Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி #35

யாதுமாகி #35

 தனி குடித்தனமா? சற்று நேரம் மௌனம் காத்தவன் இன்னும் நேத்ராக்கு தனியா குழந்தையை பராமரிக்க தெரியாது பாட்டி சமாளிப்புடன் கூறினான்.

 எனக்காக பார்க்க வேண்டாம் ராஜா. எனக்கு காடு வா வாங்குது, வீடு போ போங்குது.இனிமேல் எனக்கென இருக்கு?

 நீங்க வாழ வேண்டிய பிள்ளைங்க.உன் அம்மாக்காரி திருந்த வாய்ப்பு இல்லை சாமி அம்பத்தி மூனு வருஷமா திருந்தாதவள் இனிமேலே திருந்த போறா?



Advertisement

 எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றான்.

 விஷ்ணு உலகத்திலே மனதுக்கு நிம்மதியான இடம் வீடுதான்.வீடே ஒரு மனுஷனுக்கு நரகமா மாறினால் அங்கே ஏது மகிழ்ச்சி,நிம்மதி?

 நேத்ரா வயதுக்கும், வளர்ப்புக்கும் அவள் இவ்வளவு தூரம் அனுசரித்து போறதே பெரிய விஷயம்.

Advertisement

 ஒரு அளவிற்கு மேல் அனுசரித்து, அனுசரித்து அவளுக்கு வீடும் உறவும் வெறுத்துப் போயிட்டா கடைசியில் நிலைமை கைமீறி போயிடும் ராஜா.அன்னம் பாட்டி அழகாய் அனுபவத்திற்கும் அறிவிற்கும் எட்டியதை போதித்தார்.

Advertisement

 விஷ்ணு,பாட்டி சொல்றது தான் சரி!நீ நிம்மதியா பொண்டாட்டி பிள்ளையோடு வாழனும்.அதைவிட ஒரு அப்பனா வேற என்ன எனக்கு வேணும்?

அப்பா… இப்போ ஏன் இதைப் பற்றி பேசணும்? இதை வேற மாதிரி மாத்தி யோசிப்போம். என்றவன் நாசுக்காய் பேசி விட்டு நகர்ந்து கொண்டான்.

ஒத்த மருமகளை கௌரதையா வச்சு வாழ தெரியல இவ ஊருக்கு நியாயம் சொல்றவன் பொண்டாட்டி.

Advertisement

 எனக்குன்னு வந்து வாச்சாலே மகராசி… என் பேரன் முகத்தில் சந்தோஷமே இல்லையே.. பொண்டாட்டி புள்ள இல்லாம தவிக்கிறானே.. இவ்வளவு கொடுமைக்காரியா இருக்காளே.. இவ என்னைக்கு தான் திருந்துவாளோ…? கடவுளே! தலையில் அடித்துக் கொண்டு போனார் அன்னம்

“————————”

 அம்மா நீ திருந்தறது இந்த ஜென்மத்தில் நடக்காதா? அலைபேசியில் வறுத்தெடுத்தாள் வினிதா.

உன்கிட்ட பேசி ஆறுதல் தேடலாம்னு நினைச்சேன் பாரு என் புத்தியை சோட்டால் அடிக்கணும். தன்னை தானே நொந்து கொண்டார் ஜோதி.

 அம்மா உன் நடவடிக்கை, பேச்சு எதுவும் எனக்கு சுத்தமா பிடிக்கலம்மா.ஒரு பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கோ ப்ளீஸ்!

யாருக்குத்தான் என்னை பிடிச்சிருக்கு? கட்டிக்கிட்டு வந்தவருக்கு பிடிக்குதா? சுமந்து பெத்தவனுக்கு தான் பிடிக்குதா? வீட்ல வேலை பார்க்குதுங்களே அவங்களுக்கு கூட என்னை கண்டால் இளப்பமா போச்சு. தன் போக்கில் புலம்பினார்.

 நீ போட்டிருக்கிற அகந்தையான கருப்பு கண்ணாடியை கழட்டு! அப்போதான் உண்மை நிறம் தெரியும். இல்லைனா பார்க்கிறதெல்லாம் தப்பா தான் தெரியும்.

 போனை வச்சிட்டு போடி, வந்துட்டா…எனக்கு புத்திமதி சொல்ல,மகளிடம் எரிந்து விழுந்தார்.

 நீ விஷ்ணுவை கை நழுவ விட போற… அமைதியான விஷ்ணுவுக்கு கோபம் வருதுன்னா உன் நடவடிக்கை சகிக்க முடியாததா போயிட்டு இருக்குன்னு அர்த்தம்

 இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.

