Skip to content
Post Views: 5,203
தூறல்…13
குரு அனுப்பி வைத்திருந்த புது ஃபோனில் இருந்து அழைத்திருந்தாள் அஞ்சலி.
Advertisement
“சொல்லு அஞ்சலி…”
கைப்பேசி மட்டுமல்லாமல் சிம்கார்டு அதற்கான எண் என்று அவன்தானே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான். அழைப்பது அவள் என்று தெரியாதா..?
Advertisement
Advertisement
“எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான ஃபோன்..?” அவள் குரலில் வருத்தம்.
“போன் இல்லாம என்ன பண்ணுவ..?”
Advertisement
“சாதாரண பட்டன் போன் செகண்ட் ஹாண்டில வாங்கிக்கலாம்னு நானே நினைச்சுட்டுதான் இருந்தேன்… ஆண்ட்ராய்டு இவ்வளவு விலையோட எதுக்கு..?*
இதுவும் செகண்ட் ஹேண்ட்தான்… ஆறு மாசம் பழசு… பெருசா யூஸ் பண்ணல… விலையும் ரீசனபிலா இருந்தது… பட்டன் போனை வச்சு உன்னால ஒன்னும் பண்ண முடியாது… அதான் வாங்கிட்டேன்… பிடிச்சிருக்கா..?”
“ம்ம்…” என்றவளின் குரல் முற்றிலுமாக உள்ளிரங்கி இருந்தது.
“அஞ்சலி… என்னாச்சு..?”
அவள் தொண்டை அடைத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு கேட்டான்.
“எ..எனக்காக நிறைய ப..பண்றீங்க… பிரதிபலனா எ..என்ன செய்யப் போறேன்னு தெரியல… தொடர்ந்து என்னை கடன்காரியாவே மாத்திட்டு இருக்கீங்க…”
“அப்படி எல்லாம் யோசிக்காத… நிம்மதியா இரு…”
“பக்கத்து வீட்டு சசி அக்கா ஏதோ தெரியாம பேசிட்டாங்க… நீங்க ஏதும் மனசுல வச்சுக்க வேணாம்…”
“எதைச் சொல்ற..?”
“அ..அதான்… அதான்… உ..உங்கள சவியோட அப்பா..ன்..னு…”
“அவங்க சொன்னதைப் பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்லையே..”
“நாளைக்கு அவங்ககிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிடுறேன்…”
“என்ன சொல்லுவ..?”
“எல்லாத்தையும்…”
“எல்லாத்தையும்னா..?”
அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.
“உன்னோட பிரச்சினைகளை என்னோட பிரச்சனைகளை எல்லாம் பாக்குறவங்ககிட்ட எல்லாம் சொல்லி புரிய வைக்கணும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா..?”
“அதுக்கு இல்ல… அவங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்களே…”
“நீ விளக்கம் கொடுத்தா இன்னும் அதிகமான தப்பான புரிதல்தான் வரும். நிறைய ஃப்ரீ அட்வைஸ் கொடுப்பாங்க… அக்கம் பக்கம் இருக்கிறவங்களை எல்லாம் ஒரு சின்ன சிரிப்போட கடந்து போயிடு… உன்னோட வேலையிலும் சவி மேலயும் மட்டும் கவனம் வை… நமக்கு சம்பந்தமில்லாதவங்ககிட்ட விளக்கங்கள் கொடுக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது…”
நிதானமாக தெளிவாக பேசியவனின் வார்த்தைகள் அவளுக்குள் நிறைய தெளிவினை கொடுத்தன. ஆரம்பம் முதலே ஒவ்வொன்றையும் இதே நிதானத்தோடுதானே கையாளுகிறான். இந்த நிதானம்தான் அவனை சீர்குலைக்காமல் நிமிர்த்தி நிலைநிறுத்தி வைத்திருக்கிறது என்பது புரிந்தது.
“ம்ம்… சரி…”
“சவி எப்படி இருக்கா..?”
