Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாரோ யாரோடி!!

யாரோ யாரோடி

ஊருக்கு போக தனது ஆடைகளை சூட்கேஸில் அடுக்கிக்கொண்டிருந்த மித்ரா அருகில் நிழலாடவும்



Advertisement

“என்னப்பா..” என்றாள் திரும்பிப்பாராமலேயே..

“மித்திம்மா கிளம்பிட்டியா..” என்று அவளது தந்தை தர்மராஜாவின் குரல் தயக்கத்துடன் ஒலித்தது..

இந்தக்குரல் அவளுக்கு மிகவும் பரிட்சயமானதே.. மித்ராவுக்கு விருப்பமில்லாத விஷயத்தைப் பேசுவதற்குமுன் அவளை ஆழம் பார்க்கும் குரல்..

Advertisement

“என்ன விஷயம் பா..” என்றாள் அவள், அப்பாவைத் திரும்பி நேராகப்பார்த்து.

Advertisement

“மித்திமா.. அது வந்து..” என்று அவர் மேலும் தயங்கவும் அவளுக்குப்புரிந்தது..

“என்னப்பா என்னோட கல்யாண விஷயமா…?” என்றாள் அலுப்போடு..

“அப்பா.. நான் எவ்ளோவாட்டி சொல்றது எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு..”

Advertisement

“இதையேதான் நீ நாலு வருஷமா சொல்லிட்டு இருக்க..உன்னோட படிச்ச புள்ளைங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ள குட்டின்னு சந்தோஷமா இருக்காங்க..” என்று குறைபட்டபடியே வந்து சேர்ந்தார் அவளின் அம்மா ஆதிலட்சுமி.

மித்ரா, தர்மராஜா-ஆதிலட்சுமி தம்பதியினரின் ஏக புதல்வி..நல்ல அழகு, பெரிய ஐடி கம்பெனியில் ஆறு இலக்க சம்பளத்தில் வேலை என்று எந்தக்குறையும் இல்லை, ஆனால் அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப்பார்த்துவிட வேண்டும் என்ற அவளது பெற்றோரின் ஆசை மட்டும் நிறைவேற வழியின்றி முட்டுக்கட்டைப் போட்டுக்கொண்டே இருந்தாள்.

“அதுக்காக முன்ன பின்ன தெரியாத யாரையோ எப்படிமா கட்டிக்கறது.. நான்லாம் லவ் மேரேஜ்தான் பண்ணிக்குவேன்..” என்றாள் துடுக்காக.

“எங்க காலத்துல எல்லாம் எங்க அப்பாரு முன்னாடி இப்படி பேசியிருந்தா காலை ஒடைச்சி மூலையில உக்காரா வச்சிருப்பாங்க.. நீ என்னடான்னா உங்க அப்பா முன்னாடியே இப்படி வாயாடுற.. கலிகாலம்..” என்று வியந்தார் ஆதிலட்சுமி.

“நீ சும்மா இரு ஆதி.இங்க  பாரு கண்ணு..ஒரு நல்ல இடம் வந்திருக்கு..” என்று அவர் சீரியஸாக ஆரம்பிக்கவும்

“கிரயம் பண்ணவாப்பா..” என்று பதவிசாக கேட்டாள்.

ஒரு கணம் புரியாமல் விழித்தவர் சட்டென்று சிரித்துவிட்டார்.. அவர் செய்வது ரியல் எஸ்டேட் தொழில் என்பது கூடுதல்  தகவல்.

“விளையாடாத பாப்பா.. இது நிஜமாவே நல்ல வரன்,பையனோட படிப்பு,   வேலை,அவங்க குடும்பம் எல்லாம் நமக்கு ஒத்துபோறமாதிரி இருக்கு.. பையனும் பாக்க ரொம்ப நல்லா இருக்காரு மா.. இப்படி ஒரு நல்ல இடத்த மிஸ் பண்ணிடக்கூடாதும்மா..” என்று எப்படியாவது அவளை சம்மதிக்கவைத்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்றார்.

“எல்லாம் சரிப்பா..ஆனா  ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் பார்த்து ஒருத்தரை காலம் முழுக்க கூடவர்றவரா எப்படிப்பா முடிவு  பண்ணமுடியும்?” என்று தன் எதிர்ப்பை பதிவு செய்தாள்.

“அப்போ நீ யாரையாவது மனசுல வச்சிட்டு இருக்கியா.. அதனாலதான் வர்ற வரனை எல்லாம் தட்டிக்கழிக்கிறியாடி..?” என்று குறுக்கே பாய்ந்தார் ஆதிலட்சுமி

“ஐயோ அம்மா .. அப்படி யாரையும் நான் இன்னும் மீட் பண்ணலம்மா..”

“என்ன பாப்பா.. நீயும் யாரையும் பாக்கமாட்ட.. நாங்க பாக்குற மாப்பிளையையும் ஒத்துக்க மாட்டேன்னா இதுக்கு என்ன தான் வழி..?”

“ஆமா நீயும் ஒன்னும் சின்னபொண்ணு இல்லை 27 வயசு முடியப்போகுது..30 வயசாகிட்டா அப்புறம் எந்த மாப்பிளையும் வரமாட்டான்..” என்று படபடத்த அம்மாவிடம் “எவனும் வர வேணாம்” என்று எதிர்த்து வாதாட வாய்திறந்தவள்  தன் தந்தையின் கவலை தோய்ந்தமுகத்தை பார்த்து மனம் இளகினாள். தன்மேல் உயிரையே வைத்திருக்கும் தந்தைக்காக..எதையும் விட்டுக்கொடுக்கும் பெற்றவருக்காக இந்த ஒருவிஷயத்தை விட்டுகொடுக்க முடிவெடுத்தாள்

“சரி பா.. உங்களுக்காக ஒத்துக்கறேன்.. அந்த பையன வர சொல்லுங்க.. ஆனா இந்த பொண்ணுபாக்குறது, காஃபி குடுக்கறது..விழுந்து கும்பிடுறது இதெல்லாம் நான் பண்ண மாட்டேன்.. காஃபி ஷாப் மாதிரி ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல மீட் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க..நான் பேசிப்பார்த்துட்டு எனக்கு பிடிச்சிருந்தா மேல பேசலாம்.. ஆனா எனக்கு பிடிக்கலைன்னா அவ்ளோதான்..அதோட விட்டுடனும், இனிமே என்னை தொந்தரவு பண்ணக்கூடாது..” என்று கராராக கூறினாள்.

