Skip to content
Post Views: 357
இது போல அவள் கோபப்படும் போதெல்லாம் அவளுக்கு பிடிக்கும்படி நடந்துக் கொண்டான், அதுதான் அவன் செய்த தவறு என்பதை இப்போது உணர்ந்து தன்னையே நொந்துக் கொண்டவன் இப்போதும் அதே தப்பை செய்ய மனமின்றி
”சாரி கண்மணி எனக்கு நீயும் உன் படிப்பும்தான் முக்கியம், என் மேல நீ கோபப்பட்டாலும் சரி நான் வெளிய போறேன்” என சொல்லிவிட்டு அவன் கதவை திறந்துக் கொண்டு வெளியே செல்ல கண்மணியால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இலயவில்லை, அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
குணா வெளியே வரவும் அங்கு கமலியும் கவினும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தார்கள், உள்ளே குணாவும் கண்மணியும் பேசியது அவர்களுக்கும் கேட்டது போல அதனால் எதுவும் பேசாமல் திரும்பி செல்ல முயல குணா தடுத்தான்
”உங்க வீட்ல நான் இன்னிக்கு தங்கலாமா” என கேட்கவும் கமலி ஆர்வமானாள். கவினோ
Advertisement
”தாராளமா நீயும் நானும் அங்க இருக்கலாம், கமலி நீ கண்மணிக்கு துணையா இங்கயே இரு“
”கவின்”
”அடிவெளுத்துடுவேன், ஒழுங்கா கண்மணியோட இரு போ” என அதட்டிவிட்டு குணாவை கையோடு அழைத்து தன் வீட்டிற்குச் சென்றான் கவின்
Advertisement
கமலியோ துக்க பெருமூச்சுவிட்டு கண்மணியிடம் செல்ல அவளோ இவளைக்கண்டு வெறுப்புற்றாள்
Advertisement
”எல்லாம் உன்னாலதான் நீ என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டியா” என கண்மணி திட்ட கமலி வியந்தாள்
”கண்மணி இப்ப என்னாச்சின்னு இப்படி பேசற“
”இனி என்ன ஆகனும் நீ ஆசைப்பட்டது நடக்குதுல்ல“
Advertisement
”ப்ச் நான் எதையும் ஆசைப்படலை ஆமா நீ ஏன் அழற”
”அழாம என்ன செய்றது ஆமா குணா எங்க”
”சாரி கண்மணி குணா கவினோட அந்த வீட்ல தங்கறான், இன்னிக்கு நான் உன்கூட இங்க தங்கறேன்” என சொல்ல கண்மணிக்கு கோபம் தலைக்கேறியது
”கண்மணி நீ ஏன் இப்படி கோபப்படற, குணா மேல தப்பில்லை, அவன் உன் நல்லதுக்குதான் சொல்றான், நீதான் எப்பபாரு படிப்பு படிப்புன்னு சொல்வியே அப்புறம் என்ன”
”படிப்பை விட எனக்கு இப்ப குணாதான் முக்கியம்”
”குணா உன்னை கைவிட்டுட மாட்டான்”
”இல்லை எனக்கு பயமாயிருக்கு”
“எதை நினைச்சி பயப்படற”
”என்கிட்ட காதல் சொல்லி நான் விரட்டின சிலர் எனக்கு சாபம் தந்தாங்க, நானும் குணாவும் பிரிஞ்சிடுவோம்னு”
”அடடா சூப்பர் இது எப்ப நடந்தது“
”எது சூப்பரா ஏய்”
”சரி சரி விடு ஆம்பளைங்க தர்ற சாபத்தை போய் நம்பறியே”
”ஒருவேளை பலிச்சிடுச்சின்னா“
”அதுக்காக குணாவோட தப்பு செய்ய நினைக்கறியா“
”தப்பு செய்தா என்ன நான் அவனோட மனைவிதானே”
”மனைவியா ஆனா அவன் அப்படி உன்னை பார்க்கலையே”
”என் கழுத்தில தாலியிருக்கு”
”எங்க காட்டு பார்க்கலாம்” என கமலி சொன்னதும் கண்மணியும் தனது கழுத்தில் இருந்த தாலியை காட்ட அவளோ மின்சாரம் தாக்கியது போல துடித்துப் போனாள்
”எப்ப கல்யாணம் செய்துக்கிட்டீங்க”
”அது எப்பவோ”
