தீனதயாளன் குல தெய்வ கோவிலுக்கு கிளம்பும் வரை அமைதியாய் நடப்பதை கவனித்துக்கொண்டு ஒரு ஓரமாய் இருந்த ஜெயசீலன், அவர்கள் சென்றதும் சகுந்தலாவிடம் தனது பொருமலை கொட்டி தீர்த்திருந்தார்.
புது தொடப்போ நல்லா தா கூட்டும்.. ஆனா அதுவே பழசானக்க வேசம் தெரியும்.
இப்போ அதுங்களுக்குன்னு புள்ள இல்ல.. அப்புடி ஒண்ணு வந்தா இவன் ஆகாத புள்ளையா மாறிடுவான்..” என எப்போதும் போடும் தூபத்தை ஜெயசீலன் போட,
இம்முறை அவரின் எண்ணம் முழுவதுமாய் சகுந்தலாவிடம் வேலையை காட்டவில்லை.. என்பதே உண்மை.
யமுனா முதல் நாள் சொன்னது போல.. அவளையும் தீனாவையும் சீண்டாத வரை பெரியவர்களை மதித்து, அமைதியாய் எல்லா வேலையையும் சிரத்தையுடன் செய்து முடிக்கும் கெட்டிக்காரி.
அதே நேரம் அவர்களை சீண்டினால் அதற்கு தக்க பதிலடியை கொடுக்காமல் அவளால் இருக்க முடியாது என்பதும் உண்மை.
‘பாசத்தை காட்டினால் அதைவிட அதிகமாக பாசத்தை காட்டுவாள்..
கோபத்தை காட்டினால் அதையே பல மடங்காக்கி திருப்பி தருவாள்.. என்பதை இவருக்கு யார் சொல்லி புரிய வைப்பது..?
இவரெல்லாம் பட்டு தான் திருந்த வேண்டும்..’ என நினைத்தவர் அதன் பின் அமைதியை தத்தெடுத்துக் கொண்டார்.
புலம்பி.. திட்டி.. என நேரத்தை போக்கியவர், உண்ட கையோடு வெளியே சென்றுவிட மழையடித்து ஓய்ந்த நிலை சகுந்தலாவிற்கு.
****
அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல சுமுகமாக செல்ல, தீனாவின் சம்பள நாளை கணக்கிட்டுக்கொண்டிருந்தார் ஜெயசீலன்.
அதன் படி முதல் தேதி வந்து சென்ற அந்த ஞாயிறு.. வழக்கம் போல பணம் அனுப்ப வேண்டியவர்களின் கணக்கை சரிபார்த்துக்கொண்டு தங்களின் அறையில் அமர்ந்திருந்தான் தீனா.
கூடத்திலிருந்த ஷோஃபாவில் அமர்ந்து அவன் வரவுக்கு காத்திருந்த ஜெயசீலன், அவன் மணி ஒன்பதை கடந்தும் வராமல் இருக்க, “ஏய் ஜெகா.. இங்கன வாடா..” என்றார் சத்தமாக.
தீனா வந்தது முதல் ஜெகதீஷிடமிருந்து விலகியே இருந்தவர்.. இன்று இப்படி அழைத்ததும் சிறு பிள்ளைக்கு அவர் மீதான பயம் மீண்டும் உயிர்த்தெழ உடலோ நடுக்கம் கொண்டது.
கிச்சனில் அவனோடு நின்று அவனுக்கு சாப்பிட எடுத்து கொடுத்து கொண்டிருந்த யமுனாவிற்கு அவன் நிலை நன்றாக புரிய,
“எதுக்கு பயப்படறே ஜெகா..? நானும் உன் அண்ணாவும் இருக்கோமில்ல..” என அவனின் தோளில் ஆறுதலாய் வருடி ஆசுவாசப்படுத்தியவள்,
அவனை கிச்சனிலேயே அமர்ந்து சாப்பிட சொல்லிவிட்டு வேகமாய் அவரின் முன் வந்து நின்றாள்.
