இப்பொழுதெல்லாம் சவி அவனை ஊருக்கு கிளம்ப விடுவதே இல்லை. இரவு நேரத்தில் குளித்து உடை மாற்றி பையை தூக்கி தோளில் மாட்டினாலே கால்களை கட்டிக்கொண்டு பிடிவாதமாய் அழ ஆரம்பித்து விடுகிறாள். நிறைய சமாதானங்கள் சொல்லி முத்தமிட்டு அவளை தேற்றி கிளம்புவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.
Advertisement
அவனாலும் அவளை விட்டு இருக்க முடிவதில்லை. காலை மாலை என்று இரு வேளைகளிலும் குழந்தையோடு பேசி விடுகிறான். வாராவாரம் கொஞ்சம்கூட சிரமமே பார்க்காமல் பறந்தோடி வருகிறான். இறுகிய இரும்பாய் நடமாடிக் கொண்டிருந்தவன் இளவம் பஞ்சாய் மாறி எந்நேரமும் கனிந்த முகமும் சிரிக்கும் விழிகளும் விரிந்த இதழ்களுமாக அவனது தோற்றமே இன்னும் கூடுதலாய் பொலிவு பெற்றுப் போனது.
தனித்துவம் மிகுந்த அவனது கரகரத்த கம்பீரக் குரலில் ஆளுமையை கடந்த ஆதுரம் தேங்கி நிற்கிறது. அவன் வாழ்வின் வசந்தச் சாரலாய் மாறி அவனை முழுமையாய் நனைத்து அன்பால் கொன்றாள் அவன் குட்டி தேவதை.
Advertisement
Advertisement
அவளை பெற்றவளோ விழிகளால் வேறு கதை பேசினாள். இதழ்கள் அழுத்தமாய் மறைத்துக் கொண்ட பாஷைகளை விழிகள் கொட்டித் தீர்த்தன. அதிகாலை அவன் வீட்டிற்குள் நுழையும் நேரம் அறிந்து தாயும் மகளும் சினிமாவுக்கு தயாராவது போல் அத்தனை தெள்ளத் தெளிவாக தயாராகி அமர்ந்திருக்கின்றனர். ஓடி வந்து கட்டிக் கொண்டு கன்னம் வலிக்க முத்தமிடும் மகளோடு அவன் அன்பால் இணைந்திருக்கையில் வேறு இரு விழிகள் ஏக்கத்தோடு அவனை தழுவுவதை அவன் முதுகும் உணர்கிறது.
ராதாவிடம் கேட்டு அவனுக்கு பிடித்த இலங்கை வகை உணவுகளை சமைக்கவும் கற்றுக் கொண்டு அவனுக்காக பார்த்து பார்த்து செய்து வைக்கிறாள். அருகில் அமர்ந்து ஆசை தீர பரிமாறுகிறாள். அனைத்தையும் உணர்பவனால் தயக்கத்தை உடைக்க முடியவில்லை. தடையாக ஏதேதோ குழப்பங்கள்.
Advertisement
இப்பொழுதெல்லாம் நேருக்கு நேர் அவள் விழிகளை பார்க்க முடிவதில்லை. முன்பெல்லாம் கண்ணுக்கு கண் பார்த்து தீட்சண்யமாக நோக்கி தெளிவாகப் பேசியவன் இப்பொழுதெல்லாம் அவள் கண்களை சந்திக்க முடியாமல் தடுமாறி விழிகளை சுழற்றுகிறான். அவள் விழிகளோ சற்றும் பின்வாங்காமல் அவனை குத்திக் கிழிக்கின்றன. இரவு நேரங்களில் அத்தை வீட்டிற்கு சென்று தங்கலாம் என்று கிளம்பினாலும் மகள் விடுகிறாளா என்ன..?
ஜம்பமாய் அவனது பரந்த மார்பின்மீது ஏறி படுத்துக் கொண்டு கழுத்தோடு கட்டிக் கொள்பவளை தனியே விட்டு அவனால்தான் அங்கு சென்று உறங்கிவிட முடியுமா..? கூடத்தில் மகளை அணைத்தபடி அவன் படுத்துக் கொள்ள அஞ்சலி உள் அறையில் படுத்துக் கொள்வாள்.
