Skip to content
Post Views: 1,599
நதி 34 (எபிலாக்)
சில வருடங்களுக்கு பிறகு…
Advertisement
“சித்து..” என்ற கூவலோடு தனது பட்டுப்பாவாடையை தூக்கிக்கொண்டு போட்டிருந்த இரண்டு குட்டி குடுமி துள்ள மாடிபடியில் ஏறி வந்திருந்தாள் மான்யா.
அவளின் சத்தத்திற்கு கதவை திறந்து தனது அறையின் முன் நின்ற செல்ல மகளை அள்ளிக்கொண்டான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் ஜெகதீஷ்.
Advertisement
Advertisement
“என்ன பட்டும்மா.. எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க..? விழுந்தா அடி படுமே..” என பரிவோடு கேட்டவனின் கைக்குள் பாந்தமாய் அடங்கியிருந்த மான்யா,
“அம்மா நீங்க ரெடியா பாக்க சொன்னாங்க..சித்து..” என்றதும்,
Advertisement
“நா ரெடிடா.. அடடே..! எங்க லிட்டில் ப்ரின்சஸ் கூட சமத்தா அழகா ரெடியாகி இருக்காங்களே..!.
குட்டி சிண்டு.. அதுல ரோஸ். ம்ம்.. அழகா இருக்கு..” என அவளின் கன்னத்தில் முத்தி கொஞ்சிக்கொண்டு கீழிறங்கி வந்தான்.
அவர்கள் இருப்பது தீனதயாளன் யமுனா முதலில் வாடகைக்கு குடி வந்த அதே வீடு தான்.
அது இப்போது அவர்களின் சொந்த வீடாகி, இரண்டு அடுக்காக விரிவு பெற்றிருந்தது.
மான்யா பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தங்கமணிக்கு திடீரென ஏற்பட்ட இருதய கோளாறினால் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது.
மருத்துவரின் ஆலோசனைப்படி அவருக்கு முழு ஓய்வு தேவை என்றான நிலையில் கம்பெனி பொறுப்பு பற்றி இரு மருமகன்களும் சேர்ந்து ஆராய்ந்து எடுத்த முடிவு..
கம்பெனியில் தீனதயாளனுக்கு ¾ பங்கும், தங்கமணிக்கு ¼ என பிரித்து முழு பொறுப்பையும் தீனதயாளனிடம் கொடுப்பது என்பது.
ஏனெனில் இனி முழு உழைப்பும் தீனாவினது மட்டுமே.
மூத்த மருமகன் நகைகடை மூன்றுக்கு அதிபதி.
இளையவன் கன்ஸ்ட்ரக்ஷன் தொழில்.
இருவராலும் கம்பெனியை கண்காணிக்கவோ, எடுத்து நடத்தவோ முடியாது எனும் போது ஒன்று மொத்தமாக விற்க வேண்டும்.. இல்லை இதை செய்ய வேண்டும்.
எப்படியும் தீனா கம்பெனியை இன்னும் நல்ல நிலைக்கு தான் கொண்டு செல்வான் வரும் காலங்களில்.
அப்போது உழைப்பே இன்றி ஒரு பங்கு இவர்களுக்கு வருவது லாபம் தானே.
தங்க முட்டையிடும் வாத்தை என்ன செய்வது..? என்ற நிலையில், தீனாவிடம் ஒப்படைப்பது என இறுதியாக முடிவானது.
அன்று ஒரு ரூபாய் கையில் இல்லாமல் பசியோடு வந்து நின்ற இடத்தில், இன்று அவனே அதற்கு முதலாளியாய் வலம் வருகிறான்.
அனைத்தும் அவனின் உழைப்புக்கும்.. நேர்மைக்கும்.. கிடைத்த பரிசே.
அது மட்டுமல்ல, இன்று மிகவும் பிரபலமான ஆன் லைன் பிஸ்னஸில் தவிர்க்கவே முடியாத முக்கிய இடத்தை பெற்றுள்ளது யமுனாவின்,
“ஜீவநதி க்ளாஸிக்ஸ்”.
