Skip to content
Post Views: 1,474
”கண்மணி இப்படித்தானே அழுதிருப்பா, அதைப் பார்த்தும் உன் அண்ணன் மனசு இரங்கியிருக்க மாட்டான், ஆனா நான் மட்டும் மனசு இரங்கனுமா முடியாது கமலி”
”அய்யோ குணா, நீ ஆத்திரத்தில கோபத்தில தப்பான முடிவு எடுக்கற, இப்ப நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டா அதனால நம்ம இரண்டு பேர் வாழ்க்கையும் பாழாகும், நீ கண்மணியை நினைச்சிக்கிட்டு என்கூட நிம்மதியா வாழமுடியாது, என்னாலயும் உன்னை கணவனா நினைக்க முடியாது, நான் உன்னை இப்ப காதலிக்கலை குணா, உன்னை நான் கண்மணியோட காதலனாதான் பார்க்கிறேன்”
”பரவாயில்லை கல்யாணம் ஆன பின்னாடி மனசை மாத்திக்கலாம் வா”
”முட்டாள்தனமா யோசிக்காத குணா, அதெப்படி கல்யாணம் ஆனா மனசு மாறும், அதெல்லாம் மாறாது, சாகறவரைக்கும் உன் மனசுல கண்மணிதான் இருப்பா“
Advertisement
”அப்போ கண்மணி மனசுலயும் நான்தானே இருப்பேன், இந்த விசயம் ஏன் உன் அண்ணனுக்கு தெரியாம போயிடுச்சி”
”அவன் பைத்தியக்காரன், முட்டாள் மாதிரி தப்பு செய்துட்டான், அதை நாம சரியாக்கலாம் வா, கவின் எங்கயிருக்கான்னு தேடிப் பார்க்கலாம், கண்டிப்பா கிடைப்பான்”
”எல்லாம் முடிஞ்சிடுச்சி கமலி இந்நேரம் அவனுக்கு கல்யாணமே முடிஞ்சிருக்கும்”
Advertisement
”இல்லை அப்படியிருக்காது கண்மணி சம்மதிக்கமாட்டா”
Advertisement
“யாரு அவளா, ம் ஏற்கனவே ஒரு முறை கல்யாணம் வரைக்கும் போய் வந்தவ தானே, அவளை நான் நம்ப மாட்டேன் நீயும் நம்பாத“
”சரி குணா அப்படியே கல்யாணம் ஆனா என்ன அந்த கல்யாணம் செல்லாத மாதிரி நான் செய்றேன், உன்னையும் கண்மணியையும் நான் சேர்த்து வைக்கிறேன்“
”எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கனும் கமலி, எப்படியோ நீ பழிவாங்க நினைச்ச மாதிரியே நாங்க இரண்டு பேரும் பிரிஞ்சிட்டோம், உன் அண்ணன் ஆசைப்படி கண்மணி அவனுக்கு சொந்தமாகப்போறா, நீ மட்டும் ஏன் தனியா இருக்கனும், உன் ஆசையை நான் நிறைவேத்தறேன், வா கல்யாணம் செய்துக்கலாம்”
Advertisement
”உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா அப்புறம் அந்த வாழ்க்கை நரகமாயிடும்”
”எதை வைச்சி சொல்ற”
”ஏன்னா நீ அந்தளவுக்கு கண்மணியை காதலிக்கற”
”அப்படின்னு யார் சொன்னது அது பொய்“
”இல்லை நானே பார்த்தேன், உன் அளவுக்கு உண்மையா காதலிக்க யாரால முடியும், அவளோட லட்சியத்துக்காக நீ பட்ட பாடு கொஞ்சமா என்ன, அதை என்னால மறக்க முடியாது”
”ஆனா அவள் மறந்துட்டாளே, என்னை வேணாம்னு விட்டுட்டாளே, இனியும் அவளை நான் நினைக்கறது தப்பு, அதோட இப்ப அவள் இன்னொருத்தனோட மனைவி, அவளை எப்படி நான் சே சே தப்பு தப்பு”
”இல்லை குணா கண்டிப்பா தப்பு எதுவும் நடந்திருக்காது”
”இல்லை கமலி என் ஆசைதான் நடக்கலை, உன் ஆசையாவது நடக்கட்டும், கல்யாணம் செய்துக்கலாம், நீ என்னை காதலிச்ச அதனால உனக்கு என்னை ஏத்துக்கறது அவ்ளோ கஷ்டம் இல்லை, எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு, உசுருக்குசுரா கண்மணியை நான் காதலிச்சிட்டேன், அவளை மறக்கறது அவ்ளோ கஷ்டம் இல்லை நான் அவளை மறக்கறவரைக்கும் நீ எனக்காக காத்திருக்கனும், அப்புறம் நான் உன்னை நல்லபடியா பார்த்துக்குவேன்“
”கண்டிப்பா அவளை உன்னால மறக்க முடியாது, அந்தளவுக்கு நீ அவளை காதலிச்சிட்ட நான் உங்க காதலை சேர்த்து வைக்கிறேன்”
”வேணாம் நாம ஒண்ணு சேரலாம் வா” என மீண்டும் அவளுக்கு தாலி கட்ட முயல அவளோ அரண்டாள்.