அதுவரை கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மகள்,மாப்பிள்ளையை பார்க்க சம்மதித்ததே அவருக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது..

“இது போதும்மா நான் ஏற்பாடு பண்றேன்..”

“ஆனா ஒன்னு.. இதெல்லாம் நான் ஊருக்குப் போயிட்டு வந்த பின்னாடிதான் சரியா..?” என்று சேர்த்துக்கூறினாள்.

“டபுள் ஓகே மா.. நீ பத்திரமா போயிட்டு வா..” என்றார் குழந்தைப்போல் குதூகலத்துடன்.

அப்பாவின் உற்சாகத்தைப்பார்த்து சிரித்துக்கொண்டே கிளம்பினாள் அவளது புத்தம்புதிய ஹோண்டா காரில்,அவளே சம்பாதித்து வாங்கியது அதுவும் அவளது ஃபேவரிட் ரெட் கலரில்.. அதை ஓட்டும் போதுதான் தன் சுதந்திரத்தை முழுமையாக உணருவாள்.

யாருடைய உதவியும் இல்லாமல் தன் சொந்தக்காலில் நின்று யாரையும் எதிர்பார்க்காமல் தான் நினைத்த இடத்திற்கு போகமுடிவதே தனி சுகம்தான். அந்த சுதந்திரத்தையும் அது தரும் நம்பிக்கையையும் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினாள் மித்ரா.

 அவளைப்போல ஒரு சின்ன கிராமத்திலிருந்து வந்த பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவள் மித்ரா.

அவளது சொந்தபந்தத்தில் அவளது அம்மாவின் தலைமுறைவரை வீட்டைவிட்டு பெண்களை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பியது இல்லை. குடும்பத்தொழில் இருந்தால் பார்ப்பார்கள், இல்லையென்றால் வீட்டைப் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்துவிடுவார்கள். அதிகபட்சம் உள்ளூரிலேயே டீச்சர் வேலைக்கு அனுப்பினர்.

ஆனால் அவர்களது சொந்தத்தில் படித்துவிட்டு முதன் முதலில் வெளியூருக்குச் சென்று பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியத்தொடங்கிய பெண் அவள்தான். அவளைப் பார்த்துதான் உறவில் மற்ற பெண்களும் வெளியூர்களுக்கு வெளி நாடுகளுக்கு என்று வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர். பெற்றோர்களும் இவள் ஜெயித்த தையிரியத்தில் தங்கள் பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து துணிந்து வேலைக்கு அனுப்பினர்.  எல்லாவற்றிக்கும் ஆரம்பப்புள்ளி மித்ராதான்.

அதனாலேயே அவளுக்கு உறவினர்களிடம் குறிப்பாக இளம்பெண்களிடம் தனி மதிப்பு உண்டு.

சென்னையில்  அவள் தனியாக தங்கி வேலை பார்ப்பது,பெரிய பதவி, நிறைய சம்பளம், தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு ஊருக்கு வருவது என்று எல்லாமே இளம்தலைமுறைக்கு முன்னுதாராணமாக இருந்தது. அவளது கல்யாண தாமதத்தை தவிர..

“இப்படி பொம்பள புள்ளைய சுதந்திரமா விட்டா அவ இஷ்டத்துக்குத்தான் நடந்துக்குவா..

நம்ம தர்மாவ பாரு பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சி, வெளியூருல வேலை பாக்குறான்னு பகுமானமா திரிஞ்சானே.. இப்ப என்னாச்சி.. அந்த புள்ள கல்யாணமே வேண்டான்னுட்டு திரியுது.. இவன் பேச்சு எடுபட்டுச்சா..?இதுக்குத்தான் பொண்ணுங்கள நம்ம கட்டுப்பாட்டுல வச்சிக்கணும்..இப்படி அவங்க தாளத்துக்கு நாம ஆடக்கூடாது..”

என்று சில வேலையத்த பெருசுங்க இவர்கள் காதுபடவே  கிசுகிசுக்கத் தொடங்கியிருந்தனர்.

“என்னோட கல்யாணத்துல என்னைத்தவிர மற்ற எல்லாருக்கும் சொல்றதுக்கு கருத்து இருக்கு போல..” என்று நினைத்துக்கொண்டாலும் மாற்றத்தை ஏற்படுத்திய தானே இந்த விஷயத்தில் அதை கெடுத்துவிடக்கூடாது  என்று நினைத்துதான் அவள் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாள்.

இப்போது கொடைக்கானலில் அவள் உடன் பணிபுரியும் நெருங்கிய தோழி வெண்பாவின் வீட்டிற்குதான் இரண்டு நாள் விடுமுறையைக் கழிக்க சென்றுகொண்டிருந்தாள்.

கார் நெடுஞ்சாலையை அடைந்ததும் தன் தோழிக்கு அழைத்து இவள் கிளம்பிவிட்டதை சொல்லிவிட்டு ரேடியோவில் அனிருத் பாடலை அதிர விட்டாள்.

ஈ-பாஸ் காட்டிவிட்டு கொடைக்கானல் மலை ஏறத்தொடங்கியதும் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு மலை இளவரசியின் அழகை ரசித்துக்கொண்டே வந்தாள்.

