Skip to content
Post Views: 5,780
மறுவீடு விருந்து முடிந்து வீட்டிற்கு வந்திருந்தனர் கதிரும் ஷர்மிளாவும் உடன் அவளின் அப்பா அம்மா சித்தப்பா மற்றும் தாய்மாமன், அண்ணன் சந்தோஷ் கொஞ்சம் சொந்தங்கள் என்று வந்திருந்தனர்.
Advertisement
அன்று கறிவிருந்து பேச்சுவார்த்தை தான் சென்றுகொண்டிருந்தது மதிய சமையல் அமர்க்களமாக உள்ளே நடந்துகொண்டிருக்க அன்புக்கரசி கவிதாவோடு அடுப்படியில் இருக்க ஷர்மியின் தாயும் வந்து உடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
திருமணம் முடிந்த அன்று ஒரத்தநாடு சென்றவன்தான் சிவபாலன் வீட்டிற்க்கே வரவில்லை அலுவலகம் வருவான் இரவு மீண்டும் அவன் வீடு சென்றுவிடுவான்.
Advertisement
முதல் தளத்தில் அவனுடைய அறையும் கதிரின் அறையும் எதிர் எதிராக இருக்கும் கதிரின் திருமணம் முடிவானபோதே தன்னுடைய இருப்பு இந்த வீட்டில் எப்படி சரிவரும் என்ற யோசனை அவனிடம் வந்திருந்தது.
வீட்டை விட்டுச் செல்வது ஒன்றும் அவனுக்குப் பிரச்சனையில்லை அவனுக்குச் சில வேலைகள் இருக்கிறதே அப்படி சட்டென்று கிளம்ப முடியவில்லை, திருமணத்திற்கு ஒருவாரம் இருக்கும்போது அவன் வெளியில் நிற்பதை உணராமல் பவுனுத்தாயி அனுப்புக்கரசியிடம் பேசியதை கேட்டிருந்தான்.
“ஏன் அன்பு பெரியவனுக்கு பொண்ணு கேட்டு அவங்க குடுக்க விருப்பம் இல்லன்னு சொல்லிச் சின்னவனுக்கு அவங்களே கொடுக்குறாங்க, இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் முடிஞ்சு அந்தப் புள்ள இங்க வாழ வந்திடும் ரெண்டுபேருக்கும் மேலேயே அறை இருக்கு”.
“பொழுது விடிஞ்சு அடையும்போது இவன் முகத்தைப் பாக்குற மாதிரி இருந்தா நல்லாவா இருக்கும் கீழே ஏதாவது ரூம்ல இருக்க சொல்லு” என்க அன்புக்கரசி ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றார் குத்தல் பேச்சு தான் கிட்டும் வாய்ப்பை விடுவாரா குத்தினார் உன் மகனுக்குப் பெண்தர யாரும் முன்வரவில்லை என்று.
“அம்மாச்சி சும்மா இருங்க” என்றாள் கவிதா.
“என்னடி இப்போ தப்பா சொல்லிட்டேன் எதுக்கு ரெண்டுபேருக்கும் சங்கடம் அவனுக்கும் அவன் ஆசைப்பட்டு கேட்ட பொண்ணுன்னு பாக்கும்போது சங்கடம் இருக்கும்ல” என்றார்.
“நீ தேவையில்லாம பேசிட்டு இருக்க அம்மாச்சி கொஞ்சம் அமைதியா இரு அதெல்லாம் அவனுக்குத் தெரியும்” என்றவள் “நீங்கப் போங்க சித்தி” என்று அன்புவை அனுப்பிவிட்டு.
“சும்மாவே இருக்கமாட்டியா அம்மாச்சி நீ, அதான் அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே தம்பியோடத நடத்தப்போறோம்ல இன்னும் தொழில் எல்லாம் அவன்தான் பாக்குறான் கதிருக்கு இன்னும் நெளிவு சுளிவு தெரியல அப்படி ஓடனேயெல்லாம் அவனால எல்லாத்தயும் தலைல தூக்கி சுமக்க முடியாது”.
“அதோட வீட்டுக்கு வரப்போறவ இப்போ நல்லாத்தான் பேசுறா வந்த அப்புறம்தான் அவ பவுசு தெரியும் நானும் என் பிள்ளையும் ஒத்தைல நிக்குற மாதிரி ஆயிடக் கூடாது, அவன்கிட்ட கொஞ்சம் பதவிசா நடந்துக்கோ”.
