Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 20

ஒளி  20 :

அம்மம்மா இன்று மாறினேன்!
அன்புக்கு நன்றி கூறினேன்!
உள்ளத்தின் காயம் ஆறவே!
உதவியது உன் வார்த்தை தான்!

திக்கற்று போன வேளையில்!
தெரிந்தது என் பாதைகள்!

உனது பாடல் கேட்டது!
நெஞ்சினில் இல்லை பாரமே!
கைகளில் அதை வாங்கினாய்!
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்!



Advertisement

 

தீடிரென ஒரு பத்து பேர் உள்ளே நுழைந்து இவளுக்கு சல்யூட் வைக்க,  “யூனிபார்ம்ல இருக்க வேணாம், இப்போதைக்கு மீடியா ஆளுங்க பேரெண்ட்ஸை பார்க்க அனுமதிக்காதீங்க. கண்டிப்பாக இது போல சந்தர்ப்பங்களிள்ல கூட்டத்தில் பின்னாடி இருந்து ஒருத்தன் தூண்டி விடுவான் அப்படி யார் பண்ணாலும் அவங்களுக்கு சைலன்ட் பஞ்ச் ட்ரீட்மெண்ட் கொடுங்க. எதுவானாலும் எனக்கு அப்டேட் பண்ணுங்க.” அவர்களிடம் கம்பீரத்தோடு சரமாரியாக உத்தரவு போடுபவளை பார்த்த டாக்டர் கொஞ்சம் நேரம் முன்னாடி மயங்கி விழுந்தவங்க இவங்க தானா என்று ஆச்சர்யமாக பார்த்தார்.

 

Advertisement

பார்த்திபனோ இதை தான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என்பது போல அவள் செயல்களை பார்த்திருந்தான்.

Advertisement

 

“மேம் ! யார் இவங்க ?”டாக்டர் கேட்க 

 

Advertisement

“இவங்க பெரிய பெரிய ஆஃபீஸ்ர்ஸ்க்கு பாடிகார்டாக இருக்க கமாண்டோஸ்… இப்ப இங்க போலீசை கொண்டு வந்தால் ஜனங்களும் மீடியா ஆளுங்களும் எப்படி கையாளுவாங்கனு சொல்ல முடியாது அதான் இவங்களை வர வைச்சேன்… யூனிபார்ம்ல இல்லாததால் இவங்க யார் என்னனு தெரிய வராது மக்களுக்கு பாதுகாப்பா மக்களோட மக்களாக அவங்க கூட இருப்பாங்க… 

 

இது எல்லாமே மீடியா எப்படி இந்த விஷயத்தை கொண்டு போறாங்கன்னு பொறுத்து மாறிட்டு இருக்கும்” என டாக்டரிடம் பேசியவாறே பார்த்திபனை பார்த்தாள், அவன் கண்களில் ஒரு மெச்சுதல் தெரிந்தது.   

 

 “சூப்பர் மேம் !” என்றவரிடம் ஒரு தலையசைப்போடு பதில் அளித்துவிட்டு, மீடியாவிடம் சென்றாள்.

 

அவள் போய் நின்றவுடன் , சரமாரியாக கேள்விகள் தொடுக்கப்பட்டது.

 

முதல் கேள்வியே , “மேம் ! இந்த சம்பவத்தால் ஏதோ பெரிய பிரச்சனை நடந்து அதை எங்ககிட்ட இருந்து மறைக்க தான் இவ்வளவு நேரம் எங்களை சந்திக்கலையா  நீங்க ?” ஒருவர்  கேட்க ,

 

[the_ad id=”6605″]

 

 

 

“மேம் ! ஏன் இங்க போலீஸ் போடலை ?எதாவது சம்பவம் நடந்தா போலீஸ் இல்லாமல் மக்கள் எப்படி கட்டுக்குள்ள இருப்பாங்க ?”   ஒருவர் கேட்க,

 

“மேம் ! எதனால இப்படி நடந்தது? அப்ப தரமில்லாத உணவு குழந்தைங்களுக்கு கொடுக்கப்படுதா?”

 

ரதியோ  எதற்கும் பதில் அளிக்காமல் கைக்கட்டியபடி அமைதியாக நின்றாள்.அதன் பின் தான், எல்லோரும் நிறுத்தினர்.

 

“என்ன மேம் ! அமைதியா இருக்கீங்க ?”

