Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 6

கதிரேசன் ஷர்மிளா திருமணம் ஏழு மாதங்களுக்குப் பிறகு என்று முடிவு செய்திருந்தனர். ஷர்மியின் அண்ணன் சந்தோஷ் வெளிநாட்டில் வேலை செய்கிறான் நிச்சயத்தை மகன் இல்லாமல் நடத்தவே ஷர்மியின் பெற்றோர் அத்தனை தயங்கினர்.

 

பவுனுத்தாயித்தான் பிடிவாதமாக நின்றார். நிச்சயம் செய்துவிடலாம் திருமணம் உங்கள் மகன் வந்ததும் வைக்கலாம் என்று, அவருக்கு உள்ளுக்குள் பயம்.



Advertisement

 

தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்ணின் வீட்டினரைப் பழிவாங்கவும் தங்களை அவமானப்படுத்தவும் சிவபாலன் பெண்ணைக் கடத்திவிடுவானோ கட்டாயத்தாலி கட்டிவிடுவானோ என்று அவருக்குப் பல கற்பனைகள்.

 

Advertisement

அவருடைய ஆசைப் பேரன் கதிரேசன் ஆசைப்பட்ட பெண் அவளை எப்படியாவது பேரனுக்குக் கட்டிவைத்துவிட வேண்டும் என்ற பதட்டம் அவரிடம். அவருக்குத் தெரியவில்லை சிவபாலன் ஷர்மிளாவை தூக்கி குப்பைக்கூடையில் எறிந்துவிட்டான் என்று.

Advertisement

 

 

யாரை வெறுப்பேற்ற என்று தெரியவில்லை பவுனுத்தாயி அனைத்தையும் அத்தனை ஆடம்பரமாகச் செய்தார். வரிசைத் தட்டு நூற்றியொன்று, பரிசப் புடவை எண்பதாயிரம் பதினைந்து பவனில் ஆரம் என்று செய்தார்.

Advertisement

 

சிவபாலன் எதிலுமே கலந்துகொள்ளவில்லை பணக்கணக்கு கூடக் கதிரேசனிடமே கொடுத்துவிட்டான். உன்னுடைய பாக்ட்ரி, உன்னுடைய தொழில்,  வீட்டில் கேட்க்கும் பணத்தை நீயே கொடு கணக்கையும் நீயே பார்த்துக்கொள் என்றுவிட்டான்.

 

அதன் பிறகான ஆறு மாதங்களும் ஓடியிருந்தது. சந்தோஷும் வந்து சேர்ந்திருந்தான் திருமண நாளையும் முடிவு செய்திருந்தனர். ஷர்மி சக்திப்பிரியாவிடமே திருமணத்திற்கும் புக் செய்திருந்தாள். நிச்சயதார்த்த மேக்கப் பேசு பொருளாக இருந்ததே யார், என்ன, எவ்வளவு? என்று அத்தனை விசாரிப்பு புகைப்படங்களில் கூட அத்தனை அழகாக எடுத்துக் காண்பித்தது.

 

திருமணத்திற்கு முன்பே நான்கைந்து முறை வந்திருந்தாள், அண்ணனுடன் இரண்டு முறை வந்தாள். என்ன வேண்டும் எப்படி வேண்டும் அனைத்தையும் முடிவு செய்து வைத்துக்கொண்டாள் சக்திப்பிரியா .

 

இடையில் ஏழு மாதங்கள் இருக்க அலைபேசி வாயிலாகவே புகுந்த வீட்டினருடன் உறவாடிக்கொண்டிருந்தாள் ஷர்மிளா. வெளியில் கடைக்குப் போகும்போதோ கோவிலிலோ சந்தித்துக்கொண்டனர் கவிதாவிடமும் நல்ல முறையிலே பேசிக்கொண்டிருந்தாள்.

 

கதிர் சொல்லிக் கவிதா அந்த வீட்டில் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துவைத்திருந்தாளே, சிவபாலனை எதிர்கொள்வதில் சிறு தயக்கம் முதலில் இருந்தது. ஆனால் வீட்டினருடன் பேசத்தொடங்கிய பிறகு அவன் அங்கே ஒரு காவல்காரன் போல என்ற பிம்பம் மெல்ல மெல்ல அவளுள் பதியத் தொடங்கியது.