”ஏய் என்ன உன் பேச்சில தடுமாற்றம் தெரியுது, ஒழுங்கா சொல்லு குணாவா இதை உனக்கு கட்டினது”
”கிட்டத்தட்ட”
”அதென்ன கிட்டத்தட்ட புரியலையே”
”அது வந்து” என நடந்ததை சொல்லி முடிக்க கமலிக்கு நிம்மதியாகிப் போனது
”அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு, ஒரு நிமிஷம் என் உசுரே போன மாதிரியாயிடுச்சி, ஒரு பொய் கல்யாணத்துக்கா இவ்ளோ தூரம் முக்கியத்துவம் தர்ற, விட்டுத்தள்ளு கண்மணி”
”அது பொய்யோ மெய்யோ குணாதானே தாலியை போட்டது”
”அவன் ஆசைப்பட்டு போடலை, அவசரத்தில போட்டதெல்லாம் கல்யாணம் ஆகுமா, இப்போ சினிமால நாடகத்தில எல்லாம் நடிப்புக்காக கல்யாணம் செய்துக்கறதில்லையா அது போலதான் இதுவும்” என அவள் இயல்பாக பேசிவிட கண்மணிக்கு வந்ததே கோபம்
பளாரென அவளின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை, அதில் கமலி அரண்டு அமைதியாகி ஒரு ஓரமாக சென்று படுத்துவிட்டாள், கண்மணியோ கோபத்துடனே படுத்தாள், உறக்கம் வரவில்லை என்ன செய்வதென தெரியவில்லை, குணாவை அழைத்துவர செல்ல எழ கமலியோ
”குணாவை கூட்டிட்டு வர போறியா, அவன் கவின்கூட இருக்கான் ஜாக்கிரதை” என எச்சரிக்கவும் கவின் என்றதும் அமைதியான கண்மணியோ அந்நேரம் ப்ராஜெக்ட் நினைவு வரவும் அதை செய்யலானாள், அதைக்கண்ட கமலி வியந்தாள்
”கண்மணி இப்பதான் நீ ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பிக்கறியா, நாளைக்கு இதை சப்மிட் பண்ணனுமே“
”எல்லாம் நான் விடியறதுக்குள்ள முடிச்சிடுவேன்”
”என்னாச்சி கண்மணி உனக்கு, படிப்பு படிப்புன்னு உறுதியா இருந்த எங்க போச்சி உன்னோட உறுதி எல்லாம்”
”படிப்பை விட குணாதான் எனக்கு முக்கியம்”
”ஆனா குணாவை பார்த்தா அப்படி தெரியலையே, அவன் அவனோட லட்சியத்தில உறுதியா இருக்கான், நல்லா படிக்கறான், ப்ராஜெக்ட் கூட முடிச்சிட்டான், ஆனா நீ அவனை நினைச்சிக்கிட்டு படிப்பை இழந்துடாத” என சொல்ல அரண்டாள் கண்மணி
”என்ன சொல்ற நீ”
”உன் முகத்தில குழப்பம் இருக்கு, நீ மனசளவில மாறிட்ட, அந்த மாற்றம் உன் முகத்தில அப்பட்டமா தெரியுது”
”இல்லை நான் தெளிவாதான் இருக்கேன்”
“பார்க்கலாம் வர்ற ரிவிஷன் டெஸ்ட்ல தெரிஞ்சிடும், நீ எந்தளவுக்கு தெளிவாயிருக்கன்னு”
”எல்லாம் நான் நல்லாதான் எழுதுவேன்“
”எனக்கு நம்பிக்கையில்லை, கண்டிப்பா உன்னால எக்ஸாம் சரியா எழுத முடியாது கண்மணி”
”இல்லை அப்படியில்லை“
”ஒருவேளை நீ சரியா எழுதலைன்னா குணாவை விட்டுடுவியா“
”ஏய்ய்ய்”
”அவனை விட்டாதான் உன்னால உன் படிப்பை தொடர முடியும், உன் லட்சியத்தை அடைய முடியும், குணா உன்னோட லட்சியத்துக்கு குறுக்க இருக்கான், அவனை இழந்துடக்கூடாதுன்னு நீ உன் வாழ்க்கையை தொலைச்சிடாத, சொல்லிட்டேன், எனக்கு தூக்கம் வருது குட்நைட்“
என சொல்லிய கமலி அங்கேயே ஒரு இடமாக படுத்து உறங்கிவிட கண்மணிக்கு தூக்கமும் வரவில்லை, ப்ராஜெக்ட்டும் செய்ய மனம் வரவில்லை, கவலையுடனும் குழப்பத்துடனும் நேரத்தை ஓட்டினாள்.