“அவன் சொத்தை வித்து கொடுத்த காசுலதான் நாம மீண்டிருக்கோம் இதுவரைக்கும் அதைப் பத்தி அவன் எதும் பேசல ஆனா கேட்டுட்டா? இத்தனை வர்ஷம் இந்தத் தொழிலை அவன்தான் பாக்குறான் நம்ம யாருக்குமே தெரியாத நிறைய விஷயம் அவனுக்குத் தெரியும் கொஞ்சம் பொறுமையா இரு”.
“முதல்ல சொத்தைப் பிரிச்சு எழுதிடு நாளைக்கு தம்பி பொண்டாட்டி கூடலாம் என்னால மல்லு கட்ட முடியாது அதுக்கு என்ன பண்ணணு யோசி”.
“எப்படி பாத்தாலும் என் மவளுக்கு பங்கு அதிகம் வரணும் ஒருபக்கம் எனக்கு வரவேண்டிய பங்கு இன்னொரு பக்கம் என் புருஷன் அதாவது உன் மவன் அவருக்கு வர வேண்டிய பங்கு ஆகமொத்தம் எங்களுக்கு ரெண்டுபங்கு பாத்து செய்” என்றுவிட்டு சென்றாள் பவுனுத்தாயி அதிர்ந்து நிற்கச் சிவபாலன் இதழில் கீற்றாய் புன்னகை.
இவர் சொல்லிக் கேட்ப்பானா அவன் அவனுக்குத் தோன்றியதை தான் செய்வான் ஆனால் அது பவுனுத்தாயிக்கு அவர் சொல்லியதை அவன் கேட்ப்பதை போல ஒரு பிம்பத்தைக் கொடுத்திருந்தது.
திருமணமும் அப்படித்தான் இப்பொழுது தங்கும் அறையும் அப்படிதான் அவள் வேண்டும் என்று அவன் நினைத்திருந்தால் பெண் தரமாட்டேன் என்று சொன்ன அன்றே அவளைத் தூக்கியிருப்பான் தாலியும் கட்டியிருப்பான் அவனுக்கு அவள் வேண்டாம் விட்டுவிட்டான்.
நீ சொன்னால் நான் கீழே போகவேண்டுமா என்ற வீராப்பு அவனிடம் பவுனுதாயிடம் என்ன ரங்கசாமியிடம் கூட எதுவும் சொல்லவில்லை தன் அறையின் கதவை அடைத்து வெளிப்பக்கம் பூட்டினான் பின்னில் பால்கனி பக்கம் படி வைத்துக் கதவை வைத்துக்கொண்டான் ஷார்மியை தவிர்க்க என்று இவர்கள் நினைக்க அந்த வீட்டிலிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி நிறுத்தும் வேலையைத் தொடங்கியிருந்தான்.
என்னுடைய விஷயத்தில் உங்கள் யாரின் அனுமதியும் எனக்குத் தேவையில்லை என்ற விஷயத்தைத் தெளிவாகப் புரியவைத்தான் பவுனுதாயி இதை எதிர்பார்க்கவில்லை.
“என் வீடு இது மறுமவனே என்னைய கேக்காம எதுவும் செய்யமாட்டார் இவன் என் வீட்டை இடிச்சிருக்கான்” என்று புலம்பினார்.
“அவன்கிட்ட கேக்கமுன்ன நால்லா யோசிச்சுக்கோங்க அத்த அதுக்கு அப்புறம் வர எல்லா பிரச்சனையையும் கதிர் மட்டும்தான் பாக்கணும்” என்றார் ரங்கசாமி அழுத்தமாக.
மொத்தமாக அவன் வெளியேறிவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற மறைமுக மிரட்டல், உள்ளுக்குள் அத்தனை கனல் ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இன்று அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க கதிர் அலைபேசியில் மூழ்கியிருந்தான் சிவபாலனின் வண்டி சீறிப்பாய்ந்து வந்து நின்றது அந்த வாசலில் நான்கு நாட்களுக்குப் பிறகு, அதே வேகத்தோடு உள்ளே நுழைந்தவன் “கதிரேசா” என்றான் அத்தனை ஆக்ரோஷத்தோடு.
