ஜீவ தாளம் : 20
அத்தியாயம் : 20
சித்தப்பாக்கள் இருவரும் பேசியதைக் கேட்டதிலிருந்து ஏகப்பட்ட கேள்விகள் ஆனந்தியின் மனதிற்குள் எழுந்தன. அப்பா வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவிலேயே நிரந்தரமாகக் குடியேறிவிட்டது, அவரது தம்பிகளின் வாழ்க்கையிலும் இத்தனை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று அவள் இதுவரை நினைத்ததே இல்லை.
அப்பாவை இறந்துவிட்டதாகச் சொல்லி அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டதாகக் கதறிய அவள் உள்ளம், ‘அப்பாவை இதுவரை ஒருநாள்கூட யாரும் தேடவில்லையே!’ என்று கேள்வி கேட்ட அவள் மனது, உண்மையில் வீட்டில் உள்ளவர்களின் வலியைப் புரிந்துகொள்ளாமல் ஒருதலைப்பட்சமாகவே யோசித்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
பாட்டியின் கண்ணீரும், சோகம் வடிந்த முகமும், கட்டிலில் சோர்ந்து கிடந்த நிலையும் அவரது மனதில் ஏக்கங்கள் அணிவகுத்து நிற்பதைக் காட்டின. அதேபோல சித்தப்பாவின் பேச்சும், இந்த வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரியவைத்தது. இப்போது என்ன செய்வது? தான் யார் என்று தெரிந்தால், அடுத்த கணமே தன்னை இல்லாமல் ஆக்கிவிடுவார் ராஜேந்திரன். அப்படி இருக்க, அன்புச்செல்வனின் வாரிசாக நின்று இந்த வீட்டில் தான் நினைத்த எதையுமே சாதிக்க முடியாது; சித்தப்பாக்களையும் அவருக்கு எதிராகத் திருப்ப முடியாது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது அத்தை இளவரசியின் வாழ்க்கைதான்!
Advertisement
பாட்டியும் சித்தப்பாக்களும் வாய் திறக்காமல் இருப்பதற்குக் காரணமே இதுதான் என்பதும், தாத்தா அளவுக்கு அதிகமாகக் கொடுத்த அதிகாரமும் உரிமையும்தான் ராஜேந்திரனை இந்தளவுக்கு ஆட்டிப்படைக்க வைத்திருக்கிறது என்பதும் அவளுக்குப் புரிந்தது.
எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்கள் மனதிலுள்ள துயரங்களைத் தீர்ப்பது? என்று தெரியாமல் அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அந்த நேரத்தில், தனியாக நின்றிருந்த ஆனந்தியைப் பார்த்த ஆனந்த், அவளை நோக்கி வந்தான்.
அவள் சிலையென அசையாமல் நிற்க, பின்னாலிருந்து அவனது காந்தக் குரல் மெல்ல ஒலித்தது. “வானத்துத் தாரகை ஒன்று பால்கனி வழியாகத் தரை இறங்கி இங்கே நிற்கிறதோ என்று முதலில் மலைத்துப் போனேன். அருகில் வந்து பார்த்த பிறகுதான் புரிகிறது… அவள் வானத்துத் தேவதை அல்ல, என் மனதைக் கொள்ளை கொண்ட பாவை என்று!”
Advertisement
அந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆனந்தி. அவனது உதடுகளில் தவழ்ந்த மெல்லிய புன்னகை, அவளை ஒரேடியாகச் சாய்த்துவிடும் வல்லமையோடு அத்தனை வசீகரமாக இருந்தது.
Advertisement
ஏற்கனவே மனதிற்குள் ஆயிரம் குழப்பங்கள் சூழ்ந்திருக்க, ‘ஆனந்த் கடைசியாக என்ன சொன்னான்?’ என்று அவள் தன் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயன்றும் அந்த நினைவுகள் கைகொடுக்க மறுக்க, இப்போது இவன் எதற்காகத் தன் அருகே வந்து இப்படிப் பேசுகிறான் என்ற புதிய குழப்பம் அவளைத் தொற்றிக்கொண்டது. பழைய மர்மம் விலகும் முன்பே, இவனது நெருக்கம் அவளுக்குள் இனம் புரியாத தவிப்பை ஏற்படுத்தியது.
