Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே -03

    “இன்னும் என்னடி பண்ற?”என்று கோபமாய் அருகில் வரவும் புடவையை எடுத்து காண்பித்தாள்.

    “ப்ப்ச், அவ அப்படி தான் னு தெரியும் ல எடுத்து மேலே வைக்க தெரியாதா…? எதையாவது கட்டிட்டு வா நல்ல நேரத்தில் கிளம்பணுமாம்”என்று கடுப்பாய் சொல்ல



Advertisement

    “அஞ்சே நிமிஷம் வந்திடுறேன்”என்றவளுக்கு வேறு ரவிக்கை தேட சிலது டைட்டாக இருந்தது சிலது லூசாக இருந்தது. ஒன்று கூட சரியாக அமையவில்லை. சரியாக இருக்கும் ரவிக்கையின் சேலை வழுவழுப்பாக கட்டவே வர மாட்டேன் என்றது அவசரத்திற்கு. அரை மணி நேரம் கழித்து மீண்டும் உள்ளே வந்தவன் அவள் புடவையை சொருக முயற்சி செய்து கொண்டிருக்க “உன்னை எல்லாம் என்ன செய்றது னு தெரியலை ரதி. ஒரு வேலை சரியா செய்றியா நீ‌.?”என்று கத்த

Advertisement

    “புடவை மடியலைங்க”என்றாள் பாவமாக.

Advertisement

    “என்னவோ பண்ணு, அவங்க எல்லாம் நல்ல நேரம் போகுதுனு கிளம்பிட்டாங்க”என்றதும் திக்கென்றது அவளுக்கு.

Advertisement

    “என்ன முழிக்கிற. ஒரு நாளாவது சொந்தத்தோடு சேர்ந்து போகலாம் னு நினைச்சேன் எங்கருந்து போக…? கிளம்பித் தொலை வண்டியில் தான் போறோம்”என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

    ‘வண்டியிலா சுத்தம் இந்த புடவை வழுக்குமே!’ என்று நொந்து கொண்டவள் “இன்னைக்கு என்னவெல்லாம் வாங்கப் போறோமோ?”என்று முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினாள்.

    நல்ல வேளையாக வேன் கிளம்பவில்லை. நின்று கொண்டிருந்தது.

    “சீக்கிரம் வாங்க, காலையில் இருந்து என்ன தான் வெட்டி முறிச்சாளோ உன் பொண்டாட்டி. சீவி சிங்காரிச்சு வரங்காட்டியும்”என்று அலுத்தபடி வளர்மதி அழைக்க, நீரதியின் மனதில்,’ பரவாயில்லை நமக்காக வெய்ட் எல்லாம் பண்றாங்க’ என்று நினைத்துக் கொண்டே திரும்ப அப்போது தான் தரங்கினி மகனோடு வெளியே வந்தாள்.

    “எதுக்கு மா அழுதான்.? இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து போவோமா?”என்று அவளைத் தாங்க

    ‘அப்போ வண்டி எனக்காக நிற்கலையா?’ என்று விரக்தியாக சிரித்தாள்.

    “அதெல்லாம் இல்லத்தை, கொஞ்சம் வயிறு சரியில்லை அவனுக்கு. பேம்பர்ஸ் மாத்திட்டேன் போகலாம்”என்றபடி தரங்கினி ஏறவும் கேட்டை பூட்டி விட்டு ஏறினான் ஆழியன்.

    அனைவரும் ஜோடி ஜோடியாக அமர்ந்து இருக்க பிள்ளைகள் இருவரும் கடைசி சீட்டில் தீபனோடு விளையாடியபடி இருந்தனர்.

    “செல்வம் நீ டிரைவர் கிட்ட உட்கார்ந்து வழி சொல்லு. நீயேன் நீரா நிற்கிற அத்தை பக்கத்தில் உட்காரு”என்று வளர்மதி கூற, மற்ற ஜோடிகளை ஒரு முறை பார்த்து விட்டு தன் கணவனைப் பார்த்தவள் பொன்னியோடு அமர்ந்தாள்.

    ஆழியனும் அவளைப் பார்த்து விட்டு டிரைவர் பக்கம் திரும்பிக் கொண்டான்.

