Skip to content
Post Views: 4,735
அத்தியாயம் – 25
வேதா, பகலில் வாணி, சுதீப்புடன் பேசியபின், இவள் பங்கு வேலைகளை முடிக்க உட்கார்ந்தால் குழந்தை அழுதான். இரவு பத்து பத்தரை வரை பெற்றவர்கள் பார்த்துக்கொண்டாலும், அதன்பின் அவள்தான் பார்க்கவேண்டும்.
விவேக்குட்டியும் இரவில் இப்பொழுதெல்லாம் முழித்துக்கொண்டிருந்தான். இரவு ஒரு மணி வரை விழித்திருந்தாலும், அவளால் முழுதாக செய்ய நினைத்ததை முடிக்க முடியவில்லை. காலையில் ஏழு மணிவரை அம்மாவும் பிள்ளையும் உறங்கினார்கள்.
விக்ரமிடம் பேசியவள். பெற்றவர்களிடம், “அம்மா, என்னால நைட் இவனையும் பார்த்துகிட்டு என் ப்ராஜெக்டையும் கவனிக்க முடியலை. நைட் நீ பார்த்துக்கோம்மா. சமையலுக்கு ஒரு ஆளைப் போட்டுக்கலாம். “
Advertisement
“என்னடி… இப்படி சொல்ற ? வெளியாள் எல்லாம் வந்து சமைச்சா சரி வராது. நானும் அப்பத்துலர்ந்து சொல்றேன். உன் உடம்பையும் பிள்ளையயும் பாருன்னு. யார் என் பேச்சை கேக்கறீங்க ?”
“மா… ஒண்ணு குழந்தையை பார்த்துக்க ஆள் போடணும், இல்லை சமைக்க ஆள் போட்டு நீ குழந்தையை பார்க்கணும். எனக்கு குழந்தையை வெளியாள் கிட்ட விட இஷ்டம் இல்லை. முடியாது, எனக்கு சமையல்தான் முக்கியம்னு நீ சொன்னா, அடுத்து நான் மாமியார்கிட்டதான் போய் நிக்கணும்.”
“அதுக்கில்லை வேதா… “, மறுபடியும் கோமதி இழுக்க, “ வெளியாள்தான வேண்டாம் ? நான் போன் பண்ணி பாலாமணி அக்காவை வர சொல்றேன். சமையலை அக்கா பார்த்துகிட்டும். குழந்தையை நீ பாரு. வேதாவை படிக்க விடு. மிஞ்சி போனா இன்னும் ரெண்டு மாசம். அதுக்குள்ள அவ ப்ராஜக்ட் முடிச்சுடுவா.”, என்றார் சௌந்தர்ராஜன்.
Advertisement
“பாலா அக்காவா ? அவங்க வாயில யார் சிக்கறது ?”, கோமதி முகம் சுளித்தார்.
Advertisement
[the_ad id=”6605″]
Advertisement
“ நமக்காக உதவி பண்ண கூப்பிடறோம். உன்னை கேள்வி கேட்டா உனக்கு பிடிக்காதுதான். ஆனாலும் பொண்ணுக்காக, பேரனுக்காக, அவங்க ஏதாவது சொன்னாலும் பொறுத்துப்போ. தப்பில்லை.”
“மாப்பிள்ளை நிக்க வெச்சி கேட்டாரில்லை ? படிக்கற பொண்ணை கல்யாணம் குழந்தைன்னு இழுத்துவிட்டு, நான் பார்த்துக்கறேன் பிள்ளையன்னும் வாக்கு குடுத்தீங்க இல்லையான்னு ? உனக்கு எப்படியோ, ஆனா சொன்ன சொல்லை எனக்கு காப்பாத்தணும். நம்மை நம்பித்தான் விட்டுட்டு போயிருக்கார். “, அதிசயமாக என்றோ வரும் கோபம், அன்று வந்தது சௌந்தர்ராஜனுக்கு.