ஒரு குறுகலான வளைவில் திரும்பும் போது எதிர்திசையில் வந்த பெரிய ஆம்னிபஸ் ஹாரன் தராமல் திடீரென எதிரில் வந்துவிட சட்டென்று சுதாரித்த மித்ரா சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்.அந்த பஸ்காரன் எதையும் கண்டுக்கொள்ளாமல் இவளைக் கடந்து சென்றுவிட்டான்.

ஒரு வினாடி இடைவெளியில் டம்மென்ற சத்தத்துடன் வேறு ஒரு வாகனம் பின்புறத்திலிருந்து வந்து மோத, அந்த வேகத்தில் இவள் வண்டி சற்று இடமுறமாக நகர்ந்துவிட இவளுக்கு உயிர் ஒரு கணம் நின்றுவிட்டது. இன்னும் கொஞ்சம் நகர்ந்திருந்தால் கார் பள்ளத்தில் உருண்டிருக்கும், அப்புறம் இவள் எலும்புகூட மிஞ்சியிருக்காது.

ஒரு கணம் திகில் நிறைந்திருந்த மனதில் மறுகணம் ஆத்திரம் குடிகொண்டது.

கோபமாக காரைவிட்டு இறங்கினாள்..அவளது காரைப் பின்னாலிருந்து மோதியது ஒரு இன்னோவா கார்.. கார் மோதிய இடத்தில் இவளது  ஆசைக்காரின் பின்புற பம்பர் நொறுங்கியிருந்தது.

‘புது கார் இப்படி வந்து இடிச்சிட்டானே எருமைமாடு… இந்த காஸ்ட்லி காரைப் பழுதுபார்க்க  எவ்வளவு  செலவாகுமோ’ என்று நினைத்தவளுக்கு மேலும் கோபம் உச்சிக்கு ஏறியது..

அதற்குள் அவளை இடித்த காரிலிருந்து ஆஜானுபாகுவாக ஐந்தாறு ஆண்கள் இறங்கவும் அவளுக்கு ஒருகணம் திக்கென்றது. ஆனால் நொடியில் அந்த பயத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு..

“கொஞ்சமாவது அறிவிருக்கா இப்படியாவந்து இடிப்பீங்க.? இங்க யாருயா வண்டிய ஓட்டுனது..?” என்று கோபமாக கத்தினாள்..

“நான் தான் மேடம்..” என்று ஒருவன் முன்னால் வந்தான்.. பார்ப்பதற்கு டீசண்ட்டாகத்தான் இருந்தான் ஆனால் டிரைவிங் சென்ஸ் சுத்தமாக இல்லையே..

மித்ராவுக்கு நன்றாகத் தெரியும் இந்த விபத்துக்கு அவள் காரணமில்லை என்று. என்னதான் அவள் சடன் ப்ரேக் போட்டிருந்தாலும் பின்னால் வரும் வாகனம் போதிய இடைவெளியில் வந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது..

‘வால் பிடிச்சமாதிரி வந்து இடிச்சிருக்கான்..’

என்று எரிச்சல் ஆனவள்.

அவனை திட்டத் தொடங்கும்முன் அந்த டிரைவர் முந்திக்கொண்டு..

“சாரி மேடம் என்மேல தான் தப்பு…உங்களுக்கு எதுவும் அடிபடலையே..?” என்று அக்கறையாக விசாரிக்க.

இவள்தான் ஒரு கணம் திணறிப்போனாள்.. இப்படி காலிலே விழிந்துவிட்டவனிடம் எப்படி கோபத்தைக்காட்டுவது..?

இருந்தாலும் சற்றுமுன் மரணத்தின் வாயில் வரை சென்று வந்தது நினைவிற்கு வர கோபம் மீண்டும் பொங்கியது..

சந்தோஷமாக வெகேஷன் வந்தால் அதை இப்படி கெடுத்துவிட்டானே..

“அடி பட்டுச்சா..?அங்க பாத்தியா எவ்ளோ பெரிய பள்ளம் இன்னும் கொஞ்சம் வேகமா இடிச்சிருந்தா நான் பரலோகம் போயிருப்பேன்.. நீ மர்டர் கேசுல உள்ள போயிருப்ப..புது கார்ல இப்படி வந்து இடிச்சிட்டு வெறும் சாரி சொன்னா சரியா போயிடுமா..?”

“தெரியாம நடந்துடுச்சி மேடம்.. நீங்களே சொல்லுங்க இப்ப நான் என்ன பண்றது..?”

“என்ன பண்றதா? நடயா ஸ்டேஷனுக்கு..” என்றாள்

அதற்குள் கடந்து போகும் மற்ற வாகனங்களும் என்ன என்று நின்று பார்க்க கூட்டம் கூடத்தொடங்கியது. மித்ராவுக்கு ஒரு மாதிரி கடுப்பாக இருந்தது. இப்படி ஊர் கூடி பார்க்கும்படி நின்று சண்டையிடவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக இடித்தவனை அப்படியே விட்டுவிட்டு போகவும் மனம்வரவில்லை..

போலீஸ் ஸ்டேஷன் என்று போனால் நேரம்தான் வீணாகும் பேசாமல் ரிப்பேருக்கு ஆகும் செலவை இவனிடமிருந்து வாங்கிக்கொண்டு பிரச்சனையை முடித்துவிடலாம் என்று இவள் யோசித்துக்கொண்டிருக்கும் போது..

அந்த காரில் வந்த இன்னொருவன்..