    தரங்கினி மகனை தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு நிலஞ்சனாவை தீபனோடு அமர்த்தி விட்டு கணவனின் கையைப் பிடித்து கொண்டு தோளில் சாய்ந்து ஏதோ சிரித்து பேசியபடி வந்தாள். கவிநிலாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்க, வளர்மதி கூட தேசிகனிடம் ஏதோ பேசியபடி தான் வந்தார்.

    நீரதி‌ பொன்னியைத் திரும்பி பார்க்க அவர் உறங்கத் துவங்கி இருந்தார்.

    சற்று நேரத்தில் தீபன் அவளை அழைத்து “அண்ணி உங்க கிட்ட வர்றாங்களாம்”என்று பிள்ளைகளை அனுப்பி விட்டான். இரண்டு வாண்டுகளும் டான்ஸ் ஆடுகிறேன் பேர் வழியாக இங்கும் அங்கும் குதிக்க அவர்களை பிடித்து வைப்பதே பெரும்பாடாகிப் போனது அவளுக்கு.

    “ஏய்! அமைதியா உட்காருங்க”என்று அவ்வப்போது அமுதனின் குரலும் தேசிகனின் குரலும் மட்டும் கேட்டது ஆனால் அதை பிள்ளைகள் மதித்தால் தானே…

   ஒரு வழியாக பெண்ணின் வீடு வந்து விட்டது. நீரதி அதற்குள் பாதி சோர்ந்திருந்தாள். காலை அவசரத்தில் டீ மட்டும் குடித்தது காலை உணவை பரிமாறவே சரியாக இருக்க எங்கிருந்து உணவுண்ண ?

    வரவேற்பு முகமன் முடிந்து அனைவரையும் விஷேஷ தருணத்தின் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ள அனைவர் முகத்திலும் புன்னகை மிளிர்ந்தது. அனைவருக்கும் காஃபி பலகாரம் கொடுத்தனர். சீர்வரிசை தட்டை அடுக்குவதில் மாப்பிள்ளை வீட்டார் மும்முரமாக அதிசயமாக தரங்கினியும் நிலாவும் பரபரப்பாக தட்டுக்களை எடுத்து வைத்தனர்.

    “நீ உட்கார் அவங்க தான் எடுத்து வைக்கிறாங்களே “என்று நீரதியை அமர வைத்தது வேறு யாரும் அல்ல சாட்சாத் வளர்மதியே தான்.

    ‘என்னடா இது அதிசயம்?’ என்பது போல பார்த்தவள் அவர் பார்வையில் அமைதியாக அமர்ந்து கொண்டாள். பேதையவளுக்கு புரியவில்லை தரங்கினியையும் நிலாவையும் மற்றவர்கள் முன் உயர்த்திக் காட்ட ,அவளை வேலை செய்ய விடாமல் தடுத்திருக்கிறார் என்று. புதிய சொந்தத்தின் முன்பு மகளும் ,அண்ணன் மகளும் தான் மரியாதை பெற வேண்டும் என்பது அவரின் எண்ணம்.

    “அக்கா பூ வச்சுக்கோங்க”என்று ஒரு பெண் அவளிடம் நீட்ட “நான் வச்சிருக்கேன்”என்று தலையை தொட்டுப் பார்த்தவளுக்கு அப்போது தான் நினைவே வந்தது பூவை வைக்க மறந்தது.

    “கீழே விழுந்திருக்கும் போல நீங்க வைங்க”என்று அந்த பெண் கொடுத்தாள் ஹேர்பின்னும் சேர்த்தேக் கொடுத்தாள்.

    ‘அத்தனை பேர் வந்தார்களே ஒருவர் கூட பூ ஏன் வைக்கவில்லை என்று கேட்கவில்லையே?’ என ஆற்றாமை பொங்கியது நீரதிக்கு.

    “வீட்டில் அவ்வளவு பூ இருந்தது எடுத்து வைக்கிறதுக்கு என்ன? மானத்தை வாங்கற மாதிரி சும்மா வந்திருக்க”என்று மெல்லிய குரலில் கடிந்து கொண்டார் முகத்தை சிரிப்பாக வைத்தபடி. தலையை குனிந்து கொண்டாள் வேறெதுவும் பேசிடாமல்.

