Skip to content
Post Views: 5,919
“இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு
மு.வ விளக்க உரை: இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.”
இப்போது தேவ ரஞ்சனாவிற்கு அதிரனிடம் சற்று பயம் எழுந்திருந்தது. அந்தக் குரலின் ஆளுமை அவளை உள்ளுக்குள் சில்லிட வைப்பதாய் இருந்தது.
என்ன பேசுவதென தெரியாமல் முதல் முறையாய் தடுமாற்றமாய் நின்றாள்.
Advertisement
வெறுமென வேலையை விட்டுத் தூக்கியிருந்தால் கூட பெரிதல்ல ஆனால் இப்போது நிச்சயமாக அவனே வேலையை ராஜினாமா செய்து விட்டல்லவா செல்வான்.
எவ்வித ஹீரோயிசமும் இன்றி அவனது நுனி நகம் கூட எதிராளியின் மேல் படாமல் அவன் விரலை வைத்தே கண்ணை குத்த வைத்து விட்டானே என்று தான் நினைத்தாள்.
“தேவ ரஞ்சனா!”, என்றவனின் குரலில் திடுக்கிட்டவளாய் சிந்தனையில் இருந்து மீண்டு அவனை பதட்டமாய் ஏறிட்டாள்.
Advertisement
“கூப்பிட்டுட்டே இருக்கேன் என்ன யோசனை?”
Advertisement
“..”
“உங்க மேல கை வைச்சவங்க பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா?”
“அதெல்லாம் வேண்டாம் சார்..”
Advertisement
“??”
“கேஸ் கோர்ட்னு எல்லாம் அலையுறதுக்கு விருப்பம் இல்ல சார்.
இப்போ கொடுத்ததே அவனுக்கு பெரிய தண்டனை தான். இதை இப்படியே விட்டுரலாம்.”, என்றவள் பேசும் போது ஏற்பட்ட வலியில் லேசாய் முகம் சுருக்கினாள்.
அதை கவனித்தவனாய் அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியில் இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டி,
“ஹோல்ட் இட். கொஞ்சம் பெட்டரா இருக்கும்.”, என்றதில் மறுக்காமல் வாங்கி ஒத்தடம் போல் வைத்து எடுத்தாள்.
அதற்குள் வசந்தும் வந்துவிட மூவருமாய் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
செல்லும் வழியெங்கும் அதிரன் தான் தேவாவின் கவனத்தை ஈர்த்திருந்தான்.
என்ன ஒரு ஆளுமை என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அதிலும் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்து அவன் நின்ற தோரணை!
அதை விட அவனின் லேசான பழுப்பு நிற கண்கள் அதில் அடக்கப்பட்டிருந்த கோபம் இப்போதும் அவளுக்கு உதறலைக் கொடுத்திருந்தது.
இதுவரை எப்படியோ இனி அவனிடம் சற்று பணிந்து, அது அவளுக்கு வராது தான் ஆனாலும் அப்படி ஒரு பிம்பத்தையாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
மாலை வீட்டிற்கு அவள் வந்த பிறகும் அவினாஷ் வராமல் இருக்க நொடிக்கு ஒரு முறை வாசலைத் தான் பார்த்திருந்தாள் தேவா.
ஏதோ பைக் சத்தம் கேட்டு வெளியே அவள் பார்க்க சாருகேஷின் பைக்கில் இருந்து இறங்கிய படி அவனுக்கு கையசைத்தான் அவினாஷ்.
“அவி ஏன் லேட்?”
“சாருகேஷ் அண்ணா அவங்க டீமில் என்னை சேர்த்துகிட்டாங்க கா..”, என்றவனின் குரலில் சிறு பிள்ளையின் துள்ளல்.
தாய் தந்தை இறந்த பின் அதிலிருந்து வெளியே வரவே அவனுக்கு நேரமெடுத்தது.
அதோடு இருந்த கடன் பிரச்சனையில் இந்த வகுப்பிற்கெல்லாம் செலவு செய்ய வேண்டாம் என்று அமைதியாகவே இருந்து விட்டான்.
