திசை மாறா காதல் – 3
திசை மாறா காதல்
விபரீதத்தில் சுடர்
❤️ பகுதி – 3 ❤️
சுடர் ஒளியால் மறக்கக் கூடிய தீண்டலா அது ! கனவில் ஏற்பட்ட தொடுகையை , தன் சாவிலும் மறக்க முடியாத தொடுகை அல்லவா அது …
கீழே விழ இருந்தவள் .. தான் அவ்வளவே , என்று நினைத்த சமயம்.. கடவுள் பரிதாபம் பார்த்திருப்பார் போலும் , யாரையோ அனுப்பி பின்னிருந்து அவளை இழுக்க செய்திருக்க , அதுவும் அவளின் உயிரை காவு வாங்கியது .
“ எவன்டா.. அது..”, , என்று அரை விநாடி தன் துணிவை திரட்டியவளாகவே , சிலிர்த்துக் கொண்டு திரும்பிப் பார்க்க , அய்யனார் போல் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் நவீன்.
அங்கு அவனை எதிர்ப்பார்க்காத சுடர் , “ நீயா.. “, என்று நவீனாக இருக்கவே அதிர்ச்சி தாளாதவளாய்.. வாய் பிளந்தவாறு முனங்கிவள்.. பின் சீறியவளாக ,
“ அறிவு கெட்டவனே.. எதுக்கு டா இப்படி பிடிச்சு இழுத்த.. சனியனே.. “, என்று சண்டையிட்டு .. வேகமாக அவன் தோளில் வேகமாக ஒரு குத்தும் விட ,
வலி தாளாதவனோ .. மிகுந்த எரிச்சலுடன் , “ அந்த கேடு கெட்ட காரியத்தை நான் செய்வேனா டி.. ஏழரை நாட்டு சனியை மறுபடியும் என்கிட்ட பிடித்து இழுத்து விட்டுட்டு போன அந்த டேஷை போய் கேளு . நானே செம சீன் மிஸ்ஸான காண்டுல நின்னுட்டு இருக்கேன். நீ மறுபடியும் எதாவது காமெடி செய்த கடுப்பாகிடுவேன் சொல்லிட்டேன் . “ என்று சுடருக்கு மேல் எகுறியவனாக அவள் முன் திமிறி வர ,
“ என்னது .. செம சீன் மிஸ்ஸாயிடுச்சா.. “, என்று ஒருபக்கம் புரியாமலும் , மறுபக்கம் சிறு ஆச்சரியமும் முளைத்தவளாக.. ஆர்வத்துடன் அவன் மணிக்கட்டை பிடித்தவாறு கேட்க ,
“ ஸ்.. அது வேற ஒன்னும் இல்ல லைட்டு.. நீ விழுந்த வேகத்துக்கு, லிஃப்ட்க்குள்ள உன் மண்டைல உள்ள கொண்டையோட மாட்டி இருக்கும்.. உன் தலை மட்டும் தூண்டாகுதா.. இல்லை உன் உடம்பையும் சேர்த்து இழுத்திட்டு போகுமான்னு
லைவ் ஷோ பார்க்கலாமேனு வெயிட் பண்ணினா .. அதை கெடுத்தான் அந்த படுபாவி.. “, என்று மிகுந்த வருத்ததுடன் நவீன் தெரிவிக்க..
அவன் கூறியதை கேட்டது வெகுண்டவளாய்.. “ பரதேசி.. சாவு டா.. “, என்று தன் பையால் அவனை அடித்து துவைக்கிவிட்டாள் ..
“ ஏய்.. போதும் அடிக்காத டீ.. இதுல இவளை நான் வேற பிடிச்சு இழுத்து காப்பாத்தி சூனியத்தை மடில எப்பவும் வச்சு அலைய நினைச்சதா பார்த்தியா.. இப்படி அடி வாங்கவா.. நோ.. நெவர்.. ஏய் அடிக்காத டீ.. “, என்று அவ்வளவு அடிகளை வாங்கிய பிறகும் ஓயாமல் பேசியவன்.. அவள் மொத்துக்களில் வலி தாளாதவனாய் தப்பிக்க.. அவளின் இரு கைகளையும் பையோடு பற்றிக் கொள்ளவும்..
