Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

52.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 52.1 

 உன் பாதியும்

என் மரணத்தின் மீதியும்

.



Advertisement

 

கொச்சியிலிருந்து யசோவோடு அவளின் ஏழு ஸ்வரக் குழு நண்பர்கள் நால்வர் திருச்சிக்கு வருகை தந்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. சித்தார்த்திற்கு அரவிந்தன் காரணம் என்றால், பெண்கள் இருவருக்கும் மலைக்கோட்டையின் மீது வீற்றிருக்கும் அவர்களது இஷ்டத் தெய்வமும், பரந்து விரிந்த காவிரி நீர்ப்பரப்பும் காரணம்.

Advertisement

மற்றவர்களுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், பிரபுவிற்கு ஒரு காரணம் மட்டுமே உள்ளுக்குள் இருந்தது. திரை உலகிற்குள் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்பதே அவன் ஆவலாக இருக்க, கௌதமனை காணும் ஆசையில், திருச்சியைச் சுற்றிப் பார்க்கும் சாக்கில் மற்ற மூவரையும் இழுத்துக் கொண்டு வந்திருந்தான். ஆனால், நேரம் காலம் இன்னும் வாய்க்கவில்லை போலும், திருச்சியில் கௌதமன் இல்லை.

Advertisement

அரவிந்தனை காணும் ஆசை நிறைவேறாது போனாலும், சித்தார்த், மற்றவர்களோடு ஊரைச் சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டினான்.

Advertisement

“சொல்லு யசோ, திருச்சி… திருச்சிக்கு பக்கத்துலன்னு எத மிஸ் பண்ணாம பாக்கணும்? முடிஞ்ச வரைக்கும் பார்த்திடுவோம்” என சித்தார்த் கிளம்பத் தயாரானான்.

“திருவானைக்காவல் கோவில் கண்டிப்பா மிஸ் பண்ணக் கூடாது. பஞ்சபூத தலங்கள்ல இது ‘நீர்’ தலம். பிரமாண்டத் தூண்கள், சிற்பங்கள்ன்னு நம்மள மன்னர் கலத்துக்கே கூட்டிட்டு போயிடும்.

பல்லவர் காலத்துக் குடைவரை கோவில் பார்க்கலாம். பாறைய குடைஞ்சு செதுக்கப்பட்டக் கோவில். நடுவுல பெரிய நீர் நிலை. கூட்ட நெரிசல் இல்லாத மன அமைதிக்கு பெஸ்ட் பிளேஸ். 

மலைக் கோட்டை, கல்லணை, முக்கொம்பு அணை இதெல்லாம் கேள்விபட்டிருப்பியே. எல்லாம் பக்கத்துல சில கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கு.

புளியஞ்சோலை அருவி, கொல்லி மலை, கங்கை கொண்ட சோழபுரம், ஆகாய கங்கை ஃபால்ஸ்… இதெல்லாம் கொஞ்சம் தள்ளி இருந்தாலும், கண்டிப்பா பார்க்கவேண்டிய பிலேஸ்.” என்றாள்.

அன்றைய தினம், சமைத்து, உண்டு, கதை பேசி எனப் பகல் பொழுதைச் சோம்பலாக வீட்டில் கழித்தனர். மாலை அனைவரும் மலைக் கோவிலுக்குக் கிளம்ப, யசோ, “நான் ரொம்ப டையர்ட். நீங்க போயிட்டு வாங்க. டின்னர் ரெடி பண்ணி வைக்கிறேன்.” என அனைவரையும் வழி அனுப்ப, சித்து அவளோடு இருந்து கொண்டான்.

“நீ போயிட்டு வா சித்து” என்றதற்கு, “வீட்ட பாரு… நாலு பேரு வேணும் கிளீன் பண்ண. இதுல டின்னருக்கு உன்ன யாரு கமிட் பண்ணச் சொன்னது? ஒத்த ஆளா நீ செய்வியா?” எனக் கேட்டவன் அவள் பதிலுக்கு நிற்காது, அடுக்களைக்குள் நுழைந்தான்.

இருவருமாகக் குவிந்து கிடந்த பாத்திரங்களைக் கழுவி, வீட்டை ஒதுக்கி, மீண்டுமாக ஒரு கப் காபியோடு இருவரும் அமர்ந்தனர். இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகம் என்பதால் பேசப் பல விடையங்கள் இருந்தன.

