Skip to content
Post Views: 1,077
எதிர்பாராததை எதிர்பாருங்கள் இதுதான் வாழ்க்கை..
இரண்டு நாட்களாக தொடர்ந்து வந்த கனவு மூன்றாம் நாளில் காணாமல் போயிருந்தது.. நிம்மதியான தூக்கம். காலையில் “என்னடா இன்னிக்கு கனவு வரல..! அப்ப எல்லாம் பொய்யா..?” என இருவரும் சிரித்துக்கொண்டனர்.. ஆனாலும் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் சின்னதாய் ஏமாற்றம். ஒரு புள்ளியளவு துக்கம்.
“ரைட்டு விடு..! எங்கேயோ ஏதோ ஒரு குழந்தை சாகப்போகுதுன்னு அந்த குற்ற உணர்ச்சியும் கவலையும் இனி நமக்கில்லை..! குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும்..!” என மனைவியை அணைத்துக் கொண்டான் வாத்சல்யன்.
அவள் இமையோரம் துளிர்த்த கண்ணீர் அவன் சட்டையில் அழுத்தி, தொட்டு பரவியது.
Advertisement
“அம்மு அழறியாடா..!”
“இல்ல..! தேவையில்லாம அந்த கனவு வந்து என் மனச கலைச்சிடுச்சு.. நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன்.. எதுக்காக இப்படி ஒரு கனவு வரணும்..! என் ரொட்டின் எல்லாம் ஸ்பாயில் ஆகுது. மண்டைக்குள்ள ஏதோ ஓடிக்கிட்டே இருக்கு. அந்த குழந்தையோட முகம் அதை மறக்கவே முடியல..!” லஷ்மி விசும்பினாள்.
“இந்த கனவைப் பத்தி பேசக்கூடாது! இந்த டாபிக் மறுபடியும் எடுக்க கூடாதுன்னு நீதான் சொன்ன.. இப்ப என்ன ஆச்சு..?”
Advertisement
“நானும் மனுஷிதானே! என்னால முடியல வாத்சா..! கனவுல வந்த குழந்தையோட எனக்கே தெரியாம ஒரு பிணைப்பை ஏற்படுத்திகிட்டேன்னு எனக்கு தோணுது..!”
Advertisement
“வேண்டாம்டா அம்மு..! அதை மறந்துடு.. இருக்கற பிரச்சினைகளை விட்டுட்டு தேவையில்லாம எதையோ நினைச்சு கவலைப்பட்டு நம்மள நாமளே குழப்பிக்கறோம்னு தோணுது.. இப்படி யோசிச்சு பாரு.. கனவுல வர்ற மாதிரி நடக்கலைனா அந்த குழந்தை ஏதோ ஒரு இடத்துல சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கும் இல்லையா..?”
“ஒருவேளை அப்படி ஒரு குழந்தை பிறக்காம கூட இருக்கலாம்..! அந்த கனவு அர்த்தமில்லாத கனவா இருக்கலாம்.. இல்லையா வாத்சா..?”
“ஆமாடா கண்ணம்மா..!” என அவள் முதுகை தடவி கொடுத்து உச்சந்தலையில் கன்னத்தை பதித்திருந்தவனால் கூட கனவில் பார்த்த அந்த மழலை முகத்தை மறக்க முடியவில்லை..
Advertisement
ஒரு குட்டி தேவதையாய் அவன் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருந்தாள் அந்த பெண்ணரசி.
கனவு நினைவாகுமா..! தங்கள் மடியிலும் ஒரு குழந்தை தவழுமா என்று கோடி ஆசைகள் இருப்பினும்.. இதைப்பற்றி பாசிட்டிவாக நினைக்க முடியவில்லை இருவராலும்..!
இது பொய், இப்படி நடக்காது..! என கண்ட கனவிலிருந்து விலகி ஓடுவதில்தான் குறியாக இருந்தனர்..
காரணம் ஒரு குழந்தை மரணித்து மீண்டும் சிசுவாய் மறு ஜென்மமெடுக்க போகிறது என்ற அந்த அசரிரியின் குரல்..! ஒரு சிறு பிள்ளையின் இறப்பு.. இழப்பு.. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..! நினைக்கும் போதே அடி நெஞ்சம் கலங்கி தவிக்கிறது.
இன்னொன்று! பல வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த ஏமாற்றம்.. இனி எதையும் எதிர்பார்க்கவே போவதில்லை என்று நொந்து போயிருக்கும் ஜீவன்கள் மறுபடி நெஞ்சுக்குள் ஆசையை வளர்த்துக் கொள்ள தயங்குகிறது..