“மேடம்.. எங்க வண்டிய  ஓட்டிட்டு வந்த வாடகை டிரைவர் இந்த ஆளு.. உங்க சண்டையால எங்க டிரிப் பாதிக்கப்படுது.. ஒன்னு பண்ணலாம் இந்த டிரைவர இங்கயே விட்டுட்டு போறோம்.. நீங்க பேசி  ஒரு முடிவுக்கு வாங்க..” என்றுவிட்டு இவளது பதிலை எதிர்பாராமல் அவர்கள் பாட்டுக்கு காரில் ஏறி சென்றுவிட்டனர்..

அடுத்த சில வினாடிகளில் அந்த கொடைக்கானல் மலையின் நடுவழியில் யாரென்றே தெரியாத ஒரு அந்நியனுடன் தன்னந்தனியே நின்றாள் மித்ரா.

வாழ்க்கையில் முதன்முதலாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டாள்.

ஆனால் உடனடியாக மெண்ட்டல் ப்ளாக்கில் இருந்து மீண்டு..அடுத்து செய்யவேண்டியதை திட்டமிட்டாள்..

முதலில் காரில் சேதமான பகுதியை போட்டோ எடுத்தாள், அப்படியே அந்த டிரைவரையும் அவனறியாமல் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.

முதலில் அருகில் இருக்கும் கார் சர்வீஸ் ஸ்டேஷனுக்குப் போய் காரை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என்று அறியவேண்டும்.

அதுவரை இவனை நான் தான் கூட்டிக்கொண்டு அலையவேண்டுமா..? என்று நினைத்தவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளவேண்டும் போல இருந்தது..

“கடவுளே இது என்ன தலைவலியால்ல இருக்கு..”

என்று முணுமுணுத்தவள்..

“கார்ல ஏறு” என்றாள் வேண்டா வெறுப்பாக..அவன் ஏறியதும் காரை எடுத்தாள்.

மலைப்பதை என்பதாலோ என்னவோ மொபைலில் சிக்னல் வேறு இல்லை..

சர்வீஸ் ஸ்டேஷன் எங்கிருக்கிறது என்று விசாரித்தால் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை..

போகும் வழியில் ஒரு இடத்தில் கொஞ்சம் சிக்னல் கிடைத்ததும்..

வெண்பாவிற்கு அழைத்தாள்.

“என்னடி அதுக்குள்ள வந்துட்டியா..” ஆச்சரியமாக கேட்டவளிடம் நடந்ததை சுருக்கமாக சொன்னாள்.

“என்னடி சொல்ற..?என்னாலயும் இப்ப கிளம்பிவர முடியாதே .. அப்பா கார் எடுத்துட்டுப் போயிட்டாரு.. சரி நீ ஒன்னு பண்ணு இன்னும்  இருபது கிலோமீட்டர் போனா..ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் வரும் நீ அங்க போயிட்டு எனக்கு கால் பண்ணு.. ஹே அப்புறம் கேர்ஃபுல்லா இரு..” என்றும் எச்சரித்தாள்..

“நான் பாத்துக்கறேன் டி” என்று காலை கட் செய்தாள்.

“என்ன ஆச்சு மேடம்..?” என்றான் அதுவரை அமைதியாக இருந்த அந்த அந்நியன்.

“இன்னும் 20 கிலோமீட்டர் போகனுமாம்..” என்று எரிச்சலாக மொழிந்தவள்..

அதன் பிறகு போய் சேரும் வரை அவன் காதில் ரத்தம் வரும் வரை காரை எப்படி ஓட்டவேண்டும் என்று பாடம் எடுத்துக்கொண்டே வந்தாள்.

வெண்பா சொன்ன சர்வீஸ் ஸ்டேஷன் சென்று பார்த்தால் பூட்டியிருந்தது.

மித்ரா கோபத்தில் காலைத்தரையில் உதைத்தாள்..

“இன்னிக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியல.. எல்லாம் ஏழரையாவே இருக்கு.”

பிறகு என்ன செய்வது என்று யோசித்து… சென்னையில் அவள் எப்போதும் சர்வீஸ் விடும் கடைக்கு தான் எடுத்த போட்டோக்களை அனுப்பி அதை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள்.

“மேடம் ரியர் முழுக்க டேமேஜ் ஆயிருக்கு.. டோட்டலா மாத்துறமாதிரி இருக்கும் இன்சூரன்ஸ் போக ஒரு 10 டூ 15 ஆயிரம் ஆகும்..” என்றனர்.

சரி அவனிடம் 25 ஆயிரம் கேட்போம் என்று முடிவெடுத்து, அவனை அழைத்தாள்.

அந்த டிரைவர் யாருடனோ ஃபோன் பேசிக்கொண்டிருந்தவன்  இவள் அழைத்ததும் கட் செய்துவிட்டு வந்தான்.

“கையில இருந்து 25 ஆயிரம் வரை செலவு பண்றமாதிரி இருக்கும்ன்னு சொல்றாங்க..” என்றாள்.

“25 ஆயிரம் அதிகம் மேடம்..நான் ரொம்ப சாதாரணபட்ட ஆளு .. கொஞ்சம் பார்த்து செய்யுங்க மேடம்..”

“அதையெல்லாம் நீ இடிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கனும்..” என அவள் வெடுக்கென்று கூறவும் அவன் முகம் கன்றியது. அதை பார்க்க கொஞ்சம் பாவமாகதான் இருந்தது இவளுக்கு..

“ சரி எவ்ளோ தர முடியும்?”

“ஒரு 5 ஆயிரம்ன்ன ஏற்பாடு பண்ண முடியும்..”

“ அப்போ உன்னோட தப்புக்கு நான் தண்டம் அழனுமா..? நாங்களும் கஷ்டப்பட்டுதான் சம்பாதிக்கிறோம்..”என்று அவள் விடாப்பிடியாக கூறவும்.

“சரி மேடம் 10 ஆயிரம் அரேஞ்ச் பண்றேன் மேடம்..”

“இல்ல 20..”