இன்று தம்பியின் விழிகளில் தெரியும் உயிர்ப்பு தேவாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ஆதுரமாய் தம்பியின் தலை முடியைக் கலைத்து விட்டவள்,
“எதுவும் தேவைப்பட்டா சொல்லு அவி. பணம் தரேன் நீ போய் பார்த்து வாங்கிக்கோ.”, என்றதில் இன்னுமாய் குஷியாகி விட்டிருந்தான்.
நாட்கள் அதன் போக்கில் நகர அன்றைய தினம் இருந்த வேலையில் விழி பிதுங்கியது அதிரனுக்கு.
நல்ல தலைவலி வேறு இன்டர்காம் ஒலிக்க கடுப்போடு அழைப்பை ஏற்றவன் என்னவென விசாரிக்க சிருஷ்டி என்ற பெண் அவனைப் பார்க்க வந்திருப்பதாய் கூற தலையில் கை வைத்தவனாய் உள்ளே அனுப்புமாறு கூறினான்.
“ஹாய் அதிரன்.”
“ஹாய் வாங்க..”, என்றவன் இருக்கையைக் காட்ட அதில் அமர்ந்து கால் மேல் கால் போட்ட வண்ணம் அறையைச் சுற்றி பார்வையைச் சுழற்றினாள்.
“வெரி நைஸ் ஆபீஸ்..”, என்றதற்கு லேசான புன்னகையை பதிலளித்தவன் கணினியில் ஒரு கண்ணும் அவளிடம் ஒரு கண்ணுமென இருக்க,
“நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிடலையே அதிரன்?”
“அப்படியெல்லாம் இல்ல சொல்லுங்க என்ன விஷயம்?”
“நத்திங் சீரியஸ் பட் ஜஸ்ட் உங்களை மீட் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்.”
வசந்த் இன்று விடுமுறையில் இருக்க வந்தவள் அவளாக வெளியேறாத வரை இன்று அவன் தப்பிப்பதற்கு வழியே இல்லை எனும் நிலை தான் அதிரனுக்கு.
அவனும் தனக்கு வேலையிருப்பதை பலவாறாக குறிப்பால் உணர்த்தினாலும் அவளோ எதற்கும் அசைவதாய் இல்லை.
தற்பெருமையும் குடும்பத்தின் தம்பட்டமும் என்ன நிமிடங்கள் நெருப்பில் கரைவதான நிலை அதிரனுக்கு.
தங்கைகள் குடும்பத்தோடு தொடர்புடையவள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவனுக்கு வராத பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம் தற்செயலாய் தேவா ஒரு கையெழுத்திற்காக உள்ளே வர கையெழுத்திட்டுக் கொண்டே அவளை ஒரு ஆழ் பார்வை பார்த்தான்.
ஒரு நொடி அதில் தடுமாறியவள் ஒன்றும் கூறாமல் வெளியேறி விட சரியாய் ஒரு நிமிடம் கழித்து மீண்டுமாய் கதவைத் தட்டி நின்றாள்.
என்னவென அதிரன் அவளை ஏறிட தயக்கமிருந்தாலும் மெதுவாய்,
“மீட்டிங் ரூம் ரெடியா இருக்கு சார். உங்களுக்காக தான் வெயிட்டிங்.”, என்றதில் சட்டென இருக்கையில் இருந்து எழுந்திருந்தான் அதிரன்.
“ஓகே மிஸ் சிருஷ்டி நாம இன்னொரு நாள் பார்க்கலாம். அண்ட் இனி வர்றதுக்கு முன்னாடி அப்பாயிண்ட்மென்ட் செக் பண்ணிகோங்க.”
“!!”
“பிகாஸ் எப்பவுமே நான் இங்கே இருக்க மாட்டேன்.”
