Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 1

தஞ்சை மாவட்டத்தின் அத்திவெட்டி சித்திரை மாத வெயில் சுள்ளென்று அதிகாலையே ஆட்டத்தை ஆரம்பித்திருந்தது, வெளியில் தலை காட்டுபவன் மட்டுமில்லை வீட்டுக்குள் ஒளிந்து கிடப்பவன் உயிர் நீரைக்கூட உறிஞ்சு எடுக்கும் உக்கிரத்தோடு மேலெழும்பிக்கொண்டிருந்தது சூரியன்.

 

மூன்று மாதம் முன்புவரை தெருவையே அடைத்துக் கோலமிட்டு, வண்ணங்கள் தூவி அழகு பார்த்த பெண்டிர் எல்லாம் இனி நாங்கள் வைப்பதுதான் புள்ளி இழுப்பதுதான் கோலம் என்று கைக்கு வந்ததை வாசலில் வரைந்துவிட்டுச் சென்றனர்.



Advertisement

மழை இல்லாமலே வீதியெங்கும் நீரால் நனைந்து கிடந்தது.வெக்கையைத் தணிக்கக் காலை மாலை என்று இரண்டு வேளையும் தண்ணீரை வாரி இறைத்தனர் அதற்குப் பலன் உண்டா என்பதுதான் கேள்விக்குறி.

 

Advertisement

அந்தத் தெருவின் கடைசியில் இருந்த பெரிய வீட்டில் மட்டும் பரபரப்பாக வேலைகள் நடந்துகொண்டிருந்தது.வீட்டின் பின்பக்கம் தோட்டத்தின் ஒரு பக்கத்தை மறைத்துச் சமையல் வேலை நடந்துகொண்டிருந்தது சமையல் ஆட்கள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தனர்.

Advertisement

 

தாழ்வாரத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த பவுனுத்தாயி வீதியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆயிற்று இன்றோடு அன்பு மகனை எமனுக்கு வாரிக்கொடுத்து பதிமூன்று வருடங்கள், ஆசை பேத்தி தன்னைப் போலவே நிறமில்லா வாழ்வைச் சுமந்து நிற்கும் பதிமூன்று வருடங்கள்.

Advertisement

காரணமானவன் எங்கிருக்கிறான் தெரியாது. எப்படி இருக்கிறான் தெரியாது ஆனால் அவன் மீதிருக்கும் வஞ்சமும் வெறுப்பும் வருடம்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

 

கலங்கிய விழிகளை அவர் முந்தானையில் துடைக்க “அத்தாச்சி” என்று அழைத்துக்கொண்டே அவர் அருகில் வந்து அமர்ந்தார் ராசாத்தி.

 

“வாடி” என்ற பவுனுத்தாயி கால்களை நீட்டி மெல்லத் தடவிக்கொடுத்தார். அருகில் அமர்ந்த ராசாத்தி சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு சுற்றிலும் பார்வையை ஓட்டினார், அவர் வந்த நோக்கம் புரிந்தாலும் பவுனுத்தாயி வாயைத் திறக்கவில்லை உன்னைப் போல எத்தனை பேரைப் பார்த்திருப்பேன் என்பதாக வேடிக்கை பார்த்தார்.

 

“என்ன அத்தாச்சி பெரியபேரனுக்கு பொண்ணு அமைஞ்சிருக்கு போல யார் வீட்டு பொண்ணு என்ன சேதி” என்றார் மெல்ல.

 

அவரை அழுத்தமாகப் பார்த்த பவுனுத்தாயி “ஏன் அமைஞ்சா ஊட்டுக்குள்ள கதவடைச்சிட்டா கல்யாணத்தை நடத்தப் போறோம்? வக்கணையா ஆக்கிப்போட்டு ஊரு மெச்சக் கல்யாணம் செய்ய வக்கத்தா கெடக்குறோம்” என்றார் உருமலாக.