“12 ஆயிரம்..?”

“முடியாது 20 ஆயிரம் தான்..”

“ஒரு 15 ஆயிரம் ஃபயினல் பண்ணிக்கலாம் மேடம்..”

மித்ரா உள்ளுக்குள் குதூகலித்தாள், தன்னுடைய பேரம்பேசும் திறனை தானே மெச்சிக்கொண்டாள்.

“சரி பணத்த குடு..” என்று இவள் கேட்ட போது அவன்.

“அவ்ளோ பணம் இப்ப என் கிட்ட இல்ல மேடம்.. என் ஃப்ரண்ட்கிட்ட கேட்டுதான் ஏற்பாடு பண்ணனும் அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்..” என்றான்.

இது என்னடா வம்பா போச்சி.. என்று அலுத்தவளுக்கு வயிறு பசிக்கத்தொடங்கியது.

இருக்கும் டென்ஷனில் பசி வேறு சேர்ந்து கொண்டால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள்.. எனவே “இந்த பிரச்சனைதான் தீர்ந்தபாடில்லை முதலில் பசியையாவது தீர்ப்போம்..” என்று எண்ணி..

“எனக்கு பசிக்குது சாப்பிட போலாம்..” என்றவள் கொடைக்கானல் டவுனில் ஓரளவு பிரசித்தி பெற்ற ஹோட்டலில் வண்டியை நிறுத்தினாள்.

“உள்ள போலாம் வா..”

“இல்ல மேடம் எனக்கு வேண்டாம்.. நீங்க சாப்ட்டு வாங்க நான் வெயிட் பண்றேன்.”

“சாப்பிடாம இருந்தா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுமா..? வா வந்து சாப்பிடு..” என்று அதிகாரமாக கூறிவிட்டு உள்ளே போனாள்.

அவள் தனக்கு மட்டன் பிரியாணி சிக்கன் 65 என்று ஆர்டர் செய்ய..

அவன் இருப்பதிலேயே குறைந்த விலையானதாக பார்த்து

“தயிர் சாதம்” ஆர்டர் செய்து சாப்பிடவும் இவளுக்குத்தான் உணவு தொண்டைக்குள் இறங்காமல் சிக்கிக்கொண்டது போல் இருந்தது.

உணவின் பின் இவள் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து சாப்பிட அவன் அதை ஏக்கத்தோடு பார்ப்பது போல் தெரிந்தது.

பாவம் ‘பாஸ்கின் ராபின்ஸ்’ எல்லாம் இவன் எங்க சாப்பிட்டிருக்க போறான்..? என்று எண்ணி மனம் இளகியவள்

அவனுக்கும் சேர்த்து ஐஸ்கிரீம் வாங்கித்தர அவன் கண்கள் ஒரு கணம் ஆச்சரியத்தில் விரிந்தாலும் வேண்டாம் என்று மறுக்கவே செய்தான்.

ஆனாலும் இவள் வற்புறுத்தவே அவன் தயக்கத்துடன் சாப்பிடத்தொடங்கினான். ஐஸ்கிரீமை வாயில் வைத்ததும் அவன் இதழோரத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தபோது எதையோ பெரிதாக சாதித்துவிட்டது போல் உணர்ந்தாள்.

பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று பார்த்தவன் அதிர்ச்சியில் வாய்பிளந்தான்.

அதைக் கண்டுகொள்ளாமல் தன் கார்டில் பணம் செலுத்தினாள்.

ஹோட்டலைவிட்டு வெளியே வரும்போது வெண்பாவிடமிருந்து அழைப்பு வந்தது..

“ஹேய்.. என்னடி உன்ன இன்னும் காணோம் வந்துட்டியா இல்லையா..”

“கொடைக்கானல் ரீச் ஆகிட்டேண்டி.. ரொம்ப பசிச்சது அதான் சாப்பிடுறதுக்காக ஹோட்டல் வந்தோம்..”

“வந்தோமா..?ஹேய் நீ இன்னுமா அந்த ஆள கூட்டிட்டு சுத்திட்டு இருக்க??”

“என்ன பண்றது வெண்பு அவன் இன்னும் பணம் தரலையே.. அவன் ஃப்ரண்ட் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கானாம்..”

“ஏய் பணம் போனா போகுதுடி.. நீ மொதல்ல அவன கழட்டிவிட்டுட்டு கெளம்பி வா.. டேஞ்சரஸ்சா பண்ணிட்டு இருக்க நீ..எதாவது பிரச்சனை ஆகிடப்போகுது ..”

“ஹே இல்லப்பா அவன பார்த்தா கொஞ்சம் நல்லவன் மாதிரிதான் தெரியுது..வேற ஒருத்தனா இருந்தா இடிச்சிட்டு நிறுத்தாம போயிருப்பான் இப்படி கூடவே வரமாட்டான்ல்ல..”

“அதான்டி எனக்கு பயமா இருக்கு.. நீ மொதல்ல உன்னோட சேஃப்டிய பாரு..”

என்று சரியான அறிவுரையைக் கூறினாள்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் வெண்பு.. அவன் எதாவது வாலாட்டினா ஒரே கராத்தே பஞ்ச்ல அவன் மூக்க உடைச்சிடமாட்டேன்..? யூ டோண்ட் வொரி..”

என்று அவளை சமாதானப்படுத்துவிட்டு போனை வைத்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அந்த டிரைவரைக் காணவில்லை..

வெண்பாவிடம் பேசும் போது அவனும் வேறு யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தாள் ஆனால் இப்போது மாயமாய் மறைந்துவிட்டிருந்தான்.

“என் வண்டிய இடிச்சிட்டு, என் காருலயே ஓசில வந்துட்டு என் காசுலயே நல்லா வயித்தயும் நெறப்பிகிட்டு என்னை நல்லா முட்டாளாக்கிட்டுப் போயிட்டான்..

