அந்த அழுகையில் தெரிந்தது அவன் ஏமாற்றப்பட்டதற்காக அல்ல கண்மணியை இழக்ககூடாது என்பதற்காக.

மறுபக்கம் கண்மணிக்கு நடந்ததை அறிந்தும் கோபம் வரவில்லை, ஏமாற்றப்பட்டோம் என்ற வருத்தமும் ஏற்படவில்லை, மாறாக குணாவின் காதல் தனக்கு இல்லையோ அவ்வளவுதானா என்றுதான் நினைத்தாள், உண்மை தெரிந்தபின்பும் அவள் அவனைதான் விரும்பினாள்

Advertisement

அதே போல குணாவும் தன்னை விரும்புவானா என நினைத்து ஏங்கினாள், தான் நினைப்பதைதான் அவனும் நினைப்பானா, அப்படி நினைத்தால் நன்றாயிருக்குமே, தான் கொண்ட காதல் அழியாதே என நினைத்தாள்

ஆனால் அப்படி நடக்காவிட்டால் தான் கொண்ட காதல் பொய்யாகிவிடுமே, அதை தன்னால் தாங்க இயலுமா என தன்னைத்தானே கேட்டுக் கொண்டு கண்ணீரில் தன் வருத்தத்தை கரைக்க முயன்று தோற்றேப் போனாள்.

மறுநாள் மன்த்லி டெஸ்ட்க்காக அனைத்து மாணவ மாணவியரும் நன்றாக படித்து வந்திருந்தார்கள், கமலியும் கவினும்தான் கவலையாக இருந்தனர்

”ஒரு வாரம் சஸ்பெண்ட் ஆனதுல என்ன பாடம் எடுத்தாங்கன்னு தெரியலை தெரிஞ்சவரைக்கும் படிச்சாச்சி, பெயில் ஆகாம பார்டர்ல பாஸாயிட்டா போதும், நம்ம மானம் தப்பிச்சிடும்” என கவின் கவலையாக சொல்ல கமலியோ

”ப்ச் இது என்ன செமஸ்டர் பரிட்சையா, சாதாரண மன்த்லி டெஸ்ட்தானே, இதுக்கு போய் இப்படி கவலைப்படலாமா, நானே குணா என்னவானான்னு தெரியலைன்னு கவலையா இருக்கேன்”

”அவனுக்கென்ன குறைச்சல் நல்லாதான் இருப்பான், பாவம் கண்மணி அவள் ரொம்ப வருத்தத்தில இருப்பா, அவளை சமாதானம் செய்ய கூட யாரும் இல்லை“

”ஏன் நீ போய் அவளுக்கு சமாதானம் செய்றது“

”செய்வேன் ஆனா அவள் என்னை கிட்ட நெருங்க விடமாட்டாளே“

”அவள் இப்படி ஸ்ட்ரிக்டா இருக்கறப்பவே அவளை நினைச்சி இப்படி உருகறியே, இதுவே அவள் உன்னை காதலிச்சிருந்தா என்ன செய்திருப்ப“

”அவள் மட்டும் என் காதலை ஏத்துக்கிட்டு இருந்திருந்தா அடுத்த நாளே அவளை கல்யாணம் செய்து குடும்பமே நடத்தி இந்நேரம் 2 புள்ளைகளுக்கு அப்பனா இருந்திருப்பேன் தெரிஞ்சிக்க”

”ரொம்ப ஓவரா போற, எத்தனை முறை சொன்னாலும் நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கற, கண்மணி குணாவோட ஆளு மறந்துடாத“

”நீதான் அப்படி சொல்லிக்கனும் அவங்களை பார்த்தா அப்படி தெரியலையே”

”இன்னிக்கு தெரியும் பாரு, நான் கொடுத்த கிப்டை பார்த்து ஷாக்காகி கோபத்தில கொந்தளிச்சிருப்பாங்க, இப்ப அவங்க ஒருத்தரை ஒருத்தர் கன்னா பின்னான்னு திட்டிக்கப் போறாங்க பாரு”

