Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி♥️27

யாதுமாகி #27

 என்ன பதில் சொல்லாமல் நிற்கிற?தகித்தது அவன் குரல்.

 இல்ல.. எனக்கு பயமா இருக்கு! எச்சில் கூட்டி விழுங்கினாள்.

 என்ன பயம்? முறைப்பாய் கேட்டான்.



Advertisement

 இன்னும் எனக்கு இங்கே செட்டாகல… அதுக்குள்ள குழந்தை…

 உனக்கு என்னைக்குமே இங்கே செட்டாகாது அதுக்காக பிள்ளை பெத்துக்காம இருப்பியா?

 உங்களுக்கே தெரியுதே எனக்கு இங்கே செட்டாகாது. பொறுமை இழந்தவள் குதர்க்கமாய் பேசினாள்.

Advertisement

ஆக்ரோஷமாய் ஓங்கிய கையை சூழ்நிலை உணர்ந்து தாழ்த்திக் கொண்டான்.

Advertisement

ஏற்கனவே நான் இங்கே குதூகலமா குடும்பம் நடத்திட்டு இருக்கேன் இதுல குழந்தை ஒன்னு தான் குறைச்சல்.

 கோபமாய் அவள் கன்னத்தை பற்றினான்.

அவன் விரல்கள் கொடுத்த அழுத்தத்தில் அவள் வலி தாளாது முகம் சுழித்தாள்.

Advertisement

வயிற்றுப் பிள்ளைக்காரி என்ற உணர்வில் கையை விலக்கினான். ச்ச…அடக்க இயலாத ரௌத்திரத்துடன் முஷ்டியை மடக்கி தலையணையில் குத்தினான்.

இழுத்து பிடித்த பொறுமையுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் இங்கே என்னடி உனக்கு குறைச்சல்? என்றான்.

 கண்ணீருடன் நின்றவள் பதில் எதுவும் கூறவில்லை.

 நீ சமைக்க போறியா? சம்பாதிக்க போறியா? நாத்தனார்,கொழுந்தன் கூட்டாளின்னு பெரிய குடும்பத்தில் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படறியா?

 எங்க அம்மா தான் உன் பிள்ளைபேரை தள்ளிப்போட காரணமா?

 அவன் உறுமல் கண்டு அவள் மிரளவில்லை.

 அவளின் நிமிர்வான பார்வையில் சுர் என்று ஏறிய கோபத்தை கட்டுப்படுத்தி, தன்மையாய் அவள் கரம் பற்றினான்.

நேத்ரா இங்கே பாரு! நீ ஏன் மனசை போட்டு குழப்பிக்கிற… பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. சில பிரச்சினை மழையில் காளான் முளைக்கிற மாதிரி வந்ததும் தெரியாது போறதும் தெரியாது. அதையே தூக்கி சுமந்துகிட்டு இருந்தா என்னைக்குமே பிரச்சினை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது.

பிரச்சனை எல்லாம் தீர்ந்துதான் குழந்தை பெத்துக்கணும்னா இங்கே யாருமே பிள்ளை குட்டியோட வாழ முடியாதும்மா!சிறு குழந்தைக்கு மழலை மொழியில் போதிப்பது போல் பக்குவமாய் போதிக்கலானான்.

 எனக்கு மைண்ட் ரிலாக்ஸா இல்லை. நான் ஏற்கனவே கடுமையான மன அழுத்தத்தில் இருக்கேன்.

 என்னடி உனக்கு புடலங்காய் மன அழுத்தம்…வார்த்தைகளை கடித்து குதறினான்.

 எப்படி உங்களால இவ்வளவு ஈஸியா கேட்க முடியுது? ஆச்சரியமாய் பார்த்தாள்.

 நீ அடி வாங்க போற… என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.

அடிங்க யாரு வேண்டாம்னு தடுத்தது? ஏற்கனவே உங்கம்மா ஒரே மருமகள் செல்ல மருமகன்னு தலையில் வைச்சு கொண்டாடறாங்க…

இதுல பேரக்குழந்தை வரப்போகுதுனு தெரிந்தால் பூரிச்சு நிற்க போறாங்க.. அவள் வெடித்து சிதறினாள்.

ஏய்…அவங்களுக்காகவா நாம பிள்ளை பெத்துக்க போறோம்?