“அவளை ப்ரீ கேஜி அட்மிஷன் போட்டுட்டேன்… ராதாம்மா எத்தனை நாள்தான் லீவு போட்டு பார்த்துப்பாங்க… என்கூடவே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறதுலயும் சிக்கல் இருக்கு…”
“ம்ம்… அதுவும் சரிதான்… அழாம போயிடுறாளா..?”
“ஒரே கேம்பஸ்தானே… இடையில போய் பார்த்துக்கிறேன்… கொஞ்சம் அழுதா… அப்புறம் நிறைய சின்ன பிள்ளைங்க இருக்கிறதால அப்படியே பழகிட்டா…”
“ம்ம்… பாத்துக்கோ…”
“எங்க வீட்டு ஆளுங்க எப்படி இருக்காங்க..?”
“நீதான் அவங்களை ரொம்ப மிஸ் பண்ற போல… அவங்கல்லாம் அவங்கவங்க வேலைய பாத்துட்டு சாதாரணமா இருக்குற மாதிரிதான் இருக்கு…” என்றவனின் பேச்சில் மெல்லிய சிரிப்பு தோன்றியது.
“எப்படியாவது என்னை மோப்பம் பிடிச்சு கண்டுபிடிச்சு வந்திடுவாங்களோன்னு உள்ளுக்குள்ள எந்நேரமும் ஒரு பயம் இருந்துட்டேதான் இருக்கு…”
நான் இங்கே பக்கத்திலேயேதான் இருக்கேன்… அவங்க அசைவுகளை பாத்துட்டுதான் இருப்பேன்.. நீ தேவை இல்லாம பயந்துக்க வேணாம்… வர மாட்டாங்க… வந்தாலும்…” என்று அவன் நிறுத்த
“வந்தாலும்..?” அவள் தொடர்ந்தாள்.
“நான் இருக்கேன்… பாத்துக்குறேன்…”
அந்த ஒற்றை வார்த்தை… அந்த ஒற்றை வார்த்தை… சாம்பிராணி கூம்பில் இருந்து பரவிய நறுமணப் புகைபோல் அவள் இதயம் முழுக்க ஆக்கிரமித்து ஆனந்தத்தை பரப்பியது. கீற்றாக கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்தது.
நான் இருக்கிறேன் என்ற இந்த ஒற்றை வார்த்தைக்கு ஏங்கிக் கிடப்பவர்கள் ஏராளம். அத்தனை வலு மிகுந்த வார்த்தைகள் அவை. அத்தனை எளிதில் யாரும் யாரிடமும் சொல்லிவிட முடியாது. அதிலும் கம்பீரமான ஆளுமையான அழுத்தம் திருத்தமான அந்த உச்சரிப்பு அதில் தெரிந்த அக்கறை என்று அனைத்தையும் அந்த நொடி உணர்ந்திருந்தாள் அஞ்சலி.
இந்த ஒரு வார்த்தைக்கும் இப்படி ஒரு அக்கறைக்கும் அவள் ஏங்கியது நிஜம்தானே. கனவாய் மாறிப்போன அவளது கல்யாண வாழ்க்கையில் இவற்றையெல்லாம் அவள் கிஞ்சித்தும் ருசித்தது கிடையாதே.
“ஹலோ அஞ்சலி… லைன்ல இருக்கியா..?”
தொண்டை அடைத்துக் கொண்டவளுக்கு பேச்சு எழாமல் போக அவளது அமைதியில் இவன் குரலில் பதட்டம்.
“ம்ம்… இருக்கேன்…” என்றாள் தொண்டையை செருமிக் கொண்டு.
அடுத்து அவன் எப்பொழுது வருவான் என்று கேட்க தொண்டைக்குழி வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டாள். தயக்கம் பெரும் தடை போட்டது. அத்தோடு அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்யவும் மனம் ஒப்பவில்லை. எந்நேரமும் சவி நச்சிக் கொண்டேதான் இருக்கிறாள். மாமாவை பார்க்கணும் என்று அவளை நோண்டிக் கொண்டேதான் இருக்கிறாள். அதைப்பற்றி கூறினால் அவளுக்காகவாவது அவன் ஓடி வருவான் என்பது தெரியும். ஆனாலும் வாராவாரம் அத்தனை தூரம் அவனை அலைக்கழிப்பதில் அவளுக்கும் சங்கடமாக இருந்தது.