அவளின் முகத்தில் தெரிந்த கோபத்தில் இன்னும் கடுமையை கொண்டு வந்தவர், “ஏய்.. கூப்புடறது கேட்கல..?” என வேகமாய் எழுந்து அவனிருக்கும் இடத்தை நோக்கி செல்ல முயல,
“எதுக்கு அவன கூப்பிடறீங்க..?” என அவரின் வழியை மறைத்தாள்.
“இங்கன பாரு.. இது என்ற புள்ளகிட்ட நா பேசறது.. குறுக்கால வராத. போ அங்கிட்டு..” என்றவர் விலகி செல்ல முயல,
“அப்படிங்களா மாம நாரே.. உங்க புள்ளகிட்ட தாராளமா பேசுங்க. ஆனா அது அன்பா.. பாசமா தான் இருக்கனுமே ஒழிய.. இந்த அதிகாரம், கோபத்தை எல்லாம் காட்ட நா அனுமதிக்க மாட்டேன்..” என்ற கட்டளையான குரலில் நின்று அவளை பார்த்தவர்,
“நீ ஆரு அத சொல்ல..?” என்றார் கோபமாய்.
“என்ன மாம நாரே உங்களோட இதே வேலையா போச்சு..!
உங்க முன்னாடி தானே உங்க மூத்த புள்ள.. அவரு கையால தாலி கட்டி பொண்டாட்டி ஆகிக்கிட்டார்.
நீங்க கூட.. ‘என்ற மருமவள வெளியே விடவே மாட்டேன்..’னு உருண்டு பொறண்டு போராடி இருக்க வச்சீங்களே.. அதே மருமவ தான் நான்..” என அவள் சொன்ன பாவனையில் கேட்டிருந்த சகுந்தலாவிற்கும், பயத்தோடு இருந்த ஜெகதீஷூக்கும் சிரிப்பே வந்துவிட்டது.
அவளின் பாவனையில் கடுப்பான ஜெயசீலன் அடுத்த வார்த்தை சொல்லும் முன், அவரின் முன் வந்து நின்ற தீனா,
“இப்ப எதுக்கு அவன கூப்பிடறீங்க..? அதும் இவ்வளவு கோபமா..?” என முழு உயரத்திற்கும் நிமிர்ந்து கால்களை அகட்டி நின்று.. தனது இரு கரத்தையும் ட்ரக் பேன்ட் பாக்கெட்டில் விட்டு அவரை அழுத்தமாய் பார்த்தபடி கேட்டிருந்தான்.
ஜெயசீலன் முதல் முறை ஜெகதீஷை அழைத்த போதே வந்திருப்பான்.
ஆனால், கணக்கில் ஒருவர் அதிகமான எண்ணிக்கையை சேர்த்திருக்க.. அவரோடு போனில் பேசிக்கொண்டிருந்ததால் வரமுடியாமல் போனது.
ஆனாலும் அங்கு நடப்பதை அவதானித்தபடியே தான் பேச்சை தொடர்ந்திருந்தான்.
யமுனாவின் கேலி பேச்சிற்கு அவனுக்கும் சிரிப்பு தான்.
‘நிச்சயம் அவருக்கு அவளின் பேச்சு கடுப்பை இன்னும் அதிகமாக்கி இருக்கும்..
அவரின் கடுமையான வார்த்தை எதுவும் யமுனாவை தாக்கும் முன் அவரை அடக்க வேண்டும்..’ என்பதால் அவசரமாக பேசி முடித்து காலை கட் செய்தவன், நினைத்தது போலவே வந்து நின்றிருந்தான் கேடையமாக தன் மனையாளின் முன்.
பத்து வருடங்களுக்கு முன் இதே போல அவன் நின்ற போது அந்த விழியில் கோபம் மட்டுமே..