அலைபேசியில் மூழ்கி இருந்தவன் திடுக்கிட்டு எழுந்து நின்றான் அவன் வண்டி வந்த சத்தத்திலே என்ன என்பதாகப் பார்த்திருந்த மற்றவரக்ள் அவன் குரலில் எழுந்துவிட்டனர்.
சிவபாலன் தன்னை நிதானித்தான் அவனுடைய மாமனார் குடும்பம் முன்னே வேண்டாம் என்று முடிவு செய்தவன் “உள்ளே வா” என்று அடிக்குரலில் சீறிவிட்டு சென்றான்.
உள்ளே என்ன நடந்ததோ கதிர் அவன் அறைக்கு ஓடினான் ஏதோ காகிதங்களைக் கொண்டுவந்தான் யாருக்கோ அலைபேசியில் அழைத்தான் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான், சிவபாலன் முழுதாக அலைபேசி அழைப்பிலே இருந்தான்.
இவன் மீண்டும் வெளியில் செல்லக் கிளம்ப அவன் பின்னையே ஓடிவந்தான் கதிர் ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தது பார்த்ததும் மானாருக்கு தாங்கவில்லை ஆனால் சிவபாலனிடம் கேட்கவும் பயமாக இருந்தது, அதெல்லாம் தனக்கு இல்லை என்பதாக ஷர்மியின் சித்தப்பா ஆரம்பித்தார்.
“நில்லுங்க தம்பி எங்க மாப்பிளையை எங்க முன்னாடியே அதட்டுறீங்க அவரை அடிச்சிருக்கீங்க நீங்க யாருங்க இதெல்லாம் செய்ய, தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்கவே பெத்தவங்க யோசிப்பாங்க நீங்க என்ன கூடப்பொறந்தவரா கை நீட்டுறீங்க” என்றார்.
அவரைத் திரும்பிப் பார்த்தவன் “யார் நீ” என்றான் கூர்மையாக அனைவருமே அதிர்ந்து நிற்க.
“அவர் என்னோட சித்தப்பா” என்றாள் ஷர்மி உடனே, அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை இவன்.
“அதுக்கு என் வீட்டில நீ பஞ்சாயத்து பண்ணுவியா என்னைய கேள்வி கேக்க நீ யாரு, உங்க வீட்டு பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைன்னா அவ புருஷன் கிட்டயோ உங்க சம்மந்திகிட்டயோ பேசிக்கணும் அதை விட்டுட்டு என் வீட்டு விஷயத்துல பஞ்சாயத்து பண்றது தொழில்ல தலையிடுறதுன்னு ஏதாவது நடந்துச்சு இருந்த தடம் தெரியாம அழிச்சிருவேன்” என்றவன் தம்பியைத் திரும்பி அழுத்தமாகப் பார்த்துவிட்டு வெளியேறினான்.
அவன் சென்ற வேகத்தையே பயத்தோடு பார்த்து நின்ற கதிர் “இங்கப்பாருங்க இது என் அண்ணனுக்கும் எனக்கும் நடுவுல நான் தப்பு செஞ்சேன் அவர் அடிச்சார் இதுல நீங்கத் தலையிட வேண்டாம்” என்றவன் “பாத்துக்கோங்கப்பா” என்றுவிட்டு வேகமாக அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“என்னங்க இது” என்றார் ஷர்மியின் சித்தப்பா.
ஷர்மிக்கு அத்தனை ஆற்றாமை ஒரு விதமான அவமான உணர்வு, தன் கணவனை இவன் அடித்திருக்கிறான் கேள்வி கேட்ட சித்தப்பாவை மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறான் தன்னையும் தன் வீட்டினரையும் பழி வாங்க இப்படி செய்கிறான் என்றுதான் எண்ணினாள்.
“அவர் வேணும்னே செய்றார் சித்தப்பா என்னைய கட்டிக்குடுக்க மாட்டோம்னு வீட்ல சொன்னதை வெச்சு இதெல்லாம் செய்றார் போல, அவர்தான் பெரிய ஆளுன்னு காட்ட இப்படி நடக்கிறார்” என்றாள்.
