Skip to content
Post Views: 8,807
“குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்
மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.”
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கண்களுக்கு குளிர்ச்சி தரும் ஊரான பொள்ளாச்சியின் அந்த இனிய காலைப் பொழுது மனிதர்களின் ரசனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று நிச்சயமாய்.
‘பொருள் ஆட்சி’, ‘பொழில்வாய்ச்சி’ என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது.
Advertisement
இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய நகராட்சி இது. தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பல பேரின் சொந்த ஊர் என்றும் கூறலாம்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பொள்ளாச்சியின் அந்த ரம்மியமான காலை அந்த அரண்மனை போன்ற வீட்டிற்கு இன்னும் ரம்மியத்தைக் கொடுத்தது.
ஊத்துக்குளி சமீன் அரண்மனையை ஒத்த அந்த பெரிய வீடு அக்கால ரசனைகளின் உச்சம் என்று தான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
Advertisement
ANA Mills என்றால் தெரியாதவர்கள் கோயம்பத்தூரிலும் தொழில் வட்டத்திலும் யாருமில்லை எனுமளவிற்கான சாம்ராஜ்ஜியம் அவர்களுடையது.
Advertisement
துணி உற்பத்தி தான் ஆரம்பகாலத் தொழிலாக அவினாசிலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் இன்றோ அது மட்டுமின்றி சர்க்கரை ஆலை இன்ஜினியரிங் காலேஜ் என இந்திய அளவில் டாப் 100க்குள் இருக்கும் ஸ்தாபனம் அவர்களுடையது.
அவினாசிலிங்கத்தின் மகன் நஞ்சுண்டான் தான் இந்த சாம்ராஜ்ஜியத்திற்கு வித்திட்டவர் அதீத உழைப்பும் நேர்மையும் அவரின் அத்தனை கனவுகளையும் நனவாக்கி கொடுத்திருந்தது.
Advertisement
அவருக்கு பக்க பலமாய் இருந்தவர் அவரின் மனைவி காத்யாயினி. இருவருமே ராஜ களை என்பதற்கு மிகப் பொருத்தமானவர்கள்.
இவர்களுக்கு நான்கு மகவுகள் முதலில் மகன் அதிரன் அடுத்ததாய் கயல்விழி காயத்ரி சாருகேஷ்.
தற்போதைய அத்தனை பொறுப்புகளையும் சுமந்திருப்பவன் அதிரன் தான். நஞ்சுண்டானின் திடீர் மறைவு குடும்பத்திற்கே பேரிடியாய் இருந்தது.
காத்யாயினியோ கணவனின் பிரிவில் வாடித் தவிக்க மகள்கள் 23,21 வயதுகளிலும் சிறியவன் பள்ளி இறுதி வருடமும் படித்துக் கொண்டிருந்தான்.
அதிரன் 27 வயது இளைஞனாய் தனது சொந்த தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்த நேரம்.
ஒரே நாளில் மொத்தப் பொறுப்புகளும் அவனிடத்தில் வந்திருக்க அனைவரையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தவனுக்கு தந்தையின் பிரிவிற்கான துக்கத்தை முழுதாய் அனுசரிக்க கூட நேரமில்லை என்று சொன்னால் மிகையில்லை.
சாதாரணமாகவே அமைதியானவன் அதன்பின் இன்னுமாய் தன் கூட்டிற்குள் அடைந்து கொண்டான்.
தொழிலில் கீழிறங்கி விடாமல் பார்த்துக் கொண்ட அதே நேரம் அவனது கனவான பொறியல் கல்லூரியையும் திறந்திருந்தான்.
இந்த ஐந்து வருடங்களில் தந்தையை மிஞ்சிய அளவில் தொழிலில் முனைப்பாக இருந்து குடும்பத்தின் பெயரை நிலை நாட்டியிருந்தான்.