 

“என்னை எப்போ நீங்க பேசவிட்டீங்க?” என அவள் நக்கலாக கேட்டு,”உங்க டீஆர்பி ரேட் அதிகப்படுத்த,  எங்க கேள்வி தான் முதல்லேனு எல்லாரும் கேட்டா அப்ப பதில் யார் சொல்லுவா?” என்று கோபமாக ஆரம்பித்தவளிடம், அமைதியாக பேசும்படி பார்த்திபன் கண்காட்ட, ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்தவாறு  மென்மையாக அவர்களிடம்,

 

“கண்டிப்பா இன்னைக்கு நீங்க இல்லைன்னா மக்களுக்கு நிறைய  விஷயம் போய் சேராது, அவங்களுக்காக நல்லது நடக்க நிறைய ரிஸ்க் எடுத்து நீங்க பண்றீங்க இது எல்லாமே நான் ஒத்துக்கறேன்.” 

 

“ஒரு நிரபராதி எப்படி தண்டிக்கப்பட கூடாதோ அதே போல ஒரு தப்பான விஷயமும் மக்களுக்கு போய் சேர கூடாது. மக்களுக்காக பேசறீங்க அப்ப அவங்க ஆளா அவங்க கூட நில்லுங்க.. நீங்க கேட்கற நியாயமான கேள்விகளுக்கு கண்டிப்பா நான் பதில் சொல்லுவேன்… ஏற்கனவே நீங்க கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்றேன், அதன்பின் பொறுமையா கேளுங்க!” 

 

குழந்தைகளின் தற்போதைய நிலையை விவரித்தவள், ” அவங்க ட்ரீட்மெண்ட்க்காக டாக்டர்ஸ்கிட்ட பேசி வேண்டி இருந்தது அதான் உங்களை பார்க்கறது தள்ளி வைத்தேன். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதை  விட அவங்க நலம் முக்கியமா பட்டது”

 

“ஏற்கனவே பேரெண்ட்ஸ் அவங்க குழந்தையை பத்தி கவலைல இருக்காங்க, இதுல யார் பிரச்னை பண்ணனும்னு நீங்க எதிர்பாக்கறீங்க? அமைதியாக முடியணும்னு இல்லாம யாராவது பிரச்சனை பண்ணனும், ஏதாவது நடக்கும்னு நீங்க எதிர்பாக்கறீங்க போல?”  

 

“குழந்தைங்க சாப்பிட்ட சாப்பாடை லேப்க்கு அனுப்பி இருக்கோம், அதோட முடிவு வந்த அப்புறம் தான் உண்மையான தகவலை உங்களுக்கு சொல்ல முடியும்.. நடந்த எல்லாத்துக்கும் நான் பொறுப்பேத்துக்கிறேன், அப்படி ஏதும் தவறு நடந்திருந்தால் கண்டிப்பா என்னோட தண்டனை வேற மாதிரி இருக்கும் அது என்னனு உங்களுக்கும் சொல்லுவேன்..”

 

“நாளைக்கு இது சம்பந்தமான டாக்டர்ஸை வர வைச்சு இன்னும் சிறப்பான ட்ரீட்மெண்ட் கொடுக்க இருக்கோம், கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும். பேரெண்ட்ஸ் ஏற்கனவே மனஉளைச்சல்ல இருக்காங்க தயவுசெஞ்சு அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்…” என்று  அவர்கள் அடுத்த கேள்வி கேட்க சந்தர்ப்பம் தராமல் எல்லாவற்றையும் பேசி முடித்து கிளம்பியவளை தடுக்க அங்கு யாருமில்லை..

 

அது அவளின் முழுமையான பேச்சிலா அல்ல அவளின் பேச்சில் இருந்த மென்மை கலந்த  ஆளுமையா  என்ற விசாரணையும் இல்லை.

 

உள்ளே வந்தவள் பெற்றோரிடம் நிலைமையை பக்குவமாக எடுத்துரைத்தாள். நம்பிக்கையில்லாமல் வருந்தி தளர்ந்தவர்களை மருத்துவரும் பார்த்திபனும் அவர்களுக்கு நிலைமையை புரிய வைத்தனர். 

 

“நாங்க வெளியே கூட்டிட்டு போய் நல்ல மருத்துவம் பார்த்து குழந்தையை காப்பாத்திக்கிறோம்னு” மத்தவங்க போல அவர்களால் சொல்லமுடியாதே, ஏனெனில் அவர்கள் தினக் கூலிகளாக இருந்தனர்.

 

இன்னமும் ஒரு வேலை உணவிற்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நிலைமையில் தான் இந்த நாடிருக்கிறது என்ற உண்மை முகத்தில் அறைகிறதே!