“அப்பறம் உன் குட்டியம்மா எப்படி இருக்காங்க? என்ன சொல்றாங்க?” என சித்துவின் பேச்சு யசோதாவிற்குப் பிடித்த பாதையில் பயணித்தது.

“ராவா கிச்சடி செய்து, தேங்கா சட்னி வைச்சிடுவோம். வேல சட்டுன்னு முடிஞ்சிடும். அதுக்கும் மேல ஏதாவது வேணும்ன்னா பிரபுவ வாங்கிட்டு வரச் சொல்லுவோம்” என்ற சித்துவின் கூற்றின்படி இரவு உணவு ஆயத்தமானது.

ஊரைச் சுற்றிப் பார்த்து இரவு வந்தவர்களோடு இரவு உணவு முடிந்தது. நீண்ட நேரப் பேச்சும் சிரிப்பும் முடிவுக்கு வர, ஆண்கள் கூடத்திலும், பெண்கள் இருவரும் யசோவின் அறையிலுமாக படுக்கையை விரித்தனர்.

அறைக்குள் நுழைந்து கொண்டே நூறாவது முறையாகக் கைப்பேசியைப் பார்த்தாள். கௌதமனிடமிருந்து அழைப்பு வந்திருக்கவில்லை. நீண்ட பெருமூச்சோடே தொப்பென மெத்தையில் அமர்ந்தவள் பார்வை அறையை நோட்டமிட்டது. அம்மாவின் மூச்சுக்காற்று யசோவை நிறைத்தது.

மெத்தையை வருடினாள். மூன்று நபர்கள் தாராளமாகப் படுக்கலாம். குட்டி ரகுவும், இவளும் அம்மாவின் இருபக்கம் படுத்துறங்கிய நாள்கள் பல. பல நேரம் அப்பாவின் மார்பு தான் ரகுவின் மெத்தையாக இருக்கும். ஏனோ… அவனுக்கும் அப்பாவிற்கும் அப்படி ஒரு நெருக்கம். அம்மாவுக்கு மட்டும் என்ன… தன்னை விட ரகு மீது தானே அவருக்குப் பாசம் அதிகம். அவன் சென்றுவிடுவான் எனத் தெரிந்து தான் அவனை முந்திக் கொண்டாரோ? தன் அன்பிற்குக் களங்கம் ஏற்பாடாது இருக்க, அப்பாவும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்துவிட்டார். அவர்களுக்கு அவன் ஸ்பெஷல் என்றால்… அவனுக்கு நான் தானே ஸ்பெஷல். என் ரகு… என் லகு…

அமைதியில் மூழ்கியிருந்த அறை பலவித நினைவுகளைக் கொண்டு வந்து அவளுக்குள் கொட்டியது. பருவம் எய்திய பின் பெற்றவர்களின் அறையில் யசோ உறங்கியதில்லை. அவ்வப்போது அம்மாவைத் தன்னோடு அழைத்துக் கொள்பவள் அன்னையின் அறையில் உறங்கியதே இல்லை என்பதால், புது மெத்தை யசோவின் இமைகளை மூட விடவில்லை.

இருந்த அலுப்புக்குப் படுத்ததும் உறங்கிவிடுவாள் என்றே நினைத்தாள். கொச்சியில் வந்த உறக்கம் கூட இங்கு வர மறுத்தால் அவளும் என்ன செய்வாள்? மனம் எனும் குரங்கு நினைவுகள் எனும் மரங்களில் தாவ ஆரம்பித்தது.

இன்றும் ஏன் மகள் அழைக்கவில்லை? கௌதமனுக்கு தன் மீது கோபமா? தனக்குத் தான் வீட்டில் விருந்தினர் உள்ளனர், அதனால் அழைக்கவில்லை. அவனுக்கு என்னவாம்? அந்தப் பெண்ணை… அதுதான் தாக்ஷாவை பார்த்திருப்பானோ? ப்ச்!

நேரம் பார்த்தாள். மணி ஒன்றைத் தொட்டிருக்க, மீண்டும் கைப்பேசியை எடுத்தாள். ரகுவின் எண்ணைச் சற்று நேரம் பார்த்தாள். எண்ணோடு பதிந்திருந்த புகைப்படத்தில் ஐந்து வயது ரகு, இரண்டு வயது யசோவை தூக்க முடியாது தூக்கி நின்றிருந்தான்.