 

“என்ன அத்தாச்சி இப்போ என்ன கேட்டுபுட்டேன்!! அரசல் புரசலா சேதி கேள்விப்பட்டேன் அதான் என்னனு கேட்டுட்டு போலாம்னு…” என்று இழுத்து நிறுத்தினார் ராசாத்தி.

 

“சேதி இருந்தா சொல்லி அனுப்புறோம் இன்னைக்கு என்ன வேலையோ அத மட்டும் பாரு உள்ள போய் அன்புக்கிட்ட என்னவேணும்னு கேளு” என்று முடித்துக்கொண்டார். உன்னோடு பேச்சு முடிந்தது எழுந்து போ என்றது அவர் குரல்.

 

அதற்குமேல் பேசி யார் வாங்கி கட்டிக்கொள்ள அமைதியாக எழுந்து உள்ளே சென்றார் ராசாத்தி, பவுனுத்தாயும் எழுந்து உள்ளே நடந்தார் அந்தப் பெரிய ஹாலை கடக்கையில் அவர் விழிகள் தன்னாலே பேத்தியின் அறையைத் தழுவியது.

 

கொஞ்சமாகத் திறந்திருந்தது அறை. பேத்தி எழுந்து குளித்து அமர்ந்திருப்பாள் தெரியும் என்றாலும் உள்ளே சென்று அவளைக் காண முடியாது மனம் வராது, தளர்வாக நடந்து தோட்டம் பக்கம் செல்ல அன்புக்கரசி அங்கு நின்று வேலை நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

“அன்பு” என்ற பவுனுத்தாயின் குரலில் வேகமாகத் திரும்பியவர் “சொல்லுங்க பெரியம்மா” என்று அருகில் வந்தார். “சாமி கும்பிடலாம்ல… மாப்ள எங்க பெரியவனயும் காணும்” என்க.

 

“இங்க இருக்கேன் அத்த” என்று வந்துவிட்டார் அந்த வீட்டின் குடும்பத் தலைவர் ரங்கசாமி. “சமையல் வேலை முடியப்போகுது அதான் பாத்துட்டு இருந்தேன்” என்றவர் “சின்னவன் அய்யரைக் கூட்டிவர போயிருக்கான் பத்து நிமிஷம் ஆரம்பிச்சுடலாம்” என்றவர் உள்ளே நடக்க.

 

“பெரியவன் இன்னும் வரலையே” என்றார் பவுனுத்தாயி வாசலைப் பார்த்துக்கொண்டே உறவுகள் நடுக்கூடத்தில் குழுமத் தொடங்கியிருந்தனர்.

 

திரும்பிப் பவுனுத்தாயை பார்த்த ரங்கசாமி “நாம சொல்ற அளவுக்கா வெச்சுப்பான் அதெல்லாம் சரியா வந்திடுவான்” என்றவர் மனைவியின் பக்கம் திரும்பி “அன்பு நீ போய்ப் பிள்ளையைப் பாரு பூசை ஆரம்பிச்சதும் வெளில கூட்டிட்டு வா” என்று சொல்லி வாசல் நோக்கி நடந்தார்.

 

அரையடி உயரமிருந்த சட்டமிட்ட புகைப்படத்தில் அமைதியான புன்னகையோடு இருந்தார் சுந்தரம், சாமி கும்பிடத் தேவையான அனைத்தும் தயாராகவே இருந்தது அய்யரும் வந்துவிட்டார். அவர் அனைத்தையும் எடுத்துவைக்க மிக நெருங்கிய சொந்தங்களும் கூடி நின்றிருந்தனர்.

 

“தம்பி வரலையா இன்னும்” என்று அய்யர் கேட்கும்போதே வேக நடையில் உள்ளே நுழைந்தான் சிவபாலன், நேரே சென்று பூஜையில் அமர்ந்தவன் தாயை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான், அன்புக்கரசி வேகமாகக் கவிதாவின் அறைக்கு விரைந்தார்.