 

பெற்றோர்களை சமாளிக்கும் போதே மினிஸ்டர் வர, அவரின் கேள்விக்கணைகளுக்கு தயாராக இருந்தாள்.

 

மீடியாக்காரர்கள் மினிஸ்டரிடம் பெரிய அளவில் திரும்பாத அளவிற்கு ரதியே பேசியிருந்தாலும் தன் பதவியை தக்க வைத்து கொள்ளவேண்டுமென்ற தாக்கம் அவரின் பேச்சில் இருந்தது.

 

“என்ன சப்போர்ட்னாலும் எடுத்துக்கோங்க ஆனால் நாளைக்குள்ள இந்த நிலைமை சரி ஆகி இருக்கனும்” என்று அவர் கட்டளையிட, இது போதுமே அவளுக்கு..                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

[the_ad id=”6605″]

 

 

மினிஸ்டர் கிளம்பும் போதே இரவு எட்டு மணியாகிருந்தது.. விஷயமறிந்து சேகர் வர, அதற்குள் ரதி எல்லாவற்றையும் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்ததை பார்த்து பிரம்மித்தார்.

இது போல சம்பவங்களில் அனுபவமான நபர்கள் கூட தடுமாறி சொதப்புவதை நேரில் பார்த்தவராயிற்றே, அதிலும் உயர் அதிகாரங்களின் தாக்குதலையும் மீடியாக்காரங்களையும் சமாளிக்கவே தெம்பு வேண்டுமே.. ஆனால் அவளின் இந்த பலத்திற்கு பின்னால் அவளின் பலவீனம் தான் செயல்பட வைத்தது என்பதை அவரிடம் யார் சொல்வர்…

 

பார்த்திபன் மூலம் எல்லா விஷயங்கயையும் கேட்டறிந்தவர். அடுத்து அடுத்து எல்லாவற்றையும் சமாளித்தததால் இருவருமே ஓய்ந்து காணப்பட்டனர். அதிலும் ரதியை சொல்லவே வேண்டாம், தான் இங்கிருப்பதாகவும் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு கிளம்ப சொல்ல, இருவருமே மறுத்தனர்.

 

அந்த இருபது குழந்தைகள் நார்மல் ஆன பின் தான் இங்கிருந்து செல்வோம் என்று இருவரும் ஒரு போல மறுத்துவிட்டனர்.

 

“சரி ! போய் சாப்பிட்டு வாங்க ! அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்வதை மறுக்க இயலாமல் அவர்கள் பசி கான்டீன் அழைத்து சென்றது.   

 

அங்கிருந்த ஓய்வறையில் முகம் கை கால் கழுவிய பின்னர் இருவரும் கேன்டீன் சென்று உணவு வாங்கி வந்து எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.

 

மௌனம். மௌனம் மட்டுமே இருவரும் பேசினர். சொல்ல முடியாத வார்த்தை, சொல்ல முடிந்த பேச்சு என்று வரையறைகள் இல்லாத ஒன்றை மௌனம் கொண்டு மட்டும் தானே பேசமுடியும். அதை தான் இருவரும் செய்தனர்.

சாப்பிட்டு முடிக்கும்  தருவாயில் ரதி தான் அந்த மௌனத்தை உடைத்தாள்.

 

“தேங்க்ஸ்!” என்ற அவளின் அந்த ஒற்றை வார்த்தையில் இருந்தது தான் என்ன ? 

 

ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமில்லாமல், ஒரு புன்சிரிப்போடு அதை ஏற்றவன் சிரிப்பில் இருந்தது தான் என்ன? 

 

ஒருவேளை அந்த மௌனமும் அந்த ஒற்றை வார்த்தையும் அவனுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியதோ!  

 

இருவரும் சாப்பிட்டு முடித்து அங்கிருந்த ஓய்வறைக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே சேகர் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

 

அந்த இருபது குழந்தைகளும் இப்போது சிகிச்சைக்கு தயாரான நிலையில் இருப்பதாய் டாக்டர் சொல்ல, அவர்களுக்கு  நிம்மதி.

 

“ம்ம்ம் !தேங்க்ஸ் டாக்டர் உங்க சப்போர்ட்க்கு..”

 

“இதிலென்ன இருக்கு சார் , என்னோட கடமையை செஞ்சேன். அவ்வளவு தான். நான் போய் அந்த டாக்டர்ஸ்கிட்ட சொல்லிட்டு ரௌண்ட்ஸ் போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க, ஏதும் தேவைன்னா கூப்பிடுங்க” என்றவாறே அவர் வெளியேறினார்.