இன்றைய நிலையில் ANA Mills & நஞ்சுண்டான் குடும்பத்திற்கு அஸ்திவாரம் அதிரன் நஞ்சுண்டான் தான். வெகு நேர்த்தியானவன் யாரையும் பார்வையாலேயே இரண்டு அடி தள்ளி நிறுத்துபவன்.
வயதில் சிறியவன் என்ற எண்ணத்தோடு தொழிலில் யாரும் எந்த சலுகைகளையும் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்ள அது பெரும் உதவியாய் இருந்தது.
வீட்டிலும் நாட்போக்கில் அவனது குணம் அப்படியே ஆகிவிட்டிருந்தது.
தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இரு தங்கைகளுக்கும் ஊர் மெச்சும் அளவில் திருமணத்தை முடித்திருந்தான்.
இவர்கள் அளவிற்கு வசதியான குடும்பம் இல்லையெனினும் நல்ல மாப்பிள்ளைகள் கிடைத்தால் போதும் என்ற காத்யாயினியின் முடிவு அவனுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை எனினும் மறுத்து பேசாமல் சம்மந்தம் பேசியிருந்தான்.
காத்யாயினியுமே இதற்கு சம்மதித்தற்கு ஒரு காரணம் அண்ணன் தம்பிகளையே இரு பெண்களுக்கும் பேசி முடித்திருந்தது தான்.
பெரியவள் திருமணம் முடிந்து ஒன்றரை வருடத்தில் இரண்டாவது மகளின் திருமணம் மூத்த மருமகனின் தம்பியோடே நடந்து முடிந்திருந்தது.
இற்கிடையில் காத்யாயினிக்கு கால் பக்கவாதம் வந்து அவரது வாழ்வு நான்கு சக்கர நாற்காலியில் என்றாகியிருந்தது.
காலை உணவிற்காக காத்யாயினியை கவனித்துக் கொள்ளும் செவிலியர் அவரை உணவு மேசையில் அமர்த்த சாருகேஷ் கல்லூரி பையோடு வந்திருந்தான்.
மருத்துவத்தில் இறுதி வருடத்தில் இருக்கும் மகனைப் பார்த்து புன்னகைத்தவராய் கையசைத்தார்.
“ஹாய் ம்மா.. குட் மார்னிங்.”, என்ற நேரம் படிகளில் அண்ணன் வரும் அரவம் கேட்டு தலையை திருப்பியிருந்தான்.
அதிரனின் மிகப் பெரும் விசிறி என்றால் அது சாருகேஷ் தான்.
அவனது நடை உடை பாவனை என அனைத்தையும் அப்படியாய் ரசிப்பவன்.
இப்போதும் அந்த அடர் பழுப்பு நிற முழுக்கை சட்டையும் பீஜ் நிற பேண்ட்டும் அணிந்த வண்ணம் ஆறடி உயரத்தில் அருமையான உடற்கட்டோடு திருத்தமான முடியும் கிளீன் ஷேவ் முகமுமாய் வந்தவனை இமைக்காமல் பார்த்திருந்தான்.
“மார்னிங் டா. குட் மார்னிங் மா..”
“வா அதிரா.”
“மார்னிங் ண்ணா..”
அவ்வளவு தான் அதன் பின் அவன் போக்கில் உணவை உண்ணத் தொடங்க தாயும் இளைய மகனும் கதை பேசிய படி உணவு உண்டனர்.
“அதிரா கயலும் காயூவும் சாயிந்திரம் வரேன்னு சொல்லிருக்காங்க பா.”
“என்ன ம்மா சும்மா தானா?”
“அவங்க நாத்தனார் கல்யாணத்துக்கு அழைக்க வராங்க ப்பா..”
“ஓ நான் இருக்கணுமா என்ன?”
“மாப்பிள்ளைகளும் வராங்க அதோட சம்மந்தியும்..”
“சரி ம்மா.. நான் ப்ளான் பண்ணிக்குறேன்.”, என்றவன் உணவை முடித்து எழுந்து சென்று விட்டான்.