“ அடப்பாவி.. எப்போ.. எப்போன்னு.. “, என்று அவள் எதையோ சொல்ல துவங்கவே..
“ வாய மூடிட்டு.. வந்து தொலை.. உன்னால எங்களையும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டு இருக்கான் . ஒழுங்கா நடக்க தெரியலை.. இதுல இவ கட்டிடம் கட்டி கொடுக்க கிளம்பீட்டா.. “, என்று தன் நக்கலை கை விடாதது போல் அவளுடைய கையையும் விடாமல் தர தரவென மின்தூக்கிக்கு இழுத்துச் வந்தவன்.. அவர்கள் வந்த நான்கு சக்கர வாகனத்தின் அருகில் தான் அவளை உதறிவிட்டவன் .
“ அந்த ஆள் எங்கே.. “, என்று இறுக்கமாகவே கௌசிகாவிடம் தங்களது மேல் அதிகாரியை பற்றி நவீன் விசாரிக்க ,
சுடரின் மீது அழுத்தமான பார்வையை பதித்தவளாக , “வசீ சமாளிச்சு அனுப்பீட்டாரு நவீன்.. சார் அங்கே ரீச் ஆகிறதுக்குள்ள.. நம்ம அங்கே இருந்தாகணும்.. “, என்று நிலவரத்தை தெரிவிக்க ,
“ பெரிய புடுங்கி இவங்க.. தனி ரூம்ல தனியாதான் தங்குவாங்க.. மூஞ்சியை மொகரைய பாரு..“, என்று பட்டென்று சுடரிடம் பயந்தவனாக , முகத்தில் குத்துவது போல் செல்ல.. இருவருக்கும் இடையில் புகுந்த தடுத்த கௌசிகா..
“ ரெண்டு பேரும் என்ன சின்ன பசங்களா.. எப்பப் பாரு சண்டை போட்டே இருக்கீங்க.. கொஞ்சம் கூட மெச்சூர்டே கிடையாது.. “, என்று கடிந்துக் கொள்ள ,
“ மெச்சூர்டா.. அதோ அங்கே நிக்குது பாரு.. அதுகிட்ட கேளு.. ஃபேமிலி ரூம் எடுத்து.. நீ அதுல உள்ள தனி ரூம்ல தங்கலை.. இவ பெரிய இவ.. அப்படியே நாங்க பாஞ்சிட போறோம்.. “, என்று கண்டிபடியாக சுடரை ஏசவும் ,
“ டேய் நவீன்.. என்னடா பேசுற..“, என்று வசீகரன் அவனிடம் பற்கள் கடிக்க ,
நவீன் கண்டுக் கொள்ளும் நிலையில் இல்லை , “ பெரிய பருப்பு.. தனி ரூம் எடுத்து தான் தங்குவா.. இவ.. பு***.. “, என்று சரமாரியாக திட்டிக் கொண்டே சென்றவன்..
“ என்னை எதுக்கு டீ
முறைக்கிற.. “ என்று அவள் மீது பாய்ந்தவாறே..
“ இவ விழுந்த வேகத்துக்கு, என்ன முறைக்கிற.. இந்த கண்ணு முழியெல்லாம் பிதுங்கி வெளில வந்திருக்கும்.. நடக்க தெரியாம கீழ விழுந்து வாரி.. லிஃப்ட்க்குள்ள தலைய குடுக்கப் பார்த்துச்சு.. இந்த தறுதலை.. “, என்று பொறிந்து தள்ளிவிட்டான் . அத்துடன் , அவனின் ஆத்திரமும்
பதற்றமும் அடங்காமல் போகவே.. கார் கதவில் இருந்த தண்ணீர் பாட்டில் முழுவதையும் காலி செய்து சுடரின் முகத்தில் வீச..
