திசை மாறா காதல் – 5
திசை மாறா காதல் – 5
❤️ பகுதி – 5 ❤️
யார் அந்த மூதாட்டி?
சுடர் தனியாக உரையாடிக் கொண்டு இருந்ததை கவனித்த நவீன் வேகமாக , அவளை நெருங்கி வந்தவன்..
“ சுடர்… யாரோட பேசீட்டு இருக்க. அவளுடைய பதிலையும் கண்டுக் கொள்ளாமல் , உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா.. ஏற்கனவே உன் மேல செம கடுப்புல இருக்கான்.. இதுல , நீயும் புரிஞ்சுக்காம வந்த இடத்தில விளையாடீட்டு இருக்க.. “, என்று சுடரின் முகம் காணவும் மறுத்தவனாக நறநறவென கடித்துக் குதற..
“ பாட்டியோடு..”, என்று கூற வந்ததையும் விழுங்கியவளாக , வெறுமையான இடத்தை பார்த்தால் ஏற்பட்ட
குழப்பம் பல மடங்காக நின்று இருந்தவள்..
நண்பனின் பேச்சையும் முழுமையாக வாங்காதவளாக.. பார்வையை ஓட்டியவாறு நின்று இருந்தாள். நவீனுக்கோ தான் பேசுவதையும் கண்டுக் கொள்ளமால் சுற்றி பார்வையை ஓட்டியவளின் மீது அதிகரித்த எரிச்சலுடன் ,
“சுடர்.. “, என்று தோளை பிடித்து இழுத்து அவனை பார்க்க நிற்க செய்தவனின் மீது.. கோபமாக அவள் கத்துவதற்கு முன்பாகவே ,
“ இந்தாங்க அம்மணி.. நீங்களும் எடுத்துக்கோங்.. “, என்று கொங்குத் தமிழ் மொழி கமழ.. முப்பது வயது தக்க வேலைக்கார பெண்மணி காபியுடன் நின்று இருந்தார் . இன்முகமாய் அவர்கள் முன் நீட்டிய காபி டம்பளரை எடுத்துக் கொண்டு இருவரும் அமைதியாக..
நவீனின் வேலை உள் அறையில் இல்லை என்பதால் சுடரின் அழுத்தமான பார்வைக்கு கட்டுப்பட்டவனாக , “ தேங்ஸ்.. “, என்று நகர்ந்து இருந்தான் .
அவளை விட்டு நகராத பெண்மணியை கணக்கில் கொள்ளாதவளாய் , அவ்வறையின் உள்ளேயே பார்த்துக் கொண்டு நின்றவளிடம் ,
“ அம்மணி அது ஆருங்க .. ஒட்டுக்கா வேலை பாக்கறவங்களா..? “, என்று ஆர்வத்தின் குறுகுறுப்பு தாளாதவராக.. வெள்ளாந்தியாக அவளிடம் நேரடியாக கேட்க..
சுடர் , “ ஆமாங்க.. “, என்றதோடு முடித்துக் கொண்டாள் .
அவளுடைய கவனம் அவரிடத்தில் இல்லை என்பதையும் உணராதவர் , “கட்டிக்க போறவருங்களா.. “, என்று சிறு தயக்கத்துடன் கேள்வி எழுப்ப.. அழகாய் சிரித்தவள் ,
“ எங்க ரெண்டு பேரையும் பார்த்தா உங்களுக்கு அப்படியா தோணுது.. “, என்று கூறி தற்காலிகமாக தன் சஞ்சலத்தை ஒத்தி வைத்தவளாக.. பற்கள் தெரிய சிரிக்க ,
“ அப்படி இல்லைங்.. “, என்று தலை சொறிந்து நின்றவரை காணவே அவளுக்கு சிரிப்பு பொங்கியது .
“ சித்தி பையன்.. அண்ணன் முறை.. ஒரே வயசு.. அதுனால வா டா போ டா.. “, என்று கூறி அழகாய் சிரிக்க ,
“ அதானுங்க பார்த்தேன்.. வந்தாப்புலேருந்து கடு கடுன்னு உரிமையோட தொணதொணன்னு நச்சரிச்சுட்டே இருந்தாங்களா.. அதானுங் பளிச்சின்னு கேட்டு போட்டேனுங்க.. .. ஏதும் தப்பா பேசிப் போட்டேனுங்களா..,“, என்று மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசி இருந்தார் .