அவளை இன்னும் நெருங்கி வந்தவன், “தேவியாரின் கனவுலகச் சல்லாபத்தை ஒருவேளை கலைத்துவிட்டேனோ?” என்று கேலியாகச் சிரிக்க, அவளோ செய்வதறியாமல் திகைப்புடன் அவனை நோக்கினாள்.
அவன் சிரித்த முகத்துடனேயே அவளது மென்மையான வலது கை விரல்களைப் பற்றி வருடத் தொடங்கினான். அவனது அந்தத் தீண்டலில், உடலில் சட்டென மின்சாரம் பாய்ந்து உடல் எங்கும் ஊடுருவிச் செல்வது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. அவனிடமிருந்து கையை விலக்க அவள் முயல, அவனது பிடியோ இன்னும் சற்று இறுக்கமானது.
Advertisement
“விட்டு விலகிச் செல்வதற்காக அல்லவே நான் உன் கையைப் பற்றியது… காலமெல்லாம் உன்னோடு கரம் கோர்த்துத் துணையாக நடப்பதற்காகவே!” என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, ஆனந்தியின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.
மென்னகையுடன் அவளை ஊடுருவி நோக்கியவன், “என்ன ஆனந்தி… ஏன் இந்த அதிர்ச்சி? ‘இத்தனை நாளும் கோபமா சவால் விட்டவன், இப்போ இப்படி எல்லாம் பேசுறானே’ன்னு சந்தேகமா இருக்கா?” என்று கேட்க, அவளோ பதில் பேச முடியாமல் மௌனத்தில் ஆழ்ந்தாள்.
அவனது வலது கரம் மெல்ல நீண்டு, அவளது கோவைப்பழ இதழ்களை லேசாகப் பற்ற… விரிந்த விழிகளோடு அவனது உருவத்தை உள்வாங்க முடியாமல் திணறிப் போனாள் அவள்.
“எப்போதும் பட்டாம்பூச்சியாய் படபடவெனத் துடிக்கும் இந்த இதழ்கள், இன்று அநியாயத்துக்கு வாய் திறக்க மறுக்குதே! ஒருவேளை அந்த முரட்டு ஆனந்தைத் தான் உனக்குப் பிடிக்குமோ?” என்று அவன் கேலியாக நகைக்க, தன் முன்னே நின்று பேசுவது நிஜமாகவே ஆனந்த்தானா என்ற சந்தேகம் அவளுக்குள் விஸ்வரூபமெடுத்தது.
அவள் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டவன், “என்ன… இன்னும் உன்னால் நம்ப முடியலையா? இல்லை, உன் கழுத்துல தாலி கட்டி என் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்த பிறகுதான் நம்பத் தோணுமோ?” என அழுத்தமாக வினவ, அவள் முகம் அப்படியே உறைந்து போனது.
“ஆனந்தி! ரொம்ப நேரம் என்னை இப்படி வச்ச கண் வாங்காம பார்க்காதே… அப்புறம் நான் ஏதாவது பண்ணிடுவேன்!” என்று அவன் மனதைக் கவர்ந்திழுக்கும் குரலில் எச்சரிக்க, அவளது உடல் ஒருமுறை விதிர்விதிர்த்து நடுங்கியது.
அவளது இதழ்களில் விரலால் கோலமிட்டவனுக்கு, அடுத்த கட்டத்திற்கு நகர ஆசை எழத்தான் செய்தது. ஆனாலும், அவளது அந்த உறைந்துபோன தோற்றம் அவனைச் சற்று நிதானிக்க வைத்தது.
“ரொம்பவும் அதிர்ச்சி அடையாதே ஆனந்தி! ஏன்னா, இனிவரும் நாட்கள் எல்லாமே உன் வாழ்க்கையில் நேசம் நறுமலராய் மாறி, உன்னைப் பூத்தூவி வாழ்த்தப் போகுது. இந்த ஆனந்தோட காதல் விதவிதமா உருமாறி வந்து, உன்னைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தி… இறுதியில் என் மார்பில் தஞ்சமடைய வைக்கப்போகுது!”