”அவங்க முதல்ல அந்த கிப்டை பார்த்திருக்கனுமே“

”கண்டிப்பா பார்த்திருப்பாங்க”

”ஒருவேளை அவங்க பார்க்காம இருந்தா என்ன செய்வ“

”என்ன செய்றது இதுக்கு மேல அவங்களுக்கு கிப்ட் லெட்டர் தர்றதை நிப்பாட்டிடுவேன்“

”அப்பாடா நான் தப்பிச்சேன்“

”அவசரப்படாத அவங்களை வேற விதமா பழிவாங்குவேன்”

”எப்படி”

”அதை அப்புறம் சொல்றேன் அதோ அங்க பாரு குணா வர்றான்” என கமலி கைகாட்ட கவினும் பார்த்தான்.

வழக்கம் போல வந்திருந்தான் குணா, எந்த மாற்றமும் இல்லை புதிதாக அவனிடம் இருந்த நடை உடை பாவனை எதுவும் இன்றி பழைய குணாவாக வந்திறங்கினான், யாரையும் ஏறிட்டுக்கூட பாராமல் நேராக நடந்து தன் வகுப்புக்குள் நுழைந்து தனது பழைய இடத்தில் அமர்ந்துக் கொண்டான், அவனது செயலைக்கண்ட கமலியோ குழம்பினாள் அதைக்கண்ட கவினோ

”கமலி இது வேலைக்கு ஆகாது போல, அவனை பாரேன் எப்படியிருக்கான்னு, ஒண்ணுமே நடக்காத மாதிரி தெரியுது, எனக்குத் தெரிஞ்சி அவன் அந்த கிப்டை பார்த்திருக்க மாட்டான்னுதான் தோணுது, இங்க வந்தும் எப்படி விழுந்து விழுந்து படிக்கறான் பாரேன்” என சொல்ல கமலியோ வெறுப்புற்றாள், அந்நேரம் கண்மணி வரவும் கவினோ

”ஐஐ கண்மணி வர்றா” என புன்னகையுடன் சொல்ல கமலியோ அவனது தோளில் ஒரு அடி போட அதில் அவன் அடங்கிப் போனான்.

கண்மணியும் இயல்பாகவே நடந்துக் கொண்டாள், சுடிதார் அணிந்திருந்தாள் அவளின் முகம் அவ்வளவு தெளிவாக இருந்தது, கமலியோ அதைக்கண்டு நொந்துப் போனாள்

”என்னாச்சி இவங்களுக்கு, சூடு சுரனை இல்லையோ, இப்படி நார்மலா இருக்காங்களே சே” என அலுத்துக் கொள்ள கவினோ

”கமலி போதும் இதோட நிப்பாட்டிக்க, இனி எதுவும் வேலைக்கு ஆகாது, நான்தான் சொன்னேன்ல கண்மணியை பத்தி, அவள் யாரையும் பார்க்க மாட்டா, குணாவே அவள்கிட்ட நேர்ல வந்து பேசினா கூட அவள் மனசு மாறமாட்டா, அவ்வளவு நல்ல பொண்ணு, சொக்க தங்கம்” என புகழ் பாட கமலியோ தனது கோபவிழியால் அவனை சுட்டெரிக்க அதன் வெப்பம் தாங்காமல் அவனது இருக்கையில் சென்று அமர்ந்தான் கவின்

கமலியும் கோபமுடனே தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள், சிறிது நேரத்தில் பெல் அடிக்கவும் பரிட்சை ஆரம்பமானது.

குணாவும் கண்மணியும் சரியாக படிக்கவில்லை, அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை நினைத்து கலங்கியபடியே இருந்தபடியால் இப்போது கேள்வி தாளைக்கண்டதும் பயந்தார்கள்.