 

மாமனுக்கு மகன் ஸ்தானத்திலிருந்து கொல்லி வைத்தவன் அவன் தானே குடும்பத்தைக் காக்கும் தலை மகனும் அவனே, அதே சாம்பல் நிற வேட்டி கருப்பு நிற முழுக்கைச் சட்டை அதை முட்டிவரை மடித்து விட்டு அமர்ந்திருந்தான்.

 

இவனுக்கு மட்டும் தாடி எப்படி ஒரே அளவில் நிற்கிறது என்பது முதல் சந்தேகம் அந்த ஊர் மக்களுக்கு . அது எப்பொழுதும் கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை, தாடியை முத்தமிட்டால் தெய்வ குத்தம் என்று விறைப்பாக மேல் நோக்கி நிற்கும் மீசை, தோள்வரை இழைந்துகொண்டு கிடக்கும் சுருட்டை முடி.

 

கருப்பு நிறமா? நல்ல விசேஷம் நடக்கும்போது கருப்பு வேண்டாம் கோவிலுக்குக் கருப்பு போடக் கூடாது அது சனியோட நிறம் என்று பயங்கொள்ளும் மக்களுக்கு மத்தியில் கருப்பு நிறம் என்றால் தள்ளி வைப்பீர்களா அப்படியானால் அதைத்தான் போடுவேன் என்று அதை மட்டுமே அணிந்து சுற்றுபவன்.

 

அது கல்யாணம் என்றாலும் காதுகுத்து என்றாலும் கருமாதி என்றாலும் அவன் எப்பொழுதும் கருமைநிறத்தில் தான். இப்படி எங்கவீட்டு விசேஷத்துக்கு வராதப்பா என்று அவனிடம் யாரும் கூறிவிட முடியுமா “வேணும்னா பத்திரிக்கை வை வேண்டாமா கிளம்பு” என்றுவிடுவான்.

 

அவன் திருமணத்துக்காவது இந்த உடையை மாற்றுவானா என்று பார்க்கவே அவனுக்குத் திருமணம் ஆகிவிட வேண்டும் என்று அந்த ஊருக்குள் பல இதயங்கள் காத்துக்கிடக்கிறது.

 

“இந்தப் பயலை வெள்ளை வேட்டி சட்டைல பாத்துட்டா என் கட்டை வெந்துடும்” என்றார் ராசாத்தி அருகில் நின்ற தன் கணவனிடம்.

 

“அம்புட்டுக்கு நீ கஷ்டப்பட்டு உயிர் வாழ வேண்டாம் பின்னாடி அடுப்பு சும்மாதான் எரியுது போய்ச் சுருண்டு படுத்துக்க எங்களுக்கு விறகு மிச்சமாவும்” என்றான் பவுனுத்தாயின் இளைய பேரன் கதிர். அவனைத் திரும்பி முறைத்தவர் கழுத்தை வெட்டிக்கொண்டார்.

 

பக்கவாட்டில் மெல்லத் திரும்பிய அண்ணனின் தலை அசைவைப் பார்த்ததுமே அடித்துப்பிடித்து அவன் அருகில் சென்று அமர்ந்துகொண்டான் கதிர். அன்புக்கரசி கவிதாவை கைதாங்கலாக அழைத்துவந்தார் உடன் பேத்தி சௌம்யா. அக்காவைப் பார்த்தவன் விழிகள் ஒருமுறை இறுக மூடித் திறந்தது.

 

ஒரு ஓரமாக மகளோடு அமர்ந்துகொண்டாள் கவிதா, இலை போட்டுப் படையல் வைத்து ஆத்ம சாந்திக்கு பூஜை செய்து அவன் கையாலே பதிமூன்று பேருக்கு உடை கொடுத்துப் பந்தியும் பரிமாறப் பட்டது.

 

தடபுடல் விருந்துதான் அதில் குறையொன்றும் இருக்காது சாம்பார், ரசம்,கூட்டு, பொரியல், வடை பாயசம் என்று வயிற்றை நிறைத்துத்தான் அனுப்புவர். வீட்டினருக்குத்தான் ஒரு பிடி சோறு உள்ளிறங்காது அனைவரும் உண்டு முடித்துச் செல்ல வீட்டினர் யாரும் உண்டிருக்கவில்லை.