“ப்ளஸ் டூக்கு ஹாஃப் இயர்லி எக்ஸாம் போயிட்டு இருக்கு… சாட்டர்டே சண்டே எல்லாம் இனிமே அவங்களுக்கு ஸ்கூல் வைக்கிற பிளான் இருக்கு… சோ ரெண்டு வாரத்துக்கு என்னால அங்கே வர முடியாது…”
அவள் தனக்குள் புதைத்துக் கொண்ட கேள்விக்கு அவனே பதில் கூறி இருந்தான்.
“பரவால்ல… சும்மா உங்களால அலைய முடியாது… நீங்க வேலையை பாருங்க…”
“சவிகூட அடிக்கடி போன்ல பேசுறேன்… சரியா…”
“ம்ம்..”
₹என்ன தேவை இருந்தாலும் மனசு சங்கடம் இருந்தாலும் தயங்காம எனக்கு கால் பண்ணு… அத்தை பக்கத்தில இருக்காங்க… அவங்ககிட்ட மனம் விட்டு பேசு… மனசுல எதையும் போட்டு அழுத்தி வைச்சுக்காதே… சரியா…”
இரும்பை ஒத்த அவனது எஃகு குரல் அவளிடம் மென்மையாகி தணிந்து ஆதுரமாக அக்கறையாக மாறி நின்றதில் அவளுக்குள் அப்படி ஒரு நிறைவு.
அதன் பின்னான நாட்களில் இருவருமே அவரவர் வேலைகளில் முழுமையாக ஆழ்ந்திருந்தனர். இயல்பாகவே ஆசிரியப்பணியில் விருப்பம் கொண்ட அஞ்சலி அந்த பள்ளியில் நன்றாகவே ஒன்றிப் போயிருந்தாள். அவளது கற்பிக்கும் முறையில் மாணவர்களும் அவளோடு ஒன்றிப் போயினர்.
அன்னையுடனே தினமும் பள்ளிக்கு சென்று வர பழகியும் இருந்தாள் சவி. தினமும் இரவில் அவர்களுக்கு வீடியோ கால் பேச தவறுவதில்லை குரு.
அவன் அழைத்தவுடன் சவி கேட்கும் முதல் வார்த்தை “எப்போ வருவீங்க மாமா..?” என்பதுதான்.
அவளோடு இனிக்க இனிக்க நேரம் காலம் தெரியாமல் கதைகள் பேசுபவன் அஞ்சலியிடம் மட்டும் நல விசாரிப்புகள் பொறுப்பான ஆலோசனைகள் போன்றவற்றோடு நிறுத்திக் கொள்வான்.
படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு போனை ஒரு கையில் பிடித்து தலையை ஆட்டி ஆட்டி இனிக்க இனிக்க பேசும் மகளை எதிரில் அமர்ந்து ஏக்கம் ததும்ப பார்த்துக் கொண்டிருப்பாள் அஞ்சலி. தன் மகளுக்கு கிடைத்த ஏதோ ஒன்று தனக்கு கிடைக்காதது போன்று அவளது மனம் பரிதவிக்கும்.
“நான் மட்டும் பாவப்பட்டவளா..? என்னையும் உங்களோடு கூட்டு சேர்த்துக்க மாட்டீங்களா..?’
இருவரின் மீதும் பொய் கோபம் முளைக்கும். ஆனால் மனதில் முளைக்கும் ஆசையை அவர்களோடு குறிப்பாக அவனோடு பகிர்ந்து கொள்ள முடியாதே.
இழுத்து பெருமூச்சுவிட்டு உலர்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருப்பாள்.
அன்று மாலை பள்ளி முடிந்து மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள் அஞ்சலி. வீட்டிலிருந்து ஓரளவு நடந்து போகும் தூரத்தில்தான் பள்ளி என்பதால் அன்றாடம் நடந்து போய் வருகிறாள். பாவாடை சட்டை போட்ட காலத்திலேயே வண்டி ஓட்டி பழகியவளுக்கு தெருமுனைக்கு செல்வதாக இருந்தாலும் கூட ஸ்கூட்டியை முறுக்கிச் சென்றுதான் பழக்கம். தொட்டதற்கெல்லாம் வண்டிதான். நடந்து செல்வது என்பதே அறவே குறைத்திருந்தவள். ஆனால் இப்போது இந்த நடை சோர்வை கொடுப்பது நிஜம்.