“ஏன் ரகு நீ இவ்வளவு அழகா இருக்க?” என ஒரு முறை செண்பா அத்தை கேட்டதற்கு, “ஏன்னா எங்க அம்மா ரொம்ப அழகு” என்றது நினைவுக்கு வந்தது. அப்பொழுது அவன் அம்மாவை அவன் பார்த்தது கூட கிடையாது.

இவளும் இந்தக் கேள்வியை எவ்வளவு முறை கேட்டிருப்பாள். அழகாகச் சிரிப்பான்… தலையில் செல்லமாகக் கொட்டுவான்… வெட்கப் புன்னகையோடு தலை கோதிய தருணமும் பதிலாக வந்ததுண்டு. ரகு பெண்ணாகப் பிறந்திருந்தால்… மூன்று வயதில் எப்படி இருந்திருப்பான்? திராட்சை கண்களும், மாம்பழக் கன்னங்களும், பலாச்சுளை உதடுமாக, கொழு மொழுவென அத்தனை அழகாக இருந்திருப்பான். ஆம்… அழகாக… அத்தனை அழகையும் கொண்டு பிறந்திருக்கும் யாழியைப் போலவே இருந்திருப்பான்.

மறு ஜென்மம் என்ற ஒன்று உண்மையாக இருக்குமோ? வேலையில்லா மனது தறிகெட்டு என்னவெல்லாமோ யோசித்தது. ‘சொல்லு டி… பொண்ணா பிறந்து இருந்தா?’ அவன் கேட்டதற்கு, ‘ம்ம்ம்… அப்பவும் நீ தான் என் ஆளு. என்ன… பாய் ஃபிரெண்டுக்கு பதிலா கேள் ஃபிரெண்ட்’ என இவளின் பதில் இன்று யசோவின் முகத்தில் புன்னகையைப் பூக்கச் செய்தது.

எப்பொழுது உறங்கினாளோ, யாரோ அடுக்களையில் எதையோ உருட்ட உறக்கம் கலைந்தது. இவள் எழுந்து செல்லும் முன்பே விளக்கு அணைந்து, மீண்டும் நிசப்தம் வீட்டை நிரைத்தது. ஊரே இருட்டின் பிடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க, யசோவின் தூக்கம் ‘டாடா’ காட்டி சென்றுவிட்டிருந்தது.

தலையணையைக் கட்டிக் கொண்டாள். மகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆசையாகக் கட்டிக் கொண்டு உறங்கியிருப்பாள். கௌதமன் கொடுத்துவைத்தவன். மகளை அணைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பான் என இவள் நினைக்க, அவனோ உறங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்துக்கொண்டே அவளின் பிறப்பின் இரகசியம் பற்றிக் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான்.

தன்னை சுற்றி ஆட்கள் இருந்தாலும் தனிக் காட்டில் இருப்பது போல் யசோவிற்கு இருக்க, விடியாத காலைப் பொழுது கசந்து வழிந்தது. கைப்பேசியை உயிர்ப்பித்துப் பார்த்தாள். இவள் உறங்கியபின் கௌதமன் அழைத்திருந்தால்? பெருமூச்சு வந்து போனது. அழைப்பு எதுவும் இல்லை. எப்பொழுது விடியும் எனக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஒரு காலம் இருந்தது. இரவு நீளாதா எனக் காத்திருந்த காலம் அது. மொட்டை மாடியில், நிலாவின் ஒளியில் அவன் கரத்தில் தலை சாய்த்துப் படுத்திருந்த காலம் அது. தன்னை தனித்துவிட்டு, ‘பேபி’ என்ற அழைப்பை மீண்டும் கேட்கவே முடியாத தூரம் சென்று விட்டான். ரகு இல்லை, அன்னை இல்லை. இன்று அப்பா இல்லை. அறுவை சிகிச்சைக்கு அப்பா மறுத்தால்… தன் நிலை? நினைக்கவே யசோவிற்குப் பயமாக இருந்தது.  