மறுபக்கம் தாலியை கழட்ட முயல கண்மணி பெருங்குரல் எடுத்து அழ அதில் கவினால் அவளது தாலியை கழட்ட முடியாமல் தயங்கினான்
”அழாத ப்ளீஸ் அழாத, குணாவை விட நான் உன்னை நல்லபடியா பார்த்துக்குவேன், என்னை நம்பு” என கவின் சொல்ல அவளோ அவனை கேவலமாக முறைத்துவிட்டு
”குணாவை விட இல்லை குணாவை போல உன்னால என்னை காதலிக்க முடியுமா சொல்லு“
”அது வந்து”
”சொல்லு உன்னால அவனை போல காதலிக்க முடியுமா“
“அதெப்படி முடியும், அவனோட காதல் வேற என்னோட காதல் வேற, எனக்கு தெரிஞ்ச மாதிரி நான் உன்னை காதலிக்கிறேன் இது போதாதா“
”ஓ எப்படி காதலிப்ப சொல்லு, எப்படின்னு நான் தெரிஞ்சிக்கறேன்“
”இப்படி கேட்டா எப்படி கண்மணி”
”வேற எப்படி கேட்கறது கவின், எனக்காக குணா என்னென்ன செய்தானோ அதெல்லாம் உன்னால செய்ய முடியுமா”
”தாராளமா செய்வேன்”
”என்னெல்லாம் செய்வ”
”உனக்காக பெரிசா வீடு வாங்கித்தரேன், உனக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கித்தரேன், உன்னை கண்கலங்காம பார்த்துக்கிறேன்”
”அவ்ளோதானா”
”அள்ள அள்ள குறையாத அன்பை கொட்டறேன்“
“உண்மையாவே உனக்கு என் மேல அன்பு இருந்தா இப்படி என்னை கஷ்டப்படுத்தமாட்ட கவின்”
”உன்னை கஷ்டப்படுத்தனும்ங்கற எண்ணம் எனக்கில்லை, நீயா குணாவை விட்டு வருவன்னு பார்த்தேன், உனக்காக காத்திருந்தேன், ஆனா நீங்க பிரியற மாதிரி தெரியலை, சரி உன் லட்சியமான படிப்பை வைச்சி உங்களுக்குள்ள குழப்பம் உண்டாக்கி நீங்களே பிரிஞ்சிடுவீங்கன்னு பார்த்தா அப்படி எதுவும் நடக்கலை
நீ என்னடான்னா நல்லா படிச்சி க்ளாஸ் பர்ஸ்ட் வர்ற, அவனும் நல்லா படிக்கிறான், காதல் செய்தா கவனம் தடுமாறும், நினைப்பு மாறும், படிக்க முடியாது, சாப்பிட முடியாது அப்படி இப்படின்னு நினைச்சேன்
ஆனா நீங்க என்னடான்னா அப்படியே ஒத்துமையா இருக்கீங்களே, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம எப்படி இருக்க முடியுது, செமஸ்டர்ல எப்படியும் நீ பெயில் ஆயிடுவ உன்னால படிக்க முடியாம போகும், அதை காரணமா வைச்சி நீயே குணாவை விட்டு விலகுவன்னு பார்த்தா ஒரு பக்கம் காதலிச்சிக்கிட்டே இன்னொரு பக்கம் எப்படி பாஸாக முடிஞ்சது உன்னால”
”காதலிச்சா படிக்க முடியாதுன்னு எந்த முட்டாள் சொன்னது”
”நான் கூடதான் உன்னை காதலிச்சேன் என்னால படிக்க முடியலையே”
”நீ செய்தது காதலே இல்லை, உண்மையான காதல் எந்த கஷ்டத்தையும் தராது, யார் சொன்னது காதலிச்சா எல்லாமே போயிடும்னு, காதல் எத்தனை பேரை வாழவைச்சிருக்கு தெரியுமா, அது ஒரு உணர்வு பூர்வமான விசயம், அதை முழுசா யார் உணர்ந்தாங்களோ அவங்களால உலகத்தையே ஜெயிக்க முடியும்
அதை உணராதவங்கதான் தோத்து போறாங்க, தோத்து போறவங்க தங்களோட இயலாமையை விட்டுட்டு காதலை குறை சொல்வாங்க, காதல் சரியானது அதை யாரையும் தோக்க வைக்காது, அதை யாரும் புரிஞ்சிக்கறதில்லை, குணா என்னை காதலிச்சது கூட அப்படிதான்