“ஓ புரியுது. ஓகே அதிரன் சீ யூ.”, என்றவள் தேவாவை கடந்து வெளியே சென்றிருக்க தேவாவிற்கோ பயத்தில் கைகள் வியர்த்து விட்டிருந்தது.
“அது.. சார்.. நீங்க.. இதை தான் சொன்னீங்கனு தோணிச்சு.. வசந்த் சொல்லிருக்காரு..”, என்றவளுக்கு உண்மையிலேயே அதிக பிரசங்கி தனம் செய்து விட்டதைப் போன்ற உணர்வு.
அதை விட இப்போதெல்லாம் அவனது கண்ணைப் பார்ப்பதற்கே ஒரு வித பயம் எழுந்திருந்தது.
“தேங்க்ஸ் ரஞ்சனா!”, என்றவனின் குரலில் விழுக்கென நிமிர்ந்தவள் நிம்மதிப் பெருமூச்சுடன் மெலிதாய் புன்னகைத்து வெளியேறி இருந்தாள்.
அதிரனோ தனதிருக்கையில் அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டிருந்தான்.
தன் பார்வையின் அர்த்தத்தை அவள் உணர்ந்து கொண்டதில் பெரும் ஆச்சரியம் அவனுக்கு.
காத்யாயினி அதன் பின் வசந்த் இருவர் மட்டுமே அவனது அமைதியைக் கூட புரிந்து கொள்பவர்கள்.
அதிலும் வசந்த் வந்த மூன்று வருடங்களில் இப்போது தான் அந்த நிலைக்கு வந்திருக்கிறான்.
ஆனால் தேவாவின் புரிதல் எதோ ஒரு வகையில் அவனுக்கு சிறிதான இலகுத் தன்மையைக் கொடுத்திருந்தது.
பேசவே விருப்பமில்லை என்பவனுக்கு அவளோடு ஓரிரு வார்த்தை பேசிவிடும் ஆர்வம் எழ தன்னைத் தானே கட்டுப் படுத்தியவனாய் வேலையை கவனிக்கச் சென்றிருந்தான்.
கயல்விழியும் காயத்ரியும் நாத்தனார் திருமணத்தில் தாய் சொன்ன விஷயத்தை நம்ப முடியாதவர்களாய் இன்று தான் நேரம் கிடைக்க தாய் வீட்டிற்கு ஓடி வந்திருந்தனர்.
“ம்மா என்ன விஷயம்? யாரு பொண்ணு சொல்லுங்க?”, என்ற மகள்களின் ஆர்வத்தில் சிரித்தவராய் இன்னுமும் பத்திரப் படுத்தி வைத்திருந்த தேவாவின் புகைப்படத்தை அவர்களிடம் நீட்டினார்.
“ரொம்ப சிம்பிளா இருக்காங்க மா.”
“ஆனால் அண்ணாக்கு பொருத்தமா இருப்பாங்கனு தான் தோணுது.”
“எந்தக் குடும்பம்? அண்ணா பார்த்துட்டாரா?”, என்றதில் காத்யாயினி முதலிலிருந்து அனைத்தையும் கூறினார்.
“ஒரே ஆபீஸ் அதுவும் அண்ணாக்கு ரிப்போர்டிங்கா?”
“..”
“இதெல்லாம் ஒத்து வரும்னு நினைக்குறீங்களா மா? அண்ணா எங்க குடும்பத்துக்கே யோசிச்சார். உங்களுக்காக தான் ஒத்துக்கிட்டாரே!”
“பிடிக்காதவன் ஏன் தினம் தினம் அந்த பொண்ணை சந்திக்குற நிலைமையை வர வைச்சுக்க போறான்?”
“..”
“அதுவுமில்லாம அவ அங்கே வேலை செய்றதைப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்லை.”
“எல்லாம் சரி தான் மா.. ஆனாலும்..”
“காயூ உங்க வாழ்க்கைக்கே நான் பணத்தை பெருசா நினைக்கலை. ஏன்னால் பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்.