உரிமையும் அக்கறையும் அதிகரித்துப் போனது… நேசமும் பாசமும் நிறைந்து வழிந்தது. ஆனால் அஞ்சலி என்பவள் மட்டும் அவன் வாழ்க்கைக்குள் என்ன மாதிரியான இடத்தை பிடித்திருக்கிறாள்
என்பது கேள்விக்குறியாகத்தான் நின்றது.
அன்றும் வழக்கம் போன்றே வெள்ளி இரவு குதித்துக் கொண்டு கிளம்பி சனிக்கிழமை அதிகாலை அஞ்சலி வீட்டின் வாசலில் வந்து நின்றிருந்தான் குரு. வழக்கம் போன்றே தாயும் மகளும் நிறைந்த மகிழ்வுடன் அவனை எதிர்கொண்டனர். அவன் வாங்கி வந்திருந்த விளையாட்டுப் பொருட்களுடன் நடுக்கூடத்தில் அமர்ந்து மகிழ்வோடு விளையாடிக் கொண்டிருந்தாள் சவி. அவனுக்காக உணவு தயாரிக்கும் முனைப்பில் ஆசையாக வேலையில் இறங்கி இருந்தாள் அஞ்சலி.
“அஞ்சலி… கொஞ்சம் பேசணும்…” என்றபடி அவளுக்கு பக்கவாட்டாக வந்து நின்றான் குரு.
“சொல்லுங்க…”
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் உருளைக்கிழங்கை வெட்டி குக்கரில் போட்டு வைத்தாள்.
“அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வா… டிபனுக்கு ஒன்னும் அவசரம் இல்ல… உன்கிட்ட கொஞ்சம் தெளிவா பேச வேண்டியது இருக்கு…”
பட்டென திரும்பி அவனை பார்த்தவளுக்குள் படபடப்பு…
என்ன பேசப் போகிறான்..? எதைப்பற்றி பேசப் போகிறான்..? ஒருவேளை… ஒருவேளை…
இதயத்திற்குள் மத்தளம் கொட்ட இனிமை கலந்த தவிப்புடன் அடுப்பை அணைத்து அவனிடம் திரும்பி நின்றாள்.
பேசினான்… பேசி முடித்தான்… குறுக்கிடாமல் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டாள். பேச்சை முடித்து அவளது முகம் பார்த்தான். முடிந்ததா என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள்.
“இனி நீதான் சொல்லணும்…” என்று முடித்திருந்தான்.
விறுவிறுவென வெளியேறி வந்தவள் கூடத்தில் உள்ள மேஜையில் இருந்த அவனது துணிகள் அடங்கிய தோள் பையை எடுத்து வேகமாகச் சென்று வாசலில் எறிந்தாள். அவன் வாங்கி வந்த தின்பண்டங்களையும் எடுத்து வெளியே எறிந்திருந்தாள்.
“ஹேய்… அஞ்சலி… என்ன பண்ற..?”
தடதடத்து வாசலுக்கு ஓடி வந்தவன் சிதறிக் கிடந்த பொருட்களை எடுக்க படக்கென வீட்டிற்குள் நுழைந்து கொண்டவள் கதவையும் தாழிட்டுக் கொண்டாள்.
“அஞ்சலி… அஞ்சலி…”
கதவை ஓங்கி ஓங்கி தட்டினான்.
“அப்படியே ஓடிப் போயிருங்க… இனி இந்த வீட்ல உங்களுக்கு இடம் இல்ல…” கத்திபோல் பாய்ந்து வந்தது அவள் குரல்.
“முதல்ல கதவை திற…”
“முடியாது… ரெண்டு நிமிஷத்துல இந்த இடத்தை விட்டுப் போகல வெளியில கிடக்கிற அத்தனையும் கொளுத்திடுவேன்…”
உள்ளிருந்து அவளது உரத்த குரல் ஓங்கி கேட்டது. மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த சவியோ அழத் தொடங்கி இருந்தாள்.