“ம்மா அந்த பொண்ணை தான அண்ணாக்கு முடிக்கலாமானு கேட்டாங்க?”
“ம்ம் ஆனால் இனி இதெல்லாம் பேசாத கண்ணா..”
“தெரிஞ்சுக்க கேட்டேன் மா. அண்ணாக்கு ஜோடியா வர்றதுக்கு எல்லாம் நிறைய க்வாலிபிகேஷன் வேணும்.”, என்றதில் காத்யாயினி சிரித்தார்.
“அப்படி என்ன வேணும்?”
“நம்ம எல்லாரையும் பார்த்துக்குற அண்ணாவையே பார்த்துக்க போறது அவருக்கு வைஃப்பா வரப் போறவங்க.
அப்போ அவங்களுக்கு நிறைய நிறைய அன்பு இருக்கணும். அண்ணா அவரோட ஹோம்னு பீல் பண்ணணும்.”
“உன் அண்ணன் அதெல்லாம் பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை.”
“மாம்?!”
“என்ன டா உண்மையை தானே சொல்றேன். அவனுக்கு கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை. எப்போ பேச்செடுத்தாலும் நோ தான் சொல்றான். அவன் ஒத்துக்கவேயில்லையே.”
“வெயிட் மா அதெல்லாம் ஒரு ஸ்பார்க் வரும் திடீர்னு.”
“என்னது லவ்வா? என்ன டா அண்ணாக்குனு சொல்லி உனக்காக எதுவும் பேசுறியா?”
“நஞ்சுண்டான் வைஃப்னு ப்ருவ் பண்ணாதீங்க மாம்.. நான் பொதுவா தான் சொன்னேன்.”, என்றதில் சிரித்தார்.
அதிரன் வெளியே கிளம்பியிருக்க சாருகேஷ் தனது காரில் கல்லூரிக்கு கிளம்பியிருந்தான்.
அந்த கல்லூரியும் ANA குழுமத்தில் வெகு விரைவில் இணைவதற்கான சாத்திய கூறுகள் இருந்தன.
கல்லூரி இறுதி வருடத்திற்கே உண்டான துள்ளலும் கலாட்டாக்களும் என வகுப்பறையை நிறைத்திருந்தன.
“ஏனுங் எப்படி இருக்காருங்?”
“யாரு டி?”
“அதாங் உன்ற அண்ணன். என்ற வருங்காலம்.”
“அடிங் உன்னை கொன்னுருவேன். இப்படி பேசாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.”
“அடப் போடா சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டாங்கிற மாதிரி அவரு கூட ஓகே சொல்லிருவார் போல. நீ என்ன டா இப்படி கத்துற..”
“விளையாட்டா இருந்தாலும் வேண்டாம் எனக்கு பிடிக்கலை அவ்வளவு தான்.” என்ற சாருகேஷ் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவன் காதலி ஐஷு அவனது தலையில் லேசாய் தட்டினாள்.
“என்ன டா உன் பிரச்சனை. அவ ஏதோ விளையாட்டுக்கு பேசினதை போய்..”
“விளையாட்டு வேற குடும்பம் வேற ஐஷு. எனக்கு பிடிக்கலை விடேன்.”
“சரி டா டென்ஷன் ஆகாத..”, என்ற நேரம் வகுப்பிற்கு ஆசிரியரும் வந்திருக்க அவர்களின் பேச்சு அத்தோடு முடிந்திருந்தது.
இடைவேளையில் வெளியே வந்தவன் மரத்தடியில் அமர்ந்திருக்க மரத்திற்கு பின்னால் இரண்டு பேரின் வாக்குவாதம் மெல்லிய குரலில் எனினும் அவனுக்கு நன்றாகக் கேட்டது.
“மேம் இந்த ஒரு தடவை..”
“முடியாது சார். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. வேலை செய்யுற இடத்துக்கு குடிச்சுட்டு வந்தவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க.”