மறுபக்கம் கவினோ குணாவை சந்தேகமாகவே பார்த்தான், அவனோ அவனின் மனஓட்டத்தை புரிந்துக் கொண்டு
”டேய் கவின் அப்படி எல்லாம் பார்க்காத எங்களுக்குள்ள ஒண்ணுமே நடக்கலை”
”அதான் எப்படி நடக்கலை”
“டேய்”
“இல்லை சூழ்நிலை சந்தர்ப்பம் இரண்டும் சரியா அமைஞ்சுமா உன் மனசு தடுமாறலை, அதுவும் கண்மணி போல ஒருத்தி உன்னை சுத்தி சுத்தி வர்றா, உன்னையும் அவளையும் சேர்த்து வைச்சிப் பார்த்தா புருஷன் பொண்டாட்டி போல அன்னியோன்யமா நடந்துக்கறீங்க, அப்புறம் எப்படி ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்ற, அதைதான் என்னால நம்பமுடியலை“
”நம்பு அவ்ளோதான்”
”இல்லையே எதையோ மறைக்கற”
”டேய் அடிவாங்காத”
”நீ அடிச்சாலும் பரவாயில்லை நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு, கண்மணியோட தப்பு செய்யனும்னு உனக்குள்ள தோணிச்சா இல்லையா” என கேட்க குணாவிடம் பதில் இல்லை
”என்ன பதில் வரலை”
”சின்னதா சபலப்பட்டேன் ஆனா உடனே உஷாராகி வெளிய வந்துட்டேன்“
”இப்படி ரிஸ்க் எடுக்கனுமா“
”அவளை நான் பாதுகாக்கனும்”
”யார்கிட்டயிருந்து என்கிட்டயிருந்து அவளை பாதுகாக்கறேன்னு நீயே தப்பு செய்யப் பார்க்கிறயே இதுதான் நீ பாதுகாக்கற லட்சணமா“
”கண்மணி முன்ன மாதிரியில்லை ரொம்ப மாறிட்டா”
”அதுதான் நல்லாவே தெரியுதே, அவள் உன்னை நெருங்கி நெருங்கி வர்றதும் நீ அவளை விட்டு விலகி விலகி போறதும், யாரை ஏமாத்த இந்த நடிப்பு, ஊரையா இல்லை உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்களா”
”என்னடா சொல்ற”
”இதுல சொல்ல என்ன இருக்கு, கண்மணியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், ஆனா உன்னை பத்தி எனக்கு பெரிசா தெரியலை, உன்னைதான் மலை போல கமலி நம்பறா, ஆனா எனக்கு உன் மேல சுத்தமா நம்பி்க்கையில்லை, நீ என்னவோ செய்து கண்மணியை மயக்கி வைச்சிருக்க”
”நான் என்ன மந்திரவாதியா அவளை மயக்கறதுக்கு, அவளே படிச்சப் பொண்ணு அவளை நான் ஏன் ஏமாத்தப்போறேன், நீ ஒண்ணு”
”கண்மணி உன்னோட அன்புக்கு அடிமையாகிட்டா, அந்த அன்பு காதலாகி, இப்ப அந்த காதல் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் விட்டுட்ட”
”எது நானா இல்லை“
