Skip to content
Post Views: 2,630
யாதுமாகி #32
அனுபமா விக்ராந்த் நிச்சயதார்த்தம் நல்ல விதமாக முடிந்தது.
உடன் பிறந்தவன் போல் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
வாசுவுடன் இணைந்து விருந்தினர்களை உபசரிப்பது தொடங்கி தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பி வைப்பது வரை நண்பர்கள் இருவரும் பார்க்க சுரேந்தர் நிகழ்ந்து போனான்.
Advertisement
டேய் ரொம்ப பெரிய பெரிய சென்டிமென்ட் சீன் எல்லாம் ஓட்டாதே…என் கல்யாணத்துக்கு A to Z நீயும் வாசுவும் தான் ஓடி ஓடி பார்த்தீங்க! நண்பனை அணைத்துக் கொண்டான்.
வாசுவின் மனைவி ஸ்வேதா, சுரேந்தரின் மனைவி தீபிகா, நேத்ரா அனைவரும் கூட்டணி போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
நேத்ராவின் நிலையை உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவளுக்காக மிகவும் வருந்தினர்.
Advertisement
தீபிகாவிற்கு எப்போதுமே ஜோதியை பிடிக்காது. நீயா இருக்கவே அவங்க குடும்பத்தில் குப்பை கொட்டுற, நான் எல்லாம் ஒரு நாள் ஒரு பொழுது இருக்க மாட்டேன். வருந்தினாள் தீபிகா.
Advertisement
அப்படி ஏன் சகித்துக் கொண்டு வாழணும்? இருப்பது ஒரு வாழ்க்கை அதை நிம்மதியாக வாழாமல் எதற்கு இப்படி வருந்தி அழனும்? எல்லாத்தையும் விட்டு எறிந்து விட்டு தனி குடித்தனம் போக வேண்டியது தானே… வாசுவின் மனைவி சுவேதா பொங்கி விட்டாள்.
சுவேதா நீ நினைக்கிற மாதிரி விஷ்ணு அண்ணாவால் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு வந்துட முடியாது.நம்ம வீட்டு சூழல் வேற,அவங்க வாழ்க்கை முறை வேற.. தீபிகா யதார்த்தம் பேசினாள்.
அதுக்காக எவ்வளவு நாள் அடிமை வாழ்க்கை வாழ முடியும்? நேத்ரா மேல் உள்ள அன்பில் பொங்கினாள் ஸ்வேதா.
Advertisement
அந்த அம்மா போய் தொலைந்தால் ஆவது நேத்ராக்கு நிம்மதி.
ஸ்வேதா சொல்லிக் கொண்டிருக்க…ஐயோ அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்.அவங்க நல்லா இருக்கட்டும்! என்னை ஆதரித்து அரைவணைக்க பாட்டி,மாமா வினி எல்லாம் இருக்காங்க. விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.
நேத்ரா உன் நல்ல குணத்துக்கு உனக்கு அந்த கொம்பேறி மூக்கன் மாமியாரா வாத்திருக்கே…தீபிகா மிகவும் வருந்தினாள்.
அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு விஷ்ணு நேத்ரா கிளம்பினார்கள்.
என்ன மேடம் பெரிய மாநாடு நடந்திருக்கு போலிருக்கு.. விஷ்ணு அவளை சிரிப்புடன் கேட்டான்.
ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.
மீட்டிங்கில் என்ன ஹைலைட்ஸ்?
லேடீஸ் என்னவோ பேசிட்டு போறோம்…அதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? செல்ல கோபம் கொண்டாள்.
என்ன பெருசா பேசிட போறீங்க… உன் புடவை நல்லா இருக்கு, அவளோட நெக்லஸ் சூப்பரா இருக்கு. என் மாமியார் எம ராட்சஸி, உன் மாமியார் அப்படி இப்படி..இதெல்லாம் பேசி இருப்பீங்க! ஹாசியமாய் சிரித்தான்.