“மேம் அவருக்கு கொஞ்சம் பர்சனல்..”
“இங்கே பாருங்க சார் யாரோட பர்சனலும் இங்கே நல்லா இல்லை தான். அதுக்காக இப்படி பண்ணிட்டு வர முடியுமா?
என்னால இதை அனுமதிக்க முடியாது. முதல் தடவைக்கான மெமோ கண்டிப்பா அவருக்கு வரும். அதுக்கு அப்பறமும் இது தொடர்ந்தா கண்டிப்பா வேலை போகவும் வாய்ப்பிருக்கு பார்த்துக்கோங்க.”
இந்த உரையாடலைக் கேட்ட படி அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்த ஐஸ்வர்யாவும் எட்டிப் பார்த்து விட்டு அவன்புறம் திரும்பினாள்.
“என்ன அத்தாரிட்டிவ் வாய்ஸ் பார்த்தியா. இப்படி இருக்கணும் எனக்கு அண்ணியா வரப் போவங்க..”
“ஆனாலும் உன்னை கூட வைச்சுட்டு உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ண மாதிரி தான் போ..”, என்றதில் அவளின் கழுத்தை நெறித்தான் சாருகேஷ்.
அங்கு தனது ஏழு மாடி கொண்ட அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த அதிரன் தனக்கு வணக்கம் வைத்தவர்களுக்கு எல்லாம் தலையசைத்து தனது இடத்திற்குச் சென்று அமர்ந்து கணினியை உயிர்பித்தான்.
அவனது பிஏ வசந்த் வந்து அன்றைய திட்டங்களைக் கூற மாலைக்கு மேல் எந்த வேலையும் வேண்டாம் என்று கூறிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்.
முக்கியமான இமெயில்களை பார்த்து பதிலளித்து விட்டு கிளம்பியவன் துணிகள் பேக்டரிக்கும் சர்க்கரை ஆலைக்கும் சென்று எப்போதும் போல் மேற்பார்வையிட்டான்.
“வசந்த் அந்த மெடிக்கல் காலேஜ் ஓனரோட மீட்டிங் என்னாச்சு?”
“சார் இரண்டு நாள் டைம் கேட்டுருகாருங். நான் பார்த்து பிக்ஸ் பண்டுறேன் சார்.”
“அப்பறம் இன்ஜினிரிங் காலேஜ் டேக்கு மினிஸ்ட்டரோட சேர்த்து பெண்கள் சார்பா யாரையாவது கெஸ்ட்டா இன்வைட் பண்ணு.
யாருனு முடிவு பண்ணிட்டு ப்ரொஃபைல் எனக்கு பார்வேட் பண்ணு.”
“ஷுவர் சார்.”, என்றவனோடு நடந்தவனின் பாதையை மறித்த வண்ணம் ஒருவன் வந்து நிற்க வசந்த் கை நீட்டி அவனை நகர விடாதவாறு தடை செய்தான்.
“என்ன முதலாளி ஐயா நலமா?”
“யூனியன் லீடர் தானே நீ?”
“பரவால்லையே என்னை கூட தெரிஞ்சுருக்கு.”
“என்ன விஷயம்?”
“வேற என்ன எல்லாம் எங்க சம்பளத்தைப் பத்தி தான்.”
“அதைப் பத்தி என்ன?”
“சம்பள உயர்வு வேணும்.”
“ANA க்ரூப்பில் தர்ற சம்பளத்தோட அளவு எவ்வளவு சரியா இருக்கும்னு எல்லாருக்குமே தெரியும்.”, என்றவன் தனது இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டுக் கொண்டு முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நிற்க வசந்த்க்கோ உள்ளுக்குள் சற்று படபடத்தது.
முதலாளியின் கோபத்தை அவனது உடல்மொழியிலேயே அறிந்திருந்தவன் அந்த யூனியன் லீடரை கொலைவெறியோடு பார்த்திருந்தான்.
error: Content is protected !!