 

அன்புக்கரசி கெஞ்சி அனைவரையும் சாப்பிட வைத்துக்கொண்டிருந்தார், அந்த வீட்டின் கடைக்குட்டி சித்ராவும் தாயுடன் சேர்ந்து பொறுப்பாக அவர் சொல்லும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

 

வேலை செய்ய ஆட்கள் இருந்தனர். மேற்பார்வைதான் வீட்டுப் பெண்களுக்கு என்றாலும் மனதின் சோர்வு அனைவரையும் தளர்த்தியிருந்தது ஆளுக்கு ஒரு மூலையில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

 

பவுனுத்தாயி தன்னுடைய அறையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார் அவருக்காகச் சூடான பாலில் மஞ்சள் மிளகு சேர்த்து எடுத்துக்கொண்டு வந்தார் அன்புக்கரசி.

 

“பெரியம்மா இதைக் குடிங்க” என்று அவரிடம் நீட்ட அமைதியாக வாங்கிக்கொண்டார். “ஆயி என்ன செய்யுது” என்றவர் குரல் தடுமாறியது.

 

“தூங்கிட்டா… சௌமியாவும் சித்ராவும் கூடத் தூங்கிட்டாங்க நேரம் போவுது நீங்களும் படுங்க” என்ற அன்புக்கரசி அவர் காலுக்கருகில் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டார்.

 

“பெரியவன் இன்னும் வரலையா” என்க.

 

“இன்னைக்கு எப்படியும் வரமாட்டானே மில்லுல தான் இருப்பாங்க அண்ணனும் தம்பியும்” என்றார் அன்புக்கரசி.

 

“ஹ்ம்ம்” என்ற பவுனுத்தாயி “ரெண்டு நாள் செண்டு பொண்ணு வீட்டுக்குத் தகவல் சொல்லிவிடுவோம் என்னமோ இப்போதான் கல்யாண யோகம் வந்திருக்கு போல” என்றவர்.

 

“ஆனா என்னனு அவளைக் கேக்க சொல்லுறான் உரிச்சு வெச்ச கோழி கணக்கா வெளு வெளுன்னு இருக்கா அம்புட்டுதான், மூக்கு முழின்னு ஒன்னும் எனக்குப் பிடிக்கல இவனுக்கு என்னத்த பிடிச்சுது இத்தனை வயசுக்கு இவளைத்தான் பிடிச்சுதா” என்றார் பவுனுத்தாயி.

 

அவரிடம் அதற்கு எதிர் வாதம் எல்லாம் புரிய முடியாது சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் தங்களின் இந்த வாழ்க்கையே இந்தப் பெரிய மனுஷியின் கருணைதான் அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார் அன்புக்கரசி.

 

“சரி” என்ற சொல்லைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது வரவும் கூடாது அது அவர் செய்யும் பெரும் பாவம், நன்றிகெட்ட தனம் இந்த எண்ணம் அனுப்புக்கரசி மனதில் ஆழமாக வேரூன்றிக் கிடக்கிறது.

 

மகனுக்கு என்னவோ திருமணம்பற்றிய எண்ணமே இல்லை அதைப் பற்றிய பேச்சையே எடுக்கவிடாமல் பார்வையாலே தடை சொல்பவன் “அந்தப் பொண்ணை வேணா கேளுங்க” என்றான் இரண்டு வாரங்கள் முன்பு.

 

அதன் பிறகு அதைப் பற்றிய எந்தக் கேள்விகளும் இல்லை அவன் பக்கமிருந்து.கல்யாணம் செய்யணும் அவ்ளோதானே சொல்லிட்டேன் கேட்டா கேளுங்க இல்ல விடுங்க என்பதாகத்தான் அவன் நடத்தை.