நேத்ரா அமைதியாய் அழுத்தமாய் அமர்ந்திருந்தாள்.
கண்டிப்பா எங்க அம்மாவை கிழித்து உப்புக்கண்டம் போட்டு வறுத்து பொரித்து இருப்பீங்க! அவன் இயல்பாக தான் கேட்டான்.
உண்மையை தானே பேசினோம்?இட்டுக்கட்டி பேசலையே…சுர்றென்று கேட்டாள் நேத்ரா.
ஓகே கூல்…பந்தியில் வைத்த பைனாப்பிள் கேசரி சூப்பரா இருந்துச்சு இல்ல? சமர்த்தாய் பேச்சை மாற்றினான்.
உங்க அம்மாவை பற்றி ஒரு வார்த்தை பேசிடக் கூடாதே.. சிடுசிடுதாள்.
சரி… டாபிக்கை மாத்திட்டா வேற பேசணும்னு அர்த்தம், இதமாய் சொன்னான்.
உங்க அம்மா கூட எனக்கு தான் ஆகாது என்று பார்த்தால் தீப்பு, ஸ்வேதாக்கு கூட உங்க அம்மான்னா அலர்ஜி போல… மடியில் உறங்கும் குழந்தையின் தலையை கோதிக் கொண்டே விட்ட கதையை தொடர்ந்து வறுத்தெடுத்தாள்.
எதுவும் பேசாது அமைதியாக சாலையில் கண் பதித்து காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.
மழை வரும்! உங்க அம்மாவை பத்தி இவ்வளவு பேசிட்டு இருக்கேன் அமைதியா இருக்கீங்க.
என்ன பண்ணனும்? எங்க அம்மாவை உன்னோட சேர்ந்து திட்ட சொல்றியா… இல்ல மீட்டிங் போட்டு எங்க அம்மாவை பாராட்டிட்டு வந்திருக்க உன்னை வாழ்த்த சொல்றியா?
அவனது சுள் என்ற பேச்சில் முகம் கன்றியவள்.. அதுதானே பார்த்தேன் என்னடா இன்னும் வேதாளம் முருங்கை மரம் ஏறலையேன்னு..
எனன செய்யணும்…நீயே சொல்லு? அதீத கடுப்புடன் காரை வேகமாய் செலுத்தினான்.
நியாயமா நான் தான் கடுப்பாகணும். நீங்க ஏன் இப்படி எள்ளும்,கொள்ளும் வெடிக்கிற மாதிரி இருக்கீங்க?விடாது தொண தொணத்தாள்.
மூடிட்டு வாடி! பேயே ஆனாலும் அவங்க என்னோட தாய். முகத்தில் அறைந்தார் போல் சொன்னவனை கலக்கத்துடன் பார்த்தாள்.
“——————–”
வீட்டிற்கு வந்து நேத்ரா இயல்பாய் பேச முயன்றும் விஷ்ணு முகம் கொடுத்து பேசவே இல்லை.
என்ன பெருசா பேசிட்டேன்? இந்தாளு மூஞ்சிய இந்த முறுக்கு முறுக்கிட்டு திரியறாரு. கோவிச்சுக்கிட்டா கோவிச்சுக்கிட்டு போகட்டும். எனக்கென்ன வந்துச்சு?
இவங்க அம்மா பேசிய பேச்சுக்கு நானா இருக்கவே வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இந்த வீட்டில் வாழ்ந்துகிட்டு இருக்கேன். உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு வெளியில் கெத்து காட்டியபடி சுற்றிக் கொண்டிருந்தாள்.
விஷ்ணு தாயை விட்டுக் கொடுத்து பேச மாட்டான். அதற்காக தாயிடம் கொஞ்சி பேசி சிரிப்பவனும் அல்ல.
தாயிடம் சிறுபிராயத்தில் இருந்தே விலகி இருந்தவன் தற்போது மனதளவில் ரொம்பவே விலகி விட்டான். அதுவும் நேத்ராவை அவர் பேசிய பேச்சுக்கு அவரை வெறுத்து ஒதுக்கி விட்டான்.