நவீனின் கோபத்திற்கு எதிர்மறையாக அவனது உடல் நடுங்குவதை உணர்ந்த வசீகரன் , “ என்ன நவீன் சொல்ற.. “, என்று குழப்பமாக கேட்க ,
“ என்னாச்சா.. ஓடி வரேன்னு.. லிஃப்ட்கிட்ட குப்புற அடிச்சு விழ பார்த்தா.. யாரோ அங்கே நின்னுட்டு இருந்தவங்க.. பிடிச்சு இழுத்துவிட்டுட்டு அவன் பக்கத்து லிஃப்ட் வந்ததும் ஏறி போய்ட்டான்.. இது என்னன்னா.. நிலவரம் தெரியாம.. என்னை ஏன்டா இழுத்தேன்னு சண்டைக்கு வருது .. அவன் மட்டும் அங்கே இல்லேனா சங்குதான் டி.. இவளை தேடி நான் போகல.. இந்த கருமம் எதுவும் நமக்கு தெரிஞ்சிருக்காது . இவளுக்கு கொஞ்சமாச்சும் பயம் இருக்கான்னு பாரு . அந்த நாலு படி ஏறதுக்குள்ள என் கண்ணு முன்னாடி மொத்தமா முடிஞ்சு போயிருக்கும்.. எனக்கு இன்னும் பதட்டம் குறையல.. இந்த தறுதலை என்ன குதி குதிக்குது பாரு.. “, என்று சுடரிடம் வாய்க்கு வந்ததை பேசி வம்பு செய்தவனாக வந்து இருந்தாலும்..
ஏனோ , நண்பர்கள் முன்னிலையில் அடங்காத பதறற்த்தை மறைக்க முடியாமல் போனதில் பொறிந்து தள்ளிவிட்டான் . மற்ற , இருவருக்கும் நடக்கவிருந்த அசம்பாவிதம் கண்ணில் விரிவது போல் இருந்ததில் அதிர்ந்துவிட்டார்கள் .
அப்பொழுதும் அடங்காத சுடர் , “நவீனு.. இவ்ளோ பாசக்காரனா டா நீ.. எனக்கு தெரியாம போச்சே.. “, என்று வராத கண்ணீரை தட்டிவிட்டவளாக அவன் தோள் அணைக்க , ஒரே திமிறலில் தட்டிவிட்டவன் ,
“ எங்களை விடு.. எங்களை நம்பி அனுப்பின உன் அண்ணனை நினைச்சு பார்த்தியா.. கொஞ்சமாவது பயம் இருக்கா .. உனக்கு எதாவது ஆனா நாங்க என்ன பதில் சொல்றது.. “, என்று இப்பொழுது இதற்கு முன் எரிச்சலினால் உண்டான விளையாட்டை கைவிட்டவனாக முகத்தில் தீவிரம் குடிக் கொண்டவனாய் கேட்க ,
“ ம்ச்சு.. அதான் எதுவும் ஆகலையே டா.. உன் பனியனை சனியன் விட்டு தொலையும்னு சொன்ன.. இப்போ என்ன.. “, என்று இடித்தவள்.. கொஞ்சமும் கடுமையான விபரீதத்தைப் பற்றி உணர்ந்தது போலவே தெரியவில்லை .
“ சுடர்.. பேசாம கார்ல ஏறு.. “, என்று கௌசிகா நறநறவென கோபமாக சொல்ல..
“ ஓகே.. ஓகே.. கூல் காய்ஸ் . ஐயம் ஹியர் நொவ்.. “, என்று உள்ளே தள்ளி ஜன்னலோரம் அமர.. அவள் அமர்ந்த வேகத்தில் தன் பக்கமாக பிடித்து இழுத்து இறுத்திக் கொண்ட நவீன்..
“ அந்த சைட் போய் ஏறு கௌசி..“, என்று கூறியதோடு அமைதியாகிவிட்டான் .