 

அவனுக்குப் பெரிதாகப் பயப்படவோ மரியாதை செய்யவோ வேண்டாம் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் கதிரிடம் பேசும்போது கவனமாகவே இருந்தாள் ஒருவார்த்தை அண்ணனைப் பற்றித் தவறாக வந்தாலும் அவன் பொறுத்துக்கொள்வதில்லை.

 

ஒருமுறை கதிரேசனிடம் பேசும்போது  “உங்க அண்ணா என்னைப் பெண்கேட்டார் எங்க வீட்டில ஒத்துக்கல இப்போ அந்த வீட்டில அவர் இருக்கும்போது நான் எப்படி… என் மேல ஆசை பட்டிருப்பார்ல”  என்றாள் நயமாக. அந்தப் பேச்சே அவனுக்குப் பிடிக்கவில்லை, சிவபாலன் பொதுவாகவே எதையும் முகத்தில் காட்டமாட்டான். ஷர்மிளாவை திருமணத்திற்குக் கேட்டு அவர்கள் மறுத்தபோது கூட அவனிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை அவன் கொண்ட கோபம் கூடக் கதிர் ஷர்மிளாவை விரும்புவதைச் சொல்லவில்லை என்பதுதான்.

 

அன்றே கதிர் அதற்கு விளக்கம் சொன்னான்  “உங்களுக்கு ஷர்மிளாவை பெண் கேட்கப் போறது எனக்குச் சத்தியமா தெரியாதுண்ணா யாருமே என்கிட்டே சொல்லல”  என்றிருந்தான். ஆகையால் அதை அப்பொழுதே சிவபாலன் மறந்துவிட்டான்.

 

கதிர் இந்தத் திருமணம் வேண்டாம் என்றபோது கூடச் சிவபாலன் தானே ஆசைப்பட்ட வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லாதே என்று கூறிச் சம்மதிக்கவைத்தான். கதிருக்கு மனதே சரியில்லை சிவபாலனிடம் இதைப் பற்றிக் கேட்க முடியாது கட்டி தொங்கவிட்டுவிடுவான்.

 

திருமணம் முடிந்து வந்தபிறகு இதே நினைப்போடு இவள் அண்ணனைப் பார்த்துவைத்தால்? என்ற எண்ணமே அவன் இதயத்துடிப்பை எகிற வைத்தது.

 

கவிதாவிடம் சக்திப்பிரியாவின் பார்லர் பற்றிச் சொல்லி அழைத்திருந்தாள் ஷர்மிளா, கவிதா சௌமியா சித்ரா அனைவரும் சென்றிருந்தனர்.

 

விசேஷத்திற்கு என்பதால் இந்தமுறை சிவபாலன் தங்கையிடம் மறுப்பு சொல்லவில்லை. திருமணத்திற்கு முன்பு ஃபேஷியல் ஹேர் கட் என்று அனைத்தையும் செய்துகொண்டனர்.

 

திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்தது அன்று ஒரு சீமந்த விழாவுக்கு மேக்கப் செய்யவேண்டியிருந்தது அதை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள் சக்திப்பிரியா வழியில் வண்டி பஞ்சராகி நின்றுவிட்டது. நல்ல வெயில் வேறு சிரமப்பட்டு வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றாள்.

 

சட்டென்று ஓரிடத்தில் நின்றுவிட்டாள் அங்கே குடியிருப்புக்காக மனைகள் விற்பனைக்கென்று போர்டு வைக்கப்பட்டிருந்தது. மனைகளும் பிரிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டிருந்தது அங்கே முத்துப்பாண்டி நின்றிருந்தான்.

 

அவள் விழிகள் உடனே சுற்றிலும் சுழன்றது சிவபாலனின் வண்டியைக் காணவில்லை. அவன் இல்லைபோலும் என்று எண்ணியவள்  “அப்பாடா அண்ணா இருக்காங்க”  என்று உதவி கேட்கவேண்டி அவனை நோக்கிக் கை ஆட்டினாள்.