அதற்காக அதை பெரிதுபடுத்தி சண்டை போட்டு குடும்பத்தை இரண்டாக உடைக்க அவன் விரும்பவில்லை.
நாலு சுவற்றுக்குள் வரும் சண்டையோ சங்கடமோ அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை விரும்பாதவன் அவன்.
நேத்ரா தன் குடும்பப் பிரச்சினையை நாலு பேர் விமர்சிக்கும் அளவிற்கு பேசியதுதான் விஷ்ணுவிற்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
நான்தான் கோபமா இருக்கேன்… கொஞ்சமாவது என்னை சமாதானம் செய்ய ட்ரை பண்றாளா பாரு? தலைக்கணம் கொண்டவ… உள்ளுக்குள் திட்டி தீர்த்தான்.
தினமும் தலையணைக்கு உரை மாட்டின மாதிரி நைட்டி போட்டுட்டு அலையறவ இன்னைக்கு பார்த்து புடவையோட தளுக்கி மினுக்கி நடமாடுறா…புலம்பி ஏங்கி தூங்கி போனான்.
அவன் உறங்கியதை ஊர்ஜிதம் செய்து கொண்டு கிறங்கி ரசித்து அவனை மென்மையாய் கட்டிக்கொண்டு கண் மூடினாள் அவன் சக தர்மினி.
அந்த கள்ளனோ உறங்குவதாய் பெயர் பண்ணி ரசித்துக்கொண்டிருந்தான்
அவள் வெப்பத்தை தன்னில் ஏற்றிக்கொண்டு.
சிறந்த இல்வாழ்விற்கு தினமும் கூடல் வேண்டும் என்பதல்ல சிறு தீண்டலே போதும்.
“——————”
இரவு முழுதும் பேசாதவன், காலையில் எழுந்து கண்டு கொள்ளாதவன் உணவு மேசையில் பரிமாற நேத்ராவை அழைத்தான்,அதுதான் விஷ்ணு.
அவனுக்கு மனைவியிடம் ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும் அதை பிறர் கண் பார்வைக்கு கொண்டு செல்ல மாட்டான். ஜோதி பரிமாறும் முன் நேத்ராவை அழைத்தான்.
தனக்குள் ஏற்பட்ட புலகாங்கிதத்தை மறைத்துக் கொண்டு முறைப்பாய் பரிமாறினாள்.
அவனுக்கு வயிறு நிறைந்தது அவளுக்கு மனது நிறைந்தது.
நாளைக்கு கோயிலுக்கு போக வேண்டும். அதற்கு வாங்க வேண்டிய பொருட்கள் பற்றி அன்னத்திடம் கேட்டுக் கொண்டு அவன் அமர.. நேத்ரா உள்ளே போய்விட்டாள் .
கரறுப்பு கோட்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு மொபைலை பேண்ட் பாக்கெட்டில் திணித்தபடி.. பட்டுக்குட்டி அப்பா பை என்று மகன் கன்னம் வருடி முத்தமிட்டவன், ஓரவிழியால் மனைவியை நோக்கினான்.
அவள் முகத்தில் ஒரு தேக்கரண்டி கடுகு போட்டால் அது பொரிந்து, கரிந்து, தீய்ந்து விடும், அவ்வளவு சூடு!
உள்ளுக்குள் தோன்றிய நகைப்பை கட்டுப்படுத்திக் கொண்டவன்,பட்டு உங்க அம்மாவுக்கும் ஒரு பை என்றான்.
அவ்வளவுதான் காளி மலையேறிவிட்டது. இப்போ நான் உங்க பையை கேட்டேனா? அதை கொண்டு போய் குப்பை கூடையில் போடுங்க!ருத்ர பார்வை பார்த்தாள்.