ஒத்த பிள்ளை உன்னை விட்டுட்டு போனால் தான் உனக்கெல்லாம் புத்தி வரும். இன்னைக்கு நிலவரத்துக்கு அவனவன் பொண்டாட்டி தான் தெய்வம் என்று காலில் விழுந்து கிடக்கிறான். அண்ணன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணியும் பொண்டாட்டி தாசனா இல்லாம பெத்தவங்க கவுரவம்னு பொறுத்து போகுது, உனக்கு அது வசதியா போயிடுச்சு.

போதும் நிறுத்துடி உன் உபன்னியாசத்தை.நீ எல்லாம் ஒரு மகளா? பெத்தவ புலம்பறாளேன்னு நாலு வார்த்தை ஆறுதலா பேச துப்பில்லை. வந்துட்டா எனக்கு புத்தி சொல்ல..

நீ எக்கேடு கெடுக்கெட்டு போ! இனிமேல் எனக்கு போன் பண்ணி என்னை டென்ஷன் பண்ணாதே சொல்லிட்டேன். கோபத்தில் பேசி தீர்த்து விட்டு போனை வைத்து விட்டாள் வினிதா.

எல்லோரும் என்னையே குறை சொல்லுங்க. கண்ணீர் முட்ட கவிழ்ந்து படுத்துக்கொண்டார் ஜோதி.

 இந்த ஒரு வாரமாக ஜோதி இருக்கும் திசையில் தலை வைத்து கூட படுப்பதில்லை விஷ்ணு.

 மகன் சரிவர பேசாத போது கூட இவ்வளவு வலிக்கவில்லை தன்னை கண்ணால் கண்டால் கூட பாவம் என்பது போல் ஒதுங்கி விட்டது அவர் இதயத்தை வெகுவாய் அழுத்தியது.

அன்னம் கோபக்காரராக இருந்தாலும் அவ்வப்போது மருமகளிடம் பேசுவது உண்டு.

 இப்போது அது அடியோடு நின்று விட்டது.

 வேணு மனைவியின் குணமறிந்து அனுசரித்து போனவர் இப்போது ஒதுக்கத்தை கொடுத்ததை அவரால் ஏற்க முடியவில்லை.

 ஜோதியின் இருப்பை வீட்டில் யாரும் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நீ இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்பதாகவே இருந்தது அனைவரின் நடவடிக்கையும் செயலும்.

தனக்கென இருந்த மரியாதை குறைந்துவிட்டது போல் உணர்ந்தவருக்கு புரியவில்லை மரியாதை என்பது காசு, பணம் பார்த்து வருவது அல்ல நடத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்று.

உண்ணவும் உறங்கவும் மூளை கட்டளை பிறப்பிக்கவில்லை. பைத்தியம் பிடிக்காதது தான் குறை.

ஹாலில் பெரிதாக மாற்றப்பட்டிருந்த புகைப்படத்தில் பிரணவ் கவிழ்ந்து படுத்து சிரித்துக்கொண்டிருந்தான்.

 ஜோதி அவ்வப்போது குழந்தையை கொஞ்சுவதுண்டு. அதன் பால் வாசம் வீசும் மேனியும், ஆகர்ஷிக்கும் சிரிப்பும் அவருக்குள் ஒரு வித இன்பத்தை உண்டு பண்ணும். குழந்தை இல்லாதது அவரை உண்மையில் கொஞ்சம் வருத்தியது.

“————————-”

விஷ்ணு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாமியார் வீட்டுக்கு சென்று விடுவான். மனைவியும் மகனும் இல்லை எனில் அவன் உயிரற்ற கூடு அன்றோ!

 நேத்ராவிற்கு ஏனோ நெருடலாய் இருந்தது. விஷ்ணுவும் மனம் விட்டு எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் ஏதோ உள்ளுக்குள் முடிவு எடுத்திருப்பதாக கட்டியவள் உணர்ந்தாள்.

தாய் தந்தை தன் கணவனை பற்றி தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற கவலை அவளுக்கு.

 நம்ம வீட்டுக்கு போகலாமே… கணவன் மார்பில் புதையு.ண்டு அவன் மார்பு ரோமங்களை நிரண்டியபடி மெல்ல கேட்டாள்.

 அவள் வந்து மூன்று வாரம் ஆகிறது அல்லவா?

 ஏன் இங்கே உனக்கு சோறு போடலையா? கிண்டலாய் கேட்டான்.

 கோபமாய் அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள்.

 நாங்க விலகி இருந்தால் அத்தை மனசு மாறும் என்று நினைக்கிறீங்களா? அவன் கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொண்டு சிறு குரலில் கேட்டாள்.தான் ஒதுங்கி இருக்கும் வலி அதில் அப்பட்டமாய் தெரிந்தது.

 ஜோதியின் கலை இழந்த முகமும்,வாடிய வதனமும் சற்று மெலிந்த மேனியும் கொஞ்சம் வருந்தி திருந்தி இருக்கிறார் என்று தோன்றியது.