“ ச்சே.. ச்சே.. அப்படி எதும் இல்லைங்க அக்கா.. “, என்று புன்னகையுடன் மொழிஙந்து இருந்தாள் .
ஆனாலும் , அப்பெண்ணிற்கு சிறு வருத்தம் இருந்திருக்கும் போலும்.. இருவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் போனதில் வருத்தம்.. அது சுடர் ஒளிக்கு புரியாமலும் இல்லை.. அவர் சட்டென்று பின் வாங்கியதை உணர்ந்ததும்.. ஒட்டிக் கொண்டு இருந்த இறுக்கம் தளர்ந்தவளாக , தன் முகத்தில் அரும்பிய சிரிப்பு மாறாதவளாய்..
“ உங்க பேர் என்னங் அக்கா.. நீங்க இங்க எத்தனை வருஷமா வேலை பார்க்குறீங்க.. “, என்று அவரோடு இயல்பாக நட்பு பாராட்ட ,
“ஹி.. ஹி.. கவிதா கண்ணு.. நான் பொறந்ததுலேருந்து .. எங்க ஐயன் காலத்திலேருந்து… நாங்க இங்கேதானுங்க.. பெரிய ஐயன் தானுங் எனக்கு கண்ணாலம் கட்டி வச்சதுங்க.. கொழந்தைங்க பள்ளிக்கூடம் போறாங்க கண்ணு.. “, என்றார் .
“ உங்க வீடு.. “, என்றவளிடம்
“ பொறாத்தாலைங்க..”, என்றார் .
“ ஊர்லையே பெரிய மனுஷங்க போல.. “, என்று இந்த வீட்டு மனிதர்களை பற்றி அறிந்துக் கொள்ள நினைத்தவளாக.. தன் வேலையை பார்த்தவளாகவே கேட்க ,
“ இல்லைங்களா பின்ன.. எங்க ஐயன் தானுங்க எட்டூருக்கும் .. பெரிய தலை கட்டு. என்னங் கம்மணி இப்படி கேட்டு போட்டீங்க.. “, என்று ஆதங்கத்தை வெளிப்படுத்த ,
“ ஸாரி கவிதா க்கா..
அந்த காலத்திலேயே ரொம்ப வித்தியாசமான முறையில இந்த வீடு கட்டி இருக்காங்க.. ரொம்ப அழகாகவும் இருக்கு.. அதான்.. வெளியூர்ல இருந்து சில தலைமுறைக்கு முன்னாடி வந்தவங்களா இருப்பாங்களோன்னு கேட்டேன் . தப்பா நினைக்காதீங்க.. “, என்று மறைக்காமல் தனக்கு தோன்றியதை சுடரும் பகிர்ந்துக் கொள்ள ,
“ நீங்க வேறங் கம்மணி.. இது எங்க ஐயனுக்கு மூலவூருங்க.. எங்களுக்கும் தானுங்க .. கருப்பூர்லேயே மொத மொத மெத்த வூடு இது தானுங்க.. இப்பவும் , இது மாதிரி ஆரும் கட்டினது இல்லீங்.. ஐயனோட அமத்தாவை.. ஊருக்குள்ள மெத்த வூட்டுக்கார ஆத்தான்னு தானுங்க சொல்லுவோங் கண்ணு.. இக்கட்டால் வாங்.. “, என்று சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டியவர் அவளை அழைக்க..
“ உங்களுக்கு ஒரு சேதி தெரியுங்களா.. ஐயன் இருக்காருலீங்.. அவுக அம்மத்தா.. முச்சூடும் தெக்கால வேலை பார்த்தவங்.. அவுக முதலாளி சுத்த சொக்க தங்கமுங்களாட்டுக்க.. இக்கட்டால காடு வாங்கி கொடுத்து .. வூட்டையும் கட்டி கொடுத்து போட்டு போனாங்களாம்.. அம்மத்தானா வெகு பிரியமுங்க.. பைய்ய உள்ளார வாங்க கண்ணு.. இதுல தானுங்க அம்மாச்சி புலங்குச்சு..”, என்று விரித்தவருக்கும் அந்த அறை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மிகுதியாய்..