 

மகனுக்குப் பிடித்துக் கேட்டதாக அன்புக்கரசிக்கும் தோன்றவில்லை மகன் குணத்துக்குச் சரியாக வருவாளா என்ற சந்தேகமும் இருக்கிறது.பெண்ணை இவரும் பார்த்திருக்கிறார் நல்ல செல்வாக்கான குடும்பம் விசேஷ வீடுகளில் ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறார் அழகிதான்.

 

பவுனுத்தாயின் சொல்லுக்குப் பின் ஒளிந்துகிடக்கும் செய்தி புரியாமல் இல்லை, உன் மகனுக்கு இத்தனை நல்ல சம்பந்தமா என்ற மறைபொருள்… பெண் வீட்டில் வசதி நிறையவே வெளியில் வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்லாமல் இங்கே அனுப்பி வைத்தனர் தெரிந்த இடம் என்று.

 

அவர்களின் கயர் பாக்டரியில் கணினி சம்பந்தமான வேலைகளைப் பார்க்கும் பெண் பெயர் ஷர்மிளா. என்ன ஒரு ஏழு எட்டு முறை பார்த்திருப்பானா அதுவே சந்தேகம்தான். என்னவோ அடக்கமானவள் தன்னுடைய கூட்டுக் குடும்பத்திற்குப் பொருத்தமான குத்துவிளக்கு என்று அவனுக்குத் தோன்றியது போல.

 

ஒவ்வொரு முறையும் திருமணத்தைப் பற்றி எதுவும் பேசுவான் என்று தன் முகத்தை ஆர்வமாகப் பார்க்கும் தாயை எண்ணிப் பார்த்தவன் பேசிப் பாருங்கள் என்றுவிட்டான்.

 

பாக்ட்ரியை தம்பியின் பொறுப்பில் தான் விட்டிருக்கிறான் எபோழுதேனும் சென்று பார்ப்பதோடு சரி அவன் வந்து செல்லும் அந்த ஒரு நாள் தரிசனமே போதும் வேலைகள் கனகச்சிதமாக நடக்க.

 

“என்னவோ நல்லது நடந்தா சரி” என்ற பவுனுத்தாயி “நீயும் போ” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டார். கதவை அடைத்துவிட்டு வெளியில் வந்த அன்புக்கரசிக்கு மனதில் ஒரு சஞ்சலம், மகனின் திருமணம் நடக்குமா என்பதாக என்னவோ அவர் உள்ளுணர்வு அவருக்குக் குழப்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

 

சாமி அறை சென்று நின்றவர் “கஷ்டத்தோட சேர்த்து அதைத் தாங்குற சக்தியையும் குடுத்துடுப்பா” என்று தான் வேண்டிக்கொண்டது.அவர் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் அப்படி எப்படியும் வரவேண்டிய அனைத்தும் வாசல் தேடிக் கண்டிப்பாக வந்துவிடும். வழிமாறிப் போகாது, அதில் துவண்டு போகாமல் மீண்டெழும் வலிமையையும் சேர்த்தே அனுப்பிவிடு என்பதுதான் அவரின் வேண்டுதல்.

 

நான்கு நாட்கள் கடந்திருந்தது தாழ்வாரத்தை நடந்தே அளந்துகொண்டிருந்த இளைய பேரனை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த பவுனுத்தாயி “என்னலே குட்டி போட்ட பூனையாட்டம் அங்கிட்டு இங்கிட்டு தாவுற என்ன சங்கதி” என்றார் அவனை ஆராயும் பார்வை பார்த்து.

 

“ஒண்ணுமில்ல அம்மாச்சி” என்றவனுக்கு உள்ளுக்குள் அப்படி உதறியது, நேற்று வரைக்கும் கூட அவனுக்கு இப்படியொரு சம்பவம் நடப்பதே தெரியாது. கேள்விப்பட்டதும் அவனுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது என்னவோ உண்மை.