இரவில் நோய்க்கும் பேய்க்கும் மட்டுமல்ல.. மன உளைச்சலுக்கும் கொண்டாட்டம் தான் போலிருக்கிறது..
இதைப் பற்றி பேச்செடுத்து புலம்பத் தொடங்கும் மனைவியை.. அனுமதி கோராமல் எதிர்பாராத நேரத்தில் இதழோடு இதழ் அணைத்து தன் உலகத்திற்குள் இழுத்துக் கொள்ளுவான் வாத்சல்யன்.
மூன்றாவது முறை கனவு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னவள்.. ஏன் கனவு வரல..! என்று குழம்பும் போதும்.. தேவையில்லாமல் எரிச்சல் படும் போதும் வாத்சல்யன் அவளை தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்துகிறான்.
சில நேரங்களில் என்னத்தயாவது புலம்பி சண்டை இழுத்து அவன் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள் லஷ்மி.
அங்கு தொட்டு இங்கு தொட்டு அவள் பேச்செல்லாம்.. உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணவே இல்லையா..! என்பதில் வந்து முடியும்.
“நான் சலிச்சு போகலையா..?
குழந்தை பெத்து கொடுக்கலன்னு என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா..?”
என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பிதற்றினாலும்.. பொறுமையாக பதில் சொல்லி அரவணைத்துக் கொள்ளுவான் வாத்சல்யன்.
சில நேரங்களில் மட்டுமே பொறுமை மீறி கோபம் எல்லை தாண்டும்போது கடிந்து கொள்ளுவான். ஆனால் மீண்டும் அவனே வந்து சமாதானப் படுத்துவான்.
“நீங்க அளவுக்கு மீறி என் மேல அக்கறை காட்டறீங்க.. ரொம்ப அட்டென்ஷன் எடுத்துக்கறீங்க.. ஏன் வாத்சா.. என் மேல கருணையா..? பாவம்னு நினைக்கறீங்களா..! என்கிட்ட குறை இருக்கிறதுனால இரக்கப்பட்டு இப்படி செயற்கையா அதீத அன்பை காட்டறிங்களோன்னு சில சமயம் எனக்கு தோணுது..” என கண்ணீருடன் பரிதாபமாய் கேட்கும் போது அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிவதில்லை.
அவளுக்கே சில சமயங்களில் புரிகிறது.. ஆறுதல் சொல்லும் ஒரே ஜீவனையும் தன் மன உளைச்சலால்.. தேவையில்லாத டென்ஷனால் புண்படுத்திக் கொண்டிருக்கிறோம் என..! ஆனால் அதையும் மீறி சில நேரங்களில் கோபப்படுகிறாள் கத்தி விடுகிறாள்.
நாலு சுவற்றுக்குள் குறைந்தபட்சம் தன்னிடமாவது கோபத்தையும் ஆதங்கத்தையும் கொட்டி தீர்க்கட்டுமே! என அமைதியாக பொறுத்துப் போகிறான் வாத்சல்யன்.
கடந்த சில வருடங்களாக இருவரும் எந்த விசேஷங்களுக்கும் போவதில்லை..
வாத்சல்யன் கூட தான் முன் நின்று நடத்தி தரவேண்டிய அலுவலக பார்ட்டிகளிலும் வேறு ஆட்களை பொறுப்பேற்கச் சொல்லி விட்டு விலகிக் கொள்கிறான்.
அவனைப் பற்றி தெரியாதவர்கள்.. கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகிப் போச்சா..? எத்தனை குழந்தைகள் என்று கேட்பதிலும் தெரிந்தவர்கள் ஏதாவது டாக்டரை பார்த்தீங்களா ட்ரீட்மென்ட் எடுக்கறீங்களா..? என கவலையாக விசாரிப்பதிலும் சோர்ந்து போயிருக்கிறான்.
குழந்தையின்மையால் ஒரு பெண் சமுதாயத்தில் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறாளோ அதற்கு ஈடாக ஒரு ஆணும் சுற்றியிருப்பவர்களால் அவஸ்தை படுகிறான்.
பிள்ளையை பெற்றுக் கொள்வது மட்டுமே ஆண்மையின் அடையாளமென பறைசாற்றப்படும் இந்த சமுதாயத்தில்.. குழந்தை இல்லாதவன் ஆண்மையற்றவனாக மற்றவர்களால் கேலி செய்யப்படுகிறான். பொத்தாம் பொதுவாக ஆண்மைக் குறைபாடு என்ற புள்ளியில் அவனை கொண்டு வந்து நிறுத்தும் போது மனதளவில் அடிபடுகிறான்.