”படிப்புதான் முக்கியம்னு வைராக்கியமா இருந்தேன் ஆனா இப்போ நான் தோத்துப் போய்டுவேன் போல இருக்கே” என அவள் அழாத குறையாக கவலையாக இருக்க அதைக்கண்ட குணாவோ சைகை செய்தான், அதில் அவள் அவனை ஏறிட்டுப் பார்க்க அவனோ

“பயப்படாத தெரிஞ்சதை எழுது போதும்” என மெதுவாகச் சொல்ல அவளோ பெருமூச்சுவிட்டு கண்களை மூடினாள்.

பாடம் நடத்தும் போதும் சரி அன்றே நடத்திய பாடத்தை படித்ததும் நினைவுக்கு வந்தது, இப்போது கண்கள் திறந்தாள், கேள்வித்தாள் வெகு சுலபமாக இருப்பது போல தெரியவும் மென்மையாக புன்னகைத்துவிட்டு எழுத தொடங்க அதுவரை அவளின் செயலை கவனித்துக் கொண்டிருந்த குணாவிற்கு நிம்மதியாகிப் போனது, அவனும் தனக்கு தெரிந்தவற்றை எழுதலானான்.

மற்றவர்களும் சின்சியராக எழுதிக் கொண்டிருந்தார்கள், 3 மணி நேரம் சென்றதே யாருக்கும் தெரியவில்லை, பெல் அடிக்கவும் அனைவரும் தங்களது பேப்பரை வாத்தியாரிடம் தர வந்தார்கள், கடைசியாக வந்த குணாவும் கண்மணியும் தங்களது பேப்பரை தரும் போது வாத்தியாரின் கை நழுவி அவரிடம் இருந்த பேப்பர்கள் கீழே விழ அதை இவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து தந்தபடியே இருக்க வாத்தியாரும் அவற்றை வாங்கி ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தார்.

அதில் குணாவின் கையில் கமலி மற்றும் கவினின் பேப்பர் சிக்கியது, நன்றாக பரிச்சயப்பட்ட கையெழுத்து உடனே அதை கண்மணியிடம் நீட்டி

”இந்த கையெழுத்தை உன்னிப்பா பாரு” என சொல்ல அவளும் அந்த இரண்டு பேப்பர்களையும் உன்னிப்பாக சில நொடிகள் பார்த்துவிட்டு அதிர்ந்தாள்.

யாருடையது என குணா பார்த்து வைத்துக் கொண்டு அதை வாத்தியாரிடம் தந்துவிட்டு கண்மணிக்கு முன்னால் அவன் கோபமாக வெளியேறிச் செல்ல பதட்டமான கண்மணியோ அவனை பின்தொடர்ந்துச் சென்று ஒரு இடத்தில் அவனை பிடித்தாள்

”குணா அவசரப்படாத”

”யார்ன்னு தெரிஞ்சிக்கிட்டேன், எல்லாம் அந்த கமலியோட வேலை, அவளை இன்னிக்கு உண்டு இல்லைன்னு ஆக்கத்தான் போறேன்”

”வேணாம் விசயம் பெரிசாக்க வேணாம் விட்டுடலாம்“

”இல்லை கண்மணி அவள்தான் இப்படி செய்திருக்கா, அந்த சுவத்தில நம்ம பேரை எழுதி வைச்சது கூட அவளாதான் இருக்கனும், 1 வாரம் அவங்க வராம இருந்தாங்க இதனாலகூட இருக்கலாம்”

”இப்ப அவங்ககிட்ட போய் சண்டை போடறது எனக்கு சரியாப்படலை“

”என்ன உளர்ற, பார்த்தால் அவள் எப்படி கிப்ட் அனுப்பி வைச்சிருக்காள்ன்னு, எனக்கு மனசே ஆறலை, நைட்டெல்லாம் படிக்க முடியாம, தூங்க முடியாம, சாப்பிட பிடிக்காம உன்னை பார்க்க ஓடிவந்தேன், நீ எந்த மனநிலைமையில இருக்கேன்னு கூட தெரியாம ரொம்ப பயந்துட்டேன், நீ வருவியா மாட்டியான்னு நினைச்சி பதட்டமானேன்