“ ஓ.. “, என்று சுடர் உள் வாங்கியவளுக்கு தன்னுடன் உரையாடியது.. என யோசனைக்குள் மூழ்க.. உண்மையை ஜீரணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவளாய்.. மேலும் , விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற வேகம்.. அதனால் அவரிடம் ,
“ அது என்ன.. கதவுல மஞ்சள் குங்குமம்ன்னு அப்பி இருக்கு.. “, என்றாள்
“ ஆமாங்க கண்ணு.. நீங்க இங்க வரீங்கன்னு இந்த அறைய தொறந்தோமுங்க.. இல்லேனா தொறப்பு தானுங்க தொங்கும்.. வாரத்துக்கு ஒருக்கா ஐயன் உள்ளார போயி சுத்தம் செஞ்சு போட்டு வருவாருங்.. மத்த யாருக்கும் அனுமதி கிடையாது. ஒரு சேதி தெரியுங்களா.. அம்மத்தா உத்தரவால தானுங்க இப்போ இந்த வீட்டை பிரிச்சு கட்டவே போறாங்கோ… அதுவும் ஆரு வந்து கட்டிக் கொடுக்கோணும்.. ஆரு வரக் கூடாதுன்னு . எல்லாம் அப்புச்சிகிட்ட கறாறா சொல்லி போடுச்சுங்கலாம்.. அம்முச்சி தானு இந்த வூடுக்கு சாமீங்.. அதுங்காட்டி பூஜை செவ்வாய் , வெள்ளிக்கு கட்டாயம் ஐயன் செஞ்சு போடுவாருங்.. இந்த தொறப்பு சட்டுன்னுல்லாம் தொறக்க மாட்டோம்ங்க.. “, என்று கிசுகிசுப்பாக கூறி வந்தவர்.. மேலும், குரலை தணித்து.. இங்க அம்முச்சி நடனமாட்டமும் உண்டுங் “, என்று ரகசியம் ஒருவித பீதியுடன் கூறியவரிம் ,
“ நீங்க பாட்டிய பார்த்து இருக்கீங்களா..“, என்று அவளும் குறுகுறுப்போடு கேட்க,
“ அய்யயோ அம்மணி.. இல்லீங்..“, என்று அலறி இருந்தார்.
“ ஓ.. “, என்றாலும் , “ நான் பார்த்தது இவங்க சொல்ற அந்த பாட்டியையா..’, என்று சுடர் மனதிற்குள் ஒரு முடிவிற்கு வர இயலாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள் .
“ ஏங் கண்ணு.. கொஞ்சூண்டு வெறசா அக்கட்டால போவலாம் வாங்.. வழுசப்புள்ளை ( வயது பெண் ) இவத்திக்கு தனியா நிப்பாட்ட வேணாம்னு தானுங்க.. தொணைக்கு நிக்கிறேன் . வெரசா வேலை முடிங் கண்ணு.. “, என்றவருக்கு பதற்றம் இருக்கவே செய்து இருந்தது . ‘ என்ன தான் அந்த வீட்டின் குலசாமியாக மூதாட்டியை நினைத்தாலும்.. அந்த வீட்டவர்களுக்கு கேடு நினைப்பவர்களாக இருந்தாலும் சரி.. அல்லது அவ்வில்லத்தின் வாரிசுகளே ஒழுக்கக் கேடாக இருப்பினும் சரி.. அவர்களுக்கு நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தும் அனைவருக்கும் எப்பொழுதும் உயிரை கிடுக்கச் செய்யும் நிகழ்வுகள் அல்லவா.. அதனாலேயே , சுற்று வட்டாரத்தில் உள்ள ஒருவரும் இந்த வீட்டை கட்டுவதற்கு முன் வரவில்லை .
“ முடிச்சாச்சு அக்கா . போகலாம் வாங்க.. “, என்று இது போன்ற எந்த உண்மையும் தெரியாத சுடர்.. அவரிடம் கூறி நடு கூடத்திற்குச் சென்றாள் .