“அம்மா… என்ன பண்றீங்க..? அப்பா… அப்பா… அப்பாட்ட போகணும்…”
இவள் தொடர்ந்து மிரட்டுவதும் குழந்தை சத்தமிட்டு அழுவதும் கேட்க வெளியில் நின்றிருந்தவனுக்கு கோபம் கிளர்ந்தது.
“அஞ்சலி… இப்ப கதவை திறக்கப் போறியா இல்லையா..?”
“உங்களைப் போகச் சொன்னேன்…”
“புள்ளைய எதுக்குடி அழ வைக்கிற..?” சத்தமிட்டபடியே ஜன்னல் புறமாக வந்து நின்றான்.
அவனைப் பார்த்து கைகளை விரித்து உதடு பிதுக்கி தேம்பி அழுதாள் சவி. மனம் கனத்துப் போனது.
“அங்க என்னடி பாசம் பீறிக்கிட்டு வருதோ..? போ அந்த பக்கம்…” என்று குழந்தையின் முதுகை பிடித்துத் தள்ள தடுமாறி கீழே விழுந்திருந்தாள் சவி.
“ஏய்… இந்தா பாருடி… புள்ள மேல கைய வச்ச விரலை ஒடிச்சு அடுப்புல போட்டுருவேன்…” பல்லைக் கடித்து தொண்டை நரம்பு புடைக்க கத்தினான் குரு.
“என் புள்ளையை நான் அடிப்பேன்… கொல்லுவேன்… அதைக் கேட்க நீங்க யாரு..?”
“நான் யாரா..? நான் அவ அப்பா… அவ என் புள்ள… என் புள்ளமேல நீ கை வைக்கக் கூடாது…”
கண்களை உறுத்து விழித்து சட்டமாக பேசியவனை இடுப்பில் கை வைத்து தலைசாய்த்து ஒரு மார்க்கமாக பார்த்தாள் அஞ்சலி.
“நீங்க இவ அப்பாவா..? அப்ப இவளை பெத்த நான் யாரு..?”
இதழ்களில் வெறிப் புன்னகை படர்ந்திருந்தது.
“நீ அம்மாவா இருக்கலாம்… ஆனா என் பிள்ளையை அடிச்சா உன் கையே இல்லாம பண்ணிருவேன்டி…”
கோபத்தில் வார்த்தைகள் உரிமையோடு வெளிப்பட்டனவா உள்ளிருந்து வெளிப்பட்டனவா தெரியாது. ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு சராசரி குடும்பஸ்தனாக சண்டைக்கு முண்டிக் கொண்டிருந்தான் குரு.
“கைய வெட்டுவேன் கால வெட்டுவேன்னு சொல்லத் தெரியுது. வாய்க்கு வாய் என் புள்ள என் புள்ளன்னு சொல்லத் தெரியுது… அப்போ உன் பொண்டாட்டியை வேற ஒருத்தனுக்கு கட்டி வைக்க பாப்பியா… சொல்லுய்யா… இவ உன் புள்ளைன்னா நான் தெருவுல போறவளா..? எம்புட்டு ஏத்தம் இருந்தா எவனையோ எனக்கு புருஷனாக்க பாப்ப… உன்னைய என்ன பண்ணலாம்..?”
வெறியோடு பற்களை கடித்தவள் சுற்றும் முற்றும் ஏதேனும் ஆயுதம் தென்படுகிறதா என்று திரும்பிப் பார்க்க அவன் சுதாரித்து விலகுவதற்குள் ஜன்னலை பிடித்திருந்த அவன் கையின் மீது பருப்பு கடையும் மத்து வந்து மடீரென விழுந்து விரலை பதம் பார்த்திருந்தது.
“ஐயோ.?? என் விரலை ஒடைச்சிட்டாளே…” கையை உதறியபடியே அங்கிருந்த திண்ணையிலேயே அமர்ந்துவிட்டான்.