 

ஏன் விஷயம் அறிந்த உடனே அவனே சென்று சுவற்றில் தலையை முட்டிக்கொண்டான். இனி என்ன என்ன பிரச்சனை எல்லாம் வரப்போகிறதோ என்ற பயத்திலேயே காலை முதல் ஐந்து முறை வயிற்றைக் கலக்கி விட்டது.

 

இன்று தன்னை புதைக்கிறார்களா எரிக்கிறார்களா என்று தெரிந்துவிடும். அதற்குமேல் தலை தப்பினால் தம்புரான் புண்ணியம், தஞ்சையின் அரசன் பெருவுடையாரிடம் மொத்தமாகச் சரண் அடைந்துவிட்டான்.

 

வாசலில் அத்தனை உக்கிரத்தோடு வந்து நின்றது சிவபாலனின் கருப்பு நிற மஹிந்ரா தார் அதிலிருந்து இறங்கியவன் விழிகள் தம்பியைக் கூர்மையாக ஒரு நொடி தழுவிவிட்டு அகன்றது, அதற்கே உடல் விறைத்துவிட்டது கதிருக்கு.

 

பின்னாலே வந்த அவன் தந்தையும் நெருங்கிய உறவின் பெரிய மனிதர்கள் நால்வரும் அவனைப் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றனர். இப்படியே போய்க் கடல்ல குதிச்சிடலாமா என்று யோசனை ஓடக் குதிக்கக் குளம் கூட இல்லையேடா நம்மூர்ல இப்போ என்றது மனசாட்சி.

 

“கதிரேசா” என்ற ரங்கசாமியின் அழைப்பில் வரமாட்டேன் என்று அடம்பிடித்த கால்களை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அண்ணன் முகத்தைத்தான் முதலில் பார்த்தான் கதிரேசன் அங்கே, ஒன்றையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

“தொரை ரொம்ப பெரிய வேலையெல்லாம் பாத்திருக்கீங்க போல” என்றார் ரங்கசாமி.

 

“அய்யா…” என்று தடுமாறியவன் “அண்ணா” என்று சிவபாலன் காலின் கீழே அமர்ந்துவிட்டான். அண்ணனின் கையைத் தயக்கத்தோடு பற்றியவன் “சத்தியமா நீங்க ஷர்மிளாவை பொண்ணு கேட்கச் சொன்ன விஷயம் எனக்குத் தெரியாது யாரும் சொல்லவும் இல்ல, நானே அவளைப் பிடிச்சிருக்குனு ரெண்டு மாசம் முன்னாடிதான் அவகிட்ட சொன்னேன்” என்ற தம்பியை ஊடுருவும் பார்வை பார்த்தான் அண்ணன்காரன்.

 

தம்பியிடம் தலையாட்டியவள் தன்னையும் பார்த்திருக்கிறாள்… இல்லை தனக்கு அப்படித் தோன்றியதா?? என்று சிந்தித்தவன் இல்லை நிச்சயம் தன்னை பார்த்தாள். இப்பொழுது தன் பின்புலம் அவளைத் தள்ளி நிறுத்துகிறது… ஒரு கசந்த முறுவல் அவனிடம்.

 

‘இவனுக்கு எத்தனை தூரம் உண்மையாக இருப்பாள் அவள்… அதோடு அண்ணனுக்குப் பேசிய பெண் தம்பிக்கு?’ அவனுக்கு ஒருவித எரிச்சல் மண்டியது, இடியாப்பச் சிக்கலாகப் பிரச்சனை பெரிதாவதாக ஒரு தோற்றம் அவனுள். எப்படிக் கவனிக்கத் தவறினேன் என்று உள்ளே குடைந்தது வழிகளை மூடி இடக்கையின் பெருவிரலால் புருவத்தை அழுத்தி அவன் நீவ.

 

“போச்சு டென்சன் ஆவுறாரு” என்று பதறியது இவனுக்கு.