கிட்ஸ் செட், நைட் வேர்ஸ், இன்னர்ஸ், லெக்கின், ஜெக்கின், டீ சர்ட், ட்ரக் பேண்ட், ¾ .. என பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை ஆண் பெண் இருபாலருக்கும் தேவையான அனைத்தும் அவர்களின் வலைதளப்பக்கத்தில் கிடைக்கும்.
திருப்பூரிலேயே பல வருடங்களாக அதே தொழிலில் இருப்பவனுக்கு எங்கு எது நல்ல தரமானதாய் கிடைக்கும் என்பது நன்கு தெரிந்திருக்க, அவர்களுக்கு உறுதுணையாய் நின்றது ஜெகதீஷ்.
தீனதாயளன் தானே செலவு செய்கிறான்.. அவனிடமிருந்து அதிகமாய் வாங்க வேண்டும்.. என்பதற்காகவோ என்னவோ ஜெகதீஷை நல்ல பேர் சொல்லும் விதமான தனியார் பள்ளியில் தான் சேர்த்திருந்தார் ஜெயசீலன்.
‘அவர் செய்த ஒரே நல்லது அது தான்..’ என தீனா யமுனாவிடம் அடிக்கடி சொல்வதுண்டு.
‘அண்ணனின் உழைப்பில் படிக்கிறோம்..’ என விவரம் தெரிந்த நாள் முதலாய் அறிந்திருந்தவன் நன்றாகவே படித்திருந்தான்.
வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஜெகதிஷை நைன்த் படிக்கும் போதே இங்கே அழைத்து வந்து இன்னும் நல்ல பள்ளியில் சேர்த்திருந்தான் தீனா யமுனாவின் ஆலோசனைப்படி.
அவனின் பள்ளியில் ப்ரைமரி முதலே கணினி பரிச்சியம் என்பதால் அவனுக்கு இவர்களுக்காக செய்வது பெரிய விசயமாகவே இல்லை.
ஆர்டர் வருவதை தனியாக எடுத்து ஒழுங்குபடுத்தி, அட்ரஸ் ப்ரிட்அவுட் எடுத்து.. என எல்லாவற்றையும் சாப்ட்வேர் மூலம் திறமையாய் செய்து கொடுக்க ஆள் இருக்க, அவர்களின் முன்னேற்றத்திற்கு குறைவேது.
“அண்ணி நாங்க ரெடி.. அண்ணா எங்கே..?” என தன் மகளை ஒற்றைக்கையால் தூக்கிக்கொண்டு நின்ற ஜெகதீஷை கண்ட யமுனாவின் முகம் மலர்ந்து போனது அவனின் ஆகிருதியான தோற்றம் கண்டு.
இப்போதே தீனாவின் உயரத்தை தொட்டிருந்தவன், அலை அலையான கேசத்தோடு.. அரும்பு மீசை இப்போது இன்னும் லேசாக அடர்த்தியாகியிருக்க, கண்ணில் கல்வி தந்த தீட்சண்யம் மிளிர நமது பாரம்பரிய உடையில் தன் முன் நின்றவனை நெருங்கியவள்,
அவனின் முகத்தை சுற்றி சொடுக்கி திருஷ்டி கழிக்க முயல, கை அவனது முழுமுகத்திற்கும் செல்ல வேண்டுமே..?!
அவளின் முகம் லேசாய் சுருங்குவதிலேயே அவசரமாய் தன்னை வளைத்து அவளுக்கு ஏதுவாய் நின்றவனின் செய்கையில், “என் சமத்து..” என கன்னம் கிள்ளி கொஞ்சியவள் திருஷ்டியும் கழிக்க, குறுகுறுவென பார்த்தாள் மான்யா.
“அதென்ன எப்ப பாத்தாலும் சித்துக்கு மட்டும் இப்படி பண்றே..?” என்றாள் முகத்தை உம்மென மாற்றி.
“அவன் என்னோட செல்லப்புள்ளடீ..” என யமுனா சொல்ல,
“அப்போ நா..?” என்றாள் வேகமாய் மான்யா.
“நீயா..? நீ எப்பவும் உன்னோட அப்பா புள்ள.. கூட உன் சித்தப்பா இருந்துட்டா நானெல்லாம் உன்னோட கண்ணுக்கே தெரிய மாட்டேன்..” என யமுனா நொடித்துக்கொண்டாள்.