 

அங்கே ஆட்கள் கூட்டமாக நிற்கப் பந்தலின் உள்ளே நிழலில்தான் சிவபாலன் நின்றிருந்தான். இவள் முத்துவை மட்டுமே கண்டு கை அசைத்து அழைக்கப் பார்க்க  “யாருப்பா அந்தப் பொண்ணு யாரை கூப்பிடுது”  என்றார் அங்கிருந்த ஒருவர்.

 

எட்டிப்பார்த்த சிவபாலன் முகம் கோபத்தில் சிவந்தது அவளைக் கவனித்துக்கொண்டுதானே இருந்தான் தன்னிடம் நேரடியாக அவள் வந்து பேசாதவரை அவளுக்கு நல்லது என்று அவனும் பொறுமையாக இருந்தான்.

 

முத்து அவளிடம் பேசுவதையும் பார்த்திருக்கிறான் இங்கேயும் முத்து சொல்லித் தன்னைத்தான் காண வந்திருக்கிறாள் என்று எண்ணியவன் வேகமாக சாலையைக் கடந்து அவளை நெருங்கினான். அவனைக் கண்டவள் விழிகள் ஆசையாக மின்னியது அவன் வந்த வேகத்தைக் கண்டவள் கொஞ்சம் மிரண்டாள்.

 

“ஏய் வீட்டில ஒழுக்கம் சொல்லி வளர்க்கலயா உன்னை”  என்றான் சீற்றமாக.

 

“இப்போ என் ஒழுக்கத்துக்கு என்ன”  என்றாள் அவளும் கோபமாக.

 

“ஒரு ஆம்பள பின்னாடி இப்படி சுத்துறியே வெக்கமா இல்ல”  என்றவனை பார்த்தவள்  “இல்ல”  என்றாள்.

 

அவன் முறைக்க  “ஏன் வெக்கப்படணும் உங்களைப் பாக்கதான சுத்துறேன் உங்களை மட்டும்தானே பாக்குறேன் அப்போ காரணம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், உங்களையும் பாத்து கூடவே வேற எவனையாவது சேர்த்து பார்த்தாதான் வெக்கப்படணும்”.

 

“மனசுக்கு பிடிச்சவரை பாக்குறேன். யார் மேல ஆசை வெச்சிருக்கனோ அவரைப் பாக்குறேன், யாரை காதலிக்கிறேனோ அவரைப் பாக்குறேன், இந்த ஜென்மம் முழுசுக்கும் யார் கூட வாழணும்னு ஆசை படுறேனோ அவரைப் பாக்குறேன், ஆமா உங்களைக் காதலிக்கிறேன் உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன் அப்போ ஏன் நான் வெக்கப்படணும்”  என்றாள் குரலடைக்க.

 

அடுத்தநொடி அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது அவன் கரம்.  “ஸ்ஸ்ஸ்”  என்ற மெல்லிய சத்தம் எழும்பியது அவளிடம். தலை கிறுகிறுத்தது ஒன்றுமே புரியவில்லை சிலநொடிகள் மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தவள்.

 

“காதலிக்கிறேன் சொன்னா அடிப்பீங்களா அப்போ திரும்பத் திரும்பச் சொல்லுவேன் ஐ லவ் யு”  என்றாள்.

 

“ஏய்”  என்று அவன் மீண்டும் கை உயர்த்த  “ஐயோ அண்ணே”  என்று சட்டென்று அவனிடம் வந்தான் முத்துப்பாண்டி  “என்னண்ணே அடிச்சுட்டீங்க”  என்றவன்.

 

“பிரியாமா ஒண்ணுமில்லயே”  என்று அவளை ஆராயக் கன்னம் நன்றாகச் சிவந்து கிடந்தது. அவள் வலியில் நிற்பது நன்றாகவே தெரிந்தது.