 நான் பிள்ளை பெத்துக்களைன்னு உங்க அம்மா அழுது வீங்கிட போறாங்களாக்கும்? சிலுப்பிக் கொண்டாள்.

 அவங்க வீங்கட்டும்,தூங்கட்டும் அதில் நமக்கென்ன பிரச்சனை? என் அம்மாவை விடு உன் அம்மா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க அதை யோசிக்க மாட்டியா நீ? சரியான பாயிண்டை பிடித்தான் வக்கீல்.

 இந்த நல்ல செய்தியை உங்க அம்மா கிட்ட சொல்லி பாரு, வானத்துக்கும் பூமிக்குமா துள்ளி குதிக்க மாட்டாங்க? புலம்பறவங்களை நினைச்சு வருத்தப்படுவதை விட வாழ்த்துறவங்களை நினைச்சு பெருமைப்படணும்!

உங்களுக்கு என்ன? எல்லாத்துக்கும் ஒரு பதில் பாக்கெட்டில் வச்சிருப்பீங்க.

 ஏற்கனவே உங்க அம்மாக்கு என்னை கண்டால் வேப்பங்காயா கசக்கும்,இப்போ கல்யாணம் ஆன கையோட நான் வாந்தி எடுத்தா உச்சி குளிர்ந்து போவாங்க.

இப்போ அது தான் உன் பிரச்னையா?

பிள்ளை பெத்துக்க நொண்டி சாக்கு சொல்றவ என்ன……க்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட?

அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 உனக்கு இப்போ தான் பதினாறா ?கல்யாணம் பண்ணி புருஷன் கூட குடும்பம் பண்ணினா குழந்தை வரும்னு தெரியாதா?

ச் சீ அசிங்கமா பேசாதீங்க! முகத்தை அஷ்ட கோணலாக்கினாள்.

எது அசிங்கமாவா? செம்ம ஜோக் பண்ற போ!

 சுத்தி சுத்தி வந்து லவ் பண்ணுவாளாம்,குதுகலமா கல்யாணம் பண்ணி கொஞ்சி குளவி குடும்பம் பண்ணுவாளாம், ஆனா குழந்தை மட்டும் பெத்துக்க கசக்குதா?

 நான் எந்த அர்த்தத்தில் சொல்றேன் நீங்க என்ன பேச்சு பேசுறீங்க?

 நீ ஒரு டேஷும் சொல்ல வேண்டாம், என் குழந்தையை பெத்து என் கையில் கொடுத்துட்டு நீ எங்க வேணாலும் போ,அது உன் இஷ்டம்!

 அவன் தீ ஜுவாலை பார்வையிலும் அக்கினி துண்டுகளாய் வந்து விழுந்த வார்த்தையிலும் அவள் கண்களில் மணிமுத்தாறாய் பெருக்கெடுத்தது கண்ணீர்.

பைத்தியக்காரி… எப்படி அழறா பாரு! கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்ச்சியை இவ்வளவு துக்கமா மாத்திக்கிட்டு இருக்கா கொள்ள போறேன் உன்னை… ஆவேசத்தை அடக்கிக் கொண்டு வெளியேறினான்

“———————”

 எதை எதையோ மனதில் போட்டு குழப்பிக் கொண்டு அழுது அரற்றி உறங்கிப் போனாள்.

இட்டலியும், வெங்காய சாம்பாரும் கொண்டு வந்து எழுப்பினான்.

 எனக்கு பசிக்கல..வெடுக்கென புரண்டு படுத்தாள்.

 ஏன்டி இப்படி படுத்தி எடுக்கிற? உன்னை என்ன பண்ணினா தகும்? வெத்து பொம்மனாட்டி மாதிரி இஷ்டத்துக்கு உருளுற, புரளுற… என்னை கொலைகாரன் ஆக்கிடுவ போலிருக்கு.

 அவள் வாயை திறக்கவே இல்லை.

என்னடா தம்பி திட்டிக்கிட்டு இருக்க.. உன் கோபம் எப்போதான் குறையும்? கல்யாணம் பண்ணுனா திருந்திடுவேன்னு பார்த்தேன் இன்னும் அதே ஆட்டம் தானா? அன்னம் வந்து பேரனை அதட்டினார்.