”டேய் அடங்குடா, உன் அனுமதியில்லாம அவளால உன்கிட்ட வரமுடியுமா என்ன, ஒழுங்கா படிப்புதான் முக்கியம்னு இருந்தவளை பேசி, பழகி, காதலிக்க வைச்சி, அவளை காப்பாத்தறேன்னு ஒரு வீடு எடுத்து தங்க வைச்சி, நீ என்னவோ ஒழுக்க சீலன்னு பெயர் எடுக்க வெளிய வந்து படுக்கறது, இதெல்லாம் பார்த்தா எந்த பொண்ணுக்குதான் பிடிக்காது, அடடா இவன் எவ்ளோ நல்லவனா இருக்கானே, இவனுக்காக உசுரை கூட தரலாம் நம்மளை தந்தா தப்பில்லைன்னு நினைக்கற அளவுக்கு அவளை கொண்டு வந்து நிப்பாட்டிட்டு, ஒண்ணுமே தெரியாதவனை போல பேசறியே, அவ்ளோ நல்லவனா நீ“
”கவின் வார்த்தையை அளந்து பேசு, நான் கெட்டவன்னா இந்நேரம் கண்மணியோட வாழ்க்கையை நான் சூரையாடியிருப்பேன், எதுக்காக அவளை விட்டு விலகிப் போகனும் சொல்லு“
”கரெக்ட்டு நீ விலகறதால நல்லவன்னு நினைக்கற, ஆனா நீ விலக விலக அவள் உன்கிட்டதானே வர்றா, அதை பத்தி யோசிச்சியா” என சொல்ல குணா குழம்பினான்
”நீ எத்தனை பொண்ணுங்களை ரிஜக்ட் பண்ண, அதுல ஒண்ணா நீ கண்மணியை ரிஜக்ட் பண்ணியிருந்தா நானும் கமலியும் சந்தோஷப்பட்டிருப்போம், எப்படியோ நாங்க ஆசைப்பட்டபடி பழிவாங்கியாச்சின்னு நிம்மதியா எங்க வேலையை பார்த்துட்டு போயிருப்போம், ஆனா நீ என்ன செய்த அவளை வெறுக்காம அவளையே சுத்தி சுத்தி வந்த”
”கவின்”
”சரி அவள் பார்வையில படற மாதிரி நடந்துக்கிட்ட, அவளும் பார்த்தா பிடிச்சிருந்தது, பழகினா இப்ப நீயில்லைன்னா வாழ்க்கையே இல்லைங்கற மாதிரி நிக்கற அளவுக்கு வந்துட்டா, இனி ஒண்ணுதான் பாக்கி“
”என்னது”
”கல்யாணம், அவள் கழுத்தில ஒரு தாலி கட்டிட்டன்னு வையேன் அவ்ளோதான், படிப்பாவது ஒண்ணாவதுன்னு படிப்பை தூக்கி பரண்ல போட்டுட்டு உன்னையே சுத்தி வந்து உன்கூட வாழ ஆரம்பிச்சிடுவா, அந்த சம்பவம் நடக்கறவரைக்கும் நீ ஓயப்போறதில்லை, அவளும் உன்னை விடப்போறதில்லை
பாவம்டா அந்த பொண்ணு அவளை படிக்க விடு, உனக்குதான் அப்பா அம்மா யாரும் இல்லை, தனியாளு, ஆனா அவளுக்கு அப்பா அம்மா இருக்காங்க, அவங்களை அவள்தானே பார்த்துக்கனும், அவளே படிச்சி பெரியாளாகி வேலைக்கு போய் சம்பாதிச்சி குடும்பத்தை பார்த்துக்கனும்ங்கற ஆசையில இருக்கா, அவளோட ஆசையில மண்ணை வாரி இறைச்சிடாத”
”இப்ப என்னதான் சொல்ல வர்ற”
”என்னத்த சொல்ல, கழுத்துக்கு மேல வெள்ளம் வந்துடுச்சி, உன்னாலயும் தப்பிக்க முடியாது, அவளாலயும் தப்பிக்க முடியாது, இரண்டு போரோட லட்சியமும் காணாம போயிடுச்சி” என சொல்லிவிட்டு அவன் உறங்க செல்ல குணாவிற்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆனது.
தவறு செய்துவிட்டோமோ என முதல்முறை யோசிக்கலானான் குணா.