அப்போது சரியாக போன் பேசவென அறைக்குள் சென்றிருந்த தீனா வெளியே வர,
“ப்பா… பாருங்க ப்பா.. உங்க பாப்பாவ..” என புகார் வாசிக்க,
“என்னடா பண்ணா அவ..?” என கேட்டுக்கொண்டே அருகே வந்தவனிடம் தாவியவள் நடந்ததை சொல்ல,
“விடுடா மானும்மா.. அவளுக்கு நம்ம அழகுல பொறாமைடா.. அதான் இப்படி பேசறா.
அவ எடுக்கலன்னா நா எடுக்கறேன் என் தங்கப்பொண்ணுக்கு..” என நெற்றி முட்ட,
‘புஷ்.. புஷ்..’ என மூச்சு வாங்க இடுப்பில் இரு கையையும் ஊன்றி முறைக்க ஆரம்பித்தாள் யமுனா.
அவளின் பாவனை கண்டு உசாரான தீனா,
“பாப்பா நேரமாச்சு.. எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணுவாங்க.
அக்கா சித்தியெல்லாம் மண்டபத்துக்கு நேரா வந்திடுறாங்களாம்.
நாம கொண்டு போக வேண்டியது எடுத்து வச்சாச்சா..?” என அவசரப்படுத்த,
“பங்ஷன நியாபகப்படுத்தி இப்ப எஸ்கேப் ஆகிட்டீங்க.. வந்து வச்சுக்கறேன்..” என சொல்லிவிட்டு செல்ல,
“தீனா ஜஸ்ட்டு மிஸ்ஸூடா..” என பெருமூச்சோடு சொன்னவன் பாவனையில் மற்ற இருவரும் சிரிக்க தொடங்கினர்.
“ரெண்டு பேரும் சேந்து அவகிட்ட என்ன சிக்க வச்சுட்டு சிரிப்பு வேற..” என போலியாய் மிரட்டியவன்,
யமுனா இரு கையிலும் பையோடு வரவும்.. மகளை ஜெகதீஷிடம் கொடுத்துவிட்டு வேகமாய் அவளிடமிருந்து வாங்கினான், “எங்கள கூப்பிடறதுக்கு என்ன பாப்பா..?” என செல்லமாய் கடிந்தபடி.
அவனை தெரியாத அவளின் பாப்பாக்கு..?!
அதனால், “விடுங்க தயா.. அப்படியென்னும் வெயிட் இல்ல..” என்ற போதும் அவளிடமிருந்து வாங்கி காரில் வைத்தவன்,
இன்னும் உள்ளே இருந்ததை எடுத்து வைத்துவிட்டு யமுனாவோடு பின் இருக்கையில் அமர, சித்தப்பாவும் மகளும் முன் புறத்தை ஆக்ரமித்தனர்.
திருப்பூரில் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி அமைந்திருக்கும் ஒரு மண்டபத்தில் இன்று தங்கமணியின் மூத்த பேத்திக்கு பூ புனித நீராட்டு விழா.. அதற்காக தான் அனைவரும் செல்கின்றனர்.
லாவகமாக ஜெகதீஷ் காரை ஓட்ட, அவனோடு செல்லம் கொஞ்சிக்கொண்டு மான்யா வர, இருவரையும் பாசமாய் பரிவோடு பார்த்திருந்த தீனாவிற்கு வாழ்க்கையே நிறைவான உணர்வு.
அவனுக்கு இது அனைத்தையும் சாத்தியமாக்கி தந்த தன்னவளின் கரத்தோடு கரம் கோர்த்து அமர்ந்திருந்தான் மண்டபம் வரும் வரை.
முதலில் இறங்கிய தீனா யமுனாவின் புறமிருந்த கதவை திறந்துவிட்டு, மகளுக்கும் அவ்வாறே செய்து தூக்கிக்கொள்ள குடும்பமாய் உள்ளே நுழைந்தனர்.