ஆனா உன்னோட காதல் அது பேரு வேற, நான் அழகாயிருக்கேன், அதனால உனக்கு பிடிச்சிருந்தது, என்கூட சுத்தனும், பழகனும், வாழனும்னு ஆசைப்பட்டு காதலிக்கிறேன்னு ஆரம்பிச்ச, உண்மையில அது காதல் இல்லை, காதல்ங்கறது தானா வரனும், அழகை பார்த்தோ, பணத்தை பார்த்தோ, குணத்தை பார்த்தோ வராது
கெட்ட புத்தி உள்ளவங்களுக்கு கூட காதல் வரும், அந்த காதலே அவங்களை நல்லவங்களாக்கிடும், நீ நல்லவன்தான், ஆனா உன்னை கெட்டவனாக்கினது காதல் இல்லை, உன்னோட ஈகோ, நான் உன்னை வேணாம்னு சொன்னது உன்னால தாங்க முடியலை, உன்னோட ஈகோவை தட்டிவிடவும் என்னை பழிவாங்கறதா நினைச்சி என்னையும் குணாவையும் சேர்த்து வைச்ச, அதுதான் நீ செய்த நல்ல விசயமே, அதுக்காக உன்னை நான் மன்னிக்கிறேன், ஆனாலும் இப்பகூட நீ என்னை அடைய நினைக்கறது, காதலுக்காக இல்லை, எங்க நீ குணாகிட்ட தோத்துடுவியோங்கற ஈகோவாலதான்”
”எனக்கு ஈகோலாம் இல்லை“
”கமலி கூடதான் குணாவை காதலிச்சா அவள் என்ன உன்னை மாதிரியா நடந்துக்கறா”
”அவள் கதையும் என் கதையும் ஒண்ணா, சொல்லப்போனா அவள்தான் இந்த பழிவாங்கற விசயத்தையே தொடங்கினது, நான் அவளுக்கு உதவி செய்தேன்“
”ம்ம் சரி, ஆனா அவள்கூட குணாவை வேணாம்னு விட்டுட்டாளே, நீ மட்டும் ஏன் விடமாட்டேங்கற”
”அவளுக்கு வேணாம்னா போறா, ஆனா எனக்கு நீ வேணும்”
”அப்படியா அப்படி என்ன இருக்கு என்கிட்ட, இப்படி என் அப்பா அம்மா கிட்நாப் பண்ணி, ப்ளாக் மெயில் செய்து கல்யாணம் செய்துக்க ஆசைப்படறியே, சரி போகட்டும், கல்யாணம் ஆன பின்னாடி கூட இப்படித்தான் ப்ளாக்மெயில் பண்ணி என்கூட குடும்பம் நடத்தப்போறியா, அது உன்னால முடியுமா இல்லை என்னாலதான் உன்கூட சந்தோஷமா வாழ முடியுமா சொல்லு”
”அது கல்யாணம் ஆயிட்டா எல்லா பொண்ணுங்களும் மாறிடுவாங்க கட்டிக்கிட்டவனைதான் விரும்புவாங்க”
”அப்படின்னு உனக்கு யார் சொன்னது, நீ பார்த்தியா, பொண்ணுங்க சாகற வரைக்கும் மாறமாட்டாங்க, அவங்க வேற வாழ்க்கையை விரும்பி ஏத்துக்கிட்டாலும் அவங்க காதலை மறக்க மாட்டாங்க, வேணும்னா கமலியை கேட்டுப்பாரு, அவளால குணாவை காதலிச்சது மறக்க முடியாதுதான், அதுக்காக அதையே நினைச்சிக்கிட்டு வாழ்க்கையை தொலைக்க மாட்டா, அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழத்தான் போறா, என்ன கிடைச்ச வாழ்க்கையை பிடிச்ச மாதிரி மாத்திக்குவா”
”கண்மணி அவள் கதையை விடு, இந்த தாலி உன் கழுத்தில இருக்கறவரைக்கம் நீ குணாவை பத்திதான் பேசுவ, இல்லைன்னா கமலியை பத்தி பேசி என் மனசை கலைக்கப்பார்ப்ப, நான் மாற மாட்டேன், ரொம்ப தெளிவா இருக்கேன், உன்னை நான் காதலிச்சேன், அதனால உன்னைத்தான் நான் கல்யாணம் செய்துக்குவேன்”
”உறுதியா இருக்கியா”
”ஆமாம் அந்த தாலியை நீயே கழட்டு இல்லையா என்னை கழட்டவிடு”
“முடியாது நான் கழட்ட மாட்டேன்“