நீ வந்தபின்னாடி நான் நிம்மதியானேன் தெரியுமா, பாவம் நீ படிப்புதான் முக்கியம்னு கொள்கையோட இருந்த, இன்னிக்கு படிக்க முடியாம பரிட்சை சரியா எழுத முடியாம எவ்ளோ கவலைப்பட்டிருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியுது, இதுக்கு எல்லாம் காரணம் யாரு? அந்த கமலிதானே, அவளை இன்னிக்கு ஒரு வழியாக்காம விடமாட்டேன் கண்மணி, வழியை விடு” என அவளை கடந்து செல்ல முனைய அவளோ பிரச்சனை வரக்கூடாது என நினைத்து சட்டென அவனது கையை பற்றி இழுத்து தனது வகுப்பறைக்குச் சென்று விட்டவள் கதவை தாள்பாள் போட்டு விட்டு வந்தாள்

”கண்மணி என்ன செய்ற நீ, அவங்க போயிடப்போறாங்க”

”போனா போகட்டும் இப்ப எந்த பிரச்சனையும் செய்ய வேணாம்”

”என்ன சொல்ற உனக்கு கோபம் இல்லையா“

”கோபம் இருக்கு, அதுக்காக அவங்களோட சண்டை போட்டா பிரச்சனை வரும் அதனால நம்ம படிப்புக்கு பாதிப்பு வரும்”

”அவங்களை இப்ப விட்டா அடங்க மாட்டாங்க, இன்னும் ஏதாவது தொல்லை செய்துக்கிட்டே இருப்பாங்க”

“செய்யட்டும் விடு”

”கண்மணி நீயா இப்படி பேசறது“

”குணா ப்ளீஸ், இந்த விசயத்தை இப்படியே விடு, அவங்களோட சண்டை போட்டா தேவையில்லாம எல்லா கதையும் வெளிய வரும், அந்த லெட்டர்ஸ், கிப்ட்ஸ் அப்புறம் நேத்து வந்தது” என அதற்கு மேல் பேச முடியாமல் தயங்க அவனோ நொந்துப் போனான்

”பார்த்தியா உன்னால சொல்ல முடியலை, அவங்க வேணும்னே இப்படி பழிவாங்க செய்திருக்காங்க”

”தெரியுது அவங்க காதலை நாம ரிஜக்ட் பண்ணது தப்புதானே”

”என்ன சொல்ற, நாமளா நான் கமலியை வேணாம்னு சொன்னேன், அப்போ நீ கவினை”

”ஆமாம் இப்பதான் அவன் யார்ன்னு எனக்கு ஞாபகம் வந்தது, அவன் பேரு கவின் முன்னாடியே அவன் எனக்கு ஐ லவ் யூ சொன்னான், ஆனா அவனை நான் ஏத்துக்கலை திட்டி விரட்டிட்டேன், அதுக்கு அப்புறம் அவனை நான் பார்க்கவேயில்லை, என் மேல இருக்கற கோபத்தில அவங்க இரண்டு பேரும் சேர்ந்து இப்படி செய்திருக்காங்க

அவங்களை பொருத்தவரைக்கும் அவங்க செய்தது தப்பில்லை, அவங்களே தங்களோட தப்பை உணர்ந்தாதான் திருந்துவாங்க, அதை விட்டுட்டு அவங்களோட சண்டை போட்டா இன்னும் அவங்களோட பழிவாங்கற எண்ணம் அதிகமாகும், நம்மளை அவமானப்படுத்த என்ன வேணும்னாலும் செய்வாங்க, இதனால நம்ம படிப்பு பாதிக்கும், நம்ம வாழ்க்கையே கூட கேள்விக் குறியாயிடும் புரிஞ்சிக்க குணா ப்ளீஸ்” என அவள் கைகூப்பி பேச அவனுக்கு மனம் வரவில்லை