“வாடா.. வர்றதுக்கு இவ்வளவு நேரமா..? வாம்மா யமுனா.. ஜெகா வா.. வா..” என தங்கமணி வரவேற்க,
“நைட் இங்கிருந்து போனதே லேட் ண்ணே. இன்னும் பங்ஷன் ஆரம்பிக்கல தானே..?” என தீனா சொல்ல,
“மணி ப்பா.. சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கோம்..” என ஜெகாவும் சொல்ல, மேலும் மான்யாவோடு பேச.. என சற்று நேரம் கடந்தது.
விழா ஆரம்பிக்க நேரம் நெருங்குவதை கண்ட தீனா, “ஜெகா பாப்பாவ என்கிட்ட கொடுத்துட்டு கார்ல இருக்கற பேக் எடுத்துட்டு போய் அண்ணி கூட தட்டுல எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணு..” என்றதும் தமையன் பேச்சை தட்டாமல் செய்தான் ஜெகதீஷ்.
அவன் எடுத்து வந்து கொடுக்க.. பையிலிருந்த தேங்காய், பழவகைகள், ஸ்வீட், காரம்.. என தனி தனி தட்டாக எடுத்து வைத்தவள், அந்த பெண்ணிற்கான உடை பெட்டியோடு, இதர சீர் பொருட்களையும் தனி தட்டில் வைத்தாள்.
அதை கண்ட அருந்ததி, “எதுக்கு யமுனா இத்தன வாங்கிட்டு வந்தே..? நாங்களும் தட்டு வச்சிருக்கோம் தானே..?” என சுகமாய் அலுத்துக்கொண்டார்.
ஏனெனில் அவர்களின் பெண்களுக்கு அண்ணன் முறையில் அவர்கள் வீட்டில் நடக்கும் அனைத்திற்கும்.. ‘வாணி வீட்டிற்கு ஒன்று என்றால் எப்படி செய்வானோ..’ அதே போலல்லவா செய்து கொண்டிருக்கிறான் இதுவரை.
முன்பு வசதி இல்லாத நிலையிலேயே செய்தவன், இப்போது ஓரளவு சொல்லிக்கொள்ளும் படியான நிலையில் இருக்க விடுவானா..?!
“அதனால என்னக்கா.. நம்ம வீட்டு புள்ளைக்கு செய்யறது சபை நிறைய இருக்க வேணாமா..?” என யமுனாவும் சிரிப்போடு சொல்ல, அருந்ததிக்கு மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகளுக்கும் நிறைவே.
விழா ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன் வந்து சேர்ந்தனர் சக்தி குடும்பத்தோடு சகுந்தலாவும்.
பாலமுரளி இப்போது வளர்ந்திருந்த போதும்.. நேராக அத்தையிடம் சென்று செல்லம் கொஞ்சிவிட்டு, தீனாவையும் தூக்க வைத்த பிறகே ஜெகதீஷ் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.
அவன் வந்ததுமே உதட்டை சுழித்து காண்பித்தாள் மான்யா.
அவளுக்கு எப்போதும் தன் அப்பா, அம்மாவோடு செல்லம் கொஞ்சும் பாலாவை கண்டாலே ஆகாது.
எதாவது ஏடாகூடமாக வம்பு செய்து.. அவனை அலற விடுவதே அவள் வழக்கம்.
பாலாவும் அப்போதைக்கு, “எப்பா சாமீ.. உன் சங்காத்தமே வேணாம்..” என்பவன் அடுத்த முறை நேரில் கண்டால் அதையே தான் செய்வான்.
இருவரின் பஞ்சாயத்தையும் கண்டு சலித்து போன ஜெகதீஷ், ரெஃப்ரி வேலையை மட்டும் பார்த்துவிட்டு ஒதுங்கிக்கொள்வான் ஒரு சிறு புன்னகையோடு.
விழா தொடங்க பெண்கள் அனைவரும் பிஸியாகிவிட, தங்கமணியை தொடர்ந்து தீனா பொட்டு வைத்து.. தான் கொண்டு வந்த நகையை யமுனா கையில் கொடுத்து போட சொன்னவன், அடுத்த நொடி பந்தியை கவனிக்க சென்றிருந்தான்.
error: Content is protected !!