ச்ச நன்றி கெட்டவன் இவனப்போய் நல்லவன்னு வெண்பாகிட்ட சர்ட்டிஃபிகேட் வேற குடுத்தேனே என்னை சொல்லனும்.. என்னை மாதிரி ஈனா வானா யாராவது இருப்பாங்களா..” என்று புலம்பிக்கொண்டிருக்க…

“போலாமா மேடம்..” என்ற படியே வந்து நின்றான் அவன்.

அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் இவள் பேச்சிழந்து நிற்பதைப்பார்த்தவன்

“வாஷ் ரூம் போயிருந்தேன்..” என்று விளக்கம் தந்தான்.

“ஒரு நிமிஷத்துல இவன தப்பா நெனைச்சிட்டேனே..” என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவளின் கவனம் பாதையில் இல்லாமல் போக வழியில் இருந்த சின்ன கல்திட்டில் காலை நன்றாக இடித்துக்கொண்டாள்..

இடித்த வேகத்தில் இவள் தடுமாறி விழப்போக நொடியில் செயல்பட்டு அவளைப்பிடித்து விழாமல் தடுத்து நிறுத்தினான்.

அவனது கரம் தன்னுடைய இடையை அழுத்திபிடித்திருந்த பிடியில் அவன் கரத்தில் வலு தெரிந்தது.

தன் மெல்லிய இடையை இறுக்கி பற்றியிருந்த அவனது வலிய கரம் உள்ளுக்குள் ஏதோ பண்ண.. இவள் சட்டென்று விலகி நின்றாள்.

அடிபட்ட கால் வின்னென்று வலிக்க குனிந்து காலை பார்த்தால் கட்டைவிரலில் தோல் பிய்ந்துபோய் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.

அதைப்பார்த்ததும் பதறியவன் சட்டென்று கீழே மண்டியிட்டு அவள் காலைப் பிடித்தான்.

“என்ன மேடம் பார்த்து வரக்கூடாதா.. பாருங்க எவ்ளோ ரத்தம் வருது.” என்று அவளைக் கடிந்துக்கொண்டிருந்தான்.

“பார்த்து வர்றத பத்தி யாரு சொல்றா பாரு..” என்று என்ணியவள் நிஜமாகவே கவலை காட்டிய அவன் முகத்தைப்பார்த்ததும் எதுவும் பேசாமல் வாயைமூடிக்கொண்டாள்.

ரத்தம் நிற்காததைப் பார்த்தவன் அவளை ஒரு ஓரமாக அமரவைத்துவிட்டு.. தண்ணீர் கொண்டு வந்து சுத்தம் செய்துவிட்டு தன் கைக்குட்டையை எடுத்து கட்டு போட்டு விட்டான்.

“ஹாஸ்பிட்டலுக்கு போலாம் வாங்க..” என்றவன் அவள் மறுப்பு  கூறும் முன் அவளைக் கைதாங்கலாக அழைத்து செல்லலானான்.

அருகில் இருந்த சின்ன கிளீனிக்கில் இவளுக்கு கட்டு போட்டுவிட்டு மருந்தும் ஊசியும் எழுதி வாங்கி வருமாறு இவனிடம் மருந்து சீட்டைக் கொடுக்க இவன் அதை வாங்கி கவலையோடு பார்க்க.

பாவம் அவனிடம்தான்  பணம் இல்லையே என்று நினைத்தவள்..

தன் கைப்பயிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள். அதை வாங்க மறுத்துவிட்டு அவனே ஓடிப்போய் மருந்து வாங்கி வந்தான்.

ஊசிப் போட்டுக்கொண்டு இவள் சற்று விந்திய படியே காரின் அருகே வர ..

போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவன் இவள் வருவதைப்பார்த்ததும்

“அப்புறம் பேசுறேன் பை..ஐ லவ் யூ  ..” என்று உடனடியாக காலை கட் செய்துவிட்டு இவளுக்கு உதவ அருகில் வந்தான்.

அதற்குள் அவன் போனில் கடைசியாக பேசிய வார்த்தைகள் இவள் காதுகளுக்கு தெளிவாக கேட்டிருந்தது.

“ஐ லவ் யூ  வா ? அப்போ இவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா..? பொண்டாட்டிகிட்ட பேசினானா? இவன் கல்யாணம் ஆனவன்னு முன்னாடியே ஏன் சொல்லல? “

அவன் ஏன் சொல்ல வேண்டும்?

மித்ராவுக்கு ஏனோ எதிலோ ஏமாந்துவிட்டது போல் இருந்தது.

“அவனுக்கு காதலியோ மனைவியோ இருப்பது எனக்கு ஏன் ஏமாற்றமளிக்க வேண்டும்..?என்ன பைத்தியக்காரத்தனம்..?”

மித்ராவுக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவள் அருகில் அமர்ந்துவர அவன் தான் காரை ஓட்டினான். கார் வெண்பாவின் எஸ்டேட்டிற்கு செல்லும் பாதையில் சென்றது.

“பார்த்து ஓட்டு எங்கயாவது கொண்டுபோய் இடிச்சிடாத..” என்று குத்தலாக கூறிவளுக்கு அவன் பதிலேதும் கூறவில்லை.

சற்று நேரம் பொறுத்தவள் அதற்கு மேல் தாங்க முடியாமல்..

“ஃபோன்ல யாரு ஒயிஃப் ஆ..” என்று சாதாரணமாக கேட்பது போல் கேட்டாள்.

“சாரி என்ன கேட்டீங்க..”

“இல்ல ஃபோன்ல பேசிட்டு இருந்தியே அது யாரு ஒயிஃபான்னு கேட்டேன்..”

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..” என்றான் சாலையிலிருந்து பார்வையைத் திருப்பாமல்..