“எவ்வளவு லேசா சொல்ற ? படிப்பை விடுன்னு ? அதுக்கா மாப்பிள்ளை எண்பதாயிரம் போட்டு அவளுக்கு லாப்டாப் வாங்கி குடுத்திருக்கார். போக வர கார் ஏற்பாடு பண்ணிருக்கார் ? வேதா தனக்காக இல்லாட்டியும் அவருக்காக கண்டிப்பா இதை நல்லபடியா முடிக்கணும்.”, அழுத்தமாய் சொல்லி முடித்தவர், கோமதியின் பதிலுக்கு காத்திருக்காமல், அவர் ஊரிலிருக்கும் பெரியப்பா பெண் பாலாமணிக்கு போன் செய்தார்.
சில நாட்கள் கழித்து, “பாலா அத்தை வந்தப்பறம் பரவாயில்லை வீரு. நைட் எட்டு மணிக்கு நான் சாப்பிட்டு குட்டிக்கு பால் குடுத்துட்டு, அம்மா கிட்ட விட்டுடறேன். ஒன்பதுலர்ந்து ஒரு மணி வரை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. வேலை வேகமா முடியுது. ”
“நீ எப்ப தூங்கற ? உன் உடம்பையும் பார்த்துக்கோமா… “, என்றான் விக்ரம்.
“ முதல் ப்ரசென்டேஷன் வர வெள்ளிக்கிழமை. அது கரெக்டா முடிக்கணும். எல்லா ப்ரொஃபசர்ங்களும் வருவாங்க. அவங்க கன்வின்ஸ் ஆகணும். அதுனாலதான் டென்ஷன். அதுக்கப்பறம் ஒரு மூணு வாரம் டைம் இருக்கு, அடுத்த ஸ்டேஜ் முடிக்க.”, என்று விளக்கினாள்.
“சரி, குட்டிக்கு எப்ப தடுப்பூசி போடணும் ? டேட் பார்த்தியா ?”
“அச்சோ, மறந்துட்டேன். இருங்க, இப்பவே கார்டைப் பாக்கறேன்.”, அவசரமாய் எடுத்துப் பார்த்தவள்.
“ஹோ…வியாழக்கிழமை காலைல வீரு. அடுத்த வாரமா இருந்தா நல்லா இருந்திருக்கும்… சரி அட்ஜட் பண்ணுவோம்.”, என்றாள்.
“ம்ம்… கார்டை எனக்கு போட்டோ எடுத்து அனுப்பு. நான் டேட் செக் பண்ணி உனக்கு சொல்றேன் இனி. “, என்றான்.
வியாழக்கிழமை காலையில் சென்றது வீடு திரும்பவே மதியம் ரெண்டு மணியானது. டி.பி.டி தடுப்பூசி போட்டது, குழந்தை வலியினால் அழுது கொண்டிருந்தான் . டாக்டர் ஜுரம் வரும் என்று மருந்தும் கொடுத்திருந்தார்.
வீட்டிற்கு வந்ததும், பிள்ளைக்கு பால் கொடுத்தாள், பசியில் சற்று குடித்து, வலியில் மீண்டும் அழுதான். வேதாவிற்குமே பசி தாளவில்லை. சுதீப்பும் வாணியும் இன்னும் அரை மணியில் வந்து விடுவார்கள். இன்னும் ஒரு வேலையும் ஆகவில்லை. அழுகை ஆத்திரம் இயலாமை என்று கலவையாக இருந்தாள்.
பாலா அத்தை உள்ளே வந்தவர், அவள் கலங்கிய கண்களும், முகமும் பார்த்து, “ வேதா, குழந்தை அப்படித்தான் அனத்துவான். நான் பார்த்துக்கறேன். ஏதோ வயறு காயாம இருக்க கொஞ்சம் பால் உள்ள போனா போறும். நீ போய் சாப்பிடு முதல்ல. கொஞ்சம் தெம்பு வரும். மத்த வேலை புரியும்.”, என்று அனுப்பி வைத்தார்.