 

“அய்யா நீங்களே பேசி முடிங்க” என்றவன் அவன் அறைக்குச் சென்றுவிடச் செல்லும் மகனைக் கவலையோடு பார்த்து நின்றார் அன்புக்கரசி.

 

சிவபாலன் ரங்கசாமியிடம் பேசச் சொன்னதோடு சரி அவன் பெண் வீட்டின் பக்கமே போகவில்லை., ரங்கசாமி அவரின் தம்பி, மற்றும் பெரியப்பா, சித்தப்பா என்று அவர்களுடன் இன்னும் இரண்டு உறவு பெரியவர்களையும் அழைத்துச் சென்றார் பேசிப்பார்க்க. ஆனால், பெண்ணின் தாய் மாமனின் பேச்சு இவர்களுக்குச் சுகிக்கவில்லை.

 

பேசிவிட்டு வெளியில் வந்த ரங்கசாமி யோசனையாகவே நடக்க அவரின் சித்தப்பாதான் சிவபாலனை அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டார். மனிதருக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது அவனைக் காயப்படுத்தும் அவமானப்படுத்தும் அணைத்து சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்வார்.

 

அதற்காக அவரை விட்டுவிட்டு ஒரு காரியத்தைச் செய்துவிடவும் முடியாது “அந்தப் பயலுக்கு பார்த்து என் உறவையே தள்ளி வெக்குறீங்களோ” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்.

 

“நீ திருந்தவே மாட்டியா அப்படியே அவன்கிட்ட இப்போ சொல்லி அவனை இன்னும் ஏத்தி விடுனுமா உனக்கு” என்று அவர் அண்ணன்தான் தம்பியைத் திட்டிக்கொண்டிருந்தார்.

 

அவன் அலட்டிக்கொள்ளவேயில்லை “சரி நல்லது எல்லாரும் கிளம்புங்க” என்றுவிட்டான் அவன். நீ பெண் கொடுத்தால் எனக்கென்ன கொடுக்காவிட்டால் எனக்கென்ன என்பதுதான் அவன் எண்ணம்.

 

ஆனால், அவன் அன்னையை அவன் பிறப்பை இன்றும் விமர்சிக்கும் இந்த மனித மனங்கள் அவனை இன்னும் இன்னும் இவர்களிடமிருந்து தள்ளி நிறுத்துகிறது அவனுடைய வட்டத்தைச் சுருக்குகிறது.

 

“நா அப்போவே நெனச்சேன் என்னமோ இந்தப் பயகிட்டச் சரி இல்லன்னு என்னத்த சொல்லுறாவோ அவ வீட்ல” என்றார் பவுனுத்தாயி மருமகனை பார்த்து.

 

ரங்கசாமி சங்கடமாக அமர்ந்திருக்க, அதற்காகவே காத்திருந்த அவரின் சித்தப்பா “என்ன சொல்லுவாங்க உங்க மகனுக்குக் குடுக்க எங்களுக்குச் சம்மதம்தாங்க ஆனா, ஆயிரம் இருந்தாலும் பெரியவர் நம்ம ஆளு இல்லீங்களே அவருக்குக் குடுத்துட்டு சொந்தம் முன்னாடி என்னத்த சொல்றதுன்னு கேக்குறாரு”.

 

“அவன் பொறப்பும் ஒன்னும் சரியில்லையே…” என்றவர் முடிக்கும் முன்னே அன்புக்கரசி சேலை தலைப்பால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று மறைந்தார்.

 

“சித்தப்பா” என்று ரங்கசாமியின் குரலும் “தாத்தா” என்று கவிதாவின் குரலும் ஒன்றாக ஒலித்தது.

 

“என் தம்பிக்குக் குடுக்க முடியாத அளவுக்குச் சீமை சிங்காரிய அவங்க பெத்து வெச்சிருந்தா அங்கேயே வெச்சுக்க சொல்லுங்க இங்க யாரும் தவம் கிடக்கல” என்றவள் சின்னத் தம்பியைத் திரும்பிப் பார்க்க.