விஷ்ணுவின் நோக்கம் தாயை கண்டிப்பதோ,தண்டிப்பதோ இல்லை.அவர் கொஞ்சம் இளகி சூழ்நிலையைப் புரிந்து நடந்தால் போதும் என்பதுதான்.

அஷ்டமி நவமி முடிந்து புதன்கிழமை கூட்டிட்டு போறேன்.அதுவரைக்கும் உங்க அம்மாட்ட சமையல் கத்துக்கிட்டு வா!

 அட்லீஸ்ட் காபி போடவாது கத்துக்கோடி! சிரிப்பை அடக்கிக் கொண்டவன் செவி மடலை திருகினாள் நேத்ரா.

நான் ஏன் காபி போட கத்துக்கணும்? அவன் மார்பில் புரண்டு கை வளைவில் வந்து தேங்கிக் கொண்டாள் அவன் அழைப்பை ஏற்கும் விதமாக…

 அது சரி, நீ ஏன் காபி போடணும்? நீ த கிரேட் ஜோதியோட மருமகளாச்சே!

மாமியார் போட்டால் தானே மருமகளுக்கு போடத் தெரியும்.

 இப்போ சொன்னிங்களே இது கரெக்ட்! என் மாமியாருக்கே இன்னும் காபி போடத் தெரியாது, நான் மட்டும் ஏன் கத்துக்கணும்?

அதை தானேடி நானும் சொன்னேன். அவள் இடையை இறுக்கி புன்னகையுடன் முகம் எங்கும் முத்திரை பதித்தான்.

“———-”

 மங்களம் என்ன கஞ்சி காய்ச்சி இருக்கே நீ?உப்பு உரைக்கவே இல்லை. இன்னும் கொஞ்சம் கூட மிளகாய் அரைத்து போட்டிருக்கலாம். உப்பு இல்லைனா வடகம் சீக்கிரம் வண்டு பிடிச்சிடும்

.வனஜா என்ன இது? இவ்வளவு மொத்தமா வறட்டி மாதிரி ஊத்திட்டு இருக்க.

 இந்த லட்சணத்தில் வடகம் போட்டால் எப்படி பொரியும்? ஜவ்வரிசி வடகம் போடும் வேலைக்காரர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் ஜோதி.

 இந்த அம்மா வாய் என்னைக்கு தான் ஓயுமோ? உள்ளுக்குள் வசைபாடினாள் வனஜா. சத்தமாய் சொல்லிவிட்டால் ஜோதிடம் வேலை பார்க்க முடியுமா?

 ஊமைத்துரை மாதிரி நம்ம வேணு ஐயா, அவருக்கு பஜார்ரி மாதிரி ஒரு பொண்டாட்டி. உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருந்தார் மங்களம்.

 மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பர்களே அப்படித்தான் ஜோதியும்.

ஆளே சுணங்கி, வாடி போயிருந்தாலும் வாய் மட்டும் குறையவே இல்லை.

 வெயில் வரதுக்குள்ள மடமடன்னு போட்டுட்டு வாங்க.

 வனஜா இந்த ஜவுரி முடியை அந்த கம்பியில் மாட்டு! இல்லைன்னா காக்கா வந்து வாயை வைக்கும்.

 அப்படியே ஒரு துண்டு கரியும் மிளகாயும் வச்சிட்டு வா! வாசனைக்கு காத்து கருப்பு வந்துடக்கூடாது பாரு. என்றவர் நெற்றியில் முத்து முத்தாய் வியர்க்க வியர்வையை வழித்து விட்டுக் கொண்டே நடந்தார்.

இந்த அம்மாவை விடவா காத்து கருப்பு ஆபத்தாக இருந்துடப் போகுது?மனதிற்குள் நக்கல் அடித்துக் கொண்டிருந்தாள் வனஜா.

 மசமசன்னு நிற்காமல் வேலையை பாருங்க! என்று ஓங்கி உரைத்து விட்டு அசட்டையாய் மாடிப்படியில் காலை வைத்தவருக்கு கால் இடர ,செங்குத்தான மாடிப்படி இழுத்துவிட்டது.

அவரால் சுதாரிக்க முடியாமல் 18 படிகளைக் கொண்ட மொட்டை மாடியின் படிக்கட்டில் உருண்டு கடைசி படியின் மேட்டில் இருந்து உருண்டு மூன்றாவது மாடியின் தளத்திற்கு உள்புறமாக செல்லும் படியில் தலைக்குப்புற விழுந்தார்.

அய்யோ அம்மா,என்று அலறிக்கொண்டே மங்களமும் வனஜாவும் ஓடி வந்தனர்.

 குருதி வழிய பேச்சு மூச்சற்று கிடந்தார் ஜோதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!