    “நிச்சயதார்த்த பத்திரிக்கை படிச்சிருவோம்”என்று ஒரு பெரியவர் கூறவும், அனைவர் முன்னிலையிலும் பத்திரிக்கை படிக்கப்பட்டது. இரு வீட்டாரிடம் சம்மதம் கேட்க அவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டதும், மணப்பெண்ணும் மணமகனும் அழைக்கப்பட்டனர். இருவரும் சபைக்கு வணக்கம் தெரிவிக்க தீபன் பெண்ணுக்கு மூன்று சவரனில் செயினும், நிச்சயதார்த்த மோதிரமும் அணிவித்தான். மணப்பெண்ணும் அவனுக்கு மோதிரம் அணிவிக்க கைதட்டலோடு நிறைவடைந்தது நிச்சயம். தரங்கினிக்கும் இதே போன்று தான் செய்தனர். நீரதிக்கு ஆழியன் மோதிரம் மட்டும் அணிவித்தான். தரங்கினிக்கு போட்டபோது அண்ணன் மகள் அதனால் செயினும் சேர்த்து போட்டதாக பேசிக் கொண்டனர்.

    இப்போது தீபனின் நிச்சயதார்த்தத்திற்கும் அதே போல் போட்டிருக்க சுருக்கென்றிருந்தது நீரதிக்கு.

    இதைக் கேட்டால்,’ நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு ரதி’ என்பான் கணவன். அதை எதற்கு கேட்டுக் கொண்டு என நினைத்து கொண்டாள்.

    நல்ல வேளை பேத்திகள் இடத்தில் இந்த பாகுபாடு காட்டிடவில்லை வீட்டினர். அதுவரைக்கும் பரவாயில்லை என்று எண்ணியவள் நிச்சயத்தை கவனித்தாள். பசி வேறு காதை அடைத்தது அவளுக்கு.

    தீபனின் வருங்கால மனைவி பவ்யா அமரிக்கையாக இருந்தாள். அன்று பெண் பார்க்க வரும் போதே எளிமையான அலங்காரத்தில் நன்றாக இருந்தாள். இப்போது முக அலங்காரம் செய்து வேறு ஒரு ஆள் போல இருந்தாள். தரங்கினி நிலா இருவருடனும் நன்றாகப் பேசினாள் நீரதியோடும் தான். ஆனால் அவர்கள் அளவிற்கு இவளோடு கலகலத்திடவில்லை. விதவிதமாக புகைப்படங்கள் எடுத்தனர். ஆழியனும் நீரதியும் தங்கள் பிள்ளையோடு மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து விட்டு வரவும், பந்தி பரிமாற ஆள் போதவில்லை என்று ஆழியனை அமுதன் அழைத்துச் செல்ல ஸ்வர்ணிகாவை அழைத்துச் சென்று ஒரு பக்கமாக அமர்ந்தாள் நீரதி.

    பந்தி துவங்கியது. அனைவரையும் அமர வைத்து பரிமாற நேரம் போனதே தெரியவில்லை. அமுதன் தரங்கினியோடும் நிலா அவள் கணவன் ஹரிஹரனோடும் அமர தரங்கினியின் அண்ணன் கூட அவன் மனைவியோடு தான் வந்தமர்ந்தான் உணவுண்ண. நீரதி கணவனை பார்த்து விட்டு அழைக்கப் போக அதற்குள் இடம் நிரம்பி விட்டது. அவன் பரிமாறிக் கொண்டு தான் இருந்தான். அவளும் அமரவில்லை. ஏனோ ஒரு ஆசை அவனோடு அமர்ந்து உணவுண்ணலாம் என்று நினைத்தவள் அவனிடம் “சாப்பிடும் போது கூப்பிடுங்க”என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.

    அதன் பிறகு அவன் அழைக்கவும் இல்லை இவள் எதிர்பார்த்து காத்திருக்க வேகமாக வந்தான் ஆழியன்.

    “ரதி, வா பாட்டி கூடவே உட்கார்ந்து சாப்பிடு. நேரம் ஆகுது பார்”என்றான்.