அதற்காக உடனடியாக ஸ்கூட்டி வாங்கிவிட முடியுமா என்ன..? இன்னும் இரண்டு நாட்களில் முதல் மாத சம்பளம் கையில் வந்துவிடும். குருவிற்கே நிறைய கொடுக்க வேண்டி உள்ளதே. கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனை அடைக்க வேண்டும். வீட்டுத் தேவைகளை சரிசெய்ய வேண்டும். ஓரளவு கையில் சேமிப்பு வந்த பின்பு தான் ஸ்கூட்டி பற்றிய சிந்தனையே மனதில் எழும்.
சிறிது தூரம் நடந்தாலே இரு கைகளையும் விரித்து தூக்கச் சொல்லி கை உயர்த்தி விடுவாள் சங்கவி. பாவம் குழந்தை எத்தனை தூரம் நடப்பாள்..? வேறு வழியின்றி அவளையும் தூக்கிக் கொண்டு நடப்பாள அஞ்சலி. மூச்சிரைத்து வியர்த்து கொட்டும். ஆனாலும் இப்பொழுது அதற்கெல்லாம் பழகிக் கொண்டாள்.
வீட்டை நெருங்கி வந்த வேளையில் பக்கத்து வீட்டு சசி காய்கறி கூடையோடு எதிரில் வந்து கொண்டிருந்தாள். வழக்கம்போன்றே இருவரையும் பார்த்து புன்னகைத்து சவியின் கன்னத்தை செல்லமாய் பிடித்து கிள்ளினாள்.
“பாப்பா ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சாச்சா..?”
கண்களை விரித்து செல்லமாக கேட்க சுட்டு விரலை கடித்து வெட்கமாய் சிரித்தபடி ஆம் என்று தலையாட்டினாள் சவி.
“சமத்து குட்டியா நீ..? ரெண்டு வாரமா அப்பாவும் இந்த பக்கம் வரல போல. புள்ள ரொம்ப ஏங்கிப் போயிடுச்சு போலயே…” அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தபடி கேட்டாள்.
“உன் வீட்டுக்காரருக்கு எங்கேம்மா வேலை..?”
சசியன் இந்த கேள்வியில் ஒரு நொடி தடுமாறிப் போனாள் அஞ்சலி.
“எல்லாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு அவசியமில்ல…” அன்று குரு சொன்னதுதான் நினைவில் உதித்தது.
“அ..அது மதுரை…”
தடுமாற்றத்தோடு பதிலும் கூறியிருந்தாள்.
“என்ன வேலை பாக்குறார்..?”
“அ..அவரும் ஸ்கூல் டீச்சர்தான்…”
“ஓ அப்படியா… கவர்மெண்ட் ஸ்கூலா..?”
“இ..இல்ல பிரைவேட்தான்…”
“அப்புறம் என்னம்மா..? இங்கேயேகூட வேலையை மாத்திட்டு வந்துடலாமே… புள்ளைங்க வளர்ந்து ஆளாகும்போது அம்மா அப்பா ரெண்டு பேரும் கூட இருந்தாதான் நல்லா இருக்கும். அதுவும் இந்த குட்டி அப்பாமேல ரொம்ப பாசம் வச்ச புள்ள மாதிரில தெரியுது. புள்ள ஏங்கி இளைச்சு போயிடும்மா… உங்க வீட்டுக்காரரை பேசாம இங்கேயே வரச் சொல்லிடுங்க…”
எதார்த்தமாக அவர் பேசிக் கொண்டே செல்ல மாறும் முகத்தை மறைத்துக் கொண்டு வலிய புன்னகைத்து தலையை ஆட்டி அங்கிருந்து வேகமாக நடையை கட்டினாள் அஞ்சலி.
அவள் தாடையைப் பற்றி தன்னை பார்க்கச் செய்தாள் சவி.