”இல்லை கண்மணி, எனக்கு மனசே வரலை, நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனாலும் அவளை ஏதாவது செய்யலைன்னா நான் ஆம்பளையே இல்லை, இதனால என் படிப்பு நாசமா போனாலும் பரவாயில்லை, என்னை பழிவாங்கறதா நினைச்சி உன்னையும் என்கூட கோர்த்துவிட்டு பாவம் உன் வாழ்க்கையையும் கெடுக்கப்பார்க்கறா, அவளை சும்மா விடமாட்டேன்” என அவன் கோபத்தில் பொங்க கண்மணி பார்த்தாள்

அவனை எப்படி சமாதானம் செய்வது என தெரியவில்லை, இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாயிடுமே என்ற பயத்தில் அவனை இறுக்கமாக கட்டியணைத்துக் கொள்ள அவனுக்கு கோபம் தணிந்து குழப்பம் வந்தது

”ஏய் கண்மணி என்ன செய்ற விடு என்னை”

“ப்ளீஸ் என் பேச்சைக் கேளு குணா”

”சரி விடு என்னை விடுங்கறேன்ல” என அவளை தள்ளி நிப்பாட்ட அவளோ அவனை குழப்பமாக பார்த்தான்

”அவங்களை எதுவும் செய்யாத ப்ளீஸ்”

”அது இருக்கட்டும், நீ எதுக்கு இப்ப என்னை கட்டிப்பிடிச்ச, அவங்களை காப்பாத்தவா இல்லை நம்ம படிப்பை காப்பாத்தவா”

”இரண்டும்தான் அதோட“

”என்ன”

”ஒண்ணுமில்லை”

”கண்மணி வேண்டாம், பொய்யான விசயத்தால உருவான காதலை எப்படி தொடர்றதுன்னு நானே குழப்பத்தில இருக்கேன், நீ பாட்டுக்கு இப்படி எல்லாம் செய்து வைக்காத”

”என்ன சொல்ற“

”பின்ன அவங்க எழுதின லெட்டரை படிச்சிதானே நாம ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரம்பிச்சோம், அப்படி ஒரு விசயம் இல்லைன்னா நமக்குள்ள காதலே வந்திருக்காது அதனால”

”அதனால”

”நாம பொய்யா காதலிக்க வேண்டாம், இப்பதான் எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சே, முதல்ல நான் உன்னை விரும்பலை, நீ அனுப்பினதா நினைச்சி வந்த லெட்டரை படிச்சி அதனால உன்னை பார்க்க ஆரம்பிச்சேன், விரும்ப ஆரம்பிச்சேன், அதே போலதானே நீயும், பொய்யான ஒரு வாழ்க்கைக்குள்ள நாம மாட்டிக்க வேணாம், நாம ஒண்ணும் முட்டாள் கிடையாது, இனி நம்ம வாழ்க்கையை நம்ம பாதையில நடத்திப்போறதுதான் நல்லது” என குணா படபடவென பேசிவிட கண்மணிக்கு அழுகையே வந்தது

”ஏன் அழற”

”ஒண்ணுமில்லை”

”அய்யோ இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு அழற நான் உண்மையைதானே சொன்னேன்”

”ஆமாம் உண்மையைதான் சொன்ன”

”அப்புறம் ஏன் அழற”

”யாராலயோ எதனாலயோ நமக்குள்ள காதல் வந்திருக்கலாம், ஆனா அதுக்கு அப்புறம் அந்த காதல் பொய்யில்லையே அது உண்மைதானே, உண்மை தெரிஞ்சதால காதல் இல்லைன்னு ஆயிடுமா, அவ்ளோதானா நீ என் மேல வைச்சிருந்த காதல்”

”அய்யோ கண்மணி உன் மனசுலயும் இப்படிதான் இருக்கும்னு நினைச்சி அப்படி பேசிட்டேன்”

”அப்போ உன் மனசுல என்ன இருக்கு குணா” என கேட்க அவனிடம் அமைதியே நிலவியது.