ஆனால் இன்று அதில் கோபத்தோடு தெரிந்த தீட்சண்யத்தில் ஒரு வித தயக்கம் எழுந்த போதும்,
“நாளு என்ன ஆவுது..? ஊட்டுக்கு எப்பவுங்கொடுக்கற காச கொடுக்காம.. அவனுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்து நிக்கறே..?” என்றார், ‘எதற்காக இத்தனை அக்கப்போரோ..’ அதை நடத்திக்கொள்ள.
“நா எதுக்கு பணம் கொடுக்கனும்..?” என்ற தீனாவின் வார்த்தையில் ஜர்க் ஆனவர்,
“எதுக்கா..! என்ன ஊட்டுல சோறு தண்ணி ஆக்க ஜாமனமெல்லாம் சும்மா வருமா..?
கரண்ட்டு பில்லு.. ஜெவதீஷூக்கு ஸ்கூலுக்குன்னு.. உன்ற கிட்ட கணக்கு காட்டினா தா பணம் வருமோ..?
இப்போ முன்னைக்கு நீங்க ரெண்டு பேரு ஜாஸ்த்தியா இருக்கீங்க.. அதுக்கும் சேத்து கணக்க போட்டு எடுத்து வை பணத்த..” என்றார் கெத்தாக.
அவரை விடுத்து யமுனாவிடம் பார்வையை திரும்பிய தீனா, “வீட்டுக்கு தேவையான மளிகை சாமானம் எல்லாம் நீ லிஸ்ட் கொடுத்த படி வந்திடுச்சா..?” எனக்கேட்க,
எதாவது அவசர தேவைன்னா தினமும் நா இங்கே இருந்து தானே போறேன். அப்ப எவ்வளவு எதுக்குன்னு சொல்லி கேளுங்க தர்றேன்.
அதுக்கும் மீறி எதாவது எமர்ஜென்சி ன்னா யமுனாகிட்ட பணமிருக்கும். காரணத்த சொல்லிட்டு தாராளமா வாங்கிக்கோங்க..” என அவரை பேசவே விடாமல் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லிவிட்டு,
“சாப்பாடு எடுத்து வை யமுனா. நா குளுச்சிட்டு வர்றேன்..” என்றபடி துண்டோடு குளியலறை நோக்கி சென்றான் தீனதயாளன்.
வீட்டு செலவை தான் பார்த்துக்கொண்டு, அவரின் தனிப்பட்ட செலவுக்கு என சிறிது கொடுக்க தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தான் தீனா.
அன்று கட்டிட வேலைக்கு பணத்தை கொடுக்கும் போது தான் புரிந்தது.. அவரிடம் தனது உழைப்பு இன்னும் மிச்சமிருப்பதை.
இன்னும் அள்ளி கொடுக்க அவனென்ன முந்தைய தீனாவா..?! அதனாலேயே இப்படி பேசிவிட்டிருந்தான்.
ஜெயசீலனுக்கோ தீனா சொன்னவற்றை ஜீரணிக்கவே சில நிமிடம் ஆனது.
போட்டிருந்த மொத்த கணக்கும் பூஜ்யமாய் மாறி போன மாயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவரால்.
‘இப்போ அவன ஏதாச்சும் சொன்னா.. ஒண்ணுமில்லாத காலத்துலையே ரோசமா வெளிய போனவன்.. இப்பவும் போயிடுவான்.. அப்புறம் இதுவுமில்லாம போயிட்டா..!’ என யமுனா சொன்னது போலவே அவரின் உள்மனம் கூப்பாடு போட,
‘முதல் முறை அவனை இங்கே இருக்க வைத்து தவறு செய்துவிட்டோமோ..?’ என தோன்றத்தொடங்கியது.
‘இல்ல அவன இங்கன இருக்க வச்சதால தான.. அவனுக்கு என்ன வருமான வருதுன்னு கண்டுக்க முடுஞ்சுது.