“கொஞ்சம் யோசிச்சு பேசு தாயி வார்த்தையை விட்டா அள்ள முடியாது, என்ன தெரியும் உனக்கு அவனைப்பத்தி என் பொண்டாட்டி கேட்டுட்டே இருந்ததால கல்யாணத்துக்கு சரி சொன்னான் அவ்ளோதான் அவனுக்கு நீயெல்லாம் பொருட்டே இல்லம்மா அவன் தம்பி பொண்டாட்டி அவ்ளோதான்” என்றவர்.
“எல்லாரும் வாங்க சாப்பிடலாம் மத்தது அப்புறம்” என்றார் மனதே இல்லாமல் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டு அனைவரும் கிளம்பினார்.
“உங்க மூத்த மகன் எனக்குப் பதில் சொல்லணும் மாமா நான் அவர்கிட்ட கேட்பேன்” என்றாள் ஷர்மிளா தன் வீட்டினர் சென்றபிறகு ரங்கசாமியிடம்.
“நீ ஏன் கேட்டுகிட்டு நானே சொல்றேன்” என்றவர் “இன்னைக்கு கோவத்துக்கு காரணம் நஷ்டம் அதும் முப்பது லட்சம் நீ குடுப்பியா இல்ல உன் வீட்டுலதான் குடுப்பாங்களா இத்தனை வருஷமா அரும்பாடுபட்டு கட்டி காப்பாத்தின நம்பிக்கை உடைஞ்சிருக்கு தொழில்ல இதெல்லாம் எவ்ளோ முக்கியம்னு உனக்கும் தெரியும்ல”.
“என் மவன் கல்யாண ஜோர்ல பொறுப்பில்லாம இருந்து முப்பது லட்சத்தைத் தண்ணீல விட்டிருக்கான் ஓடி ஓடி இத்தனை வர்ஷம் உழச்சவனுக்குத்தானே அதோட அருமை தெரியும் வலி தெரியும் இது அண்ணன் தம்பிக்குள்ள அவங்க பாத்துப்பாங்க”.
“நம்மகிட்டயிருந்து மொத்தமா வாங்கி வேற ஆட்களுக்கு விக்குறவங்க அவங்க, நம்மகிட்டயிருந்து சரியான நேரத்துக்குப் பொருள் போயி சேரல போய்ச் சேர்ந்ததும் கெட்டு அழுகி போயிருக்கு அவன் நஷ்டத்தையும் சேர்த்து நம்மகிட்ட தான் கேட்பான்”.
“அவன் போய் நாலு பேர்கிட்ட சொன்னா நம்ம மேல இருக்குற மதிப்பு போய்டுமா இல்லையா எல்லாம் எதனால அலட்சியம்” என்றவர் பவுனுதாயையும் ஒரு பார்வை பார்த்தார்.
பேரனை அடித்துவிட்டான் என்று அத்தனை கொதிப்போடு நின்ற பவுனுத்தாயி முப்பது லட்சம் நஷ்டம் என்ற வார்த்தையில் அப்படியே அமர்ந்துவிட்டார்.
அவரின் பார்வை இப்பொழுது ஷர்மியின் மீது ‘வந்த மூணாம் நாளே என் வீட்டுக்கு முப்பது லட்சம் நஷ்டத்தைக் கொண்டுவந்திட்டாளே’ என்று உள்ளுக்குள் புலம்பினார் பேரனின் பொறுப்பின்மை தெரியவில்லை.
இதுபோல் நஷ்டம் ஆகிவிட்டது என்பதை வீட்டில் சொல்லவில்லை ஷர்மிளா அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று இவள் மறைக்க, அன்று மாலையே அங்கிருந்து அடுத்தடுத்து அழைப்பு வந்துவிட்டது.
“என்னடி இவ்ளோ நஷ்டமாம், சிவபாலன் பாத்த வரைக்கும் ஒத்த ரூவா நஷ்டம் வந்ததில்லை தொழில் தெரியாதவன் கைல கொடுத்தா இப்டித்தான்னு நம்ம காதுபட வேணும்னே பேசுறாவோ”.
“எல்லாமே மாப்பிளை தலைலதானா உன் நாத்தனார்க்கும் சேர்த்து மாப்பிளை தானே தொழிலைப் பாக்குறார் அப்போ நஷ்ட கணக்கும் சமமாத்தானே பிரிக்கணும்” என்ற தாயிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்து நின்றாள்.
அன்று முத்துப்பாண்டி வேலைக்கு வரவில்லை முதல் நாளே கேட்டிருந்தான் “அண்ணே நாளைக்கு லீவ் எடுத்துக்கவா” என்று.