 

“எல்லாம் உன்னால நீதானே தகவல் சொல்றவன் உன்னைக் கட்டி தொங்கவிட்டு தோலை உரிச்சா சரியாப்போவும்”  என்று முத்துவிடமும் சீறினான்.

 

“நான் தானே உங்களைக் காதலிக்கிறேன் சொன்னேன் உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்கலல என்ன உரிமைல என் மேல கை வெச்சீங்க. அவரை ஏன் திட்டுறீங்க அவர் அப்போல இருந்தே இது சரியா வராதுன்னுதான் சொல்றார்”.

 

“ஏன் நிம்மிகூட எப்போவும் அதைத்தான் சொல்றா. மஹிகூட என்னை அடிச்சதில்ல இதுவரைக்கும் அவர்கூட சொன்னார் என் மக கிடைக்காத ஒண்ணுக்கு ஆசைப்பட்டு கடைசில கலங்கி நிப்பாளோன்னு மனசு அடிச்சுக்குது பாப்பான்னு”  என்றதும் அவன் அதிர்ந்தான்.

 

அப்பொழுதான் அவனுக்குப் புரிந்தது  “மஹி”  என்று அவள் கூறியது அவள் தந்தையை என்று, அவள் தந்தைக்கும் தெரியுமா என்று அவன் அவளைச் சிறு அதிர்வோடு பார்த்தான்.

 

அவள் எங்கே அதைக் கவனித்தாள்  “சித்தப்பா கூடச் சொன்னார் நம்ம பொண்ணை கவனி எனக்கு ஒன்னும் சரியாப்படலன்னு. இப்போ நீங்க அடிக்குறீங்க”  என்றவள் கன்னத்தை மெல்லக் கைக்கொண்டு தொட்டாள் வலி உயிர் போனது மெல்ல மெல்ல வீங்கத் தொடங்கியிருந்தது பேசவே முடியவில்லை என்றாலும் பேசினாள்.

 

 

“உங்களுக்கு இந்தப் பத்து மாசமாதான் நான் உங்க பின்னாடி வரது தெரியும். ஆனா நான் உங்களை மூணு வருஷமா காதலிக்கிறேன் இந்த ஒரு அடிக்கெல்லாம் பயந்து விட்டுட்டு போக முடியாது காதலிக்காம இருக்கவும் முடியாது”.

 

“எனக்கு என் காதல் பெருசு அது உங்களை என்கிட்டே கொண்டுவரும் எனக்கு நம்பிக்கை இருந்தா போதும். சக்திப்பிரியாக்கு சிவபாலனை பிடிக்கும் எப்போவும் பிடிக்கும் சும்மா இப்படி அடிக்கக் கூடாது யாரையுமே வலிக்குது”  என்றபோது விழிகள் தளும்பி வழிந்துவிட்டது.

 

முத்துபாண்டிக்கே இந்தச் செய்தி புதிது மூன்று வருடமாகவா என்று வாயைப் பிளந்தான் .  “உனக்கு என்னை…”  என்ற சிவபாலனின் பேச்சைக் கைநீட்டித் தடுத்தவள்.

 

“என்னைய பத்தி என்ன தெரியும்னு கேக்கப்போறீங்களா?  எல்லாமே தெரியும் இந்த ஊர்ல என்னல்லாம் பேசுறாங்களோ எல்லாமே தெரியும் ஆனா, எனக்கு அது வேண்டாம் நான் உங்ககிட்டயே உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறேன்”.

 

“அடுத்தது ஏன் உங்க மேல காதல்ன்னா தெரியல உங்களைத்தான் பிடிச்சுது பாத்ததும் பிடிச்சுது உங்களை மட்டும்தான் தேடுது நான் என்ன செய்யட்டும்”  என்றாள் அவன் விழிகளைப் பார்த்து.

 

“உண்மையாவே இன்னைக்கு உங்களை நான் கவனிக்கல. உங்க வண்டியைக் காணும் நீங்க இருப்பீங்கன்னே நான் நினைக்கல என் ஸ்கூட்டி பஞ்சர் ஆயிடுச்சு ரொம்ப நேரமா தள்ளிட்டு வரேன் முடியல அதான் முத்து அண்ணனைப் பாத்ததும் ஹெல்ப் கேக்க நின்னேன்”  என்றாள் மூக்கை உறிஞ்சி விதும்பிக்கொண்டே.