“ அடேய்.. என்னடா அந்நியன் விக்ரம் மாதிரி.. மாறி மாறி நடந்துக்கிற.. எனக்கு ஜன்னல் சீட்டு தான் வேணும்.. “, என்று நடுவில் இருந்தவளாக இருவரையும் பார்த்து சிறுமியை போல் சொன்னதை , கௌசி மற்றும் நவீன் கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை .
வாகன ஓட்டியின் அருகே அமர்ந்து இருந்த வசீகரனிடம்.. “வசீ.. ப்ரோ.. “, என்று சிபாரிசுக்கு சுடர் அழைக்க ,
“ டைம் ஆச்சு சுடர்.. “, என்று அவளை திரும்பியும் பார்க்காமல் மென்மையாக கூறியவன்.. ஓட்டுநரிடம் ,
“கிளம்புங்க அண்ணா.. கொஞ்சம் வேகமா போங்க.. “, என்று அமைதியாகிவிட்டான் .
சுடர் ஓர விழிகளால் இருவரையும் நோட்டமிட , கௌசி கோபமாக இருப்பது நன்கு புரிய , நவீனோ , மலை இறங்கி வர விரும்பம் இல்லாதவனாகவே , கடுகடுவென முகத்தில் சினம் தாண்டவம் ஆட அமர்ந்திருக்கவும்,
“கௌரில்லா”, என்று நவீனை வசை பாடி முணுமுணுத்தவள்.
இந்நிலையில் , தான் வாய் திறப்பது முட்டாள்தனம் என்று நினைத்து.. சீட்டில் நன்கு சாய்ந்துக் கொண்டு ,
“ நான் என்ன வேணும்னேவா விழுந்தேன்.. “, என்று எரிச்சலோடு மனதிற்குள் அரற்றியவளாக விழிகளை மூடிக் கொண்டாள் .
மூவருக்கும் அவளின் நினைப்பு புரிந்தே இருந்தாலும் கண்டுக் கொள்ளவில்லை . நவீனுக்கு , ‘காப்பாற்றியவனுக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போனதே..’, என்ற நினைப்பும் கூடுதலாய் இருந்தது .
‘ யாருக்கு நன்றி சொல்லவில்லை.. ‘, என்று நவீன் வருந்தினானோ.. அவனுடைய இரு விழிகளும் அவர்களை தவிர , வேறிடத்தில் பதியாததாய் .
ஆறு அடி உயரத்தில் , கூர் விழிகளை கருப்பு நிற கண்ணாடி அலங்கரித்து இருக்க.. வாகு எடுத்து சீவியிருக்கும் சிகையும் அடங்க மறுத்து அசைந்தாடி .. அவனுக்கு கூடுதல் கம்பீரம் சேர்த்திட , கூர் நாசி.. மேல் உதட்டை மட்டுமல்லாமல் கீழ் இதழையும் பாதி அடர்ந்த மீசை மறைத்து.. அதன் தடிமனையும் குறைத்து காண்பிக்க.. அவன் முகத்தில் மெல்லிய தாடியும்.. அகன்ற தோள்களும் என்று அசரடிக்கும் அழகைக் கொண்டு இருந்தவன்.. விரந்த தனது முதுகை
காண்பித்தவாறு , அலுவலக அறையில் .. தன் மிடுக்கு குறையாதவனாக நின்றிருந்தான் அகரன் .
சுடர் ஏறிச் சென்ற வாகனம் புறப்பட்ட பிறகும்.. இமைக்கவும் மறந்தவனாக.. அத்திசையையே வெறித்தவாறு வெகு இறுக்கத்தோடு , இரு கரங்களையும் தன் பேன்ட் பேகெட்டிற்குள் விட்டு இருந்தாலும்.. இடது கையில் முறுக்கேறிய தங்க காப்புடன் , நின்று இருந்தவனின் பின்புற வடிவமும்.. காண்போரை நடு நடுங்கச் செய்யும் அளவிற்கு கம்பீரத் தோற்றமளிக்க.. அவனுடைய , உதவியளனான கோகுலுக்கு மட்டும் விதிவிலக்காகுமா !