ரகு… அவளின் செல்ல லகு, சத்தம் காட்டாது காற்றோடு மறைந்துவிட்டான். வாழ்வின் மிக மிக அழகான பக்கங்களைக் காட்டியவன் இன்று இல்லை. இரவோடு இரவாக மலர்ந்து, மணம் பரப்பி அதைச் சூடும் முன் வாடிப் போவது போல்… என் ரகு, நட்பு, நேசம், சிரிப்பு, காதல், காமம், நிறைவு என எல்லாவற்றையும் அளவிற்கு அதிகமாகப் பொழிந்து, வாழக் காத்திருக்கும் என்னைவிட்டுச் சென்றே விட்டான்.

என்றுமில்லாது இன்று தனிமையின் துயர் யசோவை அதிகம் தாக்கியது. அவன் திண்ணிய மார்புக்காக மனம் ஏங்கித் தவித்தது. ரகுவின் லப்-டப் தரும் இதமே தனி. அவன் மார்பில் தலை சாய்த்தால் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம். அதற்கு அவன் இருக்க வேண்டுமே. நினைவுகளை மட்டுமே துணையாகக் கொண்டு இன்னும் எத்தனை இரவுகளைக் கழிப்பது? அன்றைய இரவு யசோவின் மீது கடுகளவும் இறக்கம் காட்டவில்லை.

அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும், ‘ஓடு ராஜா… ஓடு’ என்றே ஓடியது யசோவிற்கு. கழிந்த மூன்று தினங்களும் விருந்தினருக்குப் படு ஜோராகவே சென்றது. வீட்டு வேலைகளில் அவர்கள் உதவினாலும், வீட்டாளாய் யசோ ஓய்ந்து போனாள். அவள் கூறியிருந்த அனைத்து இடங்களையும் வந்தவர்களால் பார்க்க முடியாது போனாலும், பார்த்த அனைத்தும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம் என்ற ஆசையை உள்ளுக்குள் விதைத்தது.

நான்காம் நாள் காலை உணவை முடித்த கையோடு அனைவரும் கிளம்ப ஆயத்தமாகினர். “அங்கிள் எப்போ வராங்க?” எனக் கேட்ட சித்தார்த்திற்கும், “கௌதமன் சார பார்க்க முடியாதா? கிளம்பறதுக்குள்ள வந்திடுவார்ன்னு சொன்ன?” என்ற பிரவுக்கும் யசோவிடம் பதில் இல்லை. இருவரும் சொல்லி வைத்தார் போல ஒரே நேரத்தில் காணாமல் போவார்கள் என இவளுக்கு எப்படித் தெரியும்? நான்கு நாளில் வருவேன் என்றவனையும் காணவில்லை, ‘இங்க தான் இருப்பேன்’ என்றவரையும் காணவில்லை.

தந்தைக்கு அழைத்திருக்க, அவரோ, “விசாகன் புதுசா தொடங்கின ஸ்கூல்ல, இந்த வருஷ அட்மிஷன் பணக் கணக்கு டேலி ஆகல மா. அத பாக்க சொல்லிக் கூப்பிட்டான். சென்னையில இருக்கேன்” என்றார், மகளைத் தனித்து விட்டுச் சென்ற எந்த தவிப்பும் இல்லாது.

கெஞ்சி, கொஞ்சி, பேசி பார்த்தாயிற்று. மகள் திருமணத்திற்குச் சம்மதிப்பதாக இல்லை என்றதும், தான் இல்லாத வீட்டில் மகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதை உணர்த்தவே அரவிந்தன் எடுத்துக் கொண்ட வனவாசம் இது. வனவாசம் என்பது தவறு. இது பூங்கா… அங்கு, அவரின் தோழன், தோழி, அவர்களது பிள்ளைகள், பேரன் என அவர்களது இனிமையான குடும்பம் இருந்தது.

மான்வியின் பெற்றவர்களும் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக சென்னைக்கு வந்திருக்க, விசாகனின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது அரவிந்தன் இப்படியான நாளை கண்டு. இன்று, மகளைப் பற்றின அனைத்து உண்மையையும் அறிந்த இந்தக் குடும்பம், அவளை வாரி அணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது.