மறுநாள் அனைவரும் கல்லூரி வகுப்பில் அமர்ந்திருந்தார்கள், நால்வரின் முகமும் பேயறந்ததை போலிருந்தது, குணாவோ கண்மணியை இயல்பாக பார்க்க முடியாமல் தவித்தான், தனக்குள் கண்மணிக்கு ஏதோ கண்ணுக்கு தெரியாத துரோகத்தை இழைத்துவிட்டோமோ என நினைத்து உள்ளுக்குள் கலங்கினான்
கண்மணிக்கோ லட்சியத்திற்கும் காதலுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு எங்கே குணாவை இழந்துவிடுவோமோ என பயந்தாள், கவினும் கமலியும் இவர்களின் காதல் கதை எப்போது முடிவுக்கு வரும், இன்றா நாளையா என எதிர்பார்த்து காத்திருந்தார்கள், ப்ராஜெக்ட் செய்ய முடியாமல் போனவர்கள் பட்டியலில் குணா, கண்மணி இருவர் மட்டுமே இருக்க அதைக்கண்டு வாத்தியார்கள் கூட வியந்தார்கள்
”நல்லா படிக்கற பசங்க நீங்க, இப்படி ப்ராஜெக்ட் செய்யலைன்னு சொன்னா நம்ப முடியலை, இது போல அடுத்த முறை நடந்துக்க கூடாது, இப்பவும் உங்களை தண்டிக்க முடியும், ஆனா ஏதோ காரணத்தால நீங்க ப்ராஜெக்ட் பண்ணலைன்னு நினைச்சி விடறேன், ரிவிஷன் டெஸ்ட்ல யாரும் பெயில் ஆக கூடாது” என கறராக சொல்லிவிட குணாவிற்கும் கண்மணிக்கும் வெறுப்பே வந்தது, மதிய இடைவேளையில் கண்மணி குணாவிடம் வந்தாள்
”குணா நீ ப்ராஜெக்ட் பண்ணிட்டல்ல ஏன் செய்யலைன்னு சொன்ன”
”நீ செய்யலையே”
”நான் செய்யலைன்னா என்ன நீ செய்ததை கொடுத்திருக்க வேண்டியதுதானே, தேவையில்லாம உனக்கும் திட்டு கிடைச்சது“
”பரவாயில்லை கண்மணி, எப்பவும் என்னால உன்னை தனியா விடமுடியாது”
”இது ப்ராஜெக்ட்ன்னு இல்லை எல்லா விசயத்திலயும் இருக்கனும்”
”நீ சொல்றது எனக்குப் புரியுது, ஆனா நேரம் காலம் வரனும் ரிவிஷன் டெஸ்ட்டுக்கு போய் படி போ”
”எல்லாம் எனக்குத் தெரியும் நீ ஒண்ணும் எனக்கு சொல்லவேண்டியது இல்லை” என எரிந்துவிழுந்து சென்றாள் கண்மணி.
அவளின் இந்த புதிய மாற்றத்தைக்கண்டு குணா கோபித்துக் கொள்ளவில்லை, மாறாக அவளின் இந்த மாற்றத்தில் தெரிந்த பதட்டம், பயம் அவனுக்கு ஒரு விசயத்தை புரிய வைத்தது, அவளால் நிச்சயம் பரிட்சையில் வெற்றி பெற இயலாது என்று, அவளின் மனதில் படிப்பை தாண்டி தான் இருப்பது தெளிவாக தெரியவே இனி என்ன செய்வது என தெரியாமல் குழம்பினான்.