 

“அவளைப் பிடிச்சிருக்கு உண்மைதான்… ஆனா அண்ணனைப் பேசின வீட்டு பொண்ணு எனக்கு வேண்டாம்” என்றான் முடிவாக.

 

“எதுக்கு வேண்டாம்னு முடிவெடுக்கணும் சின்னவன்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றானே அவங்களும் குடுக்குறேன்னுதானே சொல்றாங்க பேசி முடிக்கலாம் ரொம்ப வருஷமா நல்ல விஷயமே குடும்பத்துல நடக்கல” என்றார் பவுனுத்தாயி மருமகனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே.

 

அன்புக்கரசிக்கு சுருக்கென்று தைத்தது முட்டிய கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அனைவருக்கும் குடிக்க மோர் எடுத்துக்கொண்டிருந்தார்.

 

கவிதா அம்மாச்சியை யோசனையோடு பார்க்க அவர் அவளை அர்த்தமாகப் பார்த்தார். ரங்கசாமியின் மனதுக்கு ஒப்பவில்லை என்றாலும் ஒன்றும் பேசமுடியாமல் அமைதி காத்தார், தன்னுடைய கையாலாகாத்தனம் தன்னையே வெறுத்தார் மனிதர்.

 

கதிரேசனுக்கு பெரும் பாரம் மனதைச் சூழ்ந்தது யார் எப்படியோ அவனுக்குச் சிவபாலன் என்றால் அத்தனை பிடித்தம், அண்ணனை அவமரியாதை செய்தவர்கள் வீட்டிலிருந்து தனக்குப் பெண்ணா அது மனதுக்குப் பிடித்தவளாகவே இருந்தும் கசந்தது.

 

அம்மாச்சியின் பேச்சு அவனுக்கு உண்மையிலே அதிர்ச்சியைக் கொடுத்தது குடும்ப அரசியலின் நெளிவு சுளிவு இன்னும் விளங்கவில்லை அவனுக்கு. அம்மாச்சியின் பேச்சை அண்ணன் மீறமாட்டார் என்று தெரியும் அம்மாச்சியும் இதுவரை இது தப்பு இதை இப்படிச் செய் என்று சொல்லியதில்லை சொல்லும்படி சிவபாலனும் வைத்துக்கொண்டதில்லை இது என்னவோ கதிரேசனுக்கு புதிதாக இருந்தது.

 

நிமிர்ந்து பார்த்தவன் விழிகளில் மேலே இருந்து இறங்கி வந்த அண்ணனும் அடுப்படியிலிருந்து மோரோடு வந்த அன்புக்கரசியும் விழுந்தனர் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

 

“பெரியவங்க சொல்றதுதான் சரி அப்படியே பேசி முடிங்க எனக்கு இப்போ கல்யாணத்துல நாட்டமில்லை” என்றவன் வெளியேறிவிட்டான். அவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளை அவர்களே நிரப்பிக்கொண்டனர்.

 

‘இதற்குமேல் இதைப் பற்றிய பேச்சு இல்லை கதிரேசனின் கல்யாணத்தைப் பேசி முடியுங்கள்’ என்பதுதான் அது.

 

“என்ன அன்பு நீ என்ன சொல்லுற” என்ற பவுனுத்தாயை பார்த்த அன்புக்கரசி “நான் என்னத்த சொல்லப் பெரியம்மா நல்ல விஷயம் நடக்கட்டும் சந்தோஷம்தானே அவனுக்கான கல்யாண யோகம் இன்னும் வரல போல வரும்போது நடக்கும்” என்று எப்பொழுதும் இருக்கும் அதே அளவான புன்னகையோடு அதே மெலியக் குரலிலேயே சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

 

அவர் மனம் உலைக்களமாகக் கொதித்தது. நேற்று வெறும் வெள்ளைத் தோலாகத் தெரிந்த மகராசி இன்று பேரனுக்கு ஏற்ற மகாராணி ஆகிப்போன மாயத்தை எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!