“மாமா, ராஜீவன பத்தி உங்களுக்குத் தெரியுமே. நல்லவன் மாமா. ரொம்ப பொறுப்பானவன். ஏனோ அவனுக்குக் கல்யாணம் தட்டி போகுது. எவ்வளவு கேட்டும் இன்னைக்கு வரைக்கும் கல்யாணத்துக்குச் சம்மதிக்காதவன் இப்போ ‘யசோக்கு வரன் பாக்கிறாங்க. உனக்கு அவள பாக்கவா’ன்னு கேட்டதுக்கு சரின்னு சொல்றான் மாமா. தம்பிக்கும் யசோவ பத்தி எல்லாம் தெரியும். யசோக்கும் இவன் வாழ்க்கைல நடந்த எல்லாம் தெரியும். இவங்க ரெண்டு பேர் பத்தியும் தெரிஞ்சனால சொல்றேன் மாமா… இவங்க வாழ்க்கையில ஒண்ணு சேர்ந்தா நல்லா இருப்பாங்க மாமா. அம்மா அப்பா… அத்த மாமான்னு எங்க எல்லாரும் இதுல விருப்பம் மாமா. உங்களுக்கு இந்த சம்பந்தத்துல விருப்பம் இருந்தா, யசோட்ட கேட்கலாமா?” என மான்வி கேட்டிருக்க, அரவிந்தன் என்ன கூறுவார்?

அருமையான குடும்ப வாழ்வு மகளுக்குக் காத்திருக்க, இந்த மகிழ்ச்சியை… இந்த நிம்மதியை மகளிடம் சேர்க்காது எப்படி ஓய்வார் அரவிந்தன்? நிதானம், பொறுப்பு, பாசம் என நல்ல குணங்களைக் கொண்டிருப்பவனை எப்படி வேண்டாம் என்பார்?

“எனக்குப் பரிபூரணச் சம்மதம் மா. ஒரு வாரத்துல யசோட்ட பேசிட்டு சொல்றேன்” என்றுவிட்டார்.

“எப்போ வர்றீங்க ப்பா?” எனக் கேட்ட மகளிடம், “சீக்கிரம் வர பாக்கிறேன் மா” என்றவருக்கு ஒரு வாரமாவது மகளைத் தனித்துவிடும் எண்ணம்.

“நீ பத்திரமா இருந்துக்கோ மா” என்றவர் மகளுக்கான தனிமை எனும் கசப்பு மருந்தை அருந்தக் கொடுத்திருந்தார். 

“ஓஹ்… சீக்கிரம் வேலையை முடிச்சு கொடுத்துட்டு வாங்கப்பா.” என்றவளுக்குக் கவனிக்க வீட்டில் விருந்திருனர் இருந்தனர். இன்று அவர்களும் கிளம்பிக் கொண்டிருக்க, அப்பாவை மனம் தேடியது.

“கௌதமன் சார் சொந்த புரொடக்ஷன் கம்பனி வச்சிருக்கார் யசோ. சீக்கிரம், அவரே டைரக்ஷனையும் பார்த்துப்பார். இப்படி ஒருத்தர வீட்டுக்கு பக்கத்துலயே வச்சுட்டு… சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்க நீ! நம்ம கம்போஸ் பண்ணிப் போட்டிருக்க மியூசிக்க அவருக்குப் போட்டுக் காட்டு… அவர பார்த்துப் பேச ஒரு அப்பாயின்மென்ட் வாங்கி கொடு யசோ” எனப் பிரபு உரைத்துவிட்டுச் சென்றான்.

“இன்னும் ரெண்டு நாளாகும் நாங்க வர” என்று கௌதமன் கூறி நான்கு நாள்கள் ஆகிவிட்டன. இன்றாவது வருவானா எனத் தெரியவில்லை. மகளைக் காண மனம் தவித்தது. அவனை அழைக்கலாம் தான்… ஆனால் ஏதோ தடுக்கிறது.

“கௌதமன் சார்ட்ட நம்மள பத்தி பேசு யசோ”

“சீ யூ யசோ”

“பை டா”

“பத்திரம் யசோ மா” என ஆளாளுக்கு அவரவர் பாணியில் விடைபெற்றுக் கிளம்பினர்.

கிளம்பிய அனைவரையும் மதில்சுவர் கேட் வரை சென்று வழியனுப்பி வந்தவளை சூனியம் வரவேற்றது. இருதினங்கள் நண்பர்களோடு கொச்சியிலும், மூன்று நாள்கள் கூட்டத்தோடு வீட்டில் இருந்தவளுக்கு நிமிட நேரம் ஓய்வில்லை. ஆனால்… அந்தக் கூட்டம்… அந்தச் சலசலப்பு பிடித்தது. சட்டென அனைவரும் சென்றுவிட அந்த அமைதி ஏதோ போல் இருந்தது.