“அப்போ கேர்ள்ஃப்ரண்ட்டா?” என்றாள் விடாப்பிடியாக.

அவன் பதில் சொல்ல நேரம் ஆகவும் இவளது மனம் ஏனோ பதைபதைத்தது..

மெதுவாக திரும்பி அவனைப் பார்க்க ..

அவன் முகம் புன்னகை பூசியிருந்தது.

“என்னோட அம்மாட்டபேசிட்டு இருந்தேன்..” என்றான் இவளை திரும்பி பார்த்து.

அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் இவள் சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

அவளது மனம் குழம்பிப்போயிருந்தது.

“நான் என்ன பண்றேன்.. எனக்கு என்ன ஆச்சி..? கடவுளே எனக்கு நல்ல புத்திய குடு….”என்று கண்ணைமூடி கடவுளிடம் முறையிட்டாள்.

“ மேடம் .. மேடம்..” என்று இவளது தோளைத்தொட்டு யாரோ உலுக்கவும் சட்டென்று விழித்தாள்.

“நீங்க சொன்ன அட்ரெஸ் வந்துடுச்சி மேடம்..”

“கடவுளே நான் தூங்கிட்டேனா..? தெரியாத ஊரில்,பேர்கூடத் தெரியாத ஒரு அந்நியனுடன் தனியாக வரும்போது என்னால் எப்படி தூங்க முடிந்தது. எவ்வளவு பெரிய மடத்தனம்.?”

அவள் காரை விட்டு இறங்கவும் வெண்பா உள்ளிருந்து ஓடிவந்தாள்.

“அப்பாடா ஒரு வழியா பத்திரமா வந்து சேந்தியே ..?உன்ன பாக்குற வரைக்கும் எனக்கு எவ்ளோ டென்ஷனா இருந்தது தெரியுமா..” என்று படபடத்துக் கொண்டிருந்தவள் புதியவனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு மித்ராவை கேள்வியாக நோக்கினாள்

“ இதுதான் அந்த ஆக்சிடெண்ட் பார்ட்டியா..”

“ம்ம்” என்று  மித்ரா தலையசைத்தாள்..

“வெயிட் பண்ணுங்க நான் இப்ப வரேன்..” என்று விட்டு மித்ரா வெண்பாவுடன் உள்ளே சென்றாள்.

“ ஹேய் காலுக்கு என்னடி ஆச்சி.. அவன் இடிச்சதுல அடிபட்டுடுச்சா.. இரு அவன உண்டு இல்லைன்னு பண்றேன்..” என்று சண்டைக்கு கிளம்பியவளைத் தடுத்து

“இல்லடி.. இது நானா தான் தெரியாம இடிச்சிக்கிட்டேன் அவன் தான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனான்.”

“ நீ சொல்றத பார்த்தா அவன் நல்லவன் தான் போல..” என்ற வெண்பா..

“சரி நீ ரெஸ்ட் எடு நான் இதோ வரேன்..” என்று உள்ளே சென்றாள்.

மித்ரா மெதுவாக நடந்து வீட்டை விட்டு வெளியே வந்தாள். பின்பக்கத் தோட்டத்தில் புல்வெளியில் போடப்பட்டிருந்த பார்க் பெஞ்சில் அமர்ந்து எதிரே பரந்து விரிந்திருந்த ஏரியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

அவன் அமர்ந்திருந்த தோரணையில் அவனும் அந்த இயற்கையில் ஒரு அங்கமானது போல அவளுக்கு தோன்றியது.

மெல்ல அருகில் சென்று மறுபுறம் அமர்ந்தாள்.

இருவருக்குமிடையில் ஒரு கனமான மௌனம் குடிகொண்டிருந்தது.

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க..” என்று கேட்டு மௌனத்தைக் கலைத்தாள் மித்ரா.

எதிர்பாரா கேள்வியில் திகைத்து அவன் அவளைத் திரும்பிபார்க்க.

அவள் இவனைப் பார்க்காமல் நேரே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த விதம் அழகோவியம் போல் காட்சியளித்தது.

“ஏன் கேக்குறீங்க..?”

இருவரும் நேரே ஏரியைப் பார்த்தபடியே பேசத் தொடங்கினர்.

“சும்மா தான்..”

“பிஈ படிச்சிருக்கேன்..”

இப்போது அவள் ஆச்சரியமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்

“பி ஈ படிச்சிட்டு ஏன் டிரைவர் வேலை பாக்குறீங்க..?”

“எந்த வேலையும் கெடைக்கல அதான் கெடைச்ச வேலைய செய்யறேன்..”

“நீங்க வேணா உங்க ரெஸ்சுமேவ எனக்கு அனுப்புறீங்களா..? நான் எதாவது வேலைக்கு முயற்சிபண்ணி பாக்குறேன்.”

அந்த கணம் எதாவது செய்து அவனது வாழ்க்கைத்தரத்தை  உயர்த்திவிடவேண்டும் என்பதுதான் தன் வாழ்வின் லட்சியமாக தோன்றியது.

அவளைத் திரும்பி பார்த்தவன் கண்ணும் முகமும் பிரகாசமடைய விரிந்தப்புன்னைகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

அப்போது அவளும் அவனைத் திரும்பிப்பார்க்க இருவரும் கண்ணோடு கண் நோக்கிய அந்த நொடி உள்ளுக்குள் எதோ ஒரு மாற்றம் நிகழ்ந்ததாக இருவரும் உணர்ந்தனர்.

அந்த மோனத்தைக் கலைப்பது போல் அவனது செல்போன் சிணுங்கியது.

சற்று தள்ளிப்போய் பேசிவிட்டு வந்தவன்

“என் ஃப்ரண்ட் வந்துட்டான்.. பணம் கேஷா கொண்டுவந்திருக்கானாம் . நான் போய் வாங்கிட்டு வரேன்…” என்றான்.