இவன் கேள்வியாகப் பார்க்க “பிரென்ட் பாக்க போகனும்னா கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் இவனும் சம்மதம் சொல்லிவிட்டான்.
அன்று காலை ஒரு பத்து மணிபோலப் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் சிவபாலன் அவனுடைய புல்லட்டில் சென்றுகொண்டிருக்க மதுக்கூர் அருகே கிளைச்சாலையில் இருந்த சிறிய தடுப்பு சுவற்றில் ஒரு காலை மடக்கி மேலே வைத்து ஒரு காலைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தாள் சக்திப்ரியா.
அவளின் ஒரு கையில் மோர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கப் மற்றோரு கையில் உப்பு மிளகாய் இட்ட மாங்காய்த் துண்டு அதை ஒரு கடி கடித்து கண்ணைச் சுருக்கி உடலைச் சிலிர்த்து பாவனை செய்துவிட்டு மோரை குடித்தாள், இவனுக்குத் தொண்டைக்குழியில் அந்தப் புளிப்பின் சுவை இம்சயாய் இறங்கியது.
அருகில் முத்துப்பாண்டி ரோட்டிற்கு எதிர்பக்கம் பார்பதைபோல அமர்ந்திருந்தான் இவள் ஏதோ கேட்க அவன் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘எப்படி ஒக்காந்திருக்கா நடுரோட்டுல, குடிகாரன் மாதிரி ரீயாக்க்ஷன் வேற’ என்று இவன் பார்த்திருக்க முத்து எழுந்து நின்று யாருக்கோ கைகொடுத்து அந்தச் சரிவிலிருந்து ஏறி வர உதவினான், அவர் கை நிறைய சாமந்தி மலர்கள் கீழே சரிவில் தோட்டம் இருந்தது அவர்களிடம் கேட்டு எடுத்துவந்திருந்தார் போல.
அவர் வயதையும் முக அமைப்பையும் வைத்து அவளின் தந்தையாக இருக்கும் என்று கணித்தான் கொண்டு வந்த மலர்களை மகளின் அருகில் வைத்த மகேந்திரன் முத்துபாண்டியின் தோளில் கைபோட்டு எதுவோ கேட்க அவன் பவ்யமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவனைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தி இயல்பாகப் பேசினார் மகேந்திரன் உண்மையில் அந்தக் காட்சி சிவபாலனுக்கு அத்தனை நிறைவை தந்தது.
முத்துப்பாண்டிக்கு யாரும் இல்லை ஏன் அவனுக்கென்று வீடு கூட இல்லை ரைஸ் மில்லில் சுருண்டுகொள்வான் இரவானால், அவனை அருகில் நிறுத்திக்கூட யாரும் பேசி இவன் பார்த்ததில்லை இந்த மனிதர் எத்தனை இயல்பாய் அவனைத் தன்னோடு அமரவைத்து தோளில் கையிட்டு நண்பனைப் போலப் பேசுகிறார் என்று பார்த்திருந்தான்.
சக்திப்ரியா வெகுதீவிரமான சிந்தனையில் இருந்தாள் முத்துவிடம் அவள் என்னவோ கேட்க அவன் விழித்துக்கொண்டு சங்கடமாக மகேந்திரனை பார்க்க அவர் வாய்விட்டுச் சிரித்தார் நிச்சயமாகத் தன்னைப் பற்றி என்னவோ கேட்டிருக்கிறாள் என்று சிவபாலனுக்கு தோன்றியது அது உண்மையும் கூட.
“ஏன் முத்து ப்ரோ உங்க அண்ணனை எப்படி கரெக்ட் செய்ய எதுவும் ஐடியா சொல்லுங்களேன்” என்றாள் அவனிடம் அவன் சங்கடமாக மகேந்திரனை பார்த்து விட்டு அவளிடம் “அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி ஒத்தைல சுத்துறேன் எவளையாவது கரெக்ட் பண்ணி கட்டியிருப்பேன்” என்றான்.
மகேந்திரன் சிரிக்க “அதுவும் சரிதான் நீங்க வேஸ்ட்” என்றவள் “மிஸ்டர் மஹி நீங்கச் சொல்லுங்களேன் உங்க மருமகனை எப்படி கரெக்ட் செய்ய”
என்றாள்.