ஒரு பிள்ளை பெத்துக்க வக்கில்லை..! பெருசா பேச வந்துட்டான்..! என இவன் காது கேட்கும்படியாக முதுகுப் பின்னால் வீசப்படும் வக்கிர சொற்கள்..!
ஒரு முதலாளியாக தன்னிடம் வேலை செய்பவர்கள்.. தனிப்பட்ட வன்மத்தை இப்படி கொட்டும்போது கண்டும் காணாமலும் கடந்து போக வேண்டிய நிலை..!
நண்பர்களுக்குள் அன்று ஓட்டலுக்கு உணவருந்த சென்றிருந்த போது.. தன் மனைவி மூன்றாவதாக கர்ப்பம் தரித்திருப்பதை பெருமையாக சொன்னான் ஒருவன்.
“என்னடா பண்றது பக்கத்துல படுத்து தூங்கி எழுந்தாலே பிள்ளை உண்டாகுது..!” என அவன் வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னபோது மற்றவர்கள் கேலி செய்தனர். அவனை மாவீரனாய் சாகசம் செய்தது போல் பெருமையாக தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
அவர்களுள் முகம் கருத்து அமர்ந்திருந்தது வாத்சல்யன் மட்டும்தான். அங்கு தான் மட்டும் தனித்திருப்பதாக உணர்ந்தான். வெளியில் திக்கித் திணறி சிரித்தாலும்.. உள்ளுக்குள் இனம் புரியாது துயரம் ரணமாய் அழுத்தி கிடந்தது.
பெரும்பாலும் தன் மனதில் தேங்கி கிடக்கும் வேதனைகளை மனைவியோடு பகிர்ந்து கொள்வதில்லை..!
“குழந்தையே பிறக்கலைன்னா கூட பரவாயில்லை..! உனக்கு நான் எனக்கு நீ..! குழந்தை பெத்துட்டவங்க மட்டும் என்ன சந்தோஷத்தை அனுபவிச்சிட்டாங்க.. நமக்கு என்ன குறை? ஜாலியாத்தானே இருக்கோம். இதோ வெக்கேஷன் போகணும்னு நினைச்சா உடனே கிளம்பிடறோம்.. குழந்தை இருந்தா அப்படி முடியுமா..! தோணும் போதெல்லாம் என் பொண்டாட்டியை மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்ச முடியுது.. இதே பிள்ளை இருந்தா..?” என அவளை நெஞ்சின் மேல் அள்ளி போட்டுக்கொண்டு கொஞ்சும் போது..!
“இதுக்காக போய் குழந்தை வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா..?” என சிரிப்பாள் லஷ்மி.
“குழந்தை வேண்டாம்னு யாருடி சொன்னா..? இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம சந்தோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லைன்னு சொன்னேன்.!” என தன் மீது கிடப்பவளின் முதுகில் அழுத்தமாக தட்டிக் கொடுப்பான்.
உண்மைதான்.. வாத்சல்யன் தன் கரிசனத்திலும்.. ஆழ்ந்த நேசத்திலும் குழந்தை இல்லாத குறையை மறக்கடித்து விடுகிறான்.. லஷ்மி அவன் அரவணைப்பில் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். திருமணமான புதிதில் புது மாப்பிள்ளை.. அதீத ஆர்வத்துடன் தன் மனைவியை நாடுவது போல் இப்போதும் இருவருக்குமிடையில் உறவிலும் காதலிலும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.. குறைகளும் இல்லை.
அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தள்ளிப் படுக்கும் சில நாட்களைத் தவிர.. மற்ற நாட்களில் மனைவியை சேராமல் தூங்குவதில்லை.. தூங்க முடிவதில்லை அவனால்..
அவளுக்கும் அப்படித்தான்.! புண்ணாகிக் கிடக்கும் மனதிற்கு ஒரு மருந்து போல் அவன் அரவணைப்பும் இந்த தாம்பத்தியமும் தேவைப்படுகிறது.
மனைவியின் தெளிவில்லாத எண்ணங்களை நெஞ்சிலிருந்து நீக்கும் விதமாக.. வெகு நேரம் அவளோடு உறவாடி நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தான் வாத்சா.
மறுநாள் இருவரும் காரில் ஏறி புறப்படும்போது.. எதிர்வீட்டு முன்னே ஒரு லாரி வந்து நின்று கொண்டிருந்தது..
வாட்ட சாட்டமான ஆள் ஒருவன் வேலையாட்களோடு சேர்த்து லாரியிலிருந்த பொருட்களை இறக்கி வைக்க உதவி செய்து கொண்டிருந்தான். ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள்.. எட்டு.. பத்து வயதிருக்கலாம்.. தங்களால் முடிந்த சின்ன சின்ன பொருட்களை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்து உதவி செய்து கொண்டிருந்தனர். சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களுக்கு சின்ன சின்ன டம்ளர்களின் காப்பியோ டீயோ..! விநியோகித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அவள் அந்த வாட்டசாட்டமான நபரின் மனைவியாக இருக்கலாம்..