”அப்ப நானே கழட்டிடறேன்” என சொல்ல அவளோ தடுக்கவில்லை, அவனோ அதில் தைரியம் கொண்டு அவளின் கழுத்தில் இருந்த தாலியை பிடித்தான், அதை கழட்டும் போது அவளின் கண்ணீர் துளி அவனின் கையில் பட அது அவனுக்கு ஆசிட் பட்டது போல எரிந்தது
”தாலியை வேணா நீ கழட்டிட்டு புதுசா நீ எனக்கு தாலி கட்டலாம், ஆனா என் மனசுல எப்பவும் உன்னால இடம்பிடிக்க முடியாது, கடைசிவரைக்கும் நான் குணாவைதான் நினைச்சிக்கிட்டு இருப்பேன்”
”அப்படி சொல்லாத அவனை மறந்துடு“
”முடியாது அவனை மறக்கறதும் ஒண்ணுதான், நான் சாகறதும் ஒண்ணுதான், நீயே சொல்லு, அவனை மறக்க முடியாம உன்கூட வாழ முடியாம உன்னையும் கஷ்டப்படுத்தி நானும் கஷ்டப்படறதுக்கு பேசாம நான் செத்துடவா சொல்லு” என்றதும் துடித்துப் போனான் கவின்
மறுபக்கம் கமலியோ குணாவிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டு முடியாமல் போக அவளோ அவனை மிரட்டினாள்
”இதப்பாரு, இப்ப நீ என்னை விடலைன்னு வை நான் செத்துடுவேன்” என சொல்ல குணா அதிரவில்லை மாறாக
”காதலுக்காக உசுரை விடுவாங்கன்னு கேள்விப்பட்டேன் நீ என்ன புதுசா செய்ற“
”ஆமாம் உன்கூட வாழறதுக்கு உசுரை விடலாம்“
”நான் என்ன உன்னை கொடுமைப்படுத்தவா போறேன் இல்லையே, நல்லா பார்த்துக்கிறேன்னுதானே சொல்றேன்“
”நல்லா பார்த்துக்கறதுன்னா எப்படி? நீ என்ன எனக்கு பாடிகார்டு வேலைதானே பார்க்கப் போற, எனக்கு தேவை காதல், சரி காதல் இல்லைன்னாலும் கணவன்ங்கற உறவு, அதுல கிடைக்கற சந்தோஷம்தான் பெரிசு, ஆனா நீ என்னை காதலிக்கவும் மாட்ட, என்னை மனைவியாவும் நடத்த மாட்ட, குறைஞ்ச பட்சம் உன்னோட அன்பையும் எனக்கு தரமாட்ட, அப்புறம் எதுக்காக நான் உன்னை காதலிக்கனும் கல்யாணம் செய்துக்கனும் வேணாம்”
”இப்படி நீயும் என்னை வேணாம்னு சொன்னா நான் என்ன செய்றது சொல்லு“
”எதையாவது செய் ஆனா என்னை மட்டும் கல்யாணம் செய்துக்கனும்னு பிடிவாதம் பிடிக்காத, என்னால உன்கூட சந்தோஷமா வாழ முடியாது, நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டா அது நல்லாயிருக்காது, வேண்டா வெறுப்பா ஒரு வாழ்க்கை வாழ வேணாம் என்னை விட்டுடு குணா”
”இல்லை கமலி, வாழ்வோ சாவோ அது கண்மணியோடதான்னு நினைச்சேன், அவளே இப்ப இல்லைங்கறப்ப இனி அவளுக்கு அடுத்து உனக்காக வாழ்ந்துட்டுப் போறேனே ப்ளீஸ் வாயேன்”
”முடியாது குணா ஒரு அடிஎடுத்து வைச்சாலும் நான் செத்துடுவேன்”
”விளையாடாத கமலி உன்னால சாக முடியாது, வா வா கிட்ட வா” என அழைக்க அவளோ அக்கம் பக்கம் பார்த்தாள்
கூரான ஏதாவது ஒரு பொருள் கிடைக்குமா என பார்க்கையில் அவளுக்கு தெரிந்தது ஒரு பேனாதான், அதை கையில் எடுத்தாள், தனது கழுத்திடம் வைத்தாள்
”இதப்பாரு நீ என்கிட்ட வந்த, இந்த பேனாவால என் கழுத்தை குத்திக்குவேன், இங்கதான் நரம்பு ஓடுது அதுல பாதிப்பு வந்தா பிழைக்கறது கஷ்டம், நான் வாழறதும் சாகறதும் உன் கையிலதான் இருக்கு குணா, என்னை விட்டுடு” என மிரட்ட அவனோ நிதானித்தான்.