இந்த முறை அவன் அவளை ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவானோ என்று எந்த ஐயமும் அவளுக்கு இல்லை..அவன் கண்டிப்பாகத் திரும்பி வருவான் என்று அவளுக்குத் தெரியும்.

ஆனால் பிரச்சனைத் தீர்ந்தது என்று நிம்மதி அடைவதற்கு பதில் மனம் ஏனோ குழம்பித் தவித்தது.

“அந்த பதினைந்தாயிரம்  நிச்சயம் அவனுக்கு பெரிய தொகையாத்தான் இருக்கும்.. ஒருவேளை அவனுடைய ஒரு மாத சம்பாளமாக்கூட இருக்கலாம்.. இந்த கடனை அடைக்க என்ன கஷ்டப்படப் போறானோ..?” என்று அவனுக்காக மனம் இறங்கியது. சொன்னபடியே சற்று நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்தவன்

“இந்தாங்க மேடம் இதுல பதினைஞ்சாயிரம் ரூபா இருக்கு..”

அவள் இம்மியளவு கூட நகரவில்லை.

“இல்ல பரவால்ல.. அதை நீங்களே வச்சிக்கோங்க..பணம் எதுவும் தரவேண்டாம்..”

“தப்பு பண்ணா அதுக்கான பொறுப்ப ஏத்துகிட்டுதானே ஆகனும்.. என்னைப்பத்தி கவலைப்படாதீங்க ரெண்டு லாங் டிரிப் போனா நான் இந்த பணத்த சம்பாதிச்சிடுவேன்..இத வாங்கிக்கோங்க..” என்றான்

அப்போதும் அவள் நகராமல் சிலைப்போல நிற்கவும்..

அவள் கையைப் பற்றி அதில் பணத்தைத் திணித்துவிட்டு

“நான் வரேங்க.” என்று திரும்பி நடக்கலானான்.

தன் கையிலிருந்த பணத்தை பார்த்தவள் பின் நிமிர்ந்து தன்னைவிட்டு விலகி நடப்பவனின் முதுகை வெறித்து நோக்கினாள்.

தன் உடலிலிருந்து ஒரு பாகம் தனியே நடந்து போவது போல் இருந்தது அவளுக்கு.

கண்கள் தானாக குளமாகின.அவளுக்கு என்ன ஆகிறது என்று அவளுக்கே புரியவில்லை. அவனிடம் ஓடிச்செல்ல வேண்டும் என்று மனம் துடித்தது. பெரும்பாடுபட்டு அந்த உந்துதலை அடக்கிக்கொண்டு

அவன் போவதையே பார்த்திருந்தவளுக்கு இதோ அந்த வளைவில் திரும்பியதும் அவன் மறைந்து விடுவான், இனி அவனை காணமுடியாது எனும் போதுதான் அவன் பெயரைக்கூட தான் அறியவில்லை என்பது உறைத்தது..

“ஹல்லோ உங்க பேர் என்ன..?”என்று அவனுக்கு கேட்குமாறு கத்தினாள்.

முகம் முழுக்க சிரிப்புடன் திரும்பி இவளைப்பார்த்தவன்

“கார்த்திக்..” என்றான் நில்லாமல் நடந்தபடி.

கார்த்திக் என்று மனதில் ஒருமுறை சொல்லிப்பார்த்தவள்

“என் பேரு மித்ரா..” என்று மீண்டும் கூவினாள்

அவன் புன்னகை இன்னும் விரிவடைய..

“ தெரியும்..” என்று கூறியவன் திருப்பதில் திரும்பி மறைந்துபோனான்.

“தெரியுமா.. எப்படி..” என்று மித்ரா குழம்புகையில்..

அவளது அலைப்பேசி அடித்தது.

“ஹல்லோ ..”

“ஹல்லோ.. மித்திமா.. ஊருக்கு போய் சேந்துட்டியாடா.. ஃபோன் பண்ணவே இல்லையே..” என்றார் மறுமுனையில் அவளது அப்பா..

“இப்பதான் பா வந்தேன்..”

“ சரி மா .. உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லதான் போன் பண்ணேன்..”

“என்னப்பா..”

“மித்திமா காலையில ஒரு வரன் பத்தி சொன்னேன்ல மா.. அந்த மாப்பிள்ளையும் இப்ப கொடைக்கானல்ல தான் இருக்காராம்.. உன்னை நாளைக்கு வந்து பார்க்கலாமான்னு கேட்டாங்க.. நானும் சரின்னு சொல்லிட்டேன் மா. அவருக்கு வெண்பா வீட்டு அட்ரெஸ் குடுத்திருக்கேன் . நாளைக்கு மீட் பண்ணி பேசிடுமா..”

“ என்னப்பா இப்படி திடீர்ன்னு சொல்றீங்க..”

“சாரி மா அவங்க இப்பதான் சொன்னாங்க..ப்ளீஸ் மா அப்பாவுக்காக ஒத்துக்கோமா.. நான் வாக்குக்குடுத்துட்டேன்..

வெண்பாவும் கூட  இருக்கறதால உனக்கு சப்போர்ட்டாவும் இருக்கும்… நான் மாப்பிள்ளை போட்டோவும் போன் நம்பரும் அனுப்பறேன் நீ பாத்துக்கோம்மா.. நான் அப்புறமா பேசுறேன்டா பை..” என்றவர் இவள் மறுத்துப்பேசும்முன் அவசரமாக இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

உடனே வாட்ஸப்பில் நோட்டிஃபிகேஷன் வர இவள் விரல்கள் அனிச்சையாக திரையைத் தொட

அவளின் அப்பா அனுப்பிய புகைப்படத்தில் இவளைப் பார்த்து  சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.. கார்த்திக்…

💖💖💖

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!