அவன் சொல்லச் சொல்ல, அவளது விழிகள் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. அவன் குரலில் இருந்த வசீகரமும், வார்த்தைகளில் இருந்த உறுதியும் அவளுக்குள் இனம் புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தின.
எப்போதும் சவால்களையும், கோபங்களையும் மட்டுமே பரிமாறிக்கொண்டவன், இன்று இப்படிக் காதலைக் கவிதையாய் வடிப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவன் மார்பில் தஞ்சமடைவது என்பது எட்டாத தூரத்தில் இருக்கும் கற்பனையாகத் தெரிந்தாலும், அவனது நெருக்கம் அந்தத் தூரத்தைக் குறைப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கியது.
அவளது உச்சியை மென்மையாக வருடியவன், “உடம்புக்குச் சரியில்லாம இருந்தியே… எதையும் போட்டு மனசைக் குழப்பிக்காதே. உனக்கு எது தேவைப்பட்டாலும் என்கிட்ட கேளு, சரியா?” என வினவ, அவளது விழிகள் அவனை விட்டு அகல மறுத்தன. அவன் லேசாக நகைத்துவிட்டு, அவளை அணைப்பது போலக் கைகளைக் கொண்டு செல்ல… அதற்கு மேல் அங்கு நிற்கத் துணிவின்றி, தன் அறைக்கு ஓடிச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் ஆனந்தி.
அவன் சத்தமாகச் சிரித்துக்கொண்டே தனது அறைக்குச் சென்றுவிட, இங்கேயோ அவளது இதயம் நூறு மடங்கு வேகத்தில் துடித்தது. ஆனந்திடம் ஏற்பட்ட மாற்றம் இந்த அளவிற்கு இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கனவே வீட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவளுக்கு, இவனை எப்படித் தள்ளி வைப்பது என்பது பெரிய புதிராகவே இருந்தது.
சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுப் பேச்சு என்று அவள் நினைத்ததெல்லாம், இப்போது வினையாக வந்து நிற்பதைக் கண்டு கலக்கமுற்றாள். அன்று கபிலனை ஒரு காரணமாகச் சொல்லி இவனை விலக்கி நிறுத்தினாள்; இன்று என்ன சொல்லித் தப்பிப்பது என்று தெரியாமல் திணறினாள்.
கபிலன் இருவருக்கும் பொதுவான நண்பன். அவன் முன்னிலையிலேயே அத்தனை தூரம் சொல்லியும் இவன் இப்படிப் பேசுகிறான் என்றால், நிச்சயமாகக் கபிலன் மனதிலிருப்பது இவனுக்குத் தெரியாமல் இருக்காது. ‘ஏற்கனவே ஒரு காதலால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் போதாதென்று, இது மறுபடியும் ஒரு ஆரம்பமா?’ என்று எண்ணியபோதே அவளுக்கு உடல் நடுங்கியது.
இரவு முழுக்கத் தூக்கம் தொலைந்து போக, படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தாள் ஆனந்தி. எப்போது உறக்கம் அவளைத் தழுவியது என்பதே தெரியவில்லை. காலையில் ஒலித்த சுப்ரபாதம் அவளது இமைகளை மெல்லத் திறக்க வைக்க, ‘இன்னும் சற்று நேரத்தில் வெளியே போக வேண்டுமே’ என்ற எண்ணமே அவளுக்குள் பயத்தை விதைத்தது.
எப்படியாவது ஆனந்திடம் சிக்காமல் பாட்டியின் அறைக்குள் புகுந்துவிட வேண்டும் என எண்ணினாள். நேற்று அவருக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்ததில் இருந்தே, நேரில் சென்று பார்க்கும் துடிப்பு அவளுக்குள் இருந்தது. ‘நிச்சயமாகத் தன் அப்பாவை நினைத்துத்தான் ஏக்கத்துடன் வாடுகிறாரா? எதனால் இந்த அளவிற்குத் துயரப்படுகிறார்?’ என்பதை உடனே அறிய வேண்டும் என்று அவள் மனம் தவித்தது. இடையில் ஆனந்த் வந்து குறுக்கிட்டதால், அவளது எண்ண ஓட்டங்கள் சிதறிப் போயின.