கோகுல் , தன் உடலில் ஊடுருவிய மெல்லிய நடுக்கத்துடனே அறையின் கதவை தட்டி நுழைந்தவன்..
“ கரூப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பழைய வீட்டை இடித்து.. புது கட்டிடம் கட்டிக் கொடுக்க.. அவங்க கன்ஸ்டெக்ஷன்ல.. கான்ராட் சைன் செய்து இருக்காங்க ஸார்.. வசீகரன் டீம் அசைன் ஆகி இருக்காங்க.. அதுக்கான ஆஃப்ஷியல் மீட்டிங்.. டீமா வந்து இருக்காங்க ஸார்.. “, என்று அகரனுக்கு தேவையான விபரங்களை தெரிவித்து அமைதியாக ..
அகரன் முகத்தில் இருந்து எதுவும் கண்டுப்பிடிக்க முடியவில்லை .
அகரன் பெயருக்கு ஏற்றார் போல் தோற்றத்தில் மட்டும் முதன்மையானவன் அல்ல அவன் கால் பதிக்கும் அனைத்து இடங்களிலும் முதன்மையானவனே.. அதேபோல் , குணத்தில் கோபத்திற்கும் அவன் அகரனே..
தேக்கு மர தேகமுடையவன் அகரன் என்றால் சுடர்ஒளியோ , படர் கொடியாள்.. மிகவும் ஒல்லியான தேகம் , நெடு நெடுவென உயரம்.. திருத்தமான முகம்.. என்றும் பளிச்சிடும் புன்னகை . அகரன் அவளிடத்தில் மையல் கொள்ள இது போதுமா.. ! என்று பல முறை கோகுல் சிந்தித்து இருக்கிறான் .
நொடிக்குள் கோடிகளை உருவாக்க வேண்டியவன்.. இப்பெண்ணிற்காக , இரு தினங்களாக.. எதையும் கண்டு கொள்ளாமல் , காவல் காத்து கொண்டு இருக்கிறான் . அவனுள் எச்சரித்தது போலவே காலையில் நடந்த நிகழ்வு . ஒருவேளை , இங்கு அவன் வராமல் போய் இருந்தால்.. சுடரின் நிலை..! எண்ணிய நிமிடத்திலேயே கைமுஷ்டிகள் இறுக்கி , உடலில் இருக்கும் நரம்புகள் அனைத்தும் புடைத்தவனின்.. கண்களிலும் கனல் தெறித்ததாய் ..
கோகுலுக்கு அவனின் நிலை நன்கு புரிய ,” They are looking after her sir.. “ ( அவங்க சுடர் ஒளியை பாத்திரமா பார்த்துக்குவாங்க ஸார்..) என்று அகரனின் மனதை அமைதியாக முயற்சித்தான் .
“ ம்.. கிளம்பு.. “, என்றதோடு விறுவிறுவென வெளியேறிவிட்டான் .
அகரன் மனதில் என்ன நினைக்கிறேன்.. சுடர் ஒளி விஷயத்தில் என்ன முடிவு செய்து இருக்கிறான் என்று எதுவும் கோகுலால் கணிக்க முடியவில்லை .
கடந்த பத்து ஆண்டுகளாக , அகரனின் மனதில் சுடர் ஒளி நிறைந்து இருக்கிறாள். ஆனால், சுடர் ஒளியின்.. மையலோ வேறொருவனோடு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பூத்து குலுங்கிக் கொண்டு இருக்கிறது .
சுடரின் காதலை பற்றி எண்ணியதுமே.. அகரனின் மனதை சூழ்ந்து இருந்த வன்மம்.. இதழ் வழியே ஏளனமாக சுழித்து , அவளுடைய தலையெழுத்தின் தீர்மானத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தான் .
–கனவுகள் தொடரும்…