“அம்மா… அஞ்சு நிமிஷத்துல நீங்க இங்க இருக்கணும்…”
அழுத்தம் திருத்தமாக உள்ளே அவள் கர்ஜிப்பது கேட்டது… ராதாவிற்கு கைப்பேசியில் அழைத்திருக்கிறாள் என்றும் தெரிந்தது. தலையில் கை வைத்தபடி அவன் அமர்ந்திருக்க அடித்துப் பிடித்து இரண்டே நிமிடங்களில் அங்கு ஓடி வந்து நின்றிருந்தார் ராதா.
வாசலில் சிதறிக் கிடந்த அவனது உடைமைகள், திண்ணையில் அவன் அமர்ந்திருந்த கோலம், பூட்டி இருந்த கதவு என்று அனைத்தையும் நொடிகளுக்குள் உள்வாங்கியவர் வேகமாக அவனிடம் ஓடி நெருங்கினார்.
“என்னடா தம்பி பிரச்சனை..?”
ராதாவின் குரலில் படக்கென கதவு திறக்கப்பட்டது. அவரை முந்திக் கொண்டு வாசலை மறித்தபடி நின்றவளை இடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி இருந்தான் குரு. உள்ளே அழுது கொண்டிருந்த மகளை தூக்கி தோளோடு சாய்த்து கொண்டான்.
“அடிச்சாளா..?”
ஆவேசமாய் கேட்டவனிடம் இல்லை என்றவள் உதடு பிதுக்கியபடியே அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனை முறைத்தபடியே நின்றவளை கண்கள் திருப்பிப் பார்த்தான் குரு. சற்றுமுன் வெறியோடு அவனிடம் அவள் உதிர்த்த வார்த்தைகள் அவன் மூளைக்குள்தான் அழுத்தமாய் பதிந்து போயிருந்தனவே.
“உன் பொண்டாட்டியை வேற ஒருத்தனுக்கு கட்டி வைக்க பாப்பியா..?”
அவன் அனுமதியே இன்றி அந்த வார்த்தைகளை நிற்காமல் ரீவைண்ட் செய்து கொண்டே இருந்தது அவன் மூளை. சிலீரென உடலுக்குள் ஏதோ பரவிய உணர்வு. இதழ்களை மடக்கியபடி அவளையே அழுத்தமாகப் பார்த்தான்.
“அந்தக் கண்ணாடியை புடுங்கிட்டு முட்டக் கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன்… திரும்புய்யா அந்த பக்கம்…”
மரியாதை எல்லாம் மலையேறிச் சென்றிருக்க வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
“உங்க மருமகன் எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காராம்… 32 மாசம் அதிசயமா சுமந்து பெத்தாளாம் அவங்க ஆத்தா… அம்ம்ம்புட்டு நல்லவனாம் அவன்… என் புள்ளைய இந்த குரங்கு மூஞ்சிகிட்ட ஒப்படைச்சிட்டு அந்த பன்னி மூஞ்சியை நான் கல்யாணம் பண்ணனுமாம். நான் எவனோ ஒருத்தன்கூட சந்தோஓஓசமா வாழணுமாம்… அதை இந்த ஆளு கண் குளிர பாக்கணுமாம். எனக்கு வர்ற வெறிக்கு…”
ஆத்திரம் குறையாமல் பேசியவள் மேஜையில் இருந்த தட்டின்மீது கண் பதிக்க அடுத்து அவள் செய்யப் போவதை உணர்ந்து படக்கென அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டிருந்தான் குரு. பறந்து வந்த தட்டு டமாரென கதவில் பட்டு சுழன்று உருண்டு விழுந்திருந்தது.
‘ஜஸ்ட்டு மிஸ்ஸு…’ உள்ளே ஒருவனுக்கு மைண்ட் வாய்ஸ்.