அதே நேரம் கவினின் குரல் கேட்டது
”குணா அவசரப்படாத” என கத்திக் கொண்டு கண்மணியை இழுத்துக் கொண்டு வர குணாவும் கமலியும் அவர்களை பார்த்தார்கள், கண்மணி அமைதியாக ஒரு இடமாக நிற்க கமலியோ கவின் வரவும் அவசரமாக அவனிடம் வந்து ஓங்கி ஒரு அறை விட்டாள்
“படுபாவி, என்னடா காரியம் செய்து வைச்ச, ஒரு நிமிஷத்தில என்னை நானே தற்கொலை செய்துக்கற அளவுக்கு கொண்டு வந்து நிப்பாட்டிட்டியே, மனுஷனாடா நீ, சே உன்னை போய் என் அண்ணன்னு சொல்லிக்கவே அருவெறுப்பா இருக்கு”
”சாரி கமலி நான் வேணும்னே இப்படி செய்யலை”
”அடச்சீ நிறுத்து, நீ எதை நினைச்சி செய்தேன்னு எனக்குத் தெரியாதா, அதான் கண்மணி மனசுல நீயில்லைன்னு ஆயிடுச்சே, அப்புறம் ஏன்டா அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட, உனக்கே இது தப்புன்னு தெரியலை, ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்கறது பாவம், குணா இப்ப என்கிட்ட அப்படித்தான் நடந்துக்கிட்டான் தெரியுமா”
”இங்க இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாது கமலி, செமஸ்டர்ல இரண்டு பேரும் நல்லா படிச்சி பாஸாயிட்டாங்க, அவங்க காதலால அவங்க லட்சியத்தில எந்த பிரச்சனையும் வராதுன்னு முடிவு பண்ணி கல்யாணம் வரைக்கும் பேசி முடிவு எடுக்கவும்தான் எனக்கு கோபம் வந்தது, ஈகோ வந்தது, குணாவுக்கு கண்மணியை தரக்கூடாதுன்னு நினைச்சி அவளோட அப்பா அம்மாவை கடத்தி அவளை ப்ளாக்மெயில் பண்ணி கல்யாணம் செய்துக்கலாம்னு திட்டம் போட்டேன்”
”அதான் நீ போட்ட திட்டம் நடந்துடுச்சே, நீ ஆசைப்பட்டபடியே கண்மணியை கல்யாணம் செய்துக்கிட்ட, அப்புறம் என்ன, உனக்கு சந்தோஷம்தானே, யாரு செத்தா உனக்கென்ன, யாரு கஷ்டப்பட்டா உனக்கென்ன, நீ நல்லாயிருந்தா போதும்னு சுயநலமா யோசிச்சி இப்படி என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிட்டியே, சே நீயெல்லாம் என்ன ஜென்மமோ“
”அவசரப்படாத, நான் போட்ட திட்டப்படி எல்லாம் செய்தேன், ஆனா கடைசி வரைக்கும் என்னால கண்மணி கழுத்தில தாலியை கட்ட முடியலை கமலி”
”என்னடா சொல்ற உண்மையாவா”
”ஆமாம் அவள் அழறா, எனக்கு அதைப் பார்க்கறப்ப கஷ்டமா இருந்தது, ஆனாலும் வற்புறுத்தி அவளை கட்டிக்கலாம்னு பார்த்தா, செத்துடுவேங்கறா, அதுக்குமேலயும் அவளை நான் கட்டாயப்படுத்தறதால எந்த பிரயோசனமும் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டேன்”
”அப்படின்னா கல்யாணம் ஆகலையா”
”ஆமாம் நான் அவளை காதலிச்சேன், ஆனா குணா அளவுக்கு இல்லைன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன், கண்மணி என்னை கடைசி வரைக்கும் ஏத்துக்க மாட்டாள்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிப் போச்சி, இத்தனை நாளும் நான் குழம்பியிருந்தேன், எப்போ என்கூட வாழறதுக்கு அவளுக்கு பிடிக்காம சாகற அளவுக்கு போய்ட்டாளோ இனி நான் அவளை கல்யாணம் செய்துக்கறது வேஸ்ட்டுன்னு தெரிஞ்சிக்கிட்டேன், அப்படியே அவளை நான் கல்யாணம் செய்துக்கிட்டாலும் எங்க வாழ்க்கை வீணாயிடும்“