“நான் வேணா அம்மாகிட்ட கேட்டுச் சொல்லட்டுமாடா” என்றார் அவர்.
“தங்கள் சேவைக்கு நன்றி” என்றவள் மீண்டும் தீவிரமாக யோசிக்க “இப்போ என்ன” என்றான் முத்து.
“இல்ல நான்வேற ஆறு புள்ளன்னு சபதம் போட்டிருக்கேன் ரெண்டு வருஷத்துக்கு ஒண்ணுன்னா கூடப் பன்னெண்டு வர்ஷம் ஆயிடும் இப்படி பொறுப்பில்லாம நீங்க எல்லாரும் இருந்தா நான் எப்போ எல்லா புள்ளையையும் பெத்து முடிக்கிறது” என்றவளை கொலைவெறியோடு முத்து பார்க்க மகேந்திரன் சிரிப்போடு எழுந்து சென்றுவிட்டார்.
“லூசா நீ சார் என்ன நினைப்பார்” என்றவனை பார்த்தவள் “எந்தச் சார்” என்றாள்.
“அதான் உன் அப்பா”.
“என் அப்பா உங்களுக்கு யாரு? நான் அண்ணான்னு தானே கூப்பிடுறேன்” என்றாள் அத்தனை அழுத்தமாக.
“சரி அப்பா என்ன நினைப்பார்” என்றான்.
“மஹி ஒன்னும் நினைக்கமாட்டார்” என்றவள்.
“உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா எங்க அம்மா டெலிவரி அப்போ கத்தினதை பாத்து எங்க அப்பா பயந்து நிக்க அம்மா என்னடான்னா என்னால முடியலன்னு எழுந்து ஓடப் பாத்தாங்கலாம் அவங்களை பிடிச்சு உள்ளே போட்டு அமுக்கி டெலிவரி பாக்குறதுக்குள்ள டாக்டருக்கு நாக்கு தள்ளிடுச்சாம் அதைப் பாத்திட்டுதான் அப்பா அடுத்து பிள்ளைங்களே வேண்டாம்னு சொல்லிப் பிடிவாதமா நின்னுட்டாராம்” என்றாள் கண்சிமிட்டி குறும்போடு.
“யூ நோ மஹி ரொம்ப ரொம்ப அப்பிராணி” என்றாள்.
கடந்து செல்ல முடியவில்லை சிவபாலனால் அந்தக் கண்சிமிட்டலும் முகம் எல்லாம் விகசிக்க விரிந்து நின்ற புன்னகையும் என்னவோ செய்தது தலையை உலுக்கிக்கொண்டவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
அன்று தந்தையும் மகளும் வீடு வர ஹாலில் அமர்ந்திருந்தார் செல்வராஜ் “வாடா” என்று மகேந்திரன் வரவேற்க “வாங்க சித்தப்பா” என்று அழைத்த சக்திப்ரியா அறைக்குள் சென்றுவிட்டாள்.
செல்லும் அவளைச் சில நொடிகள் பார்த்திருந்த செல்வராஜ் “பிரியாக்கு ஒரு வரன் வந்திருக்கு நல்ல குடும்பம் பையனும் நல்ல பையன்” என்க மகேந்திரன் மனைவியைக் கேள்வியாய் பார்த்தார்.
“என்கிட்டே ஒன்னும் சொல்லலைங்க நீங்க வந்ததும் பேசுறதா சொன்னார்” என்றார்.
“இப்போ அவளுக்குக் கல்யாணம் பத்தி யோசிக்கல செல்வா நான் சொல்றேன்” என்றார் மகேந்திரன்.
“தெரியும் காரணம் அந்தப் பயதான இங்க பாருண்ணே இதுலாம் சரியா வராது அவதான் புரியாம செய்றான்னா நீயுமா… வயசு வித்தியாசமே அதிகம் ஏன்தான் இந்தப் பொம்பள பிள்ளைங்க புத்திலாம் இப்படி போகுதோ”.
“இந்தப் பையனுக்கு வயசு இருபத்தி ஏழுதான் அமெரிக்கால வேலைல இருந்தான் இப்போ பெங்களூர்ல வேல பேரு சந்தோஷ் அந்தப் பையனோட தங்கச்சி கல்யாணத்துக்கு நம்ம பிள்ளைதான் மேக்கப் செஞ்சிருக்கு அந்தப் பையனுக்குப் பிடிச்சு கேக்குறாங்க” என்க.