உனக்கு வேண்டாம்னா திருப்பிக் கொடுத்திடு! அவள் இதழ் வருடினான்.
அவன் எஃகு போன்ற திடமான விரல், வெல்வெட்டில் ஸ்பரிசத்தை உணர்ந்தது.
அவள் இதழ் திருகி தன் இதழில் வைத்து முத்தமிட்டு கொண்டான்.
ஒழுங்கு மரியாதையா கிளம்பி கோர்ட்டுக்கு போங்க, இல்ல நான் உங்களை கொலை பண்ணிட்டு என்னை ஜாமினில் எடுக்க ஒரு லாயரைத் தேட வேண்டி வரும்! அவன் கரம் தட்டி விட்டு கூச்சலிட்டவளை மேற்கொண்டு பேச விடாது செய்து அவள் இதழுக்கு லேசான சேதாரம் செய்து விட்டே கிளம்பினான்.
“——————-”
நேரே கோயிலுக்கு வந்து விடுவதாக வெங்கடாசலம் சொல்லிவிட்டார்.
வேணு குடும்பத்துடன் கோயிலில் ஆஜராகி இருந்தார்.
பச்சைவாழி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து அர்ச்சனை முடித்தனர்.
குழந்தைக்கு வெங்கடாசலம் வாங்கி வந்த புத்தாடை உடுத்தி அவர்கள் வாங்கி வந்த பெரிய வெள்ளி கிண்ணத்தில் சாதம் வைத்து பசும்பால் கலந்து சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து பிசைந்து அம்மன் பாதத்தில் வைத்து தீபாராதனை செய்து குழந்தைக்கு ஊட்டச் சொன்னார் ஐயர்.
முதல் உணவை அன்னம் ஊட்ட…குழந்தை சிரித்தபடி சமர்த்தாய் வாங்கிக் கொண்டது.
அடுத்து அன்னம் மருமகளிடம் கிண்ணத்தை நீட்ட…இது என்ன இவ்வளவு சின்ன கிண்ணம்? இரண்டு இட்லியே வைக்க முடியாது போல? நல்லதா வாங்க இவங்களுக்கு மனமே வராதா? ஜோதி ஆரம்பிக்க…
இப்போ என்ன 16 இட்லி சாப்பிடற வயதிலா என் குழந்தை இருக்கு? வெடுக்கென கேட்டாலள் நேத்ரா.
என்ன பேச்சு பேசுற நீ? ஜோதி கோபமாய் கண்டிக்க.. சரிமா நல்ல நேரம் முடியறதுக்குள்ள பேரனுக்கு சாதம் ஊட்டு! என்று பேச்சை திசை திருப்ப முயன்றார் வேணு.
இருங்க என்ன பேச்சு பேசறா அவ? நாம என்ன வெள்ளி பாத்திரத்தை பார்க்காதவங்களா? நம்ம வீட்டில் கிடக்கு பத்து பனிரெண்டு வெள்ளி கிண்ணம். ஜோதி பெருமை பீத்த…வேதம் மகளை முறைத்தார்.
நம்ம வீட்டிலேயே பத்து பனிரெண்டு கிண்ணம் இருக்கு. அவங்க ஒரு சாஸ்திரத்துக்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. நீ ஊட்டுமா…அன்னம் அடிக்குரலில் பேசினார்.
இவங்க எதைத்தான் சரியா பண்ணினாங்க? ஒத்த பொண்ணு பெத்து வச்சிருக்காங்க, அந்த ஒரு பொண்ணுக்கு பெருமையா செய்யவே மனம் வரல…
எல்லாம் தலையெழுத்து, இவங்க வீட்டுல பொண்ணு எடுத்துட்டு இப்படி அசிங்கப்படறோம். ஜோதி கிடைத்தது சான்ஸ் என்று வசை பாடத் தொடங்க…
அப்பா நீங்க ஊட்டுங்க என்றான் கடுஞ்சினத்துடன் விஷ்ணு .