”இதைதானே நான் அப்பவே சொன்னேன், கேட்டியா நீ, நானே பழிவாங்கற எண்ணத்தை கைவிட்டுட்டு குணாவையும் கண்மணியையும் சேர்த்து வைக்கலாம்னு முடிவு பண்ணி அவங்களுக்கு கல்யாணம் வரைக்கும் ஏற்பாடு செய்து சாட்சி கையெழுத்து போடலாம்னு காத்திருந்தேன்
ஆனா நீ செய்த தப்பால எல்லாம் மாறி கடைசியில குணா என்னை கல்யாணம் செய்துக்க வந்துட்டான் தெரியுமா, அப்படியே நான் துடிச்சிப் போயிட்டேன், கண்மணியோட வாழ்க்கையை தட்டிப்பறிச்சி வாழ எனக்கு விருப்பமில்லை, அதோட குணா மனசுல நான் சுத்தமா இல்லை, அப்படியிருக்கறப்ப அவனோட வாழ எனக்கு பிடிக்கலை
கவின் போதும், இரண்டு முறை நீ முயற்சி செய்துட்ட, கண்மணியை உன்னால கல்யாணம் செய்துக்க முடியலை, இனிமேலயும் அவளை கஷ்டப்படுத்தாத விட்டுடு, அவங்க காதல்தான் உண்மை, நாம காதலிச்சது வெறும் ஈர்ப்பாலதான், அவங்க அளவுக்கு நம்மால உசுருக்குசுரா காதலிச்சிருக்க முடியாது
இப்ப குணா கேட்டா கூட கண்மணி தன் உசுரை தந்துடுவா, அதே போலதான் குணாவும், ஆனா நாம அப்படியில்லை, குணா கேட்டதுக்காக நான் என் உயிரை தரமாட்டேன், நீயும் அப்படித்தான்னு எனக்குத் தெரியும், இதுதான் காதல், இதை புரிஞ்சிக்க நமக்கு இப்படியொரு சம்பவம் நடக்கனும்னு இருக்கு போல”
”சரியா சொன்ன கமலி இப்ப நாம என்ன செய்றது”
”ஒண்ணுமில்லை குணா கண்மணி கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வைக்கறோம், அவங்க கல்யாணத்துக்கு நாம சாட்சி கையெழுத்து போடறோம் சரியா”
”சரி கண்மணியோட அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டேன், அதனால அவங்க கண்மணிக்கு சாட்சி கையெழுத்து போடட்டும், நாம ரெண்டு பேரும் குணாவுக்கு சாட்சி கையெழுத்து போடலாம்” என சொல்ல அந்த இடமே இயல்புக்கு வந்தது.
அப்போதும் குணா கண்மணியிடம் செல்லவில்லை, கோபமாக இருந்தான், கண்மணியும் குணாவிடம் செல்லவில்லை, குற்ற உணர்ச்சியில் இருந்தாள், அவர்கள் தனித்தனியாக இருப்பதைக்கண்ட கமலியும் கவினும் குழம்பினார்கள்
”என்னாச்சி இவங்களுக்கு”
”தெரியலையே வா கேட்போம்” என்றதும் கண்மணியிடம் சென்றாள் கமலி. குணாவிடம் சென்றான் கவின்
”கண்மணி என்னாச்சி? ஏன் இப்பவும் அழற, நீ சந்தோஷமா இருக்க வேண்டிய தருணம் இது” என கமலி சொல்ல அதற்கு கண்மணியோ
”எப்படி நான் சந்தோஷப்படறது, குணாவோட மனசை நான் காயப்படுத்திட்டேன், திரும்பவும் அவன் முன்னாடி போய் நிக்க என்னால முடியாது“
”இதுக்காகவா நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டோம், இதப்பாரு இதுல உன் தப்பு எதுவும் இல்லை, கவின் மேலதான் தப்பு, குணாகிட்ட பேசிக்கலாம் நீ வா”
”இல்லை வேணாம் கமலி இது சரியா வராது, இந்த கல்யாணத்தை நிப்பாட்டிடலாம்” என சொல்ல அதிர்ந்தாள் கமலி.