சரியாக உறக்கமில்லாததால் கண்கள் எரிச்சலில் சிவந்திருந்தன. கைகளால் அவற்றைத் தேய்த்துவிட்டு மெல்ல எழுந்தவள், கைப்பேசியை நோக்கினாள். தம்பி ஆதர்ஷ் விஷயமாக ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, சில நிமிடங்கள் அதிலேயே மூழ்கிக் கிடந்தாள். பின்னர் தயாராகி, அரை மணி நேரத்தில் வெளியே வந்தாள்.
அத்தையும் சித்திகள் இருவரும் காலையிலேயே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அவர்களிடம் சென்று காலை வணக்கத்தைத் தெரிவித்தவள், சூடான காஃபியை வாங்கிப் பருகினாள். மெல்லப் பாட்டியின் உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு, அவருக்கான நீராகாரத்தைத் தானே கொண்டு சென்று தருவதாகக் கூறினாள்.
நேற்று பாட்டியின் அந்தக் கலங்கிய கண்கள் அவளுக்குள் பாரத்தை ஏற்படுத்தியிருந்தன. அதனாலேயே சித்தியிடமிருந்து தட்டைப் பெற்றுக்கொண்டு, பாட்டியின் அறையை நோக்கி விறுவிறுப்பாக நடந்தாள்.
ஆனந்தவல்லி உறக்கம் கலைந்தும் கூட எழத் தோன்றாமல் நினைவுகளின் தாக்கத்திலேயே கிடந்தார். மனதில் மருந்திற்குக்கூட நிம்மதி இருக்கவில்லை. ‘பேசாமல் அவர் சென்ற இடத்திற்கே தானும் போயிருந்தால், இத்தனை துயரங்களையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்’ என்று அவர் மனம் குமுறியது. அவரது அந்தத் தவிப்பு ஓயாமல் அலைமோதும் ஆழிக்கடல் போலிருக்க… யாரிடம் சென்று தன் மனபாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் தத்தளித்தார்.
அந்த நேரம் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த ஆனந்தி, பாட்டியின் கலங்கிய தோற்றத்தைக் கண்டு அப்படியே திகைத்து நின்றாள். அவரோ வேலைக்காரப் பெண் தான் வந்திருப்பதாக நினைத்து லேசாகத் திரும்பிப் பார்த்தவர், அங்கே அவளைக் கண்டதும் மெல்ல எழுந்து அமர்ந்தார்.
“வாம்மா… நீயா வந்திருக்க? இப்படி உட்காரு, இதோ நான் இப்போ வந்திடுறேன்” என்று தட்டுத்தடுமாறி எழுந்தவர், எட்டுகளை எடுத்து வைக்க முடியாமல் தள்ளாடினார்.
நேற்று முழுக்கச் சரியாக உண்ணாதது உடலில் வலுவைக் குறைத்திருக்க, வயோதிகமும் மனதிற்குள் உறைந்து கிடக்கும் துயரமும் சேர்ந்து, ஒரு மெல்லிய காற்றடித்தால் கூடச் சாய்ந்துவிடும் அளவுக்கு அவரைப் பலவீனமாக்கி இருந்தன. கால்கள் தரைப்பாவ மறுத்துத் தள்ளாட, சுவரைப் பற்றிக்கொண்டு ஓரடி எடுத்து வைப்பதற்கே அவர் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு எட்டும் ஒரு யுகமாய் நீள, தன் உடலைத் தாங்கிப் பிடிக்க அந்தச் சுவர்கூட அவருக்குப் போதவில்லை.
வேலைக்காரப் பெண் இருந்திருந்தால் அவளைத் துணைக்கு அழைத்திருப்பார். ஆனந்தியிடம் எப்படி உதவி கேட்பது என்கிற தயக்கத்தால்தான் அவர் தன்னந்தனியாக மெல்ல நகர்ந்தார். பாட்டியின் நிலை புரிய, கையில் இருந்ததை அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு, அவசரமாக ஓடிச் சென்று அவர் கையைப் பற்றினாள் ஆனந்தி. அவர் திரும்பிப் பார்த்துப் புன்னகைக்க, அந்தப் புன்னகைக்குள் மறைந்திருந்த சோகம் அவளை உலுக்கியது.