நடந்து கொண்டிருக்கும் கலவரத்தை பார்த்த ராதாவிற்கோ சிரிப்புதான் பொங்கிக் கொண்டு வந்தது. ஆனால் அவள்முன் சிரித்தால் அவள் கோபத்தை இன்னும் தூண்டுவதாக மாறிவிடுமே என்று பிரயத்தனப்பட்டு சிரிப்பை அடக்கி அவள் கையை பிடித்து இழுத்து வந்து நாற்காலியில் அமர்த்தினார். தண்ணீரை எடுத்துக் கொடுத்து பருகச் செய்தார்.
உள்ளே மகளைக் கட்டியபடி கதவோடு சாய்ந்து அமர்ந்து கொண்டவனின் இதழ்களிலோ அவனையும் மீறிய புன்னகை. இதுவரை எழாத ஏகாந்த புன்னகை. தாயின் சத்தத்திலும், கோபத்திலும், நடக்கும் கலவரத்திலும் பயந்து உதடு பிதுக்கிக் கொண்டிருந்த மகள் தந்தையின் சிரிப்பில் தானும் மெல்ல இதழ் விரித்தாள்.
“அப்பா… சிரிக்கிறீங்களா..?” அவன் கன்னங்களை பற்றியபடி ஹஸ்கி குரலில் கேட்டாள்.
“அந்த பைத்தியக்காரியை பெத்தாங்களா..? செஞ்சாங்களா..?” மகளிடமே கேள்வி கேட்டவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
சட்டென முகத்தை மாற்றிக் கொண்டவர் “நான்தான் படிச்சு படிச்சு சொன்னேனே தம்பி. அப்பவும் அதே தப்பை பண்ணி வச்சிருக்க. இது தேவையா..?” என்றார் ஆதங்கமாக.
“அவ நல்லதுக்குதான் அத்தை…” என்று இவன் ஆரம்பிக்கும் முன் “யோவ்…” என்றபடி எழுந்து நின்றிருந்தாள் அஞ்சலி.
“அம்மா… அந்த ஆளை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… இங்க இருந்தா எனக்கு இருக்கிற வெறிக்கு எதையாவது ஒன்னை பண்ணி விட்ருவேன்…” என்றாள் பல்லை கடித்தபடி.
“பாத்தீங்களா அத்தை… மரியாதையே இல்லாம கதைக்கிறா…”
பாவமாக அத்தையிடம் புகார் வாசித்தவனை பார்க்க பார்க்க அவருக்கு சிரிப்பு கட்டுக்கடங்காமல் வந்தது. அங்கு நடந்து கொண்டிருப்பது சிருங்காரச் சண்டையாகத்தான் தோன்றியதே ஒழிய அடிதடி சண்டையாக தோன்றவில்லை. அங்கு ஒருத்தியின் காளி அவதாரத்தில் அவளது காதல்தானே அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது.
“அவளை போய் சமாதானப்படுத்து குமரா…”
“ஐயோ… பக்கத்துல போனாலே மண்டையை உடைச்சிடுவா…”
சொன்னவன் குழந்தையோடு திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டான்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடியே அஞ்சலியிடம் சென்றார் ராதா.
“டென்ஷன் ஆகாத அஞ்சலி…அவனுக்கு ஏதோ வாயில சனி… உளறிட்டான்… சரி விடு… அவனையும் பாப்பாவையும் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்… மதிய சமையல் நானே பண்ணிடறேன்… எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிட்டு நீ சாப்பிட வந்துடு…”
அவள் தோளை வருடியபடியே கனிவான குரலில் கூறி குரு மற்றும் சவியை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தார் ராதா.
வாசல் கதவை பிடித்தபடி அவன் முதுகையே கோபத்தோடு அவள் பார்த்துக் கொண்டிருக்க அந்த கோபவிழிகள் தந்த தாக்கத்தில் வேறு ஒன்றை உணர்ந்து கொண்டவனின் இதயம் இடம் மாறி நகர்ந்தது.
இன்பச் சாரலின் இனிமையில் இதழ்கள் புன்னகையை தேக்கிக் கொண்டன.