வீட்டையும், அவள் எண்ணங்களையும் அடைத்துக் கொண்டு வீட்டு வேலைகள் வரிசைக்கட்டி வந்து நின்றன. வேலைகளுக்கு இடையே அவ்வப்போது கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். கௌதமனிடம் இருந்த அழைப்பு இல்லை.

வேலைகளை முடித்து, தனிமையை விரட்டப் புல்லாங்குழலை கையில் எடுத்தாள். மனம் அதிலும் லயிக்கவில்லை. கடிகார முள் நகர்வேனா என அடம்பிடித்தது. சித்தார்த் அழைத்துப் பேசி வைத்தான். லாவண்யா அழைத்துப் பேசினாள். செண்பா மற்றும் சர்வேஷ் வந்தனர். விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷின் பார்வை அவ்வப்போது பக்கத்து வீட்டைத் தழுவியது. “யாலி எப்போ வலுவா?” என்று கேட்ட குழந்தை, அவனுக்குப் பிடித்த பதில் வராததால், அழுது வடியும் முகத்தோடு வீடு சென்றான்.

ஏழு மணி அளவில் கைப்பேசி அதன் இருப்பை காட்டியது. சிணுங்கிய கைப்பேசியில் கௌதமன் கரத்தில் யாழி பொக்கைவாய் மலர்ந்து சிரித்தாள். யசோவின் அகம் மலர்ந்தது. மனம் சிறகில்லாது பறந்தது.

காணொளியில் வந்திருக்கலாம் என எண்ணாது இருக்க முடியவில்லை. கைப்பேசியைக் காதில் வைத்ததும், “யசோ, கலா அப்பா யாரு?” எனக் கேட்ட கௌதமன் குரலில் சலிப்பு மண்டி கிடந்தது.

“கலா அப்பாவா? அப்படி யாரையும் தெரியாதே” என்றவளுக்கு இவன் என்ன கேட்கிறான் என்ற யோசனை.

“ஓஹ்” என்றவனிடம் அமைதி. பின்னால் மகளின் அழு குரல் கேட்கவும், யசோதரா பரபரப்பானாள்.

“என்ன என்னாச்சு? யாழி தான அழறது? ஏன்… ஏன் அழறா?”

“தெரியல. பத்து நிமிஷம் முன்ன வரைக்கும் சிரிச்சுட்டு தான் இருந்தா. பத்து நிமிஷமா சாப்பாட முன்னாடி வச்சுட்டு அழ ஆரம்பிச்சவ… நிறுத்தாம அழறா. அவளுக்கு கலா அப்பா வேணுமாம்” என்றான் பெருமூச்சோடே.

“வீடியோக்கு ஸ்விச் பண்ணவா… யாழிய பாக்கணும்” என்றாள்.

“வெளியில… ஹோட்டல்ல இருக்கோம்” என்ற தகவலோடு காணொளிக்கு அழைப்பை மாற்றினான்.

விக்ரம், சின்னவளைத் தூக்கிக் கொண்டு நின்றிருந்தான். அவன் சமாதானங்கள் எதையும் காதுகொடுத்துக் கேட்காத மகள் ஏங்கி ஏங்கி அழுவதைக் காணச் சகிக்கவில்லை யசோவிற்கு.

“யாழிமா” என்ற இவளின் சத்தம் கேட்டு கைப்பேசியின் பக்கம் திரும்பிய குழந்தை மீண்டுமாக விக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“யாழி… யாழி… அம்மாவ பாரு… என் பட்டு குட்டிக்கு என்ன வேணும்? அழாம சொல்லுங்க” என்றவளிடம், “அம்மா அம்மா” என ஏங்கி அழுதாளே தவிர வேறு வார்த்தை வரவில்லை.

“கலா அப்பான்னு யாரையோ கேட்டு அழுதியே பேபி” எனக் கௌதமன் எடுத்துக் கொடுக்க, நினைவு வந்தவளாக, “கலாப்பா நேணும்” என மீண்டும் ஆரம்பித்தாள்.