“யாருங்க இவங்க..? புதுசா குடி வந்திருக்காங்களா..? மிஸ்டர் நவநீதகிருஷ்ணன் காலி பண்ணிட்டாரா..?” அந்த வீட்டை பார்த்தபடியே கேட்டாள் சந்தான லஷ்மி.!
“ம்ம்..! அப்படித்தான் நினைக்கறேன்.. ஒரு வாரத்துக்கு முன்னாடி அப்பாகிட்ட நவநீதகிருஷ்ணன் பேசிட்டு இருந்தார். வீடு காலி செய்யறதை பத்திதான் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்.”
“எனக்கு எதுவுமே தெரியலையே..! ஒரு வார்த்தை நம்மகிட்டயும் சொல்லிட்டு போயிருக்கலாம்..”
“நமக்கு அவங்களோட அவ்வளவு பழக்கம் இல்லையே..! அவர் இந்த வீட்ல இருந்த அஞ்சு வருஷத்துல.. மொத்தமா ஒரு ரெண்டு மூணு முறை பேசியிருப்போமா..! விடு.. அவங்க சொன்னா என்ன சொல்லிக்காம போனா என்ன..? நமக்கு இதெல்லாம் தேவையில்லாத தலைவலி..” என்றான் வாத்சல்யன்.
லஷ்மியால் அப்படி இயல்பாக கடந்து போக முடியவில்லை.. நவநீதகிருஷ்ணனின் மனைவி சரளா.. லஷ்மியை பார்க்கும்போதெல்லாம் சிநேகமாக புன்னகைக்கக் கூடியவள்.. சாப்டாச்சா..? வேலைக்கு புறப்பட்டாச்சா..! இன்னிக்கு லீவா..? என ஓரிரண்டு வார்த்தைகள் பேசக்கூடியவள்.! அந்த சிநேகத்திற்காகவாது ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போயிருக்கலாம்..
குழந்தை இல்லாததால் தன்னை யாரும் மதிக்க மாட்டேங்கறாங்களோ.. என தன்மீதே ஒரு கழிவிரக்கம் உண்டானது லஷ்மிக்கு.
கார் மெதுவாக அந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருந்த போதுதான்..
டெடி பேரை கையில் வைத்துக்கொண்டு துள்ளி குதித்து ஓடி வந்தாள் அந்த குட்டி பெண்.
காரை பிரேக் போட்டு நிறுத்தினான் வாத்சல்யன்.
லஷ்மியின் கண்கள் நிலை குத்தி நின்றது.
கனவில் அந்த ஒளி வெள்ளத்தின் நடுவில் அவர்கள் பார்த்த அதே குழந்தை..
கனவில் பார்த்தபடியே பிங்க் நிற கவுன் அணிந்து.. “ம்மா..” என தாயின் புடவை முந்தானையை பிடித்து இழுத்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
தொடரும்.
error: Content is protected !!
பாப்பா வந்திடுச்சு…இனி என்னாகுமோ…😔😔😔
அச்சோ மூணாவது முறை கனவு வரல அந்த குழந்தை யே இவங்கள தேடி வந்திடுச்சே , அடுத்து என்ன ஆகும் அந்த குழந்தை க்கு என்ன ஆக போகுது தெரியல யே 🤧🤧 செம யா இருக்கு கதை writer Ji 😍❤️
வாத்சா லஷ்மி நீங்க ரெண்டு பேரும் made for each other தான் பா என்ன ஒரு புரிதல் உங்க ரெண்டு பேருக்கும் இடையே அதிலும் எனக்கு ஒரு படி மேலே போய் இந்த வாத்சா ரொம்ப பிடிக்குது தங்கமான குணம் 🥰🥰🥰❤️❤️
ஆத்தாடி குழந்தையை பாத்துட்டாங்க 😳😳😳
😍😍😍😍😍😍😍😍😍devadhai penne😍😍😍😍😍😍
வாத்சா,சந்தா உங்களின் ஒவ்வொரு உணர்வும்… என் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்கள்…🥲
குழந்தையை பாத்துட்டாங்க.. 💔
அடடா கனவுல வந்த குழந்தை நிஜத்தில், ஐயோ அந்த அசரீரி வேற இறந்து மீண்டும் மறுஜென்மம் எடுக்கும்னு சொன்னுதே 🙄🙄🙄🙄🙄