ஆனால் நமக்கான துணை வாழ்க்கையில் சரியா அமைஞ்சுட்டா எந்த பிரச்சனை வந்தாலும் நம்மளால சமாளிச்சுர முடியும்.”
“..”
“அதோட உன் அண்ணா தான் இந்த குடும்பத்தோட ஆணிவேர் இனிமே. என் காலத்துக்கு பிறகு நீங்க எல்லாம் ஒண்ணா ஒத்துமையா இருக்குறதும், பிறந்த வீடுனு வந்து போய் இருக்குறதும் உன் அண்ணனுக்கு மனைவியா வர்றவ கையில தான் இருக்கு.”
“..”
“ஸ்டேட்டஸ் பார்த்து ஊருக்காக கல்யாணத்தை பண்ணி வருங்காலத்தில் கஷ்டப்படுறதை விட இது எவ்வளவோ பரவால்ல தான.”
“..”
“அந்த பொண்ணு குடும்பத்தை பத்தி விசாரிச்சேன். அவ காலேஜ் படிக்கும் போதே பெத்தவங்க இறந்துட்டாங்களாம்.
சொந்த பந்தமும் யாரும் பொறுப்பெடுத்துக்க முன் வரலை போல.
அன்னைக்கு இருந்து இப்போ வரை அவ வாழ்க்கையையும் பார்த்துகிட்டு தம்பியையும் நல்ல படிக்க வைக்குறா.
அந்த பையனும் பொறுப்பா இருக்கான். அக்காவுக்கு தம்பியும் தம்பிக்கு அக்காவும் தான் உலகமே. இப்படியான பொண்ணு நம்ம அதிக்கு ஏன் ஒத்து வர மாட்டா சொல்லு?”
“..”
“அதை விட என்ட்ட பேசும் போது நான் யாருனு தெரிஞ்சாலும் பெருசா வெளி வேசமெல்லாம் போடாம எதார்த்தமா இருந்தா.”
“என்ன மா முடிவே பண்ணிட்டீங்க போல?”, என்ற மகள்கள் சிரிக்க காத்யாயினியோ,
“எங்கே, அவ தான் கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லனு சொல்லிட்டாளே! உங்க அண்ணன் எதாவது முயற்சி செஞ்சா உண்டு.
இல்ல என்கிட்ட அவளை தான் பிடிச்சுருக்குனு ஒரு வார்த்தை சொன்னா கூட போதும்..”
“நாங்க வேணா அண்ணாகிட்ட பேசிப் பார்க்கவா மா?”
“வேண்டாம் கயல் கடவுள் வழி விடாமலா போயிருவார் பார்க்கலாம்.”, என்ற நேரம் சாருகேஷோடு உள்ளே வந்திருந்தான் அவினாஷ்.
மகள்களுக்கு மெதுவாய் அதைக் கூறியவர் அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.
“ஹாய் மேம். எப்படியிருக்கீங்க?”
“இன்னும் என்ன மேம் ஆன்ட்டினு சொல்லு இல்ல அம்மானு சொல்லு.”, என்றதில் சாருகேஷ் அவனது தோளில் கைப்போட்டு சிரித்தான்.
“இதான் என் பெரிய அக்கா கயல்விழி இது இரண்டாவது அக்கா காயத்ரி”, என்றதில் புன்னகைத்து ஹாய் என கையசைத்தான்.
“இவன் ஸ்கூலில் எங்க கிரிக்கெட் டீமில் இருந்தான் க்கா. ரொம்ப நல்ல ப்ளேயர் இப்போ அகெயின் டீமில் ஆட வந்துருக்கான்.”
“உட்காரு ப்பா என்ன சாப்பிடுற?”
“இல்ல அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் கா.. அண்ணா கூப்டாங்களேனு தான் வந்தேன்.”
“அவன் அப்படி தான் ரொம்ப ஃபார்மலா இருப்பான். நீ வா என்கூட..”, என்ற சாருகேஷ் அவனோடு உணவு மேசையில் அமர பெண்கள் மூவரும் தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்.
error: Content is protected !!