மூக்கிலும் வாயிலுமாக நீர் ஒழுக இப்படி யாழி அழுது யசோ பார்த்ததே இல்லை. இன்று என்னானது மகளுக்கு? என்ன கேட்கிறாள் மகள்?

“எதுக்கு அழ ஆரம்பிச்சா?”

“விக்ரம் கூட பீச்சுக்கு போனா. நேரா ஹோட்டல் வந்தாங்க. அரை மணி நேரம் முன்ன நானும் வந்தேன். பக்கத்து டேபில்ல இருந்த குட்டி பாப்பா கூட விளையாடிட்டு இருந்தா. அந்தக் குட்டிக்கு அவங்க அம்மா ஆப்பம் ஊட்டி விடவும் இவளும் அதையே கேட்டா. பத்து நிமிஷம் முன்ன ஆடர் பண்ணின சாப்பாடு வந்துது. ஆப்பத்த பிச்சு ‘ஆப்பம் பிடிக்குமா?’ன்னு கேட்டுட்டே அத வாய்ல வச்சதும் ‘கலா அப்பா’வ கேட்டு அடம்பிடிக்க ஆரம்பிச்சு… இப்போ அழுகை” என அவன் விலாவாரியாக விளக்க,

“கலா அப்பா இல்ல. கலத்தப்பம்ன்னு ஒரு டிஷ். ஈவ்னிங் டைம் செய்து கொடுப்பேன்,” என்றவள், “என் யாழி குட்டிக்கு கலத்தப்பம் வேணுமா?” எனக் கேட்ட அன்னையைப் பார்த்து, “அம்மா பேபிக்கு கலாப்பா ஊத்தி விலுங்க” எனத் தேம்பினாள்.

ஆக, ஆப்பம் என்றதும் அது கலத்தப்பத்தையும், அதை ஊட்டி விடும் அம்மாவையும் நினைவு படுத்தியுள்ளது. ஆனால், மகள் எண்ணிய உணவும் இதுவும் வேறாக இருக்க, அதுவே அவளை உடைக்க காரணமாகிப் போனது.

கோர்வையில்லாது, “அம்மா நேணும். அம்மா சூக்குங்க. அம்மாஆஆ” என மகள் தேம்பித் தேம்பி அழ, கௌதமன் நொந்தே போனான்.

நடப்பதைப் பார்த்த தகப்பனுக்குப் புரிந்தது, பசிக்கும் உறக்கத்திற்கும் இடையே மாட்டிக் கொண்ட மகளுக்கு அன்னையின் அரவணைப்பு தேவைப்படுகிறது என்று. தன் உணர்வை உணர்த்தத் தெரியாத குழந்தை, தன் கோவத்தை அழுகையாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள் என்று.

“நாளைக்கு உன் அம்மாட்ட போகலாம். அம்மா உனக்கு ஊட்டுவாங்க. இப்போ அழுகைய நிறுத்தினாத் தான் நாளைக்கு கூட்டிட்டுப் போவேன்” என ஏதேதோ கூற, கண்கள் சொருக, “நாளை ஊத்துங்க அம்மா” எனத் தேம்பிக் கொண்டே கௌதமனின் தோளில் முகத்தைப் புதைத்தாள்.

கைப்பேசி அணைக்கப்பட்ட பின்னும் அதையே பார்த்து அமர்ந்திருந்தாள் யசோ. “உன் பொண்ண என்னால சமாளிக்க முடியல” என்றதே காதுக்குள் இன்பமாகச் சுற்றித் திரிந்தது. ‘உன் பொண்ணு’, ‘உன் அம்மா’ என்ற வார்த்தைகள் யசோவை மகிழ்ச்சிக் கடலுக்குள் முக்கி எடுத்தன.

நேரம் வேகமாகக் கடந்திருக்க, எதையோ உண்டு, களைப்பு தீரத் தலைக்கு ஊற்றி, நீண்ட நாள்களுக்குப் பின் நேரத்தோடு தன் படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் உறங்கியும் இருந்தாள் யசோதரா. ஆழ்ந்த உறக்கம் சில மணி நேரம் நீண்டது.

இரண்டு மணி வாக்கில் சட்டென முழிப்பு தட்டியது. அவ்வளவு தான்… என்ன முயன்றும் அதற்கு மேல் தூக்கம் வரவில்லை.