அரக்க பரக்க சாப்பிட்டவள், திரும்பி வந்ததும், “ ஜுரம் ஆரம்பிச்சிடுச்சு. நீ எவ்ளோன்னு பார்த்துட்டு, மருந்து குடு. அப்பறம் கொஞ்சம் பாலை குடுத்துப் பாரு. “, என்றார் பாலா அத்தை.
ஊசி போட்ட இடம் அசைந்தாலே அழுதான். லேசான காய்ச்சல்லுக்கே குழந்தை வாடியிருந்தான். உதடெல்லாம் காய்ந்திருந்தது. பாலை பாட்டிலில் எடுத்து, அவன் வாய்க்குள் வைத்து லேசாய் அவளே அழுத்திவிடவும், பால் சற்று வர, சப்பினான். தானாய் பிடித்து குடிக்கவில்லை. எவ்வளவு நேரம் இப்படி குடிக்க முடியும்? பாலா அத்தை மடியிலிட்டு பாலாடையில் குடுக்கலாம் என்றதற்கும் வேதாவிற்கு பயம். சின்ன ஸ்பூனில் வாயோரம் கொஞ்சமாய் விட்டாள். இந்த கலாட்டாவில், சுதீப்பும், வாணியும் வந்துவிட்டார்கள்.
வேதாவிற்கு ஒன்றும் ஓடவில்லை. கோமதியும் பாலா அத்தையும் பிள்ளைக்கு மெதுவாக பாலை புகட்ட, வேதா சுதீப்புடனும், வாணியுடனும் அமர்ந்தாள். மறு நாள் செய்ய வேண்டிய ப்ரெசென்டேஷன், ஆசிரியர்கள் என்ன மாதிரி கேள்விகள் வைப்பார்கள், எப்படி அதற்கு பதில் சொல்லவேண்டும் என்று ஒத்திகை ஓடியது. வேதாதான் பாவம் கவனம் சிதறிக் கிடந்தாள். மேலும், அவள் பங்கு செய்ய வேண்டிய வேலைகள் சிறிதும் தொக்கி நின்றது.
பொறுத்துப் பார்த்த சுதீப், “வேதா, உன் கவனம் இங்க இல்லவேயில்லை. இது டைம் வேஸ்ட். “, எனவும், அவள் கண்கள் கலங்கிவிட்டது.
“சுதீப், பாப்பாக்கு அப்படி இருக்கும்போது, என்ன பண்ணுவா ? நீ சொல்றது நியாயமே இல்லை.”, என்று பாய்ந்தாள் வாணி.
“நான் உண்மையைத்தான் சொன்னேன். ஒரு மணி நேரமா என்ன முடிச்சிருக்கோம் சொல்லு ? ”, அவளுக்கு பதிலளித்தவன், வேதா புறம் திரும்பி, “ சாரை பார்த்து, இன்னும் ரெண்டு நாள் டைம் வேணும்னு கேட்டு பார்க்கவா ? “, என்றான் அமைதியாக.
“நோ… இதுவே டிலேன்னா, நம்ம முடிப்போமான்னே எல்லாருக்கும் சந்தேகம் வரும். நாளைக்கு மூணு மணிக்கு கண்டிப்பா நாம் சொன்னபடி ப்ரெசண்ட் பண்றோம். இன்னைக்கு நைட் முழுசும் முழிச்சாவது நான் முடிக்கறேன். வாணி, காலைல அஞ்சு மணிக்கு நீ எழுந்து பாரு. ரிசல்ட் ரெடியா இருக்கும் உன் மெயில்ல, நீ ப்ரசென்டேஷன் ஃபைலை அப்டேட் பண்ணு. சுதீப், பத்து மணிக்குள்ள நீ செக் பண்ணி அனுப்பிடு. சரியா மதியம் 12 மணிக்கு காலேஜ்ல மீட் பண்ணி யார் எதை எப்படி சொல்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.”, மடமட வென்று முடிவு செய்தாள்.