”சொல்லு குணா நீ இப்பவும் என்னை காதலிக்கறதானே இல்லையா” என அவள் பதட்டமாக கேட்க அவனோ குழம்பினான்

அவனுக்குள்ளும் காதல் இருந்தது, அதை சொல்ல தயங்கினான், காரணம் படிப்பு, அவள் படிக்க வேண்டும் என்பதற்காக பார்த்தான், ஆனால் அவளோ தவறாக எண்ணிக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென அழுதபடியே சென்றுவிட குணா சோர்ந்துப் போனான், தானாக அவனின் கண்கள் கலங்கிவிட்டது.

குணாவோ இறுக்கமான மனதுடனே லாட்ஜ்க்குச் சென்றான், மனம் கனத்துவிட்டது. கண்மணியின் அழுகை அவனை இம்சித்தது.

”கண்மணி சொன்னதும் சரிதானே, லெட்டரை படிச்சோம், காதலிச்சோம், இப்ப அந்த லெட்டர் பொய்யுங்கறதுக்காக நம்ம காதலும் பொய்யுன்னு அர்த்தம் இல்லையே, கண்மணி தெளிவா இருக்கா, நாமதான் குழம்பி பாவம் அவளையும் காயப்படுத்திட்டோம், இப்பவே அவளால சரியா படிக்க முடியாம பரிட்சை எழுத முடியாம கஷ்டப்பட்டா

நம்மால அவள் வாழ்க்கை நாசமாக வேணாம், படிக்கட்டும், பெரியாளாகட்டும் அப்புறம் அவள் முன்னாடி போய் நிக்கலாம், அப்ப அவள் நம்மளை ஏத்துக்கிட்டா போதும், ஏத்துக்கலைன்னாலும் அவள் நினைவா அப்படியே தனியா வாழ்ந்துட வேண்டியதுதான், தனிமையில வாழறது ஒண்ணும் நமக்கு புதுசு இல்லையே, ஏதோ இந்த சில நாள் கண்மணியால நம்ம வாழ்க்கை வானவில் போல அழகா இருந்தது, இப்ப மறுபடியும் ப்ளாக் ஒயிட் ஆயிடுச்சி, நமக்கு இதுதான் நிரந்தரம் போல” என நினைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டான் குணா

மறுபக்கம் கண்மணியோ குணாவின் பேச்சால் மனம் குழம்பினாள்

”குணா தெளிவாயிருக்கறப்ப நாம ஏன் குழம்பனும், அவன் காதலிக்கறான்னு நினைச்சி நாம காதலிச்சோம், ஆனா அது பொய்யுங்கறப்ப அவன் நம்மளை ரிஜக்ட் பண்ணது சரிதானே, எத்தனையோ பேரை நாம ரிஜக்ட் பண்ணோம், அப்ப அவங்களும் இப்படிதானே கவலைப்பட்டிருப்பாங்க, அவங்க பட்ட வலி இப்ப நாம படறோம், இந்த காதல் வலியை இன்னும் எத்தனை நாள் அனுபவிக்கனுமோ தெரியலையே, எப்படியாவது நம்ம மனசை மாத்திக்கனும், படிப்புல கவனம் செலுத்தனும்” என நினைத்தவள் புத்தகத்தை கையில் எடுத்துப் படிக்க முயன்றாள்

5 நிமிடங்கள் கரைந்தது, அதற்கு மேல் அவளால் படிக்க இயலவில்லை, குணாவின் நினைவுகள் அவளை வாட்டி எடுக்க சோர்ந்துப் போய் படுத்துக் கொண்டாள், அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் அவள் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது, எவ்வளவு அழுதும் அவளால் குணாவை மறக்க முடியவில்லை.