 சாப்பிட சொன்னா பசிக்கலைன்னு சொல்றா பாட்டி.

 அம்மாடி தங்கம் வயித்து பிள்ளைக்காரி பட்டினி கிடக்க கூடாது ராசாத்தி.அன்னம் வற்புறுத்தி இரண்டு இட்லி சாப்பிட வைத்தார்.

 கொண்டாடி மகிழ வேண்டிய தாய்மையை உணராமல் இவள் ஏன் இப்படி முறுக்கிக் கொண்டு திரிகிறாள்? மனம் கலங்கியவன் உறங்கும் செல்ல மனையாளுக்கு முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.

“—————-”

 நேத்ரா…என் தங்கமே, அம்மாக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியை சொல்லிட்ட! என் பட்டு… மகள் கன்னத்தை வழித்து முத்தமிட்டார் வேதம்.

 என்னம்மா காலையிலே வந்து நிற்கிற? ஆச்சரியமாய் கேட்டாள்.

 நீ உண்டாகி இருக்கிற சந்தோஷமான செய்தியை மாப்பிள்ளை சொன்னதும் எனக்கு தலைகால் புரியல! எப்போடா விடியும் என்று காத்துகிட்டு இருந்து ஓடி வந்துட்டேன். அவர் குரலில் சிறுபிள்ளைத்தனம் கூத்தாடியது.

 இதைத்தானே விஷ்ணு சொன்னான், மாமியாரை பற்றி யோசித்தோம் தன் தாயைப் பற்றி யோசிக்கவில்லையே…

எவ்வளவு புலகாங்கிதம் அடைகிறார். நேத்ரா அமைதியாய் தலைக்கவிழ..

இதற்கெல்லாம் பயப்படக்கூடாது தங்கம். அம்மா இருக்கேன்… அவளை அரவணைத்து தோளில் சாய்த்துக் கொண்டார்.

 அவள் கண்ணில் வழியும் நீரை துடைத்தவர்… இந்த மாதிரி நேரத்துல பயம், பதட்டம் வர்றதெல்லாம் சகஜம்தான்டா. மகளின் தலைவருடி ஆசையாய் முத்தமிட்டார்.

நேத்ரா ரொம்ப வருஷம் குழந்தை இல்லாம இருந்த எங்களுக்கு நீ பிறந்த… ஒரு குழந்தைக்காக நாங்க எவ்வளவு ஏங்கினோம், எத்தனை வருடம் காத்திருந்தோம் தெரியுமா? ஆனால் உன் விஷயத்தில் கடவுள் உடனே கருணை காட்டி இருக்கார்.

 உங்க அப்பா சந்தோஷத்துல குதிக்கிறார் தெரியுமா? மனுஷன் ராத்திரி எல்லாம் தூங்கவே இல்லை. சிங்கக்குட்டியா ஒரு பேரன் பிறக்கணுமாம்! நீ வரிசையாக பத்து பிள்ளை பெத்துக் கொடுத்தாலும் சந்தோஷமா அம்மா வளர்த்து கொடுப்பேன்டா…சிலாகித்து போனார்.

 தாயின் பாசத்தில் நெக்குறுகிப் போனாள்.

அத்தை நேத்ரா ஒரு வாரம் உங்க கூட இருக்கட்டும்! நீங்க வச்சு பார்த்துக்கோங்க.

 அடுத்த வாரம் வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் என்றான் விஷ்ணு.

 சரிங்க மாப்பிள்ளை… ரொம்ப சந்தோஷம்! அவங்க அப்பாவும் நேத்ராவை கையோடு கூட்டிட்டு வர சொன்னார், வேதம் முகத்தில் மந்தகாச புன்னகை.

நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்கிறாளா பாரு… உள்ளுக்குள் குமைந்தான்.

இந்த மாதிரி நேரத்தில் உன்னை அனுப்ப மாட்டேன் என் கண் பார்வையில் என் கூடவே இருன்னு சொன்னா எண்ணவாம்? இந்த ஆளுக்கு கர்வம் குறையவே குறையாது. மனதில் வறுத்துக் கொட்டினாள்.

“——————”

 தாய் தந்தை அன்பிலும், கவனிப்பிலும் உடலும் உள்ளமும் தெளிந்து பொலிவுடன் இருந்தாள் நேத்ரா.