அதற்காக அன்றைய நாள் இரவு வேலை முடிந்த உடன் வீடு திரும்பியவன் கண்மணியைப் பார்த்தான், அவளோ அவனுக்காக விதவிதமாக சமைத்து வைத்து காத்திருக்க அவனோ
”படிச்சியா”
”என்னது“
”டெஸ்ட்டுக்கு படிச்சியான்னு கேட்டேன்”
”இல்லை படிச்சிக்கலாம் என்ன அவசரம்”
”கண்மணி” என கோபத்தில் வெடித்தான், அவனது இந்த புதிய கோபத்தைக்கண்டு பயந்தாள் கண்மணி
”குணா ஏன் கத்தற”
”பின்ன இவ்ளோ நேரம் படிக்காம என்ன செய்துக்கிட்டு இருந்த”
”உனக்காக சமைச்சிக்கிட்டு இருந்தேன்”
”சமைக்க இவ்ளோ நேரம் ஆகுமா என்ன“
”உனக்கு பசிக்குது போல இருக்கு, வந்து சாப்பிடு அப்புறமா பேசிக்கலாம்”
”கண்மணி என்ன சொல்லி உனக்கு புரிய வைக்கறதுன்னு தெரியலையே, படிப்பதான் முக்கியம்னு இருந்த, உன்னை நானே வழி மாத்தி விட்டேனோன்னு தோணுது, ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு”
”ஏன் அப்படி சொல்ற குணா, இப்பதான் நான் நல்லாயிருக்கேன், சந்தோஷமா இருக்கேன், எனக்கு இந்த வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு”
”இது நிரந்தரம் இல்லை, இந்த சின்ன சின்ன சந்தோஷத்துக்காக எல்லாம் உன்னோட லட்சியத்தை நீ இழக்க கூடாது, நீ நல்லா படிக்கனும்”
”நான் சாப்பிட்டு படிக்கிறேன் குணா”
”நிஜமாவா சொல்ற”
”ஆமாம் வா வந்து சாப்பிடு வா” என அழைக்க அவனும் பெருமூச்சுவிட்டு சாப்பிட அமர்ந்தான்
இருவரும் நன்றாக சாப்பிட்டு முடித்து ஆளுக்கொரு பக்கம் புத்தகத்துடன் அமர்ந்தார்கள், குணாவோ புத்தகத்தை வைத்து ஏதோ படித்துவிட்டு எதேச்சையாக கண்மணியை பார்க்க அவளோ அவனையே ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தாள், அவன் தன்னை பார்க்கிறான் என்றதும் ஆசையாக புன்னகை பூக்க நொந்துப் போனான் குணா
”நான் வெளிய போய் படிக்கறேன்“
”வெளிய மழை பெய்யுது உள்ளயே படி”
”ப்ச் இந்த மழை ஒண்ணு, நேரம் காலம் இல்லாம வருது” என புலம்பிக் கொண்டே மறுபடியும் புத்தகத்தை பார்த்தான், படிக்க இயலவில்லை, கண்மணி படிக்கிறாளா இல்லையா என தெரிந்துக் கொள்ள நினைத்து படிப்பது போல பாசாங்கு செய்தபடியே நிமிர்ந்துப் பார்க்க அவளோ அவனையே பார்த்தபடி வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, அவளின் வெட்கத்தைக்கண்டு குணாவின் மனம் தடுமாறியது
”ப்ளீஸ் கண்மணி படி”
”படிச்சிக்கிட்டு தான் இருக்கேன்“
”ஓ அப்படியா சரி நான் கேள்வி கேட்கறேன் பதில் சொல்றியா”
”ஓ தாராளமா கேளு” என சொன்னதும் அவனும் கேள்வி கேட்க அவளோ பதிலாக
”ஐ லவ் யூ குணா” என்றாள் அதைக்கேட்டு அவனுக்கு கோபம் வர
”கண்மணி சீரியஸா படி என்னையும் படிக்க விடு, உன்னால என் படிப்பும் கெடுது”
”நான் என்ன உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டா இருக்கேன், இல்லையே, தூரமாதானே உட்கார்ந்திருக்கேன், நீ படி”
”எங்க படிக்க விடற என்னையே நீ பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி படிப்ப”
”ப்ச் நான் படிக்கிறேன் குணா“
”கிழிச்ச ஒரு கேள்வி கேட்டா கூட உன்னால பதில் சொல்ல முடியலையே“
“இல்லையே சொன்னேனே உனக்கு கேட்கலையா“
”எது ஐ லவ் யூன்னு சொன்னியே அதுவா“
”ஆமாம்“
”கண்மணி” என கோபப்பட அவளுக்கு சிரிப்புதான் வந்தது, அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து அவனின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்
”இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ற”
”நாம ரெண்டு பேரும் ஒரே க்ளாஸ்ல படிக்கறோம், எதுக்கு தனித்தனியா படிக்கனும், ஒண்ணா படிச்சா சீக்கிரமா படிக்க முடியும், குரூப் ஸ்டெடி பண்ணலாமா” என ஹஸ்கி வாய்சில் அவள் கேட்கவும் குணாவின் இதயம் வேகமாக துடித்தது
”ஏய் எதுக்குடி இப்படி ஹஸ்கி வாய்சில பேசற நல்லா பேசு“
”ப்ச் இப்ப பேச்சா முக்கியம்”
”வேற என்ன முக்கியம்”
”வேறயா” என அவனை அணைக்க வர அவனோ தடுக்க முயல அந்நேரம் கவினும் கமலியும் வரவே இருவரும் அதிர்ந்து விலகி அமர்ந்தார்கள்
”ஓ படிக்கிறீங்களா, படிங்க படிங்க, நாங்களும் வரலாமா, குரூப் ஸ்டெடிக்குதான்” என அவர்களின் அனுமதி பெறாமலே இருவரும் உள்ளே நுழைய கண்மணிக்கு வெறுப்பே வந்தது.