மாலை நேரம் ஆனதும் குணாவும் கண்மணியும் தங்கள் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள், இருவரும் ஒன்று போல வந்தார்கள், அவர்கள் வந்தது மற்றவர்கள் தெரிந்திருந்தது ஆனாலும் கண்டும் காணாதது போல நடந்துக் கொண்டார்கள், வேலை பிசியில் தங்களின் கவலையை போக்கிக் கொள்ள முயன்றார்கள், பலன் அளித்தது, வேலை நேரத்தில் அவர்களுக்கு தங்கள் காதல் நினைவு வரவில்லை

ஆனால் வேலை முடிந்ததும் ஒருவரை ஒருவர் பார்க்கும் தருணம் வருமே என நினைக்கையில் மனம் பாரமானது, ஆனாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வெளியே வர தானாக கண்கள் அவர்களின் பேச்சையும் மீறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது.

என்ன செய்தாலும் என்ன ஆனாலும் கண்மணியால் குணாவை காதலிக்காமல் இருக்க இயலவில்லை, அதே நிலைமையில்தான் குணாவும் இருந்தான், இருவரின் காதல் பொய்யாக ஆரம்பித்தாலும் ஆழமாக இருந்தபடியால் அந்த காதலை மறக்க இருவராலும் முடியவில்லை, கனத்த மனதுடனே ரோட்டில் நடந்தாள் கண்மணி

குணாவும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான், குணாவின் நினைவில் நடந்தபடி இருந்த கண்மணி எதிரே வந்த வண்டியை கவனிக்கவில்லை, அவளே தவறான வழியில் சென்றாள், வண்டி மீது தவறில்லை, ஹாரன் அடித்தபடியே வந்தும் கண்மணி குணாவின் நினைவில் கவனிக்கவில்லை, அவளாகவே வண்டியை நோக்கி நடந்தாள்.

ஒரு நொடி விட்டிருந்தால் அந்த வண்டி அவள் மீது மோதியிருக்கும், கடைசி கட்டத்தில் குணா அவளை காப்பாற்ற தனது வண்டியை எதிர் வந்த வண்டியின் மீது மோதவைத்து அவளின் தோளை பிடித்து இழுத்த வேகத்தில் ரோட்டோரம் இருவரும் விழுந்தார்கள்.

அவனது பைக் விபத்தில் சேதமாகியிருந்தது, வண்டியின் டிரைவரோ அந்த பெண்ணை திட்ட வர குணா தடுத்து அவரை அனுப்பி வைத்தவன் தனது வண்டியை பரிசோதித்தான், வண்டி மிகவும் சேதமாக இருக்கவே நொந்துப் போனான், நடந்த விபத்தினால் பயத்தில் இருந்த கண்மணி குணாவிடம் வந்தாள், அவனோ அவனது வண்டியின் பரிதாபமான நிலைமையை நினைத்து துக்க பெருமூச்சுவிட அவளோ

”சாரி” என்றாள், அவனோ அவளை ஏன் என்பது போல பார்த்து வைக்க

”என்னாலதானே உங்க வண்டி இப்படி ஆச்சி”

”வண்டிதானே போனா போகட்டும், உசுரு போயிருந்தா என்னாயிருக்கும், வண்டிக்கே இந்த சேதம்னா, நீ அந்த வண்டியில மாட்டியிருந்தா உனக்கு எவ்ளோ சேதமாயிருக்கும், என்னாச்சி உனக்கு ரோட்ல நடக்கறப்ப எந்த நினைப்பில நடக்கற, பார்த்து கவனமா போகறதில்லையா“

”தப்புதான் ஏதோ நினைப்புல நானா அப்படி நடந்துப் போயிட்டேன்”

”ஏதோ நினைப்பா இல்லை என்னோட நினைப்பா” என அவன் அழுத்தமாக கேட்க அவளோ தலைதாழ்த்திக் கொள்ள அவன் புரிந்துக் கொண்டு நீண்ட பெருமூச்சுவிட்டவன் அவளை ஏற இறங்கப் பார்த்து

”வேற எங்கயும் அடிப்படலையே” என கேட்க அவளோ இல்லை என்பது போல தலையாட்டி வைத்தாள்

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!