மறுபக்கம் குணாவிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டான் கவின்
”நண்பா என்னை மன்னிச்சிடு நண்பா, நான் செய்தது தப்புதான், அதுக்கு என்ன தண்டனையோ அதை கொடு, நான் தாங்கிக்கறேன், இப்படி கண்மணி மேல கோபத்தை கொட்டாத, அவள் பாவம், அவளுக்கு ஒண்ணும் தெரியாது, எல்லா தப்பும் செய்தது நான்தான், அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டு அவளோட அப்பா அம்மாவை கிட்நாப் பண்ணி அதை வைச்சி அவளை மிரட்டினது நான்தான்
ஆனா கடைசிவரைக்கும் அவள் மாறலை, அவள் மனசுல நீதான் இருக்க, அதை நான் புரிஞ்சிக்கிட்டேன், அவளை கூட்டிட்டு வந்திருக்கேன், ப்ளீஸ் உன் கோபத்தை என் மேல காட்டு, அவள் மேல காட்டாத, அவளை கல்யாணம் செய்துக்க”
”வேணாம் கவின் இந்த கல்யாணத்தை நிப்பாட்டிடலாம்”
”ஏன் இப்படி சொல்ற குணா”
”ஆமாம் இந்த கல்யாணம் வேணாம்”
”புரியலை நான் செய்த தப்புக்கு அவளை ஏன் தண்டிக்கனும்”
“இல்லை வேணாம்”
”என்ன நீ வேணாம் வேணாம்ன்னு சொல்ற, இதப்பாரு அவள் மேல சந்தேகப்படாத என் நிழல் கூட அவள் மேல படலை நம்பு”
“சே சே நான் அப்படி நினைக்கலை ஆனாலும் இந்த கல்யாணம் வேணாம்“
”அய்யோ அப்படி சொல்லாத கண்மணி அழுவா”
”பரவாயில்லை அழட்டும்“
”என்ன சைக்கோ மாதிரி பேசற”
”ஆமாம் என்னை தூக்கி எறிஞ்சாள்ல, அப்புறம் நான் ஏன் அவள்கிட்ட போகனும் அவள் எனக்கு வேணாம்”
”முட்டாளா நீ, அவள் கழுத்தில தாலி கட்டியிருக்க, அதை மறந்துடாத”
”அது அவசரத்தில கட்டினது அதுக்கு எந்த அர்த்தமும் இல்லை”
”ஓ அர்த்தம் இல்லைன்னா அதை கழட்ட வேண்டியதுதானே இன்னும் ஏன் அதை விட்டு வைச்சிருக்க”
”அவ்ளோதானே சரி நானே அதை கழட்டிடறேன்” என சொல்லியவன் கண்மணியிடம் செல்ல அவளோ அதிர்ந்தாள்.
அவளது கழுத்தில் இருந்த தாலி மீது குணா கைவைத்த உடன் அவனை கட்டியணைத்துக் கொண்டு
”ஐ லவ் யூ குணா” என்றாள் கண்மணி. அதில் அவனது கோபம் போனது, அவளை அணைத்துக் கொண்டு
”ஐ லவ் யு கண்மணி” என்றான் கண்கள் கலங்கியபடியே
அதைக்கண்ட கவினும் கமலியும் புன்னகை பூத்தார்கள்.
சிறிது நேரம் கழித்து….