 

முத்துப்பாண்டி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க  “அண்ணா வண்டி ஏதாவது பிடிச்சு குடுங்க முடியல”  என்றாள்.

 

புருவத்தை அழுத்தி நீவினான் சிவபாலன். எரிச்சலானது அவனுக்குத் தன்னையே நினைத்து, இதுவரை எந்தப் பெண்பிள்ளையையும் பெயருக்குக்கூடத் தொட்டதோ அடித்ததோ இல்லை ஏன் சித்ராவைக்கூடப் பார்வையால் மட்டுமே கண்டிப்பான்.

 

‘ஏன் அடித்தாய்’  என்று தன்னையே திட்டிக்கொண்டான். அவள் பேசியதில் இன்னுமே கோபம்தான் உளறுகிறாள் என்பதுதான் அவன் எண்ணம்.  “வரச்சொல்லு”  என்று முத்துவிடம் சொன்னவன் சாலையைக்கடந்து சென்று அங்கே பந்தலுக்குப் பின்னில் நின்ற தன் ஜீப்பை எடுத்துவந்தான்.

 

அங்கிருந்தவர்கள் அவனைக் குறுகுறுவென்று பார்ப்பதும் தங்களுக்குள் பேசுவதுமாக இருக்க இன்னும் எரிச்சல் அதிகமானது.  ‘வண்டியை உள்ள ஒளிச்சு வெச்சா எங்களுக்கு எப்படித் தெரியுமாம்’  என்று எண்ணியவள் முத்துவிடம் வண்டியில் ஏறமாட்டேன் என்று வம்பு செய்துகொண்டிருந்தாள்.

 

“ஆத்தா பரதேவத ஏதோ அடிச்சிட்டோமேன்னு பரிதாபப்பட்டு கூப்பிடுறாரு. என்மேல வேற செம கடுப்புல இருக்குறாரு உன் கால்ல வேணாலும் விழுறேன் என் வாழ்க்கைல கொஞ்சமா வெளிச்சம் தந்துட்டு இருக்குற விளக்கை இன்னைக்கே அனைச்சுடாத தங்கச்சி வாமா”  என்றான் கெஞ்சலாக.

 

“என் வண்டி”  என்றாள் ஸ்கூட்டியை காண்பித்து.

 

வேகமாக அதைத் தள்ளிக்கொண்டு போய்ப் பந்தலின் பின்னே நிறுத்தியவன்  “நாளைக்கு பார்லர்ல நானே கொண்டுவந்து விடுறேன்”  என்று கூறி பரிதாபமாக அவளைப் பார்த்தான். அவனுடன் சென்று ஜீப்பின் பின்னில் ஏறிக்கொண்டாள்.

 

கொஞ்சம் தூரம் சென்றதும்  “அண்ணா என்னை ஹாஸ்ப்பிட்டல்ல எறக்கி விடுங்க முடியல டாகடர் பாக்கணும்” என்றாள். முத்துவுக்கு பதட்டமாகியது அவள் வீட்டினருக்கு தெரிந்தால் என்னவாகும் என்று அவசரமாகத் திரும்பிச் சிவபாலனை பார்க்க இறுகிய முகத்தோடு வண்டியை விரட்டினான்.

 

“அவுச்”  என்றாள் கொஞ்சம் சத்தமாக. இவன் சட்டென்று வண்டியை நிறுத்தித் திரும்பிப் பார்க்க  “எனக்கு வலிக்குது அழுகை வருது பேடா சாப்பிடணும் ஆனா சாப்பிட முடியல”  என்று மூக்கை உறிஞ்சினாள்.

 

சிவபாலன் உக்கிரமாக முத்துவை முறைக்க  “இன்னைக்கு என்னைய ஜீப் டயருக்கு பலி குடுக்காம உடாது இந்தப் புள்ள”  என்று உள்ளுக்குள்ளேயே நெஞ்சில் அடித்துக்கொண்டவன் திரும்பி அவளைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.