“குரு மாமாதான் அப்பாவாம்மா..?”
மூன்று வயது பச்சிளம் பாலகியின் குரலில்தான் எத்தனை ஆர்வம். அந்த விழிகள் அப்படி மின்னி பளிச்சிட்டன. இருவரின் சம்பாஷணைகளையும் எத்தனை ஆழமாக கவனித்திருக்கிறாள்.
அப்பாவா என்ற அந்த கேள்விக்குள் எத்தனை தவிப்பு தேங்கி இருக்கிறது… தந்தையின் முகத்தையே பார்க்காமல் அந்த குரலை, ஸ்பரிசத்தை, அன்பை, இப்படி எதையுமே உணராமல் பிறந்து வளர்ந்தவளுக்கு அதைத் தாண்டி உறவு பற்றிய ஆராய்ச்சி எழவில்லை. அப்பா என்ற அந்த ஒற்றை வார்த்தை மட்டும் ஆழமாக உள்ளுக்குள் பதிந்து போக சில நொடிகளில் அந்த முகம் அப்படி மின்னி ஜொலித்தது.
மகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடிப் போனாள் அஞ்சலி. பிறந்தது முதல் அவள் பார்த்து வளர்ந்தது அன்னை, தாத்தா, பாட்டி, எப்பொழுதாவது மாமா என்று இவர்களைத்தானே. தந்தை என்ற ஒருவனைப் பற்றி அவளிடம் சொல்லி விளக்கி புரிய வைத்ததில்லை அவள். அதற்கான அவசியமும் அவளுக்கு இருந்ததில்லை. வருத்தத்தில் விழுந்து கிடந்தவளை வெறுப்பின் உச்சத்தில் தள்ளி சென்றிருந்தான் இறந்த பின்பும் அந்த அசோக்.
அவனைப் பற்றி சொல்லி சிலாகிக்க எதுவுமே இல்லை என்பதால் அப்பா என்ற ஒருவனை பற்றி அவளுக்கு இவள் விளக்கம் அளித்ததே இல்லை. ஆனால் அந்த குழந்தைக்குள்ளும் அப்பாவை தேடி ஏக்கம் அழுத்தமாக பதிந்து கிடக்கிறது என்பதை குருவோடு அவள் விளையாடிய பொழுதுகளில் இவள் உணர்ந்திருக்கிறாள். இன்று அவன்தான் அப்பாவா என்று இவள் கேட்ட அந்த வார்த்தையில் மொத்தமாக திணறி தடுமாறிப் போனாள் அஞ்சலி.
என்ன பதில் சொல்வாள்..?
ஆம் என்றா..? இல்லை என்றா..?
ஆம் என்றால் என்ன விளக்கம்..?
இல்லை என்றால் என்ன விளக்கம்..?
எதுவுமே பேசத் தோன்றாமல் அமைதியாக நடந்து வர தாயின் முகத்தை மீண்டும் தன்னை நோக்கி திருப்பி “சொல்லுங்கம்மா குரு அப்பாதானே…” என்றாள் பழி.
மகளின் முகம் பார்த்தபடியே அதே இடத்தில் நின்று போனாள் அஞ்சலி. இதயம் கனத்து வலித்தது.
“அம்மாவுக்கு தலை வலிக்குது செல்லம்… வீட்டுக்கு போய் பேசிக்கலாமா.?”
முகத்தை சுருக்கி பாவமாக கேட்க சரியென தலையாட்டியவள் அதற்குமேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடியே வீட்டைத் திறந்து நுழைந்திருந்தாள் அஞ்சலி.
அன்றைய இரவு வழக்கம் போன்றே அதே நேரத்திற்கு குரு வீடியோ காலில் அழைப்பு விடுத்திருக்க வேகமாக கைப்பேசியை பாய்ந்து எடுத்த சவி “அப்பா…” விழிகள் மின்ன இதழ்கள் ஆசையில் விரிந்திருக்க ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் ஆசைகளை கொட்டிய அவளின் அந்த குரலில் எதிர்முனையில் இருந்தவன் அதிர்ந்து சிலையாகி அமர்ந்திருந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!