 அம்மா வீட்டுக்கு போ என்று அனுப்பி விட்டானே தவிர அவன் சிந்தை எல்லாம் அவளிடத்தில் தான். சாப்பிட்டாளா? உறங்கினாளா?

 நாளைக்கு இரண்டு முறையாவது மாமியாருக்கு அழைத்து பேசி விடுவான்.

 சாப்பிட பிடிக்கலைன்னு சொல்லுவா அதுக்காக விட்டுடாதீங்க ப்ளீஸ். அடிக்கடி ஜூஸ் போட்டு கொடுங்க. வாமிட்டிங் இருந்தா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க.அவனே குழந்தையை தாங்குவது போல் அவ்வளவு அவஸ்தை கொண்டான்.

 மருமகனின் அக்கரையில் வேதத்திற்கு அவ்வளவு சந்தோஷம். இப்படியான குணமான மாப்பிள்ளைக்காக கொடுமைக்கார மாமியாரை அனுசரித்தாலும் தவறில்லை என்பது அவர் வாதம்.

 நல்ல நாள் பார்த்து விஷ்ணு வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் மருத்துவமனையில் சிறுநீரக பரிசோதனையோடு இரத்த பரிசோதனையும் செய்து கர்ப்பத்தை உறுதி செய்தனர்.

 ஹீமோகுளோபின் அளவு குறைவாய் இருக்கிறது. இப்படியே இருந்தால் ரத்தசோகை ஆகிவிடும் என்று எச்சரித்த மருத்துவர், போஷாக்கான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், மைண்ட் ரிலாக்ஸா இருக்கட்டும் இல்லை என்றால் BP எகிறிவிடும் என்றார்.

இரும்பு சத்து மாத்திரைகள், டானிக் எழுதி கொடுத்து நற்பத்தைந்தாவது நாள் ஸ்கேனுக்கு வரச் சொல்லி அனுப்பி வைத்தார்.

 மாப்பிள்ளை நேத்ரா கொஞ்சம் நாளைக்கு என் கூட இருக்கட்டுமே… வேதம் தயக்கமாய் கேட்டார்.

இல்லத்தை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ப்ளீஸ்.அங்கே பாட்டி இருக்காங்க,மங்களம்மா இருக்காங்க.நாங்களும் நல்லா பார்த்துப்போம். நீங்க அடிக்கடி வந்து உங்க பொண்ணை பார்த்துட்டு போங்க. திட்டவட்டமாய் கூறிவிட்டான்.

 இனி அவளைப் பிரிந்து அவனால் இருக்க முடியாது.இந்த ஒரு வாரம் அவன் பட்ட பாடு அவன் தானே அறிவான்.

 நேத்ராவிற்கும் விஷ்ணுவின் சொல் கேட்டு மனம் நிம்மதி அடைந்தது.அவன் அருகாமைக்கு ஏங்கி இரவெல்லாம் அழுதது அவள் தலையணைக்கு மட்டும் தானே தெரியும்!

“—————-”

 வடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இரண்டு கிலோ மில்க் ஸ்வீட் வாங்கிக் கொண்டான்.

 வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த வேணுவிடம் ஸ்வீட் பாக்ஸை நீட்டினான்.

 என்ன விஷ்ணு பெரிய கேஸ் ஏதாவது சக்சஸ் பண்ணிட்டியா? ஆர்வமாய் கேட்டபடி இனிப்பை எடுத்துக் கொண்டார்.

 அப்பா அதை எல்லாம் விட பெரிய ஹாப்பி நியூஸ்.

 அவருக்கு ஓரளவு புரிந்து போனது முகம் விகசிக்க மகனை ஆர்வமாய் பார்த்தார்.

அப்பா நீங்க தாத்தாவா ப்ரொமோட் ஆகிட்டீங்க.அவர் வாயில் இனிப்பு வைத்து திணித்தான்.

 அப்படியா?சந்தோஷம்பா முகம் கொள்ளாப் புன்னகையுடன் மருமகளை பார்த்தார். தன் குலம் தழைக்கப் போகிறது என்ற பூரிப்பு அவருக்கு.

பிள்ளை உண்டாயிருக்காளா? பாகற்காய் ஜூஸ் குடித்தது போல் இருந்தது ஜோதியின் முகம்.

————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!