வேதம் கண்களில் கண்ணீர் முட்டியது.அவர் பேரனுக்காக ஆசை ஆசையாய் தேடி தேடி நல்ல கனமான பூ போட்ட கிண்ணம், பெரிய டம்ளர், ஸ்பூன் எல்லாம் வாங்கி வந்தார்.ஜோதியோ ஒற்றை வார்த்தையில் மனதை முறித்து விட்டார்.
கத்தி கலாட்டா பண்ணிவிடும் கோபத்துடன் கண்கள் சிவந்து நின்றிருந்த வெங்கடாசலத்தின் கரம் பற்றி அழுத்தம் கொடுத்தார் வேதம்.
ஜோதியிடம் இருந்து கிண்ணத்தை பிடுங்கி வேணு ஊட்ட… நிலைமையை சமாளிக்க அன்னம் வேதம் கையில் கிண்ணத்தை கொடுத்தார்.
கண்ணீரரை மறைத்து கொண்டு வேதம் ஆசை பேரனுக்கு அழகாய் அமுது ஊட்டினார்.
எவ்வளவு நெஞ்சழுத்தம் இவனுக்கு? இவன் மாமனார் மாமியார் முன்னாடி என்னை மட்டம் தட்டுகிறான்.
என்னை சோறு ஊட்ட சொல்லவே இல்லையே? வெஞ்சினம் ஆறாது கோயிலை விட்டு வெளியேறினார் ஜோதி.
குழந்தைக்கு செய்யும் ஒரு நல்லதை கூட நிம்மதியாக செய்யவிடவில்லையே.. கட்டுக்கடங்கா ஆத்திரம் விஷ்ணுவிற்கு.
கோவிலுக்கு வந்து அது சொத்தை இது சொத்தை என்று ஒரு வார்த்தை பேசக்கூடாது என்று கண்டித்தே அழைத்து வந்திருந்தான்.
அப்படியும் திருவாய் மலர்ந்து வம்பை வளர்த்து விட்டார் ஜோதி.
நாகரீகம் கருதி அமைதி காத்தான்.
தன்னை பெற்றவர்கள் அவமானப்படுவதை நேத்ராவால் ஜீரணிக்க இயலவில்லை.
இதற்கு தானே இந்த இடம் வேண்டாம் என்று நினைத்தார் வெங்கடாசலம். அவர் கடும் கொந்தளிப்புடன் மனைவி, மகளை முறைத்தார்.
குழந்தைக்கு உணவு ஊட்டி சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தனர்.
யாருக்கும் யாரையும் முகம் நோக்கும் துணிவில்லை.
சம்மந்தி வழியில் ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு தான் போகணும்! என்று உரிமையாய் கரம் பற்றினார் வேணு.
எதுவும் பேசாத வெங்கடாசலம் யாரிடமும் விடை பெற விரும்பாது அமைதியாக ஏரி காரில் அமர்ந்தார்.
வேதம் அனைவரிடமும் ஒற்றை தலை அசைவில் விடை பெற்றுக்கொண்டு அவரும் போய் காரில் ஏறிக்கொண்டார்.
அம்மா…இருங்க நானும் வரேன். நேத்ரா குழந்தையோடு அவர்கள் காரில் ஏறச் சென்றாள்.
அம்மாடி நேத்ரா,கோயிலுக்கு போயிட்டு நம்ம வீட்டுக்கு தான் போகணும்! இப்போ வந்துட்டு நாளைக்கு வேணா உங்க வீட்டுக்கு போம்மா. அன்னம் ஏறக்குறைய கெஞ்சினார்.
இந்த பிரச்சினை பெரிதாகி விடக்கூடாது என்றே அவர் அணை போட முயன்றார்.
அவ போகட்டும் பாட்டி, ஒத்தை வார்த்தையில் சொல்லிவிட்டு தனது காரில் ஏறிக் கொண்டான் விஷ்ணு.
“——————-”
error: Content is protected !!