எட்டுக்களை மெல்ல எடுத்து வைத்து குளியலறை வரை சென்றவர், “எனக்கு ஒண்ணுமில்ல… நானே போயிட்டு வந்திடுவேன்” என்று சொல்லி உள்ளே நுழைந்து கதவைச் சாற்றப் போனார்.
“கதவைப் பூட்ட வேண்டாம் பாட்டி அம்மா!”
அவளது குரலில் சட்டென வெளியே எட்டிப் பார்த்தவர், “இப்ப நீ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட?” என்று திகைப்புடன் கேட்க…
“பாட்டி அம்மானு கூப்பிட்டேன். நான் உங்களை அப்படி சொல்லிக் கூப்பிடக்கூடாதா?” என்றாள் ஆனந்தி மென்மையாக.
“கூப்பிடுமா, தாராளமா கூப்பிடு! உன்னைப் பற்றி என் பேத்தி அவ்வளவு பெருமையா சொன்னா. ‘அந்த ஆனந்தி அக்கா கூடப் பழகினா, அப்புறம் அவங்களை உங்களால மறக்கவே முடியாது பாட்டியம்மா… அந்த அளவுக்குப் பாசமா நடந்துக்குவாங்க. நம்ம பெரியப்பா கூடவே இருந்திருந்தா, இப்படி ஒரு அக்கா எங்களுக்கும் கிடைச்சிருப்பாங்க இல்லையா?’ன்னு சொன்னா. அவளுக்கு உன்னை அந்தளவுக்குப் பிடிச்சிருக்கு. அவ சொன்னதுல இருந்து எனக்கும் உன்கிட்ட பேசணும்னு அவ்வளவு ஆசை. ஆனா வீட்டுல பூஜை அது இதுன்னு இருந்ததுனால பேச முடியல” என்றார் ஆனந்தவல்லி.
தன் தங்கையின் உயர்வான உள்ளத்தை நினைத்து ஆனந்திக்குப் பெருமிதமாக இருந்தது. தனக்காக எத்தனையோ செய்யும் அவளுக்கு, பிரதிபலனாகத் தான் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் ஒரு நிமிடம் நன்றிக் கடனில் நெகிழ்ந்து நின்றாள்.
“நீங்க போயிட்டு வாங்க… நான் இங்கேயே வெயிட் பண்றேன்.”
குளியலறை கதவைப் பற்றிக்கொண்டு அவர் நின்ற விதம் ஆனந்தியின் மனதில் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் கம்பீரமாக வலம் வந்திருக்க வேண்டிய அந்த உருவம், இன்று ஒரு சிறிய உதவிக்குக் கூடத் தயங்கி நிற்பதைக் கண்டு அவள் உள்ளம் கலங்கியது. அவர் நிதானமாகச் சென்று வரட்டும் என்ற எண்ணத்தில் அவள் அமைதி காத்தாள். அவரும் அதைப் புரிந்துகொண்டு உள்ளே சென்றவர், பத்து நிமிடத்திற்குள் வெளியே வந்தார். இப்போது அவரது உடல் முன்பு இருந்ததை விடவும் அதிகமாகத் தள்ளாடியது. பதறியபடி ஓடிச் சென்று பாட்டியின் கையைப் பற்றிக்கொண்ட ஆனந்தி, அவரை மிகவும் ஜாக்கிரதையாக அழைத்து வந்து சாய்வு நாற்காலியில் அமர வைத்தாள்.
அவருக்காகக் கொண்டு வந்திருந்த உணவை அருகில் எடுத்துச் சென்று, “முதலில் இதைச் சாப்பிடுங்க… அப்புறம் மத்ததைப் பேசலாம்” என்று அன்பான அதிகாரத்தோடு பாசக் கட்டளை இட்டாள். அவரும் மெல்லிய புன்னகையுடன் அதைப் பெற்றுக்கொண்டு, மிடறு மிடறாகப் பருகினார்.