“யாரு” என்றார் பூரணி.
“அதான் அந்தச் சிவபாலன் தம்பி கட்டிக்கிட்டனே அந்தப் பிள்ளையோட அண்ணன் பாக்கவும் நல்லா இருக்கான் வசதியும் இருக்கு நம்ம வசதிக்கும் ஏத்தது” என்றார்.
பூரணி கணவனைக் கொஞ்சம் எதிரார்ப்போடு நோக்க “பாப்பாகிட்ட கேக்கணும் செல்வா அவ சம்மதம் இல்லாம நான் எதுவும் செய்யமாட்டேன்” என்றார்.
“இப்படியே உன் மகளுக்குக் கொடி புடி உனக்கு நல்லது சொன்னா எங்க புரியுது நான் நம்ம பொண்ணு நல்லதுக்குதான் சொல்றேன்” என்றவர் சந்தோஷின் புகைப்படத்தை அங்கு வைத்துவிட்டு சென்றார்.
அவர் சென்றவுடன் பூரணி அதை எடுத்துப் பார்த்தார் நல்ல அம்சமாக இருந்தான் மாப்பிள்ளை “ஏங்க பாக்க நல்லா இருக்கார் ப்ரியாவுக்கு நல்ல மேட்ச்” என்க.
“யாரு” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் சக்திப்ரியா.
“உனக்குச் சித்தப்பா ஒரு வரன் கொண்டுவந்திருக்கார்” என்று சந்தோஷின் புகைப்படத்தைக் காட்ட.
“அட நம்ம சந்தோசம்… ஆமா இதுக்கு இங்க என்ன வேலை” என்றாள்.
“அந்தப் பையனுக்கு உன்னைப் பிடிச்சிருக்காம் அவங்க வீட்ல கேக்குறாங்க” என்றார் பூரணி.
“எனக்குப் பிடிக்கலமா” என்றாள் உடனே.
“இது பைத்தியக்காரத்தனம் பிரியா அந்த வீட்டுக்குள்ளேயே அவ்ளோ சிக்கல் இருக்கு அங்க போகணும்னு உனக்கு என்ன அப்படி பிடிவாதம், அதும் அந்த ஆளோட கோபத்துக்கும் முரட்டுத்தனத்துக்கும் தினம் தினம் நரகமா இருக்கும் அப்படி அவன்கிட்ட போய் அடிபடணுமா உனக்கு” என்றார் ஆற்றாமையாக.
“எனக்குப் புரியுதும்மா உன் பயம் ஆனா இப்டித்தான்னு நீங்களே ஏன் முடிவு செய்றீங்க ஒருத்தங்க மேல விருப்பம்லாம் கேட்டுட்டு வராது எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு அவர்கூடத்தான் என்னால வாழ முடியும்”.
“எனக்குத் தெரியுது அவர் என்னை ஏத்துக்கல ஏத்துப்பாரா அதும் தெரியல யார் சொன்னாலும் அவர் கேக்க மாட்டார் அவர் நினைக்கணும் அவர் மனசு வெச்சாதான் இந்தக் கல்யாணம் அதும் தெரியும் எல்லாமே புரியுது ஆனா நான் என்ன செய்ய அவரைத் தாண்டி எதுவும் யோகாசிக்கமுடியலமா”.
“எனக்கு… எனக்கு அவர் வேணும்மா அவர் கூட வாழனும் அவருக்கு எல்லாமுமா நான் மட்டும் இருக்கணும்” என்று தேம்பிய மகளை அப்படியே அணைத்துக்கொண்டார் பூரணி.
மனம் தவித்தது மகளின் தவிப்பை கண்டு “ஆண்டவா என் பொண்ணை அவரோட எப்படியாவது சேர்த்து வெச்சிடு” என்று அந்தநொடி அவசர வேண்டுதலை வைத்தார் பூரணி.
மகேந்திரன் மகளையேதான் பார்த்திருந்தார் இனி தாமதிக்கக் கூடாது சிவபாலனிடம் நேரடியாகப் பேசுவது என்று அவர் முடிவு செய்ய அவனே அவரைக் காணவேண்டும் என்று அழைத்திருந்தான்.
error: Content is protected !!