“முடியுமா வேதா… நைட் பூரா முழிச்சு, திரும்ப காலேஜ் வந்து, குட்டிக்கு இப்படி இருக்கும்போது..?”, என்று வாணி கேட்கவும்,
“ இல்ல, நாளைக்கு அவனுக்கு சரியாகிடும். இன்னைக்கு தள்ளறதுதான் கஷ்டம். நான் மானேஜ் பண்ணிக்குவேன். நீங்க இப்ப கிளம்புங்க. உங்க வேலைங்க எல்லாம் சரி பண்ணிடுங்க. என்னோடது மட்டும் இருக்கட்டும்.”
[the_ad id=”6605″]
அடுத்த ஐந்தாவது நிமிடம், பிள்ளையிடம் வந்து அமர்ந்தாள். அதுவரை சிணுங்கிக்கொண்டிருந்தவன், அவள் மடி வந்ததும் அமைதியானான்.
“பார்த்தியா, ஒரு மாசம்தான் ஆகுது, ஆனாலும் அம்மா மடி நல்லா தெரியுது.”, கோமதி பெருமை பட்டுக்கொண்டார்.
“நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க, எல்லா வேலையும் அப்படியே கிடக்கு.”, என்று கோமதியையும், பாலாமணியையும் அனுப்பியவள், குழந்தைக்கு பால் புகட்டி, மருந்து கொடுத்து என்று கவனமாகினாள். விக்ரமிடமும் குழந்தையைப் பற்றி பேசினாள். அவன் அவள் ப்ராஜெக்ட் பற்றி கேட்டபோதும்,
“நான் பார்த்துக்கறேன் வீரு. மனசுக்குள்ள அது ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கு. அதை நேரம் கிடைக்கும்போது டெஸ்ட் பண்ணி, ரிசல்ட் பொருத்து பாராமீட்டர்ஸ் அட்ஜஸ்ட் பண்ணனும். முடிச்சுடுவேன்.” என்றாள்.
அவள் வைராக்கியம் பார்த்து பெருமை கொண்டாலும், “உன்னையும் பார்த்துக்க வேதா…”, என்று அட்வைஸ் செய்தே வைத்தான்.
அன்றிரவு அவள் எதிர்பார்த்தது போலவே, குழந்தை உறங்கும்போது வேலை பார்த்தாள். முழு மனதாய் ஒன்றிச் செய்திருந்தால் இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பாள். விட்டு விட்டு செய்தது ஜவ்வாய் இழுத்தது, ஆனாலும் அலுக்காமல், தொய்வடையாமல் ஒரு வேள்வியாய் செய்தாள். அவள் நினைத்ததை விடவும் சிறப்பாக வந்திருந்தது. வாணிக்கு மெயில் செய்யும்போது விடியற்காலை நான்கரையை கடந்தது.
குழந்தைக்கு ஜுரம் விட்டிருந்தது. அவனை சுத்தம் செய்து, மீண்டும் கொஞ்சம் பால் புகட்டி, பக்கத்திலேயே போட்டு படுத்தவள், ஏழு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள்.
வேலைகள் இழுத்துக்கொண்டன. சொன்ன நேரத்திற்கு அவர்கள் ப்ரசன்டேஷன் அழகாய் நடந்தது. ஆசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் மூவரிடமிருந்தும் தடையின்றி வந்தது. முடிவில் அனைவருமே பாராட்டினர்.
“ரியல் லைஃப் டேட்டா வாங்கிருக்கேன்பா. லாப் இன் சார்ஜ் நாராயண் சாரை பாருங்க. ஆனா உங்க தேவைக்கு, கொஞ்சம் டேட்டா க்ளீன் பண்ணனும். அவரோட இருந்து சரி செய்யுங்க. சரியான ட்ராக்ல இருக்கீங்க. கண்டிப்பா அச்சீவ் பண்ணுவீங்க. நான் எதிர்பார்த்ததைவிட இப்பவே பெர்ஃபெக்ஷன் வந்துருக்கு உங்க மாடல்ல. குட் லக்.”, என்று பாராட்டினார் அவர்களின் HOD.