திறந்திருந்த சாளரம் வழியே வானைப் பார்த்தாள். நிலவில்லா வானில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிச் சிரித்தன. இவளால் அதை ரசிக்க முடியவில்லை. கரிய உருவங்களாய் காட்சியளித்த மரங்களை வேடிக்கை பார்த்தாள். வீசிய தென்றலும், கண்களை நிறைத்த விண்ணழகும் அவள் கவனத்தில் பதியவில்லை. ‘டைம் டிராவல் இருந்திருக்கலாம் லகு’ என்றது ஏக்கம் கொண்ட யசோவின் மனம்.

‘பல வருடங்களுக்கு முன் சென்றால், அங்கு யாழி இருக்க மாட்டாளே’ எனப் புத்தி எடுத்துக் கொடுத்தது.

‘எனக்கும், என் ரகுவிற்கும் மகளாக யாழி வேண்டும்’ என மனம் பேராசை கொண்டது. அன்றைய இரவு முழுவதும் கண்களைத் திறந்து கொண்டே கனவு கண்டாள் யசோ. அதில் ரகு கணவனாகவும், யாழி மகளாகவும் இருந்தனர். இதே கட்டிலில் மூவரும் உருண்டு புரண்டு விளையாடினர். அப்பாவும் மகளும் செம்பருத்தி செடியில் வீற்றிருந்த பட்டாம்பூச்சியைப் பிடிக்க முயன்றனர். மாடியில் இருக்கும் கட்டிலில் ரகுவின் ஒரு கரத்தில் தானும், மற்றதில் மகளுமாகப் படுத்து, நட்சத்திர கதைகள் பேசினர். கனவு நீண்டது. இமைகள் மூடியபின்னும், ஐந்து மணி அளவில் நித்திராதேவி கருணை காட்டியபின்னும் கனவு நீண்டது.

குளிர்ந்த காற்று வீசிய காலைப் பொழுதில், காபி கோப்பையோடு மாடிக்குச் சென்றாள் யசோ. அவர்கள் காதலுக்குச் சாட்சியாக இருந்த கட்டிலில் மகள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். கருப்பு வேட்டியை மடித்துக் கட்டி துணியை உலர்த்திக் கொண்டிருந்தவன் பரந்த முதுகில் தவழ்ந்து கொண்டிருந்தது வெள்ளை துண்டு.

“ரகு?” என அழைத்தாள் ஆசை சொட்ட. வசீகரப் புன்னகையோடே திரும்பிப் பார்த்தான் யசோவின் ரகு. கண்களில் நீர் வழிய, “லகு” என ஆசையாக அவனை முன் சென்று அணைத்தாள். ரிதம் மாறாத லப்-லப், இதமாகக் காதின் வழியே இவள் இதயத்தை நிறைத்தது.

“வந்துட்டியா ரகு?” என்றாள் அவன் மார்பில் பொரிக்கப் பட்டிருந்த வார்த்தைகளை விரால் வருடி. ‘இந்த இதயம் துடிக்கும் வரை உன்னோடு இருப்பேன்’ என்றானே… அதனால் வந்துவிட்டான் போலும்.

“எங்க போனேன்? இங்க தான் இருக்கேன்” என்றான் ரகு. என்ன ஆனது இவன் தொண்டைக்கு? ஆழமான அழுத்தமான இவன் குரலில் ஏன் மாற்றம்? இது… இந்தக் குரல்… தலை உயர்த்தி அவன் முகம் பார்க்க, கௌதமன் புன்னகைத்தான். “அம்மா” என ஓடிவந்து இவள் காலைக் கட்டிக் கொண்ட குழந்தை கௌதமனை பார்த்து, “அப்பா” என்றாள்.

கையில் இருந்த காபி கோப்பை கீழே விழுந்தது. படார் என்ற சத்தத்திற்கு அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள் யசோதரா. ரகு எங்கே? படபடப்பு அடங்குவேனா என்றது. ரகு இல்லை என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்தது. ரகுவை விட்டு மனம் நகரத் தயாராகிவிட்டதா? மனம் தள்ளாடியது. ரகுவின் இடத்தில் கௌதமனா? அழுகை வரும் போல் இருந்தது. நான்கரை வருடங்களாக வராத அழுகை இன்றும் வர மறுத்தது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!