    “நீங்க?”என்று கேட்க “நான் சாப்டேன் இடம் இருந்தது அதான் உட்கார்ந்துட்டேன் சரி வா டைம் ஆகுது”என்றதில் முள்ளொன்று தொண்டையில் குத்திய உணர்வு அவளுக்கு.

    பசிக்கவில்லை என்று சொல்லி விடலாம் என கூட நினைத்தாள். தன்மானத்தை பசி வென்றிருக்க வேறு வழி இல்லாமல் பொன்னியுடன் தான் அமர்ந்து உணவருந்தினாள்.

    நிச்சயம் முடித்து ஒரு வழியாக கிளம்பி விட்டனர் தேசிகன் குடும்பத்தினர். தீபன் பவ்யாவின் கைபேசி எண்ணை வாங்கி இருக்க, அப்போதே அவளிடம் பேசத் துவங்கி விட்டான்.

    வளர்மதி வெட்கம் போல “அந்த ஃபோட்டோ கிராபரு பொண்ணு மாப்பிள்ளையை விட்டு எல்லா சோடியையும் படம் புடிக்க ஆரம்பிச்சுட்டான். அதை ஏன் கேட்குறீங்கத்தை இப்படி போஸ் குடுங்க அப்படி போஸ் குடுங்கனு சொல்ல எனக்கு ஒரே வெட்கமா போச்சு போங்க”என்று சொல்லி சிரித்தார்.

    “உங்க ஃபோட்டோ நல்லா வந்திருக்கு மா நான் பார்த்தேன்”என்ற அமுதன், “வாய்ப்பு கிடைக்கும் போது எடுத்துக்கறதில் என்ன தப்பு. அந்த பொண்ணு பவ்யா எல்லாரையும் கூப்பிட்டு எடுக்க வச்சது. ஏன் மா நீரா நீங்க ரெண்டு பேரும் எடுத்திங்களா உங்களை நான் பார்க்கலை நான் போன பிறகு வந்தீங்களோ”என்று சந்தேகமாக அமுதன் கேட்க

    “எங்களை யாரும் கூப்பிடலை மாமா”என்று சட்டென்று சொல்லி விட்டாள் நீரதி.

    “இதுக்கு கூப்பிடுவாங்களாக்கும், எல்லாரும் போகறப்ப நீங்களும் போய் எடுக்க வேண்டியது தானே?”என்ற பொன்னி “நிலா நீ எடுத்தியா ஃபோட்டோ?”என்று பேசத் துவங்க நீரதியின் பேச்சு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை அங்கே. ஆழியன் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான். இவர்கள் பேசியதும் கேட்டது நீரதி பதில் தந்ததும் கேட்டது தான். அதான் குடும்பமா சேர்ந்து ஃபோட்டோ எடுத்தோமே என்று எண்ணியபடி இருக்க பந்தி பரிமாறிய அசதியில் உறங்கியும் போனான்.

    ஏதோ ஒரு புகைப்படத்தில் இருந்தால் சரி என்பது அவன் எண்ணமாக இருக்க, நீரதிக்கோ ஏன் மற்றவர்களை அழைக்கும் போது எங்களையும் கூப்பிட்டு இருக்கலாமே அந்த பெண் புதியவள் இந்த தீபனுக்கு கூடவா தோன்றவில்லை ஏன் அவனை சொல்வானேன் இந்த அத்தை மாமா கூட அழைக்கவில்லையே என்று குமைந்தவள் தன்னைத் தானே ,’இதை எல்லாம் ஏன் எதிர்பார்க்கிறாய் நீரு அடங்குடி’ என்று சொல்லிக் கொண்டாள்.

    வீட்டிற்கு வந்ததுமே “அண்ணி சாரி அண்ணி அப்பவே பவி கூப்பிட்டா நானும் அண்ணனுக்கு கால் பண்ணேன் ரீச் ஆகலை சரி அப்புறம் எடுப்போம் னு நினைச்சு மறந்துட்டேன் அண்ணி”என்று தீபன் மன்னிப்பு கேட்க

    “பரவாயில்லை தீபன் விடுங்க அதான் குடும்பமா ஃபோட்டோ எடுத்தோமே?”என்றதோடு நிறுத்திக் கொள்ள, அவளை அன்றாட வேலைகள் இழுத்துக் கொண்டது.

    ….. தொடரும்.

    “”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!