பூரித்துப்போனார்கள். வீட்டுக்கு வரும் வழியெல்லாம் விக்ரமிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தாள். அவள் பேசியது பாதி புரியாவிடினும் அவள் சந்தோஷம் அவனையும் தொற்றியது. அவளை வாழ்த்தியவன்,
“எல்லாம் சரி, வீட்டுக்குப் போய் என் பிள்ளையை கவனிச்சிட்டு தூங்கு. இன்னைக்கு நைட் குட்டிய உங்கம்மா பார்த்துக்கட்டும். உன் கண்ணெல்லாம் தூங்காம சிவந்து கிடக்கு. ரெஸ்ட் எடு. எல்லா வேலையும் நாளைக்கு பார்த்துக்கலாம்.”, என்று ஸ்ட்ரிக்ட்டாய் சொல்லி வைத்தான்.
அடுத்த வந்த நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தது வேதாவிற்கு. குழந்தையின் தேவைகளையும், அவள் ப்ரொஜெக்டின் தேவைகளையும் சமாளிக்கக் கற்றிருந்தாள். விவேக்கும் இரவில் ஒரு வழியாக தூங்கக் கற்றிருந்தான். இரவில் இரு முறை பால் கொடுத்தால் போதும். அதுவே அவளுக்கு வேலைக்கான அமைதியான நேரத்தைக் கொடுத்தது. முன்னிரவில் அவள் ப்ராஜெக்டுக்கு உண்டானதை செய்து, குழந்தைக்கு பால் கொடுத்து, பின்னிரவில் ஒரு மணி போல் உறங்கினாள். காலை கோமதி குழந்தையை எடுத்துச் சென்றிடுவார், அதனால், ஏழு, எட்டு மணி வரை உறங்க முடிந்தது.
மூன்றாம் மாதக் கணக்கில் பர்வதம் மாலினியோடு வந்து, முறையாய் வேதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு நாள் இருந்தவள், படிப்பு முடிந்தபின் வருவதாகச் சொல்லி மீண்டும் தாய் வீடு வந்துவிட்டாள்.
ராஜேந்திரனின் ஜாதகத்தை எடுத்து ஜோசியரிடம் காண்பித்து திரும்பியிருந்தார் சௌந்தர்ராஜன்.
“என்ன சொன்னார் ஜோசியர் ? எப்ப கல்யாணத்துக்கு பார்க்கலாம்ன்னார் ?”, ஆவலுடன் கேட்டார் கோமதி.
“ஒரு ஆறு மாசம் போகட்டும்னு சொன்னார். நீ வரலையான்னு கேட்டார்.”
[the_ad id=”6605″]
“ ஓ.. ஆறு மாசம் கழிச்சு உடனே தகஞ்சிடுமாமா ?”
“அப்படில்லாம் சொல்லலை. ஆனா, பிள்ளையை கேட்டுட்டு செய்யுங்கன்னு சொன்னார்.”, என்று கோமதிக்கு பதிலுரைத்தார் சௌந்தர்ராஜன்.
“ஏனாம் ?”
“ராஜாவை கேட்டுதான் ஜாதகம் குடுத்தீங்களான்னு கேட்டார். இல்லை அவனுக்கு தெரியாதுன்னு சொன்னேன். அதுக்கு சொன்னார். பிள்ளையை கேட்டு வரன் பாருங்கன்னு. அதுவும் ஒரு ஆறு மாசம் போகட்டும்ன்னார்.”
“சரி … அப்படித்தான் பார்ப்போம். வேதா ஊருக்கு போனதும் இவன் வேலையை ஆரம்பிப்போம்.”, என்று ராஜேந்திரனுக்கு, அவனுக்குத் தெரியாமலேயே வாய்தா கொடுத்தார்.
ஆறு மாத முடிவில் என்ன அக்கப் போரோ ?
error: Content is protected !!