முழுவதையும் குடித்து முடித்ததும் அவருக்கு லேசாகப் படபடப்பாக வந்தது. கண்களை மூடி அப்படியே நாற்காலியில் சாய்ந்துவிட்டார். எந்த அளவுக்கு உடல்நிலை பலவீனப்பட்டிருந்தால் அவர் இப்படி சிரமப்படுவார் என்று நினைத்து ஆனந்தியின் கண்கள் பனித்தன.
“பாட்டி அம்மா! உங்க உடம்புக்கு ரொம்ப முடியலன்னு நினைக்கிறேன். அபிநயாவை வரச் சொல்லி, அவங்க அப்பா மூலமா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகவா?”
அவர் ‘வேண்டாம்’ என்பது போல மெல்லத் தலையசைத்தார்.
“அப்புறம் இப்படியே இருந்து எவ்வளவு நேரம் கஷ்டப்படுவீங்க? உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவங்க எல்லாரும் வருத்தப்படுவாங்களே…” என்று அவள் கவலையோடு கேட்க, அவர் மௌனமாக அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் ஏதோ ஒரு சொல்லொணாத் துயரம் இழையோடியது.
“என் தலையெழுத்து… நான் சாகுற வரைக்கும் இப்படித்தான் இருக்கும்” என்றவர், மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீரில் கரைந்தார். தடுத்தும் நில்லாமல் கன்னம் வழியாக உருண்டோடிய கண்ணீர் அவரை இன்னும் பலவீனமாக்கியது.
அருகில் சென்று அவரது கைகளைப் பற்றிக்கொண்ட ஆனந்திக்கு, அவரை அப்படியே விட்டுவிட மனம் வரவில்லை.
நீங்கதான் இந்த வீட்டுக்கு ஆணிவேர். நீங்க நல்லா இருந்தாதான் மத்தவங்களும் சந்தோஷமா இருக்க முடியும். இப்படி உடம்பை வருத்திக்கிட்டு இருந்தா, அவங்களால மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?”
ஆனந்தவல்லியின் கண்கள் அவளையே உற்றுப் பார்த்தன. இத்தனை பாசத்துடன் பேசுவதற்கும், அருகில் நின்று அக்கறையுடன் கவனிப்பதற்கும், தவறுகளை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டுவதற்கும் அவரது மூத்த மகன் அன்புச்செல்வனால் மட்டுமே முடியும். அந்த மகனைப் பிரிந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது அவனைப் போலவே பேசிக்கொண்டிருக்கும் இவளைப் பார்க்கும்போது, ஏதேதோ எண்ணங்கள் அவர் மனதை அலைக்கழித்தன.
“பாட்டி அம்மா! இந்த உடம்புல நோய் வராத வரைக்கும் தான் அது நமக்கு பாதுகாப்பு கவசமா இருக்கும். அதே ஒரு சின்ன வியாதி உள்ள வந்து புகுந்துட்டா, அப்புறம் இந்த உடம்பே நோய்களின் புகலிடமா மாறிடும். நம்மால மத்தவங்களுக்கு நல்லது செய்ய முடியலைனாலும் பரவாயில்லை, ஆனா அவங்களுக்குக் கஷ்டம் குடுக்கிற விதமா நாம இருந்துடக் கூடாது.
இந்த வீட்டுக்கு வந்து கொஞ்ச நாளிலேயே இங்க இருக்குற ஒவ்வொருத்தரோட குணமும் பழக்கவழக்கமும் எனக்குத் தெரிஞ்சு போச்சு. அப்போ, இத்தனை வருஷமா இதே ஊர்ல இருக்குற உங்களுக்கு நம்மைச் சுத்தி நடக்குறது தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை. நான் சொல்ல வர்றது உங்களுக்குப் புரியுதா?”
ஆனந்தியின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள், அவரது வீட்டைத் தாண்டி வெளியே நடப்பவற்றையும் நினைவு கூரச் செய்தன. அன்றொரு நாள் நடந்தது போலவே, தன் மகனே நேரில் வந்து நின்று கண்டிப்புடன் பேசுவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையும் உரிமையும் அவர் நெஞ்சைத் தைத்தன. நினைவுகள் மெல்லப் பின்னோக்கி, அந்தப் பழைய நாட்களுக்குள் பயணிக்கத் தொடங்கின.