 

அதன்பிறகு அமைதியாக வந்தாள். மருத்துவமனையில் நிறுத்தியவன்  “பாத்துட்டு வாங்க”  என்று வெளியிலே நின்றான்.

 

உள்ளே சென்று மருத்துவரைப் பார்த்தனர்  “யாருமா இது இப்படியா அடிக்கிறது பல்லே போயிருக்கும் ரெண்டுநாளைக்கு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க சாப்பாடு லைட்டா எடுத்துக்கோங்க, ஐஸ் பேக் போடுங்க ஆயிண்ட்மென்ட் தரேன்”  என்று எழுதிக்கொடுத்தார்.

 

மருந்து வாங்க நிற்கும்போது “ லவ் பண்றேன் சொன்னா அடிப்பாரா உங்க அண்ணா இந்தச் சக்திப்பிரியாவை கட்டி காதல் பரத் மாதிரிச் சக்தி சக்தின்னு உங்க அண்ணனைச் சுத்தவிடுறேன். நான் தனிக்காட்டு ராஜான்னு திமிரா இருக்காருல்ல அஞ்சாறு புள்ள பெத்து அதுங்க பின்னாடியே லோலோன்னு அலையவிடுறேன்”.

 

“பிள்ளைக்குச் சாப்பாடு குடுத்தோமா பொண்டாட்டிக்கு ஜூஸ் குடுத்தோமான்னு மண்டையை பிச்சிகிட்டு வேட்டியை கூட மறந்து ட்ரவுசரோட சுத்தவெக்குறேன்”  என்று கன்னத்தைத் தாங்கிக்கொண்டே சபதம் எடுத்தவளை விழிகள் பிதுங்கப் பார்த்திருந்தான் முத்து.

அவளுக்குப் பின்னில் நின்று அனைத்தையும் தான் கேட்டுக்கொண்டிருக்கிறானே அவள் எடுத்த சபதத்துக்குச் சொந்தக்காரன். மருந்தை வாங்கிக்கொண்டு திரும்பியவள் அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்தாலும் சமாளித்து.

 

“நான் ஆட்டோ பிடிச்சு பார்லர் போய்கிறேன் வீட்டுக்குப் போனா மஹி கேள்வியா கேப்பார் கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலை செய்யணும்”  என்றவள் அவளைக் கூர்மையாகப் பார்த்து நின்ற சிவபாலனின் அருகில் நெருங்கியதும்  “கூட்டிட்டு வந்ததுக்கு லவ் யு”  என்றுவிட்டு ஓடியே போனாள்.

 

“இம்ச இம்ச”  என்று பல்லைக்கடித்தவன் முகத்தை அழுந்தத் துடைத்துக் காற்றைக் குவித்து ஊதினான். அவனுக்கு இப்பொழுது தலை வலித்தது வேகமாக வந்து வண்டியை எடுத்தான்.

 

 

முத்து வரவே இல்லை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அப்படியே ஒளிந்துகொண்டான்.

 

“அஞ்சாறு புள்ள பெத்து லோலோன்னு அலையவிடுறேன்”  என்ற குரலில் சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டான் சிவபாலன். அவள் அருகிலே அமர்ந்து பேசுவதைப் போல… அன்று கோவிலில் சிவாவோட சக்தி என்றது முதல் இன்று முழுதாக அவள் பேசியதுவரை அவன் மண்டையை குடைந்துகொண்டே இருந்தது.

 

 

மெல்லத் திரும்பிப் பின்னால் பார்த்தான் நுனியில் கடிபட்டுச் சாப்பிட முடியாமல் அவள் வைத்து விட்டுச் சென்ற பேடா பட்டர் பேப்பருக்குள் ஒளிந்து கிடந்தது.

 

லாரி ஆபிஸ் வந்தவன் வெகுநேரம் ஜீப்பிலே விழிமூடி அமர்ந்திருந்தான் இறங்கும் முன் பேடாவை எடுத்துச் சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!