”நான் படிக்கலை தூங்கப் போறேன், வெளிய போங்க எல்லாரும்” என விரட்ட முதல் ஆளாக குணா வெளியே சென்றான், அவனை தொடர்ந்து கவினும் கமலியும் வெளியே வந்தார்கள்
”குணா கண்மணிக்கு என்னாச்சி, ஏன் இப்படி கோபத்தில விரட்டறா” என கமலி கேட்க அதற்கு அவனோ
”லட்சியத்துக்கும் காதலுக்கும் நடுவில கிடந்து தவிக்கறா, எதை விடறது எதை பிடிக்கறதுன்னு தெரியாம குழம்பறா, இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க ரெண்டு பேரும்தான்“
”என்னது நாங்களா”
”ஆமாம் உங்களை பொருத்தவரைக்கும் படிப்புங்கறது அவ்ளோ ஒண்ணும் பெரிய விசயம் இல்லை, ஆனா அவளுக்கு அதுதான் வாழ்க்கை, அவளோட வாழ்க்கையை புரட்டி போடற மாதிரி வேலைகளை செய்து அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க, இப்ப உங்களுக்கு சந்தோஷமா, நீங்க பழிவாங்க நினைச்சது நடந்துடுச்சா
இன்னும் என்ன பாக்கியிருக்கு, ஓ கண்மணியை கவின் கல்யாணம் செய்துக்கனும்னு நினைச்சதா, அது இந்த ஜென்மத்தில நடக்காது, நடக்காத விசயத்துக்காக முயற்சி செய்றது முட்டாள்தனம், நீ புத்திசாலியா இருந்தா அடுத்து உன் வாழ்க்கையை எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு போறதுன்னு மட்டும் யோசி
அப்புறம் கமலி வீணா என் மேல ஆசைப்படாத, அப்பவும் சரி, இப்பவும் சரி, இனி எப்பவும் சரி நான் உனக்கு இல்லை கண்மணிக்குதான், ஆனா இப்ப கண்மணிக்கும் நான் வேணாம்னு நினைக்கறேன், அவளோட லட்சியத்துக்கு குறுக்க தடையா இருக்கறது நானும் என் காதலும்தான், அந்த தடையை விலக்கனும்”
”எப்படி முடியும் அவளை விட்டுட்டு போகப் போறியா“
”அவள் என் மேல பைத்தியக்காரத்தனமா காதல் செய்றா, இப்ப அவளை விட்டு பிரிஞ்சா அது அவளுக்கு நல்லது செய்யாது, இன்னும் மோசமான நிலைமைக்கு அவளை ஆளாக்கிடும், அந்த தப்பை நான் செத்தாலும் செய்ய மாட்டேன்“
”அப்போ என்ன செய்வ”
”யோசிக்கிறேன்” என்றவன் படிப்பை விட்டு பலமாக யோசிக்க அவனுக்கு துணையாக அவ்விருவரும் யோசிக்கலானார்கள்.
…. தொடரும்
error: Content is protected !!