 

ரதி சேகரிடம் திரும்பி , “நீங்க கிளம்புங்க சார் , போய் ரெஸ்ட் எடுங்க. நாங்க இங்க பார்த்துக்கிறோம் மோர்னிங் வாங்க,”

 

“சரிமா! எதுவானாலும் போன் பண்ணுங்க!” என்று அவரும் செல்ல , இருவர் மட்டுமே இருந்தனர். பேசும் போது கட்டிலில் சேகர் மற்றும் பார்த்திபன் அமர்ந்திருக்க, இப்போது அவர் சென்றதும் அவன் மட்டும் அங்கிருந்தான்.

 

நம்ப போய் சோபாவில் படுத்துக்கொண்டு ரதியை எழுந்து கட்டிலில் படுக்க சொல்லலாம் என்று அவன் சொல்வதற்குள் அவள் சோபாவில் படுத்து கண் மூடியிருந்தாள்.

 

என்னவோ அவளை எழுப்ப மனமில்லை. அவனுக்கு உறக்கமும் வரவில்லை. கட்டிலில் சாய்ந்தவாறு கண்மூடியிருந்த அவள் முகத்தை தான் பார்த்திருந்தான். 

 

“அவளின் ஆளுமை ,கம்பீரம் ,பேச்சு எல்லாம் திடமாக இருந்தாலும் ஏன் இப்படி ஒரு சில சமயங்களில் தடுமாறுகிறாள்? அதுவும் நான் பார்த்து இருமுறை. நான்கு வருடத்திற்கு முன்னாடி பார்த்த போது எனக்கு தெரிந்தவரை அவள் இப்படியில்லையே ”

 

“ஒருவேளை என்னிடம் மட்டும் பலவீனமாக இருக்கிறாளா என்னை அவளுடைய பலமாக மாற்ற தான் என்னையும் உடன் அழைத்தாளா? அவளின் பலமும் பலவீனமும் நானா?” என்று அவன் சிந்திக்கும் போதே சிலிர்த்தது.

 

“தேவையில்லாம ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்.. அப்புறம் அதெல்லாம் உண்மையில்லன்னு ஆன அப்புறம் சேதாரம் உங்களுக்கு தான்.. ஏற்கனவே ஒருமுறை பட்டது போதாதா?” 

 

[the_ad id=”6605″]

 

 

 

“இதில் உங்களுக்கு அவளை ஞாபகம் இல்லை போலன்னு வேற நடந்துக்கறீங்க? அதனால இதை அப்படியே விடுங்க ..” என்று அவனை அதட்டிய மனசாட்சிக்கு அடிபணிந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

 

எப்போதும் பாடல் கேட்டுக்கொண்டே உறங்குபவள் இன்று அது ஏதுமில்லாமல் சீக்கிரமே உறங்கி விட்டாள். அவன் அருகில் இருக்கிறான் என்ற நிம்மதியா அல்லது  நடந்த  நிகழ்வின்  மனஉளைச்சலா என்று தெரியாது. 

 

காலையில் இவர்கள் செல்லுமுன்னே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்திருந்தது. எட்டு மணி போலே அந்த குழந்தைகளின் சிகிச்சை முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்றிய பின் அவர்களை பார்த்ததும் தான் முழுதாக மூச்சே விட முடிந்தது.

 

அதன் பின் இருவரும் ஒரே வண்டியில் குவாட்டர்ஸ் சென்று ரெடியாகி அலுவகம் சென்றனர். அங்கு இதற்கு சம்பந்தப்பட்ட எல்லோரையும் ரதி வர வைத்திருந்தாள்.

 

சாப்பாட்டில் கரப்பான் பூச்சி விழுந்துடுச்சு , பல்லி விழுந்துடுச்சுனு காரணங்கள் சொல்லிக் கொள்ளலாம் என்று வந்த சத்துணவு பணியாளர்கள் ரதியின் இறுகிய முகத்தையும் தீவிரத்தையும் பார்த்து பயந்து என்ன வர போகிறதோ என்று பதறி நிற்க, பள்ளியின் தலைமையாசிரியர் மட்டும் ஒரு வித அலட்சியத்தோடு நின்றிருந்தார்.         

 

வார்த்தைகள் தேவையில்லை…

உன் மௌனம் போதும்…

எனக்கான உன் தேடலை சொல்ல…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!