மாங்கல்யம் தந்துனானேனா என பாடல் ஒலிக்க குணா கண்மணியின் கழுத்தில் இரண்டாம் முறையாக தாலியை கட்டினான், அவளும் புன்னகையுடன் அவனை கணவனாக ஏற்றுக் கொண்டாள், அந்த திருமணத்திற்கு கவினும் கமலியும் சாட்சி கையெழுத்திட்டார்கள், கூடவே கண்மணியின் பெற்றோரும் சாட்சி கையெழுத்து இட்டார்கள், நல்லபடியாகவே அந்த கல்யாணம் நடந்து முடிந்தது, அதில் கவின் மற்றும் கமலியின் கண்கள் கலங்கி கண்ணீர் வர அதைக்கண்ட கண்மணியோ
”நீங்க இரண்டு பேரும் ஏன் அழறீங்க என்னாச்சி”
”இது ஆனந்தக்கண்ணீர்”
”என்னது ஆனந்தக்கண்ணீரா“
”ஆமாம் உங்களை சேர்த்து வைச்சதால நாங்க ரெண்டு பேரும் சந்தோஷப்படறோம்”
”இப்பவுமா நீங்க எங்களை காதலிக்கிறீங்க“
”சே சே இல்லை, இப்ப உங்க மேல எங்களுக்கு எந்த காதலும் இல்லை, மரியாதை மட்டும்தான் இருக்கு”
”அப்படியா“
”ஆமாம் காதலுக்காக நிறைய பேர் நிறைய தியாகம் செய்துட்டாங்க, நிறைய விசயங்களை செய்தாங்க, காதலை காப்பாத்திக்க உசுரை கூட விட்டிருக்காங்க, ஆனா உங்களை போல காதலிக்க யாராலும் முடியாது, ஏன் எங்களாலயும் முடியலையே, இனிமேல உங்களை யாராலயும் பிரிக்க முடியாது, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம், காதலிக்கலாம், இல்லையா புருஷன் பொண்டாட்டியா கூட வாழலாம், உங்க இஷ்டம்” என சொல்ல அதைக்கேட்டு குணா கலகலவென சிரித்தவன் கண்மணியின் பெற்றோரிடம்
”நாங்க இப்ப ஒரு வீட்ல தங்கியிருக்கோம், அங்க நீங்களும் கண்மணியோட தங்குங்க, நான் பழையபடியே லாட்ஜ்ல தங்கிக்கறேன், எங்க படிப்பு முடிஞ்சி நாங்க பெரியாளாகி வந்தபின்னாடியே கணவன் மனைவியா வாழறோம்”
”அப்ப அதுவரைக்கும் என்ன செய்யப் போறீங்க” என கமலி அதிர்ச்சியுடன் கேட்டாள்
”அதானே கஷ்டப்பட்டு உங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சது எதுக்காக இப்படி நீங்க தனித்தனியா வாழறதுக்காகவா” என கோபத்தில் கவின் பொங்க கண்மணியோ மென்மையாக சிரித்து
”தனித்தனியா வாழ்ந்தாலும் எங்களோட உறவுல மாற்றம் வராது, நாங்க ஒண்ணு சேர்றவரைக்கும் காதலிச்சிக்கிட்டே இருப்போம், இப்ப விட அதிகமா அளவுக்கதிகமா காதலிப்போம், எப்ப எங்க காதல் சலிச்சிப் போகுதோ அப்ப நாங்க ஒண்ணா சேர்ந்து கணவன் மனைவியா வாழ்வோம்”
”உங்க காதலாவது சலிச்சிப் போறதாவது, எது எப்படியோ நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எங்களுக்கு போதும், நாங்க கிளம்பறோம்”
”உங்களுக்கு எந்த கவலையும் இல்லையே”
”நிச்சயமா இல்லை இப்பதான் மனசு தெளிவா இருக்கு”
”அப்போ உங்க காதல்”
”அது காதலே இல்லை, உங்க காதலை பார்த்தபின்னாடிதான் உங்களை போல காதலிக்கனும்னு ஆசை வருது, எங்களுக்கு ஏத்த காதல் கிடைக்காமலா போகும், அப்ப பாருங்க, உங்களை போல சே சே, உங்களை விட அளவுக்கதிகமா நாங்க காதலிக்கப்போறோம், அதை பார்த்து நீங்க பொறாமைப்படத்தான் போறீங்க, நாங்க வரோம்” என கவினும் கமலியும் மாறி மாறி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட குணாவோ கண்மணியை அவளது பெற்றோரின் கையில் ஒப்படைத்து
”என் மனைவியை பத்திரமா பார்த்துக்குங்க, நான் பெரியாளாகி வந்து அவளை கூப்பிட்டுக்கிறேன், அதுவரைக்கும் உங்க பொண்ணை நான் காதலிக்க உங்க அனுமதி வேணும்” என சொல்ல அவர்களுக்கு சிரிப்பே வந்தது, அவன் கேட்ட அனுமதியை அவர்களும் தர அதில் அவனும் மனம் மகிழ்ந்து கண்மணியைப் பார்த்தான்
”கண்மணி” என சிரிப்புடன் அழைத்தான்.
”குணா”
”காதலிக்கலாமா”
”தாராளமா” என்றாள் புன்னகையுடன்.
-சுபம்-
…. தொடரும்
error: Content is protected !!