“ இனி எவத்தைக்கி .. பொறகடைக்கு போவலாங்களா.. “, என்று சுடரை அப்பெண்மணி வழி நடத்துவதற்காக மரியாதையை கைவிடாதவளாக கேட்டிட ,
“ வேண்டியது இல்லீங்.. சோலி முடிஞ்சதுங்.. “, என்று அவளும் சிரித்த முகமாகவே கவிதாவிடம் கூறி.. அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொள்ளலாமா என்பது போல் அவரை அவள் பார்க்கவேஒ ..
“ இவத்தைக்கே கோரு ( உட்கார்) கண்ணு.. ஒத்தாசைக்கு ஒரு சத்தம் போடுங் அம்மணி . வெறசா முன்னாடி நிப்பேனுங்க.. வரட்டுங்களா.. “ என்று விடைப்பெற்று உள் அறைக்குள் நுழைந்துக் கொண்டார் .
சுடர் அமர்ந்தவள்.. தன் குறிப்பேட்டில் தீவிரமாக எதையோ செய்து கொண்டு இருந்தாள் . சில மணித் துளிகள் கடந்து , மற்ற மூவரும் வேலையை முடித்து அங்கு வரவே.. தன் ஏட்டை அவசரமாக மூடியதை காணவும் நவீனுக்கு நெருடலாக இருந்தது.
அவளிடம் பேச நினைத்தவனை தேக்கியது.. அந்த வீட்டின் பெரியவரின் வருகை . அதன் பின் வீட்டின் ஆண்களும் பெரியவரோடு இணைந்துக் கொண்டார்கள் .
மதிய உணவு பெரிய தடல்புடலான விருந்தாக சென்னை வாசிகளுக்கு இருந்தது .
சேலம் பேருந்து நிலையம் வரை வாடகை வண்டியை வசீகரன் ஏற்பாடு செய்து இருக்க.. ஆனால் , அவர்களுக்காக வந்த வாகனமோ , ஜாக்குவார் எஃப் பேஸ்.. கரு நீல வண்ணத்தில் பளபளவென புத்தம் புது வண்டி நின்று இருந்தது .
வசீகரன் மிகுந்த குழப்பத்துடனே ஓட்டுநரிடம் விசாரிக்க.. சென்னை வரை அழைத்துச் செல்ல அவர்கள் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறி திகைக்கச் செய்து இருந்தான் .
நால்வரும் குழம்பித் தவிக்க.. அதற்கு அவசியம் இல்லை என்பது போல் அவர்களுடைய உயர் அதிகாரியும் அலைபேசியின் வாயிலாக தெரிவிக்க.. மற்ற மூவருக்கும் உற்சாகம் ஊற்று எடுத்தவர்களாக இருந்தார்கள் என்றால் , சுடர் ஒளிக்கோ , மேலும் மேலும் குழப்பம் அதிகரித்ததாகவே இருந்தது .
சுடர் ஒளியின் பயணம் முழுவதும் மௌனத்திலும் உறக்கயின்மையிலும் கழிக்க.. மற்றவர்கள் , மிகவும் சொகுசான பயணத்தை அனுபவித்தவர்களாக உற்சாகத்துடன் இருந்தார்கள் .
சுடர் ஒளிக்கு யாரோ தன்னை பின் தொடர்வது போலவே , தோன்றிக் கொண்டே இருந்ததோடு அல்லாமல் . தெளிவாகவே உணர்ந்து இருந்தாள்.
தன்னுடன் பேசிய மூதாட்டி யார்? கவிதா கூறியவரா ? உறுதி செய்வது போல் அதன் பின் அவள் அங்கு இருந்த வரை அவரை பார்க்கவே இல்லை .
யார் இந்த வண்டியை அனுப்பியது ? எதற்காக..? என்று அடுக்கடுக்கான கேள்விகளை தனக்குள் தொகுத்தவளாக மனதிற்குள் பிசையும் உணர்வுகளையும் மறத்தவாறு அமர்ந்து இருந்தவளுக்கு தெரியாமலே போனது..
அவளுக்காக காத்திருக்கும் விபரீதம் !
– கனவுகள் தொடரும்…
